Wednesday, 26 June 2013

புரூஸ்லீயை கொன்றது யாரு? - அதிஷா (athishaonline.com)




புரூஸ்லீயின் மரணம் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஆனால் எல்லாமே அமானுஷ்யமும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும். அதில் மிகசிறந்ததும் எனக்கு பிடித்ததும் வைரத்தூள் கதைதான். புரூஸ்லீயைக் கொல்ல அவருடைய மனைவியே மோதிரத்திலிருந்த வைரத்தை பொடிபண்ணி பாலில் கலந்து கொடுத்ததாகவும், அதை குடித்ததால்தான் புரூஸ்லீ இறந்துபோனதாகவும் மிகபிரபலமான ஒரு கதை உண்டு.


புரூஸ்லீயை கொல்வது அவ்வளவு சுலபம் கிடையாது. அவர் ஷூட்டிங்கில் நிஜமாகவே அடித்துவிடுவார். அவருடைய மர்ம அடி தாங்காமல் நிறையபேர் ஷூட்டிங்கில் இறந்து போயிருக்கிறார்கள், அவர் ஒரு மாபெரும் பலசாலி, உக்கிரமானவர், துப்பாக்கி குண்டால் கூட அவர் உடலை துளைக்கமுடியாது என்றெல்லாம் பல கதைகள்! அதனால்தான் அவரை கொல்வதற்காக வைரத்தை பொடி பண்ணி உணவில் கலந்துகொடுத்து, அந்த வைரத்தூள் கூட அவருடைய இதயத்தில் சிக்கியதால் உண்டான மூச்சடைப்பால்தான் புரூஸ்லீ இறந்துபோனார் என்பதாக அந்தக் கதை விரியும்.

எல்லாமே பொய்தான் என்றாலும், சுவாரஸ்யமான காஸ்ட்லியாக கேட்கும் போது துள்ளலாக உணரவைக்கிற கதைகள் அவை. புரூஸ்லீ பற்றிய எல்லா தகவல்களுமே இதுபோன்ற ஃபேன்டஸி தன்மை நிறைந்ததாகவே கேள்விப்பட்டிருக்கிறேன்.

முழுதாக நடித்தது, நான்கே நான்கு படங்கள்தான். அவை எல்லாமே மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சாதாரண படங்கள். ஆனால் நான்கே படங்களில் பல கோடி ரசிகர் சாம்ராஜ்யத்தை தனக்கென உருவாக்கியவர் புரூஸ்லீ. அவர் இறந்தபின்பும்கூட, இன்றுவரை அவருக்கென பிரத்யேக ரசிகர் பட்டாளம் தினம் தினம் உருவாகிக் கொண்டேயிருக்கிறது.

புரூஸ்லீக்கு பிறகு ஏகப்பட்ட தற்காப்புக்கலை பயின்ற, சப்பைமூக்கு நடிகர்கள் ஹாங்காங்கிலிருந்தும், ஹாலிவுட்டிலிருந்தும் உருவாகிவந்தாலும், புரூஸ்லீ அடைந்த புகழில் ஒரு சதவீதத்தை கூட அவர்களால் நெருங்க முடியவில்லை. (ஜாக்கிசான் நீங்கலாக)

புருஸ்லீயின் பாதிப்பு நம்மூர் ரஜினி தொடங்கி, இதோ இப்போது வந்த தனுஷ் வரைக்கும் கூட தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ’பொல்லாதவன்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்த யாரும், தனுஷின் உடலில் புரூஸ்லீயை கண்டிருக்க முடியும். கோலிவுட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் இது தொடர்கிறது. ’குங்பூ ஹஸில், ஷாவலின் சாக்கர்படங்களை எடுத்த ஸ்டீபன் சாவ் கூட தன் படங்களில் இன்றுவரை தொடர்ந்து புரூஸ்லீக்கு மரியாதை பண்ணுகிறார். தாய்லாந்து நடிகரான டோனிஜா தன் படங்களின் திரைக்கதையில் புரூஸ்லீ பட பாணியை தொடர்ந்து புகுத்துவதை உணர்ந்திருக்கலாம்!

புரூஸ்லீ சிறப்பாக நடிக்க கூடிய நடிகரெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் அவருடைய படங்களில் அவர் நடித்ததை விட அடித்ததுதான் அதிகம். அப்படியிருக்க இத்தனை ரசிகர்களை கவரும்படி புரூஸ்லீ என்னதான் செய்துவிட்டார்? இவருடைய வெற்றி எதிர்பாராததா? காக்காய் உட்கார விழுந்த பனம்பழமா புரூஸ்லீயின் வெற்றி? புரூஸ்லீயின் மரணத்திற்கு பின்னாலிருந்த புதிர் என்ன? புரூஸ்லீயின் பாணி இன்றுவரை தொடர்கிற சூட்சமம் என்ன? என ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கிறது அபிலாஷ் எழுதியுள்ள ‘’புரூஸ்லீ - சண்டையிடாத சண்டைவீரன்'’ என்கிற புத்தகம்.

தமிழில் வெளியாகிற பயோகிராஃபி புத்தகங்கள் எல்லாமே ஒரே மாதிரியானவை. பக்திப் படங்களில் ஒரு பாணி உண்டு. எந்த கடவுள் ஹீரோவோ அவருக்கு சகல சக்திகளும் கிடைத்துவிடும். அது விநாயகராக இருக்கலாம் அல்லது முருகனாக இருக்கலாம், சிவனாக இருக்கலாம்... படத்தில் யார் கடவுளோ அவரைத்தான் மற்ற கடவுளர்கள் விழுந்து வணங்கி வழிபடுவார்கள். அவர் மட்டும்தான் உலகை காப்பாற்றுவார். நம்முடைய தமிழ் பயோகிராஃபி புத்தகங்களை வாசிக்கும்போதும் இதை உணரலாம். யாரைப் பற்றின புத்தகமோ, அவரால்தான் அவரால் மட்டும்தான் உலகைக் காப்பாற்ற முடியும் என்கிற உணர்வு! புத்தகம் முழுக்க தனிமனித வழிபாடு மிதமிஞ்சியிருக்கும்.

யாருடைய வரலாறோ, அவருடைய பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே தொடர்ந்து முன்வைக்கிற புத்தகங்களே நமக்கு படிக்க கிடைத்திருக்கிறது. ஒருவருடைய வாழ்க்கை வரலாறு என்பதே நமது சுயமுன்னேற்றத்திற்காக படிக்க கூடியதாகவே இருந்து வந்திருக்கிறது. ஒரு ஆளுமையின் எல்லா பக்கங்களையும் கோட்பாட்டு ரீதியிலும், தத்துவரீதியிலும் ஆராய்கிற புத்தகங்கள் நம்மிடம் ரொம்பவே குறைவு.

புரூஸ்லீயின் வாழ்க்கையை பற்றிய அபிலாஷின் இந்த புத்தகம் இவைகளுக்கு நேர்மாறானதாக இருக்கிறது. புரூஸ்லீயின் பாசிட்டிவ் பக்கங்களைச் சொன்னாலும், நமக்குத் தெரியாத புரூஸ்லீயின் பலவீனங்களையும் சமரசமின்றி விமர்சிக்கிறது.

புரூஸ்லீயின் மரணத்துக்கு காரணமான கஞ்சாப்பழக்கம், அவருக்கிருந்த பெண்கள் தொடர்பு, புகழால் உண்டான காமவேட்கை, சிறுவயதிலிருந்து இருந்த மற்றவர்களை பொதுவில் வைத்து அசிங்கப்படுத்தி பார்க்கிற கிறுக்குத்தனம், தோல்வியைக் கண்டு அஞ்சி நடுங்குகிற உள்ளுணர்வு, மீடியாவை சமாளிக்க முடியாமல் திணறியது, தன்னுடைய வெற்றிக்காக நண்பர்களை பயன்படுத்திக்கொண்டு, தூக்கி எறிகிற குணம் என பல விஷயங்களையும் பட்டவர்த்தனமாக முன்வைக்கிறது.

"
கடுமையாக உழைத்தால், வெற்றி நிச்சயம்" என்கிற ஒன்லைன்தான் புரூஸ்லீயின் கதையும். சிறுவயதிலிருந்து சண்டைக்காரனாக வளர்ந்து, குங்பூவால் மனதை ஒருநிலைப்பட்டுத்திக்கொண்டவர் புரூஸ்லீ. அவர் முழு சீனர் கிடையாது. ஜெர்மனிய வம்சாவழி தாய்க்கும், சீனருக்கும் பிறந்தவர். அதனாலேயே அவர் தன் வாழ்க்கை முழுக்க எந்த அடையாளமும் இன்றி வாழ வேண்டியிருந்தது. அமெரிக்காவில் மிகுந்த சிரமங்களுக்கு நடுவே, ஒரு ஆசியனாக பல்வேறு புறக்கணிப்புக்களுக்கு நடுவே வாழ்ந்து, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, முதல் வாய்ப்புக்காக போராடிதான் வெற்றிபெற்றுள்ளார் புரூஸ்லீ! ஆனால் எந்த வெற்றிக்காக வெறித்தனமாக உழைத்தாரோ, அதே வெற்றியைக் கண்டு அஞ்சி நடுங்கி, அதிலிருந்து விடுபட போதைப் பழக்கத்துக்கு ஆளாகி மாண்டுபோனதுதான் புரூஸ்லீயின் கதை.


புரூஸ்லீ வெறும் குங்பூ கலைஞன் கிடையாது. குங்பூவும் வெறும் தற்காப்புக் கலை கிடையாது. குங்பூ எப்படி சீனக்கலாச்சாரத்தின் பிரதிபலிப்போ, ஒரு தத்துவத்தேடலோ அதைப்போலவேதான் புரூஸ்லீயும்! தன் வாழ்க்கை முழுக்க வாழ்தலின் களிப்பையும், உன்னத்ததிற்கான தேடலையும் கொண்டிருந்த ஒரு அற்புத கலைஞனாக வாழ்ந்திருக்கிறான். திரைப்படங்களில் நாம் பார்த்தா! அசகாய சூரனான புரூஸ்லீக்கு அப்பால் குங்பூவை உயிராக நேசித்த ஒரு சாதாரண இளைஞனான புரூஸ்லீயை இப்புத்தகத்தில் தரிசிக்க முடிகிறது.

குங்பூவை கற்றுக்கொண்டதோடு நிறுத்திக்கொள்ளாமல், உலகின் மற்ற தற்காப்புக்கலைகளையும் படிக்கிற வெறியோடு திரிந்திருக்கிறார் புரூஸ்லீ. தன்னுடைய குங்பூவில் குத்துசண்டை தொடங்கி ஜூடோ வரைக்கும் பல்வேறு அடவுகளை புகுத்தியிருக்கிறார். (அது என்னென்ன? எப்படி என்பதையெல்லாம் புத்தக்கத்தில் விரிவாக படங்களுடன் விளக்கியிருக்கிறார் அபிலாஷ்). அதோடு சீனர்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த குங்பூவை இன்று வடபழனி வரைக்கும் பரப்பியதும் புரூஸ்லீதான்!

ஒரு நல்ல தற்காப்பு கலைஞன் ஏதோ ஒரு கலையை அதன் தன்மையோடு கற்றுக்கொண்டு முடங்கிவிடக்கூடாது. அவன் மற்ற தற்காப்புகலைகளையும் தனக்கு உள்வாங்கிக்கொண்டு அனிச்சையான உணர்வோடு சண்டையிட வேண்டும் என்கிற கொள்கையைக் கொண்டிருந்தார் புரூஸ்லீ. தன்னுடையகேம் ஆஃப் டெத்படத்தின் திரைக்கதையை அந்த நோக்கத்திலேயே அமைந்திருந்தார் லீ.

சினிமா இயக்கப் போகிறோம் என்று முடிவானதும், முதலில் புரூஸ்லீ செய்தது சினிமா குறித்து வெறித்தனமாக வாசிக்க ஆரம்பித்ததுதான்! அதை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடியதுதான். தனக்கான வாய்ப்புகளை தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்புடன் இருந்திருக்கிறார். முதுகுவலியால் அவதியுற்றபோது, ஓரு ஆண்டுக்கு குங்பூ பயிற்சியை தொடர முடியாமல் போகிறது. அந்த நேரத்தில் தொடர்ந்து நிறைய புத்தகங்கள் வாசித்து தனக்காக ‘’ஆழ்மன அமைதியை’’ அடையும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

ஒருநாளும் தன்னுடைய மனதின் சமநிலை குலையாத வண்ணம் வாழ்ந்தவர் புரூஸ்லீ. அதுதான் அவருடைய ஆற்றலை அதிகமாக்கவும், அதைக் கட்டுப்படுத்தி சரியான நேரத்தில் வெளிப்படுத்தவும் வைக்கிற ஒன்றாக மாற்றியது.

ஆனால் தன்னுடைய முதல் மூன்று படங்களில் கிடைத்த திடீர் புகழும் எக்கச்சக்கமான பணமும், அவருடைய வாழ்க்கை முறையை சிந்தனைகளை புரட்டிப்போட்டிருக்கிறது. அவருடைய சமநிலை குலைந்ததும் அங்குதான். அதுவரை இருந்த புரூஸ்லீக்கு முற்றிலும் எதிர்மறையான ஒருவனாக அவரை வெற்றி மாற்றிவிடுகிறது. அவர் சில்லறைத்தனமான சண்டைகள் போடுபவராக, பொறாமையும், வஞ்சகமும் நிறைந்தவராகவும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைக் கண்டு அஞ்சி, நல்லவர், கெட்டவர் என்று இனம் பிரிக்க முடியாமல், அனைவரையும் வெறுத்து தனிமையில் சிக்கிகொள்கிறார்.

அவர் வெற்றியைக் கண்டு அஞ்சுகிறார். அது அவரை கொன்றுவிடும் என்பதை உணர்கிறார். அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள தொடர்ந்து கஞ்சா பிஸ்கட்டுகளை தின்கிறார். ’என்டர் தி டிராகன்படம் எடுக்கப்படும்போது, அது தன் உச்ச நிலையை அடைகிறது. அப்படத்தின் டப்பிங் வேலைகளின் போதே, மூளையில் நீர்கோர்த்து மரணத்தின் வாயிலை நெருங்கிவிட்டு திரும்புகிறார்.

ஆனால் குணமான பின்னும், கஞ்சா பழக்கத்தை விடமுடியாமல் தொடர்கிறார். அதுதான் அவருக்கு எமனாகியிருக்கிறது. புரூஸ்லீ இறந்த தினத்தில் நடந்த சம்பவங்கள் கூட ஒரு திரைப்படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸின் திரைக்கதையை ஒத்திருக்கிறது.

தன் காதலியின் வீட்டுக்குச் செல்லும் புரூஸ்லீ தலைவலிக்காக சாப்பிடும் ’EQUAGESIC’ என்கிற மருந்துதான் எமனாகிறது. அவர் அரை உயிராக கிடக்கும்போதே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருந்தால், அவரை காப்பாற்றியிருக்கக் கூடும். ஆனால் வளர்ந்து வரும் நடிகையான புரூஸ்லீயின் கள்ளக்காதலியோ, அந்த நேரத்தில் புரூஸ்லீயை தன் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் பத்திரிக்கைகள் ஏடாகூடமாக எதையாவது எழுதநேரிடும். அது தன் வளர்ச்சியை பாதிக்கும் என அரைமணிநேரம் தாமதப்படுத்துகிறார். கடைசியில் புரூஸ்லீயின் நண்பர் ரேமன்ட் சாவ் என்பவரை போனில் அழைத்து வரச்சொல்கிறார்.

ஆனால் ரேமன்ட் சாவ் அன்றைய தினம் ஹாங்காங்கின் டிராபிக்கில் மாட்டிக்கொள்கிறார். அன்று அந்நகரை ஒரு புயல் கடக்கிறது. அனைத்தையும் தாண்டி ஒருவழியாக புரூஸ்லீயை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. புரூஸ்லீ இறந்துபோகிறார். புரூஸ்லீ இறந்தபின்பும் அவருடைய மரணம் குறித்து, பல்வேறு புனைவுகளை தொடர்ந்து ஊடகங்கள் உருவாக்கின.

வாழ்க்கையே குங்பூதான் என்று வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை அக்கலை குறித்து கொஞ்சம் கூட தெரியாமல் அணுகவே முடியாது. இந்தப் புத்தகத்தில் புரூஸ்லீ கற்றுக்கொண்டவின்சூன்என்கிற குங்பூ பாணிகுறித்த விளக்கமான அறிமுகத்தைத் தருகிறார் நூலின் ஆசிரியர். அதோடு புரூஸ்லீயின் குருவான யிப்மேன் பற்றியும், அவர் புரூஸ்லீயின் வாழ்க்கையை எப்படி பாதித்தார் என்கிற தகவல்களும் புத்தகம் முழுக்க கிடைக்கிறது. புரூஸ்லீயே உருவாக்கியஜீத்கூனேடூஎன்கிற முறை குறித்தும் நிறைய விளக்கங்கள் புத்தகம் முழுக்க வருகிறது.

புத்தகத்தின் பெரிய குறை அபிலாஷின் அடர்த்தியான மொழி. எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்கிற முனைப்பு. சில விஷயங்களை இன்னும் சுறுக்கமாக சொல்லியிருக்கலாமோ என்கிற எண்ணம் எழுகிறது. நிறைய எழுத்துப்பிழைகளும், சில இடங்களில் தவறான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. புத்தகத்தை உருவாக்க கடுமையாக உழைத்தவர், இந்த சின்னச் சின்ன பிரச்சனைகளையும் சரிசெய்து அவற்றை தவிர்த்திருக்கலாம். மற்றபடி இது ஒரு மிகமுக்கியமான முயற்சி.

புத்தகத்தை படித்து முடிக்கும் போது ‘’வெற்றி’’ என்கிற ஒன்றைப்பற்றிய நம்முடைய சகல நம்பிக்கைகளும் தகர்கிறது. இந்த எளிமையான புத்தகம். நீங்கள் சினிமா ரசிகராகவோ, அல்லது தத்துவங்களில் ஆர்வமுள்ளவராகவோ, ஆக்சன் பட பிரியராகவோ, இன்னொருவர் கதையில் தனக்கான ஒளியை தேடுகிற மனிதராகவோ இருந்தால் இப்புத்தக்கம் உங்களுக்கானது...

புரூஸ்லீ - சண்டையிடாத சண்டைவீரன்
ஆர்.அபிலாஷ்
உயிர்மை பதிப்பகம்
விலை 250




ஒரு சிறிய பின்குறிப்பு - புத்தகத்தை படித்து முடித்த பின் என்னதான் புரூஸ்லீயின் வாழ்க்கை குறித்து எல்லாமே தெரியவந்தாலும் ஏனோ அவரைப்பற்றிய கட்டுக்கதைகள்தான் இன்னமும் பிடித்திருக்கிறது.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates