நண்பர் செந்தில்குமாரை நேற்று முதன்முறை சந்தித்தேன். நான் எழுதிய கட்டுரை ஒன்று குறித்த தன் கேள்விகளை ஒரு நோட்டுபுத்தகத்தில் குறித்து கையுடன் கொண்டு வந்திருந்தார். நானும் பொதுவாக எழுத்தாளர்களை ஒரு தயாரிப்புடன் தான் சந்திக்க செல்வேன். வரிசையாக கேள்விகள் கேட்பேன்.
கல்லூரிக் காலத்தில் ஜெயமோகனை கிட்டத்தட்ட அவரது அலுவலகத்தில் தினமும் சந்தித்து நான்கு ஐந்து கேள்விகளாவது கேட்பேன். ஒரு நாள் நான் அவருக்காக காத்திருக்க நேர்ந்து மாலை ஆகிவிட்டது. அவர் கிளம்புகிற நேரம் பார்த்து அடைமழை பிடித்தது. அதனால் அவரும் நீண்ட நேரம் அலுவலகத்தில் தங்க நேர்ந்தது. அன்று தொன்மங்கள் பற்றி அருமையாக பேசினார். மழையின் பின்புலத்தில் பிடித்தமான உரையாடலில் ஈடுபடுவது ஒரு கொடுப்பினை. பெங்களூரில் தமிழவனை சந்தித்த போதும் சரி எஸ்.ராவை அவர் வீட்டில் பார்த்த போதும் நான் நிறைய கேட்டு தெரிந்து கொண்டேன். இத்தகைய பேட்டி சந்திப்புகள் அந்தரங்கமான லகுவான உரையாடலை அனுமதிக்காது. ஆனால் நிறைய கற்றுக் கொள்ளலாம்.
சில எழுத்தாளர்களுக்கு அறிவார்ந்த திட்டமிட்ட உரையாடல் ஒவ்வாது. மனுஷ்யபுத்திரன் அப்படியானவர், அவர் எதேச்சையாய் தன்போக்கில் மலரும் உரையாடல்களையே விரும்புவார். அது கசப்பாக, பொருமலாக, நகைச்சுவையாக, அறிவார்ந்ததாக, கவித்துவமாக அன்றன்றைக்கு தோன்றுகிற மனோநிலைக்கு ஏற்ப இருக்கும். ஒரு கட்டத்தில் நான் மனுஷிடம் தயாரிப்புடன் பேசுவதை நிறுத்தி விட்டேன். சிலவேளை ரொம்ப நேரம் பேசிக் கொள்ளாமல் இருப்போம். நான் பாட்டுக்கு ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிப்பேன். சட்டென்று பேச்சு மலர்ந்து தீவிரமாகவே அரட்டையாகவோ கிளைபிரியும். ஷங்கரராமசுப்பிரமணியனின் கவிதையிலும் உரைநடையிலும் இல்லாத கூர்மையான அங்கதம் பேச்சில் இருக்கும். சீரியஸான முகத்தை வைத்துக் கொண்டு ஜாலியாக பேசுவார்.
நான் எழுத்தாளனை சந்திப்பதில்லை என கொள்கை வைத்திருக்கிறேன் எனக் கூறுபவரை பார்த்திருக்கிறேன். ஏதாவது கசப்பான அனுபவம் காரணமாக இருக்கலாம். சில எழுத்தாளர்களுக்கு வாசகனை எதிர்கொள்ள தெரிவதில்லை.
வாசகர்கள் தெய்வ தரிசனத்துக்காக எழுத்தாளனிடம் போவதில்லை. நட்புறவை நாடி வருகிறார்கள். நண்பரிடம் நடந்து கொள்வதைப் போலத் தான் வாசகரிடமும் பழக வேண்டும். அவர்களை பேச விட்டு கவனித்து அக்கறையும் மதிப்பும் அளிக்க வேண்டும். அப்படித் தான் நல்ல உறவுகள் வளர்கின்றன. சில வருடங்களுக்கு முன் எனக்கு ஒரு தோழி வாய்த்தார். வாசகராக மின்னஞ்சலில் அறிமுகமானார். இரண்டாவது அஞ்சலில் “நான் உங்களை விட அதிக வயதானவள்” என்றார். விநோதமாக பட்டது. “சரி இருக்கட்டுமே” என்றேன். பின்னால் ஒருமுறை என்னிடம் “நீங்கள் என் வயதை சாதாரணமாக எடுத்துக் கொண்டதே மிக பிடித்திருந்தது” என்றார். இப்படி பல சமயங்களில் நட்பை நாடி வருபவர்களின் எதிர்பார்ப்புகளும் தயக்கங்களில் எளியதாக விநோதமாக கூட இருக்கும். இவர்களில் பல அற்புதமான நண்பர்கள் நமக்கு கிடைப்பார்கள்.
சாதாரணமாக ஒரு நண்பரிடம் செய்வது போல் வாசகனிடம் நலம் விசாரிப்பது, புன்னகையுடன் அன்பாக பேசுவது, கவனிப்பது இதையெல்லாம் செய்வதில் சில எழுத்தாளர்களுக்கு தயக்கம் உள்ளது. இதை ஒரு சமூக பண்பாட்டுக் குறை எனலாம். உதாரணமாக சில வருடங்களுக்கு முன் நான் சத்யம் தியேட்டரில் தியோடர் பாஸ்கரனை சந்தித்தேன். அக்காலத்தில் நான் உயிர்மையில் எழுத ஆரம்பித்திருக்கவில்லை. ஆனால் பாஸ்கரனின் எழுத்து மிகவும் பிடிக்கும். நான் அவரிடம் சென்று இதை சொன்னேன். அவர் என்னை பார்க்காதது போல் திரும்பி பக்கத்தில் நின்ற நண்பரிடம் பேச ஆரம்பித்தார். பின் என்னிடம் எதையும் சொல்லாமல் கிளம்பி விட்டார். இது எழுத்தாளனின் விநோத குணம் அல்ல. சில தனிநபர்களுக்கு உள்ள ஆளுமைக் குறைபாடு. சுஜாதா கூட புதியவர்களை சந்திப்பதில் கூச்சம் கொண்டவர் தான். இந்த கூச்சம் களைவதற்கென இன்றைய காலத்தில் கல்லூரி அளவில் கூட ஆளுமை பயிற்சிகள் அளிக்கிறார்கள்.
சில வாசகர்கள் மாறுபட்ட கருத்துக்களோடு வருவார்கள். உடனே நம் எழுத்தாளர்கள் அவர்களை உட்கார வைத்து வகுப்பெடுப்பார்கள். வாசகர் வெறுத்துப் போவார். ஒரு வாசகர் பாராட்டுவதோ விமர்சிப்பதோ எழுத்தாளனை தூக்கி வைக்கவோ கீழே போட்டு மிதிக்கவோ அல்ல. அதன் உத்தேசம் உறவை ஸ்தாபிப்பது தான். வாசகன் நான் உங்களுக்கு சரிக்கு சமம் என நிறுவ விரும்புகிறான். அப்போது தான் நட்பு சாத்தியப்படும். இந்த பாராட்டு அல்லது விமர்சனம் ஒரு முகமன் போல அல்லது “வானம் ரொம்ப மந்தாரமா இருக்கே, நல்ல மழை வரும் போல” என வானிலை அறிக்கையுடன் பேச்சை ஆரம்பிப்பது போல.
உரையாடலின் போது வாசகனுக்கு எதுவும் புதிதாக புரிய வைக்கும் அவசியமில்லை. தேவையானது அத்தனையும் அவன் பிரதியில் இருந்தே கற்றுக் கொள்கிறான். நல்ல உரையாடல் இரு நண்பர்கள் சேர்ந்து புது ஊருக்கு பயணம் போவது போல. அதில் பேச்சு அல்ல முக்கியம், புதிய விசயங்களை சேர்ந்து கண்டறியும் திகிலும் ஆச்சரியமும் தான்.
இதையெல்லாம் விட்டு விட்டு சிலர் யாராவது வாசகன் என வந்தால் வாயிலும் காதிலும் ஒரு 1000 வாலாவை சொருகி விட்டு தீக்குச்சி உரச துவங்கி விடுகிறார்கள். அல்லது தெய்வம் என்றாவது பேசியதா என்ற கணக்கில் பேசாமல் இருந்து விடுகிறார்கள். மனிதர்களிடம் பேசத் தெரியாதவர்கள் மனிதர்களைப் பற்றி, அதுவும் நன்றாகவே, எழுதுவது விசித்திரம் தான்.
வாசகனின் உரையாடல் தொனி எழுத்தாளரின் எண்ண ஓட்டம் தனக்கு புரிந்துவிட்டது அல்லது நான் புரிந்துகொண்டேன் என்பதை வெளிப்படுத்துவதுதான். தன்னைவிட தன் வாசகன் எந்தவிதத்திலும் சிறந்தவனாய் இருந்துவிடுவதை விரும்பாத எழுத்தாளர்கள்தான் தன்னை பின் இழுத்துக்கொள்கிறார்கள் என தோன்றுகிறது. நீங்கள் சொன்னதுபோல் மனுஷ்யபுத்திரனிடம் எப்போதுமே ஒரு Lively தன்மையை கவனித்திருக்கிறேன்.
ReplyDelete