எதற்கெல்லாம் அஞ்சுகிறோம்? வேலை போய் விடுமோ என்று, நம்மை நட்பு வட்டத்தில் மறந்து விடுவார்களோ என்று, சமூகத்தில், வேலையிடத்தில், சொந்தங்கள் மத்தியில் மதிக்காமல் இருப்பார்களோ என்று. இந்த அச்சம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து பலவீனமாக்குகிறது. துர்சொப்பனங்களை, மன அழுத்தத்தை, தனிமையை தருகிறது. இன்னொரு புறம் வீட்டுக்குள், அலுவலகத்தில் பொறுப்பாக அக்கறையாக இயங்கவும் வைக்கிறது. ஒரு கணவனாக, பெற்றோராக, ஊழியனாக உங்களுக்கு இருக்க முழு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த அச்சம் உங்களை ஆவேசத்துடன் இந்த பணிகளை செய்ய வைக்கிறது.
இன்னொரு புறம் இந்த கணவன், மனைவி, ஊழியன், நண்பன் ஆகிய பாத்திரங்கள் உங்களுக்கு மனநிறைவை, மகிழ்ச்சியை, திருப்தியை தருகின்றன. அதற்காகவும் நாம் அப்பாத்திரங்களில் இருக்கிறோம்.
ஒரேவேளை ஒரே செயல்பாடுகள் அச்சத்தையும், நிம்மதியையும் தருவனவாக உள்ளன. இந்த முரண்பாட்டை பற்றி இன்னொரு சமயம் பேசுவோம். இப்போது நமது அச்சம் அசலானது தானா, அதில் உண்மை உள்ளதா எனக் கேட்போம்.
அலுவலகம் எனும் பெரும் எந்திரத்தில் சின்ன திருகாணி தான் நீங்கள். இதுவரை வேலை பார்த்த ஒவ்வொரு இடத்தில் பல்வேறு இடர்களை சந்தித்திருப்போம். அவற்றை தீவிரமாக கருதி கவலையும் வெறுப்பும் உற்றிருப்போம். ஆனால் இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்ததும் முந்தையை விரோதிகள், கசப்பான சூழல்கள் நம் மனதில் இருந்து முழுக்க மறைந்து விடுகின்றன. அப்படி என்றால் அவை வெறும் போலித் தோற்றங்கள் என்று தானே அர்த்தம். இப்போது நீங்கள் சந்திக்கிற தடைகள், சிக்கல், நெருக்கடிகள் அவற்றை ஏற்படுத்துகிற புது எதிரிகளும் நாளை பனி போல் காணாமல் போய் விடுவார்கள் தானே.
ஆனால் நான் இங்கே அநிச்சய ஆன்மீக கோட்பாடு பேசவில்லை. நீங்கள் ஒரு சூழலில் இருக்கும் போது அது எதார்த்தம். அங்கு பல்வேறு அச்சுறுத்தல்கள். பின் இன்னொரு புது எதார்த்தம் வருகிறது. அது அசலாக தோன்றுகிறது. முந்தையதை அசட்டையாக மறந்து விடுகிறோம்.
ஆக நாம் பல்வேறு எதார்த்தங்களுக்குள் இருக்கிறோம். இந்த எதார்த்தங்களை அவ்வப்போது உண்மையாக கருதுவதாய் சொன்னேன் இல்லையா, அது எப்படி நடக்கிறது? நாம் இருக்கிற இடத்தில் நம்முடைய பாத்திரம் மிக மிக சிறியது. அது replacable ஆனது. பொருட்படுத்தத் தகாத அளவு அற்பமானது. நீங்கள் தொலைபேசியை கையாளும் வரவேற்பாளனியாக இருக்கலாம், ஒரு இயக்குநருக்கு நள்ளிரவில் மதுபோத்தல் வாங்க அலையும் உதவி இயக்குநராக இருக்கலாம், அலுவலகத்தில் கோப்புகளில் தகவல்கள் சரிபார்ப்பவராக இருக்கலாம், பொருட்களை விற்பவராக இருக்கலாம், மென்பொருள் எழுதுபவராகவும் இருக்கலாம், உச்சபட்சமாய் நீங்கள் ஒரு நிறுவனத்தில் முடிவுகள் எடுக்கிற நிலையில் கூட இருக்கலாம். இந்த வேலைகள் உங்களால் மட்டுமே செய்யக் கூடியவை அல்ல. நீங்கள் விலகுகிற பட்சத்தில் நிர்வாகத்தால் ஒரு ஸிப்பை திறந்து மூடுகிற சிரமமின்மையுடன் உங்களிடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியும். இதை ஏற்கத் தான் உங்களுக்கு மிக மிக சிரமமாக இருக்கும். வேலையில் நாம் நடிக்கிற பாத்திரம் நாமே தான் என வலுவாக நம்பத் தொடங்கி இருப்போம். ஆனால் நீங்கள் அகன்ற மறுகணமே அலுவலகம் ஒன்றுமே நடக்க்காதது போல் தன் இயக்கத்தை தொடர்ந்து கொண்டிருக்கும்.
வேலை மீதும், கணவன், மனைவி, பெற்றோர் ஆகிய பாத்திரங்கள் மீதும் ஒன்றுதலை ஏற்படுத்துவதற்காக சமூகத்தில் பல்வேறு சடங்குகள், அங்கீகாரங்கள் நிகழ்த்தப்படுகின்றன. உதாரணமாக தம்பதிகளாக இருப்பவர்களுக்கு ஒரு உடனடி மரியாதை பரிச்சயங்களிடையே சொந்தங்களிடையே தெரியாத பிற சமூக உறுப்பினரிடையே கிடைக்கும். அதற்காக நீங்கள் உழைக்க வேண்டியதில்லை. திருமணச் சடங்கில் பங்கு பெற்று கணவனாகவோ மனைவியாகவோ உங்களை நினைத்துக் கொண்டால் போதும். வேலையிடத்தில் தினமும் நாம் மாற்றமின்றி செய்கிற பல சடங்குகள் உள்ளன. கையொப்பமிடுவது, ஒரே நாற்காலியில் அமர்வது, ஆடை சம்பிரதாயம் போன்றவை. எந்த வேலையும் பண்ணாமல் ஒரே நேரத்துக்கு போய் காப்பி டிபன் சாப்பிட்டு அரட்டையடித்து வீட்டுக்கு திரும்பும் ஊழியர்களும் இருக்கிறார்கள். தமக்கு தரப்பட்ட சின்ன சின்ன வேலைகளில் கிடைக்கிற அங்கீகாரத்தினால் தம் இடம் பற்றின உறுதிப்பாடு ஏற்பட்டு நிம்மதி கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். நாம் இல்லாவிட்டால் நிறுவனமே ஸ்தம்பித்து போய் விடும் என்கிற கணக்கில் வெறிபிடித்து வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். எல்லாரும் ஒரே மாதிரியான பாதுகாப்புணர்வை, திருப்தியை தான் அடைகிறார்கள். எல்லாரும் தாம் வேலை செய்வதாகவே நம்புகிறார்கள்.
பெரும்பாலான வேலைகள் ஒரு பாத்திரத்தில் நடிப்பது மட்டும் தான். இல்லையென்றால் நாம் இல்லாதபட்சத்தில் அலுவலகம் இயங்கவே முடியாமல் போக வேண்டும். முந்தைய அலுவலகத்தில் அச்சுறுத்தல்கள் இன்றும் அச்சுறுத்தலாகவே தொடர வேண்டும். ஒரு கணவனோ, மனைவியோ, அப்பாவோ, அம்மாவோ, மகனோ இறந்த பின் குடும்பம் சிதறி விட வேண்டும். ஆனால் உண்மையில் அப்படி நடப்பதில்லை. சில மாதங்களில் அல்லது நாட்களில் இழப்பை மறந்து அனைவரும் தத்தம் வேலையை பார்க்க போய் விடுவார்கள்.
சரி நாம் ஏதாவது ஒரு எதார்த்தத்தை, சூழலை, பாத்திரத்தை நம்பி ஏற்கத் தானே வேண்டும்? ஆம், ஆனால் அது சற்று நிரந்தரமாகவும் இருக்க வேண்டும். அது எது? நம்முடைய தனிமனிதப் பண்புகள் செல்லுபடியாகிற எதார்த்தம் தான் அது.
யோசித்துப் பாருங்கள், ஒரு அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருந்தவர் ஓய்வு பெற்றதும் மறக்கப்படுகிறார். ஆனால் முப்பது வருடங்களுக்கு முன் ஒரே நல்ல படம் எடுத்து இன்று வாய்ப்பில்லாமல் இருக்கிற ஒரு இயக்குநர் நம் நினைவில் இருக்கிறார். பாடகர்கள், கலைஞர்கள், தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் நினைவில் இருக்கிறார்கள். அவர்களின் வேலைக்கு ஒரு நிரந்தரமான பொருள் இருக்கிறது. காரணம், அவர்கள் தம்முடைய ஆளுமையை வேலையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு தனிமனிதனாக முழுசுதந்திரத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள். இங்கே இரண்டு கேள்விகள் வருகின்றன.
எல்லோராலும் தனிமனிதத் தன்மை வெளிப்படும் பணிகள் செய்ய முடியுமா? தெரியவில்லை. நம்முடைய கணிசமான வேலைகள் நம்மை பொத்தையாகவே வைக்கின்றன. சடங்குகள், சீருடை, அடையாள அட்டைகள், ஒழுக்கம் ஆகியவை நம்மை தனிமனிதத் தன்மையை களையவே தூண்டுகின்றன. தினமும் நீங்கள் சமூகத்துள் போகும் போது ஒரு வாஷிங் மெஷினுக்குள் போகிற துணியை போல அலசப் பட்டு சுத்தமாகி வெளிவருகிறீர்கள். அது நீங்கள் அல்ல. முன்பிருந்த அழுக்கு, துர்நாற்றம் ஆகியவை தான் நீங்கள்.
இந்த சடங்குகளை உடைக்க முடியுமா? சமூகத்துள் இருந்தபடி அதை செய்ய முடியாது. ஆனால் சடங்குகள் உண்மை அல்ல என நம்பலாம். அதுவே கணிசமான சாதனை தான். அடுத்து சமூகம் நமக்கு தருகின்ற வேலை அன்றி நம் ஆளுமைக்கு ஏற்ற வேறொரு பணியையும் கண்டடைய வேண்டும். அந்த பணி ஊதியமோ அங்கீகாரமோ அற்றதாகக் கூட இருக்கலாம். ஆனால் அது மிக முக்கியமானது. அது தான் நிஜமான நீங்கள். அது நிரந்தர பண்பு கொண்டது. அந்த எதார்த்தத்தை முழுமையாக நம்பலாம்.
இந்த எதார்த்தத்துக்கும் பிற போலி எதார்த்தங்களுக்கும் ஒரு முரண் இருந்து கொண்டே இருக்கும். அது நெருக்கடியாக மாறாமல் இருக்க நாம் போலி எதார்த்தங்களுக்குள் ஒட்டாமல் ஒட்டிக் கொள்ள பழக வேண்டும். அவை வெறும் தோற்றப்பிழைகள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அப்படி செய்ய முடிந்தால் வாழ்வின் கணிசமான கவலைகள், சிக்கல்கள், அச்சங்களில் இருந்து விடுபட முடியும்.
முதல் படியாக வெறும் சடங்குக்காக சமூக நிர்பந்தத்துக்கிற்காக நம்மோடு இருப்பவர்கள் மிக மிக சாதாரணமானவர்கள் என கருதப் பழகலாம். அவர்களின் கருத்துக்கள், நிலைப்பாடுகளை பொருட்படுத்த வேண்டியதில்லை. வேண்டுமென்றால் பொருட்படுத்துவது போல நடிக்கலாம்.
கணிசமான பிரச்சனைகள் பிரச்சனைகளே அல்ல. அவற்றை சரி செய்தாலும் இல்லாவிட்டாலும் நாம் எதையும் இழக்கப் போவதில்லை. நம்முடைய இடம் மிக மிக சிறியது. நம்முடைய இடத்தில் ஒட்டாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை அந்த சிறிய இடம் நமக்காக அங்கேயே தான் இருக்கும். அலுவலகத்திலோ குடும்பத்திலோ எழும் பல பிரச்சனைகளை நாம் சரி பண்ண வேண்டிய அவசியமும் இல்லை. அவற்றை ஒத்திப் போடலாம். அல்லது கவனத்தில் எடுத்துக் கொள்வது போல நடிக்கலாம். அந்த பிரச்சனைகளை சீரியஸாக எடுத்து சரி செய்ய போகும் போது தான் கணிசமான நெருக்கடிகள் தோன்றுகின்றன.
முதலில், நமது ஆளுமைக்கு இடமளிக்காத இடங்களில் ஒன்றுமே செய்யாதிருக்க பழக வேண்டும். சும்மா இருப்பதே ஒரு சிறந்த கலை. அபரிதமான சுதந்திரம். ஆனால் பிறர் நாம் மிக அக்கறையாக வேலை செய்வது போல, உறவில் இருப்பது போல நம்ப வேண்டும். போலி பிரச்சனைகளில் மாட்டாமல் இருக்க, போலி அச்சங்களை முறியடிக்க இதைவிட சிறந்த வழி இல்லை.
உங்கள் கணவன் உங்களிடம் சரியாக பேசவில்லையா? அவரை அப்படியே விடுங்கள். அவர் பேசாததனால் உலகம் இடிந்து விடப் போவதில்லை. மகன் பத்தாம் வகுப்பில் சரியாய் படிக்கவில்லையா? மேலாளர் திட்டுகிறாரா? கூட வேலை செய்பவர்கள், தினமும் பார்ப்பவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், சாப்பாடு, உடல் நிலை, சீதோஷ்ண நிலை, டி.வி நியூஸ், புது சினிமா ஆகியவை பிடிக்கவில்லையா? மாற்றவோ திருத்தவோ முயலாதீர்கள். பெரும்பாலான ஆட்களை விசயங்களை நாம் மாற்ற முடியாது. அவர்களை நமக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உலகம் அப்படியே தான் இருக்கும்.
கணவன், மனைவி, பெற்றோர், குழந்தைகள் போன்ற அணுக்கமான உறவுகளில் பிரச்சனை வரும் போது ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டாலே பிரச்சனை தானே சரியாகி விடுவதை பார்த்திருக்கிறேன். ஏனென்றால் பிரச்சனை உண்மையில் அவர்களிடம் இருந்து தான் தோன்றுகின்றன. அது அவர்களிடம் தான் முடிய வேண்டும். நீங்கள் போய் தலையை நுழைப்பது ஓடுகிற மிக்ஸிக்குள் கையை போடுவது போன்றது.
“வேலை இல்லாதவன் தான் வேலை தெரிஞ்சவன் தான்
வீரமான வேலைக்காரன் விவகாரமான வேலைக்காரன்”
மு.மேத்தாவின் இந்த பாடல் வரிகளை அடிக்கடி நினைத்துக் கொள்வேன். வேலை இல்லாமல் இருப்பது தான் உலகின் மிகச் சிறந்த வேலை.
(அமிர்தாவில் நான் எழுதத் துவங்கி உள்ள தொடரான “அறிந்ததும் அறியாததுமில்” முதல் பத்தி.)
(அமிர்தாவில் நான் எழுதத் துவங்கி உள்ள தொடரான “அறிந்ததும் அறியாததுமில்” முதல் பத்தி.)
//நீங்கள் விலகுகிற பட்சத்தில் நிர்வாகத்தால் ஒரு ஸிப்பை திறந்து மூடுகிற சிரமமின்மையுடன் உங்களிடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியும்// மிகவும் பிடித்தன... வரிகள்
ReplyDeleteவேலையற்ற வேலையாக எண்ணாமல் கருத்து பதிவிட வந்ததற்கு காரணம் பதிவு ஏதோ ஒரு விதத்தில் என்னை வசியப்படுத்தி விட்டதெனலாம்.அப்புறம் அவன் "வெவ ரமான வேலைக்காரன்"."விவகாரமான வேலைக்காரனல்ல" என நினைக்கிறேன்.தொடர்ந்து வரும் பதிவுகளை வாசிக்க விரும்புகிறேன்.வாய்க்கிறதா என பார்க்கலாம்.
ReplyDeleteநல்ல கட்டுரை. மாறுபட்ட சிந்தனை.(அபிலாஷானந்தா?)
ReplyDeleteஅட்டகாசமான ஆரம்பம்.
ReplyDeleteநன்றி முருகபூபதி, சேக்காளி, பூரணம் மற்றும் நளினி சங்கர்
ReplyDeleteநான் தினமும் சந்திக்கும் பிரச்சினைக்கு தீர்வு சொன்னது போல இருந்தது உங்கள் பதிவு. மிக்க நன்றி நண்பரே.
ReplyDeleteநீங்க உளவியல் டாக்டரா வர வேண்டியவங்க... மருத்துவ துறை miss பண்ணிடுச்சு..நல்ல கட்டுரை... வாழ்த்துக்கள்:)
ReplyDeleteநன்றி சேகர் மற்றும் செந்தில் பாபு
ReplyDeleteIt'll makes us an introvert... Being inactive in a Ralationship...!? I dnt understand the mean of those relationship... If u r considering to repair those thing, being inactive doesnt cause anything...
ReplyDeleteNice article with huge misconception and Contras.... :-9
\\வேலை இல்லாதவன் தான் வேலை தெரிஞ்சவன் தான்
ReplyDeleteவீரமான வேலைக்காரன் விவகாரமான வேலைக்காரன்//
இது குறித்து சிறிது விளக்கமாக..