Monday, 13 May 2013

சாதி சங்கங்களை தடை செய்யலாமா?

பா.ம.கவை முன்வைத்து ஜெயா சாதி சங்கங்களை தேவைப்பட்டால் தடை செய்வேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மிரட்டல் இந்நாட்டில் உள்ள சாதி பிரச்சனைகளுக்கு சாதி சங்கங்கள் தாம் காரணம் என்கிற நிலைப்பாட்டை அடிப்படையாக கொண்டது. சாதி சங்கங்கள் தாம் தமிழ் நாட்டில் உள்ள சாதி வன்முறைக்கு காரணம் என நம்மை நம்ப சொல்கிறாரா ஜெயா?
அல்லது சாதி சங்கங்கள் தடை செய்யப்பட்டு விட்டால் பெரும் கட்சிகளில் உள்ள சாதி பிரிவுகள் செயல்படாமல் இருக்க போகின்றனவா? தேர்தலின் போது கட்சிகள் சாதி அடிப்படையில் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருக்க போகின்றனவா?

இந்தியாவில் மக்கள் சாதி அடிப்படையில் தான் சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள், வாழ்கிறார்கள். சங்கங்களை தடை செய்தாலோ சாதியை பற்றி மூச்சு விடாமல் இருந்தாலோ அது அழியாது. யோசித்துப் பார்த்தால் இந்தியாவில் சாதி அடையாளமோ பிரிவினையோ அல்ல அதன் பெயரிலான ஒடுக்குமுறையும் பாரபட்சங்களும் தாம் பிரச்சனை என புரியும். இவ்வளவு மக்கள் தொகை உள்ள தேசத்தில் ஒவ்வொருவருக்கும் சம உரிமை கிடைப்பது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம். அதற்கு மக்கள் பல்வேறு பிரிவுகளாக போராடிக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. அது தான் சாதி சங்கங்களின் இருப்புக்கான நியாயம்.

பல்வேறு சாதி சங்கங்கள் இருக்கின்றன. சில சாதிகளின் பண்பாட்டில் உள்ள வன்முறை அவர்களின் அரசியலிலும் வெளிப்படுகிறது. பா.ம.கவினருக்கு நிக்ழ்வது அது தான். வன்னியர்கள் அடிப்படையில் சாத்வீகமானவர்கள் என்றும் ராமதாஸ் தான் அவர்களை வன்முறை நோக்கி தூண்டுகிறார் எனவும் கூற முடியாது. குறிப்பிட்ட சாதியினரின் தன்மைக்கு ஏற்ப தான் தலைவரும் இருப்பார். வன்முறையின் மொழி தான் அவர்களுக்கு புரியும், அவர்களை ஒருங்கிணைக்கும் என அவர் நம்பலாம். ராமதாஸ் போன்றொருவர் தான் அவர்களுக்கு தலைவராக இருக்க முடியும். மகாத்மா காந்தி அல்ல. எதிர்காலத்தில் கல்வியும் சமூக மேம்பாட்டும் இதே சாதியினரை ஜனநாயக முறைகளுக்கு திருப்பலாம். இதுவே நிதர்சனம். இந்தியா முழுக்க நாகரிகப்படாத ஒரு காட்டு தேசம். இங்கு மக்கள் இப்படித் தான் இருப்பார்கள். இங்கு ஜனநாயக முறைகள், சம உரிமை, நவீனம், அறவழி பற்றி பேசுபவர்கள் ஒரு சிறுபான்மை மத்திய, மேல்மத்திய வர்க்கம் மட்டும் தான்.

ராமதாஸ் ஒரு லட்சியபூர்வ தலைவர் அல்ல. காதல் திருமணங்களை முன்னிட்டு அவர் உருவாக்கி சர்ச்சை அருவருக்கத்தக்கது. ஒவ்வொரு முறை பிரச்சனை வரும் போதும் பொது சொத்தை அழித்து மக்களை காயப்படுத்துவதும் தவறானது. ஆனால் இது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையே அன்றி, சாதி சங்கங்களின் பிரச்சனை அல்ல. சொல்லப்போனால் சாதி சங்கங்கள் தாம் நம்முடைய அடிப்படை சாதி முரண்களை, சிக்கல்களை பொது அரங்கிற்கு கொண்டு வந்து விவாதிக்கவும், நேரிடவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரித்தான உரிமைகளை பெற்றுத் தரவும் ஒரு தளத்தை உருவாக்குகின்றன.
இப்போது மட்டுமல்ல இனி எதிர்காலத்திலும் நாம் பல சாதிகளாக பிரிந்து தான் இருக்க போகிறோம். ஆனால் நம்மால் இந்த பிரிவுகளின் மத்தியில் சுமூகமாக வாழ முடியும். அதற்கு பிற சாதியினரின் இடத்தை ஏற்றுக் கொள்ளவும் ஜனநாயக பூர்வமாக அவர்களை மதிக்கவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவரை போராட்டம், பேரணி, சர்ச்சை, வெட்டு குத்து அரசியல் மூலம் தான் சாதிகள் தத்தமது இருப்பை இங்கு பாதுகாத்து கொள்ள முடியும். இதுவே நிதர்சனம். வேறு வழி இல்லை.

சாதி சங்கங்கள் நம்மிடையே உள்ள பிரிவுகளை அதிகப்படுத்துவது இல்லை. சாதி சங்கங்கள் இல்லாவிட்டால் சாதி மறைந்து விடும் என்பது ஒரு பித்துக்குளி நம்பிக்கை. சாதி சங்கங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் பிரதிநுத்துவ அமைப்புகளாக நிறைய நேர்மறையான பணிகளை செய்ய முடியும். இங்கு சாதி சங்கங்கள் வரும் முன்னரே நம்மிடையே பரஸ்பர சாதி சார்ந்த வெறுப்பு கடுமையாக இருந்துள்ளது. அது தான் இப்போதும் வன்முறைக்கான ஊற்றாக இருந்து வருகிறது.

இன்னொரு சாதி வளரும் போது இந்தியர்களுக்கு அடிப்படையில் பதற்றமும் கோபமும் ஏற்படுகிறது. ஆனால் இந்த நவீன யுகத்தில் எல்லோருக்கும் வளர்வதற்கான வாய்ப்புகளும் சாத்தியங்களும் உள்ளன என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இன்று உலகின் எந்த மூலைக்கு சென்றும் நம்மால் பொருள் சேர்த்து செல்வந்தராய் வாழ முடியும். புவி மொத்தமும் ஒரே நாடு தான். பணமும் அதிகாரமும் தான் இன்றைய மனிதனின் அந்தஸ்தின் அடையாளம். நிலமும், அது சார்ந்த அதிகார சடங்குகளும் அல்ல. சாதி என்பது நமது நிலவுடைமை மனப்பான்மையோடு பின்னிப்பிணைந்த ஒன்று. சுருக்கமாக, இந்தியா முழுக்க நவீனபடும் போது தான் சாதி பிரச்சனைகள் மறையும். அல்லது ஒரு அபாரமான சகோதரத்துவமும் சகிப்புணர்வும் நமக்குள் உருவாக வேண்டும். இது தான் அடிப்படை பிரச்சனை.

சாதி வெறுப்பு என்றால் என்னவென்று தெரியாத விரல் சப்பும் பிள்ளைகளாய் நாம் இருந்தோம். ராமதாஸ் வந்து நம்மை கெடுத்து விட்டார் என்றால் அந்த விரல் சப்பும் குழந்தை கூட நம்பாது. இது போன்ற தடை செய்யும் திட்டங்கள் பா.ம.கவை மட்டுமல்ல விடுதலை சிறுத்தைகளுக்கும் பாதகமாகும். இவர்களுக்கு கீழ் இருக்கிற பல்வேறு சின்ன சின்ன சாதிகளுக்கும் தான். ஜெயாவின் இந்த பாஸிஸ சிந்தனைகளை நாம் முதலில் வலுவாக எதிர்க்க வேண்டும்.

Share This

6 comments :

  1. சங்கங்களுக்கும் சண்டைகளுக்கும் நீங்கள் சொல்வது போல் பித்துக்குளி நம்பிக்கை...

    தனி மனித ஒழுக்கம் வளர வேண்டும்... வளர்க்க வேண்டும்...

    ReplyDelete
  2. சங்கங்களின் பெயரில் நாட்டு நலனுக்கும் பொதுமக்கள் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும் சங்கங்களை தடை செய்ய வேண்டும்

    ReplyDelete
  3. சாதிகளை ஒழிக்க முடியுமா? அம்பேத்கர் என்ன சொல்கிறார்?

    எங்களூரில் ஓர் இளைஞன். அவனுக்கு கொள்கையோ பரந்த அறிவோ கிடையாது. சில காலம் எதோ ஒரு சினிமா நடிகனின் மன்றத்தில் சுற்றி கொண்டிருந்தான். பிறகு அவனது ஊரில் ஒரு நாள் எல்லாரும் பஸ்ஸில் சென்னைக்குப் போகிறார்கள் என அவனும் அங்கே போனான். போனது சுற்றுலாவிற்காக. அதற்கு கூடுதல் காரணம் அங்கு நடந்த பாட்டாளி மக்கள் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக. ஆனால் கூட்டத்தில் நடந்த உரையாடல்கள் பிறகு அதன் நீட்சியாக அவன் பங்கேற்ற நிகழ்வுகள் அவனது மனதிலும் சாதிய உணர்வினைத் தூண்டி விட்டன. இப்போது அவனிடம் பேசினால் அப்படியே அவர்களது மனநிலையை தன் மனநிலையாக கொண்டு இயங்குகிறான் என தெரியும். இவனைப் போல எத்தனை பேர்? இவர்களுக்கு எல்லாம் அந்தக் கூட்டத்திற்கு முன்னரே சாதி உணர்வு இருந்ததா? எனக்கு தெரியாது. ஆனால் இத்தனை தீவிராக வன்மம் வளர்த்தார்களா என்றால் கட்டாயம் முன்பு அப்படி இல்லை என சொல்வேன். இந்த வன்மம் கொடுங்கல் வாங்கல் முறையில் நடந்தது. அதாவது மக்களிடையே இருந்த வன்மம் இயக்கத்திற்குப் போய் அங்கிருந்து பெரிய அளவில் தங்களுக்காக நியாயங்களுடன் செழுமைபடுத்தபட்டு இன்னும் அதிக மக்களுக்கு சென்றடைகிறது. இது நேரிடையாக சட்ட ஒழுங்கினைப் பாதிப்பதுடன் சமூகத்தில் ஏற்கெனவே இருக்கும் சாதிய வேறுபாடுகளை வலுக்க வைக்கிறது.

    ஜனநாயக மரபில் எல்லாவற்றையும் சகித்தல் என்பது விவாதிக்கபட வேண்டிய ஒன்று. பிரான்சில் பர்தாவினைத் தடை செய்தது தவறா சரியா? கட்டுடைக்காமல் சில ஆக்கங்களை உருவாக்குவது கடினம். அதை ஜனநாயக முறையில் சகித்தல் கொள்கைக்கு விரோதமில்லாமல் செய்வது எப்படி?

    ReplyDelete
  4. சாய் ராம்
    இந்த சங்கங்கள் ஏற்கனவே உள்ள வன்முறைக்கு ஒரு கொள்கை அல்லது நியாயம் வழங்கலாம். இதே பிரச்சனை மத அமைப்புகளினாலும் உருவாகிறது. ஆனால் சிக்கல் அமைப்புகளில் அல்ல மனிதரில் என்று தான் நம்புகிறேன். நீங்களோ நானோ ஏன் இந்த அமைப்புகளுக்குள் மாட்டவில்லை. காஷ்மீர் தீவிரவாதத்துக்கு அந்த தீவிரவாத அமைப்புகள் மட்டும் தான் காரணம் என இதன் நீட்சியாக யோசிக்கலாம். புறம்பே உள்ள் சமூக உளவியல் காரணிகளை தான் எதிர்த்து அழிக்க வேண்டும்

    ReplyDelete
  5. மேலும் பிரான்ஸில் முகத்திரையை தடை செய்தது தவறு தான். இஸ்லாமிய மக்களுக்கு நவீன கல்வி முறைக்குள் நுழைந்து பொது சமூகத்தில் கலந்து வாழும் சுமூகமான சூழலை உருவாக்கினால் மெல்ல மெல்ல முகத்திரைகள் இல்லாத பெண் சமூகம் தோன்றும். அது தான் முறை.

    ReplyDelete
  6. அப்பாடா, என்னை போன்று சிந்தனை உள்ளவரை நான் சந்திக்க மாட்டேனா என்று எண்ணிக்கொண்டு இருந்த போது இந்த கட்டுரையை நான் படித்தது மகிழ்ச்சி.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates