Wednesday, 24 June 2009

மாமிக்கு ஏன் மீசை? ஊன வகைமாதிரியின் அபத்தங்கள்



ஊனத்தைவிட சுவாரஸ்யம் ( ‘நான் கடவுளை’ என்னால அந்த ஊனக் கொடுமைகளை பார்க்கவே முடியலே’ என்றபடி முழுக்க சின்னக் கலக்கத்துடன் பார்ப்பது) அது பற்றிய விசாரிப்புகள். சுந்தர ராமசாமி ஒரு உரையாடலில் கண்களை நேராக நோக்கியபடி கேட்டார்: "உங்கள் ஊனம் பற்றி மன சங்கடங்கள், துயரங்கள் உண்டா?" நான் அவர் தாடியைப் பார்த்தபடி சொன்னேன், "எனக்கு யார் முன்னாடியும் தடுக்கி விழப் பிடிக்காது, அவ்வளவுதான்". வடக்கு உஸ்மான் சாலை டீக்கடை மலையாளி கல்லாக்காரர் போண்டாவில் கண்வைத்தபடியே "போ...லியோ தானே, வீட்டிலே ஊசி போடல்லியோ?" என்றதற்கு ஆமாம் சொல்ல என் பெற்றோரை சில்லறை உதிர்த்தபடி வைதார். நான் வண்டியில் போகையில் விறுவிறுப்புக்காக எல்லைக் கோடுகள், சிவப்பு விளக்குகளை மீற வழக்கமாய் போக்குவரத்துக் காவல் மாமாக்களின் "ஏற்கனவே ஒரு காலு போச்சு .... " வகை விசாரிப்புகள்.
என் ஊனம் பற்றின குற்றஉணர்வு என் அம்மாவுக்குள் ஒரு அடைகாக்கும் மிகை கவனிப்பு மனநிலையை 25 வருடங்களாய்த் தக்க வைத்துள்ளது. மனைவிக்கு தீராத புதிர்: " நீ எப்பவாவது ஆரோக்கியமா இருந்தா எப்படி இருக்கும்ணு யோசிச்சதில்லையா, ஊனமாயிட்டோம்னு எந்த ஏமாற்றமும் இல்லை? ".
மாமனிதர்களும் போண்டாக்காரர்களும் ஒரு சேர ஊனம் பற்றி ஒரு தட்டையான வகைமாதிரியை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைப்பது போல் ஊனர்கள் சகஜர்களிடமிருந்து விலகி தனி உலகில் வாழ்வதில்லை. உண்மையில் இரு சாராரும் வாழ்வில் ஒரே தளத்தில் தான் சந்தித்து கொள்கிறார்கள். ஊனம் கொண்டவர்கள் இரண்டு மடங்கு முயன்று வெற்றி பெற வேண்டியுள்ளதாய் கூறுவதும் அபத்தமே. உதாரணமாய் உலகின் மிக வெற்றிகரமான முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் வி.எஸ் சந்திரசேகருக்கு இடது கை போலியோவால் சொத்தை. அவர் மட்டையாட்டத்தை தேர்வு செய்யாமல் வலதுகை சுழல்பந்தை எழுத்துக் கொண்டது ஒரு பிரக்ஞபூர்வ முடிவல்ல. அவருக்கு சுழல்பந்தே பிடித்திருந்தது, மட்டையாடவில்லையே என்று எந்த ஏமாற்றமும் இல்லை. சூரியன் தெரியும் திசையில் கொடி வளைவது போல் ஊனனின் மனமும் வளர்ந்து வருகிறது. அவனது தேவைகளும் விருப்பங்களும் மிக நுட்பமாய் தகவமைகின்றன. சந்திரா தனக்கு ஊனம் என்று குட்டிக்கரணம் எல்லாம் அடிக்க வில்லை, சாதாரணமாய் சுழற்றியே முன்னணி வீரர் ஆனார்.
காட்பாதர் நாவலில் விட்டோ கார்லியோனே சொல்வது போல் "கேட்க வேண்டிய முறைப்படி கேட்டால் எல்லாருக்கும் புரியும், மறுக்க மாட்டார்கள்". நுட்பமாய் மனிதர்களை கவனிக்கும் ஒரு ஊனனுக்கு இதன் பொருள் புரியும். மனிதர்கள் மேல் கொஞ்சம் பரிகாசமும் நிறைய கவலையுமே அவனுக்கு. "ஒவ்வொரு சகஜ மனிதனுக்கும் ஒவ்வொரு ஊனம்" என்றெல்லாம் அவன் சுயசமாதானம் செய்வதில்லை. அவன் மேலும் விரிவான தளத்தில், ஒரு பெரும் நிர்வாணக் கடற்கரையில் மனிதர்களை சந்திக்கிறான்.
இங்கு ஒன்று தெளிவாகிறது: ஊனத்தை வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தூரப்பார்வை (‘அச்சச்சோ பாவம்’) அல்லது கிட்டப் பார்வை (‘அப்பா என்ன விகாரம்’).
உள்ளே இருந்து பார்ப்பவருக்கு?
திருவல்லிக்கேணி பைக்ராப்ட்ஸ் சாலையில் நண்பனுடன் நடைபாதையில் புத்தகம் பொறுக்கிக் கொண்டிருந்தேன். ஒரு ஒற்றைகாலன் பிச்சைக்காரன் கோலில் விந்தியபடி வந்தான். முகம் திருப்பி உதாசீ£னத்தவரிடம் எல்லாம் கெஞ்சியபடி நண்பனிடம் வந்து சேர்ந்தான். அவன் சில்லறை போட்டான். நான் பிச்சையை ஆதரிக்கலாமா கூடாதா என்று குழப்பத்தில் பாக்கெட்டில் கைவிட போது அவன் என்னைத் தவிர்த்து பக்கத்து நபரிடம் "ஐயா சாமி". திகைத்தபடி திரும்பினால் நண்பன் சொன்னான் "பாவம்ல".
நம் சமூக மனம் திரைப்பட சித்தரிப்புகளில் மேலும் தெளிவாய் தெரிவது. "அஞ்சலியில்" மணி மூளைவளர்ச்சி பாப்பாவை "கடவுள் அனுப்பின குழந்தை" என்றார். இப்படி மிகை நேர்மறை வெளிச்சத்தில் காட்டுவது ஊனக் குறைபாட்டை சமன் செய்து சமூக மடிப்பில் ஏற்கச் செய்யவே. ஓட்டிசம் (autism) எனும் மூளைச்சிதைவு பிறவி நோயாளிகளில் மிகச் சிலர் சாவண்ட் எனும் அதிநினைவுத்திறனுடன், கணிதத்திறனுடன் இருப்பர் (ஒருவர் ஐன்ஸ்டனின் சூத்திரத்தில் கணிதப்பிழை கண்டுபிடித்தார்). படித்த புத்தகத்தை ஒரு வார்த்தை விடாமல் அவர்களால் ஒப்பிக்க முடியும். இந்த நாள் 2080-இல் என்ன கிழமை என்றால் நொடியில் சொல்வார்கள். ஹாலிவுட்டில் ஓட்டிச சாவண்டை முக்கிய பாத்திரமாய் பயன்படுத்தின குறிப்பிடும்படியான ஆரம்ப கால படம் மழைமனிதன் (பாலாவின் "பிதாமகனில்" இப்படத்தின் பாதிப்பு ஏராளம்). டஸ்டின் ஹாப்மேன் தான் சாவண்டு. ஒரு நாள் படிக்க புத்தகம் இல்லாமல் போக தொலைபேசி டைரக்டரியை உட்கார்ந்து படிக்கிறார். மறுநாள் உணவகப் பணிப்பெண்ணின் மார்புப் பட்டையில் பெயர் பார்த்து உடனே டஸ்டின் அவளது தொலைபேசி எண்ணை ஒப்பிக்க அவள் கலவரமாகிறாள். மற்றொரு விபரீதத் திறமையாக கலைந்த சீட்டுக்களை பார்த்தால் ஆட்டத்தின் போது யாரிடம் எதுவென துல்லியமாய் சொல்கிறார். இதை பயன்படுத்தி இவரது தம்பி (டாம் குறூஸ்) ஒரு ஆட்டத்தில் கோடிகள் சம்பாதிக்க ஒருங்கிணைப்பாளர்கள் குழம்புகிறார்கள். இதைத் தொடர்ந்து பல படங்களில் ஓட்டிச நபர்கள் பிரபலமானார்கள். ஆனால் ஊடகங்கள் சுவாரஸ்யத்துக்காக அனைத்து குறைவளர்ச்சி மூளைக்காரர்களையும் சாவண்டுகளாகக் காட்ட ஆரம்பித்தன. 1998-இல் வெளியான "பாதரசம் உயருது" படத்தில் இரண்டு அதிகணினிகளால் கண்டுபிடிக்க முடியாத திஙிமியின் 2 பில்லியன் மதிப்பு ரகசிய சேதி சங்கேதக் குறியை சிமன் எனும் ஒரு 8 வயதுப் பையன் கண்டுபிடித்து விடுவான். எப்படி? அவன் ஒரு சாவண்டு என்பதால். இந்த உண்மைக்கு புறம்பான விபரீத சித்தரிப்புகளால் இந்த குறைமூளை மனிதர்கள் பற்றி ஒரு மிகை எதிர்பார்ப்பு அமெரிக்காவில் உருவாகி உள்ளது. ஸ்டுவார்ட் முரேய் எனும் ஒரு ஓட்டிச குழந்தையின் தகப்பன் சொல்கிறார்: "என் குழந்தையை பார்த்தால் எல்லோரும் கேட்பது ‘அவன் சாவண்டா’ என்றே. ‘இல்லை’ என்றால் முகம் சுளிக்கிறார்கள்." ஒரு மலையாளப் படத்தில் மோகன்லால் சொல்லுவார், "மாமி மீசை வைத்தால் மாமா ஆக முடியாது". மாமிக்கு மீசை ஒட்டுவதில் சமூகம் குறியாய் இருப்பது தாம் ஒருபடி மேலே எனும் உயர்வு மனப்பான்மையால் (அல்லது தாழ்வு மனப்பான்மை) தான்.
தமிழின் பிற படங்களிலும் சமச்சீரற்ற சித்தரிப்புகள் தான் கிடைக்கின்றன. ஊனர்கள் கொடூரர்களாக (எம்.ஜி.ஆர் பட மொட்டை, முகத்தழும்பு வில்லன்கள்), வஞ்சகர்களாக (‘காதல்’ சித்தப்பா), புணரப் பெண் கிடைக்காதவனாக ( "நான் கடவுள்" விகார முகத்தவன்), நாய் மாதிரி நன்றி மிக்கவர்களாக (ரன்), துரோகம் அறியாத தோழமையின் உச்சமாக (சுப்பிரமணியபுரம்), பாரமான மூட்டையை எளிதாய் தூக்கும், பெண்டாட்டியை அடிப்பவனை திருப்பி மடக்கி அடிக்கும் ஆண் ஒத்த பெண்ணாக (மொழி) தீமை நன்மை எனும் இருவேறு துருவங்களில் காட்டப்பட்டு விட்டார்கள். நடுத்தர சம்பளத்துக்கு நாற்காலி தேய்க்கும் குமஸ்தாவாக அல்லது தோசை மாவுக்கடை வைத்திருப்பவராக இவர்கள் ஏன் வருவதில்லை?
ஊனர்களின் பால் முழுமனிதர்களுக்கு ஒரு சிறு அன்னியம், புரியாமை உள்ளது. அன்னியர்களை தொலைவிலிருந்து கவனிப்பதால் அவர்களை படு சிலாகிப்பாகவோ அல்லது மிகை வெறுப்பு \ அருவருப்புடனோ நேரிடுகிறோம். நேர்மறை உதாரணமாய் மேற்குலகம் கிழக்கத்தேய மதம், கலாச்சாரம் மீது கொண்டுள்ள சிலாக்கியத்தை சொல்லலாம். எதிர்மறை? இஸ்லாமியர்கள் மீதான பிம்பம். ஒருமுறை ஆர்.எஸ்.எஸ் அனுதாபியான ஒரு நட்சத்திர எழுத்தாளர் இஸ்லாமியர்கள் இயல்பிலேயே வன்முறையாளர்கள் என்று விடாப்பிடியாய் என்னிடம் வாதிட்டார். இந்த விலகல் காரணத்தினால் ஒரு ஊனனை வில்லனாக்குவதில் ஒரு குறியீட்டு காட்சிபூர்வ வசதி உள்ளது. இயக்குனர்களை குறை சொல்ல முடியாது. மிகையான நேர்மறை சித்தரிப்பு தலித்துகள் விசயத்திலும் நடக்கிறது ("தசாவதாரம்" பூவராகன்).
நான் பார்த்ததில் ஊனம் எனும் நிலைப்பாடை நுட்பமாய் சித்தரிக்கும், தீவிரமாய் அலசும் படம் "குட்டைகளுக்கு மேலாய் மீண்டும் தாவுதல்" (Jumping over Puddles Again) எனும் ஷெக் நாட்டுப் படம். இயக்குனர் கேரல் கெச்சயினா (1924—2004). ஒரு குதிரை லாயக்காரனுக்கு ஆடம் என்று படு வாண்டான பையன். லாயக்காரன் மொடக் குடிகாரன். அவன் கனவு சுதந்திர தினத்தன்று நடக்கும் கோலாகல குதிரை அணிவகுப்பில் கலந்து கொள்வது. குடியால் அவ்வாய்ப்பு பறி போகிறது. ஆடமுக்கு குதிரை பயில ஆசை. தகப்பன் ‘நீ அதற்கு இன்னும் உயரம் வளர வேண்டும்’ என்று புறக்கணிக்கிறான். ஒரு நாள் சேட்டையின் விளைவாய் குளிர்நீரில் குதிக்கப் போய் ஆடமுக்கு போலியோ ஜுரம் வருகிறது. கால்கள் வாதத்தால் சுவாதீனம் இழக்கின்றன. மருத்துவர்கள் அவனுக்கு காலீப்பர் எனும் கம்பிக் கருவியை காலில் மாட்டுகின்றனர். ஆனால் அவனுக்கு ஊன உணர்வோ, கூச்சமோ இல்லை. ஒரு நாள் இப்படி சக்கர நாற்காலியில் ஆஸ்பத்திரி முற்றத்தில் இருக்கையில் எதிர்வீட்டுச் சுவரில் அமர்ந்து சில சிறுவர்கள் வம்புக்கிழுக்க பாய்ந்து எழுந்து தடுமாறி விழுகிறான். ஊருக்கு திரும்பிய பின்னும் முன்-ஊன ஆர்ப்பாட்ட வாழ்க்கை முறையை ஆடம் விடுவதாயில்லை. சக நண்பர்களும் அவனை மாறுபாடின்றி ஏற்றுக் கொள்கின்றனர். ஆட்டம், சேட்டை, ஊர்வம்பு என்று வாழ்வு தொடர்கிறது. தோஸ்துகளின் எண்ணிக்கை முன்னை விட அதிகமாகிறது அவனுக்கு. ஒரு செல்வந்த நண்பனின் அப்பாவின் குதிரை வண்டியை கடத்திக் கொண்டு வந்து அதை தெறித்து ஓட விட்டு கலாட்டா செய்ய, வண்டிக்கு சொந்தக்கார சீமான் ‘கால் போனாலும் இவனுக்கெல்லாம் சேட்டை குறையவில்லையே’ என்று புலம்புகிறார். குதிரை ஓட்டும் ஆசை இன்னும் தீரவில்லை. அப்பாவுக்கு தெரியாமல் இரவில் குதிரை மீது நண்பர்கள் உதவியுடன் ஏறி ஓட்டுகிறான். இந்த தீரம் பிடித்துப் போய் லாடம் செய்பவன் ஒருவன் இவனுக்கு ஊனக்காலை ஊன்றி குதிரை மீது வசதியாய் ஏறிட கால்தட்டு ஒன்றை அமைத்து தருகிறான். இனிமேல் ஆடமுக்கு குதிரை ஏற யார் உதவியும் தேவையில்லை. சுதந்திர தினம் நெருங்கி வருகிறது. அவனது ரகசிய பயிற்சி நண்பர்களின் உற்சாகத்துடன் ஒவ்வொரு இரவிலும் தொடர்கிறது. அத்தினம் வருகிறது. அப்பா குடியும் கனவுமாக அணிவகுப்பில் காத்திருக்க ஒரு குதிரையில் ஆடம் சீறிக் கடந்து செல்கிறான். ஆச்சரியத்தில் முழுக்க கண்கள் திறக்கிறார் அப்பா. குதிரை பாயும் வேகத்தில் வழியில் நின்ற ஒரு முதிய சீமான் தடுமாறி, வைய வாய் திறந்து, பின் வியந்து உறைகிறார். அவர் வேறு யாருமில்லை முன்பு ‘கால் போனாலும் இவனுக்கெல்லாம்’ என்றவர் தான்.
இந்த படம் முடிந்த பின் அடூர் கோபால கிருஷ்ணன் மேடையில் சொன்னார்: "இப்படம் கேட்பதெல்லாம் ஊனம் என்றால் என்ன என்பதைத் தான்".
ஊனம் என்ற ஒன்று இல்லை என்பதே இப்படம் சொல்வது.
amailto:abilashchandran70@gmail.com
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates