பால்யத்தில் பள்ளிக்கூடத்துக்கு என்னை அனுப்பும் தயாரிப்புகளில் ஒன்றாய் அம்மா வெந்நீரில் குளிப்பாட்டுவாள். சொம்பு நீர் சருமத்தில் பட்டதுமே நான் பள்ளிக்குப் போக மறுத்து ஓலமிடுவேன். இன்றும் வெந்நீரில் குளிப்பது எனக்குக் கசப்பானது. எழுத்தாளர் தமிழ்நதி ஈழத்து நினைவுகளைக் கிளர்த்தும் தமிழ்ப்பாடல்கள் சிலவற்றைப் பற்றி தனது வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளார் (http://tamilnathy.blogspot.com/). பத்து வருடங்களுக்கு முன் எனது இளங்கலையின் போது கல்லூரியில் வந்து பேசின ஜெயமோகன் ஒரு பேருந்துப் பயணத்தில் ஒருவித பிளாஸ்டிக் வாசனை தன்னை இனம்புரியாத பரபரப்புக்கு உள்ளாக்கியதைக் குறிப்பிட்டார்: அது அவரது கல்லூரிக்காலத்தில் பயன்படுத்திய பஸ் பாஸின் வாசனை; நினைவுப் புதிர்ப்பாதையின் மறந்து போன வாசலுக்கு அவ்வாசனை அவரை விரல் பற்றி அழைத்துச் சென்றது. இதுவே படைப்பாக்க உந்துதலின் ஆதாரம் என்றார் ஜெயன். ‘நூற்றாண்டுகாலத் தனிமையின்’ கருவுக்கான தூண்டுதலை மார்க்வெஸ் தன் அம்மாவுடன் வீட்டை விற்க சொந்த ஊருக்குச் செல்லும் பயணமே அளிக்கிறது (‘கதை சொல்ல வாழ்கிறேன்’). இந்நாவலில் தனது நினைவுகளை அவர் வெறுமனே அசை போடவோ, வம்சாவளி சாதனைகள் பீற்றவோ இல்லை என்பது வேறு விசயம். ஆனால் எளிய நினைவு மீட்டலில் இருந்து பெரும் நாவல் உருவாக்கம் வரை துவக்கப் புள்ளியாகும் மனதின் இந்த புதிரான போக்கு தற்செயல் அல்ல. அதற்கு ஒரு நடைமுறைக் காரணம் உள்ளது. நினைவில் மீட்டு செயல்படும் திறன் உய்வுக்கான ஒரு தானியங்கி நுண் அமைப்பு.
மனித வரலாற்றில் வேட்டையாடி-சேகரிப்பாளர்களாக, சிறு இனக்குழுக்களாக நாம் திரிந்த காலம்தான் அதிகம். மிகச் சமீபமாக (சுமார் 250 வருடங்களாக) அதிவேகத்தில் தற்போதைய பிரமாண்ட நாகரிகமும், அறிவியல் வளர்ச்சியும் ஏற்பட்டது. இந்த 100, 000 வருட மனித வரலாற்றை ஒரு வருடமாகச் சுருக்கினால் இந்த சமீப வளர்ச்சி ஒரு நாளில் அடங்கும்; ஒரு நாளாக சுருக்கினால் இது வெறும் 3.6 நிமிடங்கள் மட்டுமே என்கிறார் ‘சயிண்டிபிக் அமெரிக்கன்’ பத்திரிகையின் பத்தியாளரும், உளவியலாளருமான மைக்கேல் ஷெர்மர். இந்தக் குறுகின கால அளவில் மாற்றத்திற்கு நமது பிரக்ஞை மனம் தயார் ஆனது போல் ஆழ்மனம் தகவமையவில்லை. 100, 000 ஆண்டுகளுக்கு முன்னதான சூழ்நிலைகளுக்கான எதிர்வினைகள்தான் ஆழ்மனதில் இன்னமும் உள்ளது. இருட்டில் மனிதன் இன்றும் அஞ்சுவதற்கும், ஒரு நகரப் பூனை அதே இருட்டில் நிம்மதியாய் உணர்வதற்கும் இதுவே காரணம். முன்வரலாற்றுக் காலத்தில் ஆபத்திலிருந்து தப்பிக்க இந்தத் தானியங்கி நுண் மன அமைப்புதான் பயன்பட்டது. காமம், சாதியுணர்வு, போர் சார்ந்த மனித விசித்திரங்கள் பலவற்றுக்கும் இந்த மரவுரி தரித்த ஆழ்மனம் ஒரு காரணம். தமிழச்சியின் ‘வனப்பேச்சி’ கவிதைகளில் வனப்பேச்சி நகரத்துக்கு வந்து புரியாமல் தத்தளிப்பாள். அந்த வனப்பேச்சிதான் நம் மனம்.
‘பம்மல் கெ. சம்மந்தம்’ படத்தின் ஆரம்பக் காட்சியில் சினேகாவை திருமண மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லும் அப்பாஸ் கமலின் வண்டியில் ஏறி சாவி தேடுவார். அப்போது கமல் வந்து " நம்ம வண்டிக்கு ஏதுடா சாவி" என்றபடி இரண்டு மின்கம்பிகளை இணைப்பார்; வண்டி கிளம்பும். சாவி பிரக்ஞை என்றால், மின்கம்பிகள் ஆழ்மனம். நம் வண்டிக்கு சாவியும், இணைப்பதற்கான மின்கம்பிகளும் உண்டு.
நமது அன்றாட செயல்பாட்டுக்கான பல உத்தரவுகளை பிரக்ஞை மனம் உணரும் முன்னரே ஆழ்மனம் அளித்துவிடுகிறது என்று ஆய்வாளர்கள் சமீபமாய்க் கண்டு பிடித்துள்ளனர். கனவுகளிலும், படைப்பாக்கம், காமம் போன்று பிரக்ஞை வழுவும் நிலைகளில் மட்டுமே ஆழ்மனம் விழிக்கிறது என்று மட்டுமே இதுவரை கருதி வந்துள்ளோம். இது உண்மை அல்ல. சிலசமயம் பிரக்ஞை மனத்தின் அளவுக்கு சுதந்திரமாக ஆழ்மனம் செயல்படுகிறது. ஆழ்மனம் அற்புத விளக்கினுள் வாழும் பிசாசு மட்டுமல்ல. பட்டப்பகலில் நம் கரம் பற்றியவாறு புலப்படாமல் அது நம் கூடவே நடந்து வருகிறது. அடிக்கடி நம்மை நடத்திக் கொண்டும் போகிறது.
நெதர்லாந்தைச் சேர்ந்த சில உளவியலாளர்கள் கல்லூரி இளங்கலை மாணவர்கள் உள்ளடங்கின ஒரு குழுவை சிற்றறை ஒன்றில் அமர வைத்து வினாப்பட்டியல்கள் நிரப்பச் செய்தார்கள். அவ்வறையில் ஒரு வாளித் தண்ணீரில் எலுமிச்சை வாசம் கொண்ட துப்புரவு சோப்பு திரவத்தைக் கலந்து மறைத்து வைத்தனர். அறையில் எலுமிச்சை சோப்பின் சன்னமான வாசனை பரவியிருந்தது. வினாப்பட்டியலைப் பூர்த்தி செய்யும் இடைவேளையில் அவர்களுக்கு எளிதில் நொறுங்கக்கூடிய பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டன. பிறகு இதே போன்று ஒரு குழுவை வாசனை வாளி நீர் இல்லாமல் சிற்றறையில் அமர வைத்து வினாப்பட்டியல்கள் நிரப்பக் கேட்டு, இடைவேளையில் நொறுங்கும் பிஸ்கட்டுகள் அளித்தனர். இரு குழுவினரையும் வீடியோவில் ரகசியமாய்ப் படம் பிடித்தனர். முதற்குழுவினர் இரண்டாம் குழுவினரை விட மும்மடங்கு மும்முரமாய் நொறுங்கின பிஸ்கட் துணுக்குகளை சுத்தம் செய்தனர். இதற்கு அக்குழுவினரை அவர்களை அறியாது தூண்டியது எலுமிச்சை சோப் வாசனை.
பிரிட்டிஷ் கொலொம்பியா பல்கலையின் உளவியலாளர் மார்க் ஷெல்லர் இது தொடர்பான மற்றொரு ஆய்வு செய்தார். கறுப்பர்கள் மீது நேர்மறை உணர்வு கொண்ட வெள்ளையர்கள் சிலரை இருட்டறைக்கு அழைத்துச் சென்றனர்; அவர்களுக்கு அங்கு அமர்ந்துள்ள சில கறுப்பர்களைக் காட்டினர். எவ்வுணர்ச்சியும் வெளிக்காட்டாத அக்கறுப்பர்கள் வன்ம உணர்வுடன் முறைப்பதாக வெள்ளையர்கள் கூறினர். இருட்டுக்கும் வன்மத்துக்குமான தொடர்பை இங்கு ஏற்படுத்தியது வெள்ளையர்களின் ஆழ்மனம்தான். இருட்டில் விழித்த மனதின் கண்கள்.
நார்த்து வெஸ்டர்ன் யூனிவர்சிட்டியில் மற்றொரு சுவாரஸ்யமான ஆய்வு. மாணவர்களிடம் அவர்கள் கடந்த காலத்தில் செய்த நன்மை (உதவி) \ தீமையைப் (துரோகம்) பற்றி எழுதச் சொன்னார்கள். எழுதிய பின் பிரதிபலனாக அவர்களுக்கு பென்சில் மற்றும் கிருமித்தடை திரவம் (டெட்டால் போன்று) தோய்த்த கைத்துண்டு தந்து அவற்றிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்யச் சொன்னார்கள். தீமை நினைவை மீட்டினவர்கள் கைத்துண்டைத் தேர்வு செய்தனர். மேலும் இதனால் துடைத்த பிறகு இம்மாணவர்கள் அடுத்து தங்களது சகமாணவர்களின் பள்ளி வேலைகளைப் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. இந்தக் கைத்துண்டு சமாச்சாரத்துக்கு நம்மூர் உதாரணம் திருப்பதி உண்டியலுக்கு வரும் கோடிகள் மதிப்புள்ள தங்கக்கட்டிகள்.
இந்தக் கடைசித் தகவல் முக்கியமானது. இதையே உளவியலாளர்கள் ‘பிரைமிங்’ என்கிறார்கள். தயாராதல் என்று இதற்கு ஏறத்தாழ பொருள்படும். பிரைமிங் வார்த்தையின் பிற அர்த்தங்கள் இந்தக் கருத்தாக்கத்தை மேலும் விளங்கப் பயன்படும்: 'துப்பாக்கியில் வெடிமருந்து திணிப்பு'; 'முற்சாயமாகப் பயன்படும் கலவை'. அலுவலகத்தில் ஒரு குழுவை குறிப்பிட்ட விதங்களில் செயல்பட வைக்க ‘அர்ப்பணிப்பு’, ‘விசுவாசம்’, ‘ஒத்துழைப்பு’ போன்ற வார்த்தைகளை மேலாளர்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள் ("உங்கள் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால்தான் இந்த வேலை நடக்கும்"). இது போன்ற பிரயோகங்கள் ஆழ்மனதில் இருந்தவாறே ஊழியர்களின் செயல்திறனை அதிகப்படுத்துவது நிரூபணமாகியுள்ளது. அடுத்த முறை உங்கள் மேலாளர் ‘ஒத்துழைப்பு’ எனும் போது கவனியுங்கள்.
அன்றாட வாழ்வுக்கான பல முடிவுகளை நாம் அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் செய்ய வேண்டியுள்ளது. ஆற அமர யோசிக்கும் அவகாசம் நமக்குப் பெரும்பாலும் இருப்பது இல்லை (எளிய உதாரணம் போக்குவரத்து நெருக்கடியில் வாகனம் ஓட்டுவது). இந்த அவசர முடிவுகளைச் சமாளிக்க நமக்குள் ஒரு மென்பொருளாகப் பயன்படுவது நம் ஆழ்மனமே. இசை கேட்பதற்கான ஒரு பிளேயரை (உ.தா. VLC, Real Player) உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தபின், எந்த எம்.பி 3 கோப்பை ஓட விட்டாலும் அது உங்கள் கணினியில் உள்ள பிளேயரில் அதன்பாட்டுக்குத் திறப்பது போன்று, வாசனை, காட்சி, ஒலிகள் போன்ற பல நுண்குறிப்புகளைக் கொண்டு மரபணுக்களில் உள்ள சமிக்ஞைகள் மற்றும் பழம் நினைவுகளின் அனுபவங்களின் விளைவுகளை கருத்திற்கொண்டு மனம் சட்சட்டென்று உத்தரவுகள் இடுகின்றன. இப்படி உருவேற்றுதலின் (பிரைமிங்) மற்றொரு எல்லைதான் தீவிரவாத மனநிலை. தன் பங்குச் சேமிப்புப் பணத்தை குடும்பக்கணக்கிற்கு மாற்றக் கோரும் அஜ்மலால், இந்தியக் குழந்தைகளின் நெற்றிப்பொட்டில் பட்டென்று சுட முடிந்தது மனத்தில் ஏற்கனவே நிறுவப்பட்ட மென்பொருள் அதன் பாட்டுக்கு ஓடினதால்தான். மனிதன் ஒரு அரைக்கணினி, யோசிக்கும் எந்திரன்.
நமது தலையின் முன்பக்கத்து மூளைப் பகுதி கார்டெக்ஸ் எனப்படும். இதன் பரப்பு தான் "நான்" எனும் பிரக்ஞை ஆரம்பிக்கும் வெளிமனம். ஆழ்மனம் இதற்குக் கீழுள்ள வெண்டுரல் பெலிடம் எனும் பகுதி. பின்னிருக்கையில் அமர்ந்திருந்து துப்பாக்கி முனையில் கார்ப் பயணியைக் கடத்திச் செல்லும் பாணியில் மட்டுமே ஆழ்மனம் வெளிமனதை சதா சூசகமாய்க் கட்டுப்படுத்தும் என்பதெல்லாம் ஆ.மாதவனின் ‘கிருஷ்ணப்பருந்து’ காலத்தில் பெருமூச்சுடன் நாம் நம்பின பழைய சேதி. ஓட்டுனர் இருக்கையை அடிக்கடி ஆழ்மனமும் ஆக்கிரமிக்கும் என்று தற்போது ஆய்வுகள் நிறுவியுள்ளன. ‘சயின்ஸ்’ இதழில் இது சம்மந்தமாக ஒரு ஆய்வு பிரசுரமானது. பிரஞ்சு மற்றும் பிரித்தானிய நரம்பியல் நிபுணர்கள் 18 பேர் கொண்ட குழுவை ஒரு கணினி ஆட்டம் ஆட வைத்தனர். இதன் விதிகளில் ஒன்று பணத்தின் படம் திரையில் தோன்றினால் தரப்பட்டுள்ள கைப்பிடியை அழுத்த வேண்டும்; எத்தனை அதிகமாய் அழுத்துகிறார்களோ அவ்வளவு காசு கிடைக்கும். ஆட்டத்தின் போது பிரித்தானிய பவுண்டு, பென்னி நாணயங்கள் நொடியில் பளிச்சிட்டு மறைந்தன. ஆட்ட முடிவில் நிபுணர்கள் இரண்டு தகவல்களை அவதானித்தனர். ஒன்று, பவுண்டு எனும் அதிக மதிப்புள்ள நாணயம் தோன்றிட குழுவினர் பென்னி நாணயத்துக்கானதை விட அதிகமாய் அழுத்தியுள்ளனர். அடுத்து, குழுவினரின் மூளையை இமேஜிங் முறையில் படமெடுத்துப் பார்க்க இவ்வாறு அழுத்துகையில் வெண்டுரல் பெலிடம் பகுதி அதிக விழிப்பாக இருந்தது தெரிய வந்தது. அதாவது அந்த நொடி நேர முடிவுகளை ஆழ்மனமே எடுத்துள்ளது.
ஆழ்மனம் இப்படி வெளிமனத்தின் கட்டுப்பாட்டு அறைக்குக் கூரை பிரித்து இறங்குவதன் காரணம் என்ன? வேட்டையாளி-சேகரிப்பாளனாகத் திரிந்த காலத்தில் இந்தக் கீழ்மனம் தான் ஆபத்துகளிருந்து தப்பிக்கும், இனப்பெருக்கம் செய்யும் உய்வுக்கு அவசியமான அன்றாட முடிவுகளை எடுத்து வந்தது. கார்டெக்ஸ் எனும் முன்மூளை பின்னால்தான் உருவாகி நமக்காக யோசிக்க ஆரம்பித்தது. நவீன யுகத்திலும் ரொம்ப அவசியமான நேரத்தில் நமக்குக் கைகொடுப்பது இந்தப் பழங்குடி மூளைதான்!
No comments :
Post a Comment