Tuesday, 18 September 2012

கால்கள்-புதிர்ப்பாதையில் கண்களை கட்டிக்கொண்டு - துரோணா



இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு யுவதியின் வாழ்க்கைதான் கதையென்பது பெரும்பாலும் எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.எனவே கதை பற்றி பெரிதாய் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நேரே விஷயத்திற்குள் நுழைந்துவிடலாம்.
ஆனால் அதற்கு முன்பு நான் இந்த நாவலை வாசிக்க ஆசைப்பட்டதற்கான காரணத்தை சொல்ல வேண்டும்.பொதுவாகவே எனக்கு அபிலாஷின் உளவியல் கட்டுரைகள் மீது மதிப்பும் விருப்பமும் உண்டு. உறவுகளுக்கிடையேயான உளவியல் பிணைப்பை தீவிரமாக ஆராயும் நல்ல கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். உளவியல் தொடர்பான அவருடைய கருத்துக்களோடு நான் எப்பொழுதும் உடன்பட்டே இருந்திருக்கிறேன். இதற்கிடையே கால்கள் நாவலிற்கான விமர்சனங்களை வாசித்ததன் மூலம் இந்நாவல் உளவியலை மையமாக கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நேர்ந்தது.ஆக புத்தகத்தை வாசிப்பதற்கு முன்பே எனக்கு அதன் மீது ஒரு நல்ல அபிப்ராயம் உண்டாகிவிட்டது.இனி நாவலை வாசித்ததற்கு பிறகான என்னுடைய எண்ணங்களை பகிர்கிறேன்.


நிச்சயமாக இதுவொரு நல்ல முயற்சிதான் என்றாலும் நாவல் முழுக்க இழையோடும் செயற்கைத் தனமும் சூழலோடு பொருந்தாத துருத்தலான காட்சிகளும் நாவலை அதல பாதாளத்திற்குள் தள்ளி விடுவதாகவே எனக்கு படுகிறது.நிறைய இடங்களை உதாரணங்களாக சுட்டலாம்.பின் வருவது அத்தகையை ஒரு உதாரணம்.மைய பாத்திரமான மதுவின் கல்லூரி பேராசிரியர் மதுசூதனன். அவருடைய மகனுக்கு உடல்நிலை மோசமாகயிருக்கிறது. கிட்டத்தட்ட மரணத்திற்கு வெகு சமீபத்தில் இருக்கும் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். அவனுடைய உடல்நலம் குறித்து விசாரிக்க தொலைபேசியில் அழைக்கிறாள் மது. மறுமுனையில் தொலைபேசியை எடுப்பது கார்த்திக்.கார்த்திக் மதுவின் நண்பன். இதில் முக்கியமான ஒரு செய்தி கார்த்திக் மதுவின் நண்பன் தானேயொழிய அவனுக்கும் மதுசூதனனுக்கும் முன் பழக்கமெதுவும் கிடையாது. மதுவின் மூலம்தான் அவன் அவருக்கு அறிமுகமே ஆகியிருக்கிறான். தொலைபேசியை எடுத்து அவன் பேசவும் மது நீ அங்கு என்ன செய்கிறாய் என கேட்கிறாள்.உடனே அவன் தன் தங்கைக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது எனவும் அதற்கு இனிப்பு கொடுக்க வந்திருப்பதாகவும் பதில் சொல்கிறான்.இத்தகையை ஒரு காட்சியை என்னால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை. ஆனால் இந்த நாவலில் இவையெல்லாம் இயல்பாய் சொல்லப்பட்டிருக்கின்றன.

இரண்டாவது குறை நாவலின் பாத்திரங்கள் தமக்குள் கொண்டிருக்கும் உறவுநிலைகளின் குழப்பங்கள். மதுவிற்கும் கார்த்திக்கும் இடையேயான பரிச்சயம் மதுவிற்கும் கண்ணணிற்கும் இடையேயான பரிச்சயம் அப்புறம் மதுவிற்கும் பேராசிரியரின் மகனுக்கும் இடையிலான பரிச்சயம் என எல்லாமே கலங்கிய குட்டையாக இருக்கின்றன.ஒவ்வொருவருக்கும் இடையிலான உரையாடல்களையும் விவாதங்களையும் வைத்து பார்த்தால் எல்லோரும் வருடக்கணக்கில் பழகியிருக்கிறார்கள் போல என்றே வாசகன் நினைப்பான். ஆனால் நாவலில் அப்படியெதுவும் சொல்லப்பட்டிருப்பதாய் எனக்கு தெரியவில்லை. முன் அறிமுகமே இல்லாத இருவர் சகட்டு மேனிக்கு அந்நியோன்யமாக உரையாடிக் கொண்டிருந்தால் அது எவ்வளவு செயற்கையாக தோன்றும்? இதனாலேயே சில அற்புதமான உரையாடல்களோடுகூட என்னால் ஒன்ற முடியவில்லை.
மூன்றாவது சிக்கல் நாவலின் கிளைக் கதைகளினுடையது.எக்கச்சக்கமான மனிதர்களின் கதைகளை நாவலினூடே சொல்லியபடி செல்கிறார் ஆசிரியர்.இ.எம்.எஸ், மாத்யூ என நீளும் அந்த பட்டியல் அம்பாரமாய் கனக்கிறது.இந்த கதைகளெல்லாம் நாவலின் மைய ஓட்டத்திற்கு ஏதாவது பலம் சேர்க்கின்றனவா என்று பார்த்தால் பரிதாபமாக இல்லையென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. நாவலின் முதல் பத்து அத்தியாங்களுக்குள் சிலமுறை வந்துபோகும் இ.எம்.எஸ். அதற்கு பிறகு நாவல் முடியும் தருவாயில் ஐம்பது அத்தியாயங்கள் தாண்டி தலைக் காட்டுகிறார்.(அவருக்கு ஒரு பெரிய கதையை ஆசிரியர் முதலில் சொல்லிய வகையில் ஒரு அத்தியாயம் கழிந்திருந்தது)

அடுத்தது நாவலின் தத்துவ தாளிப்புகள்.அபிலாஷிற்கு தத்துவத்தின் மீது பெரிய ஈடுபாடுண்டு என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.அதற்கென்று இப்படி நாவல் முழுக்க தத்துவ மழையாய் பொழிந்து தள்ளியிருக்க வேண்டாம்.சாதாரண நிகழ்வுகளையும் இடியாப்ப சிக்கலாக்கி அதற்கு தத்துவார்த்தமாய் பதில் சொல்கிறார்கள் அபிலாஷின் கதாபாத்திரங்கள்.இப்படியான கதாபாத்திரங்களை படைக்கக்கூடாது என்றில்லை.ஆனால் அத்தகைய காகித சிந்தனையாளர்களை கடந்த ஆசிரியரின் இருப்பையோ அல்லது அதற்கான மாற்றையோ நாவலின் எந்த இடத்திலும் என்னால் அடையாளங் காண முடியவில்லை.உதா:வண்டியோட்ட கற்றுக் கொள்பவர்களுக்கு ஆரம்பத்தில் ஆக்ஸிலேட்டரின் மீது கட்டுப்பாடு கிடைக்காது என்பது எவ்வளவு எளிதான விஷயம்.ஆனால் அதையே மதுவின் குணாம்சத்தோடு தொடர்புபடுத்தி அதற்கு உளவியல் விளக்கம் அளிக்கிறான் கண்ணன்.(கண்ணன் ஒரு மெக்கானிக் என்பது கூடுதல் தகவல்)

இதன் மூலம் நாவலில் நல்லதே இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. நாவலில் எனக்கு ரொம்ப பிடித்த சில விஷயங்களும் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது நாவலின் நாஞ்சில் மணம்.கதையில் ஆட்கள் சாப்பிடும் உணவு வகையறாக்கள் அத்தனையும் எனக்கு சிறிதும் அறிமுகம் இல்லாதவை.புட்டு,கிழங்கு,நெய்யப்பம் என மணக்கிற உணவு பண்டங்களின் வழியே ஊர்த்தன்மையை கொண்டுவந்த அபிலாஷை நிச்சயம் பாராட்டவேண்டும்.மதுவின் அப்பா கதாபாத்திரமும் என்னை அதிகம் கவர்ந்தது. தேங்காயே பிடிக்காது ஆனால் தென்னை மரத்தை ஆசையாய் வளர்ப்பார் என்கிற ஒற்றை வரி விளக்கம் போதும் அவரது குணநலனை வாசகன் சட்டென்று புரிந்துக்கொள்ள.செயற்கையின் சாயங்களால் காணாமல் போகும் பிற கதாபாத்திரங்களுக்கு மத்தியில் இவர் மட்டும் அட்டகாசமாய் பிரகாசிக்கிறார். வைத்தியர் மதுவிற்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாய் சொல்லி கடுப்பேற்றுகிற இடத்தில் இவரது கோபம் அவ்வளவு அசலாக இருக்கிறது. (மதுவின் அம்மா கதாபாத்திரம் சொத்தப்பலாய் இருப்பது வேற கதை).

அங்கங்கே ஆசிரியர் மிளிரும் இடங்களும் இருக்கவே செய்கின்றன. இளம் டாக்டர் மதுவின் கனவில் தோன்றும் காட்சி, நாவலின் இறுதியில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான மதுவின் பிரய்த்தன்ங்கள்,அதை தொடர்ந்து நிகழும் விபத்து, அப்புறம் கடைசியாய் ஒரு கனவு என எல்லாம் அருமையாக இருக்கின்றன.(இடைச் சொருகல்: நாவலில் கணக்குவழக்கேயில்லாமல் சின்னதும் பெரியதுமாய் நிறைய விபத்துகள் நிகழ்ந்து கொண்டேயிருகின்றன. அதிகப்படியான விபத்துகள் ஒரு கட்டத்திற்கு மேல் என் பொறுமையை சோதித்துவிட்டன )

இறுதியாக,அபிலாஷிற்கு எழுதுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.அவரால் எளிமையாக தெளிவாய் திருகல்களின்றி எழுத முடிகிறது. காட்சிகள் எல்லாம் துல்லியமாய் கண்முன் விரிகின்றன. மழை என்றால் மழை வெயில் என்றால் வெயில்.இப்படியிருக்க அவர் தத்துவம் உளவியல் என்று அலட்டிக்கொள்ளாமல் தனது மண்ணை சரியாக பதிவு பண்ண நினைத்திருந்தால் ஒரு செமத்தியான நாவல் நமக்கு கிடைத்திருக்கும். ஒருவேளை நான் முன்வைக்கும் அனைத்து எதிர்விமர்சனங்களுக்கும் அபிலாஷிடம் நியாயமான பதில்களும் காரணங்களும் இருக்கக்கூடும்.இருந்துவிட்டு போகட்டும். ஒரு வாசகனாக என்னிடமிருப்பது சிறிய வேண்டுகோள்தான், முழுமையாய் எழுதப்படாத உங்கள் ஊர் அதன் கலாச்சாரத்தோடும் ஈரத்தோடு உங்களிடம் இன்னும் பத்திரமாக இருக்கிறது அபிலாஷ், அடுத்த படைப்பிலாவது அதை எங்களுக்கு பார்க்க கொடுங்கள்….

Share This

1 comment :

  1. இப்பதிவுக்கு சம்பந்தமில்லா கேள்வி 1. இது மட்டும் தான்.வேறு கேள்வி எதுவும் இல்லை.

    சமீபத்தில் வந்த‌ prometheus படம் பார்த்திருப்பீர்கள். அது நல்ல படமா அல்லது போரான படமா? (

    *(ஒரு காரணத்திற்காக பதில் அவசியம் தேவை)

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates