Sunday, 2 June 2013

இந்திய கிரிக்கெட்டின் காட்பாதர்





 இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து ஸ்ரீனிவாசன் தற்காலிகமாக விலகுகிறார். இது அவரை கடுமையாக விமர்சித்து கேள்வியெழுப்பிய மீடியாவின் வெற்றி. ஆனாலும் ஸ்ரீனிவாசனின் வெற்றியும் தான். அவர் தன்னிடத்தில் தனக்கு அணுக்கமான ஜக்மோஹன் தால்மியாவை தலைவராக நியமித்து விட்டு செல்கிறார். அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஊழல்களை விசாரிக்கும் குழுவிலும் அவர் நியமித்த தென்னிந்திய நீதிபதிகள் தாம் இருக்கிறார்கள். அவர்கள் எந்தளவுக்கு நியாயமாக நடந்து கொள்வார்கள் என்பது சந்தேகமே. தால்மியாவும் சென்னை அணியில் கலைத்து விட போவதில்லை. இவ்வளவு கூச்சல் ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு இரு தரப்புக்கும் அதிக சேதமின்றி, வெற்றி தோல்வி எதுவும் இன்றி ஆட்டம் டிரா ஆகிறது. மீடியா ஒரு தார்மீக வெற்றியும் ஸ்ரீனிவாசன் ஒரு நடப்பியல் வெற்றியும் பெற்றுள்ளார்.

ஸ்ரீனிவாசன் காட்பாதர் படத்தில் வரும் விட்டோ கொரிலியானாவை போன்றவர். பணத்தை விட தொடர்புகள் தாம் முக்கியம் என அறிந்தவர். அவர் இந்திய வாரியத்தில் நுழைந்ததில் இருந்தே தன் உதவிகளை பணத்தை விநியோகித்து தொடர்புகளை ஆதரவாளர்களின் வட்டத்தை விரித்துக் கொண்டே வந்திருக்கிறார். வாரியத்துக்குள் அவரால் வளர்ந்தவர்கள் அவருக்கு கடன்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்று ஒரு பெரும் நெருக்கடி வரும் போது அவர்களின் பாதுகாப்பு ஸ்ரீனிவாசனுக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. கோடிக்கணக்கான பணத்தை முன்னாள் வீரர்களுக்கு உதவித்தொகையாக அளித்து அவர்களின் விசுவாசத்தை பெற்றார். காஷ்மீர் கிரிக்கெட் வாரியம் சம்மந்தமாக சர்ச்சை வந்த போது கண்டு கொள்ளாமல் விட்டு பரூக் அப்துல்லாவுக்கு நெருக்கமானார். தோனியின் கிரீடம் ஆஸ்திரேலிய பயணத்தில் உருள இருக்கையில் அவர் இடையிட்டு அவர் அணித்தலைவராக நீடிக்க செய்தார். அடுத்து தோனியை சென்னை சூப்பர் கிங்ஸின் அணித்தலைவராக மட்டுமல்ல தன் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தில் துணைத்தலைவராகவும் நியமித்து ஒரு பாத்தியதையை ஏற்படுத்தினார். நண்பர்களின், ஆதரவாளர்களின் விசுவாசம் இம்முறை ஸ்ரீனிவாசனை காப்பாற்றி உள்ளது. 

லலித் மோடிக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் உள்ள வித்தியாசம் இது தான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை உண்டு என காட்பாதர் படத்தில் கூறுவார் விட்டோ கொரிலியானா. ஸ்ரீனிவாசன் இதை நம் கண்முன் நிரூபித்தே காட்டி விட்டார். இந்நாட்டில் நியாயம் நீதி ஆகியவற்றுக்கு அல்ல உறவு தொடர்புகளுக்கு தான் மதிப்பு அதிகம். தன் பணத்தை இதற்கு அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்; ஆனால் பணம் மட்டுமே தன்னை காப்பாற்றாது என அறிந்து வைத்திருந்தார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்குள் அரசியல்வாதிகள் நுழைய ஆரம்பித்ததில் இருந்தே ஊழலும் பொருளாதார தில்லுமுல்லுகளும் பிரம்மாண்ட தோற்றம் கொள்ள துவங்கி விட்டன. கார்ப்பரேட்டுகள், அரசியல்வாதிகள், நிழலுலக குற்றவாளிகள் என ஒரு அச்சுறுத்தும் கூட்டணி இந்திய கிரிக்கெட் வாரியத்தை கைப்பற்றியது. ஆனாலும் என்றுமே குற்றம் செய்து தப்பிப்பது இந்திய கிரிக்கெட்டில் இத்தனை எளிதாக இருந்ததில்லை. ஸ்ரீனிவாசன் இந்த சர்ச்சையை கையாண்ட விதத்தில் இருந்த தன்னம்பிக்கை மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது. ஊழல் குற்றச்சாட்டுகள் வெடிக்கும் போது நமது காங்கிரஸ் அமைச்சர்கள் காட்டும் சின்ன பதற்றம் கூட அவர் பட்சம் இல்லை. அவரை எதிர்த்து செயல்பட வாரியத்துக்குள் யாரும் இல்லை என உறுதி செய்து விட்ட நிலையில் மீடியா மட்டுமே தன்னந்தனியாக இந்த “புனிதப்போரை” தொடுத்தது. காங்கிரஸ், பா.ஜ.க தரப்பில் இருந்தோ முன்னாள் கிரிக்கெட்டர்கள் தரப்பில் இருந்தே பிஷன் சிங் பேடி போன்ற விதிவிலக்குள் தவிர யாரும் ஸ்ரீனிவாசனை நேரடியாக குற்றம் சாட்டவோ பதவி விலக கேட்கவோ துணியவில்லை. ஒரு தேசிய நிறுவனத்தை ஒருவர் இந்தளவுக்கு கச்சிதமாக ஹைஜேக் செய்ய முடியுமா என்று வியப்பேற்படுகிறது. டைம்ஸ் நவ் நிகழ்ச்சி ஒன்றின் போது ஒரு முன்னாள் வீரர் பேனலில் இருந்தார். ஆனால் நேரலை துவங்கும் முன் அவர் சட்டென்று எழுந்து போய் விட்டார். ஒரு போன் அழைப்பு மூலம் ஒரு நேரலை நிகழ்ச்சியில் இருந்து ஒருவரை சில நிமிடங்களில் எழுந்து போக செய்யும் அளவுக்கு ஸ்ரீனிவாசன் இந்த சர்ச்சையை தன் ரிமோட் கண்டுரோலால் இயக்கிக் கொண்டிருந்தார். 

பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுகள் இது போல் எழும் போது அரசியல்வாதிகள் கூட மீடியா முன் பம்முவார்கள். இந்தியாவின் பிரதமர் கூட இந்தளவுக்கு அலட்சியத்துடன் மீடியாவையும் கோடானுகோடி மக்களின் கேள்விகளையும் எதிர்கொண்டதில்லை. ஸ்ரீனிவாசன் அவ்விசயத்தில் ஒரு முன்மாதிரி. அவர் அரசியலுக்கு வந்தால் ஏற்கனவே உள்ள பல திமிங்கலங்களை விழுங்கி ஏப்பம் விடுவார். அத்தோடு அரசியல்-மீடியா-சமூகம் என்கிற பின்னலை ஒரு பொம்மலாட்ட கலைஞன் போல் அனாயசமாக கையாளவும் செய்வார். எல்லார் வாயையும் பணத்தாலும் நன்றியுணர்வாலும் மிரட்டல் அரசியலாலும் அடைத்து விட்டு கோடானுகோடி பணம் திருடி மொத்த இந்தியாவையும் சூறையாடி அதற்கு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்கிற திமிருடன் செயல்படுகிற நிலைக்கு நம் அரசியல்வாதிகளை கொண்டு சென்று விடுவார். நினைக்கவே அச்சமாக இருக்கிறார்.  

இந்த சூதாட்ட ஊழல் ஒன்றை உணர்த்துகிறது. பார்வையாளர்கள் ஒரு பக்கம் பொழுதுபோக்கை தவிர வேறெதையும் பொருட்படுத்துவதாக இல்லை. அரசியல்வாதிகள், அதிகாரிகள், வீரர்கள் என யாருக்கும் நேர்மை, உண்மை, நியாயம் முக்கியமில்லை. எவ்வளவு பணம் சம்பாதித்து போதாமல் இருக்கிறது. எந்த வாய்ப்பையும் சுணக்கமில்லாமல் பயன்படுத்தி உயர வேண்டும் என்பதன்றி வேறு உறுதி இல்லை. மொத்தத்தில் நம் சமூகம் சந்தித்து வரும் ஒரு சீரழிவுக்கு இந்த ஊழலில் நாம் நடந்து கொண்ட விதம் நல்ல உதாரணம். லட்சியங்கள் அற்ற சமூகம் இப்படித் தான் இருக்கும்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates