ஒசாமாவுக்கும் பிரபாகரனுக்கும் ஒரு ஒற்றுமை: இரண்டு பேரையும் வளர்த்து விட்டவர்களே இப்போது கொல்லத் துடிக்கிறார்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் நிலைபெறும் முன்னர் இந்தியாவில் சிலகாலம் ஒளிவில் இருந்தார் பிரபாகரன். அப்போது தமிழக போலீசிடம் ஒரு சில்லறை கேசில் மாட்டிக் கொண்டார். பிடிபட்டது பெரிய மீன் என்பதை அறிந்த, அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு அவரை சிங்கள அரசுக்குக் கொடுக்காமல் கையில் துருப்புச் சீட்டாகக் கொண்டு ஒரு ரம்மி விளையாடிப் பார்க்க முடிவு செய்தது. இலங்கைக்குத் தலைவலி கொடுக்கும் நோக்கத்துடன் விடுதலைப்புலி இயக்கத்துக்கான ராணுவப்பயிற்சியை தில்லியில் இந்திய ராணுவ அதிகாரிகள் மூலம் அளித்து, பொருளுதவி செய்து, பிரபாகரனுக்குப் பாதுகாப்பு அளித்து காங்கிரஸ் கட்சி நெட்டி முறித்து சுற்றிப் போட்டு, இன்றைய மாபெரும் ஈழ நரபலிக்கு வித்திட்டது. அமெரிக்கா அப்கானிஸ்தானில் பொம்மை அரசு நடத்துவது போல் நேரடியாக அல்லாவிட்டாலும் மறைமுகமாக இலங்கை அரசை புலிகளைக் காட்டி மிரட்டிக் கட்டுப்படுத்தலாம் என இந்திய அரசு அப்போது கனாக் கண்டிருக்கலாம். ஆனால் பயிற்சிக்குப் பின் இலங்கை திரும்பின பிரபாகரன் காங்கிரஸ் அரசு விரித்த சீட்டுக்கட்டில் ஒன்றாக அமர மறுத்ததுமே இருவருக்குமான உறவு கசந்துவிட்டது. உடனே காங்கிரஸ் கூச்சமின்றி சிங்கள ஆதரவு பல்டி அடித்தது. வன்முறையாளனைவிட சஞ்சல புத்திக்காரன்தான் அதிக அபாயமானவன். இலங்கை அரசு இன்றும் கூட இந்தியா என்றால் ஒட்டி உரசாது; எட்டி நின்றுதான் விரல் கோர்க்கும்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது ராஜீவ் படுகொலைக்கு முன்பே புலிகள் - காங்கிரஸ் உறவு கசக்க ஆரம்பித்தது என்பதும், அப்பகைக்குக் கொள்கை ரீதியான முகாந்திரம் ஏதும் இல்லை என்பதும். மேலும் காங்கிரஸ் அரசு தற்போது சிங்களர்களுக்கு வழங்கி வரும் ராணுவ உதவியை ஒரு காலத்தில் புலிகளுக்கும் சிறிய அளவில் வழங்கியுள்ளது, இன்றைய இலங்கை இனச் சண்டைக்கு சகுனி வேலை பார்த்து பகடை உருட்டினதே காங்கிரஸ்தான், அதனால் ராஜீவ் கொலைக்கு காங்கிரசும் பொறுப்பாகும் என்பதையும், பிரபாகரன் என்றால் உடனே ‘இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசி’விட்டதாக இருமி, கண்ணில் தண்ணீர் வரும்படி கர்ஜிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒரு நொடி நினைத்துவிட்டு மறந்துவிட வேண்டும்.
முத்துக்குமரன் மக்கள் எழுச்சி இயக்கம் எனும் கட்சி தற்போது சிவகங்கையில் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்துக்கு எதிராகப் போட்டியிட வேட்பாளரை நிறுத்தி உள்ளது. இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சினை காரணமாய் தமிழகத்தில் கடுமையாக அடி வாங்கப் போகிறோம் என்பது காங்கிரசுக்குக் கடுமையான கிலி ஏற்படுத்தி உள்ளது. ஒரு மத்திய அமைச்சர் நேற்று முளைத்த ஒரு பல்லி மிட்டாய் இயக்கத்தைப் பொருட்படுத்தலாமா? ஆனால் "குண்டூசி வைக்கக்கூட இடம் தரமாட்டேன். ஆனால் பெண்டாட்டி முந்தானையைப் பிடித்து இழுப்பேன்" என்று துரியோதனன் முரண்டு பிடித்தது போல் மேற்சொன்ன எழுச்சி இயக்கத்தை பிரச்சாரம் செய்ய விடாமல், நோட்டீஸ் அடிக்க விடாமல் போலீஸ் மற்றும் குண்டர்கள் கொண்டு ஒடுக்குவதில் பா.சிதம்பரம் மும்முரமாக உள்ளார்.
முத்துக்குமரன் கட்சி பிரச்சாரம் செய்ய அனுமதி கோரிய போது போலீஸ் துணை ஆய்வாளர் விதித்த விதிமுறைகள் விசித்திரமானவை: " நீங்கள் காங்கிரசுக்கு எதிராகப் பேசக்கூடாது, முத்துக்குமரனைப் பற்றிக் குறிப்பிடவே கூடாது, பா.சிதம்பரத்தைப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது (அதற்கெல்லாம் ஜேவுக்கு மட்டும்தான் உரிமை), மீறினால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெயிலில் வரமுடியாதபடி உள்ளே தள்ளிவிடுவோம்". பிரச்சார நோட்டீசுக்கான அனுமதிக்கு விண்ணப்பித்த போதும் முழு எண்களில் இருந்தால்தான் அனுமதி, அல்லாவிட்டால் மொத்த நோட்டீஸ் கட்டுகளும் அழிக்கப்படும் என்றது போலீஸ். போலீஸை சாந்தி செய்தால்கூட பிரசுரம் செய்ய அச்சகத்தார் தயாரில்லை. ஏனெனில் கடந்த மாதம் சிவகங்கைப் பகுதி அச்சகத்தார் மொத்தம் பேரையும் கூட்டின போலீஸ் உயர் அதிகாரிகள் "முத்துக்குமரன் சம்மந்தமாய் எந்தத் துண்டும் பிரசுரம் ஆகக் கூடாது, இல்லாவிட்டால்..." என்று தொப்பையைப் பெருக்கிக் காட்டி பயமுறுத்தி உள்ளனர். பரவாயில்லை! மக்களிடமே நேரடியாகப் பேசுவோம் என்று எழுச்சிக் கட்சியினர் நேரடிப் பிரச்சாரத்தில் இறங்கினால் ஒரு லாரி முழுக்க காங்கிரஸ் அபிமான ரவுடிகள் அவர்களை நாள்முழுக்கப் பின்தொடர்ந்துள்ளனர்.
ஒரு நாள் ஆலங்குடியில் அனுமதி வாங்கின பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள முத்துக்குமரன் கட்சியினர் 12 பேர் செல்ல, அவர்களைச் சூழ்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் "ஓத்த தேவடியாப்..." என்று வசை பொழிந்தபடி கல்லெடுத்து வீசினர். காவலுக்கு நின்ற போலீசாரோ கற்பனையில் கோமணம் இழுத்து கதர் நூற்றபடி அகிம்சைப் போராட்டம் நடத்தினர். காங்கிரசார் நேரடியாய்த் தாக்க ஆரம்பித்த போதுதான் போலீஸ் தலையிட்டது. நிற்க. நீங்கள் நினைப்பது போல் வன்முறையில் ஈடுபட்ட காங்கிரஸ் குண்டர்களைக் கைது செய்யவில்லை. மாறாக, முத்துக்குமரன் கட்சியினரிடம் " நீங்கள் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து பிரச்சாரம் செய்தது தவறு, வேட்பாளர் இன்றி வந்தது குற்றம்" நொள்ளை சொல்லி அவர்களைக் கலைந்து போகச் சொன்னார்கள். என்ன, தெலுங்கு சினிமா போல் உள்ளதா? பிறகும் நகைச்சுவை போதவில்லை என்று தோன்ற, போலீசார், ஐம்பதுக்கும் மேற்பட்ட காங்கிரசாரைத் தாக்கினதாக 12 மு.கு கட்சியினர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது. கைது செய்து அவர்களை உள்ளே தள்ளியது. மு.கு கட்சி அமைப்பினர் உண்ணா நிலைப் போராட்டம் மேற்கொண்ட பின்பு தான் இவர்கள் வெளியே விடப்பட்டனர்.
"அரசியல் சாக்கடை" என்று வேட்டி நுனி தூக்கி நடப்பவரை பயந்தாங்கொள்ளி மத்திய வர்க்கம் என்று விமர்சிப்பவர்கள், படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோருபவர்கள் பத்தாம்பசலிகள். இன்றைய நிலைமையில் பெரிய கட்சியினரை எதிர்த்து தேர்தலில் நிற்கும் ஆகிருதி கொண்டவர்கள் தமிழக வக்கீல்கள் மட்டுமே. போலீசார் மற்றும் குண்டர் படையை நேரிட சோற்றுப் பொதி கல்லூரி மாணவர்களும், மாத-வருமான லட்சிய மாமாக்களும் உள்ளடக்கின எளிய மனிதர்களின் கூட்டமைப்பால் முடியாது. இக்கட்சியின் அமைப்பாளர் ஒருவர் என் நண்பரிடம் மேற்சொன்ன தகவல்கள் தொடர்பான பல அதிர்ச்சியூட்டும் அனுபவங்களைச் சொல்லிப் புலம்பியிருக்கிறார். நான் பிறகு அவரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அந்த அமைப்பாளர் "போலீஸ் உளவாளியோ" என்ற அச்சத்தில் தயங்கினபடி பல் கிட்டிக்க "அதாவது ... ங்க" என்று துண்டுத் துண்டாய்ப் பேசினார். அந்த அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார்.
ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமரன் உயிர்த்தியாகம் செய்யும் முன், 'எதிர்காலத்தில் உன் பெயர் முதலில் போற்றப்பட்டு பிறகு அதைச் சொல்வதே தடை செய்யப்படும்' என்ற உண்மையை காலன் ஏறி வந்த எருமை அவர் காதில் கிசுகிசுத்திருந்தால், தமிழ்ச்சிந்தனையின் அபத்தம் அவருக்கு விளங்கியிருக்கும். ஒரு வேளை இறுதியாய்ப் புன்னகைத்திருப்பார். கரிப்பான புன்னகை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment