“Ship of Theseus” பார்த்து விட்டு அனுராக் காஷ்யப் தன்னை ஒரு இயக்குநராக கருதவே கூச்சமாக இருக்கிறது என்றார். இந்திய சினிமாவில் இப்படத்திற்கு ஒரு முன்மாதிரி இருக்கிறதா என வியப்பாக இருக்கிறது. நமது சிறந்த இயக்குநர்களின் ஆகச்சிறந்த கலைப் படங்கள் கூட அடிப்படையில் உறவுகளை, ஒரு சமூகப் பிரச்சனையை, அல்லது மனித உளவியலை புது கண்ணோட்டத்தில் காட்டியிருக்கும். Ship of Theseus இன்னும் ஒரு படி மேலே போய் மனித வாழ்வின் அடிப்படையான பிரச்சனைகளை அலசுகிறது.
மனிதனை பேசுவதற்கும் மனித வாழ்வை பேசுவதற்கும் முக்கியமான வேறுபாடு உண்டு. இரண்டாவது மனித வாழ்வு இன்று சந்திக்கும் அடிப்படையான நெருக்கடிகளை அலசுவது. இது மிக உயர்ந்த தளம்.
ஒரு உதாரணத்துக்கு சம்பத்தின் ”இடைவெளியை” எடுத்துக் கொள்வோம். இது மரணம் என்பதை ஒரு தனிமனிதனின் பக்கம் இருந்து பார்த்து சில கேள்விகளை எழுப்புகிறது. ஆனால் ஏவாள் தடைசெய்யப்பட்ட கனியை சாப்பிட்டது குற்றமா என்கிற விவிலிய கதை எழுப்புகிற free-will விவாதத்தோடு ஒப்பிடுகையில் சம்பத்தின் கேள்வி சுருங்கி விடுகிறது. Ship of Theseusஉம் இது போல் இன்று மனித குலம் சந்திக்கும் மாபெரும் கேள்விகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு எதிர்கொள்கிறது. சினிமா என்பதால் மிக எளிய முறையில் அதிக சிக்கலின்றி பேசுகிறது. முக்கியமாக எந்த தீர்வையும் தராமல் தனதான பார்வையை மட்டும் முன்வைக்கிறது.
கல்லூரியில் Ecopoetics எனும் சூழலியலையும் தொல்காப்பியத்தையும் கலந்த ஒரு பாடம் இருந்தது. சூழலை அழிப்பதிலும் சமநிலை குலைப்பதிலும் மனிதனின் பங்கைப் பற்றி பேசுகையில் மிக அடிப்படை நடவடிக்கையான விவசாயம் கூட எப்படி இயற்கையை அழிக்கும் எதிர்மறை செயல் என இதை நடத்திய பேராசிரியர் விளக்கினார். அதேவேளை இதே பேராசிரியரைப் பற்றியும் மாணவர்கள் ஒரு குற்றச்சாட்டு வைத்தார்கள். எங்கள் கல்லூரி வளாகம் ஒரு வனப்பகுதி. அங்கு பெட்ரோல் வாகனங்கள் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு உண்டு. எங்கள் பேராசிரியர் காரில் தான் வருவார். அவர் பெட்ரோலை எரித்து அதன் மூலம் சூழலை கெடுக்கவில்லையா, பேசுவது ஒன்று பண்ணுவது இன்னொன்றா என கேட்டார்கள்.
எனக்கு இதை ஒட்டி வேறுபல சந்தேகங்கள் எழுந்தன. ஒரு சூழலியலாளர் டியோடொரண்ட், ஏ.ஸி என பல நவீன பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? அவர் காந்தியவாதிகள், ஜெயின் துறவிகள் போல் வாழ வேண்டுமா? எவ்வளவோ எதிர்ப்பரசியல் பேசிய பூக்கோ கூட தான் ஒரு ஓரின சேர்க்கையாளன் என்பதை வெளிப்படையாக கூறி அவர்களுக்காக போராட தயங்கினார். இது ஓரினவாதம் தவறு என்பதை பூக்கோ ஏற்றார் என்பதாகாதா? எவ்வளவோ அறிவுத்துறைகளின் பாவனைகளை உடைத்தெறிந்து அவற்றின் பின்னுள்ள அரசியலை திறந்து காட்டிய பூக்கோ தன்னுடைய பால்நிலையை வெளிப்படுத்த மறுத்ததும் ஒரு அதிகார அரசியல் இல்லையா? ஊழலை எடுத்துக் கொள்வோம். ஊழலை எதிர்ப்பதில் எந்தளவுக்கு போக முடியும்? அன்னா ஹசாரேவால் கார்ப்பரேட்டுகளை கேள்வி கேட்க முடியவில்லை என்பதை பார்த்தோம். இன்றுள்ள பல போராளிகளைப் பற்றி இப்படி ஏதாவது ஒரு கேள்வி உள்ளது. உதயகுமார் ஏன் அம்மாவை கடுமையாக எதிர்க்க தயங்குகிறார்? அருந்ததி ராய் ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டே பாமரர்களுக்காக குரல் கொடுப்பதில் உள்ள முரண்பாடு என்ன? கம்யூனிஸ்டுகளை ஒரு அரசாங்கத்தை வெளியில் இருந்து ஆதரித்துக் கொண்டே எதிர்ப்பதும் பாசாங்கல்லவா? திருமாவளவன் ஈழப்போராட்டத்தை ஆதரித்துக் கொண்டே கலைஞரையும் பாராட்டுவது பாசாங்கில்லையா? மதுரையில் இயற்கையை கிரானைட் மாபியாக்களிடம் இருந்து பாதுகாக்க பசுமை நடைகளை நடத்தும் ஜெயின் மத மக்கள் குஜராத்தில் மோடியின் தீவிர ஆதரவாளர்களாக இருப்பது நியாயமா? இதேவித கேள்வியை சிங்கள பௌத்தவாதிகளை நோக்கி ஈழத் தமிழர்களும் கேட்கிறார்கள்.
சரவணபவன் முதலாளி கொலைவழக்கில் மாட்டியதும் என் மாமியார் இனி அந்த ஹோட்டலில் சாப்பிடக் கூடாது என முடிவெடுத்தார். எனக்கு ஹல்திராம் நொறுக்கித் தீனிகள் பிடிக்கும். அதன் முதலாளியும் ஒரு கொலைவழக்கில் மாட்டிக் கொண்டார். ஆனாலும் நான் இன்று ஹல்திராம்ஸ் தின்று கொண்டு தான் இருக்கிறேன். எனக்குத் தெரிந்து ஒரு நாய்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு பெண் இருக்கிறார். நானும் நாய் வளர்க்கிறேன். அவர் என்னிடம் கேட்டார்: “கோழி, ஆடு மாடுகளைத் தின்னும் நீ எப்படி நாயை மட்டும் நேசிக்கிறாய்? இது முரண்பாடில்லையா?”. நான் இன்னும் ஒரு படி போய் நாய் கறி கூட கிடைத்தால் சாப்பிடுவேன். என்றேன் இது முரண்பாடு தான். ஆனால் இந்த முரண்பாடு ஏன் சரி என்பதற்கு இறுதியில் வருகிறேன்.
கொஞ்ச காலத்துக்கு முன்பு சாரு நிவேதிதா கொக்கோ கோலா குடிக்கும் ஒரு படம் இணையத்தில் பரவலாக உலவிக் கொண்டிருந்தது. பலரும் அவரை பகடி பண்ணினார்கள். ஏனென்றால் அவர் தான் கேரளாவில் கொக்கோ கோலாவுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்ததை பற்றி எழுதியிருந்தார். சரி, நடைமுறைக்கு வருவோம். சாரு கோக் குடிக்கலாமா? கோக்கை எதிர்க்கும் நாம் ஒவ்வொருவரும் கோக் குடிக்கலாமா?
இப்படி இன்றைய அரசியல் கேள்விகள் முழுக்க முரண்பாடுகளைப் பற்றியதாக உள்ளது. மனிதர்களை எதையெல்லாம் வலியுறுத்தி பேசுகிறார்களோ அதற்கு நேர்-எதிராகத் தான் செயல்படுகிறார்கள். நாம் ஏன் இன்று இப்படி இருக்கிறோம் என நமக்கு நாமே கேட்டுக் கொள்கிறோம்.
இந்த கேள்விகள் அடிப்படையில் அறம் பற்றியவை. இதில் ரெண்டு வகை. ஒன்று லட்சியவாதம் தோற்றுப் போன இன்றைய சூழலில் ஒருவர் லட்சியம் பேசலாம் ஆனால் லட்சியவாதியாக வாழ முடியுமா என்பது. இன்னொன்று லட்சியமே இல்லாத ஒரு சூழலில் அறத்தை ஒரு சுயமுன்னேற்ற உபயமாக மனிதர்கள் பயன்படுத்துவது பற்றி.
அமெரிக்கா தன் போர்களை மனித குலத்தை தீவிரவாதத்தின் அழிவில் இருந்து காப்பாற்றுவதாய் பாவித்து தானே நடத்தியது. அமெரிக்கா தன் நலனை பாதுகாக்க பொய் சொன்னதென்றால் இந்த அமெரிக்கர்களையே அங்குள்ள கார்ப்பரேட்டுகள் தமது லாபத்துக்காக மீடியா மூலம் ஈராக் பற்றி போலி பிம்பங்களை உருவாக்கி ஏமாற்றிக் கொண்டிருந்தது. யார் யாரை ஏமாற்றுகிறார்கள் என்பதே இன்றைய நவமுதலாளிய உலகமய சூழலில் கண்டுபிடிக்க சிரமமாக இருக்கிறது. அடுக்கடுக்காக ஒருவரை இன்னொருவர் பிடித்து உறிஞ்சியபடி வாழ்கிறோம். ஆக நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால் உலகில் ஏதோ ஒரு மூலையில் உள்ள ஏதோ ஒரு ஜீவனின் அழிவும் வலியும் கலந்திருக்கிறது.
இதை நீங்கள் தவிர்க்க முடியுமா? நீங்கள் இந்த சூழலில் இருந்து உங்களை விலக்கிக் கொள்ள முடியுமா? கிட்டத்தட்ட முடியாது எனலாம். மிருகவதை எதிர்ப்பாளர்களும் ஜெயின்களும் கூட தோல்பொருட்களை தவிர்க்கலாம், சைவ உணவை மட்டுமே உண்ணலாம். ஆனாலும் சைவ உணவென்பதே விவசாயம் மூலம் உருவாவது தானே. விவசாயம் என்றால் இயற்கையான சூழலை அழித்து புதுச் சூழலை செயற்கையாக பதப்படுத்தி உருவாக்கி அதன் காரணமாக பல நுண்ணுயிர்கள், பூச்சி, தாவரங்களின் அழிவை ஏற்படுத்துவது தானே. வயலில் களை பிடுங்காமல் பயிர் விளையுமா? களை பிடுங்குவது இயற்கையின் சமநிலையை குலைப்பது தானே. ஆக சைவர்களும் டியோடரண்ட் பயன்படுத்துபவர்களும் மாட்டுக்கறி தின்பவர்களும் ஒன்று தான். இவர்களின் அரசியலை எடுத்துக் கொண்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
நான் முன்னர் குறிப்பிட்ட நாய் உரிமை போராளி அவருடைய முகநூலில் சுவரில் வதைபடும் நாய்களின் படங்களை சதா பிரசுரித்து புலம்பிக் கொண்டிருப்பார். ஆனால் அவர் சாதியத்தை ஆதரிப்பவர், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர். நீங்கள் ஏன் தாழ்த்தப்பட்ட மக்களை எதிர்க்கிறீர்கள் என கேட்டால் இப்படி பதில் தருவார்: “அவர்கள் ஆடு மாடு கோழிகளை கொல்லுகிறார்களே!”. ஆக ரெண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். 1) முழுக்க அறத்தை துறந்து அதை சுயமுன்னேற்றத்திற்கு மட்டும் பயன்படுத்தும் போலிகள். 2) அறத்தை நம்புகிற ஆனால் அதை தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்தி மிச்ச நேரங்களில் கண்ணை மூடிக் கொள்கிற பாதி போலிகள். நம்மில் கணிசமானோர் இத்தகைய பாதி போலிகள் தாம். இது நம் காலகட்டத்தின் சாபம் எனலாம். நாம் கோக் குடித்துக் கொண்டே அதை எதிர்த்தபடியும் இருப்போம் (கிரிக்கெட்டர்களும் சினிமா நட்சத்திரங்களும் கோக் விளம்பரங்களில் நடித்தால் மட்டும் கடுமையாக விமர்சிப்போம்).
அறம் பற்றின இந்த விவாதத்தை இன்னும் தெளிவாக்க அதன் அடிப்படைக்கே போவோம். அறத்தை அனைத்துக்கும் பொதுவாக்கலாமா? அப்படி பண்ணும் போது தான் நமக்கு பல முரண்பாடுகள் தோன்றுகின்றன. கருக்கலைப்பு சரியா? எந்த வாரத்தில் கருவுக்கு பிரக்ஞை வருகிறது? இதை எப்படி தீர்மானிக்கிறோம்? தூக்குத்தண்டனையின் அறமும் இதே போன்று குழப்பமானது தான். அரசு அஜ்மல் கசாப்பை கொன்ற போது எதிர்த்தோம். காஷ்மீரில் ஊடுருவி வரும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளை இந்திய ராணுவம் கொல்லும் போது ஏன் எதிர்க்க மறுக்கிறோம். இரண்டும் அரசாங்க கொலைகள் தானே? தமிழ் ஈழம் கோரும் எத்தனை தமிழர்கள் காஷ்மீரை தனி நாடாக்குவதை ஆமோதிப்பீர்கள்? ஆக அறத்தை நாம் வடிகட்டியே பயன்படுத்துகிறோம். இதை ஒரு குற்றச்சாட்டாக அல்ல ஒரு இயல்பாகவே தான் சொல்கிறேன். அறத்தின் இயல்பே அது ஒரு பக்க சார்பானது என்பது. அனைவருக்கும் பொதுவான அறம் என்பது ஒரு கற்பனை அல்லது லட்சியம். ஒரு தர்க்கவாதி, நடைமுறைவாதி என்றுமே அறம் ஒரு பக்க சார்பானது எனத் தான் சொல்லுவான்.
அடுத்து நாம் இன்னொரு கேள்விக்கு போக வேண்டும். அறம் மனிதனின் இயல்பா, மனிதனால் உருவாக்கப்பட்டதா அல்லது ஏற்கனவே உள்ள ஒன்றா? அறத்தை பண்பாட்டின் ஒரு பகுதியாகத் தான் பார்க்கிறோம். அதனால் தான் அறம் தேவையில்லை என்றால் நாம் பதற்றமாகிறோம். அறமற்ற சமூகத்தில் மனிதர்கள் அழிந்து போவார்கள் என நினைக்கிறோம். இது பிழையான சிந்தனை. மிருகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவை சண்டைகளின் எப்போதுமே கடுமையாக காயப்படாத வகையில் தான் மோதும். இன்னொரு உயிரை காயப்படுத்தக் கூடாது என்கிற அறத்தை யார் மிருகத்துக்கு சொல்லித் தந்தது? ஆப்பிரிக்க காட்டு நாய்கள் வேட்டைக்கு சென்றால் தம் குழுவில் உள்ள குட்டிநாய்கள், பெண் மற்றும் முதிய நாய்கள் சாப்பிடுவதற்காக கறியை வாயில் அதக்கி கொண்டு வரும். முதியவர், எளியவரை பாதுகாக்க வேண்டும் என்கிற அறத்தை யார் காட்டுநாய்களுக்கு சொல்லித் தந்தது? போரினால் உலகம் அழியும் என்பதும் ஒரு கற்பனை தான். இரண்டு பெரும் உலகப் போர்கள் ஏன் திடீரென முடிவுக்கு வந்தன? ஏன் உலகம் அழியவில்லை? மனிதர்களுக்கு அழிவு போதும் என ஒரு கட்டத்தில் தோன்றியதும் நிறுத்திக் கொள்கிறார்கள். போர் இச்சை என்பது மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் இயற்கையின் ஒரு உபாயம் தான் என சமூகவியலாளர் மார்வின் ஹாரிஸ் விளக்கியுள்ளார். இது ஆப்பிரிக்க பழங்குடி சமூகங்களில் மைக்ரோ அளவில் நிகழ்வதையும் சுட்டுகிறார். இதுவரையிலான உலக மகா போர்களை எந்த அறமும் தடுத்து நிறுத்தவில்லை. தானே நின்றன. ஆக அறத்தின் தாக்கத்தை நாம் மிகைப்படுத்துகிறோம். ஏதோ நாம் போராளிகளும் சிந்தனையாளர்களும் தொடர்ந்து அறம் பற்றி பேசி பேசி மனித குலத்தை அழிந்து போகாமல் பாதுகாத்து வருவதாய் இறுமாப்பு கொள்கிறோம். மனிதகுலத்தின் நம்பிக்கைகளை கடந்த இயற்கையின் அறிவு என ஒன்று உள்ளது. அது நம்மை கட்டுப்படுத்துகிறது. மனித அறம் அதனோடு ஒப்பிடுகையில் குழந்தை சிலேட்டில் கிறுக்கும் அ ஆ இ ஈயை போன்றது தான்.
“இயற்கையின் அறிவை” ஒரு இயற்கை அறம் என கொள்வோம். இயற்கை அறம் குருட்டுத்தனமானது. இந்த குருட்டுத்தனமான அறத்தைப் பற்றித் தான் “Ship of Theseus”இன் மூன்று கதைகளில் ஒன்றான மைத்ரேயா எனும் ஜென் துறவியின் கதை விவாதிக்கிறது.
மிக சிக்கலான இந்த பிரச்சனையை இப்படம் மிக நேர்த்தியாக நுண்மையாக அலசுகிறது. மைத்ரேயாவின் கதை ஒரு அட்டைப்பூச்சியை மிதிக்கும் மனித கால்களுக்கு இடையில் இருந்து அவர் காப்பாற்றி மீண்டும் ஒரு செடி மேல் விடுவதில் இருந்து துவங்கி அவருக்கு இறுதியில் கல்லீரல் வியாதி வந்து இறக்கும் தறுவாயில் அவரது சக சாமியார்கள் ஒரு ஸ்டிரெச்சரில் வைத்து அவரை தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதில் முடிகிறது. அட்டைப்பூச்சியை காப்பாற்றும் மைத்ரேயா இறுதில் அதே அட்டைப்பூச்சியின் நிலைக்கு வருகிறார். அவர் இந்த உலகின் தீமைகளுக்கு எதிராக போராடும் ஆளாக தன்னை கற்பனை பண்ணிக் கொள்கிறார். அவர் மேல்நீதிமன்றத்தில் மருந்து பரிசோதனைக்கு பிராணிகளை பயன்படுத்துவதை தடை செய்ய கோரி வழக்கு தொடுத்திருக்கிறார்.
ஆனால் மைத்ரேயா கராறான லட்சியவாதி அல்ல. அவர் நடைமுறைவாதியும் தான். முழுக்க தடைசெய்ய முடியாவிட்டாலும் பிராணிகள் ஆய்வுக்கூடத்தில் சாகும்வரை நல்ல சூழலில் தொந்தரவின்றி இருக்க வேண்டும் என சமரசத்துக்கு உட்படுகிறார். இதை ஒட்டி சுயதேர்வு உரிமை (free-will), பொறுப்பு, விதி ஆகியன குறித்து பல விவாதங்கள் படத்தில் நேரடியாகவே வருகின்றன. ஒரு எறும்பின் உள்ளே புகுந்து அதன் மூளையை ஹைஜேக் செய்து அதனை தன் விருப்பபடி செயல்பட வைக்கும் வைரஸ் உள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட எறும்புக்கு சுயமாய் தன் வாழ்வை முடிவு செய்யும் உரிமை உள்ளதா? நம்முடைய அன்றாட வாழ்வில் எந்தளவுக்கு சுயசிந்தனையுடன் செயல்படுகிறோம்?
ஒரு கொசு கடிக்கிறது. சொறிகிறீர்கள்? ஏன்? அரிக்கிறது என்பதால். உங்கள் அரிப்பை தீர்க்கவா? இல்லை. கொசுவின் ரத்தத்தில் உள்ள வைரஸ் உங்களுக்கு அரிப்பேற்படுத்தும் ஒரு அமிலத்தை சுரக்கிறது. நீங்கள் சொறிய வைரஸுக்கு உங்கள் உடம்புக்குள் நுழைவது எளிதாகிறது. நீங்கள் உங்களுக்காக அல்ல வைரஸுக்காக தான் சொறிகிறீர்கள். ஒரு சின்ன கொசு நம்மை இப்படி கட்டுப்படுத்துகிறது என்றால் கார்ப்பரேட்டுகள், மீடியா, வேலை பார்க்கும் நிர்வாகங்கள், மதம், அறிவுத்துறை போன்ற நிர்வாகங்கள் என்னவெல்லாம் உங்களை வைத்து செய்யும்? இந்த சூழலில் ஒரு மனிதன் தன் முடிவை நம்பி செயல்படலாமா?
நிச்சயம் செயல்படலாம் என்கிறார் மைத்ரேயா? அவர் பராபலன் பார்க்காமல் நாம் நன்மை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிறார். அவருக்கு கடவுளில் நம்பிக்கை இல்லை. ஆனால் நன்மை இன்னொரு நன்மையை உருவாக்கும் என நம்புகிறார். அது போல் ஒரு சின்ன தீமை கூட பெரிய தீமைக்கு உதவும். மைத்ரேயாவின் நிலைப்பாடு நமக்கு சார்த்தரின் இருத்திலியத்தை நினைவுபடுத்துகிறது. அதன் படி பிரான்ஸ் போருக்கு போனால் அதில் கலந்து கொள்ளாவிட்டாலும் கூட சார்த்தரும் போருக்கு தான் போகிறார். அங்கு கொல்லப்படும் ஒவ்வொரு உயிருக்கும் அவரும் பொறுப்பு தான். ஆனால் சார்த்தர் இதை அறத்தின் அடிப்படையில் அல்ல பிரக்ஞையின் அடிப்படையில் பார்க்கிறார். இது கடும் மனநெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடியது. மைத்ரேயாவுக்கும் இது நடக்கிறது. அவருக்கு கல்லீரல் வியாதி வர அவர் எதிர்க்கும் கார்ப்பரேட் மருந்து நிறுவனங்களின் மருந்துகளையே அவர் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவர் அதை மறுக்கிறார். அதற்கு பதில் விரதமிருந்து இறக்க முடிவெடுக்கிறார்.
அவர் மெல்ல மெல்ல நலிந்து எலும்பும் தோலுமாகி கடும் வலியில் அவர் துடிக்கும் காட்சிகள் மிக நெகிழ்ச்சியானவை. இறுதியில் அவருக்கு சித்தம் கலங்கி பிரமைகள் ஏற்படுகின்றன: “என்னை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள்? என் அம்மாவை பார்க்க வேண்டும், அழைத்து வாருங்கள்” என கேட்கிறார். அப்போது அவரது வழக்கமான சாந்த சொரூபமான ஞானசெருக்கு கொண்ட முகபாவனை மறைந்து ஒரு கடும் வன்மம் தோன்றுகிறது. இந்த இடத்தில் அப்பாத்திரத்தில் நாடக நடிகர் நீரஜ் கபி அட்டகாசமாக நடித்திருக்கிறார். மைதெரேயா “நான் சாக தயாராக இல்லை, எனக்கு சிகிச்சை வேண்டும்” என உடன்படுகிறார். அவரை காப்பாற்றுகிறார்கள். கவனிக்க வேண்டிய சமாச்சாரம் மைத்ரேயா எந்த அளவுக்கு தன் வசம் இருக்கிறார் என்பது.
இந்திய வைதிக தத்துவத்தில் உள்ள முக்கியமான பிரச்சனை அது மனித மனத்தை உடலில் இருந்து தனித்த வேறுபட்ட ஒன்றாக பார்ப்பது. மனதுக்காக உடல் என்பது இந்த போக்கு. உடலை கட்டுப்படுத்தி அதன் வழி மனதை கட்டுப்படுத்தி அதன் வழி இரண்டையும் கடப்பது இதன் நோக்கம். ஆனால் மனம் உடலின் ஒரு பகுதி மட்டுமல்ல உடலே மனம் தான். அப்படி இருக்க மனதைக் கொண்டு உடலை கட்டுப்படுத்துவது மல்லாந்து கிடந்து துப்புவது போல் அல்லவா? நான் ஏற்கனவே சொன்னது போல் இயற்கைக்கு என்று ஒரு பேரறிவு உள்ளது. அது கொல்லச் சொன்னால் நாம் கொல்லுவோம். அது சாக சொன்னால் நாம் சாகுவோம். மைத்ரேயா போன்றவர்கள் தம்மால் உடலையும் அதன் வழி பிரபஞ்சத்தையும் கட்டுப்படுத்தலாம் என கருதுகிறார்கள். இதன் ஒரு நீட்சி தான் நன்மை செய்தால் நன்மை விளையும் என்கிற விதி கோட்பாடும். மைத்ரேயா நோய்மையின் விளிம்பில் நிற்கையில் தான் தன் உண்மையான மனதின் குரலை கேட்கிறான். அது உடலின் ஆழத்தில் இருந்து ஒலிக்கும் ஆதி இயற்கையின் குரல். அவன் தன் ஆன்மிகம் அத்தனையும் அகங்காரத்தின் விளைவு என அறிகிறான். தன் உடலுக்கு செவி மடுத்து வாழ முடிவெடுக்கிறான். தன்னுடைய அறம் என்பது இயற்கையின் பேரறிவின் சிறு பகுதி என உணர்கிறான். வாழ்க்கை முரண்பாடுகளைக் கொண்டது, முரண்பாடுகளே உண்மை என “Ship of Theseus” வலியுறுத்துகிறது.
தீஷியஸின் கப்பல் எனும் உருவகம் படத்தில் தலைப்பில் இருந்து காட்சி அமைப்பு, திரைக்கதை என பலவிதங்களில் வெளிப்படுகிறது. இந்த உருவகத்தை இப்படி விளக்கலாம்.
உங்கள் மனைவி/காதலி ”ஏன் இப்பிடி இருக்கிறீங்க” என கேட்கிறார். நீங்கள் “எப்பிடி இருக்கிறேன்?” என கோபமாக திரும்ப கேட்கிறீர்கள். அவர் “இப்பிடியை” விளக்க நேரும். நீங்கள் அந்த விளக்கத்தை ஏற்க மாட்டீர்கள். உடனே தகராறு வரும், மனஸ்தாபம் ஏற்படும். பெரும்பாலான சச்சரவுகள் இந்த “இப்படியை” பற்றினது தான். “இப்படி” என்பது ஒரு கண்ணோட்டம். எனக்கு உங்களைப் பற்றியும் உங்களுக்கு என்னைப் பற்றியும் ஒரு கண்ணோட்டம் உள்ளது. அதை நாம் பரஸ்பரம் ஏற்க மாட்டோம். ஒருவேளை நாளை நான் கோமா நிலைக்கு போனால் என் கண்ணோட்டத்தின் படி உள்ள நண்பர்கள், குடும்பத்தினர், நீங்கள், அவர்கள் எல்லோரும் உயிரோடு இருப்பார்களா? இல்லை. என் கண்ணோட்டம் தான் நீங்கள் என்றால் நான் இல்லாமல் ஆனதும் நீங்களும் இருக்க முடியாதே? நம்முடைய அஞ்சலிக் கட்டுரைகளின் அத்தனையும் கண்ணோட்டங்களின் மரணத்தை பற்றியவை தான். “சு.ரா: நினைவின் நதியை” சுந்தர ராமசாமி திரும்ப வந்தால் ஏற்றுக் கொள்வாரா? மாட்டார். உலகை நாம் புரிந்து கொள்வதிலும் இதே சிக்கல் தான் வருகிறது.
நீங்கள் பல வருடங்கள் குடியிருந்த வீட்டை விற்ற பின் சில வருடங்கள் கழித்து அதைப் போய் பார்க்கிறீர்கள். அப்போதும் அது உங்கள் வீடு தான். ஆனால் உங்கள் வீடும் இல்லை. முன்னர் வேலை பார்த்த இடத்துக்கு போய் உங்கள் நாற்காலியை பாருங்கள். அது உங்கள் அலுவலகம் தான். ஆனால் இல்லையும் தான். தீஷியஸின் கப்பலும் இப்படித் தான். தீஷியஸ் ஏதென்ஸுக்கு வந்திறங்கிய கப்பலை உளுத்து போகாமல் இருக்க பகுதி பகுதியாக மாற்றி வருடக்கணக்காய் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இப்போது ஒரு கேள்வி இது அதே கப்பலா அல்லது புதிய கப்பலா? ஒன்பதாம் நூற்றாண்டு நடைமுறைவாத தத்துவஞானி ஹோப்ஸ் இன்னொரு கேள்வி கேட்டார். கப்பலின் உடைந்த பழைய பகுதிகளை கொண்டு இன்னொரு கப்பல் கட்டினால் அது புதிய கப்பலா அல்லது பழைய கப்பலா? இந்த கப்பல் உருவகம் குறித்து நிறைய விவாதங்களை பிளேட்டோ அரிஸ்டாட்டிலில் இருந்து பல தத்துவஞானிகள் நடத்தி உள்ளார்கள். இந்த சுவாரஸ்யமான புதிரின் அடிப்படை இது: உண்மை என்பது நாம் பார்ப்பதனால் உருவாகிறதா அல்லது அது ஏற்கனவே இருக்கக் கூடிய ஒன்றா?
கப்பல் நாம் அதன் மீது சுமத்துகிற உணர்வுகள், எண்ணங்கள், அனுபவங்களினால் உருவாகிறதா அல்லது மரம் எனும் பொருளினால் உருவாகிறதா? புராதானக்கட்டிடங்கள், நூலகங்கள், கண்ணகி சிலைகளை இடிக்க விரும்புகிற ஜெயலலிதா மரத்தாலானது என்பார்; கலைஞர் உணர்வாலானது என்பார். நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுக்கிறீர்கள். உடலளவில் அது உங்கள் குழந்தை இல்லை. ஆனால் மனதளவில் உங்கள் குழந்தை தான். இப்போது குழந்தையின் பெற்றோர் யார் என்பதை உயிரியலா மனமா எது தீர்மானிக்க வேண்டும்? உடலா உணர்வா? மேற்கத்திய தத்துவ மரபின் அடிப்படையான கேள்வி இது. இதில் இருந்து தான் “நான் சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன்”, “கருத்துமுதல்வாதம் × பொருள்முதல்வாதம்” ஆகிய சர்ச்சைகள் எல்லாம் தோன்றின.
“Ship of Theseus” இந்த கேள்வியை மூன்று வித தரப்புகளில் இருந்து கேட்கிறது. ஒன்று ஒரு கலைஞன் உருவாக்குவதில் எத்தனை சதம் அவனுடையது? அது தானே அவனையும் கடந்து அவனிடம் வருகிறது என்றால் அந்த கலைப்படைப்பை கட்டுப்படுத்தும் உரிமை அவனுக்கு எந்தளவுக்கு உள்ளது? இந்த கேள்விகளை முதல் கதை கேட்கிறது.
ஆலியா கமல் எனும் இந்தியாவில் வாழும் ஒரு அரேபிய பெண். அவளுக்கு ஒரு நோய்த்தாக்குதலால் பார்வை பறி போகிறது. அதன் பிறகு அவள் செவிப்புலன் கொண்டு புகைப்படங்கள் எடுக்கிறாள். முழுக்க ஊகங்கள், கற்பனையை நம்பி எடுக்கப்படும் அப்படங்கள் பிரமாதமான கலைத்தன்மையுடன் உள்ளன. பின்னர் அவளுக்கு அறுவைசிகிச்சையில் பார்வை கிடைக்கிறது. அதன் பிறகு அவள் எடுக்கும் படங்கள் பிரக்ஞைபூர்வமாக அதனாலே சாதாரணமாக இருக்கின்றன. அவளால் திரும்ப குருடாகவும் முடியாது. ஆனால் கண்பார்வை கிடைத்த பின் அவளது “கலைக்கண்” மூடி விட்டது? இதில் அவள் எப்போது குருடாகிறாள்? பார்வை இழந்த பின்பா கிடைத்த பிறகா?
ஆலியா செவிப்புலன் மூலம் பல இடங்களுக்கு சென்று காட்சிகளை தன் கற்பனை படி “செட்” செய்து படம்பிடிப்பது, அப்படங்கள் அவள் கட்டுப்பாட்டையும் மீறி பல குணங்கள் கொண்டு அவளை ஆச்சரியப்படுத்துவது, அதை அவள் பார்வையின்றியே போட்டோஷாப் செய்வது, பின்னர் அதன் கலைத்தன்மையை குறித்து கண் தெரிகிற காதலனுடன் சர்ச்சை செய்து சண்டை போடுவது, தன்னால் பார்க்க முடியாவிட்டாலும் புகைப்படம் பற்றி தன் கற்பனை தான் முக்கியம் என கராறாக அவள் தெரிவிக்கும் இடங்கள் ஆகியவை அற்புதமானவை.
அடுத்தது கண்ணோட்டத்தை ஒரு அறத்தை பின்பற்றுபவனின் பார்வையில் இருந்து சொல்லுவது மைத்ரேயனின் கதை. இதற்கு அடுத்த கதை இதே அறத்தை வாழ்வில் செயல்படுத்தும் நவீன் எனும் ஒரு போராளியின் கண்ணோட்டத்தில் இருந்து பேசுகிறது. அவன் செயல்படுத்துகிற அறம் எந்தளவுக்கு அவன் கட்டுப்பாட்டில் இருக்கிறது? அதில் அவன் பொறுப்பு என்ன?
நவீனுக்கு சிறுநீரகம் பழுதாக மேற்சொன்னவரின் உடலில் இருந்து சிறுநீரகம் ஒன்று தானம் தரப்படுகிறது. பின்னர் தனக்கு தானமளித்தவரை தேடும் போது அவனுக்கு எதேச்சையாக சிறுநீரகங்களை திருடி விற்கும் தொழில் பற்றியும் அதனால் பாதிக்கப்பட்ட சங்கர் என்பவர் ஒருவரையும் தெரிய வருகிறது. சங்கரின் சிறுநீரகத்தை வாங்கியவர் ஸ்வீடனில் இருக்கிறார். அவருக்கு திருடப்பட்ட விசயம் தெரியாது. நவீன் மும்பையில் இருந்து அங்கு போய் அவரிடம் விளக்கி சங்கருக்கு மறுசீறுநீரக பொருத்து அறுவை சிகிச்சை செய்ய அவரை உதவுமாறு ஒப்ப செய்கிறான். ஆனால் அப்போது நிலைமை அவன் கைவசம் இருந்து நழுவுகிறது. ஸ்வீடன்காரர் தன் முகவர் மூலம் சங்கருக்கு சில லட்சங்கள் கொடுத்து வழக்கை கைவிட சொல்கிறார். நவீன் சங்கரிடம் ”நாம் நியாயம் கிடைக்கும் வரை உனக்கு சிறுநீரகம் கிடைக்கும் வரை போராட வேண்டும்” என வேண்டுகிறான். ஆனால் சங்கரோ தனக்கு சிறுநீரகம் வேண்டாம் பணம் போதும் என போராட மறுக்கிறான். தன் முயற்சிகள் வீணாகி விட்டனவே என நவீன் ஏமாற்றமடைகிறான். தன் பாட்டியிடம் கசப்பில் புலம்புகிறான். அவனுக்கு தன்னால் ஒரு அநீதியை தடுக்க முடியவில்லையே என வருத்தம். ஆனால் பாட்டி அவனிடம் “நாம் இவ்வளவு செய்தால் தான் கொஞ்சமாவது நியாயம் கிடைக்கும். அதுவும் நீ முயற்சி எடுத்ததனால் தான் நடந்திருக்கிறது.” என சமாதானப்படுத்துகிறார். நவீன் நியாயத்தை அடைவது ஒரு போராளியின் கையில் இல்லை என உணர்கிறான். மனிதர்களுக்கு நியாய அநியாயத்தை விட வாழ்வது அடிப்படையில் மிக அவசியமாக இருக்கிறது. நியாயம் சட்னி என்றால் வாழ்க்கை இட்லி. வெறும் சட்னியை வைத்து ஒன்றும் பண்ண முடியாது. நவீன் கதையின் ஆரம்பத்தில் சமூக பிரக்ஞையற்ற வெறும் சம்பாதிக்கும் எந்திரமாக இருக்கிறான். அதாவது சமகாலத்தின் பிரதிநிதி. அவன் மைத்ரேயனின் இன்னொரு துருவம். கதை முடிகையில் அவன் ஒருவன் இரு துருவங்களுக்கும் மையத்தில் இருப்பது எவ்வளவு முக்கியம் என உணர்கிறான்.
நியாயத்துக்கும் அறத்துக்காகவும் மனிதன் போராடியபடி இருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கை அறத்தை கடந்த ஒன்று. அறத்தைக் கொண்டு ஒருவரை அளவிடக் கூடாது. அறத்தைக் கொண்டு எடுக்கப்படும் முடிவுகள் தவறாகவும் இருக்கலாம். அறம் என்பதும் ஒரு கண்ணோட்டம் தான். மீண்டும் மீண்டும் உடைத்து கட்டப்படும் ஒரு கப்பல் அது. அது இன்னும் மாறவே இல்லை என ஒரு தரப்பினர் விடாப்பிடியாக வலியுறுத்த அது மாறி விட்டது என நம்புவதிலும் உண்மை உள்ளது என “Ship of Theseus” கூறுகிறது.
சாகசப்பயணங்கள் மேற்கொள்ளும் ஒருவர் விபத்தில் மூளை இறந்து போக அவரது கண் தான் ஆலியாவுக்கு தானம் தரப்படுகிறது. இப்போது ஆலியா யாருடைய கண்வழி உலகைப் பார்க்கிறாள்? இந்த உலகம் இப்போது ஆலியாவுடையது தானா? இந்த கேள்வி தான் மூன்று கதைகளையும் இணைக்க பயன்படும் திரைக்கதை சூத்திரம். மிச்ச இருவரும் இதே போல் அதே ஆளின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தானம் பெற்றவர்கள். ஆக இவர்கள் ஒன்றாக அவரது வேறுபல பாகங்களை பெற்றவர்களுடன் இறுதியில் சந்திக்கும் இடம் ஒன்று படத்தில் வருகிறது. தானம் தந்தவர் தான் மூலமான தீஷியஸின் கப்பல். இவர்கள் அக்கப்பலில் இருந்து புதிதாக கட்டப்பட்ட இன்னொரு கப்பல். இன்னொருவரின் உறுப்புடன் இவர்கள் அவர்களாகவே இருக்கிறார்களா அல்லது இறந்து போனவரின் தொடர்ச்சியாக மாறுகிறார்களா? சொல்லப் போனால் இந்த கேள்வி அவ்வளவு சுவாரஸ்யமானது அல்ல. பல வணிகப்படங்களில் கேட்கப்பட்ட கேள்வி தான். இறுதியில் தானம் செய்தவர் ஒரு குகையில் எடுத்த காணொளி காட்சி ஒன்றை இவர்கள் சேர்ந்து பார்ப்பதாக முடிகிறது. இந்த முடிவு கொஞ்சம் செயற்கையானது. இது சொல்லும் சேதியை இதற்கு முன்னே பல காட்சிகள் நுட்பமாக சொல்லி விடுகின்றன. இயக்குநர் ஆனந்த் காந்தி வலிந்து முடிச்சிடுகிறார் என தெளிவாக தெரிகிறது.
No comments :
Post a Comment