Showing posts with label அறிவிய‌ல். Show all posts
Showing posts with label அறிவிய‌ல். Show all posts

Saturday, 29 May 2010

தகவல்தொடர்பும், கவனக்குலைவும்: துண்டாகி வரும் மனித சமூகம்

இந்த மாத உயிர்மையில் வெளியாகி உள்ள என் கட்டுரை. கவனக் குலைவு ஒரு நோய் அல்ல சமகால கலாச்சாரத் தன்மை என்று பேசுகிறது.


ADD எனப்படும் கவனக்குறைவு கோளாறின் சில அறிகுறிகள் இன்றைய தலைமுறையின் பெரும்பாலான குழந்தைகளின் ஆளுமைக் கூறு ஆகி விட்டது. அவர்களால் ஓரிடத்தில் சில நொடிகள் கூட அமைதியாக இருக்க முடிவதில்லை. கணினி விளையாட்டு, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வழியாக பெறும் மூளைக்கிளர்ச்சி ஒரு நிரந்தரத் தேவையாகி விட்டது. குழந்தைகளின் இயல்பான மூளை வளர்ச்சிக்கு வெளிப்புற விளையாட்டுக்கள் அவசியம். ஆனால் விளையாட்டு வெளிகள் ஒருபுறம் சுருங்கி வந்தாலும், இன்றைய குழந்தைகளுக்கு எந்திரங்களுடன் விளையாடுவதுதான் பிரியமானதாக உள்ளது. புலன்களை அதிகப்படியாக தூண்டும் செயல்களே அவர்களுக்கு இயல்பாகப் படுகின்றன. முன்னெப்போதையும் விட இன்றைய தலைமுறை தான் மிகச்சின்ன வயதில் இருந்தே பலவித போதைப் பழக்கங்களை பரிச்சயப்படுத்திக் கொள்கின்றன. இப்படிப்பட்ட மிகை-கிளர்ச்சி தூண்டுதலுக்காய் ஏங்கும், நரம்புகள் மின்சாரம் பாய்ச்சப்பட்ட குழந்தைகளால் அமைதியாக அமர்ந்து பள்ளியில் கவனிக்க முடிவதில்லை. சுலபமாக சலிப்படைவதால் நீண்ட புலன் தூண்டுதலற்ற உழைப்பை கோரும் கல்வியை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆறுமாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இந்த நோய்க்குறிகளிகளை வெளிப்படுத்தும் பத்து சதவீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் உலகமெங்கும் ADD-யால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்படுகிறார்கள். கல்வியில் கவனமில்லை என்பது தான் இவர்களைப் பற்றி பெற்றோர்களுக்கு கிடைக்கும் முதல் புகாராக இருக்கும். அடுத்து பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளின் ஆவேசத்தை, நிலையில்லாத மிகை செயல்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாமல் ஆகிறது. குழந்தைகளின் மட்டுமீறிய ஆற்றல் வெளிப்பாடு முன் தத்தளிக்கும் பெற்றோர்களை சாதாரணமாக்வே இன்று காண முடிகிறது. என் நண்பரின் குழந்தை நடப்பதே இல்லை. எல்லாவற்றுக்கும் ஓட்டம் தான். குறிப்பாக அப்பா\அம்மா வீட்டுக்குள் வந்தால் தாறுமாறாக ஓடி சுவரில் மோதிக் கொள்கிறது. குழந்தை தினமும் இப்படி விழுவதும் மோதிக் கொள்வதும் வழக்கமாகி விட பதற்றமான நண்பர் மனவியல் நிபுணரிடம் அழைத்து செல்ல வேண்டியதாயிற்று. உலகம் பூரா ADD குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உளவியல் மருத்துவர்கள் மன-அழுத்த மருந்துகளை அளித்து ஆற்றுப்படுத்துகிறார்கள் அல்லது சைக்கியாட்ரிக் பயிற்சிகள் அளிக்கிறார்கள். இவர்களில் 60 சதவீதத்தினர் வாழ்நாள் பூரா ADD-ஆல் அவதிப்படுகின்றனர். ஹாலிவுட் நடிகர் ஜிம்கேரி ஒரு உதாரணம். ஏறத்தாழ இந்த பெற்றோர்கள் அளவுக்கு பி.பி.ஓ நிறுவன மேலாண்மைகள் தங்கள் ஊழியர்களின் மிகை-ஆற்றல் மற்றும் கவன இழப்பு குறித்து பதற்றம் கொள்கின்றன. இணையத்தமிழில் இன்று உருவாக்கப்படும் படைப்புகளில் கணிசமானவை அலுவலகங்களில் ஊழியர்களால் உலகம் பூரா படிக்கப்படுபவை. தமிழின் முன்னணி எழுத்தாளர்களை இணையம் வழி மட்டுமே அறிந்துள்ள ஆயிரக்கணக்கான வாசகர்கள் உள்ளனர். ஆங்கிலத்தில் இப்படி அலுவலக வாசகர்களின் எண்ணிக்கை கோடிகளைத் தொடும். இதை விட அதிகமாய கோடிக்கணக்கான அலுவலக மணிநேரங்கள் facebook, arkoot போன்ற சமூக வலைதொடர்பு தளங்களில் தொடர்புறுத்தவும், skype, gtalk, yahoo மெசஞ்சர்களில் அரட்டையடிக்கவும் செலவிடப்படுகின்றன. பெரும்பாலான அலுவலக நேரம் விரயமாவதாக கலவரமான மேலாண்மைகள் இத்தகைய தளங்களை தடை செய்யும் மென்பொருட்களை லட்சக்கணக்கில் செலவு செய்து வாங்கி பயன்படுத்துகின்றன. எறத்தாழ எல்லா அலுவலகங்களிலும் மேலாண்மைகள் நுண்பேசி பயன்பாட்டை வரவேற்பதில்லை. இன்றைய தகவல் யுகத்தில் இப்படியான தடை ஒரு ஒடுக்குமுறை என்றும், இணைய உலாவல் ஊழியர்களுக்கு மனதளவிலான ஓய்வு என்றும் சர்ச்சை நிலவும் போது அதை விட முக்கியமாய், facebook-இல்கோடிக்கணக்கான மணிநேரங்களை விரயமாகும் பட்சத்தில் நிறுவனங்கள் எப்படி லாபகரமாக செயல்படுகின்றன என்ற ஐயம் எழுகின்றது. ஒவ்வொரு நிறுவனமும் தன் ஊழியருக்கு ஒரு இலக்கை விதிக்கின்றன. கணிசமான அலுவலக மணிநேரங்களை இணையம் மற்றும் நுண்பேசியில் கழிக்கும் ஊழியர்கள் இந்த இலக்கையும் சுலபமாக எட்டி விடுகின்றனர். இலக்கு எட்டப்படும் பட்சத்திலும் தரம் பாதிப்புக்குள்ளாகிறது என்பதே நிறுவனங்களின் கவலை. மேற்சொன்ன குழந்தைகளின் பெற்றோரைப் போன்று ஊழியர்களை ஒரு குறிப்பிட்ட வேலையில் கவனமாக இருத்தி வைப்பதே இன்றைய மேலாண்மைகளின் சவால். சரி இப்படியான ADD ஊழியர்களை துரத்தி விட்டு கவனம் கூர்ந்த அடக்கமானவர்களை சேர்க்கலாமே ஆனால் நகைமுரணாக தனியார் நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றவே இந்த மிகையான ஆற்றல் வெளிப்பாடு தேவையுள்ளது. கவனச்சிதறலுக்கு ஒரு காரணமான மல்டி டாஸ்கிங் எனப்படும் பலபணிகளை ஒரே நேரத்தில் செய்யும் திறனும், தொடர்ச்சியாக மாறும் பணி இயல்புகள் மற்றும் இலக்குகளுக்கு ஏற்றபடி உடனடியாக தன்னை தகவமைக்கும் சாமர்த்தியமும் அவசியமாக உள்ளது. அதாவது, நிலையின்மையை ஒரு ஆளுமை இயல்பாக கொண்டுள்ளவர்களுக்கே இன்றைய வேலைசூழலில் சோபிக்க முடியும். மேலும் அயராத ஆற்றல் வெளிப்பாடு, மூளைக்கிளர்ச்சியால் ஆகர்சிக்கப்பட்ட நேரங்காலமற்ற உழைப்பு, அபாய விழைவு போன்ற ADD அறிகுறிகள் கொண்டவர்களே BPO படிநிலைகளில் முன்னேறுபவர்களாக இருக்கிறார்கள். அமைதி, விசுவாசம், பதவிமூப்பு போன்ற பண்புகளுக்கு மதிப்பு குறைந்து விட்டது. இவர்களால் சத்தமான அலுவலக சூழலிலும் பாட்டு கேட்டபடி பக்கத்தில் பேசிக் கொண்டே facebook-இல் தொடர்புகளை புதுப்பித்தப்படியே, நுண்பேசியில் குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டு தங்கள் அலுவலக பணி இலக்கையும் பிழையின்றி எட்ட முடிகிறது. 16 மணிநேரம் அலுவலகத்தில் கழித்தபடியே புறவுலக தொடர்புகளை தக்க வைக்க, தங்கள் கலாச்சார சமூக புரிதலை புதுப்பிக்கவும் முடிகிறது. முன்னர் நோய் அறிகுறிகளாய் கருதப்பட்டவை இன்று வாழ்வின் நடப்பியல் தேவைகள் ஆகிவிட்டன. வளர்ந்தோருக்கான கவனக்குறைவு கோளாறு ADHD என்று அழைக்கப்படுகிறது. Attention Deficit Hyperactivity Disorder. இந்த பத்துகை இருபது தலை சமாச்சாரம் ஒரு இழப்புடனே வருகிறது. அதைப் பிறகு பார்ப்போம்.



கவனக்குறைவு கோளாறு நவீன சமூகத்தின் கலாச்சார பகுதி ஆகிவிட்டது. கீழே தரப்பட்டுள்ள அறிகுறிகளில் சிலவாவது உங்களிடம் தென்படுகிறது என்றால் சமகால பிளவுண்ட தலைமுறையின் படகில் நீங்களும் இருக்கிறீர்கள் என்று பொருள். இவற்றை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ வாழ்வில் பயன்படுத்தலாம்.
• குறைவாகவே சாதித்திருப்பதான உணர்வு
• ஒழுங்கமைவற்ற வாழ்வு
• வேலையை ஆரம்பிப்பதில் சிரமம் அல்லது தொடர்ச்சியாக வேலையை தள்ளிப் போடுதல்
• பணிகளை ஆரம்பித்த வேகத்தில் கைவிடுதல்
• மனதிற் பட்டதை சமயோசிதம் பாராமல் உளறி விடுதல்
• உச்சபட்ச தூண்டலுக்கான விழைவு
• சலிப்பு மற்றும் எரிச்சலை தாங்க முடியாமை.
• எதிலும் பாதியிலே கவனம் கலைதல்
• பாதுகாப்பிமை உணர்வு

நமது மூளை புறமாற்றங்கள் அல்லது அகத்தூண்டல்களுக்கு ஏற்றபடி தன்னையே தகவமைத்துக் கொள்ளும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. இதனை plasticity என்கின்றனர். பக்கவாதத்தால் செயலிழந்தவர்கள் தங்கள் மூளையை பயிற்றுவித்து உறுப்புகளில் ஆற்றலை மீட்க முடியும் என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இப்படி தனிப்பட்டு அன்றி மனித குலத்தின் மூளை ஒட்டுமொத்தமாக மாறுமா? ரெண்டு லட்சம் வருடங்களுக்கு முன்னர் கருவிகளின் பயன்பாடு, கூட்டு வேட்டை, மொழி காரணமாக மனித மூளை மாற்றமடைந்தது. அதற்கு பின்னர் இப்போது தான் குறிப்பிடத்தக்க மாற்றத்தை மனித மூளையின் வடிவமைப்பில் காண முடிகிறது. இதற்கு காரணம் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி. Wired பத்திரிகையின் இவான் சகுவார்ட்ஸ் ADHD தகவல் யுகத்தின் அதிகார பூர்வ மூளை நோய்குறித் தொகுதி என்கிறார்.

மிதமிஞ்சிய தகவல் திணிப்பும் தொடர்புறுத்தலும்: சுருங்கும் காலம் மற்றும் வெளி



தொழில்நுட்பம் இன்று நமது காலம் மற்றும் வெளியை அழுத்தி குறுக்கி விட்டது. இது மனிதனின் செயல்பாட்டு/எதிர்வினை இயல்புக்கு மீறிய வேகத்தை எதிர்பார்க்கிறது. டாக்டர் ரிச்சர்டு ரெஸ்டாக் தனது “The New Brain” நூலில் நம் பண்பாடு மீது மீடியா நிகழ்த்தியுள்ள பாதிப்பால் சுருங்கி விட்ட மொழியின் காலத்தை time-compressed speech என்கிறார். தினசரி பேச்சுக்கும் ரேடியோ மிர்ச்சி அல்லது சன் மியூசிக்கில் கேட்கும் மொழிக்குமான காலவித்தியாசத்தை கவனியுங்கள். இத்தனை வேகமாய், அதன் விளைவாய் அபத்தமாய், இந்த வர்ணனையாளர்கள் பேச வேண்டிய அவசியம் என்ன? நமது காலம் நொடிக்கு நொடி உற்பத்தியாளர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்களால் கூறுகட்டி சந்தைப்படுத்தப்படுகிறது. எவ்வளவு விரைவில் எத்தனை அதிகம் தகவல்களை நம் மூளைக்குள் திணிக்க முடியும் என்று தொடர்ந்து முயன்றபடி சோதித்தபடி உள்ளது நவீன முதலாளித்துவம். (இந்த சந்தைப்படுத்தல் சோதனை குறித்து பெடரிக் போல் ஒரு விஞ்ஞான சிறுகதை எழுதியுள்ளார்: The Tunnel under the World). நுகர்வுப்பொருட்களில் காலாவதி தேதி உட்பட்டு வாடிக்கையாளருக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் மிகப்பொடிசான எழுத்துக்களில் படிக்க முடியாதபடி தரப்படுவது இந்த முதலாளித்துவ தந்திரத்தின் அச்சுவடிவ உதாரணம். இதற்கு நிகராக டி.வி பரஸ்பர நிதி விளம்பரங்களில் mutual funds investment are subject to market risk Please read the offer document carefully before investing.... என்ற் வாசகம் மின்னல் வேகத்தில், ஏறத்தாழ ஒரு கேலி போல, வாசிக்கப்படுவதை சொல்லலாம். மிதமிஞ்சிய தகவல் சுமையின் அதிகபட்ச சாத்தியப்பாடுகளை சமீபத்தில் முயன்று பார்த்தது லலித் மோடிதான். ஐ.பி.எல்லின் போது காற்றில் மிதக்கும் MRF ராட்சத பலூனை ஐந்து நிமிடங்களுக்கு ஒருதடவை காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு தடவையும் அதைக் காட்டும் போது வர்ணனையாளர்கள் MRF Pace Foundation குறித்து ஏதேனும் சிலாகித்து பேசும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள். டேனி மோரிசனின் முறை வந்த போது அடுத்ததாக நிலவை காட்டினார்கள். டேனி சொன்னார்: “இதோ பாருங்கள் MRF நிலா”. DLF Maximum, Citi Moment of Success, Carbon Kamal Catch போன்று ஓயாத பொழியப்பட்ட அடைமொழிகள், வீரர்கள் உடல் எங்கும் ஒட்டியிருந்த விளம்பரங்கள், மூன்று பந்துகளுக்கு ஒருமுறை விளம்பரங்கள் என்று பார்த்து பதறி டேனிக்கு ஏற்பட்ட அதே அரைப்பைத்திய நிலைதான் தகவல் திணிக்கப்பட்ட பார்வையாள மூளைக்கும் ஏற்பட்டது. செய்தியின் போது வானிலை அறிக்கைகள் வண்ணமய சார்ட்டுகள் மற்றும் கிராபிக்ஸுகளுடன் தரப்படுவதை காட்டிலும் நேரடியாக வாசிக்கப்படுவதே பார்வையாளர்களுக்கு புரிய எளிதாக இருப்பதாக ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. காலம் மேலும் மேலும் சுருக்கப்பட்டு மேலதிக தகவல்கள் திணிக்கப்படுவதால் நவீன மனிதன் எதையும் கவனிக்கும் பொறுமையை இழந்து வருகிறான்.

தகவல் சாதனங்கள் வழியாக மனிதர்கள் இன்று மிதமிஞ்சிய தொடர்பு நிலையில் உள்ளார்கள். Distracted: The Erosion of Attention and the Coming of Dark Age என்ற நூலை எழுதியுள்ள மேகி ஜாக்சன் இந்த மட்டுமீறிய virtual தொடர்புறுத்தலின் அபத்தத்தை விளக்குகிறார். அவருக்கு தெரிந்த மைக் என்பவரின் தனிப்பட்ட மின்னஞ்சல் காப்பகத்தை ஆராய்ந்ததில் அவர் ஐந்து வருடங்களில் மட்டும் 11.7 மில்லியன் நபர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதை கண்டறிந்தார். இந்த வகையான தொடர்பு நெருக்கம் எத்தகைய அணுக்கத்தையும் தர இயலாதது. இப்படி தொடர்பு சாதனங்கள் உருவாக்கும் மிதமிஞ்சிய தொடர்பு நிலை நவீன மனிதனை சிதறுண்டு பரவிய ஆளுமை கொண்டவனாக்குகிறது. அர்த்தமற்று கோடிக்கணக்கானோர் தங்களுக்குள் உறவாடும் அபத்த நிலையை இந்த hyperconnectivity ஏற்படுத்துகிறது. இணைய செக்ஸ் அரட்டை இதற்கு ஒரு உருவகம் என்றே கூறலாம். இந்த அரட்டையின் பொது ஜன்னலை திறந்து நுழையும் ஒருவர் எதிர்தரப்பு பெண்ணை நோக்கி உள்ளக்கிடக்கைகளை அடித்துக் கொண்டே செல்லலாம். கூடவே உலகின் பல முனைகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் இதே அரட்டை ஜன்னலில் இதேவித உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்திய படியே இருப்பர். அந்த பெண் விதவிதமாய் அசைந்து கொண்டிருப்பாள், ஆனால் பதில் அளிக்க மாட்டாள். நமது தகவல் தொடர்பு சாதனங்கள் ஒருவிதத்தில் அந்த பெண்ணை போலத்தான். தினசரி மின்னஞ்சல், குறுந்தகவல், நுண்பேசி, மெஸன்சர்கள், சமூக வலைதொடர்பு தளங்கள் வழியாக தகவல்கள் நம் முதுகைப் பற்றி பலகுரல்களில் பேசிக் கொண்டே இருக்கின்றன. அவற்றை உதறி விட மூளை மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் அசாதரணமானவை. இதன் விளைவாக தனிமனித உறவுகள் ஆழமும் மதிப்பும் இழக்கின்றன. மேலோட்டமான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அரட்டைகளில் நமக்குள்ள ஈடுபாடு ஆழமான உறவாடலில் இல்லை. இத்தனை தகவல் பரிமாற்ற வசதிகள் இருந்தும் நவீன மனிதன் தனித்து விடப்பட்டதாக, உள்ளீடற்று வாழ்வதாக நிறைவற்று உணர்வதன் காரணம் இதுவே.

ஒரு உதாரணம். டாக்டர் ரிச்சர்டு ரெஸ்டாக்கின் வந்த ஒரு நோயாளி ரயிலில் வேலை பார்த்தவர். ஒருமுறை ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை புரிந்ததை பார்த்து அந்நினைவில் இருந்து மீளமுடியாது கடுமையான மனச்சோர்வுக்கு ஆளாகிறார். தனது மனவதையின் மிக சிரமமான பகுதி யாரும் தான் சொல்வதை கேட்க தயாராக இருக்கவில்லை என்பது என்கிறார் அந்த நபர். தற்கொலை சம்பவம் குறித்து பேசினால் அவர்கள் குறுக்கிட்டனர் அல்லது மெல்ல மெல்ல ஆர்வம் இழந்து கவனம் திருப்பினர்.”எனக்கு என்ன நேர்ந்தது என்பதை எத்தனை வேகமாய் சொல்ல வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. யாருக்கும் கேட்க நேரமில்லை”. இதனாலே அவரால் தன் மனச்சோர்வில் இருந்து எளிதில் வெளிவர முடியவில்லை. ரிச்சர்டிடம் ஆலோசனை பெறும் மற்றொரு ADD நபர் தன் மனைவி என்ன பேசத் தொடங்கினாலும் இப்படி சொல்லி அதிர்ச்சி அடைய வைக்கிறார்: “உனக்கு முடிப்பதற்கு 30 நொடிகளுக்கு மேல் தேவைப்படும் எதையும் சொல்லாதே”. இந்த கவனிப்பதற்கான நேரமின்மைக்கு வேலைப்பளு மட்டும் காரணமில்லை என்கிறார் ரிச்சர்டு. மட்டுமீறிய அளவுக்கு தகவல்களை குறுகின நேர அளவுகளில் செரிக்கும்படி மூளைக்கு நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மூளையில் வடிவமாற்றம் நேர்கிறது. எல்லா மூளைகளும் இம்மாற்றத்தை சுமூகமாக சமாளிப்பதில்லை.

Monsters Inc எனும் அனிமேஷன் படத்தில் பாதாளத்தில் வாழும் அரக்கர்கள் நள்ளிரவில் உலகில் தோன்றி குழந்தைகளை அழ வைத்து அந்த ஒலியை பதிவு செய்து கொண்டு போவர். இந்த அழுகை ஒலி மின்சாரமாக மாற்றப்படும். ஒரு கட்டத்தில் பாதாள உலகில் கடுமையான மின்பற்றாக்குறை ஏற்படும். காரணம் அரக்கர்களின் பயமுறுத்தல் பூமியின் குழந்தைகளுக்கு பயப்பட முடியாதபடி பழகி விடுகிறது. இக்கதை நவீன மனிதனுக்கு ஊடகங்களுக்குமான உறவின் மீதான ஒரு பகடி தான். மேலும் விளக்கமாக பார்ப்போம். நமது புலன்களால் நுகரப்பட்டு மூளைக்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும், வாசனையோ, ஒலியோ, சுவையோ, ஒரு தகவல் துணுக்குதான். இந்த தகவல் துணுக்கு நரம்பணுவால் அதன் புதுமை அளவுக்கு ஏற்றபடி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மூளைக்கு சமிக்ஞையாக மாற்றி தரப்படுகிறது. சமிக்ஞையின் தீவிரத்திற்கு ஏற்றாற் போல் மூளை விழிப்பு கொள்கிறது. பரபரப்பாகிறது. மூளையின் இந்த செயல்முறையை தமது ஆதாயத்துக்கு பயன்படுத்தும் நமது விளம்பர நிறுவனங்களும் ஊடகங்களும் அதிர்ச்சியான மற்றும் புதுமையாக தோற்றமளிக்கும் தகவல்களால் நம் மூளையை தொடர்ச்சியாக தாக்குகின்றன. மிதமிஞ்சிய தூண்டுதலால் மனித மூளை மரத்துப் போக ஊடகங்கள் மேலும் மேலும் நம்மை கிளர வைப்பதற்காக கற்பனையின் எந்த எல்லைக்கும் செல்ல, ஆட்டத்தின் அத்தனை விதிகளையும் கலைத்துப் போட தயாராகின்றன. விளம்பரங்களில் வோடோபோன் zoozoo விளம்பரங்களின் மிகை வன்முறையை சொல்லலாம். வேறெந்த விளம்பரமும் zoozoo அளவுக்கு அறமதிப்பீடுகளையும் பொருட்படுத்தாமல் வன்முறையை நேரடியாக காட்சிப்படுத்தியதில்லை. சர்க்கஸில் மிகை ஆர்வத்தில் பயிற்சி செய்யும் பணியாளன் சிங்ககூண்டுக்குள் விழுவது, தெறித்து வரும் கிரிக்கெட் பந்து பட்டு குட்டிச்சுவரில் அமர்ந்திருக்கும் ஒருவரின் மண்டை உடைய சக நண்பர்கள் ரசித்து சிரிப்பது, தொந்தரவு செய்யும் பெரியவரை சிறுவன் தன் கூட்டாளிகளை அழைத்து வந்து மொத்துவது என்று ஏகப்பட்ட உதாரணங்கள். கவனம் இழந்த நவீன பார்வையாளனை முகத்தில் குத்தி உலுக்குகின்றன இந்த விளம்பரங்கள். பார்வையாளன் ஆர்வமிழந்து விலக விலக ஊடகங்கள் மேலும் மேலும் அதிக சத்தமும், வேகமும், கூர்மையும் கொண்டதாக மாறி வருகின்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மக்களை கிலி கொள்ளச் செய்ய பார்வையாளர்களை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டாலோ, வாகனங்கள் சீறி வந்தாலோ போதும். இன்று விண்கலங்கள் சிதறவும், கோளங்கள் மோதவும் வேண்டி உள்ளன. அருவருப்பான வெற்றுகிரக வாசிகள் ஒன்றின் வயிற்றைப் பிளந்து மற்றொன்றாக குதித்து வர வேண்டி உள்ளது.



செய்தி ஊடகங்களும் வரலாற்று பிரக்ஞையற்ற மனிதர்களும்

பல்வேறுபட்ட ஈடுபாடுகள் கொண்ட பார்வையாளப் பரப்பை இணைப்பதற்காக காட்சி செய்தி ஊடகங்கள் மதிப்பற்ற செய்திகளை முன்னிலைப்படுத்துகின்றன அல்லது முக்கியத்துவம் மிக்க செய்திகளை இணையாக வழங்குகின்றன. ஆங்கில ஊடகங்கள் சூழலைப் பொறுத்து கிரிக்கெட் அல்லது சினிமா செய்திகளுக்கு அரசியலை விட அதிகம் நேரம் மற்றும் அழுத்தம் தருவதை குறிப்பிடலாம். இப்படி மதிப்பு வேறுபாடின்றி செய்திகள் திணிக்கப்பட்டு மூளை தொடர்ந்து தூண்டப்படுவதால் சமகால மனிதனின் செய்தி ஈடுபாடு, தகவல் நினைவாற்றல் குறைகிறது. தகவல் வெடிப்புக்கு முன் ஒரு அரசியல்/சமூக நிகழ்வு அவனது மனப்பரப்பில் ஏற்படுத்தும் பாதிப்பு இன்று நிகழ்வதில்லை. ஈழப்போர் ஊடகங்களில் மிகப்பரவலாக பேசப்பட்டும் தமிழக தேர்தல் வாக்குகளை பாதிக்காதது ஒரு தகுந்த உதாரணம். மனிதன் தன் வரலாற்று பிரக்ஞையை இழந்து வருவதாக, நாம் மீவரலாற்று குடியரசுகளில் வாழ்வதாக மேகி ஜாக்சன் குறிப்பிடுகிறார். அதிகபட்ச தூண்டுதலுக்கு மட்டுமே எதிர்வினையாற்றும் படி தகவமைந்து விட்ட நம்மால் எந்த செய்தியின் மனக்கிளர்ச்சியையும் அதிக நேரம் தக்க வைக்க முடிவதில்லை. சீக்கிரமே களைத்து கவனம் இழந்து அடுத்த தகவல் கிளர்ச்சியை நாடுகிறோம். கவனக்குறைபாட்டு கோளாறை உருவாக்குவதில் இந்த விட்டில்பூச்சி பண்பாட்டுக்கு பெரும்பங்கு உள்ளது.

மனித எதார்த்தம் எத்தனையோ மாறுபட்ட பிரதிகள் கொண்டது என்பதை தகவல்யுகம் முதன்முதலில் நடைமுறையில் நிரூபித்தது என்கிறார் ரிச்சர்டு. கால, வெளி மற்றும் இடத்தின் வித்தியாசங்களை அது அழித்து விட உலகின் ஒரு மூலையில் இருந்தபடி மற்றொரு மூலையில் போர், தீவிரவாத அழிவு, கட்டபஞ்சாயத்து, வணிகம், குடும்ப உறவாடல் என அனைத்தையும் சுலபமாக நடத்த முடிந்தாலும் அதன் உள்ளீடற்ற தன்மையும், அபாயங்களும் தாம் பிரதான எதிர்விளைவுகள். இன்றைய சமூக உறவாடலில் பெரும் தடைகள் தொலைதொடர்பு சாதனங்கள் தாம் என்பது மற்றொரு நகைமுரண். உரையாடலின் போது எதிர்தரப்பின் தொடர்ச்சியான கவனத்தை கோரும் சிரமத்தையும் சங்கடத்தையும் வேறெந்த நூற்றாண்டிலும் மனிதன் இப்படி அனுபவித்திருக்க மாட்டான். உரையாடல் நடுவே நுண்பேசிக்குள் நுழைவதோ, மின்னஞ்சல் திறப்பதோ, டீ.வி கவனிப்பதோ எதிர்தரப்பை அவமானிக்கும் பண்பற்ற செயல் என்பதை உணர முடியாதபடி தகவல் யுக நிஜத்தின் பல்வேறுபட்ட பிரதிகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. கவனம் இழக்கும் அந்நபர் எந்த இடத்தில் இருக்கிறார்? நுண்பேசியிலா, டீ.வி அல்லது மின்னஞ்சலிலா, அல்லது நேரடி உரையாடலிலா.



மல்டி டாஸ்கிங் நம் செயல்திறனை ஆழமாக பாதிக்கும் ஒன்று என்பதை நாம் அறிந்திருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட வேலையில் இருந்து மற்றொன்றுக்கு தடம் மாறும் போது மூளைக்கு அரை வினாடி உபரியாக வீணாகிறது. மேலும் மூளையின் ஒரே பகுதியை செயல்படுத்தும் இருவேறு செயல்கள் கடுமையான அழுத்தத்தை விளைவிக்கின்றன. உதாரணமாக மின்னஞ்சல் அடித்தபடியே தொலைபேசியில் உரையாடுவது. ஆனால் ஓவியம் கிறுக்கியபடியே பேசுவது அத்தகைய சிரமத்தை மூளைக்கு அளிக்காது. ஏனென்றால் இரண்டும் வெவ்வேறு மூளை தசைகளை செயல்படுத்துவன. இதே காரணத்தால் இசை கேட்டபடியே எழுதுவது, ஓவியம் வரைவது, அறுவை சிகிச்சை செய்வது போன்றவை செயல்திறனை அதிகரிக்க செய்யும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. காப்ரியல் மார்க்வெஸ் இசை கேட்டபடியே எழுதும் பழக்கம் கொண்டவர். தொண்டை, வாய், மூக்கு நிபுணர் பிளேக் பாப்சின் தன்னால் இத்தாலிய இசையமைப்பாளர் மரியா புயுசினியின் ”லா பலாமே” கேட்டபடியே மிகுந்த ஈடுபாட்டுடன் அறுவை சிகிச்சை செய்ய முடிவதாக சொல்லியுள்ளார். இப்படி மல்டி டாஸ்கிங் நம் சிதறுண்ட சமூக ஆளுமையின் ஒரு பகுதி ஆகி விட்டபடியால் அதை விஞ்ஞானபூர்வமாக செயல்படுத்தும் மெருகேற்றப்பட்ட வழிமுறைகள் எதிர்காலத்தில் கண்டடையப்படலாம். மிதமிஞ்சிய புலன் தூண்டுதல்களை அகத்தூண்டல்களாய் திசைமாற்றும் மேம்பட்ட ஒரு மனிதகுலமும் உருவாகலாம்.
Read More

Tuesday, 11 May 2010

எல்.எஸ்.டி, சைலோசிபின், சாரஸ், மெய்ஞானம்: ஒரு விஞ்ஞான மேம்பாலம்.



வரலாறு நெடுக அறிவியல் முதலாளித்துவத்தினோடு கைகோர்த்தே வளர்ந்துள்ளது. மனித அறிவை விகாசிக்கும் உன்னத நோக்கம் கொண்டிருந்தாலும் வணிக வாய்ப்புள்ள சாத்தியப்படுகள் தாம் அறிவியலில் என்றும் ஊக்கம் பெறுகின்றன. இதனாலே எந்த அறிவியல் தேடலையும் மனித குலம் ஒரு கண்ணை சந்தேகத்தில் மூடியபடியே பார்க்கிறது. அறிவியலுக்கு மெய்ஞான தரிசனத்திற்கான மனநிலையை கண்டறிவதில் பேரார்வம் உண்டு. சுருக்கமாக ஒரு உயிரியல் கடவுளை கண்டுபிடிப்பதற்கான இந்த ஆவலை நாம் திருச்சபைக்கும் அறிவியல் உலகுக்குமான பகைமையின் பின்னணியில் காண்பது சுவாரஸ்யமானது. அறுபதுகளிலேயே விஞ்ஞானிகள் சைக்கெடெலிக் மருந்துகள் எனப்படும் போதை மருந்துகளை சரியான அளவில் உட்கொள்ளும் ஒருவர் துறவிகளுக்கு இணையான மெய்ஞான பரவச மனநிலையை அடைய முடியும் என்ற ஒரு ஆய்வு முடிவை அறிவித்து எதிர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தினர். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆய்வறிக்கைகள் போதை மருந்துகளின் மருத்துவ பயன் குறித்து எழுதப்பட்டன. குறிப்பாக 1966-இல் வால்டர் பான்கே என்பவர் போதை மருந்துகளால் ஏற்படும் மெய்ஞான திறப்புக்கும், துறவிகளின் ஆன்மீக அனுபவத்துக்கும் உள்ள வேறுபாடுகள் ஒற்றுமைகள் குறித்து விரிவாக ஆய்ந்து இந்த மெய்ஞான நிலையை புறவயமாக நிறுவ முயன்றார். இம்மனநிலைக்கு ஒருமை, கால, வெளி கடத்தல், ஆழ்ந்த நேர்மறை மனநிலை, இறைநிலை உணர்வு, உள்ளுண்ர்வு-சார் அவதானிப்புகளை புறவய உண்மையாக அடைவது, மெய்நிலையின் முரண்பாடுகள் (உ.தா: வெளியில் இருப்பதாகவும் இல்லாமல் இருப்பதாவும் தோன்றுவது), அனுபவத்தை மொழியில் கடத்த முடியாமை, காலமற்ற அனுபவத்தின் தற்காலிக தன்மை என ஒன்பது பண்புகள் உள்ளதாக வால்டர் தெரிவித்தார். ஆன்மீக பின்புலமற்றவர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் என இரு குழுவினருக்கும் சைலோசிபின் போதை மருந்தை (மேஜிக் காளான்களில் உள்ளது) அளித்து ஆராய்ந்த வால்டர் இரு சாராரின் மெய்ஞான அனுபவங்களுக்கு அதிக வித்தியாசமில்லை என்ற முடிவை அடைந்தார். மேலும் இவர்கள் இம்மருந்தை உட்கொண்ட ஆறுமாதங்களுக்கு பிறகு இந்நபர்கள் மனஆரோக்கியத்தில் பெரும் முன்னேற்றத்தையும், ஆன்மீக ரீதியாக முதிர்ச்சியையும் அடைந்திருப்பதாக வால்டர் குறிப்பிட்டார். குறிப்பாக இவர்கள் ஆழமானதொரு அமைதி மற்றும் வெளி-உறவுகளுடனான ஒருங்கிணைவு பெறுவதில் தொடங்கி சமூக அல்லது பிரபஞ்சம் முழுமையின் ஒரு பகுதி தனது சுயம் என்று தொடர்புறுத்த முடிகிற வரை இம்மருந்து உட்கொள்ளல் அனுபவம் பயன்பட்டிருக்கிறது. ஆனால் வால்டரின் ஆய்வு இரு குறுங்குழுக்களை கொண்டு செய்யப்பட்ட ஒன்று. ஒரு பெரிதுபட்ட விரிவான களத்தில் இப்படியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இத்தகைய போதை-ஆன்மீக விடுதலை கோட்பாடுகளை நாம் சமூக அளவில் பரிசீலிக்க முடியும். ஆனாலும் அப்படி விரிவான ஆய்வுகள் மேற்கொள்வதற்கான சூழல் ஏறத்தாழ 50 வருடங்களுக்கு பின் இன்னும் சாத்தியமாக இல்லை. காரணம் அறுபதுகளில் இத்தகைய ஆய்வு முடிவுகள் மிகையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு அழிவு கலாச்சாரத்துக்கு இட்டுச் சென்றது. போதை ஆய்வின் சமூக விளைவுகளை விளக்க நமக்கு திமோதி லியறியின் சிறிதொரு வாழ்க்கைக் குறிப்பே போதும்.



உளவியலாளர் திமோதி லியரி பீட் கலாச்சார நட்சத்திரமான் ஆலன் கின்ஸ்பெர்குடன் இணைந்து கொண்டு அமெரிக்காவின் எதிர்கலாச்சாரத்தை அதன் உச்சத்துக்கு எடுத்து சென்றார். பிரேசிலில் வாழும் மசாடெக் எனும் பழங்குடி மக்கள் தங்கள் மதச்சடங்குகளுக்கு பயன்படுத்தும் சைலோசைபின் எனும் போதைப்பொருள் கொண்டுள்ள காளான்களை உண்ட லியரி அதை ஒரு பெரும் மனத்திறப்பாக அறிவித்தார். “ஐந்து மணிநேரங்களில் நான் அப்போது மனித மூளை குறித்து கற்றறிந்தவை எனது பதினைந்து வருட உளவியல் படிப்பு மற்றும் ஆய்வுகளில் பெற்றதை விட பலமடங்கு அதிகம்” என்றார். ஊருக்கு திரும்பிய திமோதி முன்னூறுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மாணவர்கள், தத்துவவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு மெக்சிக்கிய போதை காளானை ஒத்த செயற்கை மருந்தை அளித்தார். இக்குழுவில் 75 சதவீதத்தினருக்கு இந்த போதை அனுபவம் ஒரு பெரும் தரிசனமாக இருந்தது என்று லியரி அறிவித்தார். திமோதி லியரியின் இந்த போதை ஆய்வுக்கு கின்ஸ்பெர்க் தன்னிச்சையாக தன்னை ஒப்புவிக்க, அதனால் உந்தப்பட்ட ஹிப்பி கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் என ஒரு பெருங்கூட்டம் எல்.எஸ்.டி, சைலோசைபின் போன்ற போதை பொருட்களை கட்டற்ற மன-அனுபவத்திற்காக பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். லியரி சிறைக்கைதிகளுக்கு போதை மருந்தளித்து அவர்களை திருத்த முடியும் என்று ஒரு ஆய்வில் நிரூபித்தார். பின்னர் இந்த ஆய்வு சரியான முறைமைகளை பின்பற்ற இல்லை என்று நிராகரிக்கப்பட்டது. லியரி மதுபோதைக்கு அடிமையானவர்களையும் தனது சைகடிலிக் மருத்துவத்தின் மூலம் விடுவிக்க முடியும் என்று பிரச்சாரம் செய்தார். ஆல்பர்ட் என்பவருடன் சேர்ந்து லியரி ”உள்விடுதலைக்கான சர்வதேச நிறுவனத்தை” ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இந்த சிகிச்சையில் கலந்து கொள்ள பெருகி வந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் லியரி திருப்பி அனுப்ப, அவர்களுக்கு போதை மருந்துகள் விற்க கறுப்பு சந்தை உருவானது.



மெல்ல மெல்ல சமூகத்தின் ஒரு பகுதி போதை கலாச்சாரத்தில் செயலிழப்பது கண்டு அஞ்சிய அமெரிக்க அரசு எல்.எஸ்.டியை தடை செய்தது. மரிஜுவானா வைத்திருந்ததர்காக லியரி கைது செய்து 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. சுவஸ்சர்லாந்து, அப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளுக்கு தப்பி ஓடிய லியரியை ஜனாதிபதி நிக்சன் “அமெரிக்காவிலேயே மிக அபாயகரமான ஆள்” என்று வர்ணித்தார். அறுபதுகளுக்கு பின்னர் போதை வஸ்துக்களின் பயன்பாடு மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ”போதை-வழி மெய்ஞானத் தேடல்” ஆய்வுகளும் கரடு தட்டி நின்றன. பின்னர் சமீபமாக மேற்கத்திய அரசுகள் இத்தகைய ஆய்வுகளுக்கான வாசலை ஒருக்களித்து திறந்து வைத்துள்ளன. இப்போது மெய்ஞானமெல்லாம் நோக்கமல்ல. மன-அழுத்த நோயாளிகளை குணப்படுத்தவும், மக்களின் பொதுவான சமூக உறவாடல்களை மேம்படுத்துவதற்குமான மற்றொரு அதிசய மருந்தாக சைகலெடிக் மருந்துகளை பயன்படுத்தலாம் என்பதே தற்போதைய அறிவியல்-மருந்தாக்க தொழில்துறையின் திட்டவரைவு.

இரண்டு வருடங்களுக்கு முன் ஜான் ஹாப்கின்ஸ் மெடிக்கல் ஸ்கூலில் தான் இந்த ஆய்வு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆய்வில் மருத்துவரான கிளார்க் மார்டின் என்பவரும் கலந்து கொண்டார். 65 வயதாகும் கிளார்க் சிறுநீரக புற்றுநோய் சிகிச்சைகளின் விளைவான மன-அழுத்தத்துடன் போராடி வந்தவர். இவ்வாய்வின் போது கிளார்குக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சைலோசிபின் தரப்பட்டது. அப்போது கண் மூடியை அணிந்து கொண்டு இயர் போன் மாட்டி செவ்வியல் இசை கேட்டபடி பிரபஞ்சம் குறித்த விசாரத்துடன் கிடந்ததாய் கிளார்க் சொல்கிறார். ”சட்டென்று பரிச்சயமானவை எல்லாம் மறைய ஆரம்பித்தன. திறந்த சமுத்திரத்தில் ஒரு படகிலிருந்து விழுந்து விடுகிறீர்கள் என்று நினைத்து கொள்ளுங்கள். திரும்பிப் பார்க்கிறீர்கள், படகைக் காணவில்லை. பிறகு தண்ணீரையும் காணவில்லை. பிறகு நீங்களும் காணாமல் போய் விடுகிறீர்கள்”. மேற்கண்ட 6 மணிநேர அனுபவத்திற்கு பின்னர் கிளார்க் சிறுக சிறுக மன-அழுத்தத்திலிருந்து விடுபட்டார். அது மட்டுமல்ல இதனால் தனது மகள் மற்றும் நண்பர்களுடனான உறவும் பெருமளவில் மேம்பட்டதாக கிளார்க் சொல்லுகிறார். இது எப்படி? போதை மருந்து சுயத்தின் இறுக்கத்தை தளர்த்துகிறது; பிரக்ஞை வெளி மற்றும் காலத்தில் இருந்து விடுபட்டு பிரபஞ்சமும் தானும் ஒன்று என்பதை உணர்கிறது. அல்லது குறைந்த பட்சம் ஒரு சமூகம் அல்லது குழுவுடன் தன்னை ஈகோ வேறுபாடற்று அடையாளப்படுத்திக் கொள்ளுகிறது. எந்தவொரு அனுபவத்தைப் போலவும் இந்த கட்டற்ற மனநிலை ஒரு பாடத்தை கற்றுத்தருகிறது. அது உள்ளுணர்வால் உணரப்படும் அகவய தரிசனம். இதை ஒரு பண்பட்ட தேடல் கொண்ட மனதால் தான் வாழ்வின் ஒரு திருப்பு-முனை அனுபவமாக மாற்றிக் கொள்ள முடியும். மேம்போக்கானவர்களுக்கு இந்த போதை அனுபவம் மனதில் ஒரு எளிய நினைவாக மட்டுமே எஞ்சும். கிளார்க் இந்த அனுபவம் தன் ஆளுமையில் ஒரு ஒரு முக்கிய வளர்ச்சியை எற்படுத்தியதாக கூறுகிறார்; ”எனது செயல்பாடுகளுடன் மட்டுமே என்னை இணைத்துக் கொள்வதை, வெளிக்காரணிகளை கட்டுப்படுத்த அனாவசியமாக முயல்வதை நிறுத்தினேன்.” கிளார்க்கும், இதே ஆய்வில் பங்குகொண்ட அவரைப் போன்ற பிறரும் சைகடெலிக் அனுபவத்தின் போது ஒரு மாபெரும் பிரக்ஞையில் தங்கள் கவலைகள் மற்றும் அக்கறைகள் கரைந்து விடுவதாகவும், தங்களுக்கும் பிறருக்கும் இடையிலான எல்லைகள் மறைந்து விடுவதாகவும் குறிப்பிடுகின்றனர். பரிணாம மனவியலாளர்கள் இப்படியான போதை வஸ்துக்களின் மூலம் பிரக்ஞையை கடப்பதற்கான ஒரு மரபணு பண்பை நாம் பல நூற்றாண்டுகளாக முன்னோர்கள் வழி கைகடத்தி வந்துள்ளதாக கூறுகின்றனர். போதை வஸ்து அனுபவம் சமூகத்தினுடனான மனிதனின் ஒருங்கிணைவை மேம்படுத்துவதால், இது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும் பயனுள்ள உளவியல் கூறாகிறது. நமது மரபணுவில் போதை வஸ்து பயன்பாட்டுக்குமான மென்பொருளும் சேர்த்தே எழுதப்பட்டுள்ளது.
மேற்சொன்ன ஆய்வு அறிக்கை வெளியான பின் அமெரிக்காவில் இத்தகைய ஆய்வுகளுக்கு தன்னிச்சையாக தம்மை ஒப்புக் கொடுக்கும் மக்கள் அறுபதுகளின் ஹிப்பி-சைகடெலிக் கலாச்சார கலவரத்துக்கு பின்னர் மீண்டும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனர். நவீன சமூகத்தின் ”மீட்பர் மறுவருகையாக” சைலோசிபின் சிகிச்சை மாறி வருகிறது. அரிசோனா பல்கலை, நியூயார்க் பல்கலை, கலிபோர்னியா பல்கலை ஆகியவற்றில் இத்தகைய ஆய்வுகள் மக்கள் பங்களிப்புடன் நடந்து வருகின்றன. மரண படுக்கையில் பதற்றம் மற்றும் வேதனையில் அவதியுறும் மக்களுக்கு ஆறுதலளிக்கவும் இம்மருந்துகள் பயன்படப் போகின்றன. இவ்வகை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள டாக்டர்.குரோப் “இம்மருந்துகள் உடலுடன் நம்மை அடையாளப்படுத்துவதில் இருந்து விடுவித்து ஈகோ கடந்த நிலைகளை அடைய உதவுகின்றன. வாழ்வியக்கம் குறித்த ஒரு பெரும் புரிதலுடன் இதற்கு பின்னர் நம்மால் மரணத்தை அணுக முடிகிறது. அந்த புரிதல் வாழ்வு அடிப்படையில் மாற்றம் தான் என்பதே” என்கிறார்.



ஒரு ஆயுட்கால துறவு வாழ்வு, பயிற்சி, புலனடக்கம் போன்றவற்றுக்கான துரிதமான எளிய மாற்று என சைகடெலிக் மருந்துகளை கூற முடியுமா? The Psychedelic Experience என்ற நூலில் திமோதி லியரி மெய்ஞான அனுபவங்கள் பல்வேறு வழிகளில் சாத்தியமாகலாம் என்கிறார். ”புலனடக்கம், யோகா, தியானம், மதபூர்வ அல்லது அழகியல் பரவசம் மூலமாக, அல்லது தன்னியல்பாக ஒருவருக்கு மெய்யுணர் நிலை ஏற்படலாம். எல்.எஸ்.டி, சைலோசைபின், மெஸ்கலைன், டி.எம்.டி போன்ற போதை வஸ்துக்களும் இத்தகைய நிலையை தூண்டலாம். இவை தனிப்பட்டு இவ்வனுபவத்தை அளிக்க முடியாது; போதை மருந்து ஒரு ரசாயன சாவி மட்டுமே. அது நம் மனதைத் திறக்கிறது; நமது நரம்பு மண்டலத்தை வழமையான வார்ப்புகள் மற்றும் வடிவமைப்புகளில் இருந்து விடுதலை செய்கிறது”. லியரியின் அவதானிப்பு மிக முக்கியமானது. சாவி இருந்தால் மட்டும் போதாது. கதவை கண்டுபிடிப்பதற்கான தேடல் வேண்டும். அதற்கான மன-அமைவு வேண்டும். ஆனால் எந்தவொரு கண்டுபிடிப்பும் மையநீரோட்டத்துக்கு கொண்டு வரப்படுகையில் மிகைப்படுத்தப்பட்டு அனைத்து தீர்வுகளுக்குமான துரித வழியாக முன்வைக்கப்படுகிறது. அறுபதுகளில் ஐரோப்பாவில் நிகழ்ந்த சமூக அவலம் இதுவே. சைகடெலிக் மருந்துகள் மனித சமூகத்துக்கு ஒன்றும் புதிதல்ல. சைபீரியா, தென்மேற்கு வட-அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஆதி பழங்குடியினர் பல்வேறு மூலிகைச் செடிகள் மற்றும் காளான்களில் இருந்து எடுக்கப்பட்ட போதை பொருட்களை தமது மதச்சடங்குகளில் மேற்சொன்ன ஆன்மீக பரவசத்துக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். சீன தாவோ மரபு, ஜெர்மானிய பேகன் மரபு, யூத சடங்குகள், இஸ்லாமிய சூபி மரபு ஆகியவற்றில் மக்கள் போதை மருந்துகளை ஏதாவதொரு வகையில் பயன்படுத்தியே வந்துள்ளனர். புத்தர் ஞானமடைவதற்கு முன் ஆறு வருடங்கள் கஞ்சா விதைகளை மென்றதாக ஒரு ஆய்வுக் குறிப்பு கூறுகிறது. இந்து மரபில் சாதுக்களில் இருந்து நித்யானந்தர் வரை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஆன்மீக விடுதலைக்காக பயன்படுத்தி வருகிறார்கள். பெனாரஸ்,பைத்யனாத் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் பாங் எனப்படும் கஞ்சா பானம் சிவனுக்கு படைக்கப்படுகிறது. சாதுக்கள் சாரஸ் புகைப்பதை ஏற்றுக் கொண்ட நம் சமூகம் நித்யானந்தர் அமெரிக்க ஆசிரமங்களில் போதை மருந்துகளை பக்தர்களுக்கு அளித்ததாக செய்தி வெளியாகும் போது எதிர்ப்பது ஏன்? போதை மருந்து பயன்பாடு மேற்சொன்ன எந்த கலாச்சாரங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். தொடர்ச்சியாக மனித குலத்தில் வரலாற்றில் சிறு குழுக்கள் மட்டுமே போதை மருந்துகளை தங்கள் மனதை திறந்து கொள்ள பயன்படுத்தி வந்துள்ளன. ஆனால் நித்யானந்தர் ஒரு பெரும் மக்கள் அமைப்புக்குள் வந்த பின் தாந்திரிக முறைகளை, போதை வஸ்துக்களை மெய்யறிவுக்காகவோ அல்லது வெறுமனே வித்தை காட்டவோ பயன்படுத்துவது மிக இயல்பாகவே கண்டனத்துக்கு உள்ளாகிறது. அறிவியல் அறிஞர்களின் கையில் சைகலெடிக் மருந்துகள் செல்லும் போதும் இதே சிக்கலே நிகழ்கிறது. விஞ்ஞானிகள் உடல்நலக் கேடு இல்லை என்று உத்தரவாதம் வழங்கி விட்டால், நோய்நொடிகள், மனித உறவுகளிடையேயான பிரச்சனைகள், சலிப்பு மற்றும் சோர்வு ஆகிய உணர்வுகளில் இருந்து தப்பிப்பு, மரணபயம் என பல்வேறு மனித சவால்களுக்கு ஒரு பின்வாசல் திறப்பாக இம்மருந்துகள் எம்.என்.சிகளால் எதிர்காலத்தில் சந்தைப்படுத்தப்படும். எந்தவொரு பிரச்சனையும் சவாலாக எதிர்கொள்ளப்படும் போது தான் மனிதகுலம் முன்னகர்வதான உந்துதல் ஏற்படுகிறது. குறுக்குவழி மருந்துகள் சவால்களை எதிர்கொள்ள முடியாதபடி மனிதனை முடக்கி விடும். 1966-இல் போதை அனுபவத்தையும் மெய்ஞான மனநிலையையும் ஒப்பிட்டு ஆய்வறிக்கை எழுதின வால்டர் பாங்கே சைகலெடிக் பொருட்களை மருந்துகளாக சந்தையில் கொண்டு வருவதன் பல ஆபத்துகளை குறிப்பிட்டிருக்கிறார். இத்தகைய மருந்துகள் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் அடிமையாகாத படிக்கு பரிந்துரைக்கப்படுகிற அளவில் வழங்கப்பட்டாலும் கூட போதை அனுபவம் தரும் பேரின்பமும் கிளர்ச்சியும் தொடர்ச்சியான பயன்பாட்டிற்கான ஒரு சார்புநிலையை பயனரிடத்து ஏற்படுத்தலாம். அடுத்து இதனை பயன்படுத்தும் மனப்பிறழ்வு அறிகுறிகள் கொண்டவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படலாம் அல்லது முழுபைத்தியமாகலாம். சமூகத்தின் உழைப்புத் திறனை இப்போதை பழக்கம் வெகுவாக குறைக்கலாம்.

விஞ்ஞானத்தில் இருந்து மதம் வரை எந்த உடனடி மார்க்கத்தையும், மிகையான கூற்றையையும் அதன் தலை கூட நம் கூடாரத்தினுள் நீட்ட விடாமல் தடுப்பதே நலம்.
Read More

Wednesday, 14 April 2010

உடற்பயிற்சி மித்துகள், கலாச்சாரம் மற்றும் தீட்டு



உயிரோசை இதழில் வெளியான கட்டுரை

உடற்பயிற்சி இன்று மருந்து உட்கொள்ளுவது போல் அத்தியாவசியமான செயலாக பரிந்துரைக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்பவர்களை சராசரியாக மூன்று பிரிவுகளில் அடக்கலாம். உடல் தசைகளை பெருக்கவும், மெலிதாக்கவும் விழையும் பதின்பருவ இளைஞ, இளைஞிகள். தொப்பையை குறைக்க டிரட் மில் ஓடும் மத்திய வயதினர். இவர்களில் பெண்கள் அதிகம். முப்பதில் திருமணம் செய்ய முனையும் சமகால தலைமுறையின் வேலைக்கு செல்லும் பெண்கள். இவர்கள் உடல் பருமனை குறைக்க அதிநவீன உடற்பயிற்சி நிறுவனங்களை பரவலாக நாடுகின்றனர். மூன்றாவதாக, நாற்பது வயதுக்கு மேல் ரத்தகொழுப்பு, சர்க்கரை, மாரடைப்பு போன்ற உபாதைகளை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் இருந்து மிரட்சி கலையாமல் நேரடியாக உடற்பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்படுபவர்கள். இவர்களுக்காக பெரும்பாலான மேல்தட்டு உடற்பயிற்சி நிறுவனங்களில் பொது நலம், எடை குறைப்பு மற்றும் உடல் கோளாறு கட்டுப்படுத்தல் என்று பயிற்சி திட்ட வகைமைகள் வைத்திருக்கிறார்கள். இம்மூன்றுக்கும் அதனதன் வரிசைப்படி கட்டணம் அதிகம். சராசரியாக இந்த அதிநவீன குளிரூட்டப்பட்ட ஜிம்கள் ஐயாயிரத்தில் இருந்து பத்தாயிரம் வரை மாதம் வசூலிக்கின்றன. இன்று பருமனான 12 வயது குழந்தைகளும் உடற்பயிற்சி நிறுவனங்களில் வெயிட் அடிக்கும் காட்சிகள் உடலுழைப்பே அறியாது 80 வயது தாண்டி வாழ்ந்த நமது தாத்தா-பாட்டிகளை பற்றி சற்று துணுக்குற வைக்கிறது.

50-இல் இருந்து ஐநூறு வரை கட்டணம் வசூலிக்கும் கீழ்\கீழ்மத்திய\மத்திய வர்க்க உடற்பயிற்சி நிறுவனங்கள் உண்டு. இந்த வகை ஜிம்களில் மாதிரி உடலமைப்பு கொண்ட உடலழகர்கள் வினோதமான பின்னணி கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட தக்கலையில் மணற்பரப்பு மேல் ஓலை வேய்ந்த உடற்பயிற்சி நிறுவனம் ஒன்று இருந்தது. அங்கு பயிற்சி செய்பவர்கள் தினமும் ஒரே சட்டையயை தான் அணிவர். அது வியர்வையில் தொப்பலாகின பின் அங்காங்கு சொருகி வைத்து அடுத்த நாள் உலர்ந்து வீச்சமடிக்க மீண்டும் பயன்படுவர்.இப்படியே ஒரு வருடம் வரை துவைக்காமல் இந்த ஆடைகள் விடாப்பிடியாய் பயன்படுத்தப்படும். அது ஒரு திறந்த பயிற்சி நிலையம். ஜிம் உரிமையாளரும் பயிற்சியாளரும் வருடத்தில் சில முறை வருகையளிப்பது இரவில் ஒரு சடங்கு நடத்தவே. இச்சடங்கில் இத்தகைய துணிகளை தேடி குவித்து கட்டாயமாக எரித்து விடுவார்கள். அடுத்த வருடத்திற்கான அழுக்கு உடைகள் பிறகு மெல்ல மெல்ல சேகரமாக ஆரம்பிக்கும் அந்த ஜிம்மின் ஆணழகர் ஒரு கல்லுடைப்பவர். நாற்பது வயதிருக்கும். ஆப்பரிக்க எருமையை நினைவுபடுத்தும் தோற்றம். ஒரு நாள் விலைமகளிடம் சென்றது பற்றி, சிவப்பான அவளிடம் அதிகம் பேர் சென்றதால் அவள் புழை அகலமாக இருந்தது பற்றி பேசி பேசி விசனிப்பார். அடுத்த நாளே தன் குழந்தை கருவிலே இறந்து விட்டதை மென்மையாக குறிப்பிட்டு சோகவடிவாய் தெரிவார். இரண்டிலும் சகஜம் இருக்கும். அவர் பேச்சை கேட்க இளைஞர்கள் சதா குழுமி இருப்பார்கள். அவருடன் பயில பலரும் விரும்பினர். மேற்கில் காபி பார்களும், மதுக்கடைகளும் இலக்கியம் உள்ளிட்ட கலைவடிவங்களுடன் கலாச்சார தொடர்பு கொண்டிருந்தது. அது போல் ஜிம்கள் வயதுக்கு வராதவர்களுக்கான வாழ்வியல் பட்டறையாகவும் திகழ்ந்து வந்தன. நகரத்து மேல்தட்டு/மேல்-மத்திய தட்டு ஜிம்களில் பயில்பவர்களிடம் அந்த வர்க்கத்தின் வழமையான இறுக்கம் காணப்படுகிறது. துள்ளல் இசையுடன் கற்பனையான ஒத்திசைவுடன் பயிற்சி செய்து, ஓய்வு நிமிடங்களில் மூச்சிரைத்தபடி டீ.வியில் ஐ.பி.எல் பார்த்து, தன்னை ரகசியமாய் கவனிக்கிறவர்களை நோக்கி முறைத்து அல்லது சங்கடமாய் புன்னகைத்து ... இப்படி எந்த சமூக ஒருங்கிணைவும் இன்றி கழிகின்றன ஹைடெக் உடற்பயிற்சி பொழுதுகள். தமது பயிற்சி எந்திரத்தின் தலைமாட்டில் முன்பு இயங்கினவரின் வேர்வை இருந்தால் மட்டும் பெரும் தீட்டாகி விடுகிறது இவர்களுக்கு. எந்த விதத்திலும் அன்னிய மனிதத் தடங்களை இவர்கள் விரும்புவதில்லை.
ராயப்பேட்டை ரத்னா கபே அருகில் உள்ள விமல் ஜிம்மில் குள்ளமாக ஆனால் வலுவான தசைகள் கொண்ட ஒரு இளைஞர் இருந்தார். நாற்பது கிலோ எடையெல்லாம் தோளில் சுமந்து ஸ்பிரிங் போல் துள்ளி எழுவார். அவர் ரத்னா கபேவில் பாத்திரம் அலம்பும் பணி செய்தார். ரெண்டு ஆள் நெஞ்சகலமும் தும்பிக்கை கரங்களும் கொண்ட ஆணழகர் மற்றொருவர். பர்மா பஜாரில் பிளாட்பார்ம் கடை போட்டிருந்தார் ரொம்ப தயங்கிய பின்னரே தன் பணி விபரத்தை பிறரிடம் தெரிவிப்பார். இவர்களின் லட்சியம் என்பது தற்போது அருகி விட்ட இனமான தீவிர இலக்கியர்களுடையது போன்றே புதிரானது. எளிய உடலமைப்பு கிளர்ச்சியோ, உடல் பருமன் குறைப்பதோ, ஆயுள் நீட்டிப்போ அல்ல. மிக அந்தரங்கமான திருப்தியாக இருக்கலாம். உடற்பயிற்சி நிறுவனத்துள் உருவாகும் நட்பு வலை மற்றும் ஆரம்ப கட்ட இளைஞர்களின் ஆதர்ச வழிபாடு இவர்களை சட்டென்று ”புலிக்கலைஞர்கள்” ஆக்கி விடுவதும் காரணம் ஆகலாம்.

மாறாக குளிரூட்டப்பட்ட மேல்தட்டு ஜிம்களில் நீண்ட வருடங்களாக பயின்ற கட்டுமஸ்தான உடலை மேலும் உறுதியாக்க வாழ்வெல்லாம் உழைப்பவர்களை விட குறுகின நோக்கத்துடன் வருபவர்களையே அதிகம் காண முடிகிறது. உதாரணமாக ஆறு மாதங்களில் இருபது கிலோ குறைக்க வருபவர்கள் அதற்கு மேல் தங்குவது இல்லை. பலர் ரெண்டு மூன்று மாதங்களில் உடல் எடையில் வித்தியாசம் இல்லாதது உணர்ந்து கழன்று விடுவார்கள். சிலர் ஐந்து ஆறு கிலோக்கள் இழந்ததும் நின்று கொள்வார்கள். பயிற்சியை நிறுத்தியதும் உடல் இயல்பாகவே அசுரவேகத்தில் எடையை பத்து கிலோ மேலும் அதிகரிக்கும்.. பிறகு இவர்கள் அடுத்த ”சிகிச்சை” முறைக்கு செல்வார்கள். நவீன ஜிம்கள் நல்ல வியாபார மார்க்கம் ஆகி விட்டனவால் உடல் எடை குறைப்பது பற்றிய போலியான பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் பயிற்சியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் சற்றும் தயங்குவது இல்லை. உதாரணமாக, உடல் எடை கட்டுப்பாடு என்பது வெறுமனே எந்திரங்களில் பயின்று கொழுப்பை கரைப்பது மட்டும் அல்ல. ஒருவரது வாழ்க்கைச் சூழல், மரபணு, உணவுக் கலாச்சாரம், மூளை அமைப்பு, வீட்டு சமையல், வேலை, மன அமைப்பு, மன அழுத்தம், நெருக்கடி என்று பல்வேறு காரணிகள் உடல் எடையை நிர்ணயிக்கின்றன. ஆனால் உடற்பயிற்சி நிறுவனங்கள் பொறியியல் கல்லூரிகள் போல் மூன்று மாதங்களில் பத்து கிலோ என்று கூவியே ஆள் பிடிக்கின்றன. ஆரம்பத்திலே உறுப்பினர்களிடம் பெரும் கனவுகளை வளர்த்து விடுகின்றன. உணவுத் திட்ட பட்டியல், எடைகுறைப்பு பட்டியல், தானியங்கி எந்திரத்தில் கொழுப்பளவு நிர்ணயம் என்று மேலோட்ட அறிவியல் ஜம்பங்களும் உறுப்பினர்களுக்கு மிகையான நம்பிக்கைகளை அளிக்கின்றன. தனிப்பட்ட மன உறுதியுடன் தொடர முடிகிறவர்கள் அன்றி பிறர் விரைவில் ஏமாற்றமடைந்து காசையும் வீணடிக்கிறார்கள்.

உடற்பயிற்சி குறித்து மற்றொரு நீண்ட கால நம்பிக்கை இப்போது வெறும் புரட்டு என்று நிரூபணம் ஆகியுள்ளது. அதாவது ஒருவர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் குறைந்த எடைகளை கொண்டு அதிக முறைகள் பயிற்சி செய்ய வேண்டும். பயில்வான் உடலமைப்பை விரும்புகிறவர்கள் அல்லது உடல் எடை கூட்ட வேண்டுகிறவர்கள் அதிக எடைகளை தூக்கி குறைந்த எண்ணிக்கையில் பயில வேண்டும். நிஜத்தில் இது நேர் முரணானது என்று நிரூபித்துள்ளது அசிரோனா பல்கலையை சேர்ந்த கோயிங், கஸ்லர், லோமேன் உள்ளிட்டோரின் ஆய்வு. ஜார்ஜியா சதர்ன் பல்கலையை சேர்ந்த தோர்ண்டன் மற்றும் பொட்டெய்கர் ஆகியோரின் ஆய்வும் இதே முடிவை எட்டியுள்ளது. உடல் எடையை குறைக்க விழைபவர்கள் ஐந்து கிலோ டம்பெல்களை தவிர்த்து பத்தில் இருந்து பதினைந்து கிலோ எடைகளுக்கு செல்லலாம். பெஞ்ச் பிரஸ்ஸுக்கு நாற்பது கிலோ போடலாம். குறைந்த எடையில் இருபது தடவை செய்பவர்கள் அதிக எடை எடுத்துக் கொண்டு ஐந்து அல்லது பத்து தடவைகளாக பயிற்சியை குறைத்துக் கொள்ளலாம். ஜிம்முக்கு புதிகாக சேரும் ஒல்லிப்பீச்சான்களிடம் பயிற்சியாளர் குறைந்த எடை போட்டு பயிற்சி செய்ய சொன்னால் அவர்கள் ஷுவாஸ்னேக்கரை நெஞ்சில் வேண்டிக் கொண்டு பத்து, இருபது கிலோக்கள் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள். தொடர்ந்து இவர்கள் இதனால் மூச்சு வாங்கி திணறுவது ஒரு சம்பிரதாய வேடிக்கை. இது மேற்சொன்ன தவறான நம்பிக்கை காரணமாக நடக்கிறது.
Read More

Tuesday, 23 March 2010

கனவு எனும் உறங்காத கண்



தால்ஸ்தாயும் அவரது பன்னாட்டு சிஷ்யகோடிகளும் விடிகாலையில் எழுந்து நடைபழகி ஒழுக்கசீலர்களாக எழுத்து வேலையை ஆரம்பித்தவர்கள் ... ப்பவர்கள். ராவெல்லாம் விழித்து இருந்து சிகரெட் புகைப்படலத்தால் மூடப்பட்டு மூளை சூடேறி ஆவேசமாய் எழுதித் தள்ளின மற்றொரு மேதை இருந்தார். தஸ்தாவஸ்கி; ராத்திரி எழுதுவது நல்ல தெளிவான எழுத்தாக இருக்காது என்று தல்ஸ்தாய் கருதினார்; புறங்கையால் அத்தகைய இருட்டு எழுத்துக்களை ஒதுக்கினார். தஸ்தாவஸ்கி தன் ஆவேச எழுத்தை விளக்கினார்: ”என் குருதியில் பேனா தோய்த்து எழுதுகிறேன்”. அவரது ”குற்றமும் தண்டனையும்” குறித்து தால்ஸ்தாய் இப்படி குசும்புடன் சொன்னார்: “முதல் சில அத்தியாயங்களை படித்ததும் நாவல் எங்கே சென்று முடியும் என்று தெரிந்து விடுகிறதே”. அவருக்கு தஸ்தாவஸ்கி மீது பிரியமும் இருந்தது. தஸ்தாவஸ்கி இறந்த சேதி அறிந்ததும் அவர் மேலும் எழுந்து வராதபடி ஒரே இரவில் புத்தகம் ஒன்றும் எழுதவில்லை என்றாலும் தால்ஸ்தாய் கண்ணீர் விட்டு அழுதார். தல்ஸ்தாயின் விமர்சனத்துக்கு திரும்புவோம்: இரவில் எழுதும் போது களைப்புற்ற மூளையால் உச்சபட்ச படைப்பூக்கத்துடன் இயங்க முடியுமா? பகலில் ஆழமாக தூங்காத பட்சத்தில் முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தூக்கம் ஓய்வு மட்டும் அல்ல. தூக்கத்தின் போது மனம் அன்றைய தினத்தின் வெவ்வேறு நிகழ்வுகளை குலுக்கிப் போட்டு யோசிக்கிறது. தொடர்பற்ற சம்பவங்கள், உணர்வுகள் மற்றும் சேதிகளின் எதிரெதிர் முனைகளுக்கு முடிச்சு போடுகிறது. அவதானிப்புகள் நடத்துகிறது. இதுதான் கனவு என்று விளக்குகின்றனர் சாரா மெட்னிக் மற்றும் ஜான் போர்ன். ஜான் போர்ன் சில எலிகளை சீராக ஒரே தடத்தில் ஓட விட்டார். பிறகு அவை கனவு காணும் போது மூளையை சோதித்தவர் அவை தமது கனவுப் பிரக்ஞையில் முன்பு ஒடிக் கொண்டிருந்த அதே ஓட்டத்தடத்தில் அப்போதும் இருப்பதாக கண்டு பிடித்தார். ஜெயமோகன் தான் விஷ்ணுபுரம் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் கண்ட கனவு ஒன்றில் நாவலில் எழுதியிருந்த தெரு ஒன்று கனகச்சிதமாக தெரிந்ததாக சொல்லி உள்ளார். பகலில் பல முறை புணர்ந்து விட்டு தூங்குபவரின் கனவில்?



சாரா தன் சோதனைகள் மூலம் ஆழ்ந்த தூக்கம் பெறாதவர்கள், கனவு காணாதவர்களுக்கு அறிவுக் கூர்மையும் அவதானிப்பு திறனும் சற்று மங்கலாக இருப்பதாக கண்டறிந்து உள்ளார். இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு படைப்பியக்கத்தில் மதிப்பு உண்டா? இரவு படைப்பாக்கத்துக்கு சிறந்த பொழுது. பகலில் எழுதுபவர்கள் நம் சூழலில் சிலரே இருக்க முடியும். இருந்தும் எழுத்தை உள்ளிட்ட படைப்பாக்க தூண்டுதல்களுக்கு உடலின் விதிமுறைகள் பொருந்தாது. கடுமையான களைப்பு மற்றும் மன அவஸ்தையில் இருந்தும் கூட சிறந்த படைப்புகள் வெளிவரலாம். காலை நடைபயிற்சி, அருகம்புல் ஜூஸ், தியானம், யோகாவுக்கு பிறகு எழுதப்படுவது மொண்ணையாகவும் அமையலாம். ஆழ்மன உற்சாகம் தான் ஆதாரம்.
ஆனால் அன்றாட வாழ்வில் செயலூக்கத்துடன் இயங்க கனவு நிலை ஒரு முக்கிய பங்காற்றுகிறது. தூக்கத்தின் உள்ளீடு மட்டும் அல்ல, கனவு வந்ததா இல்லையா, ஏன் தூக்கம் தொந்தரவுக்கு உள்ளானது போன்றவை பெரும் புதிர்த்தன்மையுடனே இப்போதும் உள்ளன. மனதை அரிக்கும் புலனாகாத கவலைகளை தூக்கமிழப்பு சுட்டிக் காட்டும். கனவு அவற்றின் விசித்திர பரிமாணங்களை ஒரு கலைஞனைப் போல் தேடிக் கொண்டே நம் முன் படைத்துக் காட்டும். அன்றாட வாழ்வில் நாம் புறக்கணிக்கக் கூடிய ஒரு மன நெருக்கடியை எதிர்பாராத தருணத்தில் கனவு புனைந்து காட்டுவது அலாதியான அனுபவமே. உதாரணமாக, எனது நண்பர் ஒருவர் தன் அண்ணனின் சிறுவயது மகன் இறந்து போவதற்கு ரெண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் அம்மரணத்தை கண்டார். இது போன்ற பல அனுபவங்கள் உங்களுக்கு நேர்ந்திருக்கலாம் அல்லது அவற்றை கேள்விப்பட்டிருக்கலாம். கனவை வாசித்தல் குறித்த விவாதங்களுக்கு இது நம்மை தூண்டலாம் என்றாலும் நமது மனம் இத்தகைய நிகழும் மற்றும் நிகழப் போகும் நிகழ்வுகளை எப்படி நுணுக்கமாக அவதானிக்கிறது, எந்த நினைவு முடிச்சுகளை இணைத்து எதிர்காலத்தை அது காண்கிறது என்பது பிரமிப்பூட்டும் விவாதம். நமக்குள் மற்றொருவன் நம்மை விட மிகுந்த விழிப்புடன் கவனித்தபடி வேகமாக முன்னகர்ந்தபடி உள்ளான் என்பது ஒரு கிளர்ச்சி ஊட்டும் சிந்தனை.
உறக்கத்தை உற்று கவனிப்பது பயனானது என்கிறது நவீன அறிவியல். கனவுகள் காமப் பீறிடல்கள் என்ற பிராயிடிய கருத்தியல் காலாவதியாகி விட்டது. கனவுகள் வாழ்வுக்கான ஒத்திகைகள் என்பதே சமகால புரிதல்.
Read More

Monday, 15 March 2010

தெரிந்ததும் தெரியாதவையும் (அறிவியல் தொடர்)

பெண்களும் குடிக்கலாச்சாரமும்



மதுவும் புகையும் பரிச்சய வலையை வளர்ப்பதில் முக்கியமானவை. போனபோ குரங்குகள் உறவை பேணுவதற்கு செக்ஸை பயன்படுத்துவதை இதனுடன் ஒப்பிடலாம். அல்லது பகிரப்படும் சிறந்த ஒரு ஜோக்கின் சிரிப்பலைகளுக்கு இணையாக சொல்லலாம். ஒரு அணுக்கமான நட்பு வட்டாரம் ஏற்பட ஒத்த மன அமைப்பை எப்போதும் எதிர்பார்க்க முடியாது. புகை மற்றும் மது உள்ளிட்ட போதை பழக்கங்கள் உறவாடலை லகுவாக்குகின்றன. போதை ஒரு மிகையான மனஎழுச்சியை ஏற்படுத்தி வாழ்வின் பல்வேறு அசட்டுத்தனங்களை கடந்திட பயன்படுகிறது. நமது நேரம், பணம், குடும்ப அமைப்பு ஆகியவற்றை போதை வஸ்துக்கள் நேர்மறையாக பாதிப்பதற்கு நமது கலாச்சாரத்துடன் இவை சமரசம் செய்யாதது ஒரு முக்கிய காரணம். போதை குறித்து நமது சமூகத்தில் அறிவியல்பூர்வமான ஒரு வெளிப்படை விவாதம் இன்னும் நிகழவில்லை. ஒருபுறம் இதன் முக்கியமான பரிமாணங்கள் மறைக்கப்பட்டு ஒரு சீரழிவாக, பாவமாக முன்வைக்கப்பட, மறுகோடியில் போதை மேலும் உல்லாசமானதாக ஒரு மீறல் அரசியலாக நிகழ்த்தப்படுகிறது. எப்போதும் போல் இரண்டு மிகைகளுக்கு மத்தியில் நிஜம் ஒற்றைக் கண்ணாய் இமை மூடி இருக்கிறது.

மேற்கில் போதை தொடர்ச்சியான ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் உள்ளாகி வருகிறது. கர்ப்பவதிகள் மது அருந்தினால் பிறக்கும் குழந்தையை பாதிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அப்படி எனில், குழந்தை பெற விரும்பாத அல்லது பெற்றுவிட்ட பெண்கள் அருந்தலாமா? மார்பகப் புற்று நோய் வாய்ப்பை மிகச்சிறு அளவில் அதிகரிக்க மது காரணமாகலாம். ஆனால் மிதமான மது அருந்தல் பெண்களை இதய நோய்களில் இருந்து ஓரளவு காப்பாற்றுகிறது. ஐம்பது வயதுக்கு உட்பட்ட பெண்களில் சராசரி எடை கொண்டோரின் உடலை மெலிதாக தக்க வைக்க மிதமான குடி பயன்படுகிறது. இந்த சமீப கண்டுபிடிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. மிதமான மது அருந்தல் என்றால் எத்தனை பெக்?



பொதுவாக பெண்களுக்கு ஆண்களை விட மதுவை தாங்கும் ஆற்றல் குறைவு. மது உடலில் நுழைந்து உடலில் உள்ள நீருடன் கலந்து தன் ஆற்றலை சிறுக சிறுக கரைக்கிறது. பெண்களுக்கு ஆண்களை விட எடை குறைவு. இதனால் உடலில் நீர் அளவும் குறைவு. இக்காரணத்தால் மித-போதை விதிப்படி ஆண்கள் நாளுக்கு இரண்டு பெக்குகள் அடிக்கலாம் என்றால் பெண்களுக்கு ஒன்று மட்டுமே. இந்தியாவில் நகரமயமாக்கல் விளைவால் வேலைக்கு செல்லும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர பெண்கள் பொருளாதார சுயசார்பு பெற்று விட்டாலும், அவர்களுக்கு இன்னும் வழங்கப்படாத சுதந்திரங்களில் மதுவும் ஒன்று. நம் மத்திய\உயர்மத்திய பார்களில் இவர்களுக்கு மட்டும் கலாச்சார வெளி மறுக்கப்படுவது ஏன்?

குடியும் உடல் எடையும் வன்முறையை தூண்டுமா?



குடிக்கும் உடல் எடைக்கும் மேலும் தொடர்பு உண்டு. ஆஜானுபாகுவான நபர்கள் குடிக்கும் போது எளிதில் வன்மம் கொள்கிறார்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. இந்த ஆய்வில் போதையில் இருந்த பல்வேறு எடையை சேர்ந்த நபர்கள் உட்படுத்தப்பட்டார்கள். அவர்களிடம் ஒரு கருவி தரப்பட்டு அதன் பொத்தான்களை அழுத்தினால் கண்ணுக்கு தெரியாத எதிரி ஒருவர் மின்-அதிர்ச்சி அடைவார் என்று பொய்யாக கூறப்பட்டது. ஆய்வு முடிவில் அதிக எடையும் உயரமும் கூடியவர்கள் அதிக முறைகள் மின்–அதிர்ச்சி தர முயன்றது தெரிவ வந்தது. இந்த தமாஷான ஆய்விலும் நமக்கு போதை மனதின் மீது ஒரு சிறு வெளிச்சம் கிடைப்பதை மறுக்க முடியாது.

நுண்நோக்கியின் கீழ் சிகரெட்

மதுவை குறைந்த அளவில் ஏனும் அங்கீகரிக்கும் அறிவியல் புகைப்பழக்கத்தை முழுமையாகவே நிராகரிக்கிறது. புகைப்பழக்கம் எளிதில் அடிமைப்படுத்துவது, புகைக்காதவரையும் பாதிக்கும் அஹிம்சை போக்கு கொண்டது. மிக முக்கியமாக புற்றுநோய் வாய்ப்பை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இத்தனை பாதகங்களில் இருந்தும் மாறுபட்டு சிகரெட்டில் நுண்ணியிர்கள் உள்ளதாய் தற்போது பேசப்படுகிறது. கடந்த வருட செப்டம்பரில் Immunological Research எனும் அறிவியல் பத்திரிகையில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று 5 சிகரெட் நிறுவனங்கள் வெளியிடும் 11 வகையான சிகரெட்டுகளில் நுரையீரல் நோய் ஏற்படுத்தும் நுண்ணியிர்கள் மட்டுமல்ல நுண்ணியிர்கள் உருவாக்கும் நச்சுப்பொருட்களும் உள்ளதாய் சொல்லுகிறது. இந்த ஆய்வை தலைமை தாங்கிய பவுலி எனும் ஆய்வாளர் இந்த உண்மையை சிகரெட் நிறுவனங்கள் நெடுங்காலமாய் அறிந்து வந்துள்ளன என்கிறார். இதற்கு சான்று சிகரெட் நிறுவங்கள் சமீபத்தில் வாங்கி உள்ள காப்புரிமைகள். குறிப்பாக பிலிப் மோரிஸ் இன்கார்பரேசன் வாங்கியுள்ள மூன்று காப்புரிமைகள்.

சிகரெட்டுக்காக பதப்படுத்தப்பட்ட புகையிலையில் உள்ள நுண்கிருமிகள் எண்டோடொக்சின் எனும் நச்சுப்பொருளையும் நைடொரோசமைன் எனும் வேதியல் பொருளையும் உருவாக்குகின்றன. இதில் நைடொரோசமைன்களை சுத்திகரிக்கும் ஒரு செலவு குறைந்த முறைக்கான கண்டுபிடிப்புக்கான காப்புரிமைகள் மீதே நிறுவனங்கள் குறிப்பாக ஆர்வம் காட்டி உள்ளன. சுவாரஸ்யம் என்னவென்றால் பச்சை புகையிலையில் நுண்ணியிர்கள் வேலி போடாது. போதுமான வெளிச்சம் அற்ற, ஈரப்பதமும், வெப்பமும் மிகுந்த கிடங்குகளில் புகையிலை பதப்படுத்தப்படுவது தான் நுண்ணியிர் குடியிருப்புக்கு காரணம் பவுலி கருதுகிறார். இத்தனைக் காலமும் இந்த நச்சு உண்மையை மறைத்து வைத்ததற்காக அமெரிக்க FDA நிறுவனம் இந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர வாய்ப்புள்ளது. ஏற்கனவே சிகரெட் போதைக்கு ஒருவரை அடிமைப்படுத்த நிறுவனங்கள் அமோனியா உள்ளிட்ட பல ரசாயனங்களை பயன்படுத்துவதாக ஒரு சர்ச்சை அமெரிக்காவில் எழுந்து அதிலிருந்து மீள சிகரெட் முதலாளிகளை விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் வாரி இறைக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த அளவுக்கு உடல்நல விழிப்புணர்வுக்கு இந்தியாவில் ஏற்பட வாய்ப்போ அவகாசமோ இல்லை. சிகரெட் பரவலாக்கமோ தடையோ ஆகட்டும், நமது முதலாளிகளும் அரசியல்வாதிகளும் விளம்பரத்தில் ஆரம்பித்து விளம்பரத்திலேயே முடித்துக் கொள்கிறார்கள். இவர்களின் அடிமுடி நம்மால் தேடி அடைய முடியாத படி சிகரெட் புகைமூட்டத்தில் மறைந்துள்ளன.
Read More

Monday, 22 February 2010

உங்கள் கணவரோ மனைவியோ குண்டாக விருப்பமா?



மணிமேகலையில் வரும் காயசண்டிகையின் யானைப்பசியை எளிய சாபம் அல்லது குறியீடு என்றில்லாமல் அதற்கு அறிவியல் காரணங்கள் யோசித்துப் பார்த்தால் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும். மூளைத்திசுக்களில் ஏற்பட்ட காயம் காரணமாக யானைப்பசி ஏற்பட்டிருக்கலாம். அல்லது மரபியல் ரீதியாக மிகு-உணவு உபாதையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் அவர் தோன்றியிருக்கலாம். இப்படி அடங்காத பசிப்பிணி கொண்ட காயசண்டிகையின் தோற்றம் எப்படி இருந்திருக்கும். அவர் உண்ட உணவை உடனே வாந்தி எடுத்திருப்பாரா? அல்லது உடல் பருத்து அதனால் மனச்சோர்வு உற்றிருப்பாரா? இப்படியான ஒரு உபாதை அன்றைய சமூகத்தில் இருந்திருக்கக் கூடும் என்ற ஊகமே சுவாரஸ்யமானது. இன்று நிச்சயம் இது வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும் பெரும் சவால்களில் ஒன்று புலிமியா எனப்படும் இந்த மிகு-உணவு உபாதை. புலிமியா உபாதை கொண்டவர்கள் அளவற்று உண்டபின் அட்சயபாத்திரம் நாடாமல் விரலை தொண்டைக்குள் விட்டு வாந்தியெடுத்தோ அல்லது மருந்துகள் விழ்ங்கி உணவை செரிக்குமுன் வெளியேற்ற முயற்சிப்பர். வேறு சிலர் கடுமையாக உடற்பயிற்சி செய்வார்கள்; உண்ணாநோன்பு இருப்பர். தொடர்ந்து இவர்களிடம் உடல் பருமன் குறித்த குற்ற உணர்வு மற்றும் மெல்லிய உடலமைப்புக்கான அதீக அக்கறையும் இருக்கும். மேலதிகமாக உண்ணவும் ஒல்லியாக இருக்கவும் முரணாக விழைவதே புலிமியா.

அவ்வப்போது கட்டுப்பாடு இன்றி உண்டு சேகரமாகும் சிறிது கவலையை செரிக்க முயல்வது ஒரு நோய்க்கூறு அல்ல. தொடர்ச்சியாக இந்த முரண் பண்பு வெளிப்பட்டாலே நாம் கவலை கொள்ள வேண்டும். உடல்பருமன் மட்டுமல்ல புலிமியா கூட ஒரு குடும்ப உபாதையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தற்போது கூறுகின்றனர். பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கு இந்த கோளாறு இருந்தால் உங்களுக்கும் தொற்றலாம். இதனால் பொலிமியாக்காரர்கள் மருத்துவரீதியாக இதைக் கட்டுப்படுத்துவது அவசியம். அல்லது ஒரு சங்கிலித்தொடர் போல் பரம்பரையே உணவு குறித்த குற்றவுணர்வில் அல்லாடும்.

எனக்கு கல்லூரியில் புஷ்டியாய் ஒரு நண்பன் இருந்தான். அவனது விருப்பங்கள் எனக்கு வினோதமாக பட்டன. பொதுவாக ஒரு குறை கொண்டவர்கள் மாறானவர்களை ஆதர்சமாக கொண்டிருப்பர். குள்ளமான ஆண்கள் உயரமான பெண்களை, கறுப்பானவர்கள், தமிழர் எனும் பட்சத்தில், சிகப்பானவர்களை விரும்புவர். ஆனால் என் நண்பன் குண்டானவர்கள் மீது பிரியம் வைத்திருந்தான். மோகன்லால், டெண்டுல்கர், குஷ்பு போன்றவர்கள் அவர் விருப்பப்பட்டியலில் இருந்ததற்கு திறமையோ அழகோ தவிர்த்த காரணமே இருந்தது. சமீபத்தில் இதைவிட விபரீதமான ஒரு சம்பவம் படித்தேன். எரிக் என்ற அமெரிக்கர் தன் மனைவியின் உடற்கேடு காரணமாய் பருமனான கதை இது.



எரிக்கின் மனைவிக்கு புலிமியா கோளாறு இருந்தது. உணவு மேஜையை நிறைத்தபடி அமரும் மனைவி சகட்டுமேனிக்கு உணவை வெட்டியபடி எரிக்கையும் அதிகமாய் உண்ண தூண்டுவார். தயங்கினால் கடுமையாக வற்புறுத்துவார். அதிகப்படியான உணவுக்கு பின்னும் தான் சிக்கென்று இருப்பதை காட்டி எரிக்கை ஊக்குவிக்க வேறு செய்வார். ஆனால் எரிக்குக்கு ஒன்று தெரியாது. வயிறு பெருக்க தின்ற பின் மனைவி கழிப்பறைக்கு சென்று அத்தனையையும் வாந்தி எடுத்து விடுவார். விளைவு: உணவாசை மிகுந்த மனைவி மெலிய, வயிறு சிறுத்த எரிக் பெருத்தார். மனைவிக்காக உண்டு உண்டு ஒரு கட்டத்தில் 20 கிலோவுக்கு மேலாக வீங்கினார். இந்த பிரச்சனை மேலும் மேலும் தீவிரமாக எரிக் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இது குறித்து விளக்கும் மருத்துவர் செர்பே எரிக்கின் மனைவிக்கு அவரை பழி வாங்கும் நோக்கம் ஏது இருந்திருக்காது என்கிறார். அவர் எரிக்கை தன் மறுபிம்பமாக கண்டிருந்தார். உண்டதை செரிக்காமல் வாந்தியெடுக்க வேண்டிய தன் நிலையை மனவியல் ரீதியாக ஈடு செய்யவே அவர் தன் கணவனை அதிகப்படியாக உண்ணும்படி ஊக்குவித்தார். அடுத்து செர்பே கூறும் விளக்கம் என் நண்பனுக்கும் பொருந்தும். எரிக்கின் மனைவி குண்டாகிடும் தன் கணவனுடன் தன்னை ஒப்பிட்டு திருப்தி கண்டார். அவர் தனக்கு நேர விரும்பாத உடல் பருமனை தன் கணவனுக்கு கடத்தி தற்காலிக நிம்மதி பெற்றார்.
Read More

Thursday, 18 February 2010

மின்னஞ்சல் கட்டுரைகளின் பின்னுள்ள மனவியல்



பென்சில்வேனிய ஆய்வாளர்கள் ஒரு சுவாரஸ்யமான ஆய்வை மேற்கொண்டனர். அதன் முடிவுகள் இணைய வாசகர் குறித்த பார்வையை மாற்றி அமைப்பதாக உள்ளன. ஆய்வாளர்கள் 2008 ஆகஸ்டு முதல் 2009 பெப்ரவரி முதல் நியுயார்க் டைம்ஸ் இணையதளத்தில் இருந்து மின்னஞ்சல் செய்யப்படும் கட்டுரைகளை அலசினர். மொத்தம் 7500 கட்டுரைகள். குறிப்பாக எந்த தலைப்பு மற்றும் வகைமையிலான கட்டுரைகள் எத்தனை மின்னஞ்சல் செய்யப்படுகிறது என்பதை அறிவதே நோக்கம். ஆய்வாளர்கள் செக்ஸ் மற்றும் உணவு குறித்த பத்திகளே அதிகம் விரும்பி மின்னஞ்சல் ஆகும் என்ற முன்முடிவு கொண்டிருந்தனர். நம்மூர் என்றால் சினிமா மற்றும் சர்ச்சை. ஆனால் ஆய்வுமுள் சுட்டியது அறிவியல் மற்றும் தொடர்பான அறிவார்ந்த கட்டுரைகளை. மேலும் ஆய்ந்தால் வாசகர்கள் நேர்மறை நோக்குள்ள கட்டுரைகளை விரும்பியுள்ளார்கள். குறிப்பாக வியப்புணர்வை ஏற்படுத்தும் எழுத்து. அதுவும் வானவியல், paleontology போன்ற அதிக வெளிச்சமற்ற துறை சார்ந்த எழுத்துக்களை மின்னஞ்சல் செய்வதில் மிக்க ஆர்வம் காட்டியுள்ளனர். மான்களின் பார்வைப்புலன் குறித்த கட்டுரைகளின் பரிமாற்றம் எகிறியுள்ளது. இதை விட ஆச்சரியம் நீளமான கட்டுரைகளுக்கு கிடைத்துள்ள மவுசு. பொதுவாக குறுங்கட்டுரைகளே இணையத்துக்கு ஏற்றது என்ற நம்பிக்கை உள்ளது. பீதி மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் கட்டுரைகளும் மின்னஞ்சல் வரிசையில் முன்னணி பெறுகின்றன. ஆய்வாளர்களே வழக்கம் போது இதற்கான காரணங்களையும் யூகித்துள்ளனர். அவை இரண்டு.

1. வாசகர்கள் அறிவார்ந்த கட்டுரைகளை மின்னஞ்சல் செய்வது மூலம் தங்கள் புத்திஜீவித்தனத்தை விளம்பும் முயற்சியாக இருக்கலாம்.

2. தங்களுக்கு மனக்கிளர்ச்சி அடைய வைப்பவற்றை பகிர்வது ஒரு மனிதப்பண்பு.

ஆனால் இவை போக, வாசகர்களின் பொதுவான அறிவு விழைவு கவனிக்கத்தக்கது என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் இந்த ஆய்வு ஒரு இணையதளத்தின் கட்டுரைகளை மட்டுமே கருத்திற்கொண்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும். மேலும் அறிவியலை என்றும் போற்றி வந்துள்ள மேற்கத்திய மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. நம்மூர் வாசகர்கள் எப்படி?

இணையத்தில் இலக்கியத்துக்கு உலகத்தமிழரிடம் கிடைத்த அபார ஆதரவால் ஒரு போலியான தோற்றம் உருவானது. தீவிர இலக்கியத்துக்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என்று கருதி குமுதம் தீராநதியை ஆரம்பித்து ஏமாந்ததாக தளவாய் சுந்தரம் ஒருமுறை குறிப்பிட்டார். “கால்களை விரித்து வைத்து” போன்ற கடவுச்சொற்களுடன் கூகுளில் இருந்து தன் இணையதளத்துக்கு மேலதிக வாசகர்கள் வருவதாய் சமீபத்தில் ஒரு சுயஆய்வு செய்து கண்டுபிடித்தார் ஜெயமோகன். (இத்தோடு உயிரோசைக்குள்ளும் இந்த சொற்றொடருடன் தேடும் வாசகர்கள் திமிறுவார்கள்) தமிழ்மகன் உயிரோசையில் எழுதிய சினிமா பத்திகள் வலைப்பதிவர்களிடம் பெரும் கவனம் பெற்றதை கவனித்திருக்கிறேன். அதற்கு அடுத்து ஜெ.மோ-மனுஷ் சர்ச்சை பற்றிய பத்திகள் பரபரப்பாக படிக்கப்பட்டுள்ளன. தமிழ் இணைய வாசக தளம் மீது இத்தகைய ஒரு ஆய்வு அவசியம் தேவை.
Read More

3d-இன் இரண்டு பக்கங்கள்: அவதாரும் கண்வலியும்



3d எனப்படும் முப்பரிமாணப் படங்களுக்கு ஹாலிவுட்டில் தனித்த வரலாறு உண்டென்றாலும் நம் கற்பனையை பாதித்தவை மை டியர் குட்டிச்சாத்தானும் அவதாரும். மேற்கில் 3d டி.வி தொடர்கள் பல ஒளிபரப்பப்பட்டுள்ளன. அத்தகைய தொடர்களின் போது டி.வி திரையின் ஓரமாய் குறிப்பு அளிக்கப்படும். உடனே பிரத்தியேக கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். இப்போது 24 மணிநேர முப்பரிமாண டி.வி சேனலை ஸ்கை நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கண்ணாடி தேவைப்படாத 3d தொழில் நுட்பமும் அண்மையில் உள்ளது. பொதுவாக முப்பரிமாண படைப்புகளுக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பு பானசோனிக், சோனி, பிலிப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 3d தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்த பெரும் உற்சாகம் அளித்துள்ளது. இவ்வருடம் வெளிவரப் போகும் முப்பரிமாண தொலைக்காட்சி இந்தியர்களுக்கு வெறும் செய்தி சுவாரஸ்யமாக மட்டுமே இருக்கும். அதிக விலை, 3d புளூரே டிஸ்குகள் இந்திய சந்தையை எளிதில் அடையாமை, 3d தொழில்நுட்பத்தை இந்திய காட்சி ஊடகங்கள் வரிப்பதற்கான சாவகாசம் மற்றும் வணிக சாத்தியம் ஆகியன காரணங்கள். தோற்ற அளவிலேனும் முப்பரிமாண கணினி மற்றும் கைப்பேசிகள் நம் எதிர்கால தொடர்புலகை அணுக்கமாக்க போகின்றன் என்பதில் சந்தேகமில்லை. எளிதில் நமது அன்றாட உலகில் 2d மெல்ல மெல்ல மறைந்து 3d ஆக்கிரமிக்கும். பள்ளிகளில் குழந்தைகளுக்கு அறிவியலை முப்பரிமாண திரைகளில் கற்பித்தால் அபாரமான ஈடுபாட்டை உருவாக்கலாம். அதே போன்று 3g கைப்பேசி காட்சி அரட்டையில் விடப்படும் 3d முத்தங்களோ அறைகளோ நம் பிரக்ஞையில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுத்தும்? நம் மொழிப்படிமங்கள் எப்படி மாறும்? இப்படி கற்பனை செய்து கொண்டே போவதற்கு ஒரு வேகத்தடை தேவையுள்ளது. இப்போதைக்கு முப்பரிமாண காட்சிகளின் பக்கவிளைவுகள்.

உலகம் முழுக்க அவதார் திரைப்படம் மனதை பிரமிக்க வைத்த அளவு உடலையும் பாதித்துள்ளது. இப்படத்தை முப்பரிமாணத்தில் பார்த்தவர்களில் பலருக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி உனர்வு, பார்வை மங்கல் போன்ற பல உபாதைகள் ஏற்பட்டுள்ளன. ஏன்?

3d என்பது ஒரு செயற்கையான காட்சி அனுபவம். விளக்குகிறேன். இயல்பு வாழ்வில் மேலிருந்து கீழாக அல்லது தூரத்திலிருந்து பக்கத்திற்கு வரும் பொருளை தெளிவாக காண நம் கண்ணின் லென்ஸ் தன்னை தகவமைக்கும். மேலும் விளங்க உங்கள் சுட்டு விரலை தலைக்கு மேலிருந்து மூக்கு நோக்கி இறக்குங்கள். கண்கள் சுழல்கின்றன. இப்படி சுழன்று உள்நகரும் போது நம் லென்ஸ் உருமாறுகிறது. ஆனால் முப்பரிமாணக் காட்சியின் போது ஒரு பக்கம் லென்ஸ் தகவமைந்தாலும் மற்றொரு பக்கம் நிலையான திரையிலும் கண்ணை நிலைக்க வைக்க வேண்டியுள்ளது. அன்றாட வாழ்க்கையிலும் இருவேறு திசையிலுள்ள பொருட்களில் பார்வையை நிலைக்க வைப்பது கண்ணுக்கு களைப்பானது என்பதை கவனியுங்கள். 3dயின் போது இவ்வாறு செயற்கையான விழியசைவுகள் தேவைப்படுவதால் கண்கள் களைப்பாகி வெவ்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.

எதிர்கால 3d யுகத்தில் அறிவியலுக்கு இது ஒரு சவால் தான். ஒவ்வொரு சவாலை வெல்லவும் ஒரு மார்க்கம் நிச்சயம் உண்டு. பார்மசுயூட்டிக்கல் நிறுவனங்களின் தவறை தொழில்நுட்ப நிறுவனங்கள் தவிர்க்க பொறுமை காக்க வேண்டும். கத்திரிக்காவில் இருந்து முப்பரிமாணம் வரை புதிய தொழில்நுட்பங்கள் மக்களிடம் செல்லும் முன் அரசாங்கம் கவனமாக மற்றும் கராறாக பரிசீலிக்க வேண்டும்.
Read More

Thursday, 18 June 2009

போலியோ: ஒரு பாம்பு--ஏணி ஆட்டம்




"காட்பாதர்" பட புகழ் பிரான்சிஸ் பொர்டு கப்போலா குழந்தைப் பருவத்தில் போலியோவால் தாக்கப்பட்டார். அந்த அனுபவத்தை சொல்கிறார்:
"ஒன்பது வயதில் போலியோ காரணமாய் என்னை ஒரு அறையில் பூட்டி வைத்தார்கள். அது குழந்தைகளுக்கு பரவும் நோய் என்று நம்பி பிற குழந்தைகளிடம் இருந்து என்னை விலக்கி வைத்தார்கள். நண்பர்களுக்காகவும், உடனிருப்புக்காகவும் ஏங்கியபடி படுக்கையில் கட்டுண்டு கிடந்தது நினைவுள்ளது"
கலாச்சார முன்முடிவுகள் காரணமாய் குறிப்பிட்ட சாதிகளை ஒடுக்கும் சமூகம் அறிவியல் விழிப்புணர்வின்மையால் ஊனர்கள் விலக்கி வைத்து தனிமைப்படுத்துகிறது. இங்கு நான் எடுத்தாண்டுள்ள பகுதியில் கப்போலா தனது உற்றமும், சுற்றமும் போலியோ "குழந்தைகளுக்கு பரவும் நோய்" என்ற மூட நம்பிக்கை கொண்டிருந்ததை குறிப்பிடுகிறார். இன்றும் நம் சமூகத்தில் ஊனம் பற்றின குறைபட்ட புரிதலே உள்ளது. பல் பொடி, பஸ்ரூட், பால் விலை போன்ற அன்றாட வாழ்க்கைத் தகவல்களில் மட்டுமே மக்களுக்கு ஆர்வம். மிகவும் விசித்திரமாக, படித்தவர்களில் பலரிடம் இந்த மனப்பான்மை உள்ளது. என் அண்டை வீட்டு டவுன் சிண்டுரோம் குழந்தையை எங்கள் தெருவில் அனைவரும் பைத்தியம் என்றே குறிப்பிடுகின்றனர். இன்போசிஸில் பணி புரியும் என் மனைவியின் மாமாவுக்கு அனைத்து போலியோக்காரகளும் சக்கர நாற்காலியில் தள்ளிச் செல்ல வேண்டியவர்கள் என்று புரிதல். என் திருமணத்தை அவர் எதிர்க்கக் காரணம் தமாஷானது. அவர் என் மனைவியிடம் சொன்னார்: "அபிலாஷுக்கு தேவை ஒரு மனைவி அல்ல, கூட மாட அவனுடன் இருக்க ஒரு செவிலி. அவனை கட்டிக் கொண்டால் வீல் சேர் தள்ளியே முடங்கி விடுவாய்". சாதி, மதம், பால் போன்ற வேறுபாடுகளால் நாம் பிளவுபடுவதற்கும் அன்னியமானவற்றை அறிய அணுவும் ஆர்வமில்லாத கிணற்றுத் தவளைத் தன்மையே முக்கிய காரணம். ரோபோட்டிக்ஸ் மேற்படிப்பு படிக்க விரும்பும் என் மனைவியின் தம்பியை கால் கழுவாமல் வீட்டுக்குள் வந்ததற்கு கண்டித்தால் அவன் பதில் "எனக்கு என்ன தீட்டா?". அவனுடன் வாக்குவாதம் நேரும் போது என் மாமியார் கூறுகிறார்: "நீ ஒரு ...பயல்". என் மாமியார் கேந்திர வித்தியாலயா ஆசிரியர். சரியான தகவல்கள் உண்மையை கட்டுவிக்கின்றன; உண்மை மனவிரிவு தருவது. இந்த தகவல் யுகத்தில் எளிய தகவல்களை பலவற்றை வசதியாக தவிர்க்கிறோம்.
போலியோ பற்றின என் பெற்றோரின் அறியாமை என் பால்யம் முழுதையும் அலைகழித்தது.
பள்ளி நிர்வாகம் என்னை எல்.கே.ஜியில் தோற்கடித்தது. வேறு பள்ளிக்கு மாற்றி விடுமாறு கேட்டுக் கொண்டது. காரணம் நான் படிக்காதது அல்ல: "பையனை சதா கண்காணிக்க முடியாது, விழுந்து கிழுந்து தொலைத்தால், நாங்கள் பொறுப்பாக முடியாது". இத்தனைக்கும் கன்னியாஸ்திரிகள் சேவை அடிப்படையில் நடத்தின கல்வி நிறுவனம். பொது இருக்கையில் என்னால் அமர முடியாது என்று பெற்றோரும், நிர்வாகமும் அபத்தமாய் நம்பியதால், ஒரு வருடம் அப்பள்ளியில் என்னை தனி இருக்கை, மேசையில் ஓரமாய் அமர்த்தினார்கள். தனியாய் இருந்த காரணத்தால் என்னிடம் யாரும் பேசவில்லை. புதுப்பள்ளியில் சேர்த்த பின்னரும் இதே நிலைமை. பத்தாவது வயது வரை எனக்கு பேச, பழக நண்பர்கள் இல்லை.
இளம்பிள்ளை வாதம் இளம்பிள்ளைகளை மட்டும் பாதிக்கிற நோய் அல்ல. வளர்ந்தவர்களுக்கும் போலியோ வரும்.
குழந்தைகளில் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் போலியோவால் வாதம் வரும் என்றால் வளர்ந்தவர்களில் எழுபத்தைந்தில் ஒருவருக்கு "இளம்பிள்ளை வாதம்" வரலாம். போலியோ வாதம் கை, கால்களின் நோய் அல்ல. மைய நரம்பு மண்டலத்தை வைரஸ் தாக்குவதால் நேர்வதே இது. மேலும் நுட்பமாய் சொல்வதென்றால் முதுகுத்தட்த்தில் உள்ள கிரே மேட்டர் எனும் பகுதியின் மோட்டார் நரம்பணுக்கள் போலியோ கிருமியால் அழிக்கப்படுகின்றன. இதனால் உறுப்புகளுக்கும் மூளைக்குமான தொடர்பு அறுகிறது. தகவல்கள் போய் சேராமல், மூளையின் தூண்டுதல் இல்லாமல் கை, கால்கள் சூம்பும், வலுவிழக்கும், கட்டுப்பாடின்றி துவளும், இறுதியில் வாதம் நேரும். போலியோ நோயில் மூன்று வகைகள் என்றாலும் முதுகுத்தண்டு போலியோ தான் பெரும்பாலானோரை பாதிப்பது. ஆதிகிரேக்கர்கள் இதை அறிந்திருந்தார்கள்: போலியோ மெலிடில் எனும் கிரேக்க வார்த்தைகளுக்கு "சாம்பல்" + "வீக்கம்" என்று பொருள் கொள்ளலாம். இதில் "சாம்பல்" முதுகுதடத்தின் கிரே மேட்டரைக் குறிக்கிறது. "வீக்கம்" போலியோ தாக்குதலில் கிரே மேட்டா¢ல் காணப்படும் வீக்கத்தை சொல்கிறது. நம்மில் பலருக்கு போலியோ ஊனத்தில் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மோட்டார் மட்டுமே பாதிக்கப்படுகின்றன; உணர்வு நரம்புகள் அழிவதில்லை என்ற தகவல் தெரிவதில்லை. ஆதிகிரேக்கர்கள் போல் வாதத்துக்கும், காயத்துக்குமான வேறுபாடு பொதுமக்களில் படித்தவர்களுக்கே தெரிவதில்லை. போலியோ ஊனர்களின் கால்களில் உணர்விருக்காது அல்லது நடக்கையில் பயங்கரமாக வலிக்கும் போன்ற மூட நம்பிக்கைகளை இவர்கள் கொண்டுள்ளார்கள்.
என் பெற்றோர்களுக்கு போலியோ வாதம் என்பது கால்களின் பலவீனம் என்ற தவறான புரிதல் இருந்தது. அவர்கள் சந்தித்த பல புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியர்களும் அதையே கூறினர். விளைவாக என் வாழ்வின் முதல் ஐந்து வருடங்கள் எண்ணை தடவப்பட்டு, ஊறுகாய் போல் ஊறிக் கிடந்து கழித்தேன்.
தோலோடு போகும் எண்ணெய் எப்படி நரம்புகளை உயிர்ப்பிக்கும் என்ற எளிய கேள்வியை இன்னமும் யாரும் இந்த மூட எண்ணெய் வைத்தியர்களிடம் கேட்டபாடில்லை. தேனாம்பேட்டை சேர்ந்த என் நண்பர் கால்களுக்கு இது போன்ற ஒரு நரம்பிய பாதிப்பால் வாதம் வந்து சூம்பி விட்டது. அவற்றை பழையபடி சதைபிடிக்க வைக்கிறேன் என்று சமீபமாய் ஒரு ஆயுர்வேத மருத்துவர் போலியாய் வாக்குறுதி தந்தார்; நண்பர் அதை நம்பி கோயம்பத்தூரில் அம்மருத்துவரது மருத்துவமனையில் சேர்ந்தார். ஒரு மாதம் எண்ணெய் பிழிவு, பிரத்தியேக உணவு, கஷாயம் என்று கழித்தார். கால் ஒரு இஞ்சு கூட பருக்கவில்லை. மருத்துவரை என் நண்பர் வினவ அவர் "ஏறி மிதித்து விடுவேன்" என்று மிரட்டியிருக்கிறேன். 15,000 ரூபாய் இழந்தது பரவாயில்லை என்று ஓடி வந்து விட்டார். அங்கு மாட்டிக் கொண்ட நூற்றுக்கணக்கானோர் இப்போதும் டேப்பால் தங்கள் கால்களை அளந்தபடி காத்திருக்கிறார்கள். போலியோ தடுப்பூசி போடாததை பற்றி நான் என் பெற்றொரை குற்றம் சாட்டினது இல்லை. அவர்களது அறியாமையால் பிற்பாடு பல போலி வைத்தியசாலைகளின் எண்ணெய் வீச்சத்தில், இருளில் என் பால்யம் ஆவியானதை மன்னிக்க முடிவதில்லை. உலகின் ஆகப்பெரும் குற்றம் மடமைதான், குறிப்பாய் படித்தவர்களது அறியாமை: என் அப்பா ஒரு வங்கி அதிகாரி.
என் வாழ்வின் முதல் 15 வருடங்களை எந்த அடிப்படையும் அற்ற சிகிச்சை முறைகளில் வீணடித்திருக்கிறேன். ஒரு சம்பவம் மட்டும் கூறுகிறேன்.
எங்களூரில் ஒரு வைத்தியர் திடீரென்று அவதரித்தார். அவர் தனது குரு இமயமலையில் தவமிருக்கும் ஒரு ரிஷி என்று கூறிக் கொண்டார். அவரை என்னிடம் அழைத்து வந்தார்கள். அப்போது தரையில் ஊர்வதால் எனது முட்டிப் பகுதி கறுத்திருந்தது. அந்த தோல் கறுப்பை ஒரே நாளில் மாற்றி விடுகிறேன் என்று அவர் வாக்களித்தார். பிறகு காலை நீவிப் பார்த்தவர் மூன்றே மாதத்தில் என் வாதத்தை குணப்படுத்தி விடுவதாய் சொல்லி எனக்கு சிகிச்சை ஆரம்பித்தார். என் பசியை பயங்கரமாய் தூண்டும்படி ஒரு லேகியம் தந்தார். நான் கர்பிணிப்பெண் போல் தினசரி இரண்டு மடங்கு உணவு புசித்தேன். சாப்பாடு மூலம் என் கால் தசைகளை வளர்த்து என்னை நடக்க வைப்பதே அவர் நோக்கம். காலுக்கு எண்ணெய் தேய்த்து இரண்டு மணி நேரம் மரக்கட்டிலில் படுக்க வைத்தார். கடுமையான உணவுக் கட்டுப்பாடுகள் வேறு. உணவில் புளி, உப்பு, எண்ணெய் சேர்க்கக் கூடாது. மூன்று மாதத்தில் 55இலிருந்து என் எடை 75க்கு தாவியது. கால் மட்டும் பெரிய உடலில் குழந்தை போல் சிறிதாய். மூன்றாவது மாதம் அந்த மகாவைத்தியர் ஊரிலிருந்து மாயமானார். 75 கிலோ எடையை குறைக்க எனக்கு அடுத்து பத்து வருடங்கள் ஆகின. இந்த அதிக எடை காரணமாய் பல பெண்கள் என்னை நிராகரித்தார்கள். கழிவிரக்கத்தில் நான் இலக்கியவாதி ஆனேன். அந்த லேகியம் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.
தண்டுவடத்தின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளது, எவ்வளவு வைரஸ்கள் தாக்கின, பாதிக்கப்பட்டவாரின் எதிர்ப்பு சக்தி ஆகியன பொறுத்து எப்பகுதியில் (கை, கால்) வாதம் வரும் மற்றும் வாதத்தின் தீவிரம் என்ன என்பன முடிவாகும். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, தரையில் தவழ்ந்தபடி, முட்டியில் கையூன்றியபடி பல விதங்களில் ஊனர்கள் இயங்குவதை பார்த்திருப்பீர்கள். கால் முழுக்க பாதிக்கப்பட்டவர்களும் கூட காலிப்பர் அல்லது பிரேஸ் எனும் கருவியை பூட்டிக் கொண்டு நடக்கலாம். அது அவசியமும் கூட. காலிப்பர் பலவீனமான கால்களின் பக்க வலுவுக்காக பூட்டப்படுவது. இது காலுக்கு பாதுகாப்பும் அளிக்கும். இதில் இரண்டு வகை. இரும்புக் கம்பிகளால் செய்யப்படும் கனமான பழைய வகை; பிளாஸ்டிக் போல தோற்றமளிக்கும் ஆனால் உடையாத மூலப்பொருளால் செய்யப்படும் லேசான நவின கருவி. பலரும் பழைய வகை இரும்பு காலிப்பரைதான் பயன்படுத்துகிறார்கள் (விலை ரூ 1000 இருந்து 3000 வரை). நவீன காலிப்பர் கொஞ்சம் செலவு அதிகம் (ரூ 10,000). ஆனால் பலரும் காலிப்பரை பயன்படுத்துவதில்லை. போலியோ பாதித்தவாரின் கால் எலும்புகள் வலுவற்றவை. சாதாரணமாய் வழுக்கி விழுந்தால் எலும்புகள் முறிந்து, பிறகு காயம் ஆற மாதங்கள் ஆகும். காலிப்பர் அணிவது வீழ்ச்சியின் போது காலை முறிவிலிருந்து காப்பாற்றும். அது மட்டுமல்ல போலியோவால் வளைந்த முட்டிப்பகுதி வளைந்திடாமல் தடுக்கவும் இது அவசியம். சினிமாவிலும், நிஜ்வாழ்விலும் நீங்கள் பார்க்கும் ஊனர்கள் கைகளை முட்டியில் ஊன்றி அல்லது சிறு சாய்வுடன் நடப்பவர்களே. காரணம்: காலிப்பர் கருவியின் கனம், அது காலை கட்டுப்படுத்துவது பிடிக்காமல் போவதால் அதைத் தவிர்ப்பது ஒரு புறம், பெற்றோர்களே அதை ஊக்குவிக்காதது மற்றொரு புறம். பொதுவாக இக்கருவியை அணியாமல் நகர்வது இயல்பானது, சுதந்திரமானது என்றொரு தவறான எண்ணம் உள்ளது. அசோக் நகரில் உள்ள பல்லவா ஆஸ்பத்திரியின் எலும்பு சிகிச்சை மருத்துவர் அச்சுத ராமராஜு 18 வருடங்கள் போலியோக்காரர்களுக்கு சிகிச்சை அளித்தவர். என் காலிப்பரை கவனித்த அவர் "நீங்கள் இதை அணிவது ரொம்ப பாராட்டத்தக்கது ... ரொம்ப பேர் காலிப்பர் அணியாது காலை முறித்துக் கொண்டு, எளிதில் குணமடையாமல் என்னிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள்" என்றார். நான் அவரிடம் ஒன்றை சொல்லாமல் மறைத்தேன்: 25 வயது வரை நான்கூட காலிப்பரை தவிர்த்து முட்டியில் ஊன்றி நடந்து வந்தேன், ஒரு விபத்து நடக்கும் வரை.
நான் முட்டியில் கால் ஊன்றி நடக்க ஆரம்பித்தது 12 வயதில். என் மொத்த குடும்பமும் இதை ஆமோதித்தது. இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அவர்கள் தாம் செய்தது பெரும் தவறு என்பதை உணரவில்லை. இப்படி நடந்ததில் நான் வழக்கமாய் மாதம் ஒருமுறை விழுந்து கால் சுளுக்கிக் கொள்வேன். ஆனாலும் காலிப்பர் மீதான வெறுப்பால் தொடர்ந்து அதை அணிவதை தவிர்த்தேன். 13 வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள் விடிகாலை கழிப்பறைக்கு செல்லும் போது எப்போதும் போல் வழுக்கி விழுந்தேன். ஆனால் இம்முறை சுளுக்காமல் முட்டி எலும்பு முறிந்தது. காயம் ஆறி நடக்க எனக்கு 6 மாதங்கள் ஆகின. கிடைத்த முதல் வேலை பறி போனது. அதன் பிறகு இன்று வரை இரவு தூங்கும்வரை நான் காலிப்பரை கழற்றுவதில்லை.
என் பக்கத்து வீட்டில் ஒருவருக்கு போலியோ பாதிப்பால் கால் வாதம். ஆனால் சைக்கிள் ஓட்டுவது, ஏறித்தாவுவது, ஓடுவது போன்ற பல சாதனைகளை செய்தார். அவரோடு ஒப்பிட்டு அப்பா என்னிடம் சொல்வார்: "அவன் ஏழை, அதனால் ஊனத்தை பொருட்படுத்தாது நடக்கும் அவசியம், ¨தைரியமாக நடக்கிறான். உன்னை சொகுசாக வைத்திருக்கிறோம் என்பதால் இருந்த இடத்தில் சுகம் கண்டு விட்டாய். நடக்க நீ முயற்சி எடுப்பதில்லை; உனக்கு மன ஊக்கம் இல்லை". அப்புறம் அவர் எம்.ஜி.ஆர் தொண்டையில் சுடப்பட்டு விட்ட பின்னரும் "தத்ததின் தத்தமே" என்று கடுமையாய் முயன்று பேசிய்தை மிமிக்ரி பண்ணிக் காட்டுவார். என்னை தூக்கி நிறுத்தி விட்டு, "உன்னை அறிந்தால் ..., நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா..." போன்ற பாடல்களை பாடி "வா... ஓடி வா" என்று தள்ளிப் போய் நின்று ஊக்கமூட்டி அழைப்பார். முடியாமல் நான் சப்பென்று அமர மறுபடி வைவார். பிறகு பிடித்து நடப்பதற்கு பக்கவாட்டில் கழிகளை கட்டி அதில் பயில வைத்தார். இத்தனை கொடுமைக்கும் காரணம் அவருக்கு ஒரு முக்கியமான தகவல் தெரியாமல் இருந்ததே: நான் நடக்காததற்கும், அயல் வீட்டு சிறுவன் தாவிக்குதித்ததற்கும் காரணம் காலுக்கும், மூளைக்குமான நரம்பியல் தொடர்பே, ஊக்கமல்ல.
போலியோ பாதிப்பால் மூளைத்தண்டு மற்றும் முதுகுத்தடத்தில் பல மோட்டார் நரம்பணுக்கள் இறந்து விடும். ஆனால் பிற்பாடு அவற்றில் மீதமுள்ள நரம்பணுக்களில் முளைகள் கிளைக்கும். இவை வீங்கின நரம்பணுக்கள் ஆக மாறும். 200 தசை செல்களை மட்டுமே கட்டுப்படுத்தி வந்த ஒரு ஒற்றை நரம்பணு (முளை) இப்போது 1000 செல்களை வரை கட்டுப்படுத்தி அதிகப் பணி செய்யும். இந்த முளை நரம்பணுக்களால் தான் போலியோ பாதிக்கப்பட்டு ஒரு வருடமான பின்னும் சிலர் நடக்கும் திறன் பெறுவது. இந்த நரம்பு முளைகள் இவர்களின் கால் தசைகளுடன் மூளைக்கு தொடர்பு ஏற்படுத்திட, கால்கள் உயிர்க்கும், வளரும், வலுப்பெறும். என் பக்கத்து வீட்டு ஊனருக்கு இதனால்தான் நடக்கவும், ஓடவும், சைக்கிள் மிதிக்கவும் முடிந்தது; இதில் மனவலுவை கொண்டாட ஒன்றும் இல்லை.
எனக்கு ஆரம்பத்தில் இரண்டு கால்கள் செயலிழந்தாலும், மேற்கூறின முளை நரம்பணுக்கள் தோன்றி ஓ.டி செய்ததால் வலது கால் ஓரளவு செயலூக்கம் பெற்றது. காலின் மிதிக்கும் தசைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், தூக்கும் திறன் கிடைக்கவில்லை. அந்த தசைகளுக்கு நரம்பியல் தூண்டுதல் இல்லை. இதனால் என்னால் இரண்டு சக்கர வாகனத்தை சமனிலை தக்கவைத்து ஓட்ட முடியாது. கூட இரண்டு சக்கரங்கள் பொருத்துவது அவசியம் என்று கருதினேன். ஆனால் என் பெற்றோர், உறவினர், அண்டை அயலார் நான் தைரியம் வளர்த்துக் கொண்டு இரண்டு சக்கர வண்டிதான் ஓட்ட வேண்டும் என்பதில் விடாப்பிடியாய் இருந்தனர். நான் வண்டி ஓட்ட தயாரான கதை சுவாரஸ்யமானது, சற்று கசப்பானதும் கூட.
பெற்றோர்களும், உறவினர்களும் இரண்டு சக்கர வண்டியை ஓட்டிப் பழக எனக்கு ஒரு வருடம் அவகாசம் அளித்தார்கள். நாகர்கோவிலில் ஒரு ஊனப் பெண் இரண்டு சக்கர ஸ்கூட்டரை லாவகமாக ஓட்டி பிரபலமாக இருந்தாள். அவளிடம் என்னை ஒப்பிட்டு அடிக்கடி பேசி வந்தவர்கள் ஒரு நாள் அவளைக் காட்ட அவள் வீட்டுக்கே அழைத்துப் போனார்கள். அந்த அழகான பெண் ஒரு காலில் நவீன பாணி காலிப்பர் அணிந்திருந்தாள். அதில் ஆட்டோமெட்டிக் லாக் எனும் அமைப்பு இருந்தது. அவள் முன்னங்காலை அழுத்தினால் முட்டி மடியும், நிமிர்த்தினால் பழையபடி நேராக பூட்டி விடும். சுலபமாக அவள் பலமுறை ஏறி ஓட்டிக் காமித்தாள். அவளது மற்றொரு காலில் செயல்திறன் இருந்ததை, அவள் நவீன பாணி கால் கருவி அணிந்திருந்ததை யாரும் கவனிக்க வில்லை. மாறாக "ஒரு பொம்புளப் புள்ள ஓட்டுறாப் பாரு, உனக்கென்ன பயம்" என்று என் தலையில் குட்டினார்கள். தன்மானத்துக்காக முயற்சிப்பதாய் சத்தியம் செய்தேன். தினமும் என் அத்தான் எனக்கு ஸ்கூட்டர் பழக்கினார். நான் ஓட்டி வருவது பார்த்தால் சாலையில் சிதறி ஓடினார்கள். ஒரு நாள் விபத்தானது. அத்தானுக்கு விரல் முறிய, நான் தப்பித்தேன். எனக்காக வண்டியில் இரண்டு சக்கரங்கள் அதிகப்படியாய் பொருத்துவது தான் நல்லதென்று அன்று என் குடும்பத்தினர் முடிவு செய்தார்கள். இன்று வரை அதே வண்டியைத் தான் ஓட்டுகிறேன். ஒரே முறை இரண்டு சக்கர வண்டியில் காற்றைக் கிழித்துப் போவதாய் நான் கனவு கண்டதைத் தவிர.
போலியோ என்றால் கை, கால் முடங்கிப் போகும் கொடிய வியாதி, தடுப்பூசி போடாவிட்டால் கட்டாய ஊனம் போன்ற கற்பிதங்கள் பல உள்ளன.
தடுப்பூசி போடாமல் விட்டால் போலியோ வாதம் வரும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. போலியோ நரம்பு மண்டலத்தையோ தசைகளையோ தாக்கும் வழக்கமுள்ள நோய் கூட அல்ல. போலியோ கிருமிக்கு அப்படியான உத்தேசம் ஒன்றும் இல்லை. வாய் அல்லது ஆசன துளை வழி உட்புகும் இக்கிருமி ஜீரண-சிறுகுடல் பிரதேசங்களை தான் முதலில் ஆக்கிரமித்து பெருகுகிறது. தன் தொகை ஸ்திரப்பட்டதும் அது ரத்தத்தில் கலந்து உடலின் பல பாகங்களுக்கு பயணமாகும்; அப்போது மிக எதேச்சையாக இவ்வைரஸ் பாதை திரும்பி மைய நரம்பு மண்டலத்தை அடைந்து தாக்குகிறது. தாக்கப்பட்டவரில் மூன்று சதவீதத்தினரின் உடலில் மட்டுமே இந்த போக்குவரத்து திருப்பம் நடக்கிறது. இதனால் இக்கிருமிக்கு எந்த லாபமும் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். போலியோ வைரஸ் எனும் ஜீரண-சிறுகுடல் உபாதைக் கிருமியின் இந்த விபரீத நிரல் மாற்றத்தின் காரணம் இன்னமும் அறிவியல் அறிஞர்களுக்கு புரியவில்லை.
இந்த மூன்று சதவீதத்தினரில் ஆயிரத்தில் ஒருவருக்கே கை, கால் செயலிழக்கின்றன. மிச்ச நபர்களுக்கு அசெப்டிக் மெனிங்கிடிஸ் எனும் உபத்திரவமில்லாத சில நோய் அறிகுறிகள் தென்படும்: தலைவலி, உடல் வலி, சோர்வு, வயிற்று வலி இப்படி. சில நாட்களில் வந்த சுவடே தெரியாமல் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள். அனேகமாய் இதைப் படிக்கும் உங்களில் சிலரை போலியோ தாக்கி இருக்கலாம். ஆனால் மைய நரம்பு மண்டலத்தை தாக்காமல் சின்ன உபாதைகளுடன் மறைந்திருக்கும்.
கை, கால் செயலிழப்பு கூட பாதி பேருக்கு தற்காலிகமே. ஒரு மாதத்தில் சரியாகி விடும். மிச்சத்தில் கால்வாசி பேர்கள் குறைவான பாதிப்புகளுடனும் தப்பி விடுகின்றனர். மூன்று சதவீதத்தில் கால்வாசியினருக்கே கடுமையான வாதம் ஏற்படுகிறது. இந்த விதத்தில் மரபணு ரீதியாய் வரக்கூடிய சர்க்கரை நோய், புற்று நோய், மாரடைப்புக்கும் போலியோவுக்கு பெரிய வேறுபாடுகள் இல்லை. சில நேரங்களில் தாறுமாறாய் விரையும் லாரி சாலையிலிருந்து கட்டுப்பாடிழந்து திரும்பி குடிசை டீக்கடையில் புகுந்து, விடிகாலைப் பனியில் எழுந்து கம்பளி போர்த்தியபடி, டீ உறிஞ்சியபடி கனவு கண்டு இருந்தவர்கள் மீது ஏறுவது போன்றது போலியோ ஊனம். இது மிகச்சிலரில் சிலரை மட்டுமே முடக்குகிறது.
தி. நகர் கல்யாணி கவரிங் கடை அருகே நடைபாதையில் ஒரு மாமாவிடம் கறுப்புக் கண்ணாடி வாங்கினேன். அவர் கேட்டார்: "தம்பி உங்களுக்கு விபத்தினால இப்படி ஊனம் ஆச்சா?". "ஆமாம்". அவர் சேரன் போன்ற உதட்டை சுளித்துக் கொண்டு தொடர்ந்தார்: "எல்லாம் விதிப்பா! கார் விபத்தில என் கால் போச்சு; இப்பிடி தெருவுக்கு வந்துட்டேன்...". திரும்பும் போது என் மனைவி கேட்டாள்: "ஏன் பொய் சொன்னே?"
நான் சொன்னேன்: "பொய்யல்ல, உண்மைதான்!"
ஆங்கில உரை நடையாளர் சார்லஸ் லாம்ப் சொன்னார்: "வாழ்வை திருப்பிப் பார்க்கும் போது சில பல நிகழ்வுகள் மட்டும் சிறிதே மாறியிருந்தால் நம் வாழ்க்கை முழுக்க வேறாக இருக்குமே என்று தோன்றும். எனக்கு என் வாழ்வின் முக்கியமான கட்டங்களை திருத்தி எழுதும் வாய்ப்பை கடவுள் தந்தால் பயன்படுத்த மாட்டேன். அப்படி மாற்றி அமைத்தால் அது என் வாழ்வாகாது, நான் நானாகவும் இருக்க மாட்டேன்". நமது சிக்கலான வாழ்வின் மற்றொரு சிடுக்கு மட்டுமே நோய்மை.
நரம்பணு முளைகளின் அதிக பணியால் போலியோ பாதிப்பாளர்கள் கை, கால்களில் இயங்கும் திறனை மீண்டும் பெறுவதை குறிப்பிட்டேன். ஆனால் வருடக்கணக்கான ஐந்து மடங்குப் பணியால் ஒரு கட்டத்தில் இந்த முளைகள் பலவீனமாகி இறந்து விடும். இதனால் படுக்கையிலிருந்து மீண்டு உலகை துடிப்பாக எதிர்கொண்டவர்கள் படுக்கைக்கு திரும்ப நேரும். இந்நிலையை பின்-போலியோ நோய்க்குறி (post-polio syndrome; pps) என்கிறார்கள். வாழ்வின் உச்சகட்ட குரூரம் இப்படி தந்து பறிக்கும் தந்திரம் தான். விஞ்ஞான புனைகதை இலக்கிய நாயகனான ஆர்தர் சி கிளார்க் ("2001: ஸ்பேஸ் ஒடிசி") ஒருமுறை போலியோ தாக்கி பிழைத்து மீண்டவர். வாழ்வு முழுதும் விஞ்ஞானம், இலக்கியம், ஸ்கூபா நீச்சல் என்று பரபரப்பாய் இயங்கியவரை முதுமையில் pps மீண்டும் தாக்கியது. கிளார்க் சக்கர நாற்காலி நிரந்தர வாசியானார். பிறகு பின்-போலியோ தொடர்பான இதய பாதிப்பால் இறந்தார். போலியோ வாழ்வை இப்படி பாம்பு--ஏணி விளையாட்டாக்குகிறது. ஒவ்வொரு நொடியையும் அருமையானதாக மாற்றுகிறது. இளமையில் ஊனத்தால் படுக்கையில் கழித்த சுந்தர ராமசாமியிடம் வாழ்வை மிச்ச வைக்காமல் பருகும் வேட்கை இருந்ததை ஜெயமோகன் "சு.ரா. நினைவின் நதியில்" குறிப்பிடுகிறார். ஹெமிங்வேயின் "கடலும் கிழவனும்" நாவலில் வரும் சாண்டியாகோவை அலைகழிக்கும் ராட்சத மீனைப் போல் போலியோ ஒரு பெரும் சவாலாக ஊனனை சீண்டியபடி உள்ளது. அவனுக்கு சோர்வு மரணம் மட்டுமே.




Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates