Saturday, 25 May 2013

செயலின்மையின் இயல்பு






செயலின்மையின் போதை பற்றி சமீபமாக ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அதில் அவர் செயலின்மைக்கு அகங்காரம் மற்றும் சவால்களை சந்திப்பதற்கான தயக்கத்தை காரணங்களாக கூறுகிறார். உண்மை. ஆனால் இது உண்மையின் ஒரு பகுதி மட்டும் தான்.

நம்மில் எத்தனையோ பேருக்கு எழுதுவது, வீட்டுவேலை, வியாபாரம் என பல விசயங்களை ஒட்டி திட்டங்கள் இருக்கும், அவற்றை நிரந்தரமாக தள்ளிப் போட்டபடி இருப்போம். பல்வேறு காரணங்களை வைத்திருப்போம். பொதுவான ஒரு குற்றவுணர்வும் இருக்கும். குறிப்பாக இன்றைய ஊடக ஆக்கிரமிப்பு சூழலில் செய்வதற்கு ஓராயிரம் காரியங்கள் இருப்பதாக ஒரு பிரமை நமக்கு உள்ளது. நாள் முழுக்க வேலை செய்தாலும் நிறைய செய்யாமல் விட்ட அதிருப்தி பலருக்கும் இருக்கும்.
தள்ளிப்போடுவதில் ஆகச் சிக்கலானது படைப்பு சார்ந்த வேலை. அது மனக்கசப்பை, தாழ்வுணர்வை, பிறகு இந்த எதிர்மறைகளை சிலாகிக்கிற மனநிலைக்கு இட்டு செல்லும் என்கிறார் ஜெ.மோ. எனக்கு ஒரு வியப்பு அவர் இதை இன்று இணையத்தில் பரவலாகவும் மிகுதியாகவும் எழுதப்பட்டு வருகிற சூழலில் சொல்லுகிறார் என்பது தான். ஆக சூழல் ஒருவர் இயங்குவதற்கு மிகவும் அவசியமானது. நிறைய எழுதுகிற பல இளம் எழுத்தாளர்கள் கடந்த பத்து வருடங்களில் அறிமுகமாகி இருக்கிறார்கள். சொல்லப்போனால் இன்று இலக்கிய பத்திரிகைகளில் உள்ள மொழியையே இணையம் கணிசமாக பாதித்திருக்கிறது.

நான் கடந்த ஐந்து வருடங்களில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியிருக்கிறேன். அதற்கு உயிர்மை அளித்த களம் ஒரு முக்கிய காரணம். வாராவாரம் உயிரோசைக்கு எழுத ஆரம்பித்து பின் இன்னும் சில பத்திரிகைகளுக்கு எழுத தொடங்கி எனக்கு வாரத்தில் மூன்று நான்கு நாட்களாவது எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் இன்னொரு பக்கம் நாவல், புரூஸ் லீ வாழ்க்கைக்கதை ஆகிய எழுதும் போது தினமும் குறைந்தது ஐந்து மணிநேரத்தில் இருந்து பத்து மணிநேரம் வரை எழுதி இருக்கிறேன். என்னைப் போல் நிறைய எழுதுகிற இளம் எழுத்தாளர்களில் சிலரையாவது குறிப்ப்ட முடியும். எழுதுவது உடற்பயிற்சி போலத் தான். தினமும் 20 பக்கங்கள் எழுதினால் தானே நீங்கள் டைப் அடிக்க ஆரம்பித்தது 20 பக்கங்களுக்கு தானே வந்து நின்று விடும். அதற்கு முன்பு உங்களுக்கு களைப்போ வலியோ தென்படாது. தசை நினைவு போல நம்முடைய நரம்பணுக்களுக்கு ஒரு நினைவு உள்ளது. எழுத எழுத இந்த நரம்பணுக்களுக்கு இடையிலான தொடர்பு வலுவாகிறது. நடக்க நடக்க காட்டின் நடுவே ஒரு பாதை தானே தோன்றுவது போலத் தான்.

ஆனால் கலையில் நீங்கள் தொடர்ந்து ஆயாசமின்றி இயங்க சூழல் மட்டும் போதாது. ஜெயமோகன் குறிப்பிடும் உள்முனைப்பு, சுயக்கட்டுப்பாடும் மட்டும் போதாது. இதைச் சொல்லத் தான் இக்குறிப்பை எழுதுகிறேன். நம் படைப்பு வேலையை நம் உடல் கணிசமாக தீர்மானிக்கிறது.

பொதுவாக மிகை ஆற்றல் (hyper active) கொண்டவர்களுக்கு நிறைய வேலை செய்வது பிடித்தமானது. புரூஸ் லீ ஒரு நல்ல உதாரணம். அவருக்கு சின்ன வயதில் குடும்பத்தினர் வைத்த பெயர் “ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டிருப்பவன்” என்பது. இத்தகையவர் வேலை செய்யாமல் இருந்தால் மன அழுத்தம் கொள்வார்கள். மனதுக்கு அணுக்கமான ஒரு துறையில் நுழைந்து விட்டால் முடுக்கி விட்ட கடிகாரம் மாதிரி ஓடிக் கொண்டே இருப்பார்கள். இன்று நாம் காணும் பல சாதனையாளர்களிடம் இந்த மிகை ஆற்றல் கோளாறு உள்ளது. அவர்கள் சதா ஓடிக் கொண்டிருக்கும் அரவை எந்திரம் போல. சதா தீனி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஜெயமோகனும் அப்படியாக இருக்கலாம்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஓய்வுக்காக வெளிநாடு போகும் போது தன்னுடைய இசைக் கருவிகளையும் எடுத்து செல்வார். அவை பெரிய அறை ஒன்றை அடைக்கக் கூடிய அளவுக்கு இருக்கும். அங்கு போனதும் அவர் இங்கு இருப்பதை போல அறைக்குள் போய் இசை பயின்றபடி பரிசோதனைகள் பண்ணிக் கொண்டு இருப்பார். ரஹ்மானுக்கு ஓய்வு என்றால் வேலை தான். அவருக்கு வேறு விடுதலை இல்லை. இது போல் பலர் இருக்கிறார்கள். இதை ஒரு வரமா சாபமா என வரையறுக்க முடியாது.

ஆனால் நாம் இந்த நிலையை பொதுமைப்படுத்தக் கூடாது. எல்லாரும் வருசத்துக்கு ஆயிரம் பக்கம் எழுத வேண்டியதில்லை. எனக்கு எழுதுவதில் ஒரு இன்பம் கிடைக்கிறது. ஒவ்வொரு சொல்லும் எனக்குள் ஒரு தந்தியை சலனிக்க வைக்கிறது. அரைமணிநேரம் பேசினால் களைத்து விடுவேன். ஆனால் எட்டு மணிநேரம் எழுதினாலும் இன்னும் எழுத வேண்டும் போல இருக்கும். இது என் இயல்பு. என் சாபம் மற்றும் வரம். இன்னொருவர் குறைவாக எழுதினால் அல்லது எழுதாமல் இருந்து திருப்தி அடைவார். ஒருவர் பூரணத்துவம் அடைய தன் திட்டங்களை நிறைவேற்றித் தான் ஆக வேண்டும் என்றில்லை. அது லட்சியம். ஆனால் வாழ்க்கை லட்சியங்களால் ஆனதில்லை.

ஜெயமோகன் உடல் என்பது மனதின் ஒரு நீட்சி என நம்பும் மரபை சேர்ந்தவர். ஒருமுறை ஒரு தனி உரையாடலில் அவருடைய பரிச்சயத்தில் உள்ள ஒரு இளம்சாமியார் துறவை கைவிட்டு நாற்பது வயது பெண்ணை மணந்ததை குறிப்பிட்டு, அது அவர் தியான முறையை சரியாக கற்காமல் பயின்றதால் ஏற்பட்ட தீய விளைவு என்றார். ஆனால் உடலுக்கு என்று ஒரு மூளை தனியாக இருக்கிறது, அது தான் நம்மை இயக்குகிறது என ஏற்க மாட்டார். இன்று அறிவியல் படித்து வரும் நாம் மனதை உடலின் ஒரு பகுதியாக பார்க்கத் தான் தலைப்படுகிறோம். பல்வேறு புறக்காரணிகளால் இயக்கப்படுகிற ஒருவனாக தான் மனிதன் இன்று சித்தரிக்கப்படுகிறான். அதனால் தான் “சூது கவ்வும்” போன்ற படங்கள் வெற்றி அடைகின்றன.

கோழி-முட்டை தோற்றம் போல இது ஒரு சிக்கலான வாதம். இரு பக்கமும் கொஞ்சம் உண்மைகள் உள்ளன.

ஒருவர் ஒரு படம் எடுப்பதை நாவல் எழுதுவதை வாழ்நாளெல்லாம் தள்ளிப் போட்டபடி இருக்கலாம். பெரிய வேலைகளை தொடர்ந்து ஆவேசமாக அபாயங்களை பொருட்படுத்தாது இறங்கி செய்வது அவரது இயல்பு அல்லாமல் இருக்கலாம். அப்படியானவர் தன்னை வருத்திக் கொண்டு ஒரு நாவல் எழுதினால் அது மிச்ச உலகத்துக்கும் துன்பமாகத் தான் மாறும்.

ஒரு வேலை செய்யும் போது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு சின்ன இன்பம், ஒரு போதை தென்பட வேண்டும். அது உங்களை அந்த வலியை நோக்கி மீண்டும் மீண்டும் தள்ள வேண்டும். இல்லை என்றால் அந்த வேலை உங்களுக்கானது அல்ல. வேறு பல உருப்படியான காரியங்களை உங்களுக்கென்று கடவுள் உருவாக்கி வைத்திருக்கிறார்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates