Monday, 10 September 2012
வி.வி.எஸ் - ஒரு நடனத்தின் முடிவு
வி.வி.எஸ் விடைபெறுகிறார் - கண்ணீருடன், கோபத்துடன், ஏமாற்றத்துடன், பெருந்தன்மையுடன், அவரது மட்டையாட்டம் வெளிப்படுத்திய அதே மென்மையான கவித்துவத்துடன்.
லஷ்மண் இந்தியாவில் நடக்கப் போகும் மூன்று டெஸ்ட் தொடர்களுக்காக தனிப்பட்ட வகையில் தயாராகிக் கொண்டு தான் வந்தார். அவர் கடந்த மூன்று மாதங்களாக பயிற்சி செய்து வந்தார். மைசூரில் உள்ளூர் கிளப் ஆட்டம் ஒன்றும் 150 சொச்சம் கூட அடித்தார். அப்போது அதைப் பார்த்த சுனில் ஜோஷி “லஷ்மண் முன்பு போல் கவர் பகுதிக்கு மேலாக பந்தை தூக்கி அடிப்பது, கம்பீரமாக ப்ளிக் செய்வது பார்க்கையில் தனது உச்சத்தை அவர் மீண்டும் எட்டி விட்டார் என்று தோன்றியது” என்று அவதானித்தார். தனது உடற்தகுதியை மேம்படுத்தவும் கடுமையாக முயன்று வந்தார். தான் பயிற்சிக்கு செல்லும் போதெல்லாம் மதியம் இரண்டு மணிக்கு அவர் மைதானத்தை சுற்றி ஓட்டம் பயில்வதை பார்த்ததாக ஓஜ்ஹா தெரிவிக்கிறார். ஓஜ்ஹாவுடன் உரையாடும் போது தம் சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடக்கபோகும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் பங்கெடுப்பது பற்றி இருவரும் மிகுந்த உற்சாகத்துடன் எண்ணங்களை பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் டெஸ்ட் அணிக்கான பட்டியல் வெளியிடப்பட்டு இரண்டே நாட்களில் நிலைமை தலைகீழானது. லஷ்மண் தானாகவே ஓய்வை அறிவிக்கும் நிராதரவான நிலைக்கு சென்றார்.
ஒருநாள் அணியில் இருந்து நிரந்தரமாக விலக்கப்பட்ட பின்னர் லஷ்மணின் துர்விதி ஆட்டச்சூழல் பயிற்சியின்றி நேராக டெஸ்ட் ஆட்டம் ஆடப் போவதாக இருந்தது. ஆனால் அவர் இந்த குறையை மிக நேர்த்தியாக சொல்லப்போனால் மிக அட்டகாசமாக கடந்து வந்திருக்கிறார். தொடர்ச்சியாக ஆடி வந்த பல மட்டையாளர்களை விட மிக முக்கியமான ஸ்கோர்களை கடந்த ஏழு வருடங்களில் அவர் கீழ்மத்திய மட்டை வரிசையில் தோன்றி ஆடியிருக்கிறார். எண்ணற்ற முறைகள் தனது அணியை தன்னந்தனியாக வெற்றிகளை நோக்கி நடத்தி இருக்கிறார். தன்னைச் சுற்றி அவ்வளவு குழப்பமும் பதற்றமும் நிலவும் போது நிதானமாக ஒரு தியான மனநிலையில் ஒன்றுமே நடக்காதது போல் தான் மட்டும் முற்றிலும் வேறொரு ஆடுதளத்தில், வேறொரு அமைதியான ஆட்டத்தில் ஆடுவது போல் தொடர்ந்து மட்டையாடிக் கொண்டு வந்திருக்கிறார். இந்தியா இலக்குகளை துரத்தும் போது லஷ்மண் ஆடுவதைக் காணும் போது அவர் இலக்கை எட்டிய பின்னரும் கூட விட்டால் இன்னும் ஒரு நூறு ஓட்டங்களுக்கு மட்டையாடச் சொன்னால் ஏனென்று கேட்காமல் மட்டையை சில எண்ணிக்கைகளுக்கு தளத்தில் தட்டி விட்டு ஆட்டத்தை தொடர்ந்திருப்பார் என்று தோன்றும். லஷ்மண் ஓட்டங்களுக்காக ஒரு இலக்குக்காக எளிய வெற்றிக்காக ஆடுபவர் அல்ல அவர் மட்டையாடுவதற்காகவே ஆடுபவர் என்று சொல்லத் தோன்றும். அதனால் தான் மாதக்கணக்கான இடைவெளிக்குப் பின்னர் அவர் மிக சகஜமாய் அணிக்கு திரும்பி வேறு எல்லாரையும் விட சரளமாய் பந்தை கவர் பகுதிக்கு குழந்தையை வருடுவது போல் விரட்டும் போது நமக்கு அவரது ஆட்டம் போன இன்னிங்ஸின் விநோதத் தொடர்ச்சியாகவே படும். வி.வி.எஸ்சின் சிறப்பு அவர் கால-இடத் தடைகளைக் கடந்தவராக தன் கலையை மேம்படுத்தி இருந்தார் என்பது. எப்படி ஒரு நல்ல எழுத்தாளனால் எப்போது வேண்டுமானாலும், இரைச்சல் கூச்சல் நடுவேயோ, கொதிக்கும் ஜுரத்தின் இடையேயோ, கொந்தளிப்பான மனநிலையிலோ எப்போதும் போல் விட்ட இடத்திலிருந்து அதே சரளத்துடன் எழுதிக் கொண்டு செல்ல முடியுமோ அது போலத் தான் கிரிக்கெட்டிலும் ஒரு அபௌதிக உச்சம் உள்ளது. பொதுவாக கிரிக்கெட்டர்கள் தம் கலைவாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் அந்த உச்சத்தை நினைத்தபடி அடையும் ரகசியத்தை கண்டடைகிறார்கள். சௌரவ் கங்குலி தந்து இறுதியான இங்கிலாந்து பயணத்தில் form எனப்படும் ஆட்டநிலைக்கு ஒரு நல்ல விளக்கமளித்தார்: “ஆட்டநிலை என்பது தன்னை மறந்து, புறச்சூழலின் எந்த தகவலும் ஆட்டத்தை பாதிக்காதபடி தொடர்ந்து நிலைப்பது தான். நான் இப்போது அந்த அபூர்வ மனநிலையில் தான் இருக்கிறேன்” என்றார். சுவாரஸ்யமாக கங்குலி தனது கலையின் உச்சத்தை அடைந்த போது அவர் புறநெருக்கடிகளால் ஓய்வறிவிக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருந்தார். அவர் தனது இறுதித் தொடர்களான தெ.ஆ மற்றும் பாக் டெஸ்ட் ஆட்டங்களிலும் அதே தொழில்நுட்ப குறைபாடுகளுடன் தான் இருந்தார்; ஆனால் மனம் ஒரு ஜென் நிச்சலனத்தை அடையும் போது தொழில்நுட்பம், ஆடுதளம், பந்து வீச்சு என்பவையெல்லாம் பொருட்டே அல்ல என்று அவர் நிரூபித்தார். இது ஒரு இருட்டறை ஸ்விட்சு போல. மனதில் அது எங்கிருக்கிறது என்று அனுபவத்தில் கண்டடையும் கலைஞர்கள் பிறகு இருட்டில் தடுமாறுவதே இல்லை. தனது உடற்தகுதி மோசமாக இருந்த, களத்தடுப்பு மேலும் மேலும் மெத்தனமாகி வந்த, காயங்கள் ஒன்றுக்கு மேல் இன்னொன்றாக ஏற்பட்டுக் கொண்டிருந்த இந்த கடந்த ஏழு வருடங்களில் தான் வி.வி.எஸ்ஸும் தனது பௌதிக கட்டுப்பாடுகளை உதறி எழும் சூத்திரத்தை கண்டறிந்தார். ஆனால் அதிர்ஷ்டத்தை அப்படி கட்டுப்படுத்த முடியாதாகையால் அவரது ஆட்டம் கடந்த இங்கிலாந்து ஆஸ்திரேலிய பயணத்தொடர்களில் தொடர்ந்து சீரழிந்தது. அவர் தூங்கி விழித்தது போல் ஆடுதளத்துக்கு வந்தார்; தூங்கி விழித்ததும் அம்மா அருகில் இல்லை என்றறிந்த குழந்தை போல் அவ்வளவு அதைரியமாக, அவநம்பிக்கையாக, தயக்கமாக இயங்கினார்.
லஷ்மண் மீது தேர்வாளர்களுக்கு, ரசிகர்களுக்கு, வாரியத்துக்கு நம்பிக்கை இருந்தது. அவர் உடனடியாக விலகும்படி நம்மால் நேரடியாக கோர முடியாது; ஏனெனில் அவரால் இன்னும் சில வருடங்கள் நிலைக்க முடியும்; ஆட்டங்கள் வென்று தர முடியும். அணி மேலாண்மையும், தேர்வாளர்களும், ரசிகர்களும் அவர் இளைஞர்களுக்காக அணியில் இருந்து விலகினால் நல்லது தானே என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் அதை அவ்வளவு உறுதியுடன் தீர்க்கத்துடன் நம்மால் சொல்ல முடியவில்லை. வி.வி.எஸ்ஸுக்கு இன்னும் அணியில் முக்கிய இடம் இருந்ததே காரணம். அவரது இடத்துக்கு இன்னும் ஒரு மாற்றுவீரர் தயாராக இல்லை என்பதே காரணம். சஞ்சய் மஞ்சிரேக்கர் போன்ற விமர்சகர்கள் தயக்கமாய் பரிந்துரைத்தது இந்தியாவில் நடைபெறப்போகும் ஆட்டங்களில் அவர் இடத்தில் ஒரு இளம் வீரரை வளர்த்தெடுக்கலாம் என்று தான். அந்த தகுதியான புது வீரர் யார் என்பது பற்றி யாருக்கும் உறுதியான கருத்து இல்லை. ரெய்னாவா, சட்டீஷ்வர் பூஜாராவா, பதிரிநாத்தா? இவர்களில் யாரும் தேர்வாளர்கள், அணித்தலைவர் உள்ளிட்ட யாரது முழுமையான நம்பிக்கையை பெறவில்லை. கடந்த ஆஸி பயணத்தின் போது லஷ்மண் உள்ளிட மூத்த வீரர்கள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த போது ரோஹித் ஷர்மாவை லஷ்மணின் இடத்தில் ஆட வைக்குமாறு ஊடகங்கள் பெரும் நெருக்கடியை அளித்தன. பின்னர் ரோஹித் ஒருநாள் தொடரில் ஆடிய போது அவரது மோசமான காலாட்டமும் பொறுமையின்மையும் அந்த கோரிக்கையை கொஞ்ச நாள் கிடப்பில் போட வைத்தது. பின்னர் இலங்கைத் தொடரில் ரோஹித் ஷர்மாவை விலக்கி இன்னொருவரை கொண்டு வரவேண்டும் என்ற கூச்சல் எழுந்தது. அந்த இன்னொருவரான மனோஜ் திவாரி உயரப்பந்தை ஆடும் திறனற்றவர் என்ற உண்மை புலனானதும் ஊடக பரபரப்பு மீண்டும் அடங்கியது. உண்மையில் இந்தியாவின் அவலம் வி.வி.எஸ்ஸின் ஆட்டநிலையோ உடற்தகுதியோ 37 வயதோ அல்ல – டெஸ்ட் ஆட்டங்களுக்கு தோதான திறமையும் மனநிலையும் கொண்ட இளம் வீரர்களை கடந்த ஐந்து வருடங்களில் நம்மால் கண்டறிந்து தயார்ப்படுத்த முடியவில்லை என்பது தான். ஆனால் நாம் அதற்காக மூத்த வீரர்களை காலங்காலமாய் ஆடிக் கொண்டே இருக்க எதிர்பார்க்கவும் முடியாது. இளைஞர்களை முயன்று தான் ஆக வேண்டும். கங்குலி இடத்திற்கு ஒரு கோலி வர நான்கு வருடங்களுக்கு மேல் பிடித்தது என்ற கசப்பான புரிதலுடன் நாம் காத்து தான் ஆக வேண்டும்.
வி.வி.எஸ் இதற்கு முன்னரும் கடுமையான மீடியா நெருக்கடிக்கு கீழ் தான் 16 வருடங்களாக விடாது போராடி வந்தார். ஆனால் இப்போது அவர் மீடியா விமர்சனம் முன்பு பலவீனமாக உணர்ந்திருக்கக் கூடும். முன்பு இந்தியா மோசமாக ஆடினால் முதலில் அணியில் இருந்து தியாகம் செய்ய வேண்டியவராக லஷ்மணைத் தான் எதிர்பார்ப்பார்கள். அவரது மெத்தனமான உடல்மொழி அவர் மீதான இந்த வெறுப்புக்கு உதவியது. சச்சினுக்கும் திராவிடுக்கும் இருந்த நிலைத்த வீரர் என்கிற பிம்பம் வி.வி.எஸ்ஸுக்கு என்றும் இருந்ததில்லை. அவர் என்றுமே ஓட்டமெடுக்க திணறியதில்லை, மூச்சு வாங்க, வியர்வை வழிய ஓடி ஓடி உழைத்ததில்லை என்பது இந்த எதிர்மறை பிம்பத்துக்கு நிச்சயம் துணை போயின. அதனால் அணியில் அவரது இடத்திற்காக அவரே மியூசிக்கல் சேர் ஆட்டம் நெடுங்காலத்துக்கு ஆடி வந்தார். அவராகவே ஓடி ஓடி தன் நாற்காலிக்கு வேகமாக வந்து சுற்றுமுற்றும் பார்த்து விட்டு ஆசுவாசமாக அமர்ந்து கொள்வார். ஒரு கட்டத்தில் லஷ்மண் எண் 5 ஐ நிரந்தரமாக தனதாக்கிக் கொண்டார். கங்குலியின் ஓய்வுக்குப் பின் 6 மற்றும் 7வது எண்களில் வலுவான மட்டையாளர்கள் இல்லாததால் அவரது பொறுப்புணர்வும் அணியில் அவருக்கான தேவையும் அதிகரித்தது. இது லஷ்மணின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்த மிகவும் உதவியது.
இங்கிலாந்து பயணத்தில் அவர் மட்டமாக ஆடினார். ஆனால் அவர் என்றுமே இங்கிலாந்தில் நன்றாக ஆடியதில்லையே என்று சமாதானம் செய்து கொண்டோம். கடந்த ஆஸ்திரேலிய பயணத்தில் அவரது தேர்வு அதுவரையிலான ஆஸிக்களுக்கு எதிரான அவரது பிரம்மாண்ட சாதனைகளுக்கான வெகுமதி தான் என சொல்ல வேண்டும். அவர் தனது ஆட்டவாழ்வில் என்றுமே நெருக்கடிகளை சந்திக்கும் போது ஒரு ஆஸ்திரேலிய பயணம் வரும். சதம் அடிக்கும் எந்திரமாக மாறுவார். அணியில் அவர் இடம் நிரந்தரமாகும். ஆனால் இம்முறை ஆஸி பயணத்தில் ஆஸியினர் சாமர்த்தியமாக லஷ்மணை எதிர்கொண்டனர். முன்பு போல் அவரை தாக்கி வெளியேற்ற பார்க்காமல் அவரது பொறுமையுடன் விளையாடி வென்றனர். லஷ்மணும் மனதில் நிம்மதியிழந்து ஆட்டத்தில் சமநிலை இன்றி காணப்பட்டார். இத்தொடரில் அவரது தோல்விகள் தாம் அவரது முதுகை முறித்த கடைசி துரும்பு. விமர்சனங்களையும் சீண்டல்களையும் பொருட்படுத்தத் துவங்குகிறோம் என்றால் நாம் பயந்து குழம்பி போயிருக்கிறோம் என்று பொருள். வி.வி.எஸ் அப்படியான ஒரு தெளிவற்ற, கொந்தளிப்பான, கண்ணீர ததும்பும் மனநிலையில் தான் தன் ஓய்வு முடிவை எடுத்திருக்கிறார். வி.வி.எஸ் இம்முடிவை எட்டும் முன் தன் உறவினர்கள், நண்பர்கள், உற்றவர்களை கலந்தாலோசித்தார். அவரது தனிப்பட்ட பயிற்சியாளர் ஆஸி டெஸ்ட் தொடர் வரை பொறுமை காக்க வேண்டினார். ஆனால் வி.வி.எஸ் “நான் இன்னும் மூன்று தொடர்கள் ஏனும் ஆடத் தயாராகத் தான் இருந்தேன். ஆனால் அதற்காக ஒரு இளைய வீரரின் வாய்ப்பை பறிக்க நான் தயாராக இல்லை. நான் என்றுமே சுயநலமின்றி என் அணியின் வளர்ச்சிக்காக பங்காற்றத் தான் முயன்றிருக்கிறேன். என்றுமே அணியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்க மாட்டேன்” என்று காரணம் சொன்னார். அந்த “தானை” கவனியுங்கள். எப்போதுமே நாம் தன்னம்பிக்கை குன்றும் போது தான் சுயநலமற்ற சேவை பற்றி நெகிழ்ந்து உருகுவோம்.
வி.வி.எஸ் ஓய்வு பெறுவதால் உடனடியாக ஒரு இளைய வீரர் தோன்றி வெற்றியடையவார் என்று எந்த உறுதியும் இல்லை. அவர் முதல் டெஸ்ட் ஆட்டம் மட்டுமே ஆவது ஆடி ரசிகர்களுக்கு விடைகூறி இன்னும் இனிமையான நேர்மறையான மனநிலையில் கிளம்பியிருக்கலாம். அவரது நீண்ட ஆட்டவாழ்வு இப்படி கசப்பாக அரைகுறையாக முடிந்திருக்க வேண்டியதில்லை. பாகிஸ்தானில் வாரத்திற்கு ஒருமுறை ஒரு மூத்த வீரர் ஓய்வுற்று பின் திரும்புவார். மே.இ தீவுகளில் கெய்லும், இங்கிலாந்தில் பீட்டர்ஸனும் ஓய்வு என்பது ஒரு திருடன் போலீஸ் விளையாட்டு என்று சமீபமாக பலமுறை நிரூபித்துள்ளனர். வி.வி.எஸ்ஸும் திரும்ப வேண்டுமென்று ஆதரவுக் கரங்கள் நீண்டனவா, கோரிக்கைகள் எழுந்தனவா? எல்லாரும் நன்கு எதிர்பார்த்து நிகழ்ந்த ஒரு மரணம் போல அவரது ஓய்வு அறிவிப்பு ஒரு விசித்திர மௌனத்தை, சங்கடமான புன்னகையை, எதிர்பார்ப்பின் அசௌகரிய பெருமூச்சுகளைக் கொண்ட ஒரு சூழலைத் தான் தோற்றுவித்தன. கொலை செய்யவிருந்த ஒருவர் தாமாகவே தற்கொலை பண்ணிக் கொண்டால் கொலையாளி அடையும் நிம்மதியுடன் ஊடகங்கள் அவரை குற்றவுணர்வுடன் அவசர அவசரமாக பாராட்டி முடித்தன.
வி.வி.எஸ் ஓய்வு பெறுவதாய் முடிவெடுத்ததும் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்திடம் பேசினார். அதற்குப் பின் தோனியிடமும் உரையாடி இருப்பார். அணி மேலாண்மையும் பிறரும் தனது பங்களிப்பை பாராட்டி தனக்கான தேவையை வலியுறுத்தி அணிக்குள் தொடர கோரிக்கை வைப்பார்கள் என அவர் எதிர்பார்த்திருக்கலாம். அது நிகழாததால் அவர் தனிமைப்பட்டு அந்நியப்பட்டு உணர்ந்திருக்கலாம். வி.வி.எஸ்ஸின் இந்த அவசர விடைபெறல் தன்னை நிராகரிப்பவர் மீதான கோப வெளிப்பாடாக தான் தோன்றுகிறது. நிஜமாகவே அணி எதிர்காலம் குறித்த அக்கறை மிக்கவர் என்றால் அவர் திராவிடுடன் சேர்ந்து அப்போதே ஓய்வை அறிவித்திருக்க வேண்டும் அல்லவா?
வி.வி.எஸ்ஸின் இடம் என்ன?
• மணிக்கட்டை சுழற்றி சொடுக்கி விரும்பின இடங்களுக்கு எல்லாம் பந்தை விரட்டும் தென்னிந்திய மட்டையாளர்களின் மிகச் சிறந்த பிரதிநிதியாகவா?
• ஷேர் வார்னை லெக் பக்கமாய் இவ்வளவு துச்சமாய் ஆட முடியும் என்று நிரூபித்தவராகவா?
• தனது 281 ஸ்கோர் கொண்டு ஒரு தொடரின் மட்டுமல்ல ஒரு அணியின் விதியையே திருத்தி எழுதி, அத்தோடு பாலோ ஆன் செய்ய எதிரணியை அனுமதிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை உலகம் முழுக்க அணித்தலைவர்களிடத்து ஏற்படுத்தியவராகவா?
• ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2500 சொச்சம் ஓட்டங்களை எடுத்தவராகவா, ஆஸ்திரேலியாவில் ஒரே ஒருநாள் தொடரில் மூன்று சதங்கள் அடித்த ஒரே இந்தியனாகவா?
• டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய இலக்குகளை துரத்தும் போது தன்னந்தனியாக வழிகாட்டியதா?
இவை எல்லாவற்றையும் விட வி.வி.எஸ்ஸின் முக்கிய இடம் சச்சினின் தரத்தை மிக நெருக்கமாக வந்து தொட்டவராகவே இருக்க முடியும். தொண்ணூறுகளில் சச்சின் தன்னந்தினியாக ஆதிக்கம் செலுத்தியதன் பின் சில நல்ல மட்டையாளர்கள் வந்தார்கள், கங்குலி, திராவிட் போல். அவர்களுக்குப் பின் சேவாக், காம்பிர் வந்தார்கள். சச்சின் காலத்திலேயே அசார் இருந்தார். ஆனால் யாருமே சச்சினின் நீண்ட சகாப்தத்தின் போது வேகமான உயரப்பந்துகளை இவ்வளவு சௌகரியமாக அசட்டையுடன் சந்தித்து தாக்கி ஆடவில்லை. யாருமே வேக மற்றும் சுழல் பந்து வீச்சை இவ்வளவு சுலபமாக தடையின்றி ஆடிக் காட்டியதில்லை. குறிப்பாக ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் லஷ்மண் சச்சினை மிக நெருங்கி வருவார் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஸ்டீவ் வாஹின் ஆஸி அணியை இந்தியாவில் முறியடித்த பின் இந்தியா தென்னாப்பிரிக்கா செல்லவிருந்தது. அத்தொடரில் இந்தியா சோபிக்க சச்சின் அல்ல லஷ்மண் தான் சிறப்பாக ஆட வேண்டும் என்று மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்தார்கள். தொண்ணூறுகளில் சச்சின் காட்டின ஆட்டசுதந்திரம் இப்போது லஷ்மணிடம் மட்டுமே இருந்தது. சச்சினின் மட்டையாட்டம் ஒரு சிறு சறுக்கலை சந்தித்த கட்டம் இது. சச்சினுக்கும் லஷ்மணுக்கு திறமையை பொறுத்த மட்டில் எட்ட வைத்தால் தாண்டும் அளவுக்கு தொலைவே அப்போது இருந்தது. சச்சினைப் போன்று லஷ்மணுக்கு அநேகமாக எல்லா ஷாட்களும் இருந்தது, எந்த ஷாட்டையும் யாருக்கெதிராகவும் எப்போது வேண்டுமானாலும் அடிக்கும் தன்னம்பிக்கை இருந்தது. பந்தை சில நொடிகளுக்கு முன் கணிக்கும் பார்வை, அபூர்வமான டைமிங், உடல் சமநிலை இருந்தன. ஆனால் சச்சினின் முதிர்ச்சி மற்றும் தொழில்நுட்ப தேர்ச்சி லஷ்மணுக்கு இல்லை. அதற்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டன. அவர் அங்கு வந்து அடைந்ததும் சச்சின் தொலைவானுக்கு அருகே எங்கேயோ போய் விட்டார். ஆனாலும் தரம் எனும் ஒரே அளவுகோலின் படி, கடந்த இரு பத்தாண்டுகளில் சச்சினுடன் ஒப்பிடும் அளவுக்கு நெருங்கி வந்த ஒரே மட்டையாளராக இந்தியாவில் உருவானவர் என்ற ஆகப்பெரும் சிறப்பு லஷ்மணுக்கு உண்டு. இதைவிட ஒருவருக்கு வேறு என்ன வேண்டும்?
லஷ்மணின் ஆட்டவாழ்வை அவரது சகபாடிகளான திராவிட், கங்குலி ஆகியோருடன் ஒப்பிடும் போது முக்கிய குறையாக அவரது ஒருநாள் ஆட்ட சாதனை தெரிகிறது. லஷ்மண் 86 ஆட்டங்களில் 30 சராசரிக்கு 6 சதங்கள் எடுத்தார். இந்த சதங்கள் அவரது ஒருநாள் ஆட்டவாழ்வின் இறுதியில் அடிக்கப்பட்டவை. அவர் டெஸ்டுகளில் எய்திய ஆட்டநிலையின் தொடர்ச்சியாகவே அதே தன்னம்பிக்கையுடன் ஒருநாள் ஆட்டங்களிலும் ஆடினார். அவருக்கு ஒரு காலத்தில் ஒருநாள் ஆட்டங்களிலும் நிலைப்படும் விருப்பம் இருந்தது. ஆனால் அவரது ஆட்டமுறை ஒருநாளுக்கு முழுக்க மாறானதாக இருந்தது. அவருக்கு பந்தை தடுக்கும் வாகில் மென்மையாக உருள விட்டு ஒற்றை ஓட்டங்களை எடுக்கும் பாணி வரவில்லை. ஒரு பக்கம் நேர்த்தியாக ஆடியபடி தேவையான போது சச்சின், கங்குலி போல் ஆறு அடிக்கவும் அவருக்கு வலு இல்லை. ஜெயவர்தனே போன்று பாடில், ஸ்கூப், லேட் கட் போன்ற பரிசோதனை ஷாட்களை அடிக்கவும் தெரியாது. நாலு அல்லது இரண்டு. இவை மட்டுமே கொண்டு தான் லஷ்மண் ஆஸ்திரேலியாவில் ஒரே தொடரில் மூன்று ஒருநாள் சதங்களை அடித்தார். ஆச்சரியமாக அவர் ஒருநாள் போட்டிகளில் இப்படி ஒற்றைப்பரிமான மட்டையாளராக இருந்தும் கூட தடங்கலின்றி மிக சரளமாகத் தான் ஆடினார். ஒருநாள் வீரராக அவரது மொத்த ஸ்டிரைக் ரேட் 70 ஆக இருந்த போதும், தனது சிறந்த கட்டத்தில் அவரால் எளிதில் 90க்கு மேல் ஸ்டிரைக் ரேட்டுடன் ஆட முடிந்தது. நன்றாக ஆடி வந்த போது தான் அவர் எதிர்பாராத விதமாக ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார். திராவிட் அக்கட்டத்தில் எண் 3இல் நன்றாக ஆடி வந்தார். கங்குலி தலைமையின் கீழ் கீழ்மத்திய மட்டைவரிசையில் பந்து வீசவும் நன்றாக களத்தடுப்பு பண்ணவும் தெரிந்த வீரர்களை ஆட வைக்கும் கொள்கை கொண்டு வரப்பட்டது. யுவ்ராஜ்களும், காயிப்களும் அடுத்த தலைமுறை ஒருநாள் மட்டையாட்டத்தின் அழகியலை முன்னெடுக்க லஷ்மண் எளிதில் பின் தங்கிப் போனார். ஒருநாள் வடிவத்துக்கு ஆட்டத்தரம் மட்டுமல்ல வேறு பல கூறுகளும் தேவை என்பதை அவர் மிக மிக தாமதமாக உணர்ந்தார், அப்போது அவர் இனி தாமதமாகி விட்டது, டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவோம் என்கிற மனநிலைக்கு வந்து விட்டார். 2003 உலகக் கோப்பையில் லஷ்மணின் இடம் அவருக்கு எவ்விதத்திலும் நிகரில்லாத தினேஷ் மோங்கியாவுக்கு சென்றது. உலகக் கோப்பை முழுக்க மோங்கியா எந்தவொரு குறிப்பிட்ட வகையிலும் பங்காற்றவில்லை. ஆனால் சுமாராக பந்து வீசினார். நன்றாக களத்தடுப்பு செய்தார். இவை இரண்டும் லஷ்மணுக்கு வராது என்ற காரணத்தாலே அவர உலகக் கோப்பை அணியில் இடம் தவறவிட்டார். ஆனால் உலகக் கோப்பை அணியில் இட வாய்ப்பு மட்டுமல்ல ஒருநாளில் சோபிக்காததனால் லஷ்மண் இந்திய அணியின் தலைவராகும் முக்கியமான வாய்ப்பையும் தவறவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அவர் தனது உடற்தகுதி, களத்தடுப்பு, விக்கெட்கள் இடையிலான ஓட்டம் ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டிருந்தால் அவரது ஆட்டவாழ்வு இன்னும் அங்கீகாரம் மிக்கதாக நிலைத்ததாக அதனாலேயே சுலபமானதாக இருந்திருக்கும். உதாரணத்திற்கு கங்குலியையும் திராவிடையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
கங்குலி ஒரு நல்ல ஒருநாள் வீரராக இருந்ததனால் மட்டுமே அணித்தலைவரானார். அணித்தலைவராக இருந்ததனால் மட்டுமே அவர் டெஸ்ட் அணியில் சராசரியாக ஆடிய போதும் எளிதில் தொடர்ந்து இடம் பெற்றார். திராவிடும் அதே போன்று விக்கெட் கீப்பிங், உடற்தகுதி, ஓட்டம், எண் 6இல் வந்து அதிரடியாக ஆடும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டதனாலே ஒருநாள் அணியில் நிலைத்தார். அதே காரணத்தினால் தான் அவர் அணித்தலைராகவும் ஆனார். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்து ஒரு பத்தாண்டுகள் ஒருநாள் வடிவத்தின் ஆதிக்க காலமாக இருந்தது. அப்போது ஒருவர் டெஸ்டு மட்டுமே ஆடுவேன் என்பது நாவல் ஆதிக்கம் செலுத்திய இருபதாம் நூற்றாண்டில் பிடிவாதமாக கவிஞனாக மட்டுமே இருப்பேன் என்பதைப் போன்றது. பிடிவாதம் என்பது காலக்கடிகாரத்தின் முள்ளைப் பிடித்து தொங்குவதைப் போன்றது. லஷ்மணுக்கு எல்லா வடிவங்களிலும் சோபிக்கும் அபரித திறமை இருந்தது. அதே வேளை டெஸ்டை மட்டுமே தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவருக்கு உண்டு தான். ஆனால் ஒருநாள் வடிவத்தில் நிலைப்படாததால் அவருக்கு நடைமுறை இழப்புகள் பல ஏற்பட்டன. அவர் ஒரு நல்ல அணித்தலைவராக வரும் திறமை கொண்டவர் என்று பல முன்னாள் வீரரகள் நம்பினர். குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்கள் லஷ்மணின் கீழ் மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆடினர். அவர் பொறுமையான கூர்மையான தலைவராக உள்ளூர் ஆட்டங்களில் விளங்கினார். ஆனால் ரவி சாஸ்திரி, அஜய் ஜடேஜா போன்று அவரது தலைமைப் பண்புகளும் இந்திய அணிக்கு பயன்படாமல் போயின. சமீபமாக ஒரு பேட்டியில் ஐபிஎல் அனுபவம் பற்றி பேசும் போது லஷ்மண் “நான் ஒரு சிறுவனாக கிரிக்கெட் பயின்ற போது வெளியேறாமல் நாட்கணக்கில் ஆடுதளத்தில் தங்கி ஆடுவதே லட்சியமாக இருந்தது. அப்படி பயின்று வந்த பின் இப்போது பார்ப்பது போல இரண்டு ஓவர்கள் மட்டையை வீசி சிக்சர்கள் அடித்து இருபது முப்பதுகள் அடித்து அணிக்கு வெற்றிகரமாக பங்காற்றுவதே ஏற்றது எனும் T20 பாணி எனக்கு விநோதமாக இருக்கிறது” என்றார். காலத்துக்கு ஏற்றவாறு தகவமைவது என்பது சீரழிவது அல்ல; மாறாமல் இருப்பதில் தூய்மை எதுவும் இல்லை. ஓடுகிற நீர் தான் உண்மையில் தூய்மையாக இருக்கும்.
லஷ்மணின் இடத்தில் இனி யார் என்கிற கேள்வி இனி வரும் மாதங்களில் ஊடகங்களில் ஆவேசமாக ஆர்வமாக விவாதிக்கப்படும். ஒருவிதத்தில் லஷ்மணின் தற்போதைய இந்த ஓய்வெடுக்கும் நெருக்கடி, மாற்றுவீரருக்கான பரபரப்பான தேடல், காத்திருப்பு எல்லாம் செயற்கையான ஊடக விளையாட்டாக கூட இருக்கலாம். அவர் இடத்தில் வருகிற இளைஞர்கள் மக்களின் எதிர்பார்ப்பின் ஏமாற்றத்துக்கும், விமர்சனத்தின் நெருக்கடிக்கும் எளிதில் ஆளாவார்கள். டெஸ்ட் ஆட்டங்களைப் பற்றி மக்களுக்கு சின்ன அளவிலான சுவாரஸ்யத்தை இனி ஏற்படுத்துவதற்கு முடிந்து போன ஒரு யுகம் பற்றின ஏக்கத்தை கிளர்த்துவதை தவிர மீடியாவுக்கு வேறு வழியில்லை. டைனசர்களின் அழிவு போல், தமிழ் சிறுபத்திரிகை தொன்ம வரவலாற்றில் சி.சு.செல்லப்பா, க.நா.சு தியாகங்கள் போல் லஷ்மணும் திராவிடும் இனி அவ்வாறு ஒரு கற்பனாவாத கிளர்ச்சிக்குத் தான் பயன்படப் போகிறார்கள்.
உலகத்தர வீரர்களும், சாதனையாளர்களும் எல்லா ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையும் தேசங்களில் தோன்றுவதில்லை. சச்சின், திராவிட், லஷ்மண்களை இனி எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு மரபார்ந்த புனிதமும் தூய்மையும் துறவி மனப்பான்மையும் தேவையுள்ளது. இன்று அவை நிச்சயம் காலாவதியாக விட்டன. எப்படி இன்னொரு “போரும் வாழ்வும்” யாரும் எழுதப்பட போவதில்லையோ அதே போல் டெஸ்ட் ஆட்டமும் கடந்தகால எச்சமாக மாறி விட்டது; சச்சின், திராவிட், வி.வி.எஸ்களின் கிளாசிக்கல் காலகட்டம் ஒரு முடிவுக்கு வருகிறது. ஆனால் எப்படி “போரும் வாழ்வுக்கு” ஒரு முக்கியத்தும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்குமோ அது போல் டெஸ்ட் கிரிக்கெட்டும் உயர்கலாச்சார குறியீடாக இருந்து கொண்டு தான் இருக்கும். நாற்பதுகளைத் தொடும் இம்மூவரும் நம் காலகட்டத்தின் பிரதிநிதிகள் அல்ல. அர்த்தபூர்வமான, தொடர்ச்சியான எந்த தேடல்களுக்கும் இடமில்லாத இந்த தலைமுறை மனிதர்களுக்கு இவர்களோடு பயணிக்கும் தகுதி இல்லை என்றே கூறவேண்டும். நம் தகுதிக்கு நமக்கு ரெய்னாக்களும் பத்ரிநாத்துகளும் தான் கிடைப்பார்கள். இவர்கள் கீழானவர்கள் என்றல்ல பொருள்., மாறாக நமது ஆழமின்மைக்கு மிகத் தோதானவர்கள் இவர்கள் மட்டுமே.
(2012 ஆகஸ்டு மாத உயிர்மையில் வெளியானது)
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
மிகவும் சிறப்பாக எழுதி உள்ளீர்கள்...
ReplyDeleteவிராத் கோலி வர நான்கு வருடம்...
VVS-ன் கவனிக்கப்பட வேண்டிய 'தான்'...
//// கொலையாளி அடையும் நிம்மதி /// உண்மை...
நன்றாக முடித்துள்ளீர்கள்... நன்றி சார்...
VVS-டெஸ்ட் வரலாற்றில் ஒரு தூண் தான்... (டிராவிட் போல)
del del del
ReplyDeleteகுழந்தைகளையும் சிறுவர்களையும் கடத்தும் கடத்தல்காரர்களைப் போன்ற அயோக்கியன் யாருமில்லை. இவர்களை கண்டதும் கொல்லும் சட்டம் வர வேண்டும்.
(சில நாட்கள் முன் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் சிறுவனைக் காணவில்லை என்ற அவனின் அம்மா அப்பா ஒட்டி இருந்த போஸ்ட்டரை பார்த்த போது எனக்கு பய உணர்வு வந்தது. )del del del