Showing posts with label ச‌மூக‌ம். Show all posts
Showing posts with label ச‌மூக‌ம். Show all posts

Wednesday, 19 May 2010

ஈழத்தமிழரின் அலிபாபா குகை: kuralweb.com

இணையதளங்கள் குறித்து தாமரை இதழில் நான் எழுதி வரும் தொடரில் இந்த மாதம் kuralweb.com




தமிழீழ போராட்டம் மற்றும் அதன் அழிவு குறித்த வரலாற்று, அரசியல், சமூக பதிவுகள் இணையத்தில் ஏராளம். இவ்விசயங்களை பேச Yarl.com, globaltamilnews.com, inioru.com, nerudal.com, kuralweb.com போன்று தனிப்பட்ட இணையதளங்களும், இணையபத்திரிகைகளும் தீவிரமாக, தொடர்ச்சியாக இயங்குகின்றன. ஈழப்போருக்கு புலம் பெயர் தமிழர்கள் பொருள் மற்றும் தார்மீக உதவிகளை வெளியில் இருந்து நல்கி ஆதாரமாக விளங்கியது ஒருபுறம் இருக்க இணையத்தில் அவர்கள் எழுப்பி வரும் கருத்தியல் அலசல் மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கான வெளி இணையதமிழுக்கு பெரும் கொடை எனலாம். இணையத்தில் தீவிர தமிழ் எழுத்தாளர்களையும் சில உதிரிகளையும் தவிர பெரும்பாலானவர்கள் நடத்தும் இணையதளங்கள் கேளிக்கை மற்றும் செய்திப்பகிர்வை மட்டுமே நோக்கமாய் கொண்டவை. இணையம் இந்திய தமிழர்களுக்கு ஒரு சமையல்கூடம் மட்டுமே. வாழும் சமூகம் குறித்த தீவிரமான அக்கறை கொண்ட எழுத்துக்கள் அதிகமாய் ஈழத்தமிழர்களின் இணையபக்கங்களிலேயே கிடைக்கின்றன. இணையத்தை அவர்கள் ஒரு ஆய்வுக்கூடமாக பாவிக்கின்றனர். அதற்கான தேவை உள்ளது. ஈழசமூகம் இன்று ஒரு முட்டுசந்தில் நிற்கிறது. முள்ளிவாய்க்கால் இன-அழிப்புக்கு பின் அதன் பொருளாதார, சமூக, உளவியல் அடித்தளங்கள் வேகமாய் தகர்ந்து வருகின்றன. எல்லா திசைகளிலும் அது ஒரு கேள்வியை சந்தித்து வருகிறது. தன்னை மீள்பரிசீலனை செய்வதற்கான பெரும் தேவை ஈழமக்களுக்கு இன்று உள்ளது. இலவச டீ.வி, இட்லி, வடையுடன் முடிந்து போகின்றவை அல்ல அவர்களின் நெருக்கடிகள்.

ஈழப்பிரச்சினையை பேசும் கட்டுரைகள் இரு புள்ளிகளில் நிற்கின்றன. உணர்ச்சிவசப்பட்டு ஒரு அரசியல் நிலைப்பாடெடுத்து உரையாடுபவை; தீவிரமான ஆய்வு மொழியில் பரிசீலிப்பவை. முதல் வகை கட்டுரைகள் உடனடி சமூக, கலாச்சார தீர்மானங்களை அலசி முன்வைக்கவும், அறம் குறித்த பிரக்ஞையை தக்க வைக்கவும் முக்கியமானவை. இரண்டாவது வகை அறிவியக்க கட்டுரைகள் நிதானமான ஆழமான வழிமுறையை மேற்கொள்கின்றன. ஒரு கொந்தளிக்கும் சூழலில் இவை வறட்சியாய் தெரிந்தாலும் எதிர்கால சமூகத்தின் வளர்ச்சிக்கும் மீளுருவாக்கத்திற்கும் இவை பெரும் பங்களிக்கக் கூடியவை. இவ்விருவகை கட்டுரைகளும் இன்று எதிர்கொண்டு பதிலளிக்க முயலும் முக்கிய கேள்வி புலிகளின் வீழ்ச்சி பற்றியதே. புலிகளின் தவறுகள், சர்வதேச மற்றும் சிங்கள சதிகள், புலிகளின் மறுவரவு, புலம்பெயர் ஈழ அரசு என பல்வேறு தரப்புகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இத்தகைய அணுகுமுறைகள் ஒரு musical chair விளையாட்டு மட்டுமே என்பது எளிதில் புலனாகி விடுகிறது. மெழுகுமாளிகைகள் போல் தீக்கிரையாவதற்கே எழுதப்படுபவை இவை. ஒரு சமூகம் துப்பாக்கி ரவைகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவது அல்ல. பண்பாடு, வாழ்வியல், பொருளாதாரம், நிர்வாகம், உளவியல் என எத்தனையோ கூறுகள் சமூகத்தை நகர்த்துகின்றன. ஈழப்பிரச்சினையின் இந்த பன்மைத்தன்மையை புறவயமாக விவாதிக்கும் பல நுட்பமான தெளிவான கட்டுரைகளை குரல்வெப் இணையதளத்தில் (kuralweb.com) படிக்கலாம். தீயணைப்பு கூக்குரல் எழுத்துக்களில் மறைந்து போகும் பல்வேறு சிக்கல்களை இக்கட்டுரைகள் தயக்கமின்றி அலசுகின்றன. மேலும் புலி மற்றும் மாவோயிச ஆதரவு எதிர்ப்பில் இருந்து முழுமையான வன்முறை நிராகரிப்பு வரை பல்வேறு பட்ட தரப்புகளை சார்பு நிலையற்று இந்த இணையதளம் வெளியிடுகிறது. ஏற்கனவே பிற தளங்களில் வெளியான கட்டுரைகளின் மறுபிரசுரிப்புகளும் உண்டு.



குரல்வெப்பில் உள்ள குறிப்பிடத்தக்க இடுகைகளில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஆக்போர்டு பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியோரின் நேர்காணலும் ஒன்று. ”முள்ளிவாய்க்காலில் வைத்து நாம் இராணுவ – அரசியல் ரீதியாக மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. எமது நிலம், இனம், மொழி சார்ந்து சமூக, பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் ஆதாரங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டது.” என்று இவர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக புலிகளை அங்கீகரித்தவர்களும் ஆதரிக்காதவர்களும் புலிகள் நடத்திய ஒரு அரசாங்கத்தின் பிரஜைகளே. இப்போது அழிந்திருப்பவை வெறும் புலிகள் மட்டுமல்ல, அவர்கள் நடத்தி வந்த அரசாஙக்த்தின் நிதி, நீதி, நிர்வாகம், பொருளாதாரம், காவல்துறை, ராணுவம், மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளும் தான். புலிகளின் அழிவுக்கு பின் அவர்களின் பிரஜைகள் இயல்பாகவே அனாதைகளாகி விடுகின்றனர். புலிகளை வெறுத்தாலும், நேசித்தாலும் உண்மை இதுவே. இவர்கள் இலங்கையில் தற்போது மிருகங்களாக நடத்தப்படுகின்றனர்; எதிர்காலத்தில் இரண்டாம் பிரஜைகளாக இருப்பர். எட்வெட், யாழியினி உள்ளிட்டோர் சமகால இலங்கைக்கும் புலம்பெயர் நாட்டு ஈழப்பிரஜைகளுக்கும் பொருளாதார பரிவர்த்தனைகள் துண்டித்து போயிருப்பதை குறிப்பிடுகின்றனர். முன்போல் புலத்தில் உள்ள ஈழர்கள் தொடர்ந்து தங்கள் சோதரர்களுக்கு பொருளுதவி வழங்கிக் கொண்டிருக்கவும் முடியாது. சமூகக் கட்டுமானங்கள் இல்லாத அனாதைப் பிரஜைகளுக்கு சம்பாதிக்கவோ, சம்பாதித்ததை புழக்கத்தில் விடவோ முடியாது. இந்த நிலைக்கு இல்ங்கை அரசு புலிகளின் சொத்து வேட்டை என்ற பெயரில் ஈழ மக்கள் செல்வத்தை பறிமுதல் செய்வதும், புலத்தில் இருந்து புலிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தை ஒருசாரார் பதுக்கி வைத்திருப்பதும் முக்கிய காரணங்கள். இப்படி அனாதை பிரஜைகள் நேரிடும் இன்னல்கள் ஏராளம். அவர்களுக்கு தேவை அரசியல் போராட்டம் மட்டுமே என கருதுவது அபத்தம். புலி எதிர்ப்போ பிரபாகர வழிபாடோ இந்த மக்களை முன்னேற்றிடாது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்..
ஈழத்தை விடவும் வெளியில் தான் அதிக தமிழர்கள் உள்ளதாகவும் அதனால் தமிழ் ஈழம் கோருவது தவறு என்கின்ற சிங்களத் தரப்பின் வாதத்தை விமர்சிக்கும் ரீட்டாவின் ”தேசியம் எண்ணிக்கை அல்ல அது ஒரு பண்புநிலை” கட்டுரை காஷ்மீருக்கும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்துவதே. தேசியம் என்பது பொருண்மை நிலை மட்டுமே அல்ல அது ஒரு உளவியல், பண்பாட்டு வடிவமும் கூடவே என்று பேசும் ரீட்டா புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து தமிழ் தேசிய உணர்வுடன் ஈழத்துக்கான பங்களிப்பை செய்து வந்துள்ளதை குறிப்பிடுகிறார். ”இந்திய எதிர்ப்பு அரசியலும் ஈழத்தமிழர் போராட்டமும்” கட்டுரையில் பிரம்மா ஒரு வரலாற்றுப் பார்வையில் இந்திய எதிர்ப்பு அரசியலை விளக்குகிறார். இந்திய அரசியல் மாற்றங்கள் ஈழத்தில் நிகழ்த்திய விளைவுகளை அவர் பேசாமல் புலிகளுக்கும் இந்தியாவுக்குமான அரசியல் பகையின் பின்புலத்தை தொட்டுக் காட்டுவதோடு நின்று விடுவது இக்கட்டுரையின் ஒரு முக்கிய குறை. இந்தியாவுடன் இனிமேல் பகைபாராட்டாமல் சமயோசிதமாக ஈழம் நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர். மேல்மட்டத்தில் இவ்வாறு மல்லாந்து நீச்சலடித்தாலும் பிரம்மா குறிப்பிடும் பிரச்சனை மீதான அக்கறை எதிர்கால ஈழத்திற்கு அவசியமே. நிலவனின் “ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்?” என்ற கட்டுரையில் ஒரு கூர்மையான வாதம் வருகிறது. பிரபாகரன் ஒரு வரலாற்று விளைவு மட்டுமல்ல, அவர் ஈழப் பண்பாட்டின், உளவியலின் பகுதியுமே என்கிறார் நிலவன். ஒரு மிகச்சிறிய குழு ஒரு பெரும் அரசை எதிர்த்து 25 வருடங்களாக போராடி நின்றதன் பின்னுள்ள வீரமும், மூர்க்கமும், அர்ப்பணிப்பு உணர்வும் ஒரு தனித்துவமான் சமூகக் கூறு தான். அது ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கு உள்ளும் உறைந்துள்ள ஆதி கூறு. இதற்கு பிரபாகரன் எனும் பெரும் ஆளுமை வடிகால் கொடுத்தது என்கிறார் நிலவன். விமர்சகரும், புனைவெழுத்தாளருமான தமிழவன் “தமிழுணர்வின் வரைபடம்” (உயிர்மை வெளியீடு) என்ற நூலில் ஈழப்போர் சூழலை சங்க காலகட்டத்தோடு ஒப்பிட்டு பேசுவது இங்கு நினைவு கூரத்தக்கது. தமிழ் எழுத்தாளர்களில் ஆரியச்சலவை செய்யப்பட்ட சில அங்கிள்கள் ஈழப்போரை ஒரு தீவிரவாத செயலாக சித்தரித்தனர். நாம் கலாச்சார வரலாற்று ரீதியாக ஈழத்திலுள்ள தமிழர்களை நீளந்தாண்டி இன்று வேறிடத்திற்கு வந்திருந்தாலும் நம்முள் உள்ள ஆதிப் பண்பு நிலையின் மற்றொரு வெளிப்பாடு தான் பிரபாகரன் எனபதை உணரும் நுண்ணுணர்வும். நிதானமும் அவர்களுக்கு இல்லாமல் ஆகி விட்டது. பிரபாகரன் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என்பதற்கான காரணங்களை அடுக்கும் நிலவன் ஈழத்திற்கு இன்றைய தேவை கலை, கலாச்சார, அறிவியக்க தளங்களில் ஈழ சமூகத்தை கராறான ஒரு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார்.



ஈழ விடுதலைப் போரில் பெண்புலிகளின் பங்கு என்ன? அவர்களுக்கு புலி இயக்கத்துள் போதுமான அங்கீகாரம் கிடைத்ததா? இப்போது பிடிபட்ட பின் அவர்களுக்கு எத்தகைய பாதுகாப்பு உள்ளது? இக்கேள்விகளை பரிசீலிக்கும் றஞ்சி ஒரு பெருமூச்சையே பதிலாக அளிக்கிறார். “இரத்த சுவடுகளும் நிர்வாண கோலங்களும்” கட்டுரையில் அவர் பிரபாகரனால் பெண்புலிகள் மொட்டை அடிக்கப்பட்டு தப்பிச் செல்ல இயலாதபடி அலங்கோலமாக்கப்பட்டதை குறிப்பிட்டு புலிகளும் சிங்களவர்களும் பெண்களை ஒடுக்கி வந்துள்ளதாக சொல்கிறார். 1992-இல் போஸ்னியாவில் செர்பிய அரசாங்க திட்டமிடலின் படி இராணுவத்தால் 20,000-க்கும் மேற்பட்ட போஸ்னிய பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். 1990-இல் போர் நடைபெற்ற போது குவைத்தில் 5000-க்கு மேற்பட்ட பெண்களுக்கும், ருவாண்டாவில் ஐந்து லட்சம் பெண்களுக்கும் இதுவே நடந்தது. இன்று இலங்கையிலும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் எத்தனையோ ஈழப்பெண்கள் விபச்சார கூடங்களில் பாலியல் ஒடுக்குமுறை உள்ளாக்கப் படுகிறார்கள். வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்புலிகள் சாட்சியமாக எஞ்சக் கூடாதென்பதால் அவர்கள் கொல்லப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். இது பாலியல் அத்துமீறல் மட்டுமல்ல, ஒரு இனத்தின் உயிரியல் தூய்மையை களங்கப்படுத்தி அவமானிக்கும் செயலும், அதன் சுய-அபிமானத்தை, உளவியலை சிதைக்கும் திட்டமிட்ட நடவடிக்கையுமே என்று சுட்டுகிறார் றஞ்சி.



பாராரட்சணத்தின் ”அனாமோவின் கண்ணீர் ...” கட்டுரையில் வரும் சரத் பொன்சேகா குறித்த சித்திரம் காத்திரமானது; இனதுவேசமும், வன்மமும் இணைந்து ஒரு மனிதன் வளர்த்தெடுக்கப் பட்டதை, வரலாற்றில் தடுக்கிட்ட ஒரு தடுமாற்றத்தில் அவன் பாதாள உலகத்திற்கு காணாமல் போன விதியின் முரண்களை சுட்டுகிறது.
இவ்வளவு அருமையான கட்டுரைகள் கொண்டுள்ள குரல்வெப் டாட்காம் ஒரு செய்தித் தளமும் கூட. ஆனால் இத்தளம் முறையாக வடிவமைக்கப்பட இல்லை. முகப்பில் இணையதளம் மற்றும் அதன் நோக்கம் குறித்த அறிமுகம் இல்லை. கட்டுரைகள் பக்கம் முகப்பில் இல்லை. அவற்றை காண முகப்பில் உள்ள கட்டுரை ஒன்றை சொடுக்கி அதன் தொடுப்பு வழியாக செல்ல வேண்டி உள்ளது. பக்கங்கள் மிக மெத்தனமாகவே கிரீச்சிட்டபடி திறக்கின்றன. அதன் அனைத்து அர்த்தங்களிலும் kuralweb.com ஒரு அலிபாபா குகைதான்.
Read More

Wednesday, 28 April 2010

கற்பழிப்பு சட்டத்தில் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம்



கடந்த வருடம் நான் எழுதிய மனம் பிறழ்ந்தவரின் சட்டங்கள் கட்டுரையில் ஒரு முக்கியமான சட்டப்பிழையை குறிப்பிட்டிருந்தேன். ஒரு பெண் தான் கற்பழிக்கப்பட்டதாய் வழக்கு போட்டால் அதை சாட்சிகள் மூலமாக நீரூபிக்க வேண்டும் என்றொரு சட்ட கட்டாயம் இருந்தது. கற்பழிப்பாளர்கள் பொதுவெளியில் குற்றத்தை பொதுவாக நிகழ்த்துவது இல்லை என்பதே இந்த முறைமையை அபத்தமானது ஆக்குகிறது. தற்போது இந்த அசட்டு சட்ட நிபந்தனையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர் நீதிபதிகளான பி.சதாசிவம் மற்றும் ஆர்.எம் லோதா. கற்பழிக்கப்பட்ட பெண் கல்வியறிவு அற்றவர் என்ற பட்சத்தில் அவரது குற்றசாட்டை வெளிசாட்சியம் ஏதும் இன்றி நீதிமன்றம் ஏற்க வேண்டும் என்பதே அவர்களின் சமீபத்திய தீர்ப்பு. அவர்கள் இதற்கு கூறியுள்ள காரணம்: ”குற்றம் சாட்டும் எந்த பெண்ணும் பொய் சொல்லி தன் சுய-அபிமானத்துக்கு பங்கம் விளைவிக்க மாட்டார். கடுமையான மன உளைச்சலுக்கு பிறகு நீண்ட காலம் தயங்கிய பின்னரே அவர்கள் நீதி நாடி வருகிறார்கள். அவரிடம் ஆதாரம் கேட்பது மேலும் அவமானிப்பது போன்றதாகும்”.

இந்த தீர்ப்பு கரநாடகாவில் இரு கல்வியறிவற்ற சகோதரிகள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தரப்பட்டுள்ளது. இவ்விருவரும் சம்ப்வம் நடந்து 42 நாட்களுக்கு பிறகே வழக்கு தாக்கல செய்தனர் என்ற அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால் இப்பெண்களின் குடும்பத்தில் ஆண்கள் யாரும் ஆதரவளிக்க இல்லை என்பதை மனிதாபிமானத்துடன் கருதி நீதிபதிகள் இம்மேல்முறையீடை நிராகரித்துள்ளனர்.

இந்த சட்டதிருத்தம் அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் படி செய்யலாமா என்பது நம்முன் உள்ள மற்றொரு கேள்வி. வரதட்சணை சட்டம் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுவதாக ஏற்கனவே ஒரு ஆட்சேபணை உள்ளது. ஆனாலும் நம் சமூகத்தில் பெண்கள் தொடர்ச்சியாக சந்திக்கும் பலவித நெருக்கடிகள் மற்றும் பாதுகாப்பின்மைகளை கருத்தில் கொள்ளும் போது இச்சட்டத்தை அனைவருக்கும் ஆனதாக மாற்றலாம் என்பதே என் தரப்பு.
Read More

Wednesday, 14 April 2010

உடற்பயிற்சி மித்துகள், கலாச்சாரம் மற்றும் தீட்டு



உயிரோசை இதழில் வெளியான கட்டுரை

உடற்பயிற்சி இன்று மருந்து உட்கொள்ளுவது போல் அத்தியாவசியமான செயலாக பரிந்துரைக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்பவர்களை சராசரியாக மூன்று பிரிவுகளில் அடக்கலாம். உடல் தசைகளை பெருக்கவும், மெலிதாக்கவும் விழையும் பதின்பருவ இளைஞ, இளைஞிகள். தொப்பையை குறைக்க டிரட் மில் ஓடும் மத்திய வயதினர். இவர்களில் பெண்கள் அதிகம். முப்பதில் திருமணம் செய்ய முனையும் சமகால தலைமுறையின் வேலைக்கு செல்லும் பெண்கள். இவர்கள் உடல் பருமனை குறைக்க அதிநவீன உடற்பயிற்சி நிறுவனங்களை பரவலாக நாடுகின்றனர். மூன்றாவதாக, நாற்பது வயதுக்கு மேல் ரத்தகொழுப்பு, சர்க்கரை, மாரடைப்பு போன்ற உபாதைகளை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் இருந்து மிரட்சி கலையாமல் நேரடியாக உடற்பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்படுபவர்கள். இவர்களுக்காக பெரும்பாலான மேல்தட்டு உடற்பயிற்சி நிறுவனங்களில் பொது நலம், எடை குறைப்பு மற்றும் உடல் கோளாறு கட்டுப்படுத்தல் என்று பயிற்சி திட்ட வகைமைகள் வைத்திருக்கிறார்கள். இம்மூன்றுக்கும் அதனதன் வரிசைப்படி கட்டணம் அதிகம். சராசரியாக இந்த அதிநவீன குளிரூட்டப்பட்ட ஜிம்கள் ஐயாயிரத்தில் இருந்து பத்தாயிரம் வரை மாதம் வசூலிக்கின்றன. இன்று பருமனான 12 வயது குழந்தைகளும் உடற்பயிற்சி நிறுவனங்களில் வெயிட் அடிக்கும் காட்சிகள் உடலுழைப்பே அறியாது 80 வயது தாண்டி வாழ்ந்த நமது தாத்தா-பாட்டிகளை பற்றி சற்று துணுக்குற வைக்கிறது.

50-இல் இருந்து ஐநூறு வரை கட்டணம் வசூலிக்கும் கீழ்\கீழ்மத்திய\மத்திய வர்க்க உடற்பயிற்சி நிறுவனங்கள் உண்டு. இந்த வகை ஜிம்களில் மாதிரி உடலமைப்பு கொண்ட உடலழகர்கள் வினோதமான பின்னணி கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட தக்கலையில் மணற்பரப்பு மேல் ஓலை வேய்ந்த உடற்பயிற்சி நிறுவனம் ஒன்று இருந்தது. அங்கு பயிற்சி செய்பவர்கள் தினமும் ஒரே சட்டையயை தான் அணிவர். அது வியர்வையில் தொப்பலாகின பின் அங்காங்கு சொருகி வைத்து அடுத்த நாள் உலர்ந்து வீச்சமடிக்க மீண்டும் பயன்படுவர்.இப்படியே ஒரு வருடம் வரை துவைக்காமல் இந்த ஆடைகள் விடாப்பிடியாய் பயன்படுத்தப்படும். அது ஒரு திறந்த பயிற்சி நிலையம். ஜிம் உரிமையாளரும் பயிற்சியாளரும் வருடத்தில் சில முறை வருகையளிப்பது இரவில் ஒரு சடங்கு நடத்தவே. இச்சடங்கில் இத்தகைய துணிகளை தேடி குவித்து கட்டாயமாக எரித்து விடுவார்கள். அடுத்த வருடத்திற்கான அழுக்கு உடைகள் பிறகு மெல்ல மெல்ல சேகரமாக ஆரம்பிக்கும் அந்த ஜிம்மின் ஆணழகர் ஒரு கல்லுடைப்பவர். நாற்பது வயதிருக்கும். ஆப்பரிக்க எருமையை நினைவுபடுத்தும் தோற்றம். ஒரு நாள் விலைமகளிடம் சென்றது பற்றி, சிவப்பான அவளிடம் அதிகம் பேர் சென்றதால் அவள் புழை அகலமாக இருந்தது பற்றி பேசி பேசி விசனிப்பார். அடுத்த நாளே தன் குழந்தை கருவிலே இறந்து விட்டதை மென்மையாக குறிப்பிட்டு சோகவடிவாய் தெரிவார். இரண்டிலும் சகஜம் இருக்கும். அவர் பேச்சை கேட்க இளைஞர்கள் சதா குழுமி இருப்பார்கள். அவருடன் பயில பலரும் விரும்பினர். மேற்கில் காபி பார்களும், மதுக்கடைகளும் இலக்கியம் உள்ளிட்ட கலைவடிவங்களுடன் கலாச்சார தொடர்பு கொண்டிருந்தது. அது போல் ஜிம்கள் வயதுக்கு வராதவர்களுக்கான வாழ்வியல் பட்டறையாகவும் திகழ்ந்து வந்தன. நகரத்து மேல்தட்டு/மேல்-மத்திய தட்டு ஜிம்களில் பயில்பவர்களிடம் அந்த வர்க்கத்தின் வழமையான இறுக்கம் காணப்படுகிறது. துள்ளல் இசையுடன் கற்பனையான ஒத்திசைவுடன் பயிற்சி செய்து, ஓய்வு நிமிடங்களில் மூச்சிரைத்தபடி டீ.வியில் ஐ.பி.எல் பார்த்து, தன்னை ரகசியமாய் கவனிக்கிறவர்களை நோக்கி முறைத்து அல்லது சங்கடமாய் புன்னகைத்து ... இப்படி எந்த சமூக ஒருங்கிணைவும் இன்றி கழிகின்றன ஹைடெக் உடற்பயிற்சி பொழுதுகள். தமது பயிற்சி எந்திரத்தின் தலைமாட்டில் முன்பு இயங்கினவரின் வேர்வை இருந்தால் மட்டும் பெரும் தீட்டாகி விடுகிறது இவர்களுக்கு. எந்த விதத்திலும் அன்னிய மனிதத் தடங்களை இவர்கள் விரும்புவதில்லை.
ராயப்பேட்டை ரத்னா கபே அருகில் உள்ள விமல் ஜிம்மில் குள்ளமாக ஆனால் வலுவான தசைகள் கொண்ட ஒரு இளைஞர் இருந்தார். நாற்பது கிலோ எடையெல்லாம் தோளில் சுமந்து ஸ்பிரிங் போல் துள்ளி எழுவார். அவர் ரத்னா கபேவில் பாத்திரம் அலம்பும் பணி செய்தார். ரெண்டு ஆள் நெஞ்சகலமும் தும்பிக்கை கரங்களும் கொண்ட ஆணழகர் மற்றொருவர். பர்மா பஜாரில் பிளாட்பார்ம் கடை போட்டிருந்தார் ரொம்ப தயங்கிய பின்னரே தன் பணி விபரத்தை பிறரிடம் தெரிவிப்பார். இவர்களின் லட்சியம் என்பது தற்போது அருகி விட்ட இனமான தீவிர இலக்கியர்களுடையது போன்றே புதிரானது. எளிய உடலமைப்பு கிளர்ச்சியோ, உடல் பருமன் குறைப்பதோ, ஆயுள் நீட்டிப்போ அல்ல. மிக அந்தரங்கமான திருப்தியாக இருக்கலாம். உடற்பயிற்சி நிறுவனத்துள் உருவாகும் நட்பு வலை மற்றும் ஆரம்ப கட்ட இளைஞர்களின் ஆதர்ச வழிபாடு இவர்களை சட்டென்று ”புலிக்கலைஞர்கள்” ஆக்கி விடுவதும் காரணம் ஆகலாம்.

மாறாக குளிரூட்டப்பட்ட மேல்தட்டு ஜிம்களில் நீண்ட வருடங்களாக பயின்ற கட்டுமஸ்தான உடலை மேலும் உறுதியாக்க வாழ்வெல்லாம் உழைப்பவர்களை விட குறுகின நோக்கத்துடன் வருபவர்களையே அதிகம் காண முடிகிறது. உதாரணமாக ஆறு மாதங்களில் இருபது கிலோ குறைக்க வருபவர்கள் அதற்கு மேல் தங்குவது இல்லை. பலர் ரெண்டு மூன்று மாதங்களில் உடல் எடையில் வித்தியாசம் இல்லாதது உணர்ந்து கழன்று விடுவார்கள். சிலர் ஐந்து ஆறு கிலோக்கள் இழந்ததும் நின்று கொள்வார்கள். பயிற்சியை நிறுத்தியதும் உடல் இயல்பாகவே அசுரவேகத்தில் எடையை பத்து கிலோ மேலும் அதிகரிக்கும்.. பிறகு இவர்கள் அடுத்த ”சிகிச்சை” முறைக்கு செல்வார்கள். நவீன ஜிம்கள் நல்ல வியாபார மார்க்கம் ஆகி விட்டனவால் உடல் எடை குறைப்பது பற்றிய போலியான பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் பயிற்சியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் சற்றும் தயங்குவது இல்லை. உதாரணமாக, உடல் எடை கட்டுப்பாடு என்பது வெறுமனே எந்திரங்களில் பயின்று கொழுப்பை கரைப்பது மட்டும் அல்ல. ஒருவரது வாழ்க்கைச் சூழல், மரபணு, உணவுக் கலாச்சாரம், மூளை அமைப்பு, வீட்டு சமையல், வேலை, மன அமைப்பு, மன அழுத்தம், நெருக்கடி என்று பல்வேறு காரணிகள் உடல் எடையை நிர்ணயிக்கின்றன. ஆனால் உடற்பயிற்சி நிறுவனங்கள் பொறியியல் கல்லூரிகள் போல் மூன்று மாதங்களில் பத்து கிலோ என்று கூவியே ஆள் பிடிக்கின்றன. ஆரம்பத்திலே உறுப்பினர்களிடம் பெரும் கனவுகளை வளர்த்து விடுகின்றன. உணவுத் திட்ட பட்டியல், எடைகுறைப்பு பட்டியல், தானியங்கி எந்திரத்தில் கொழுப்பளவு நிர்ணயம் என்று மேலோட்ட அறிவியல் ஜம்பங்களும் உறுப்பினர்களுக்கு மிகையான நம்பிக்கைகளை அளிக்கின்றன. தனிப்பட்ட மன உறுதியுடன் தொடர முடிகிறவர்கள் அன்றி பிறர் விரைவில் ஏமாற்றமடைந்து காசையும் வீணடிக்கிறார்கள்.

உடற்பயிற்சி குறித்து மற்றொரு நீண்ட கால நம்பிக்கை இப்போது வெறும் புரட்டு என்று நிரூபணம் ஆகியுள்ளது. அதாவது ஒருவர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் குறைந்த எடைகளை கொண்டு அதிக முறைகள் பயிற்சி செய்ய வேண்டும். பயில்வான் உடலமைப்பை விரும்புகிறவர்கள் அல்லது உடல் எடை கூட்ட வேண்டுகிறவர்கள் அதிக எடைகளை தூக்கி குறைந்த எண்ணிக்கையில் பயில வேண்டும். நிஜத்தில் இது நேர் முரணானது என்று நிரூபித்துள்ளது அசிரோனா பல்கலையை சேர்ந்த கோயிங், கஸ்லர், லோமேன் உள்ளிட்டோரின் ஆய்வு. ஜார்ஜியா சதர்ன் பல்கலையை சேர்ந்த தோர்ண்டன் மற்றும் பொட்டெய்கர் ஆகியோரின் ஆய்வும் இதே முடிவை எட்டியுள்ளது. உடல் எடையை குறைக்க விழைபவர்கள் ஐந்து கிலோ டம்பெல்களை தவிர்த்து பத்தில் இருந்து பதினைந்து கிலோ எடைகளுக்கு செல்லலாம். பெஞ்ச் பிரஸ்ஸுக்கு நாற்பது கிலோ போடலாம். குறைந்த எடையில் இருபது தடவை செய்பவர்கள் அதிக எடை எடுத்துக் கொண்டு ஐந்து அல்லது பத்து தடவைகளாக பயிற்சியை குறைத்துக் கொள்ளலாம். ஜிம்முக்கு புதிகாக சேரும் ஒல்லிப்பீச்சான்களிடம் பயிற்சியாளர் குறைந்த எடை போட்டு பயிற்சி செய்ய சொன்னால் அவர்கள் ஷுவாஸ்னேக்கரை நெஞ்சில் வேண்டிக் கொண்டு பத்து, இருபது கிலோக்கள் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள். தொடர்ந்து இவர்கள் இதனால் மூச்சு வாங்கி திணறுவது ஒரு சம்பிரதாய வேடிக்கை. இது மேற்சொன்ன தவறான நம்பிக்கை காரணமாக நடக்கிறது.
Read More

Thursday, 4 February 2010

கல்லூரி, சர்க்கஸ் சிங்கம் மற்றும் மிசோரம்

மனிதர்கள் தொடர்ந்து நம்மைச் சுற்றி பலரும் ஏகப்பட்ட விநோதமான அசட்டுத்தங்களை சில்லறைத்தனங்களை வெளிப்படுத்தியவாறு உள்ளனர். கவனிக்க போதுமான வாய்ப்புகள் நமக்கு வாய்ப்பதில்லை அல்லது மனதை நாம் இவற்றுக்காக திறந்து வைப்பதில்லை. அல்லது ... மிக எளிதாக ... நீங்கள் ஒரு கல்லூரிக்குள் இல்லை.

ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு கலாச்சார சூழல் இருக்கும். அதையும் மீறி பொதுவாக கல்லூரி ஆசிரியர்களிடம் நிறைய அசட்டுத்தனங்கள் அபரிதமான போக்கிரித்தனம் வெளிப்படும். நண்பர்களே, நீங்கள் நடைமுறையில் வேறெங்கும் காண முடியாத மனித போக்குகள் இவை.

இங்கு நான் சொல்லப் போகும் கதைகள் என் அனுபவம் மற்றும் நண்பர்களின் தகவல்களில் இருந்து உருவானவை. வாரமலர் கிசுகிசு போல் இவற்றின் மூலத்தை தேடாமல் மனிதர்களை மற்றும் கவனிக்க வேண்டுகிறேன். இல்லாவிட்டால் என்னை ராடடித்து, விட்டால், சாகடித்தே விடுவார்கள்.



என் நண்பனின் கல்லூரியில் நிரந்தர×தற்காலிக ஆசிரியர்கள் இடையில் உள்ள வர்க்க போதம் காரணமான ஒடுக்குமுறைகள் குறித்து முன்னொரு தடவை எழுதியிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவத்தை படிக்கலாம்.

என் நண்பன் கல்லூரி காண்டீனில் தனியாக அமர்ந்து உலர்ந்து போன இட்லிகளை பிய்க்க முயன்று கொண்டிருக்கிறான். அப்போது அவன் துறையின் மூத்த பேராசிரியர் வருகிறார். நண்பன் காந்தியைப் போல் மனிதர்களின் நற்பண்புகளில் நம்பிக்கை உள்ளவன். அவமதித்தவர்களுக்கு கூட அடுத்த முறை தூக்கலாக மரியாதை தரும் போன தலைமுறை எச்சம். பேராசிரியருக்காக பரபரப்பாக பக்கத்து நாற்காலியை தயார் செய்து சிறுவெட்கத்துடன் நமஸ்கரிக்கிறான். அவர் டீக்கடை வாசலில் கறக்கப்படும் எருமையை தள்ளி நின்று கவனிக்கிறவரின் பாவனையுடன் தாண்டிச் சென்று பக்கத்து மேஜையில் உட்காருகிறார். நண்பன் அந்த காலி நாற்காலியை ஏமாற்றத்துடன் பார்க்கிறான். மூளைக்குள் பல்ப் எரிகிறது. அப்போது அடுத்த சோதனை வருகிறது. இது எளிதுதான் என்று முதலில் படுகிறது. ஒரு இளைய தற்காலிக ஆசிரியர். நண்பர் ஆசுவாசமாகிறார். நம் வர்க்கம் தானே. கால்வாசிப் புன்னகையுடன் அவரை நோக்கி வரும் வர்க்கத்தோழரை பார்க்கிறார். சின்னத் தலையாட்டலுடன் வணக்கம் சொல்கிறார். ஆனால் அந்த தற்காலிக ஆசிரியர் நிரந்தர பேராசிரியருடன் வர்க்கம் போதம் கடந்த சமூக ரீதியான நெருக்கம் கொண்டவர். அதிகார வர்க்கத்துடன் உராசும் அடிமை வர்க்கமும் அப்பண்புகளை பெற்று விடுமே! அவரும் நண்பரின் வணக்கத்தை கவனிக்காமல் கடந்து பேராசிரியர் பக்கத்தில் அமர்கிறார். பல்ப் உடைந்து விடுகிறது.



இதை மற்றொரு துறையில் அமர்ந்து நண்பர் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டேன்: “அட அசடே இது உலக இயல்பாயிற்றே. அதிகாரத் தீண்டாமை எந்த இடத்தில் இல்லை சொல். நான் வேலை பார்த்துள்ள அதிநவீன தனியார் நிறுவனங்களில் மேலாளரை பேர் சொல்லி அழைக்கும் கலாச்சாரம் உண்டு. ஆனால் அங்கும் கூட மேலாளர்கள் வர்க்க வித்தியாசத்தை கீழ்நிலை ஊழியருக்கு சூட்சுமமாக உணர்த்தியபடிதான் இருப்பார்கள். கல்லூரிகள் நவீனப்பட்டு சமகாலத்துக்கு இன்னும் வரவில்லை. அதனால் ஜமீந்தார் பாணியில் ஆண்டான் – அடிமை முறை வெளிப்படையாக அநாகரிகமாக உள்ளது. கஞ்சித்தண்ணிக்கும் வெஜிடபிள் சுப்புக்கும் உள்ள வேறுபாடு தான் இது. விடப்பா”. அப்போது நண்பன் சுடுசோற்றை முழுங்க முடியாமல் தவிப்பது போல் ஒரு பாவனை செய்தான். என்னடா என்று துணுக்குற்ற வேளையில் பா.ராகவன் ஸ்டைலில் ’அது நடந்தது’.

அதே நிரந்தர பேராசிரியர் நுழைந்து எதிர் நாற்காலியில் அமர்ந்தார். தனது துறை துப்புரவு அப்போது செய்யப்படுவதாகவும் அதனால் இங்கு வந்துள்ளதாகவும் முகம் சுளித்தபடி சொன்னார். நாங்கள் இறுக்கமாக கல்யாணப் பெண் போல் அமர்ந்திருந்தோம். சற்று நேரம் எங்களை விசித்திரமாக நோக்கினார். பிறகு என் நண்பனை பார்த்து அதிகார பாவனை தொற்ற கை நீட்டி சொன்னார்: “அறை சுத்தமாகி விட்டதா என்று போய் பார்த்து விட்டு வருவாயா”. என்ன விந்தை என்றால் அவர் சொன்ன துறை அறை எட்டிப் பார்க்கும் தூரத்தில் பக்கத்திலே உள்ளது. நண்பரை திரும்ப வந்து ”சார் ரூம் ரெடி” என்றுவுடன் நன்றி கூட கூறாமல் தான் அது வரை படித்துக் கொண்டிருந்த புனித நூலை சிரத்தையாக மூடி விட்டு எழுந்து கிளம்பினார்.

போய் சில நொடிகள் மௌனித்து விட்டு நண்பன் கனைத்தான்: “ நன்றி கூறுவது நாசூக்காக நடந்து கொள்வது எல்லாம் மேல்தட்டு பாவனைகள். இவரைப் போன்ற வெளிப்படையான அதிகார வர்கத்தினர் ஆபத்து குறைவானவர்கள்”. சரிதான், சர்க்கஸுக்கு உள்ளேயும் வெளியிலும் சிங்கம் ஒன்றுதான். தமாஷ் மட்டும் தான் வித்தியாசம்.

இதெல்லாம் ஜீரணம் ஆவதற்கு என்றே ஒரு தமிழ்ப்பேராசிரியர் ஒரு கதை சொன்னார். அவர் ஒரு ஆய்வரங்குக்கு சென்றிருக்கிறார். மதியம் அரங்கம் முடிந்ததும் அசல் உத்தேசமான பங்கேற்பு சான்றிதழுக்காக கூட்டத்தோடு கூட்டமாக காத்திருக்கிறார். நெடுநேரமாகியும் பேச்சு மூச்சில்லை. மாலை வரை பங்கேற்பாளர்கள் காத்திருக்க வேண்டும் என்று உதவியாளர் ஒருவர் வந்து சொல்கிறார். என்ன காரணம்? சான்றிதழில் கையொப்பம் இட வேண்டிய பல்கலைக் கழக துணைவேந்தர் (கலைஞரின் பல வலதுகரங்களில் ஒருவர்) மதியம் மூன்று மணிநேரம் தூங்கும் வழக்கமாம். அவர் எழுந்து களைப்பு நீங்கிய பின்னரே ஒப்பமிட்டு சான்றிதழ் வழங்குவார். நான் பரபரப்பாகி கேட்டேன் “அப்புறம் என்னாச்சு. எதிர்ப்பு காட்டினீர்களா? ஆவேசத்தில் முற்றுகை, உண்ணாநிலைப் போராட்டம், கோஷம், கைகலப்பு ஏதாவது ... ?”

“ச்சே... நாங்கள் இரவு வரை கூட காத்திருக்க தயாராக இருந்தோம். கல்லூரி ஆசிரியர்னா சும்மாவா!” கல்லூரிச்சூழல் பரிச்சயம் பலவித கீழ்மைகளை தாங்குவதற்கான ஒரு தடுப்பூசி.



வாஸந்தி அம்ருதா இதழில் மிசோரம் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் ஒரு காட்சி. வாஸந்தியின் வீட்டிற்கு ஒரு உள்ளூர் மிசோரம்காரர் வந்து சோபாவில் சாவகாசமாக கனவான் பாவனையில் அமர்ந்திருக்கிறார். வாஸந்தி தன் உதவியாளரிடம் வந்தவர் யாரென்று விசாரிக்கிறார். “கழிப்பறை சுத்தம் செய்ய வந்துள்ளார். நீங்கள் உள்ளே இருந்ததால் காத்திருக்கிறார்”. வாஸந்திக்கு அதிர்ச்சி. உதவியாளர் விளக்குகிறார்: “மிசோரம் மக்களுக்கு படிநிலை போதம் கிடையாது. முதலமைச்சர் முன்னிலையிலும் சமமாக உட்காருவார்கள்”. இந்த கட்டுரைதான் என்னை இதை எழுதத் தூண்டியது.
Read More

Monday, 4 January 2010

மனுஷ்யபுத்திரன், அறிவாளி அசடுகள் மற்றும் புத்தக தேர்வு

அறிவாளிகள் ஆபத்தானவர்கள்; அசடுகள் தங்கள் தன்னம்பிக்கை மிகுந்த அறியாமையால் நம்மை தொடர்ந்து வியக்க வைப்பவர்கள்.இருவரும் எதிர்பாராத தருணத்தில் ணங்கென்று நம் பொட்டில் அடிப்பார்கள். மூன்றாவது ஒரு வகை உண்டு. உள்ளதிலே சிரமம் இவர்களை சமாளிப்பது தான்: அறிவாளியாய் தோன்றும் அசடு.

மூன்றாம் வகையினரை படு ஜோராக நேரிடுபவர் மனுஷ்யபுத்திரன் அறிவாளி அசடுகள் பொதுவாக ஒரு நிலைகுலையாத தன்னம்பிக்கையுடன் தாக்குவார்கள். இவர் ஹிட்டிலிருந்து கிளம்பி வரும் அதிமனிதன் போல ஒரு புது அவதாரம் எடுத்து மேலும் மூர்க்கமாக எதிர்வினை ஆற்றுகிறார். இதை ஒரு கலையாகவே மாற்றி வைத்திருக்கிறார்.



தற்போது நடந்து வரும் புத்தக சந்தையில் உயிர்மை கடையில் ஒரு நபர் ம.புவின் இரண்டு கவிதை புத்தகங்களை எடுத்து வந்து அவரிடமே கேட்கிறார்: “இதுல எந்த புத்தகம் நல்லா இருக்கும். சொல்லுங்க சார்”.
ம.பு: “ரெண்டுமே படுமட்டமான புக்ஸ் சார். வாங்காதீங்க. ரொம்ப ஏமாற்றமாயிடும்”
அறிவாளி-அசடு: “இல்லை சார், நான் அந்த அர்த்தத்துல கேக்கல. எத வாங்குறதுண்ணு ஒரு குழப்பத்துல கேட்டேன் ”
ம.பு: “ நானும் அதனால தான் சொல்றேன். படுகேவலமான புத்தகம் ரெண்டுமே. தயவு செஞ்சு வாங்காதீங்க”
அ-அ ஜகா வாங்குகிறார்.

அ-அ மற்றும் ம.பு தொடர்பான மற்றொரு சம்பவத்தை எனது உற்ற நண்பர் ஒருவர் வழி இன்று ஒரு அரட்டையின் போது தெரிய வந்தது. சாரு இஸ்லாம் குறித்து ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். அதைப் படித்த ஒரு இஸ்லாமிய நண்பருக்கு கொலைவெறி: அதில் இஸ்லாம் பற்றின தகவல்கள் போதுமான அளவு இல்லையாம். அவர் என் நண்பர் முன்னிலையில் உயிர்மைக்கு தொலைபேசி போட்டு ம.புவிடம் பொருமுகிறார். ம.பு சுருக்கமாக பதில் கூறி வைத்து விடுகிறார். என்ன சொன்னார்? “உங்களுக்கு இஸ்லாம் பத்தி தெரியணும்னா குரான் படிங்க. அதுக்கு சாருவோட நூல் தேவையில்லை”. இதில் சுவாரஸ்யமான சேதி இஸ்லாமிய நண்பரின் நோக்கம் தான்: ம.புவிடம் மோதி தன் தரப்பை நிறுவி அப்புத்தகத்தை திருப்பிக் கொடுத்து அதற்கான காசையும் சில்லறை பாக்கியில்லாமல் திரும்பப் பெற உத்தேசித்திருக்கிறார். ம.பு பல் மொத்தமும் காட்டி சீறியதில் அவர் குழம்பி அதை கேட்க மறந்து விட்டிருக்க வேண்டும். அல்லாவிட்டால் சற்று அரண்டிருக்க வேண்டும். இ. நண்பரின் தரப்பில் ஒரு ஆதாரத் தவறு உள்ளது. என்ன?

ஒரு புத்தகம் வணிகப் பண்டம் அல்ல. அது பல தளங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டிய ஒரு உரையாடல். ஒரு உரையாடல் பிடிக்காமல் போகும் போது நாம் அங்கிருந்து விலகலாம். நாக்கு நீளம் என்றால் அறம் பாடலாம். அவ்வளவே. ஆனால் உரையாடலை திரும்பப் பெற முடியாது. இன்று விற்பனைப் பண்டங்களையே திரும்ப கொடுக்க முடியாது. கடைகளில் அடிக்கடி இது குறித்த சச்சரவுகள் நிகழ்வதை காணலாம். தி.நகர் பெரியார் சாலையில் உள்ள அழகப்பர் செட்டி நாடு உணவகத்தில் ஒரு மத்திய வயது பெண் வந்து பெரிய அலப்பறை கொடுத்ததை பார்த்தேன். அவர் 85 ரூபாய்க்கு வாங்கி சென்ற சிக்கன் கறியில் துண்டுகள் போதவில்லையாம். “காசை திரும்பக் கொடு” என்று வம்பு செய்தவரை கல்லா ஊழியர் முதலில் பொருட்படுத்த இல்லை. அப்புறம் ஒரு கலக மனநிலை ஏற்பட்டு அம்மணி கல்லா மேஜையில் உள்ள அலங்கார ஜாடிகளை சேதப்படுத்தினார். பிறகு ஊழியர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட அவரவரின் குடும்ப சிறப்புகளை அலசி விட்டு அப்பெண்ணை அகற்றினர். வெகு நேரம் கழித்தும் உணவக வாயிலில் பக்கடா மீசை முண்டாசு சகிதம் பிதுங்கி நிற்கும் காவல் மாமா தான் தாங்காமல் பொருமிக் கொண்டிருந்தார்: “பீஸ் பத்தலையாம் பீஸ். இவ்வளவு பெரிய ஹோட்டலுக்கு வாடகை, மீன்கட்டணம் எல்லாம் எப்பிடி கட்டறதாம். மளிகை சாமான் விலையெல்லாம் எகிறி இருக்கேங்கிற விவஸ்தை வேணாம்”. வாங்கும் பொருளின் மதிப்பு பற்றி சதா சந்தேகப்பட்டு அவஸ்தைப்படுவது ஒரு அலாதியான நுகர்வோர்த்தனம்.



ஆனால் பொதுவாக விலை ஏறஏற நாம் தரத்தை குறித்து எளிதில் சமாதானம் கொள்கிறோம். உதாரணமாக தற்போது நான் பயன்படுத்தும் மடிகணினியை பாதி விலைக்கு செய்து விடலாம் என்று ஒருவர் நிறுவினால் நான் நிச்சயம் மறுப்பேன். அவதார் எனும் படத்தை பங்களூருவில் ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி பார்த்த ஒரு மாமாவை டி.வியில் பேட்டி கண்டார்கள் அவர் சொன்னார்: “237 மில்லியன் டாலர் செலவில் படத்தை எடுத்திருக்கிறார்கள். இதை பார்க்க ஆயிரம் ரூபாய் ஒன்றும் அதிகம் அல்ல”. விலை குறைய குறைய நம் சந்தேகம் வலுக்கிறது. தமிழில் உள்ள சில அருமையான நூல்களை நாம் ஆங்கிலத்தில் வாங்குவதென்றால் பத்து மடங்கு அதிகம் செலவிட வேண்டும். குறிப்பாக புத்தகம் நல்லா இல்லே என்று ஆங்கில பதிப்பாளரின் வேட்டியை உருவ முடியாது. ஆயிரக்கணக்கில் செலவிட்டு ஆங்கில நூல்கள் வாங்கி ஏமாந்தவர்களுக்கு இது புரியும். எழுத்தாளர் வாசந்தி டைம்ஸ் நியுவின் முதல் தமிழ் சிறப்பிதழில் எழுதின கட்டுரை ஒன்றில் இதை குறிப்பிட்டிருக்கிறார்.

திருடர்களிடம் இருந்து திருட விரும்பும் விவேகி வாடிக்கையாளர்கள் உண்டு. பெரும்பாலும் மத்திய, உயர்மத்திய வகுப்பை சேர்ந்தவர்கள். மடுவாங்கரையில் என் வீட்டுப்பக்கத்தில் ஒரு பைரேட்டட் டி.விடி கடை போட்டிருக்கும் நபர் இப்படியான புகார் ஒன்றை தெரிவித்தார். ஒரு டி.வி.டி வாங்கி பார்த்து சரியா தெரியல என்று திரும்பக் கொடுத்து மற்றொன்று பெற்றுப் போகிறார்கள். இப்படியே 50 ரூபாய்க்கு மூன்று நான்கு படங்கள் ஓசியில் பார்த்து விடுகிறார்கள்.

அறிவாளி அசடுகளுக்கு திரும்புவோம். இவர்களை சுதாரிக்கையில் ம.புவிடம் கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது: டைமிங்.

முதன்முறை ம.புவை சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது எதேச்சையாக குறிப்பிட்டார்: ”நமது ஈகோவை வீங்க வைத்துக் கொள்வதே அராஜகவாதிகளிடம் இருந்து காப்பாற்றும். இல்லாவிட்டால் புழு போல் தேய்த்து விடுவார்கள்”.

அம்சம் இரண்டு: அ-அ நபர்களை நேரிடும் போது அவர்களை விட மிகையான தன்னம்பிக்கையுடன் அவர்களின் தர்க்கத்தையே தனக்கு சாதகமாக திருப்பி விடுகிறார். கூட தாளிப்புக்கு அவர்களை விட ரெண்டு கடுகு அதிகம் போடுகிறார். இத்தனை மென்மையான மனிதர் முரட்டு பாவத்தை மற்றும் காரத்தை சில சமயம் படு சரளமாக வெளிப்படுத்துவதை கவனித்திருக்கிறேன். புன்னகையை விட கோபம் பாதுகாப்பானது..

முதலில் குறிப்பிட்ட எங்கள் நட்பு வட்டார அரட்டை ஒரு தீர்மானத்தை வழிமொழிந்து முடிந்தது: அதாவது தற்போது நூற்றுகணக்கில் வெளியாகும் புத்தகங்களை அட்டை பார்த்து மட்டுமே வாங்கக் கூடாது. நானும் வாசகர்கள் கவனமாகவே வாங்கணும் என்று சொல்லி வைத்தேன். ஆனாலும் இதுவரை நான் வாசித்துள்ள பல அருமையான நூல்கள் தாராளமயமாக்க கொள்கை அடிப்படையில் என் மனைவி அள்ளி வந்தவை தாம். நான் தயங்கித் தயங்கி புரட்டி வாசித்து நிதானித்து வாங்கிய நூல்கள் பல ஏமாற்றமளித்து உள்ளன.

நூல்கள் நமக்குள் நிகழ்த்தும் ரசாயனத்தை வட்டம் போட்டு விளக்குவதோ தீர்மானிப்பதோ அததனை எளிதல்ல.
Read More

Thursday, 18 June 2009

கள்ள உறவும், நவீனப் பெண்ணுரிமையும்

திருமணத்தின் அவசியம் என்ன? பதில்களில் முக்கியமாய்ப் படுவது: (1) புணர்ச்சி; (2) குழந்தை பெற்று, பேணி, வளர்த்து, ஆளாக்கி ... மின்சாரக் கொள்ளி போட; (3) சமூக அந்தஸ்து. நண்பர் ஹமீம் முஸ்தபா 12 வருடங்களுக்கு முன் அவரது புத்தகக் கடையில் ஒரு முன்னிரவில் இலக்கியக்கூட்டத்தின் போது, சில மன்மத ரகசியங்களைக் காதோடு காதாக அலசும் போது, சற்று சத்தமாகச் சொன்னார்: 'செக்ஸுக்கு திருமணம் என்னும் லைசன்ஸ் கட்டாயம் இல்லை எனில் யாரும் கல்யாணம் செய்ய மாட்டார்கள்'.
எனக்கு பிற்பாடு தோன்றியது. திருமணத்திற்குப் பின் 'கள்ளக்காதல்' எனப்படும் வடிகால் இருப்பதால்தான் பல குடும்பங்கள் நிலைக்கின்றன. இந்த 'கள்ளக்காதல்' பல விதங்களில் இருக்கலாம். வாய்ப்புக் கிடைத்தால் வழியாத, கடலை போடாத, வேலி தாண்டாதவர்கள் எத்தனை பேர்?
அடுத்து திருமணம் என்றொரு எளிய சடங்கு இல்லை என்றால் பல பேருக்கு ஜோடியே கிடைக்காமல் போகலாம். எந்தத் திறமையோ உழைப்போ செலுத்தாமல் வெற்றி பெறும் ஒரே ஆட்டம் திருமணம்தான். குறைந்த பட்ச சம்பாத்தியமோ, குடும்பப் பின்னணியோ, குழந்தை உற்பத்தித் தகுதியை நிலை நாட்டும் அடிப்படை உடலமைப்போ போதும். இந்திய வாழ்வில் மன உறுதிக்கு அடுத்த படியாய் திருமணம் ரொம்ப அவசியம்.
நீட்சே குடியாட்சி பற்றி சொன்னது இல்லத்தரச, அரசிகளுக்கும் பொருந்தும். கல்யாண வாழ்வு பலவீனர்களுக்கான பலவீன அமைப்பு. இதன் அடி நாதமான அச்சமும் அவ நம்பிக்கையும், ஆத்திரம், பாசாங்கு என, பக்கமேளத்துக்குக் காரணமாகிறது. ஆனாலும் மற்றொரு கோணத்தில் இது நம் பாதுகாப்பற்ற தினசரி வாழ்வை போஷித்து, பாதுகாக்கிறது.
எனக்கு திருமணத்தோடான பிரச்சினை அது இயற்கைக்கு விரோதமானது என்பதே. இயற்கையைப் பொறுத்த மட்டில் நிலைப்பாட்டுக்கு, சந்ததிக்குப் போராடுவதே மானிட வாழ்வின் முக்கிய இலக்கு. நமது கல்யாண 'சௌபாக்கிய' குடும்ப, குமாஸ்தா வாழ்க்கை இந்தப் போராட்டத்தை இல்லாமல் மழுங்கடித்துவிடுகிறது. அதோடு 'கள்ளக்காதல்' இயற்கையைப் பொறுத்தமட்டில் 'நல்ல காதல்' தான். நமது ஜீன் குட்டையை வேறுபட்டதாய்த் தக்கவைக்க, பலதுணை உறவே சிறந்தது. இதற்கான இயற்கை விழைவை பிற மிருக இனங்களின் மீதான ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. குறிப்பாய் சிறுத்தை இனத்தில் ஆண் அடக்குமுறையை, அதன் மூலம் உடலுறவுக் கட்டுப்பாட்டை, தவிர்க்க, பெண்கள் தங்கள் ஆட்சி எல்லைப் பரப்புக்குள் ஆண்களைத் தற்காலிகமாய்ப் புணர்ச்சிக்கு மட்டும் அனுமதிக்கும் பழக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளதைச் சொல்லலாம். இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு. ஒரு விதக் காட்டுயிர் பெண்ணியவாதம் உள்ளதைச் சொல்கிறது. முக்கியமாய் பெண்சிறுத்தைகள் தங்கள் குட்டிகள் மாறுபட்ட ஆண்களினுடையதாய் இருப்பதையே விரும்புகின்றன. ஏனென்றால் இதன் மூலம் சந்ததியினருக்குச் சிறந்த உடல் நலம் வாய்க்கிறது. சரி, நாம் இந்த வானத்துப் பறவைகள் விதைப்பதில்லை வாழ்விலிருந்து ரொம்பவே விலகி வந்துவிட்டோம். ஆனாலும் நமது இன்றைய சூழலிலும் கள்ளக்காதலுக்குப் பயன்பாடுகள் இருக்கிறது.
முக்கியமாய் திருமணத்தைத் தக்க வைப்பதற்கு.
பல தளங்களில் பெண்கள் சரி நிகராய்ப் போட்டியிடத் தொடங்கியுள்ள இந்தக் காலகட்டத்தில் அவர்கள் மீதான பல தரப்பட்ட புகார்கள் பாலுறவுத் தகுதி பற்றியனவே. இரவில் பெண்கள் வெளியே நடப்பது அதிகப்பிரசங்கித்தனம் என்பதிலிருந்து, விவாகரத்து எண்ணிக்கை அதிகரிப்பு, ஒழுக்க மீறல், ஆண் விபச்சாரம், கள்ளத்தொடர்புகள் வரை. ஆண் விபச்சாரம் பற்றி சன் டீவி பரபரப்பு நினைவிருக்கலாம். தினத்தந்தி வகை வீட்டுப் பெண்களின் கள்ள உறவுக்கு பிறகு வருவோம். மாநகர உயர்மத்திய, உயர்த்தட்டு புத்துலக வேலைபார்க்கும் பெண்களிடையே இப்போது பிரபலமாய்ப் பேசப்படுவது emotional infedility எனப்படும் உணர்வு ரீதியான கள்ள உறவு. இவ்வகை மாநகரக் குடும்பங்களில் கணவன் மனைவிகள் நண்பன் நண்பிகள், அடக்கப்பட்ட, பகிரமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான கருவிகளாய் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது திருமணத்துக்குப் பிறகும் பழைய நட்புகளைத் தொடர்வதை, பழைய கணவர்கள் போல் நவீன கணவர்கள் எதிர்ப்பதில்லை. காரணம், இன்றைய சம்பாதிக்கும் பெண் தனது பலவித மானசீக, உடல் தேவைகளை வாய், கண், மூக்கு மூடி, தவிர்க்கத் தயாராய் இல்லை. அவசர, பதற்ற நகர வாழ்வில் ஒருவரை ஒருவர் ஆற அமரக் கவனிக்க முடியாமல் போகையில், அல்லது சலிப்பு தட்டும்போது இந்த நண்பர்கள், உணர்வுபூர்வ கள்ளக்காதலர்கள் பயன்படுகின்றனர். (இந்த வகைப்படாத பின்-திருமண, 'நல்ல' சம்பிரதாய நட்புகளும் நிச்சயம் உள்ளன.)
நவீனப் பெண் அடக்க விரும்பாத தேவைகளில் ஒன்று உடலுறவு. விடிகாலை முயக்கத்தின் மருத்துவப் பயன்பாடுகள், அதனால் தவிர்க்க முடிகிற நோய்கள் என்றொரு நீண்ட பட்டியலை சமீபத்தில் பத்திரிகை ஒன்றில் படித்தேன். பரிணாமப் பார்வையில் உடலுறவு மானிட இயக்கத்தின் ஒரு முக்கிய நோக்கம். ஆனால் புள்ளிவிவரப்படி இந்தியத் திருமண ஜோடிகளின் உடலுறவுக் கணக்கு மாதத்தில் சில முறைகளே. இத்தோடு ஒட்டுறவில்லாமல் வாழும் லட்சக்கணக்கான ஜோடிகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் நம் சமூகம் எத்தகையதொரு தந்தூரி அடுப்பில் வேகிறது என்பது புரியும்.
ஏஞ்சலினா லெவின் என்பவர் இங்கிலாந்தின் உயர்பதவி வகிக்கும், அல்லது சுயதொழில் புரியும் நூற்றுக்கணக்கான பெண்களிடம் திருமணத்துக்குப் பின்பான பிற ஆண் பாலுறவு பற்றி ஆய்வு செய்து சில புதிய, முக்கியமான போக்குகளை வெளியிட்டுள்ளார். இவர் உரையாடிய பெண்களில் பலருக்கு இவ்வகை உறவுகள் அவர்களது வேலையிடங்களில் வெற்றிகரமாய்ச் செயலாற்றவும், குடும்பத்தைத் தக்கவைக்கவும் பயன்படுகின்றன. இவர்கள் சமூகத்தில் திருமணமான பெண்களில் 60 சதவீதத்தினர். பொதுவாய் நிறுவனங்களில் கூட வேலைபார்க்கும் நபர்களிடம் இயல்பாய் திருமணத்துக்குப் பின் பலருக்கும் ஈர்ப்பும், அதன் விளைவாய் கள்ளக்காதலும் உருவாவதாய்ச் சொல்லப்படுவதை மறுக்கிறது இந்த ஆராய்ச்சி. பல வேலை பார்க்கும் பெண்கள் நிறுவன உறவுகளை தவிர்க்கிறார்கள். காரணம், இது அவர்கள் வேலை வளர்ச்சியை பாதிக்கும்.
பொதுவாய் நம்பப்படுவது போல் குடும்ப நண்பர்களை அணுகுவதையும் பல திருமணமானவர்கள் தவிர்க்கிறார்கள். அடுத்து கவனிக்க வேண்டியது, உடலுறவை இவர்கள் தங்கள் உரிமை என நம்புவதால், பெரும்பாலானோருக்கு 'கள்ள' உறவால் குற்ற உணர்வேதும் இல்லை.
மற்றொரு ஜெர்மானிய ஆய்வு, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூவரில் ஒருவர் 'கள்ள' உறவுகளில் நாட்டம் காட்டுவதாய்க் கூறுகிறது. ஏஞ்சலினா பேட்டி கண்ட 52 வயது குடும்பப் பெண் ஒருவர் 27 வருட திருமண வாழ்வுக்குப் பிறகு ஒரு நாள் வெளியே புதுக் காதலன் தேட முடிவு செய்தார். . "என் கணவர் நல்லவர்தான். ஆனால் படுக்கையில் ஒன்றுக்கும் உதவாதவர். எத்தனையோ வருடங்கள் முயக்கத்தின் போது மல்லாந்து கிடந்து இங்கிலாந்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்" என்கிறார். ஒரு நாள், இணையத்தில் காதலனுக்காக விளம்பரம் கொடுத்தார். குவிந்த விண்ணப்பங்களில் பொறுக்கியெடுத்த காதலருடன் உறவு சில மாதங்கள் நீடித்தது. ஆனால் தனக்கு இந்த உறவு தோதில்லை என்று பட, முறித்துவிட்டார். ஆனால் முக்கியமாய் எந்த விசனமும் இல்லை. மற்றொரு 49 வயதுப் பெண்ணுக்கு 15 வயது மூத்த ஆர்வமற்ற கணவன். இவர் காதலனைத் தேட, திருமணமான பெண்களுக்கான ஒரு டேட்டிங் ஏஜென்சியை அணுகினார். அவர்கள் தேர்தெடுத்துத் தந்த மூன்று நபர்களுடன் 6 மாதங்கள் பழகி ஒருவரைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் உறவில் உணர்ச்சிகரமாய் ஒன்றுவதை உணர்ந்ததும், இவரும் முறித்துக் கொண்டார். இந்த ஜோடி ரத்தப் பரிசோதனை செய்து தங்களுக்குப் பால்வினை நோய் எதுவுமில்லை என உறுதி செய்து கொண்ட பின்னர் மட்டுமே உறையில்லாத உறவுக்குத் தயாராகி உள்ளனர். இந்தப் பெண் கள்ளத்தொடர்புக்குப் பின் கணவனுடனான சச்சரவுகள் குறைந்துள்ளதாய், கணவனை மேலும் எளிதாய்த் தாங்கிக்கொள்ள முடிவதாய்ச் சொல்கிறார். இவர் வாழ்வு பலதுணை உறவால் ஸ்திரப்பட்டிருப்பதாய்க் கருதுகிறார். தற்காலத் தீர்வுதான் என்றாலும் இது வசதியான, நடைமுறைக்குதவும் தீர்வு என்று விளக்குகிறார். இந்தப் பெண்கள் பலதுணை உறவை அணுகும் முறை 'தர்க்கரீதியானது', 'புத்திசாலித்தனமானது' என வர்ணிக்கும் மேரி எனும் பெண், இவ்வகை உறவுகள் சுயநம்பிக்கையை, உடலழகு மீதான கவனத்தை அதிகரிப்பதைக் குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் பெரும்பாலான மணவாழ்வுகள் சில மணி நேரங்கள், நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்களில் செத்துப்போய்விடுகின்றன. சமரச திருமணங்கள், பரஸ்பர விருப்பமின்மை, அவசரம், முதிர்ச்சியின்மை, பொருளாதார நெருக்கடி போன்று பல காரணங்கள். பிறகு நடப்பது ஒரு பாசாங்கு நாடகமே. உதாரணமாய், என்னோடு பணிபுரியும் பெண் ஒருவருடைய கணவன் அவரிடம் பேசுவதே இல்லை. இந்த ஈடுபாடில்லாத மணவாழ்வில் அவர்களுக்கு இரண்டாவதாய் ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பாசாங்கு நாடகத்தின் மற்றொரு அங்கமாய் மட்டுமே கள்ள உறவுகள் இருக்கின்றன.
நம்மூரில் கணவன்-மனைவி அறிவோடு கள்ளக் காதல் வருடக்கணக்கில் நடந்தும், சிதையாமல் தொடர்ந்து செயல்படும் பல குடும்பங்கள் உள்ளன. மீரா நாயர் காபரே நாட்டியப் பெண்கள் பற்றிய 'இந்தியன் காப்ரே' ஆவணப்படத்தில் இத்தகையதொரு 'பொறுத்துப் போகும்' குடும்பத்தைப் பதிவு செய்துள்ளார். என் நிஜவாழ்வில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். என் சித்திக்குத் தன் கணவனின் நண்பனோடு 'கள்ளத்' தொடர்பு இருந்தது. இது தெரிந்திருந்தும், கணவன் மனைவி பிரியவில்லை. குடும்பம் நிலைத்தது. ஊர்வாய் ஓயாமல் வம்பு பேசியும், தன் சக ஊழியரான இந்த நண்பரோடு சித்தப்பா நெருக்கமாகவே இருந்தார். முடிவாய் இருவரும் மதுபோதையில் சேர்ந்து பைக்கில் செல்லும் போது விபத்தில் இணைந்தே இறந்தனர்.
மாறாய், கள்ளத் தொடர்பு விளைவான வன்முறைகளையும் நம் சமூகத்தில் ஏகத்துக்குக் காணலாம். மாலைமலரில் வேலைசெய்யும் போது, கணிசமான கள்ளத்தொடர்பு-பிரச்சினை-கொலை செய்திகளைக் கண்ணெரியப் படித்து எழுதியிருக்கிறேன். திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாழ்ந்த போது பக்கத்துத் தெருவில் ஒரு விபரீத சம்பவம் நடந்தது. 55 வயதுக்கு மேற்பட்ட தன் மனைவியை 20 வருடங்களாகக் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டதிற்காக வயதான கணவன் வெட்டிக் கொன்றார்.
அன்று எழுந்த பல கேள்விகளுக்கு விடை இல்லை. இத்தனை வருடங்கள் ஏன் பொறுத்தார், 30 வருடங்கள் வளர்த்தெடுத்த குடும்ப வாழ்வு ஒரே நாளில் திடீரென ஏன் அழிய வேண்டும் அல்லது இந்நாள் வரை இந்த வன்முறை வெடிக்கக் காத்திருந்ததா?
இந்த இருவகை நபர்களும் ஒருவிதத்தில் ஒருவர்தான் எனப்படுகிறது
Read More

பிற்போக்கின் அரசியலும் மில்லியன் ஆண்டுகளும்

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் தொலைக்காட்சியில் மனுஷ்யபுத்திரனின் கேள்விக்கு பதிலளித்த ஐயா பெரியார்தாசன் இன்றைய இளைஞர்கள் முற்போக்காளர்கள் என்று ஆர்த்துரைத்தார். இதைக் கேட்ட எனக்குப் பூரித்துப் போனது.
எனக்குத் திராவிட இயக்க முற்போக்கு சிந்தனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு சிறு குழந்தைப்பருவத்திலே ஆரம்பித்து விட்டது. காரணம் அப்பா ஒரு தீவிர தி.மு.ககாரர். ஒரு சின்ன பெரியார் தாசர். அம்மா அடிக்கடி சொல்வாள். தொட்டிலில் என்னை போட்டு விட்டு கைவேலையாய் போகும்போது, அப்பாவை பார்த்துக்கொள்ள சொன்னால், "பெரியார் பெரியார்" என்று சொல்லியே தொட்டிலை ஆட்டுவாராம். டாக்டர் கலைஞரை நள்ளிரவில் உள்ளே போட்ட போது, அப்பா உணவுத் தட்டை தூக்கி வீசி விட்டு உண்ணாவிரதம் இருந்தார். எம்.ஜி.ஆரை டீ.வியில் பார்த்தால் தாரை தாரையாய் கண்ணீர் விடுவார். தந்தைப் பெரியார் பற்றி பேச ஆரம்பித்தாலே நாக்கு தழுதழுத்து அரைமணி நேரம் பேச முடியாமல் தவிப்பார். இப்படியான ஒரு திராவிட அபிமான பாரம்பரியத்தில் வளர்ந்ததால் அடிக்கடி இப்போது வரை ஒரு இறைமறுப்பு இந்தனையாளனாகவே இருக்கிறேன். எந்த அளவுக்கென்றால் "கடவுள்" என்று பேச ஆரம்பித்தாலே எனக்கு கொட்டாவி வந்து விடும்.
என் தாத்தா மைவள்ளி (வட்டப்பெயர்) நாராயணன் தந்தைப் பெரியாருடன் கைகுலுக்கி பேசியுள்ளதாக என் அப்பா வீட்டுச் சுவர்களில் எழுதி வைக்காத குறைதான். உங்களைப் போலவே நானும் அதை நம்பவில்லை.
இப்படியான முற்போக்கு திராவிட சிந்தனை பாரம்பரியத்தில் வாழையடி வாழையாய் தோன்றின எனக்கு ஒரு பெரிய தடையாய் அமைந்துள்ளது என் பெயர்தான். "தமிழ்மகன்" என்றோ "தமிழ்ச்செல்வன்" என்றோ வைத்திருக்கலாம். இவ்விசயத்தில் அப்பாவை ஒருக்காலும் மன்னிக்க மாட்டேன்.
ஐயா பெ.தா அவர்கள் குறிப்பிட்டது போல் ஒரு "முற்போக்குப் பயிரான" என் அப்பாவுக்கு தந்தைப் பெரியாரின் பெண்ணிய சிந்தனையோடு மட்டும் உடன்பாடில்லை. புரூஸ்லியின் சிந்தனையோடு ஓரளவு ஒத்து வருவார். சாப்பாட்டில் உப்பு காரம் இருந்தாலோ, சில நேரம் இல்லாவிட்டாலும் கூட, பிற்போக்குப் பயிரான என் அம்மாவின் மூக்கில் ஒரு குத்துவிடுவார். இப்படியான தொடர்தாக்குதல்களினால் அம்மாவின் பிற்போக்கு மூக்கின் எலும்பு ஒரு நாள் நொறுங்கியே விட்டது. ஆனாலும் திருந்திய பாடில்லை.
ஐயா பெ.தா அவர்கள் (என்னைப் போன்ற) முற்போக்காளர்களே இன்றைய தலைமுறையில் அதிகமாய் இருப்பதாய் கூறியது கேட்க நிச்சயம் பெருமிதமாய் இருந்தது. ஆனாலும் சமீபமாய் நவீன இளைஞர்களிடம் பழமைவாதம் பரவலாய் காணப்படுவதாய் புள்ளிவிவரங்கள் சொல்லுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. உதாரணமாய், பாண்ட், சட்டையிலிருந்து நாய்க்குட்டிக்கான உணவு வரை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் இளையதலைமுறை மிகவும் பிற்போக்காக திருமணம் போன்ற சடங்குகளை இன்னும் பின்பற்றுகிறார்கள். அன்று தரகர்கள் செய்த இந்த பல்பார்த்து ஆள்பிடிக்கும் வேலையை matrimonial.com போன்ற இணையதளங்கள் பட்டவர்த்தமாய் செய்து கோடிகள் குவிக்கின்றன. சாதி, உபசாதி, ஜாதக பொருத்தம் என பல வித மூட நம்பிக்கைகளைத் தொடர்ந்து பின்னர் தான் மணமக்கள் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து முடிவு செய்கிறார்கள். எந்த அளவுக்கு அதிகமாய் படித்து சம்பாதிக்கிறார்களோ, நைட் கிளப், டேட்டிங் என்று ஆட்டம் போடுகிறார்களோ அந்த அளவுக்கு கட்டுப்பெட்டித்தனமாய் பிற்போக்கு சடங்குகளில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஒரு பிரபலமான உதாரணம் தருகிறேன்: ஜாதக பொருத்தமின்மைக்கு பரிகாரமாக நடிகர் அபிஷேக் பச்சனை மணமுடிக்குமுன் சர்வதேச திரைத்தாரகை ஐஸ்வர்யா ராய் ஒரு மரத்துக்கு மாலையிட்டு திருமணம் செய்தார். இல்லாவிட்டால் திருமணத்துக்குப் பின் அபிஷேக்கின் உயிருக்கு ஆபத்தாம். இன்னும் நாம் திருமணம் என்ற பெயரில் பெண்ணுக்கு மூக்கணாங்கயிறு கட்டும் பழக்கத்தை விட்டபாடில்லை. என் மனைவியை நான் மூக்கணாங்கயிறு அணிய வற்புறுத்தவில்லை என்பதால் என் மூன்று பால்யகால நண்பர்கள் (நரேந்திர மோடியின் வழிபாட்டாளர்கள்) இப்போது வரை என்னிடம் பேச மறுத்து வருகிறார்கள். இவர்களில் ஒருவன் இஸ்ரேலில் மென்பொருள் வல்லுநன். மற்றுமிருவர் பிரபல எம்.என்.சிகளில் மேலாளர்கள்.
இதில் முற்போக்குக் குடும்பங்களிருந்து வரும் பெண்கள் நிலைமைதான் ரொம்ப பாவம். என் அலுவலகத் தோழி கயல்விழியின் அப்பா தி.காவில் 20 வருடங்களாய் முற்போக்குத் தொண்டாற்றுபவர். அவர் பெண்ணுக்கு அவர் ஜாதகம் இயற்றாததால் வரனுக்காக பெரியாய் திடலிலுள்ள கட்சியின் திருமண மையத்தைதான் நம்பி இருந்தார். இரண்டு வருடங்களாய் அலைகழிக்கப்பட்டு, ஏதும் அமையாமல் நொந்து போனார். சுயமரியாதையை விட்டு அவர் பழமைவாதிகளின் வரன் தேடும் இணையதளங்களில் இப்போது பதிவு செய்துள்ளார். அங்கும் 'இறை நம்பிக்கை' இல்லை என்று தெரிவிக்கும் பையன்கள் கூட ஜாதகப் பொருத்த விசயத்தில் விடாப்பிடியாய் உள்ளார்கள். நம்மூரில் ரேசன் அட்டைக்கு அடுத்தபடியாய், ஜாதகம் இல்லையென்றால் அணுவும் நகராது என்னும் நிலை உள்ளது. ஜாதகம் இல்லாத பெண்களுக்கு மணமாகும் தகுதி இல்லை. அதுவும் திராவிட நிறம் வேறு என்றால் சொல்லவே வேண்டாம்!
இன்றைய நவீன இளைஞர்களிடம் காணப்படும் மற்றொரு மனநோய் மாட்டுப்பெண்ணை வீட்டுப் பெண்ணாகவே வைத்துக் கொள்வதற்கான தீவிரம். பொறியியல் படிப்பு முடித்து விட்டு கணவனின் வற்புறுத்தலால் வேலைக்குப் போகாமல் வீட்டை நாலுமுறை பெருக்கி, கிடைக்கிற பொருளை எல்லாம் எடுத்து துடைத்து வைத்து, இத்தனைக்குப் பிறகும் நேரம் மீதமிருப்பதால், டீ.வியில் குடும்பத்தொடர்கள் பார்த்துக் கொண்டே தூங்கி தங்கள் திறமைகளை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். என் அலுவலக வேலைப்பிரிவை பொறுத்த மட்டிலுமே கடந்த 6 மாதங்களில் 4 பெண்கள் கணவனின் வற்புறுத்தலால் வேலையை விட்டுள்ளனர். இதைப் போன்றே இரண்டாவதாய் குழந்தை பெற்று குலதெய்வ பெயரிட்டு மக்கள் தொகையை எகிற விடும் உயர் நோக்குடன் மேலும் பல பெண்கள் வேலையை விடுகிறார்கள். இங்கும் ஆண் குழந்தை பெறுவதற்கான ஆணின் பேராசைதான் தூண்டுதல். இப்படியான 'குடும்ப' வற்புறுத்தலால் என அலுவக தோழி சுகன்யா வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்பை சமீபமாய் பெற்றுக் கொண்டார். ஆனால் வீட்டில் அவர் அலுவலக வேலையோடு சேர்த்து சமையல், பெருக்கி, துடைப்பது, தினமும் வடை பாயச சாப்பாடு சமைப்பது என அடிமாடாக இரட்டை வேலை செய்ய வேண்டியதாகி விட்டது. அதை விட கொடுமை அவரது மாமனார் அவரை அலுவலக வேலையை ஒரேயடியாய் துறந்து விடுமாறு தொடர்ந்து மிரட்டி வருவது. "சம்பாத்தியம் புருஷலட்சணம்" என்று என் மாமியார் அடிக்கடி காதுபட சொல்லுவார் ( நான் என் மனைவியை விட குறைவாக சம்பாதிப்பதனால்). இந்த தர்க்கப்படி எங்கே தங்கள் லட்சணம் பறிபோய் விடுமோ என பல திருமணமான, ஆகாத இளைஞர்கள் ஒருவித பதற்றத்தில் உள்ளார்கள். இதனால் ஒரு முக்கிய முன்-திருமண கோரிக்கையாக "கல்யாணத்துப் பிறகு வீட்டோடு குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும், வேலைக்குப் போகக் கூடாது" என்று பரவலாய் வலியுறுத்தப்படுகிறது. பின்-திருமண பழுது சரி செய்யும் நடவடிக்கையாக வேலைக்குப் போகும் மாட்டை கொம்பைப் பிடித்து கொட்டகையில் அடைப்பது பல குடும்பங்களில் உறவினர்களின் பேராதரவுடன் நடக்கிறது. என் மனைவியின் மேலாளர் ஒரு பெண். சந்தியா. மாதம் ஐம்பதினாயிரம் சம்பாதிக்கிறார். வேலை பார்க்கும் நிறுவனத்தின் பாதி பங்கு வேறு உள்ளது. ஆனாலும் இவரது கணவனும், மாமனார் மாமியாரும் வேலையை விடும்படி தினசரி மனவதை செய்கின்றனர். கணவனுடன் 2 வருடங்களாய் சுமூக உறவில்லை. பேச்சு வார்த்தைக்கு முயன்றால் " நீ வேலையை விடு, எல்லாம் தானாய் சரியாகி விடும்" எனபது அவரது ஒரே பதில். இவருக்கு 6 வயதில் ஒரு மகள். இந்த வேலையை விடும் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துவதற்க்காக மாமனார் மாமியார் பேரக்குழந்தையை கவனிக்காமல் உதாசீனிக்கிறார்கள், ஒருவித மறைமுக மிரட்டல் என. ஒரு நாள் வழக்கம் போல் மதியம் பள்ளி விட்டு வந்த குழந்தைக்கு 102 டிகிரி ஜுரம். வீட்டில் யாரும் மருந்து தரவோ, பொருட்படுத்தவோயில்லை. மாலை 7 மணிக்கு வீட்டுக்கு வந்த இவரிடம் மாமியார் ரிமோட்டால் டீ.வி சானலை மாற்றிக் கொண்டே சொல்கிறார்: "கொழந்தைக்கு ஜுரம் போல, என்னன்று போய் பாரு". இவரது கணவர் ஹைதராபாதில் சத்யம் நிறுவனத்தில் பொறியியலாளர். மனைவியை விட சற்று குறைவாய் சம்பளம்.
இந்தியாவின் 18 நகரங்களில் இந்தியா டுடே நடத்திய சர்வே பெரும்பாலான இந்திய இளைஞர்கள் சம்பிரதாய குடுமிகள், பிற்போக்காளர்கள் என்று சொல்லுகிறது. இதில் தமிழ் இளைஞர்களும் விதிவிலக்கல்ல. ஆகப்பெரும் கொடுமை 70 சதவீதத்தினர் மதவெறியர்கள் என்பது. இவர்கள் எதற்காகவும் தங்கள் மதத்தை மட்டும் விட்டுக் கொடுக்க தயாரில்லை என தெரிவித்துள்ளனர். எனக்குத் தெரிந்தே நரேந்திர மோடி ஜி தான் இந்தியாவின் தேசத்தந்தை என நம்பும் பலர் இருக்கிறார்கள். இத்தகைய இளைஞர்களை ஆதிக்க சாதியர்கள், ஆதிக்க சாதி ஆதரவாளர்கள் என் இருவகையாய் பிரிக்கலாம். உதாரணமாய், என் அலுவலக மொட்டை மாடி திறந்த வெளி 'உணவறையில்' யாரும் அசைவம் (ஆரிய உணவை சைவ உணவென்பதால் நமது புலால் உணவை பௌத்த உணவென்று அழைக்க வேண்டும் எனும் நண்பர் ஹமீம் முஸ்தபாவின் உயர்கருத்தை வழிமொழிந்து இனிமேல் அவ்வாறே குறிப்பிடுவோம்) தின்னக்கூடாது என்றொரு எழுதப்படாத சட்டம் உள்ளது. ஆதிக்கசாதி ஆரியர்களுக்கு பௌத்த உணவு (அசைவ) மணம் என்றால் குமட்டிக் கொண்டு வருமாம். ஆரிய கலாச்சாரம்தான் லட்சியம் என்று கொண்டுள்ள ஆரிய ஆதரவாளர்களும், நாங்கள் ஆசையாய் பொரித்த கருவாடு, வறுத்த நண்டு என்று கொண்டு வந்து கடித்தால் முறைத்துப் பார்ப்பது மட்டும் இல்லாமல் விலகிப் போயும் அமர்கிறார்கள். தீண்டாமை ஒழிந்து விட்டதென்று யார் சொன்னது? ஆரியர்களை குஷிப்படுத்துவதெற்கென்றே எங்கள் காண்டீனில் சைவ உணவு மட்டுமே தந்து, பிறந்ததிலிருந்தே மீன் மணம் இல்லாமல் சோறிறங்காத என்னைப் போன்ற பல பௌத்த பிரியர்களை காயப் போடுகிறார்கள். மற்றொரு அலுவலக சாதிக் கொடுமையை பற்றிச் சொல்லுகிறேன். நான் பொதுவாய் சாதி வித்தியாசம் பாராமல் ஆரியர்களிடம் கூட சகஜமாக பழகக்கூடியவன். அப்படி ஒரு நாள் அல்வா சாப்பிடுவதற்காக என் கூடப் பணிபுரியும் ஒரு ஆரியப்பெண்ணிடம் கரண்டி வாங்கினேன். பிறகு நன்றாக அலம்பி உணவு நேரத்தில் திருப்பிக் கொடுத்தேன். ஆனால் அவள் அதை பயன்படுத்தாமல் வெறும் கையாலே உருட்டி விழுங்க ஆரம்பித்தாள். நான் சொன்னேன்: " நன்றாக சோப்புப் போடு அலம்பி விட்டேன் தேவி (மோடிக்கு பயந்து பெயரை மாற்றியுள்ளேன்) நீ அதை பயன்படுத்தலாம்". நான் தொடர்ச்சியாய் வற்புறுத்தியும் அவள் நான் எச்சில் படுத்தி அலம்பிய கரண்டியை மீண்டும் வாயில் வைக்க மறுத்து விட்டாள். என் முன்னே தூக்கி வீசாமல் இருந்தாளே என்று ஆறுதல் சொல்லிக் கொண்டேன். ஆனாலும் ஐயா, எனக்கு பல இரவுகள் இந்த நுட்பமான "ஒத்திப் போவை" நினைத்து தூக்கம் வரவில்லை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் மிக அபாயகரமானது சொந்த சாதியர்களை மேல் நிலையிலும், ஆதரவு சாதிகளை சற்று அடுத்தபடியாயும் உயர்பதவிகள் தந்து அலுவலக மேலாண்மை வட்டத்துள் ஒரு சக்கர வியூகத்தை ஆரியர்கள் அமைத்து வருவது. வெகு சீக்கிரத்தில் ஒரு ரதயாத்திரை நடத்தும் அளவுக்கு என் மேலாளரான நாமக்காரர் ஆரியர்களை அதிகமாய் பணியில் அமர்த்தி அரசியல் செய்கிறார். நான் குறிப்பிட விரும்புவது இந்த வெறியர்கள் எல்லாரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதே.
நாம, பூணூல் சக்திகளின் இந்த ஆட்டத்தைப் பார்த்தால் என் ரத்தம் கொதிக்கிறது ஐயா! எங்கல் அலுவலக முகப்பில் ஒரு பிள்ளையார் சிலை வைத்திருக்கிறார்கல். தேச, இன எல்லைகள் தாண்டி சேவை செய்யும் பி.பி.ஓ நிறுவனம், ஆனால் முகப்பிலேயே பிற்போக்கின் அடையாளம். பார்க்கும் போதெல்ல்லாம் என் நரம்புகள் புடைக்கின்றன. உடைத்து நொறுக்கலாம் என்று போனால், அட, பிளாஸ்டிக் பொம்மை.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஜெ.டபிள்யூ.டி சக்ரா எனும் ஒரு ஆய்வு சென்னை இளைஞர்கள் பழமைவாதிகள், அச்சம் மிகுந்தவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. மிகவும் முற்போக்கானவர்களையே பிற்போக்காய் செயல்பட வைக்கும் சூழல் இங்கு நிலவுகிறது. திருமணத்துக்கு முன்பே நானும் என் மனைவியும் மிகவும் நவீனமாய், முற்போக்காய் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டோம். ஆனால் என் மாமியார் போலீசில் பிடித்துக் குடுப்பேன் என் மிரட்டியதால், திருமணம் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. பதிவாளர் அலுவலகத்துக்குப் போய் திருமணத்தை சுளுவில் முடித்து விடலாம் என்று பார்த்தால், சட்டம் மாறியது தெரிய வந்தது. போலித்திருமணங்களை தடுக்க நிலுவையில் இருந்த அச்சட்டம், மறைமுகமாய் பழமைவாதிகளுக்கு ஆதரவாய் செயல்பட்டது. ஏதாவது கோவிலிலோ, மண்டபத்திலோ மணமுடித்து விட்டு ஆதாரம் தந்தால் பதியலாமாம். மண்டபத்திற்கு என்னிடம் வசதி இல்லை. மனசாட்சி இடம் தராவிட்டாலும், ஒரு சின்ன கோவிலாய் ஏற்பாடு செய்தேன். ஆனால் அங்கும் பழமைவாதிகள் ஒரு ஆப்பு வைத்திருந்தார்கள். திருமணம் கோவிலில் பதிவு செய்வதற்கு மாமியார்/மாமனார் கையெழுத்திட வேண்டுமாம். என் மாமியார் திருமணத்துக்கு வருவாரா மாட்டாரா என்று கடைசி நேரம் வரை திகிலாகவே இருந்தது. ஒருவழியாய் அவர் ஒருமணி நேரத்துக்கு முன் விஜயமாகி திருமணத்தை 20-20 கிரிக்கெட் போல் முடித்து வைத்தார். இந்த சட்டக் குளறுபடி சாதிப் படிநிலையை, பழமைவாதத்தை மேலும் வலுவாக்கவே பயனபடுகிறது.
இதையெல்லாம் கடந்து, தமிழ் நாட்டுக்கு ஒரு நீண்ட திராவிட அரசியல் பாரம்பரியம் உண்டு. நமது திறமிக்க தலைவர்களின் சீரிய வழிகாட்டுதல் இருந்தும், சாலை ஓரங்களிலும் மத்தியிலுமாய் அவர்கள் சிலைகளாய் வேறு நின்று முற்போக்கு சிந்தனைகளை நினைவுபடுத்துயும் கூட, நாம் ஏன் இப்படி பிற்போக்கு மந்தைகளாய் உள்ளோம்? இதை தமிழகத்தை செவ்வனே ஆண்டு வரும் திராவிட அரசுகளின் கையாலாகாத்தனம் என்று பழி சொல்லும் சில அன்னிய சக்திகள் உள்ளன. அவர்களுக்கு நான் கூற விரும்புவது: மனிதன் குரங்கிலிருந்து பரிணமிக்க பல மில்லியன் வருடங்கள் ஆனது. அப்படியிருக்க பழமைவாதியிலிருந்து அவன் சில பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே முற்போக்குவாதியாக வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்! அதற்குள் எப்படி நம் அரசுகள் அவனை சங்க கால சிறப்புக்கு கொண்டு செல்ல முடியும். நாம் மேலும் பொறுமைசாலிகள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
நமது பிற்போக்கு நிலைக்கு எரிக் புரோம் எனும் ஜென்மானிய தத்துவ, மனவியலாளரின் சிந்தனையில் பதில் உள்ளது. என் நண்பன் ஜோர்ஜ் ஒரு நாய் பயிற்சியாளன் மற்றும் கால்நடை மருத்துவன். அவன் நாய்கள் பற்றி ஒன்று சொன்னான். நாய்கள் சமூகத்துக்குள் கண்டிப்பான ஒரு படிநிலை உண்டு. அதாவது தலைவனுக்கு கீழே வலிமை குன்றின நாய்கள். அதற்கும் கீழே நோஞ்சான்கள், குட்டிகள், இப்படி. ஆனால் இன்றைய பல நவீன குடும்பங்களில் நாய்கள் குடும்ப உறுப்பினருக்கான சமஅந்தஸ்துடன் வளர்க்கப்படுகின்றன. இதனால் யார் முதலாளி \ கூட்டத்தலைவன் என்ற குழப்பம் நாய்க்கு ஏற்படுகிறது. தொடர்ந்து தலைவன் இல்லாத பிரஜை பதற்றம் கொள்கிறது. சில நாய்கள் தங்களை தலைவன் என்று சுயமாய் முடி அணிந்து உங்களை அடக்கி ஆள முயலும். சில நாய்கள் மாறாய் ஒருவித இறுக்கத்துடன் ஆர்வமற்று காணப்படும். சொன்ன பேச்சை கேட்காத, சாப்பாட்டை பறித்து ஓடும் நாய்கள் உண்மையில் மனிதனை பிரஜை என்று கருதுபவை. மற்றவை தான் என்னவென்ற குழப்பத்தில் இருப்பவை. இந்த படிநிலை பதற்றமும், அடக்குமுறை குணமும் தொழில்மயமாக்கலின் பின்னான நவீன சமூகத்தில் காவல் மிருக நிலையிருந்து செல்லப்பிராணியாக பதவி உயவு பெற்றதில் நாய்க்கு கிடைத்த அபரிதமான சுதந்திரத்தினால்தான் ஏற்பட்டது. புரோம் தனது "சுதந்திரம் மீதான பயம்" என்னும் நூலில் இவ்விசயத்தை மனித வரலாற்றை முன்வைத்து விளக்குகிறார். முன்-தொழில்மய சமூகத்தில் மனிதன் மிகச்சட்டதிட்டமான புறாக்கூண்டு சமூக அமைப்புக்குள் வாழ்ந்தான். சமூகம் வரையறுத்தது போன்றே எளிதாய் வாழ்ந்து முடித்தான். தன் அடையாளம் என்னவென்ற கவலை அவனுக்கு இல்லை. அது ஏற்கனவே முடிவாகி இருந்தது. தொழிமயமாக்கலுக்குப் பின், முதலாளித்துவத்தின் எழுச்சியின் போது, அவனது அடையாளம் மாறியது. உற்பத்தியில் பங்களிக்கும் பணியாளன், மற்றும் உற்பத்திப் பொருளை நுகர வேண்டிய நுகர்வோனாக ஒரு புது அடையாளப்பட்டி அவன் கழுத்தில் மாட்டப்பட்டது. சமூக அமைப்பும் வெகுவாக தளர்ந்தது. மனிதன் தனிமனிதன் ஆனான். மேற்கில் மறுமலர்ச்சி காலகட்டத்தில் வாழ்வின் மையத்தில் சர்வாதிகாரியாக வீற்றிருந்த கடவுளின் இடம் கேள்விக்குறியானது. லூதர், கால்வின் போன்றோர் ஆன்மீகப் பாதையில் தனிமனிதனின் பங்கு பற்றி வாதிட்டனர். அதோடு அவன் தலையில் "சுதந்திரம்" எனும் ஒரு முள்கிரீடமும் வைக்கப்பட்டது. தன் விதியை அவனே தீர்மானிக்கும், அதற்கு அவனையே பொறுப்பாக்கும் பேஜாரான சுதந்திரம். முந்தைய சட்டதிட்டங்களும், நம்பிக்கைகளும், பிம்பங்களும் இருந்த இடத்தில் இப்போது பெரிய வெற்றிடம் இருந்தது. காலுக்கு கீழே நிலம் நகர்ந்து எங்கும் அந்தரம் ஆகிவிட்டது போலிருந்தது அவனுக்கு. அவனுக்கு முன் இரண்டு வழிகள் இருந்தன. வெற்றிடத்தில் புதிதாய் ஒரு சமூக ஒழுங்கு முறையை தனிமனித நிலையிலிருந்து உருவாக்குவது. இரண்டாவது, எஞ்சின பழைய அமைப்புகளுக்குள் ஓடி ஒளிவது. தனிமை, ஸ்திரமின்மை, பொறுப்பின் பதற்றம் அவனை கடுமையாய் அழுத்தியது. பலரும் ஓடி ஒளிந்தனர். ஏதாவது ஒரு வசதியான முகமூடியை மாட்டிக் கொண்டனர். நமது முந்தைய தலைமுறைக்கு தலைவர்களில், அரசியல் மாற்றத்தின் நன்மையில் நம்பிக்கை இருந்தது. அவர்கள் சித்தாந்தங்களை முகங்களில் மாட்டியிருந்தனர். நமது முந்தைய தலைமுறையில் தலைவர்களின் பெயரை குழந்தைகளுக்கு ஆசையாய் சூட்டினார்கள், நேரு, இந்திரா என. இப்போது வாஜ்பாய், லல்லு என பெயர் வைக்கும் தைரியம் உண்டா? நவீனத் தனிமனிதனுக்கு பொருள் நுகர்வதிலும், கேளிக்கையிலும் மட்டும் நம்பிக்கை மீதமிருக்கிறது. அவன் ஊடகங்கள் கட்டி எழுப்பும் கேளிக்கை நட்சத்திர பிம்பங்கள் பின்னிருந்து எட்டிப் பார்க்கிறான்.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உலகமயமாக்கல் கொண்டு வந்துள்ள கருத்தியல், அரசியல் சுதந்திரம் ஒரு நிலஅதிர்வு போல் சமாளிக்க முடியாததாக உள்ளது. அரசியல் சுதந்திரம் பொருளாதார சுயசார்பு தந்து பெண்களை பெருமளவில் விடுவித்துள்ளது. இது ஆண்களை தகிடுதித்தாட வைத்துள்ளதால், அவர்கள் பெண்கள் மீதான் தங்கள் பிடியை மேலும் வன்மமாக்கியுள்ளனர். விளைவுகள்: ஒழுக்கப் போலீஸ், தொலைக்காட்சி சேனல்கள் மீதான பாலியல் கெடுபிடி, கருத்தடை மாத்திரை மீதான எதிர்ப்பலை, பல்கலை, கல்லூரி ஆடைக்கட்டுப்பாடு போன்றவை. இரவுப்பணியின் போது சில பி.பி.ஓ பெண்கள் பரிதாபமாய் கொல்லப்பட்ட போது மக்களின் கவனம் பாலியல் பாதுகாப்பில் குவிந்திருந்ததை கவனியுங்கள். இப்போதும் கூட பி.பி.ஓக்கள் மீதான குற்றச்சாட்டு பாலியல் ஒழுக்கம் பற்றியதே. இது நவீன இந்திய ஆணின் பதற்றம். கருத்தியல் சுதந்திரம் பலவித புது கலாச்சாரங்கள், பழக்கங்கள், கருத்துக்களை நம் பரிசீலனைக்கு கொண்டு வருகிறது. ஒரு விதத்தில் நம் சிந்தனை, கலாச்சார தளத்தை இது விரிவு செய்தாலும், நமது காலங்காலமான சில அடிப்படைகளை மறுபரிசீலனை செய்யும் கட்டாயமும் ஏற்படுகிறது. பாதுகாப்பு இழந்ததாய் பதறுகிறோம். மீண்டும் பழைய மரபுகள், நம்பிக்கைகளில் போய் ஒளிந்து கொள்வோம். இது ஒருவித இடத்தை தக்கவைப்பதற்கான முயற்சி. ஐ.டி படித்த என் தோழி அபர்ணா உடல் பருமனுக்காக சிகிச்சை எடுத்து வந்தாள். அவள் ஐயர். சோறு, கூட்டு, சப்பாத்தி என எதிலும் நெய் வடியாவிட்டால் இறங்காது. நெய் அவள் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டிய போது, அவள் கடுமையாக மறுத்தாள். நெய் புத்தி கூர்மைக்கு சிறந்ததாம். அவள் சாதியில் பலர் விஞ்ஞானி, பொறியியலாளர் என்று உயர் பதவிகளில் இருப்பதற்கு நெய் தான் காரணமாம். அவளது வாதத்தின் அபத்தம் அவளுக்கு புரியாமலில்லை. ஆனாலும் தனது சம்பிரதாய அடையாளம் ஒன்றையே அவள் பெரிதும் நம்பி, ஒட்டிக் கொண்டிருப்பதால், இதுபோல் அவளுக்கு முன்னோர்கள் வழங்கின மூட நம்பிக்கைகள், அபத்த பெருமைகளை எல்லாம் வாங்கி தலைமேல் தூக்கி கொண்டாட வேண்டியுள்ளது. இது ஒரு வசதி. மாற்றத்தை நேருக்கு நேர் ச்ந்திக்கும் திராணி இல்லாததன் விளைவு. இப்படி மாற்றம் கண்டு பதறும் மனிதன் புரியும் எதிவினைகளை புரோம் வகைப்படுத்துகிறார்: சர்வாதிகார வகை, எந்திரமனித உடன்படு முறை மற்றும் அழிவுசார் முறை. சர்வாதிகார எதிர்வினைக்கு ஹிட்லர் சிறந்த எடுத்துக்காட்டு. இத்தகைய மனிதர்கள் தங்கள் அடையாளம் சார்ந்த குறைபாட்டை பிறரை அடக்கி ஆள்வதன் மூலம் நிறைவு செய்யப் முயல்வார்கள். இரண்டாவதான எந்திரமனித உடன்படு வகை மனிதர்கள் அபர்ணா வகை. மத்திய, உயர்மத்திய வகுப்புகளை சேர்ந்தவர்கள். மூன்றாவது வகை மனிதர்கள் பிறிதை அழிப்பது மூலம் தங்கள் இருப்பை பத்திரப்படுத்த முயல்பவர்கள். சமீபத்திய பஜ்ரங்தள், எம்.என்.எஸ் மற்றும் இந்து இஸ்லாம் போன்ற மதம்சார் தீவிரவாத நடவடிக்கைகள், பழமைவாத செயல்களில் ஈடுபடுபவர்கள், துணை நிற்பவர்களை நாம் இந்த பிரிவுகளுக்குள் அடக்கலாம். நாசி ஜெர்மனிக்கும் தற்போதைய இந்தியாவுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. முதலாம் உலகப்போருக்குப் பின் ஜெர்மன் பாதுகாப்பற்றதாய் உணர்ந்தது. மக்கள் நம்பிக்கை அற்றிருந்தனர். ஹிட்லர் தன் மக்களிடம் யூதர்கள் மீது இனவெறியையும், ஆரிய சுய அபிமானத்தையும் வளர்த்தெடுத்தான். அதன் மூலம் சர்வாதிகாரியானான். இன்றைய இந்தியாவில் மக்களிடம் மாநில, மொழி, மதம் வாரியான சுய அபிமானம் முதலாம் வகை மனிதர்களால் வளர்த்தெடுக்கப்படுகிறது. மோடி, அத்வானி, தாக்ரே நமது சமகால ஹிட்லர்கள். மொழி, மத, மாநில ரீதியான கலவரங்களில் மூன்றாவது வகை மனிதர்கள் செலுத்தப்படுகிறார்கள். ஹைடெக் தீவிரவாத்தை முன்னெடுத்துப் போவது இரண்டாவது மற்றும் மூன்றாவது வகைகள்: லெப்டனண்டு கர்னல், காவி சாமியார், மென்பொருள் பொறியாளர் என மேதாவிப் படை.
இப்படியாக, தமிழக மக்களின் பழமைப்போக்கிற்கு திராவிட கட்சி அரசுகள் பொறுப்பல்ல. மேலும், தமிழர்கள் சிறந்த பகுத்தறிவாளர்களாய் பரிணமிக்கும் பொருட்டு, மேலும் பல சிலைகளை நிறுவ வேண்டியுள்ளது; வீட்டுக்கு வீடு இலவச டி.விக்கள் வினியோகிக்க வேண்டியுள்ளது. பல சாலைகள், சந்து, பொந்துகளுக்கும் தலைவர்களின் திருநாமங்களை சூட்டியாக வேண்டும். ஆகையால் மக்களின் பரிணாமத்துக்கு போதுமான கால அவகாசம் அளித்து திராவிட கட்சிகளையே இன்னும் பல மில்லியன் ஆண்டுகள் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
Read More

முத்துக்குமரன்: காங்கிரசைக் கடித்த கயிற்றரவு

ஒசாமாவுக்கும் பிரபாகரனுக்கும் ஒரு ஒற்றுமை: இரண்டு பேரையும் வளர்த்து விட்டவர்களே இப்போது கொல்லத் துடிக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் நிலைபெறும் முன்னர் இந்தியாவில் சிலகாலம் ஒளிவில் இருந்தார் பிரபாகரன். அப்போது தமிழக போலீசிடம் ஒரு சில்லறை கேசில் மாட்டிக் கொண்டார். பிடிபட்டது பெரிய மீன் என்பதை அறிந்த, அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு அவரை சிங்கள அரசுக்குக் கொடுக்காமல் கையில் துருப்புச் சீட்டாகக் கொண்டு ஒரு ரம்மி விளையாடிப் பார்க்க முடிவு செய்தது. இலங்கைக்குத் தலைவலி கொடுக்கும் நோக்கத்துடன் விடுதலைப்புலி இயக்கத்துக்கான ராணுவப்பயிற்சியை தில்லியில் இந்திய ராணுவ அதிகாரிகள் மூலம் அளித்து, பொருளுதவி செய்து, பிரபாகரனுக்குப் பாதுகாப்பு அளித்து காங்கிரஸ் கட்சி நெட்டி முறித்து சுற்றிப் போட்டு, இன்றைய மாபெரும் ஈழ நரபலிக்கு வித்திட்டது. அமெரிக்கா அப்கானிஸ்தானில் பொம்மை அரசு நடத்துவது போல் நேரடியாக அல்லாவிட்டாலும் மறைமுகமாக இலங்கை அரசை புலிகளைக் காட்டி மிரட்டிக் கட்டுப்படுத்தலாம் என இந்திய அரசு அப்போது கனாக் கண்டிருக்கலாம். ஆனால் பயிற்சிக்குப் பின் இலங்கை திரும்பின பிரபாகரன் காங்கிரஸ் அரசு விரித்த சீட்டுக்கட்டில் ஒன்றாக அமர மறுத்ததுமே இருவருக்குமான உறவு கசந்துவிட்டது. உடனே காங்கிரஸ் கூச்சமின்றி சிங்கள ஆதரவு பல்டி அடித்தது. வன்முறையாளனைவிட சஞ்சல புத்திக்காரன்தான் அதிக அபாயமானவன். இலங்கை அரசு இன்றும் கூட இந்தியா என்றால் ஒட்டி உரசாது; எட்டி நின்றுதான் விரல் கோர்க்கும்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது ராஜீவ் படுகொலைக்கு முன்பே புலிகள் - காங்கிரஸ் உறவு கசக்க ஆரம்பித்தது என்பதும், அப்பகைக்குக் கொள்கை ரீதியான முகாந்திரம் ஏதும் இல்லை என்பதும். மேலும் காங்கிரஸ் அரசு தற்போது சிங்களர்களுக்கு வழங்கி வரும் ராணுவ உதவியை ஒரு காலத்தில் புலிகளுக்கும் சிறிய அளவில் வழங்கியுள்ளது, இன்றைய இலங்கை இனச் சண்டைக்கு சகுனி வேலை பார்த்து பகடை உருட்டினதே காங்கிரஸ்தான், அதனால் ராஜீவ் கொலைக்கு காங்கிரசும் பொறுப்பாகும் என்பதையும், பிரபாகரன் என்றால் உடனே ‘இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசி’விட்டதாக இருமி, கண்ணில் தண்ணீர் வரும்படி கர்ஜிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒரு நொடி நினைத்துவிட்டு மறந்துவிட வேண்டும்.

முத்துக்குமரன் மக்கள் எழுச்சி இயக்கம் எனும் கட்சி தற்போது சிவகங்கையில் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்துக்கு எதிராகப் போட்டியிட வேட்பாளரை நிறுத்தி உள்ளது. இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சினை காரணமாய் தமிழகத்தில் கடுமையாக அடி வாங்கப் போகிறோம் என்பது காங்கிரசுக்குக் கடுமையான கிலி ஏற்படுத்தி உள்ளது. ஒரு மத்திய அமைச்சர் நேற்று முளைத்த ஒரு பல்லி மிட்டாய் இயக்கத்தைப் பொருட்படுத்தலாமா? ஆனால் "குண்டூசி வைக்கக்கூட இடம் தரமாட்டேன். ஆனால் பெண்டாட்டி முந்தானையைப் பிடித்து இழுப்பேன்" என்று துரியோதனன் முரண்டு பிடித்தது போல் மேற்சொன்ன எழுச்சி இயக்கத்தை பிரச்சாரம் செய்ய விடாமல், நோட்டீஸ் அடிக்க விடாமல் போலீஸ் மற்றும் குண்டர்கள் கொண்டு ஒடுக்குவதில் பா.சிதம்பரம் மும்முரமாக உள்ளார்.

முத்துக்குமரன் கட்சி பிரச்சாரம் செய்ய அனுமதி கோரிய போது போலீஸ் துணை ஆய்வாளர் விதித்த விதிமுறைகள் விசித்திரமானவை: " நீங்கள் காங்கிரசுக்கு எதிராகப் பேசக்கூடாது, முத்துக்குமரனைப் பற்றிக் குறிப்பிடவே கூடாது, பா.சிதம்பரத்தைப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது (அதற்கெல்லாம் ஜேவுக்கு மட்டும்தான் உரிமை), மீறினால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெயிலில் வரமுடியாதபடி உள்ளே தள்ளிவிடுவோம்". பிரச்சார நோட்டீசுக்கான அனுமதிக்கு விண்ணப்பித்த போதும் முழு எண்களில் இருந்தால்தான் அனுமதி, அல்லாவிட்டால் மொத்த நோட்டீஸ் கட்டுகளும் அழிக்கப்படும் என்றது போலீஸ். போலீஸை சாந்தி செய்தால்கூட பிரசுரம் செய்ய அச்சகத்தார் தயாரில்லை. ஏனெனில் கடந்த மாதம் சிவகங்கைப் பகுதி அச்சகத்தார் மொத்தம் பேரையும் கூட்டின போலீஸ் உயர் அதிகாரிகள் "முத்துக்குமரன் சம்மந்தமாய் எந்தத் துண்டும் பிரசுரம் ஆகக் கூடாது, இல்லாவிட்டால்..." என்று தொப்பையைப் பெருக்கிக் காட்டி பயமுறுத்தி உள்ளனர். பரவாயில்லை! மக்களிடமே நேரடியாகப் பேசுவோம் என்று எழுச்சிக் கட்சியினர் நேரடிப் பிரச்சாரத்தில் இறங்கினால் ஒரு லாரி முழுக்க காங்கிரஸ் அபிமான ரவுடிகள் அவர்களை நாள்முழுக்கப் பின்தொடர்ந்துள்ளனர்.

ஒரு நாள் ஆலங்குடியில் அனுமதி வாங்கின பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள முத்துக்குமரன் கட்சியினர் 12 பேர் செல்ல, அவர்களைச் சூழ்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் "ஓத்த தேவடியாப்..." என்று வசை பொழிந்தபடி கல்லெடுத்து வீசினர். காவலுக்கு நின்ற போலீசாரோ கற்பனையில் கோமணம் இழுத்து கதர் நூற்றபடி அகிம்சைப் போராட்டம் நடத்தினர். காங்கிரசார் நேரடியாய்த் தாக்க ஆரம்பித்த போதுதான் போலீஸ் தலையிட்டது. நிற்க. நீங்கள் நினைப்பது போல் வன்முறையில் ஈடுபட்ட காங்கிரஸ் குண்டர்களைக் கைது செய்யவில்லை. மாறாக, முத்துக்குமரன் கட்சியினரிடம் " நீங்கள் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து பிரச்சாரம் செய்தது தவறு, வேட்பாளர் இன்றி வந்தது குற்றம்" நொள்ளை சொல்லி அவர்களைக் கலைந்து போகச் சொன்னார்கள். என்ன, தெலுங்கு சினிமா போல் உள்ளதா? பிறகும் நகைச்சுவை போதவில்லை என்று தோன்ற, போலீசார், ஐம்பதுக்கும் மேற்பட்ட காங்கிரசாரைத் தாக்கினதாக 12 மு.கு கட்சியினர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது. கைது செய்து அவர்களை உள்ளே தள்ளியது. மு.கு கட்சி அமைப்பினர் உண்ணா நிலைப் போராட்டம் மேற்கொண்ட பின்பு தான் இவர்கள் வெளியே விடப்பட்டனர்.
"அரசியல் சாக்கடை" என்று வேட்டி நுனி தூக்கி நடப்பவரை பயந்தாங்கொள்ளி மத்திய வர்க்கம் என்று விமர்சிப்பவர்கள், படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோருபவர்கள் பத்தாம்பசலிகள். இன்றைய நிலைமையில் பெரிய கட்சியினரை எதிர்த்து தேர்தலில் நிற்கும் ஆகிருதி கொண்டவர்கள் தமிழக வக்கீல்கள் மட்டுமே. போலீசார் மற்றும் குண்டர் படையை நேரிட சோற்றுப் பொதி கல்லூரி மாணவர்களும், மாத-வருமான லட்சிய மாமாக்களும் உள்ளடக்கின எளிய மனிதர்களின் கூட்டமைப்பால் முடியாது. இக்கட்சியின் அமைப்பாளர் ஒருவர் என் நண்பரிடம் மேற்சொன்ன தகவல்கள் தொடர்பான பல அதிர்ச்சியூட்டும் அனுபவங்களைச் சொல்லிப் புலம்பியிருக்கிறார். நான் பிறகு அவரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அந்த அமைப்பாளர் "போலீஸ் உளவாளியோ" என்ற அச்சத்தில் தயங்கினபடி பல் கிட்டிக்க "அதாவது ... ங்க" என்று துண்டுத் துண்டாய்ப் பேசினார். அந்த அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார்.
ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமரன் உயிர்த்தியாகம் செய்யும் முன், 'எதிர்காலத்தில் உன் பெயர் முதலில் போற்றப்பட்டு பிறகு அதைச் சொல்வதே தடை செய்யப்படும்' என்ற உண்மையை காலன் ஏறி வந்த எருமை அவர் காதில் கிசுகிசுத்திருந்தால், தமிழ்ச்சிந்தனையின் அபத்தம் அவருக்கு விளங்கியிருக்கும். ஒரு வேளை இறுதியாய்ப் புன்னகைத்திருப்பார். கரிப்பான புன்னகை.
Read More

போலியோ: ஒரு பாம்பு--ஏணி ஆட்டம்




"காட்பாதர்" பட புகழ் பிரான்சிஸ் பொர்டு கப்போலா குழந்தைப் பருவத்தில் போலியோவால் தாக்கப்பட்டார். அந்த அனுபவத்தை சொல்கிறார்:
"ஒன்பது வயதில் போலியோ காரணமாய் என்னை ஒரு அறையில் பூட்டி வைத்தார்கள். அது குழந்தைகளுக்கு பரவும் நோய் என்று நம்பி பிற குழந்தைகளிடம் இருந்து என்னை விலக்கி வைத்தார்கள். நண்பர்களுக்காகவும், உடனிருப்புக்காகவும் ஏங்கியபடி படுக்கையில் கட்டுண்டு கிடந்தது நினைவுள்ளது"
கலாச்சார முன்முடிவுகள் காரணமாய் குறிப்பிட்ட சாதிகளை ஒடுக்கும் சமூகம் அறிவியல் விழிப்புணர்வின்மையால் ஊனர்கள் விலக்கி வைத்து தனிமைப்படுத்துகிறது. இங்கு நான் எடுத்தாண்டுள்ள பகுதியில் கப்போலா தனது உற்றமும், சுற்றமும் போலியோ "குழந்தைகளுக்கு பரவும் நோய்" என்ற மூட நம்பிக்கை கொண்டிருந்ததை குறிப்பிடுகிறார். இன்றும் நம் சமூகத்தில் ஊனம் பற்றின குறைபட்ட புரிதலே உள்ளது. பல் பொடி, பஸ்ரூட், பால் விலை போன்ற அன்றாட வாழ்க்கைத் தகவல்களில் மட்டுமே மக்களுக்கு ஆர்வம். மிகவும் விசித்திரமாக, படித்தவர்களில் பலரிடம் இந்த மனப்பான்மை உள்ளது. என் அண்டை வீட்டு டவுன் சிண்டுரோம் குழந்தையை எங்கள் தெருவில் அனைவரும் பைத்தியம் என்றே குறிப்பிடுகின்றனர். இன்போசிஸில் பணி புரியும் என் மனைவியின் மாமாவுக்கு அனைத்து போலியோக்காரகளும் சக்கர நாற்காலியில் தள்ளிச் செல்ல வேண்டியவர்கள் என்று புரிதல். என் திருமணத்தை அவர் எதிர்க்கக் காரணம் தமாஷானது. அவர் என் மனைவியிடம் சொன்னார்: "அபிலாஷுக்கு தேவை ஒரு மனைவி அல்ல, கூட மாட அவனுடன் இருக்க ஒரு செவிலி. அவனை கட்டிக் கொண்டால் வீல் சேர் தள்ளியே முடங்கி விடுவாய்". சாதி, மதம், பால் போன்ற வேறுபாடுகளால் நாம் பிளவுபடுவதற்கும் அன்னியமானவற்றை அறிய அணுவும் ஆர்வமில்லாத கிணற்றுத் தவளைத் தன்மையே முக்கிய காரணம். ரோபோட்டிக்ஸ் மேற்படிப்பு படிக்க விரும்பும் என் மனைவியின் தம்பியை கால் கழுவாமல் வீட்டுக்குள் வந்ததற்கு கண்டித்தால் அவன் பதில் "எனக்கு என்ன தீட்டா?". அவனுடன் வாக்குவாதம் நேரும் போது என் மாமியார் கூறுகிறார்: "நீ ஒரு ...பயல்". என் மாமியார் கேந்திர வித்தியாலயா ஆசிரியர். சரியான தகவல்கள் உண்மையை கட்டுவிக்கின்றன; உண்மை மனவிரிவு தருவது. இந்த தகவல் யுகத்தில் எளிய தகவல்களை பலவற்றை வசதியாக தவிர்க்கிறோம்.
போலியோ பற்றின என் பெற்றோரின் அறியாமை என் பால்யம் முழுதையும் அலைகழித்தது.
பள்ளி நிர்வாகம் என்னை எல்.கே.ஜியில் தோற்கடித்தது. வேறு பள்ளிக்கு மாற்றி விடுமாறு கேட்டுக் கொண்டது. காரணம் நான் படிக்காதது அல்ல: "பையனை சதா கண்காணிக்க முடியாது, விழுந்து கிழுந்து தொலைத்தால், நாங்கள் பொறுப்பாக முடியாது". இத்தனைக்கும் கன்னியாஸ்திரிகள் சேவை அடிப்படையில் நடத்தின கல்வி நிறுவனம். பொது இருக்கையில் என்னால் அமர முடியாது என்று பெற்றோரும், நிர்வாகமும் அபத்தமாய் நம்பியதால், ஒரு வருடம் அப்பள்ளியில் என்னை தனி இருக்கை, மேசையில் ஓரமாய் அமர்த்தினார்கள். தனியாய் இருந்த காரணத்தால் என்னிடம் யாரும் பேசவில்லை. புதுப்பள்ளியில் சேர்த்த பின்னரும் இதே நிலைமை. பத்தாவது வயது வரை எனக்கு பேச, பழக நண்பர்கள் இல்லை.
இளம்பிள்ளை வாதம் இளம்பிள்ளைகளை மட்டும் பாதிக்கிற நோய் அல்ல. வளர்ந்தவர்களுக்கும் போலியோ வரும்.
குழந்தைகளில் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் போலியோவால் வாதம் வரும் என்றால் வளர்ந்தவர்களில் எழுபத்தைந்தில் ஒருவருக்கு "இளம்பிள்ளை வாதம்" வரலாம். போலியோ வாதம் கை, கால்களின் நோய் அல்ல. மைய நரம்பு மண்டலத்தை வைரஸ் தாக்குவதால் நேர்வதே இது. மேலும் நுட்பமாய் சொல்வதென்றால் முதுகுத்தட்த்தில் உள்ள கிரே மேட்டர் எனும் பகுதியின் மோட்டார் நரம்பணுக்கள் போலியோ கிருமியால் அழிக்கப்படுகின்றன. இதனால் உறுப்புகளுக்கும் மூளைக்குமான தொடர்பு அறுகிறது. தகவல்கள் போய் சேராமல், மூளையின் தூண்டுதல் இல்லாமல் கை, கால்கள் சூம்பும், வலுவிழக்கும், கட்டுப்பாடின்றி துவளும், இறுதியில் வாதம் நேரும். போலியோ நோயில் மூன்று வகைகள் என்றாலும் முதுகுத்தண்டு போலியோ தான் பெரும்பாலானோரை பாதிப்பது. ஆதிகிரேக்கர்கள் இதை அறிந்திருந்தார்கள்: போலியோ மெலிடில் எனும் கிரேக்க வார்த்தைகளுக்கு "சாம்பல்" + "வீக்கம்" என்று பொருள் கொள்ளலாம். இதில் "சாம்பல்" முதுகுதடத்தின் கிரே மேட்டரைக் குறிக்கிறது. "வீக்கம்" போலியோ தாக்குதலில் கிரே மேட்டா¢ல் காணப்படும் வீக்கத்தை சொல்கிறது. நம்மில் பலருக்கு போலியோ ஊனத்தில் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மோட்டார் மட்டுமே பாதிக்கப்படுகின்றன; உணர்வு நரம்புகள் அழிவதில்லை என்ற தகவல் தெரிவதில்லை. ஆதிகிரேக்கர்கள் போல் வாதத்துக்கும், காயத்துக்குமான வேறுபாடு பொதுமக்களில் படித்தவர்களுக்கே தெரிவதில்லை. போலியோ ஊனர்களின் கால்களில் உணர்விருக்காது அல்லது நடக்கையில் பயங்கரமாக வலிக்கும் போன்ற மூட நம்பிக்கைகளை இவர்கள் கொண்டுள்ளார்கள்.
என் பெற்றோர்களுக்கு போலியோ வாதம் என்பது கால்களின் பலவீனம் என்ற தவறான புரிதல் இருந்தது. அவர்கள் சந்தித்த பல புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியர்களும் அதையே கூறினர். விளைவாக என் வாழ்வின் முதல் ஐந்து வருடங்கள் எண்ணை தடவப்பட்டு, ஊறுகாய் போல் ஊறிக் கிடந்து கழித்தேன்.
தோலோடு போகும் எண்ணெய் எப்படி நரம்புகளை உயிர்ப்பிக்கும் என்ற எளிய கேள்வியை இன்னமும் யாரும் இந்த மூட எண்ணெய் வைத்தியர்களிடம் கேட்டபாடில்லை. தேனாம்பேட்டை சேர்ந்த என் நண்பர் கால்களுக்கு இது போன்ற ஒரு நரம்பிய பாதிப்பால் வாதம் வந்து சூம்பி விட்டது. அவற்றை பழையபடி சதைபிடிக்க வைக்கிறேன் என்று சமீபமாய் ஒரு ஆயுர்வேத மருத்துவர் போலியாய் வாக்குறுதி தந்தார்; நண்பர் அதை நம்பி கோயம்பத்தூரில் அம்மருத்துவரது மருத்துவமனையில் சேர்ந்தார். ஒரு மாதம் எண்ணெய் பிழிவு, பிரத்தியேக உணவு, கஷாயம் என்று கழித்தார். கால் ஒரு இஞ்சு கூட பருக்கவில்லை. மருத்துவரை என் நண்பர் வினவ அவர் "ஏறி மிதித்து விடுவேன்" என்று மிரட்டியிருக்கிறேன். 15,000 ரூபாய் இழந்தது பரவாயில்லை என்று ஓடி வந்து விட்டார். அங்கு மாட்டிக் கொண்ட நூற்றுக்கணக்கானோர் இப்போதும் டேப்பால் தங்கள் கால்களை அளந்தபடி காத்திருக்கிறார்கள். போலியோ தடுப்பூசி போடாததை பற்றி நான் என் பெற்றொரை குற்றம் சாட்டினது இல்லை. அவர்களது அறியாமையால் பிற்பாடு பல போலி வைத்தியசாலைகளின் எண்ணெய் வீச்சத்தில், இருளில் என் பால்யம் ஆவியானதை மன்னிக்க முடிவதில்லை. உலகின் ஆகப்பெரும் குற்றம் மடமைதான், குறிப்பாய் படித்தவர்களது அறியாமை: என் அப்பா ஒரு வங்கி அதிகாரி.
என் வாழ்வின் முதல் 15 வருடங்களை எந்த அடிப்படையும் அற்ற சிகிச்சை முறைகளில் வீணடித்திருக்கிறேன். ஒரு சம்பவம் மட்டும் கூறுகிறேன்.
எங்களூரில் ஒரு வைத்தியர் திடீரென்று அவதரித்தார். அவர் தனது குரு இமயமலையில் தவமிருக்கும் ஒரு ரிஷி என்று கூறிக் கொண்டார். அவரை என்னிடம் அழைத்து வந்தார்கள். அப்போது தரையில் ஊர்வதால் எனது முட்டிப் பகுதி கறுத்திருந்தது. அந்த தோல் கறுப்பை ஒரே நாளில் மாற்றி விடுகிறேன் என்று அவர் வாக்களித்தார். பிறகு காலை நீவிப் பார்த்தவர் மூன்றே மாதத்தில் என் வாதத்தை குணப்படுத்தி விடுவதாய் சொல்லி எனக்கு சிகிச்சை ஆரம்பித்தார். என் பசியை பயங்கரமாய் தூண்டும்படி ஒரு லேகியம் தந்தார். நான் கர்பிணிப்பெண் போல் தினசரி இரண்டு மடங்கு உணவு புசித்தேன். சாப்பாடு மூலம் என் கால் தசைகளை வளர்த்து என்னை நடக்க வைப்பதே அவர் நோக்கம். காலுக்கு எண்ணெய் தேய்த்து இரண்டு மணி நேரம் மரக்கட்டிலில் படுக்க வைத்தார். கடுமையான உணவுக் கட்டுப்பாடுகள் வேறு. உணவில் புளி, உப்பு, எண்ணெய் சேர்க்கக் கூடாது. மூன்று மாதத்தில் 55இலிருந்து என் எடை 75க்கு தாவியது. கால் மட்டும் பெரிய உடலில் குழந்தை போல் சிறிதாய். மூன்றாவது மாதம் அந்த மகாவைத்தியர் ஊரிலிருந்து மாயமானார். 75 கிலோ எடையை குறைக்க எனக்கு அடுத்து பத்து வருடங்கள் ஆகின. இந்த அதிக எடை காரணமாய் பல பெண்கள் என்னை நிராகரித்தார்கள். கழிவிரக்கத்தில் நான் இலக்கியவாதி ஆனேன். அந்த லேகியம் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.
தண்டுவடத்தின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளது, எவ்வளவு வைரஸ்கள் தாக்கின, பாதிக்கப்பட்டவாரின் எதிர்ப்பு சக்தி ஆகியன பொறுத்து எப்பகுதியில் (கை, கால்) வாதம் வரும் மற்றும் வாதத்தின் தீவிரம் என்ன என்பன முடிவாகும். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, தரையில் தவழ்ந்தபடி, முட்டியில் கையூன்றியபடி பல விதங்களில் ஊனர்கள் இயங்குவதை பார்த்திருப்பீர்கள். கால் முழுக்க பாதிக்கப்பட்டவர்களும் கூட காலிப்பர் அல்லது பிரேஸ் எனும் கருவியை பூட்டிக் கொண்டு நடக்கலாம். அது அவசியமும் கூட. காலிப்பர் பலவீனமான கால்களின் பக்க வலுவுக்காக பூட்டப்படுவது. இது காலுக்கு பாதுகாப்பும் அளிக்கும். இதில் இரண்டு வகை. இரும்புக் கம்பிகளால் செய்யப்படும் கனமான பழைய வகை; பிளாஸ்டிக் போல தோற்றமளிக்கும் ஆனால் உடையாத மூலப்பொருளால் செய்யப்படும் லேசான நவின கருவி. பலரும் பழைய வகை இரும்பு காலிப்பரைதான் பயன்படுத்துகிறார்கள் (விலை ரூ 1000 இருந்து 3000 வரை). நவீன காலிப்பர் கொஞ்சம் செலவு அதிகம் (ரூ 10,000). ஆனால் பலரும் காலிப்பரை பயன்படுத்துவதில்லை. போலியோ பாதித்தவாரின் கால் எலும்புகள் வலுவற்றவை. சாதாரணமாய் வழுக்கி விழுந்தால் எலும்புகள் முறிந்து, பிறகு காயம் ஆற மாதங்கள் ஆகும். காலிப்பர் அணிவது வீழ்ச்சியின் போது காலை முறிவிலிருந்து காப்பாற்றும். அது மட்டுமல்ல போலியோவால் வளைந்த முட்டிப்பகுதி வளைந்திடாமல் தடுக்கவும் இது அவசியம். சினிமாவிலும், நிஜ்வாழ்விலும் நீங்கள் பார்க்கும் ஊனர்கள் கைகளை முட்டியில் ஊன்றி அல்லது சிறு சாய்வுடன் நடப்பவர்களே. காரணம்: காலிப்பர் கருவியின் கனம், அது காலை கட்டுப்படுத்துவது பிடிக்காமல் போவதால் அதைத் தவிர்ப்பது ஒரு புறம், பெற்றோர்களே அதை ஊக்குவிக்காதது மற்றொரு புறம். பொதுவாக இக்கருவியை அணியாமல் நகர்வது இயல்பானது, சுதந்திரமானது என்றொரு தவறான எண்ணம் உள்ளது. அசோக் நகரில் உள்ள பல்லவா ஆஸ்பத்திரியின் எலும்பு சிகிச்சை மருத்துவர் அச்சுத ராமராஜு 18 வருடங்கள் போலியோக்காரர்களுக்கு சிகிச்சை அளித்தவர். என் காலிப்பரை கவனித்த அவர் "நீங்கள் இதை அணிவது ரொம்ப பாராட்டத்தக்கது ... ரொம்ப பேர் காலிப்பர் அணியாது காலை முறித்துக் கொண்டு, எளிதில் குணமடையாமல் என்னிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள்" என்றார். நான் அவரிடம் ஒன்றை சொல்லாமல் மறைத்தேன்: 25 வயது வரை நான்கூட காலிப்பரை தவிர்த்து முட்டியில் ஊன்றி நடந்து வந்தேன், ஒரு விபத்து நடக்கும் வரை.
நான் முட்டியில் கால் ஊன்றி நடக்க ஆரம்பித்தது 12 வயதில். என் மொத்த குடும்பமும் இதை ஆமோதித்தது. இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அவர்கள் தாம் செய்தது பெரும் தவறு என்பதை உணரவில்லை. இப்படி நடந்ததில் நான் வழக்கமாய் மாதம் ஒருமுறை விழுந்து கால் சுளுக்கிக் கொள்வேன். ஆனாலும் காலிப்பர் மீதான வெறுப்பால் தொடர்ந்து அதை அணிவதை தவிர்த்தேன். 13 வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள் விடிகாலை கழிப்பறைக்கு செல்லும் போது எப்போதும் போல் வழுக்கி விழுந்தேன். ஆனால் இம்முறை சுளுக்காமல் முட்டி எலும்பு முறிந்தது. காயம் ஆறி நடக்க எனக்கு 6 மாதங்கள் ஆகின. கிடைத்த முதல் வேலை பறி போனது. அதன் பிறகு இன்று வரை இரவு தூங்கும்வரை நான் காலிப்பரை கழற்றுவதில்லை.
என் பக்கத்து வீட்டில் ஒருவருக்கு போலியோ பாதிப்பால் கால் வாதம். ஆனால் சைக்கிள் ஓட்டுவது, ஏறித்தாவுவது, ஓடுவது போன்ற பல சாதனைகளை செய்தார். அவரோடு ஒப்பிட்டு அப்பா என்னிடம் சொல்வார்: "அவன் ஏழை, அதனால் ஊனத்தை பொருட்படுத்தாது நடக்கும் அவசியம், ¨தைரியமாக நடக்கிறான். உன்னை சொகுசாக வைத்திருக்கிறோம் என்பதால் இருந்த இடத்தில் சுகம் கண்டு விட்டாய். நடக்க நீ முயற்சி எடுப்பதில்லை; உனக்கு மன ஊக்கம் இல்லை". அப்புறம் அவர் எம்.ஜி.ஆர் தொண்டையில் சுடப்பட்டு விட்ட பின்னரும் "தத்ததின் தத்தமே" என்று கடுமையாய் முயன்று பேசிய்தை மிமிக்ரி பண்ணிக் காட்டுவார். என்னை தூக்கி நிறுத்தி விட்டு, "உன்னை அறிந்தால் ..., நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா..." போன்ற பாடல்களை பாடி "வா... ஓடி வா" என்று தள்ளிப் போய் நின்று ஊக்கமூட்டி அழைப்பார். முடியாமல் நான் சப்பென்று அமர மறுபடி வைவார். பிறகு பிடித்து நடப்பதற்கு பக்கவாட்டில் கழிகளை கட்டி அதில் பயில வைத்தார். இத்தனை கொடுமைக்கும் காரணம் அவருக்கு ஒரு முக்கியமான தகவல் தெரியாமல் இருந்ததே: நான் நடக்காததற்கும், அயல் வீட்டு சிறுவன் தாவிக்குதித்ததற்கும் காரணம் காலுக்கும், மூளைக்குமான நரம்பியல் தொடர்பே, ஊக்கமல்ல.
போலியோ பாதிப்பால் மூளைத்தண்டு மற்றும் முதுகுத்தடத்தில் பல மோட்டார் நரம்பணுக்கள் இறந்து விடும். ஆனால் பிற்பாடு அவற்றில் மீதமுள்ள நரம்பணுக்களில் முளைகள் கிளைக்கும். இவை வீங்கின நரம்பணுக்கள் ஆக மாறும். 200 தசை செல்களை மட்டுமே கட்டுப்படுத்தி வந்த ஒரு ஒற்றை நரம்பணு (முளை) இப்போது 1000 செல்களை வரை கட்டுப்படுத்தி அதிகப் பணி செய்யும். இந்த முளை நரம்பணுக்களால் தான் போலியோ பாதிக்கப்பட்டு ஒரு வருடமான பின்னும் சிலர் நடக்கும் திறன் பெறுவது. இந்த நரம்பு முளைகள் இவர்களின் கால் தசைகளுடன் மூளைக்கு தொடர்பு ஏற்படுத்திட, கால்கள் உயிர்க்கும், வளரும், வலுப்பெறும். என் பக்கத்து வீட்டு ஊனருக்கு இதனால்தான் நடக்கவும், ஓடவும், சைக்கிள் மிதிக்கவும் முடிந்தது; இதில் மனவலுவை கொண்டாட ஒன்றும் இல்லை.
எனக்கு ஆரம்பத்தில் இரண்டு கால்கள் செயலிழந்தாலும், மேற்கூறின முளை நரம்பணுக்கள் தோன்றி ஓ.டி செய்ததால் வலது கால் ஓரளவு செயலூக்கம் பெற்றது. காலின் மிதிக்கும் தசைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், தூக்கும் திறன் கிடைக்கவில்லை. அந்த தசைகளுக்கு நரம்பியல் தூண்டுதல் இல்லை. இதனால் என்னால் இரண்டு சக்கர வாகனத்தை சமனிலை தக்கவைத்து ஓட்ட முடியாது. கூட இரண்டு சக்கரங்கள் பொருத்துவது அவசியம் என்று கருதினேன். ஆனால் என் பெற்றோர், உறவினர், அண்டை அயலார் நான் தைரியம் வளர்த்துக் கொண்டு இரண்டு சக்கர வண்டிதான் ஓட்ட வேண்டும் என்பதில் விடாப்பிடியாய் இருந்தனர். நான் வண்டி ஓட்ட தயாரான கதை சுவாரஸ்யமானது, சற்று கசப்பானதும் கூட.
பெற்றோர்களும், உறவினர்களும் இரண்டு சக்கர வண்டியை ஓட்டிப் பழக எனக்கு ஒரு வருடம் அவகாசம் அளித்தார்கள். நாகர்கோவிலில் ஒரு ஊனப் பெண் இரண்டு சக்கர ஸ்கூட்டரை லாவகமாக ஓட்டி பிரபலமாக இருந்தாள். அவளிடம் என்னை ஒப்பிட்டு அடிக்கடி பேசி வந்தவர்கள் ஒரு நாள் அவளைக் காட்ட அவள் வீட்டுக்கே அழைத்துப் போனார்கள். அந்த அழகான பெண் ஒரு காலில் நவீன பாணி காலிப்பர் அணிந்திருந்தாள். அதில் ஆட்டோமெட்டிக் லாக் எனும் அமைப்பு இருந்தது. அவள் முன்னங்காலை அழுத்தினால் முட்டி மடியும், நிமிர்த்தினால் பழையபடி நேராக பூட்டி விடும். சுலபமாக அவள் பலமுறை ஏறி ஓட்டிக் காமித்தாள். அவளது மற்றொரு காலில் செயல்திறன் இருந்ததை, அவள் நவீன பாணி கால் கருவி அணிந்திருந்ததை யாரும் கவனிக்க வில்லை. மாறாக "ஒரு பொம்புளப் புள்ள ஓட்டுறாப் பாரு, உனக்கென்ன பயம்" என்று என் தலையில் குட்டினார்கள். தன்மானத்துக்காக முயற்சிப்பதாய் சத்தியம் செய்தேன். தினமும் என் அத்தான் எனக்கு ஸ்கூட்டர் பழக்கினார். நான் ஓட்டி வருவது பார்த்தால் சாலையில் சிதறி ஓடினார்கள். ஒரு நாள் விபத்தானது. அத்தானுக்கு விரல் முறிய, நான் தப்பித்தேன். எனக்காக வண்டியில் இரண்டு சக்கரங்கள் அதிகப்படியாய் பொருத்துவது தான் நல்லதென்று அன்று என் குடும்பத்தினர் முடிவு செய்தார்கள். இன்று வரை அதே வண்டியைத் தான் ஓட்டுகிறேன். ஒரே முறை இரண்டு சக்கர வண்டியில் காற்றைக் கிழித்துப் போவதாய் நான் கனவு கண்டதைத் தவிர.
போலியோ என்றால் கை, கால் முடங்கிப் போகும் கொடிய வியாதி, தடுப்பூசி போடாவிட்டால் கட்டாய ஊனம் போன்ற கற்பிதங்கள் பல உள்ளன.
தடுப்பூசி போடாமல் விட்டால் போலியோ வாதம் வரும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. போலியோ நரம்பு மண்டலத்தையோ தசைகளையோ தாக்கும் வழக்கமுள்ள நோய் கூட அல்ல. போலியோ கிருமிக்கு அப்படியான உத்தேசம் ஒன்றும் இல்லை. வாய் அல்லது ஆசன துளை வழி உட்புகும் இக்கிருமி ஜீரண-சிறுகுடல் பிரதேசங்களை தான் முதலில் ஆக்கிரமித்து பெருகுகிறது. தன் தொகை ஸ்திரப்பட்டதும் அது ரத்தத்தில் கலந்து உடலின் பல பாகங்களுக்கு பயணமாகும்; அப்போது மிக எதேச்சையாக இவ்வைரஸ் பாதை திரும்பி மைய நரம்பு மண்டலத்தை அடைந்து தாக்குகிறது. தாக்கப்பட்டவரில் மூன்று சதவீதத்தினரின் உடலில் மட்டுமே இந்த போக்குவரத்து திருப்பம் நடக்கிறது. இதனால் இக்கிருமிக்கு எந்த லாபமும் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். போலியோ வைரஸ் எனும் ஜீரண-சிறுகுடல் உபாதைக் கிருமியின் இந்த விபரீத நிரல் மாற்றத்தின் காரணம் இன்னமும் அறிவியல் அறிஞர்களுக்கு புரியவில்லை.
இந்த மூன்று சதவீதத்தினரில் ஆயிரத்தில் ஒருவருக்கே கை, கால் செயலிழக்கின்றன. மிச்ச நபர்களுக்கு அசெப்டிக் மெனிங்கிடிஸ் எனும் உபத்திரவமில்லாத சில நோய் அறிகுறிகள் தென்படும்: தலைவலி, உடல் வலி, சோர்வு, வயிற்று வலி இப்படி. சில நாட்களில் வந்த சுவடே தெரியாமல் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள். அனேகமாய் இதைப் படிக்கும் உங்களில் சிலரை போலியோ தாக்கி இருக்கலாம். ஆனால் மைய நரம்பு மண்டலத்தை தாக்காமல் சின்ன உபாதைகளுடன் மறைந்திருக்கும்.
கை, கால் செயலிழப்பு கூட பாதி பேருக்கு தற்காலிகமே. ஒரு மாதத்தில் சரியாகி விடும். மிச்சத்தில் கால்வாசி பேர்கள் குறைவான பாதிப்புகளுடனும் தப்பி விடுகின்றனர். மூன்று சதவீதத்தில் கால்வாசியினருக்கே கடுமையான வாதம் ஏற்படுகிறது. இந்த விதத்தில் மரபணு ரீதியாய் வரக்கூடிய சர்க்கரை நோய், புற்று நோய், மாரடைப்புக்கும் போலியோவுக்கு பெரிய வேறுபாடுகள் இல்லை. சில நேரங்களில் தாறுமாறாய் விரையும் லாரி சாலையிலிருந்து கட்டுப்பாடிழந்து திரும்பி குடிசை டீக்கடையில் புகுந்து, விடிகாலைப் பனியில் எழுந்து கம்பளி போர்த்தியபடி, டீ உறிஞ்சியபடி கனவு கண்டு இருந்தவர்கள் மீது ஏறுவது போன்றது போலியோ ஊனம். இது மிகச்சிலரில் சிலரை மட்டுமே முடக்குகிறது.
தி. நகர் கல்யாணி கவரிங் கடை அருகே நடைபாதையில் ஒரு மாமாவிடம் கறுப்புக் கண்ணாடி வாங்கினேன். அவர் கேட்டார்: "தம்பி உங்களுக்கு விபத்தினால இப்படி ஊனம் ஆச்சா?". "ஆமாம்". அவர் சேரன் போன்ற உதட்டை சுளித்துக் கொண்டு தொடர்ந்தார்: "எல்லாம் விதிப்பா! கார் விபத்தில என் கால் போச்சு; இப்பிடி தெருவுக்கு வந்துட்டேன்...". திரும்பும் போது என் மனைவி கேட்டாள்: "ஏன் பொய் சொன்னே?"
நான் சொன்னேன்: "பொய்யல்ல, உண்மைதான்!"
ஆங்கில உரை நடையாளர் சார்லஸ் லாம்ப் சொன்னார்: "வாழ்வை திருப்பிப் பார்க்கும் போது சில பல நிகழ்வுகள் மட்டும் சிறிதே மாறியிருந்தால் நம் வாழ்க்கை முழுக்க வேறாக இருக்குமே என்று தோன்றும். எனக்கு என் வாழ்வின் முக்கியமான கட்டங்களை திருத்தி எழுதும் வாய்ப்பை கடவுள் தந்தால் பயன்படுத்த மாட்டேன். அப்படி மாற்றி அமைத்தால் அது என் வாழ்வாகாது, நான் நானாகவும் இருக்க மாட்டேன்". நமது சிக்கலான வாழ்வின் மற்றொரு சிடுக்கு மட்டுமே நோய்மை.
நரம்பணு முளைகளின் அதிக பணியால் போலியோ பாதிப்பாளர்கள் கை, கால்களில் இயங்கும் திறனை மீண்டும் பெறுவதை குறிப்பிட்டேன். ஆனால் வருடக்கணக்கான ஐந்து மடங்குப் பணியால் ஒரு கட்டத்தில் இந்த முளைகள் பலவீனமாகி இறந்து விடும். இதனால் படுக்கையிலிருந்து மீண்டு உலகை துடிப்பாக எதிர்கொண்டவர்கள் படுக்கைக்கு திரும்ப நேரும். இந்நிலையை பின்-போலியோ நோய்க்குறி (post-polio syndrome; pps) என்கிறார்கள். வாழ்வின் உச்சகட்ட குரூரம் இப்படி தந்து பறிக்கும் தந்திரம் தான். விஞ்ஞான புனைகதை இலக்கிய நாயகனான ஆர்தர் சி கிளார்க் ("2001: ஸ்பேஸ் ஒடிசி") ஒருமுறை போலியோ தாக்கி பிழைத்து மீண்டவர். வாழ்வு முழுதும் விஞ்ஞானம், இலக்கியம், ஸ்கூபா நீச்சல் என்று பரபரப்பாய் இயங்கியவரை முதுமையில் pps மீண்டும் தாக்கியது. கிளார்க் சக்கர நாற்காலி நிரந்தர வாசியானார். பிறகு பின்-போலியோ தொடர்பான இதய பாதிப்பால் இறந்தார். போலியோ வாழ்வை இப்படி பாம்பு--ஏணி விளையாட்டாக்குகிறது. ஒவ்வொரு நொடியையும் அருமையானதாக மாற்றுகிறது. இளமையில் ஊனத்தால் படுக்கையில் கழித்த சுந்தர ராமசாமியிடம் வாழ்வை மிச்ச வைக்காமல் பருகும் வேட்கை இருந்ததை ஜெயமோகன் "சு.ரா. நினைவின் நதியில்" குறிப்பிடுகிறார். ஹெமிங்வேயின் "கடலும் கிழவனும்" நாவலில் வரும் சாண்டியாகோவை அலைகழிக்கும் ராட்சத மீனைப் போல் போலியோ ஒரு பெரும் சவாலாக ஊனனை சீண்டியபடி உள்ளது. அவனுக்கு சோர்வு மரணம் மட்டுமே.




Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates