தமிழில் இருவகையான நல்ல படங்கள் எடுக்கப்படுகின்றன. ஒன்று எந்த சினிமா மொழி ஆளுமையோ கலையுணர்வோ இல்லாதவர்களால் வாழ்வில் ஒருமுறை எடுக்கப்படுபவை. இன்னொன்று புத்திசாலித்தனமாய் திரைக்கதை எழுதவும் கலையுணர்வு தரும் தெளிவுடன் அதை படமாக்கவும் அறிந்தவர்களால் எடுக்கப்படுபவை. தமிழில் ரெண்டாம் வகை அரிது.
இதில் மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா மற்றும் சமீபமாக நலன் குமாரசாமி ஆகியோர் சேர்கிறார்கள். நலனின் “சூது கவ்வும்” நுட்பமான ஏகப்பட்ட உள்முடிச்சுக்களை கொண்ட திகைப்பூட்டும் ஒரு திரைக்கதை. பொழுது போக்கு நோக்கம் தெளிவாக இருந்தாலும் உலகப்படங்கள், இலக்கியத்தில் மட்டும் நமக்கு பரிச்சயமுள்ள சமாச்சாரங்களையும் அநாயசமாய் இடையிடையே பேசியுள்ளதும், பளிச்சென்ற புத்திசாலித்தனத்தை காட்சியமைப்பில் பயன்படுத்தும் தீரமும் நலன் செய்துள்ள இரு சாகசங்கள். ஏனென்றால், பொதுவாக தமிழ் மீடியாவுக்கு புத்திசாலிகளைக் கண்டால் ஆகாது; அதனால் அவர்கள் புத்திசாலிகள் பொதுமக்களுக்கும் ஒவ்வாதவர்கள் என்றொரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் பொதுமக்கள் முட்டாள்கள் அல்ல. நேர்த்தியாக சொல்லப்படும் புத்திசாலித்தனமான கதைகளை அவர்களை எளிதில் கிரகிக்கிறார்கள் என்பதற்கு “சூது கவ்வும்” நல்ல உதாரணம். திரையரங்கில் பார்வையாளர்கள் சில காட்சிகளை குறிப்பிட்டு தமக்குத் தாமே விளக்கி ரசிப்பதை கவனித்தேன். அதாவது பார்வையாளன் என்பவன் வெறுமனே விசிலடித்து குதிக்கவும் நெஞ்சை நக்கியவுடன் “ஆத்தா” என்று கூவி அழுபவனும் மட்டும் அல்ல. ஆனால் அப்படித்தான் என தமிழ் சினிமா இயக்குநர்கள் பிடிவாதமாய் வலியுறுத்தி வந்துள்ளனர். சமீபமாக புது இயக்குநர்களை இந்த பொய் பிம்பத்தை உடைத்து உள்ளனர். இது ஒரு உற்சாகமான போக்கு.
”சூது கவ்வும்” அளவுக்கு வாழ்வின் அபத்தத்தை நகைச்சுவை கொண்டு மிக இயல்பாக படம் பிடித்த மற்றொரு படம் தமிழில் இல்லை எனலாம். நம்முடைய இதுவரையிலான சிறந்த நகைச்சுவை படங்கள் யாரோ ஒருவரை முட்டாள் என காட்டி மட்டுமே சிரிப்பு மூட்ட கூடியவை. அல்லது ஒழுக்கப்பிறழ்வை கேலி பண்ணக் கூடியவை. ஆனால் நாம் மிக சீரியஸாக கருதிக் கொண்டிருக்கிற வாழ்வே அர்த்தமில்லாமல் போகிற நிறைய தருணங்கள் உண்டு; அதை புரிந்து கொள்கையில் நமக்கு வாழ்வின் மீதே, நம் மீதே சிரிப்பு வருகிறது; வாழ்க்கை விழிப்புணர்வு கொண்டவனின் கொண்டாட்டம் ஆகிறது. இது தான் ஆகப்பெரிய நகைச்சுவை. இந்த அபத்த நகைச்சுவையை சாப்ளினிடமும், பெக்கெட் போன்றவர்களின் அபத்த நாடகங்களிலும் நாம் இதைக் கண்டிருக்கிறோம். தமிழ் சினிமாவில் முதன்முறையாக “சூது கவ்வும்” இந்த வகை அபத்த நகைச்சுவையை சித்தரித்திருக்கிறது. அபத்த நாடகங்களின் தரத்தை எட்டாவிட்டாலும் ரசிக்கவும் வியக்கவும் வைக்கிறது; தமிழில் இவ்வகைக்கு முக்கியமான ஒரு துவக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தியாகராஜன் குமாரராஜா திரைக்கதை எழுதிய படங்களிலும் எடுத்த ஒரே படத்திலும் வேறு வகையில் இந்த வாழ்வியல் அபத்தத்தை தொட்டிருக்கிறார். “ஆரண்ய காண்டத்தில்” போலீஸ் இன்ஸ்பெக்டர் கடத்தல்காரர்களிடம் பேரம் பேசிக் கொண்டே சட்டென்று சில்கின் பாடலை ரசித்து அவளது மரணத்தை நினைத்து இரங்கும் காட்சி மற்றும் காங்ஸ்டர்கள் ஒருவனை கொல்வதற்காக காரில் காவல் நிலையம் அருகே காத்திருக்கும் போது கைஜோசியம் பார்க்க வரும் பாத்திரம் அசந்தர்ப்பமாக பேசும் காட்சியையும் உதாரணம் கூறலாம். ஆனால் பெரும்பாலும் குமாரராஜா கதாபாத்திரங்களின் முட்டாள்தனத்தில் உள்ள அபத்தத்தையும், கீழ்த்தட்டு, நிழலுலகத்தினரின் அசட்டையான போக்கில் உள்ள அபத்தத்தையும் தான் குறிவைப்பார் (சம்பத் பேசும் ”அண்ணி-சுண்ணி” வகை பஞ்ச வசனங்களில் போல்). ஆனால் நலன் இப்படத்தில் வேலை, குடும்ப உறவு, காதல், நேர்மை, நாணயம் போன்ற எதையும் விட்டு வைக்காமல் கலாய்க்கிறார். ஒவ்வொன்றின் பின்னுள்ள விழுமியத்தையும் அபத்தமாக காட்டுகிறார். தமிழ்ப்பார்வையாளன் நெளியாமலும் பார்த்துக் கொள்கிறார். ஆரண்ய காண்டம் போல் அல்லாமல் இது தொடர் நகைச்சுவை தருணங்களைக் கொண்டது என்பதால் அரங்கம் சதா அதிர்ந்து கொண்டே இருக்கிறது. நான் மேலே குறிப்பிட்ட விபரங்களை பார்வையாளன் உணர்கிறானே அன்றி, அந்த இடத்தில் இருந்து உச்சந்தலையை சொறிந்து யோசிக்க வைக்கவில்லை. “ஆரண்ய கண்டம்” செய்த அந்த சிறு தவறை இப்படம் செய்யவில்லை. நகைச்சுவை படத்தின் முக்கிய பலம் இது. படத்தில் உள்ள தர்க்க சறுக்கல்களையும் பார்வையாளன் பொருட்படுத்துவதில்லை. ஏன் என்றால் இன்னொரு புறம் இப்படம் எதார்த்தமானது என்று கோரிக் கொள்வதும் இல்லை.
முதல் காட்சியில் நண்பர்கள் இருவர் அலாரம் வைத்து டாய்லட்டுக்கு சண்டை போட்டு அவசரமாக சட்டை பேண்ட் போட்டு தயாராகி ஒருவன் அலுவலகம் கிளம்ப இன்னொருவன் ரொம்ப பயபக்தியாக சரக்கு பாட்டில்களை திறந்து குடிக்க ஆரம்பிப்பதில் இருந்து மேற்சொன்ன அபத்த கலாட்டா துவங்கி விடுகிறது. இப்படி குடிக்கிற சேகரிடம் வீட்டுக்கு புதிதாக வந்த பகலவன் “நீங்க என்ன வேலை பண்றீங்க?” எனக் கேட்க பதிலுக்கு சேகர் நம்முடைய சில “ஊர்சுற்றி” இலக்கியவாதிகளின் பாணியில் வேலை செய்வது எவ்வளவு அபத்தம், வேலை செய்யாமல் இருப்பதும் ஒரு உரிமை என நீண்ட தத்துவ விளக்கம் கொடுக்க பகலவன் அவனிடம் அவன் நிஜமாகவே முன்னர் ஒரு வேலையில் இருந்து பின்னர் விலக்கப்பட்ட கதை தனக்கு தெரியும் என உண்மையை உடைக்க “இதை முன்னமே சொல்லி இருந்தால் இவ்வளவு தத்துவத்தையும் சொல்லி வேஸ்ட் பண்ணி இருக்க மாட்டேமில்ல” என சேகர் வெறுப்பாக கூற வசனத்துக்கு வசனம் ஒரு கருத்து, அதை அங்கதம் செய்யும் எதிர்கருத்தை, அதை அடுத்து உடைத்து காலி செய்யும் இன்னொரு கோணம் என காட்சிக்குள் அவ்வளவு உள்ளடுக்குகள். குமாரராஜா ஒரே காட்சியில் செய்கிற இந்த வித்தையை நலன் நொடிக்கு நொடி படம் முழுக்க செய்து கொண்டே இருக்கிறார்.
பகலவன் ஊரில் நயந்தாராவுக்கு கோயில் கட்டி பிரச்சனையாகி சென்னைக்கு ஓடி வருகிறான். எவ்வளவு செலவாச்சு கோயிலுக்கு எனக் கேட்டறிகிறான் அவன் நண்பன் கேசவன். ஒன்றரை லட்சம். அட, இந்த பணத்தை ஏதாவது தொழில் செய்ய முடக்கி இருக்கலாமே என கேட்கிறான். அதற்கு பகலவனின் பதில் “எதுக்கு தொழில் செய்யணும்?”. தொழில் செய்யாமல் இருப்பது என்பது பகலவனின் சித்தாந்தம் ஒன்றும் அல்ல. அவனுக்கு நிஜமாகவே ஒருவர் எதற்கு பணத்தை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும் என புரியவில்லை. அது போலத் தான் விஜய் சேதுபதியின் தாஸ் பாத்திரம். தர்க்கரீதியாக யோசிக்கக் கூடிய, ரிஸ்க் எடுக்க விரும்பாத ஒரு கடத்தல்காரன். தாஸின் இந்த கராறான ரிஸ்கில்லாத பாணியே அவரது அபத்தமும் நகைச்சுவையும். ஆட்களை கடத்தி அவர்களை மனம் நோக வைக்காமல் அவர் பணம் கறக்கிற விதம் பயங்கர கலாட்டாவாக உள்ளது. அதே போலத் தான் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அவர் கூறுகிற ஐந்து விதிகளும். இறுதி விதி: “இந்த தொழிலில் சுத்தமாக வீரமே கூடாது”.
தாஸுக்கு தன்னுடன் ஒரு பெண் இருப்பது போல் ஒரு மனத்தோற்றம். அந்த பெண் தன் காதலி என நினைத்து சதா பேசிக் கொண்டு இருக்கிறார். அவர் ஒருமுறை இந்த வியாதியை சரி செய்ய உளவியல் மருத்துவரை பார்த்து மாத்திரையெல்லாம் சாப்பிடுகிறார். அப்பெண் தோன்றுவதை நிறுத்துகிறாள். பிறகு சிகிச்சையை நிறுத்தி விடுகிறார். ஏன் என்று அவரை சந்திக்கும் மூன்று நண்பர்களும் வினவ அவர் சொல்கிறார்: “அவள் வராமல் நின்றதும் என ரொம்ப போரடித்தது”. எவ்வளவு ஆழமான கூர்மையான வசனம். துல்லியமான சரியான வாழ்க்கை சகிக்க முடியாததாக இருக்கும். ஏதாவது ஒரு பைத்தியக்காரத்தனம், அல்லது பொய்த் தோற்றம் அல்லது கற்பனையான பிடிவாதம் தான் வாழ்வை அவ்வளவு குதூகலமாக அர்த்தபூர்வமாக மாற்றுகிறது. இலக்கியம், கலை, சினிமா, காதல், சித்தாந்தம் எல்லாம் அது தான். தாஸின் வாழ்க்கையில் அப்பெண் ஒரு மனப்பிராந்தியாக கூட இருக்கையில் எல்லாம் சரியாக இயங்குகிறது. அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். ஆனால் ஒரு விபத்தில் அவள் “இறந்து” போகிறாள். அப்போதில் இருந்து அவனது சனி திசை ஆரம்பிக்கிறது. பற்பல பிரச்சனைகளை சந்தித்து அவஸ்தைப்பட்டு இறுதியில் விடுபடும் போது மீண்டும் அதே போன்று ஒரு பெண்ணை நிஜவாழ்க்கையிலே பார்க்கிறான். படம் அப்படி முடிகிறது.
உண்மையில் தாஸின் பாத்திரத்தில் மட்டுமே கவனம் குவித்து விரிவுபடுத்தினால் நலனால் மிக ஆழமான மற்றொரு வகை படத்தை தந்திருக்க முடியும். தமிழில் அது அனுராக் காஷ்யப் இந்தியில் நிகழ்த்தியது போன்றொரு சாதனையாகவும் இருந்திருக்க கூடும். ஆனால் நலன் ஒரு பொழுதுபோக்காக மாற்றும் முயற்சியில் வேண்டுமென்றே தாஸின் பாத்திரத்தை குறுக்கி விட்டார். விஜய் சேதுபதி நேர்த்தியாக கராறாக நடித்திருந்தாலும் அவரால் அப்பாத்திரத்துக்கு தேவையான பித்து மனநிலையை வெளிக்கொணர முடியவில்லை. ரகுவரன், நஸ்ருதீன் ஷா, மோகன் லால், மனோஜ் பாஜ்பாய், நவாசுதீன் சித்திக்கி போன்ற கற்பனாபூர்வமாக எதிர்பாரா அம்சங்களை நடிப்பில் கொண்டு வரும் கலைஞர்கள் செய்ய வேண்டிய பாத்திரம் அது. விஜய் சேதுபதி கொஞ்சம் தட்டையாகவே செய்திருக்கிறார்.
பொதுவாக திரைக்கதை இலக்கணப்படி ஒரு காட்சிக்குள் கதைக்கான ஒரு மாற்றம் அல்லது திருப்பம் இருக்க வேண்டும். உதாரணமாக பருத்திவீரன் படத்தில் நாயகன் அரவாணிகளை பிடித்து வைத்து வம்பு செய்கிற காட்சி அதனளவில் எந்த ஒரு புது மாற்றத்தை கொண்டு வருவதோ நாயகனைப் பற்றி மிகப்புதிதாக ஒன்றை சொல்லி விடுவதோ இல்லை. அது வெறுமனே ஒரு சுவாரஸ்யமான காட்சி அவ்வளவு தான். தமிழ் சினிமாவில் இது போல் இடத்தை அடைக்கிற சுவாரஸ்ய காட்சிகள் ஏராளம் உண்டு. ஆனால் “சூது கவ்வுமில்” ஒவ்வொரு காட்சிக்குள்ளும் ஒரு திருப்பம், வளர்ச்சி இருக்கிறது. Story என்கிற நூலில் ராபர்ட் மெக்கீ சினிமாவில் ஒரு காட்சி பற்றி விளக்கும் போது ஒரு காட்சிக்குள் ஒரு விழுமியம் மற்றொன்றாக மாற வேண்டும் என்றொரு அழகான அவதானிப்பை செய்கிறார். ஒரு நல்லவன் கெட்டவனாகவோ, அன்பானவன் கோபமானவனாகவோ, ஏதோ ஒரு பெண் காதலியாகவோ, ஒரு ஆத்ம நண்பன் துரோகியாகவோ, பரம எதிரி நண்பனாகவொ, ஒரு எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவோ அந்த மாற்றம் நடக்கலாம். இப்படத்தின் முக்கிய சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் இந்த சின்ன சின்ன தொடர் திருப்பங்களால் தான் ஏற்படுகிறது. படத்தை எத்தனை திருப்பங்கள் அல்லது உள்காட்சி மாற்றங்கள் என கணக்கிடவே முடியாது. அந்தளவுக்கு ஒன்றுக்குள் மற்றொன்றாக மலர்ந்து கொண்டே போகிறது. ஒரு சரவெடி போல் படம் முடிந்த பின்னும் நமக்குள் அதிர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு காட்சியின் திகைப்பை முழுக்க உணர்ந்து உள்வாங்கும் முன்னே இன்னொரு திகைப்பை அதில் இருந்து வெளியேற்றுகிறது. அரங்கில் இருந்து வெளிவருகிறவர்கள் எண்ணற்ற காட்சிகளை நினைத்து சிலாகித்துக் கொண்டே இருக்கலாம்.
அமைச்சர் மகனின் கடத்தலின் போது பணயத்தொகை கொண்ட பையை ஹெலிகாப்டர் பொம்மை மூலம் தூக்கி செல்லும் காட்சி பார்வையாளர்களை மிக அதிகமாக திகைக்க வைத்தது. ஆனால் இதே காட்சியில் தர்க்கபிழையும் இருக்கிறது தான். போலீஸ் படை செய்வதறியாமல் இருக்க கடத்தல்காரர்கள் ஹெலிகாப்டர் பொம்மை மூலம் பணப்பையை தூக்குகிறார்கள் என்பது நம்புவதற்கு சிரமம். போலீசால் எளிதாக அந்த பறக்கும் பொம்மையை சுட்டு வீழ்த்த முடியும். இது போல் பல காட்சிகளில் லாஜிக் உதைக்கலாம். ஆனால் படத்தின் ஆதாரசுதியே அபத்தம் என்பதால் நமக்கு சிரிக்கத் தான் முதலில் தோன்றுகிறது. எதார்த்த படம் என்றால் தான் நமக்கு எரிச்சலும் குடைச்சலும் எடுக்கும். அந்த விதத்தில் நலனும் அவருடன் இணைந்து திரைக்கதையில் பங்காற்றி இருக்கும் ஸ்ரீனிவாஸ் கவிநேயமும் விளையாடி இருக்கிறார்கள். என்கவுண்டர் நிபுணரான போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரம்மா தீப்பெட்டிக்காக கடத்தற்காரர்களிடம் போக அவர்கள் பயந்து காரில் ஓட அவர் சந்தேகித்து துரத்த ஒரு முட்டுசந்தில் போய் தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொள்ள அங்கிருந்து அவர்கள் பிரம்மாவை கைவிலங்கு இட்டு கட்டி விட்டு எதிர்பாராமல் தப்பிக்கிற காட்சியும் இது போல் படு சாமர்த்தியமான திரைக்கதையாக்கம்.
பொதுவாக படம் பார்த்து முடித்ததும் நமக்கு களைப்பாக, நிம்மதியாக, உற்சாகமாக அல்லது கிளர்ச்சியாக இருக்கும். இந்த படம் முடிந்து வெளியே வந்ததும் நமது அன்றாட வாழ்வை அபத்தமான ஒரு கதையோட்டமாக பார்க்க தூண்டி, நாம் பொதுவாக சீரியஸாக எடுத்து வருத்தப்படும் பல அற்ப காரியங்களை பார்த்து சிரிக்க வைக்கிறது. படம் முடிந்தும் வெளியே இன்னொரு படம் அதே போல் ஓடிக் கொண்டிருப்பதை கவனிக்க வைக்கிறது. தாஸுக்கு, சேகருக்கும், பகலவனுக்கும் நடப்பது போல நம்முடைய வேலையிடத்தில், குடும்பத்தில், நண்பர்கள் இடையே எவ்வளவு அபத்தங்கள் நம் வாழ்வையும் சூழ்ந்திருக்கிறது! எவ்வளவு வீரதீர பேச்சுகள், கோப தாப கோரல்கள், ஆவேசங்கள். அத்தனையும் நாம் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியவை. என்கவுண்டர் சைக்கோ போலீஸ் அதிகாரி மாட்டடி அடிக்க கடத்தல்காரர்கள் ஒரு கட்டத்தில் அழாமல் அதைப் பார்த்து சிரிக்க ஆரம்பிக்கிறார்கள். அது போல் நாமும் எவ்வளவு முறை வலி தாங்காமல் நமக்குள் சிரித்திருக்கிறோம்! இதே அதிகாரி குழப்பமாகி அவர்களை துப்பாக்கியால் சுட முடிவெடுக்கிறார். அதற்கெடுத்த கோளாறான துப்பாக்கியை பின்னால் ரொம்ப சீரியஸாக சொருகிக் கொண்டு அவர் பிருஷ்டத்தில் குண்டடிபட்டு துடிக்கிறார். நினைத்துப் பார்த்தால் இதே போன்று நம் வாழ்வில் விளையாடியுள்ள பல வில்லன்களும் சீரியஸாக முயலும் போதெல்லாம் சூடுபட்டு காமெடியன்களாக தோன்றி இருப்பார்கள்.
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வினால் நாம் விழுந்து விழுந்து சிரிக்கத் தான் வேண்டும். அதாவது நன்மையை போலவே தீமையையும் யார் சீரியஸாக எடுத்துக் கொண்டாலும் இந்த காலத்தில் நம்மால் வேறெப்படியும் ரியாக்ட் செய்ய முடியாது.
நல்லாருக்குங்க.,
ReplyDeleteநுணுக்கமான அலசல்.
//ஏதாவது ஒரு பைத்தியக்காரத்தனம், அல்லது பொய்த் தோற்றம் அல்லது கற்பனையான பிடிவாதம் தான் வாழ்வை அவ்வளவு குதூகலமாக அர்த்தபூர்வமாக மாற்றுகிறது.//
ReplyDeletenice comments,,,,,,,
விரிவான அலசல்...
ReplyDeleteரசித்தேன்....
இந்த படத்தை விட நான் அதிகம் ரசித்தது உங்களின் இந்த விமரிசனத்தை..இப்படி படம் எடுப்பவர்களும்,அதை சரியானபடி உள்வாங்கி இப்படி ரசிப்பவர்களும் பெருகுவதே நம் தமிழ் திரையுலகம் பெற்ற நற்பேறு.
ReplyDeleteமிக்க நன்றி அபிலாஷ்.
இந்த படத்தை விட நான் அதிகம் ரசித்தது உங்களின் இந்த விமரிசனத்தை..இப்படி படம் எடுப்பவர்களும்,அதை சரியானபடி உள்வாங்கி இப்படி ரசிப்பவர்களும் பெருகுவதே நம் தமிழ் திரையுலகம் பெற்ற நற்பேறு.
ReplyDeleteமிக்க நன்றி அபிலாஷ்.
நன்றி கோகுல், தொழிற்களம் குழு, தமிழ்வாசி பிரகாஷ், Ganpat
ReplyDelete//ஆனால் இதே காட்சியில் தர்க்கபிழையும் இருக்கிறது தான். போலீஸ் படை செய்வதறியாமல் இருக்க கடத்தல்காரர்கள் ஹெலிகாப்டர் பொம்மை மூலம் பணப்பையை தூக்குகிறார்கள் என்பது நம்புவதற்கு சிரமம். போலீசால் எளிதாக அந்த பறக்கும் பொம்மையை சுட்டு வீழ்த்த முடியும். இது போல் பல காட்சிகளில் லாஜிக் உதைக்கலாம்.//
ReplyDeleteஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திதான் பிடிக்க (பணத்தை மீட்க) வேண்டுமென்பதில்லை. அந்த அம்மா பணப்பையோடு நடந்து போன போதே பிடித்திருக்கலாம். போலீஸ் அங்கே போனது எதற்காகவென்றால், பணத்தை எடுக்க வரும் கடத்தல்காரர்களை பிடிக்க அல்லது அடையாளம் காண. எடுத்துக்கொண்டு போன பணத்தை, திரும்ப மீட்டுக்கொண்டு வருவதற்கல்ல.
அருமையாக அலசி எழுதியிருக்கிறீர்கள். இந்தப் படத்தை நான் வெறும் காமெடி படமாக மட்டும் தான் பார்த்தேன். அது எவ்வளவு பெரிய அபத்தம் என்று இப்பொழுது புரிகிறது. நன்றி :-)
ReplyDeleteநீங்கள் சொல்லும் புத்திசாலித்தனமான,கலையுணர்வுடன் கூடிய திரைக்கதை என்பது உணர்ச்சிவயப்பட்ட,ஒரு சார்புடைய பார்வை என்றே கருதுகிறேன்.இந்த படத்தை ஆரண்யகாண்டத்தோடு ஒப்புமை செய்யும் தேவையும் இல்லை. ஆரண்யகாண்டம் அது தான் எடுத்துக்கொண்ட சாரத்தை ஒரு நரம்பின் வழியாக எல்லா கதாபாத்திரங்களுக்கும் கடத்தி, விசுவல் மீடியத்தையும் சரியாக உள்வாங்கி இறுதியில் அதனளவில் முழுதன்மையை சுவாரஸ்யத்துடனும் கொண்டு செல்கிறது. Stream of Consciousness இருக்கிறது..ஆனால் சூதுகவ்வும் இன்றைக்கான மேலோட்ட மனநிலை கொண்ட பார்வையாளனுக்கான படம் மட்டுமே. அதனை வீரியத்துடன் கொண்டு சென்றிருந்தால் மட்டுமே (வாய்ப்பு இருந்தும்) பார்வையாளர்களின் மனத்தில் நின்று தமிழ்சினிமாவில் ஒர் நீங்கா இடத்தை பெற்றிருக்கும். குறும்படங்களின் கதை சொல்லும் மெண்டாலிட்டியிலிருந்து தப்பித்தால் மட்டுமே அது சாத்தியம். இந்த வகை சினிமா முள்ளும்மலரும் காலகட்டங்களில் வரும் மாடர்ன் சகலகலா வல்லவன்…….Just an Hangover மட்டுமே..
ReplyDelete