தமிழ் சமூகத்தில் இலக்கிய எழுத்தாளனின் நிலைமை பத்தினிகளைப் போலத் தான். அவன் எங்கெல்லாம் தோன்றலாம் என்னவெல்லாம் பேசலாம் என வாசகர்கள், கட்சிக்காரர்கள், சித்தாந்தவாதிகள் எல்லாம் கோடு கிழிப்பார்கள்.
ஒரு எழுத்தாளன் எழுதின ஆயிரக்கணக்கான பக்கங்களை திருப்பிக் கூட பார்க்காதவர்கள் அவன் டி.வியில் தோன்றினால், கலர் சட்டை போட்டால், சினிமாவில் எழுதினால் சோரம் போய் விட்டதாய் விசனிப்பார்கள். கேலி பகடி செய்து தமக்கு நம்பிக்கை துரோகம் பண்ணி விட்ட எழுத்தாளன் வரலாற்றையே கறைபடிய செய்ததாய் துக்கிப்பார்கள். இதன் ஆதார முரண் என்ன? நமக்கு எழுத்தாளனின் கருத்துக்கள், படிமங்களை விட அவனது பிம்பம் தான் முக்கியம். நித்தியானந்தா பாலியல் காணொளி வெளியான போது அவரை தூஷித்தவர்கள், காறித் துப்பியவர்கள், துரத்தி சென்று கேள்விகள் கேட்டவர்கள், கேலி செய்தவர்கள் அவர் “தூய்மையோடு இருந்த போது” அவரது சீடர்களாக இருந்தவர்களோ அவரது உரைகளுக்கு செவி மடுத்தவர்களோ அல்ல. உண்மையில் அவரது சீடர்கள் மேற்சொன்ன சர்ச்சைக்கு பின்பும் அவருடன் கேள்வி கேட்காமலே தொடர்கிறார்கள். வெளியே இருந்தவர்கள் தான் அவர்மீது திடீரென ஆர்வம் கொண்டு கேள்வி கேட்டு விமர்சிக்க துவங்கினார்கள். இந்த விநோதம் ஏன்?நித்தியானந்தா அடிப்படையில் யார் என்பது நமக்கு முக்கியமல்ல, ஆனால் தமிழ் பிரக்ஞைக்கு அவர் தொன்றுதொட்டு இங்கு நிலைத்துள்ள புனித சாமியார் பிம்பத்துக்குள் பொருந்தியவர். அந்த பிம்பத்துக்குள் இருந்தபடி அவர் செக்ஸில் ஈடுபடக் கூடாது. இது தான் பிரச்சனை. தமிழ் சமூகம் எழுத்தாளனையும் இதே சாமியார் பிம்பத்துக்குள் தான் வைத்துள்ளது. சி.சு செல்லப்பா பற்றி இதுவரை எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை எல்லாம் படித்துப் பாருங்கள். அவரது முக்கிய கருத்துக்கள், படைப்பாளுமையை பற்றிய அலசல்கள் அல்ல, அவர் எப்படி “எழுத்தை” கடுமையான சிரமங்களுக்கு இடையே தொடர்ந்து கொண்டு. அதனால் எப்படி நட்டமடைந்தார், நண்பர்களின் பண உதவிகளை மறுத்து இறுதிவரை கொள்கைப் பிடிப்புடன் இருந்தார் போன்ற “எந்தரு மகானு பாவலு” வியப்புகள் தான் அதிகம் இருக்கும். சுருக்கமாக ஒரு எழுத்தாளன் எப்படி பிச்சைக்காரனாக செத்தான் என்பதே தமிழ் வாசகனுக்கு, குறிப்பாய் எழுபது எண்பதுகளில் இருந்து தொண்ணூறுகள் வரை இங்கு சிறுபத்திரிகைகளை பின் தொடர்ந்தவர்களுக்கு புளகாங்கிதம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. சுந்தர ராமசாமி க.நா.சு பற்றிய நூலில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவுகூர்கிறார். இருவரும் ஒரு புத்தகக் கடையில் நிற்கிறார்கள். க.நா.சு மிக ஆர்வமாக ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது நடிகை சரிகா அங்கு நுழைகிறார். எங்கும் பரபரப்பு அமளி. ஆனால் அத்தனை கூச்சலுக்கு இடையேயும் க.நா.சு அந்த புத்தகத்தில் இருந்து தன் கண்ணை எடுக்கவே இல்லை. ஒன்றுமே நடவாதத்து போல் அவர் வாசித்துக் கொண்டே இருந்தார். இது குறித்து சு.ரா வியப்பு கொள்கிறார். ஒரு நூலில் குறிப்பிடும் அளவுக்கு முக்கியத்துவம் தருகிறார். இது மேற்கத்திய லௌகீக மனம் இருந்த சு.ராவுக்கே க.நா.சுவின் சாமியார்த்தனம் மீது ஏற்பட்ட இந்தியத்தனமான மயக்கத்தின் உதாரணம். கர்ம சிரத்தை நடைமுறையில் எல்லா இடங்களிலும் தேவை இல்லை. ஆனால் க.நா.சு சாதாரண ஆள் இல்லையே. அவர் ஒரு ரிஷி புருஷர். அவர் மேனகையின் கவர்ச்சியினால் மனம் தடுமாறாத விஷ்வாமித்திரர். இந்தியர்களின் சாமியார் பிரேமை தான் எழுத்தாளன் டி.வியில் தோன்றும் போது அவர்களை இடறுகிறது.
இன்று கழக டி.விக்கள் தவிர்த்து பிற சேனல்கள் பொது விவாதங்களில் ஒரு சிந்தனையாளனின் இடத்தை நிரப்புபவனாக தீவிர எழுத்தாளன் உருவாகி உள்ளான். ”பிரபல தீவிர எழுத்தாளன்” என்ற கூட்டுசேர்க்கை ஒரு நவீனத்துவ சிறுபத்திரிகை மனதுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். ஆனால் இன்று அப்படியான ஒரு இனம் தோன்றியுள்ளது. தீவிரமாக எழுதும் அதே வேளை மக்களின் கவனத்தை அடையவும் விரும்பும் நிலைக்கு எழுத்தாளர்கள் வந்துள்ளார்கள். இது முன்னேற்றமா சீரழிவா என்கிற விவாதத்துக்கு பின்னர் வரலாம். முதலில் டி.வியில் தோன்றுவதில், வணிக பத்திரிகைகளில் பத்தி எழுதுவதன், மேடைகளில் மணிக்கணக்காய் சுவாரஸ்யமாய் உரையாற்றுவதில் தீவிர எழுத்தாளனின் உத்தேசம் என்ன என்று கேட்க வேண்டும். அதற்கான தேவை என்ன? அடுத்து புதிய தலைமுறை, விஜய் டி.வி, வின் டிவி உள்ளிட்ட சேனல்கள் தீவிர எழுத்தாளர்களுக்கு இடமளிக்க முன்வந்தது ஏன்?
ஒப்பிட்டால் ஆங்கில சேனல்களில் விவாதங்கள், ரியாலிட்டி ஷோக்களில் எழுத்தாளர்களே அநேகம் தோன்றுவதில்லை. அங்கு தொழில்சார் நிபுணர்கள் மேஜையை ஜோராய் தட்டி பேச பல தளங்களிலும் இருக்கிறார்கள். விசயம் தெரிந்தவர்கள் மொழித்திறன் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள் ஆங்கில மீடியாவில். ஆனால் இங்கு நிலக்கரியில் இருந்து அணு உலை வரை, சினிமாவில் இருந்து இன்று ஒரு சேதி வரை நல்ல தயாரிப்புடன் வந்து தெளிவாக பேசுவதற்கு எழுத்தாளர்கள் மட்டும் தாம் இருக்கிறார்கள். பட்டிமன்ற பேச்சாளர்கள் தம் இடத்தை கிட்டத்தட்ட இழந்து விட்டார்கள். முதல் இரண்டாம் தலைமுறை கல்வியறிவுடன் உயர்மத்திய வாழ்க்கையை எட்டி உள்ள இன்றைய இருபது, முப்பதுகளில் இருக்கும் இளைய தலைமுறைக்கு அறிவார்ந்த காத்திரமான உரையாடலை உருவாக்க எழுத்தாளர்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது.
கடந்த நாற்பது வருடங்களில் வணிக பத்திரிகைகளில் எழுத வந்தவர்களைப் பார்த்தோம் ஆனால் கூர்மையான மொழியும் பரவலான ஆழமான வாசிப்பும் கொண்டவர் என்று சுஜாதாவை விடுத்து மற்றொருவரை கூட சுட்ட முடியாது. வாசிப்பை அந்தளவுக்கு மட்டமான வெற்று பொழுதுபோக்காக நமது விகடன், குங்கும ஆசிரியர்கள் மாற்றி வைத்திருக்கிறார்கள். பிரபல எழுத்துக்குக் கூட கல்வியறிவிக்கும் கடமை உள்ளது. ஆனால் ராஜேஷ் குமார் போன்றவர்கள் இன்று கூகுளில் தேடி அஸைன்மெண்ட் எழுதும் எட்டாம் வகுப்பு மாணவன் அளவுக்கு கூட அறிவற்றவர்கள் என்பது இவ்விசயத்தில் மிகப்பெரும் அவலம். அறுபதுகளில் தோன்றிய மத்திய வர்க்கத்தினரில் ஆங்கில பரிச்சயமோ உலக அறிவுத்துறைகளில் வாசிப்போ அற்ற சினிமா தவிர வேறெந்த கலாச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபாடற்ற ஒரு நுகர்வோர் சதவீதம் இத்தகைய மட்டமான ஊடக எழுத்தால் திருப்தி உற்றிருக்கலாம். ஆனால் இன்று கல்வி, இணையம் மற்றும் டி.வி ஊடகம் நமது அறிவு மற்றும் கலாச்சார தேவையை விரிவானதாக பல்துறை சார்ந்ததாக மாற்றி உள்ளது. “உறவுகள்” தொடர் பார்க்கும் அதே மாமிக்கு குவிண்டின் டரண்டினோவும் தெரிந்திருக்கிறது. ஒரு பக்கம் ஏற்பட்டுள்ள இந்த தலைமுறை மாற்றத்தை வணிக பத்திரிகைகள் சரியாக அவதானித்ததாய் தெரியவில்லை. Frontline, Open Magazine போன்ற பத்திரிகைகளில் எவ்வளவு திறமையான பத்தி எழுத்தாளர்கள் தமக்கென ஒரு நிலைத்த பக்கங்களுடன் உருவாகி வந்துள்ளார்கள். ஆனால் இணையத்தில் சுவாரஸ்யமாக எழுதும் பிளாகர்கள் கூட புதிய தலைமுறை போன்ற பத்திரிகைகளுக்கு போனால் அச்சில் வார்த்தது போல் தனித்துவமற்று முதல் பத்தியை “கொ”யில் துவங்கி இறுதி பத்தியை “வி”யில் முடிக்கிறார்கள். வணிகப்பத்திரிகை ஆசிரியர்கள் வாசிப்பறிவும் எழுத்துத் திறனும் கொண்ட எழுத்தாளர்களை உருவாக்கவோ ஊக்குவிக்கவோ இல்லை. அப்படி சிலர் ஆர்வமிகுதியாய் புகுந்து விட்டாலும் விதைப்பையை அகற்றி கழுத்தில் பெல்ட் மாட்டி விடுகிறார்கள். அசட்டு துணுக்குகள், தொப்புள் படங்கள், தையல் மிஷின் வாங்கி வாழ்வில் பெண்கள் முன்னேறலாம் வகை ஸ்டோரிகள், எந்தெந்த தினங்களில் எந்தெந்த கோயில்களில் உருண்டால் தோஷம் தீரும் என அவர்கள் இன்றும் தேவர் மகனில் சிவாஜி சொன்னது போல் இன்றும் அருவாள் கம்புடன் சுற்றும் பயலுகளாகத் தான் இருக்கிறார்கள்.
ஆக வணிக பத்திரிகைகள் கற்காலத்தில் இருக்க டி.வி மீடியா சமகாலத் தன்மையுடன் பெரும் வீச்சுடன் செயல்பட்டு வருகிறது என்பது ஒரு நகைமுரண் தான். “சத்யமேவ ஜெயதே” அல்லது “நீயா நானா” போன்ற விவாத நிகழ்ச்சிகளில் முற்போக்காக தீவிரமாக உரையாடப்பட்ட விசயங்கள் குறித்து உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் இவற்றில் ஒரு சிறு சதவீத பிரச்சனைகளைக் கூட நமது வணிக பத்திரிகைகள் எடுத்துப் பேசியதில்லையே! பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு மாநிலமே எரிந்து கொண்டிருக்கும் போது இவர்கள் மாற்றான் படம் பற்றித் தானே கவர் ஸ்டோரி எழுதுவார்கள். இப்படி வாசகர்களின் அறிவு, பண்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றாதது மட்டுமல்லாமல் இந்த பத்திரிகைகள் நமது முக்கிய எழுத்தாளுமைகளை இத்தனை காலமும் நிராகரித்தே வந்துள்ளன. அவர்களுக்கு இடமளித்த போதும் அது பெயரளவுக்கு காங்கிரஸின் சிறுபான்மையினர் மீதான அக்கறை போலத் தான் இருந்தது. ஆக தமிழில் எழுத்தாளனுக்கு பொதுவெளி என்பது இத்தனைக் காலமும் மறுக்கப்பட்டு வந்துள்ளது. அவனுக்கும் மக்களுக்கும் இடையிலான பாலமாக இன்று டி.வி மாறியுள்ளது. அவனுக்கானது சிறு பங்குதான் என்றாலும் தன் கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்த டி.வி இன்று அவனுக்கு வாய்ப்பளிக்கிறது. இதை அவன் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. சினிமாவால் முழுக்க ஆக்கிரமிக்கப்பட்டு திரிந்து போன தமிழ் பண்பாட்டு வெளியில் எழுத்தாளன் இன்று தன் மீது விழும் ஒரு சிறு வெளிச்சத்தை முழுமையாக பயன்படுத்துவதில் ஒரு நியாயம் உள்ளது.
இங்கு பிரச்சனை உண்மையில் எழுத்தாளனின் கற்பு சம்மந்தப்பட்டதல்ல. பிரச்சனைகள் இரண்டு. ஒன்று டி.வி மீடியாவில் எழுத்தாளன் ஒரு நெடுந்தொடர் நடிகனைப் போலத் தான். அவன் ஒரு விவாதத்துக்கு கூடுதலாக ஒரு சிறு தெளிவை ஒரு திசையை அளிக்கிறான் அவ்வளவே. அவனது இடம் அங்கு மிகச் சிறியது. அவனுக்கு தனித்த அடையாளமோ தவிர்க்க இயலாத பண்போ அங்கில்லை. சிவசங்கரி பேசிய இடத்தில் குட்டிரேவதி வரலாம். குட்டிரேவதி கிடைக்கவில்லை என்றால் பறவை முனியம்மாவை கொண்டு வருவார்கள். மேலும் டி.வி பார்வையாளன் ஒரு தற்காலிக ஆர்வத்துடன் சினிமா பாடல், குண்டுவெடிப்பு செய்தி, ஈமு விளம்பரம், விவாதம் அனைத்தையும் பார்ப்பவன். அவனது ரிமோட் பொத்தான் அழுத்தலின் சில நொடி இடைவெளி தான் விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஒரு எழுத்தாளனின் மூச்சிரைக்க வைக்கும் நிலைப்பாட்டின் அழுத்தத்துக்கும் பலசமயம் இருக்கிறது. பவர்ஸ்டாரையும் கோணங்கியையும் அருகருகே வைத்து விவாதம் உருவாக்கினாலும் அவன் எந்த குழப்பமும் இன்றி அதைப் பார்த்து விட்டு கடந்து போவான்.
அடுத்து ஒரு எழுத்தாளன் மீடியாவின் கோரிக்கைக்கு ஏற்ப கருத்துக்களை அவசரமாக உற்பத்தி செய்து முன்வைக்கும் ஒரு எந்திர நிலைக்கு தள்ளப்படுகிறான். எல்லாவற்றைப் பற்றியும் ஒரு கருத்தைக் கொண்டிருப்பவன் தமிழ் எழுத்தாளன் மட்டும் தான். உள்ளார்ந்த ஈடுபாடின்றி ஆர்மார்த்தமான இசைவின்றி அவன் தனது தர்க்க பலம் அறிவுக் கூர்மை மட்டும் கொண்டு தொடர்ந்து இந்த தீராத மீடியா பசிக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இது அவனை விரைவில் களைப்படைய வைத்து விடுகிறது. அவனது எழுத்துப்பணியை சத்தற்றதாக ஆக்கி விடுகிறது. எழுத்து என்பதே குமாஸ்தா நிலைக்கு எதிரானது தான். ஆனால் மீடியா நாட்டாமை பணி அவனை குமாஸ்தா நிலைக்கே திருப்பி விடுகிறது.
ரிச்சர்டு மேலப் (Richard Malouf) எனும் ஆஸ்திரேலிய நாவலாசிரியர் “ஒரு எழுத்தாளன் பேச நேர்கையில்” (When a Writer Speaks) எனும் ஒரு சுவாரஸ்யமான கட்டுரையில் இந்த சமகால எழுத்தாளன்-டிவி உறவைப் பற்றி பேசுகிறார். முதலில் அவர் ஒரு எழுத்தாளன் தன் மனதை அரிக்கும் ஒரு சிக்கலை பேச்சில் வெளிப்படுத்துகையில் அவ்விசயத்தை அவன் எழுத்தில் கொண்டு வரும் சந்தர்ப்பம் இல்லாமல் ஆகி விடுகிறது என்கிறார். இது ஒரு மனநிலை சம்மந்தப்பட்ட விசயம் தான். எழுத்துக்கு இம்மாதிரி உறுதியான விதிமுறைகள் எல்லாம் கிடையாது. பேச்சில் திருப்திகரமாய் சொல்ல முடியாததை எழுத்தாளன் தன் கட்டுரை அல்லது புனைவில் விரிவாகவோ, அல்லது கவிதையில் மேலும் உக்கிரமாகவோ சொல்ல விழையக் கூடும்.
அடுத்து மேலப் எவ்வாறு நாவல் வடிவத்தின் வருகைக்குப் பின் எழுத்தாளன் சமூக அரசியல் விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஒரு கற்பனைப்படைப்பில் பேச சாத்தியம் உருவாகிறது என்று கூறுகிறார். அதுவரை தன்னை அரசியல் கடந்தவனாக எழுத்தாளன் கருதி வந்திருக்கலாம். ஆனால் நாவலின் காலகட்டம் இந்த நிலைப்பாட்டை மாற்றுகிறது. இனி அவன் பலதரப்பட்ட சித்தாந்தங்கள், நிலைப்பாடுகள், கருத்துநிலைகளுக்கு தன் எழுத்துவெளியில் இடமளிக்க வேண்டிய தேவை உருவாகிறது. ஆரம்பத்தில் அரசியலற்றவராக தன்னை காட்டிக் கொண்ட தாமஸ் மன் எவ்வாறு ஜெர்மானிய யூத எதிர்ப்பு அரசியலுக்கு எதிரானவராக தன்னை முன்னிறுத்தினார், அவர் குடியாட்சியை எதிர்ப்பவராக ஆரம்பத்தில் இருந்து பின்னர் அதை ஆதரிப்பவராக எப்படி மாறினார் என்பதை மேலப் விவரிக்கிறார். தாமஸ் மன் தன் நாவல் எழுதும் அனுபவம் வழியாகவே தன் அரசியல் பார்வையிலும் மாற்றம் பெற்றார் என்று கூறுகிறார். இலக்கியத்தில் அரசியல் வேண்டுமா வேண்டாமா என்கிற விவாதம் இன்னும் தமிழில் நிறைவு கொள்ளாமலே இருக்கிறது. மேலப்பின் இக்கட்டுரை அவ்விதத்தில் இங்கு முக்கியமானது.
இதே கோணத்தில் யோசித்தால் எழுத்தாளன் காலத்தின் பிரதிநிதி, சமூகத்தின் குரல், நீதிக்காக போராடுபவன் என்று சொல்லத் தோன்றும். அவன் வெறுமனே கதை எழுதுபவனாகவோ, தன் தபால் பெட்டியில் இறகை விட்டுப் போன குருவியைப் பற்றி மனம் உருகுபவனாகவோ மட்டும் இருக்க தேவையில்லை. அவன் விலைவாசி உயர்வு பற்றியும் அணு உலை ஆபத்து பற்றியும் டி.வியில் உரத்து பேசலாம் தானே?
இங்கு மேலப் சன்னமாய் எச்சரிக்கிறார். இன்று எழுத்தாளன் தன்னை சமூகப் போர்வாளாக கருத வேண்டிய தேவையும் சூழலும் ஏற்பட்டால் அவன் பொதுவெளியில் ஆவேசமாக இயங்குவதில் தவறில்லை. தமிழில் இன்று நிச்சயம் அத்தகைய தேவை உள்ளது. ஆனால் அவன் ஒரு டி.வி “நடிகனாக” மாறி விடாது இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். போலியான ஊடக ஆளுமைகள் இடையே தன் தனித்துவம் இழந்திடாதிருக்க விடாப்பிடியாய் இருக்க வேண்டும். ஊடக சமூக அரசியல் உரையாடல்களில் தோன்றும் அர்த்தமற்ற ஆயிரமாயிரம் சொற்றொடர்கள் இடையே ஒரு சிறு வெளிச்சக் கீற்றை தொடர்ந்து உருவாக்குவதே தன் பணி என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
அவன் “டி.வி எழுத்தாளனாக” மாறாத வரையில் அவன் டி.வியில் பேசுவதில் பாதகம் இல்லை. அது எதுவரையில் என்பது தான் சிக்கல்.