ஸ்பாட் பிக்ஸிங் ஊழலில் ஸ்ரீசாந்த் மாட்டியுள்ளது இந்திய கிரிக்கெட்டின் கசப்பான பக்கங்களில் ஒன்று. போன முறை ஐ.பி.எல்லில் ஸ்ரீவஸ்தவா போன்ற மூன்றாம் நிலை வீரர்கள் மாட்டி தடை செய்யப்பட்டார்கள். அதற்கு வெகுமுன் அசருதீன், ஜடேஜா, மோங்கியா ஆகியோர் சூதாட்ட குற்றம் சுமத்தப்பட்டு தடைக்குள்ளானார்கள். இவர்களில் ஜடேஜா மட்டுமே குறிப்பிடத் தக்க இழப்பு.
அசர் தன் ஆட்டவாழ்வின் இலையுதிர்பருவத்தின் இறுதி நாட்களில் இருந்தார். மோங்கியாவின் ஆட்டவாழ்வும் கிட்டத்தட்ட சரிந்து கொண்டு இருந்தது. ஜடேஜா ஒரு அற்புதமான மட்டையாளர். அவர் அசர் அளவுக்கு இயல்பான திறமையுடன் பிறந்தவர் அல்ல. ஆனால் ஒரு ஒருநாள் ஆட்ட இன்னிங்ஸை அவர் கட்டமைக்கும் விதமும் எப்போது தாக்கி ஆட வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த தெளிவும் வியக்கத்தக்கது. அவர் மட்டையாடுவது பார்க்க ஐஸ் ஹாக்கியில் ஒரு வீரர் நளினமாக வழுக்கிச் செல்வது போல் இருக்கும். அதே போல் தான் ஜடேஜாவின் அலட்டிக் கொள்ளாத ஆளுமையும். இரவு முழுக்க தூங்காமல் பப்பில் ஆட்டம் போட்டு விட்டு அடுத்த நாள் காலை அற்புதமாக ஆடி சதம் அடிப்பார். இந்தியாவின் தலை சிறந்த களத்தடுப்பாளர்களில் ஒருவர் அவர். ஒரு அணித்தலைவராக அவரது புத்திசாலித்தனம், கற்பனை, லாவகம் ஆகியவையும் நம்மை கவர்ந்தன. ஆனால் தன் வாழ்வின் முக்கியமான கட்டத்தில் அவர் சறுக்கினார். ஜடேஜாவுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அது போல் இழக்கப் போகிற மற்றொரு திறமையாளர் ஸ்ரீசாந்த்.
சில நாட்கள் முன்பு சாம்பியன்ஸ் கோப்பை அணிக்கு ஸ்ரீசாந்த் தேர்வாகவில்லை. அப்போது ஸ்ரீசாந்தை “உலகின் ஆகச்சிறந்த வேகவீச்சாளராக வரக்கூடிய திறமையுள்ளவர்; அவரை பாதுகாக்க வேண்டியது இந்திய கிரிக்கெட்டின் கடமை” என கிரெக் சாப்பல் புகழ்ந்து ஒரு பத்தி எழுதினார். ஆனால் இனி ஸ்ரீசாந்த் ஒரு போதும் கிரிக்கெட் ஆட முடியாத நிலையில் இருக்கிறார். பொதுவாக இது போல் சூதாட்டத்தில் சிக்கிக் கொள்ளும் வீரர்கள் திறமையும் அதன் விளைவான அலட்சியமும் வாழ்வை விருப்பம் போல் துய்க்கும் லட்சியம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு அலுவலக குமாஸ்தா போல் எண்களின் வடிவில் கிரிக்கெட்டை கராறாக நடைமுறை சார்ந்து அணுகும் திராவிட், தோனி போன்றோர் இதில் எளிதில் மாட்டுவதில்லை.
கிரிக்கெட் இருவிதமாக நம் நாட்டில் அணுகப்படுகிறது. ஒன்று ஒரு வணிக ஸ்தாபனமாக, இன்னொன்று ஒரு அழகியல் அனுபவமாக. கிரிக்கெட்டை புறவயமாக காண்பவர்கள் பொதுவாக சூதாட்டம் போன்ற ஒழுக்கக் கேட்டை மன்னிக்க தயாராவது இல்லை. அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வீரரின் கண்ணியம், கடப்பாடு, அர்ப்பணிக்கு, விசுவாசம் ஆகியன முக்கியம். ஒரு ஆட்டத்தை வெற்றி தோல்வியின் அடிப்படையில் கணக்கிடுபவர்கள் இவர்கள். ஸ்ரீசாந்த் போன்றவர்களை மன்னிக்கவே கூடாது என கோருபவர்கள் இவர்கள். இப்படியான கறைபடிந்த வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்தால் தம்மால் நம்பிக்கையுடன் ஒரு ஆட்டத்தை பார்க்க முடியாது என்பது இவர்களின் வாதம். அதாவது நாளை ஸ்ரீசாந்தோ பாகிஸ்தானின் அமீரோ ஒருவேளை சர்வதேச போட்டி ஒன்றில் ஆடினால் அவர்கள் போடும் ஒவ்வொரு பந்தும் சந்தேகத்தை எழுப்பும்; அதனால் மக்களுக்கு கிரிக்கெட்டின் பால் உள்ள ஈடுபாடு இல்லாமல் ஆகும் என்கிறார்கள். இது எந்தளவுக்கு சரி? கிரிக்கெட்டில் நம்பிக்கை, விசுவாசம் ஆகியவற்றுக்கு உள்ள இடம் என்ன?
மீண்டும் நாம் கிரிக்கெட் எதற்காக ஆடப்படுகிறது என்பதை இருவிதமாக பார்க்கலாம். ஒன்று, ஒரு அணி ஒரு ஆட்டத்தை ஜெயிப்பதற்கு. அடுத்து, பார்வையாளர் வீரர்களின் திறமைகள் உன்னதமான நிலைக்கு சென்று மோதும் நாடகீயத்தை, எதிர்பாரா கவித்துவ தருணங்களை ரசிப்பதற்கு. இரண்டையுமே செய்கிற அணிகள் (தொண்ணூறுகளின் ஆஸ்திரேலியா, எழுபதுகளின் மே.இ தீவுகள்) கொண்டாடப்படுகின்றன. எந்திரத்தனமாய் வெல்ல மட்டும் அறிந்த தென்னாப்பிரிக்க, இங்கிலாந்து போன்ற அணிகள் எப்போதும் பிரபலமாக இருப்பதில்லை. சூதாட்ட ஊழல் ஒரு அணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக் கூடியது என்கிற அளவில் குற்றம். உதாரணமாக ஒரு வீரர் அற்புதமாக ஆடி சதம் அடிக்கிறார். ஆனால் அதற்கு பிறகு தன் அணியை வெற்றி அடைய வைக்காமல் உடனடியாக வேண்டுமென்றே வெளியேறுகிறார் எனக் கொள்வோம். நாம் அந்த சதத்தின் மேதைமையை ரசித்திருப்போம். ஆனால் அது துரோகபூர்வமான சதம் என அறிய வரும் போது நம் ரசிப்பை முழுக்க மறந்து விட்டு அதை மட்டம் தட்டுவோமா? சூதாட்டத்தில் ஈடுபட்டோரை மன்னிக்கலாமா என்கிற கேள்வி மேற்சொன்ன ரசனை மனோபாவத்துக்கும் நடைமுறை பயன்பாட்டுக்கும் இடையிலான முரண்பாட்டை வெளிக்கொணர்கிறது.
ஒரு கிரிக்கெட் ரசிகனாக நான் அமீரையும் ஸ்ரீசாந்தையும் மீண்டும் மீண்டும் சர்வதேச களத்தில் பார்க்கவே விரும்புவேன். எனக்கு ஒரு அணியின் வெற்றி தோல்வியை விட தனிப்பட்ட வீரர்களின் மேதைமையும் கற்பனை செறிந்த ஆட்டமுமே முக்கியம். ஆனால் பெரும்பான்மையான பார்வையாளர்களும் கிரிக்கெட் நிர்வாகிகளும் கிரிக்கெட்டை தோட்ட வேலை போன்று ஒரு வெற்றிதோல்வி அடிப்படையிலான செயலாகத் தான் பார்க்கிறார்கள். அங்கு விளைச்சல் முக்கியம், அதற்காக பூச்சி மருந்து தெளிப்பது அவசியம். கிரிக்கெட்டின் ஒரு துர்பாக்கியம் என இதைச் சொல்ல வேண்டும். இந்த ஊழல்கள் வெளிவருகிற ஒவ்வொரு முறையும் வீரர்களையும் ஆட்டங்கள் மற்றும் வாரியங்களையும் ஆவேசமாக கண்டித்து விமர்சிப்பவர்கள் அநேகமாக கிரிக்கெட்டை வெறுப்பவர்களாக அல்லது வெறும் தகவல்பூர்வமாக கவனிப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு இஸ்லாமியர் தீவிரவாதி என கைது செய்யப்படும் போது குதூகலிக்கும் பா.ஜ.க ஆதரவாளர் போல, ஒரு நடிகை மீது விபச்சார புகார் எழும் போது கிளர்ச்சியோடு அதை விவாதிக்கும் ஒழுக்கவாதிகள் போல கிரிக்கெட் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும் போது இவர்களும் போகி பண்டிகை கொண்டாடுகிறார்கள்.
இந்த போகி கொண்டாட்டக்காரர்களின் பார்வைக்கே வருவோம். ஸ்பாட் பிக்ஸிங் மூலம் ஸ்ரீசாந்த் எந்தளவுக்கு துரோகம் இழைத்துள்ளார்? அவரது ஊழலினால் அவரது அணியின் வெற்றி பாதிக்கப்பட்டுள்ளதா? ஸ்ரீசாந்த் பணம் வாங்கி தன் அணியை தோல்வி அடையச் செய்தாரா? ஸ்ரீசாந்த், பாகிஸ்தானின் அமீர், ஆஸிப் போன்றோர் செய்தது ஒரு நம்பிக்கை துரோகம். சட்டபூர்வமாக ஊழல் குற்றம். அதற்கு அவர் தண்டிக்கப்படத் தான் வேண்டும். ஆனால் வாழ்நாள் தடை செய்யப்படத் தக்க குற்றமா அவர் பண்ணினது? இதற்கு விடை அறிய நாம் ஸ்பாட் பிக்ஸிங் என்பது பொதுவான சூதாட்டத்தில் இருந்து எப்படி மாறுபடுகிறது என தெரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் இந்தியர்களின் வாழ்வில் சூதாட்டத்திற்கும் கிரிக்கெட்டுக்கும் உள்ள இடம் என்ன என பார்ப்போம்.
உலகில் ஆசியாவில் தான் மிக அதிகமாக விளையாட்டு சார்ந்த சூதாட்டங்கள் நடக்கின்றன. மேற்கில் உள்ள சட்டபூர்வமான சூதாட்ட அமைப்புகளில் கிரிக்கெட் பருவத்தின் போது மிக அதிகமாக இந்தியர்களும் பாகிஸ்தானியருமே பங்கெடுக்கிறார்கள். இங்கிலாந்தில் ஆதிகாலம் தொட்டே கிரிக்கெட் சூதாட்டத்தோடு தொடர்புடைய ஒன்றாகத் தான் இருந்துள்ளது. அங்கு கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட்டை வைத்து சூதாடுவதை ஒரு ஒழுக்கக் குற்றமாக முன்னர் கருதியது இல்லை. ஆனால் ஆசியாவில் கிரிக்கெட் பிரபலமான எண்பது, தொண்ணூறுகளில் சூதாட்டமும் பூதாகரமாக வளர்ந்தது. ஆசியர்களுக்கு கிரிக்கெட்டிலும் சூதாட்டத்திலும் உள்ள போதை கிட்டத்தட்ட ஒரேமாதிரியானது என்பதை கவனிக்க வேண்டும். ஜோசியர்கள், பில்லி சூனியக்காரர்கள், மந்திரவாதிகள், சாமியார்கள் என எதிர்காலத்தோடு சதுரங்கம் ஆடுவோர்கள் மீது நமக்கு என்றும் வசீகரம் உண்டு. நமக்கு ஜோசியமும், விதியும் அன்றாட வாழ்வின் ஒரு பகுதி.
வாழ்வின் எதிர்பாரா தன்மை மீது ஒரு விளையாட்டுத்தனமான ஈடுபாடு இந்தியர்களுக்கு என்றும் உண்டு. இந்தியர்கள் கராறான தர்க்கவாதிகள் அல்ல. கிரிக்கெட் எனும் ஆட்டமும் எதிர்பாராமைகளின் ஒரு நிகழ்த்துகலை தான். நீண்ட நேரம் உட்கார்ந்து பார்க்கும் சாவகாசமும், தோதான சீதோஷ்ண நிலையும் இல்லாத போதும் கிரிக்கெட் இந்தியாவில் வலுவாக காலூன்றியதற்கு அது இயல்பில் வாழ்வின் எதிர்பாராமைகளை நாடகமாக கண்முன் காட்டும் ஒரு கலை என்பது ஒரு முக்கிய காரணம். இதே ஆருடம் பார்த்து ஊகிக்கும் மனநிலை தான் சூதாட்டத்தின் பின்னும் உள்ளது.
கிரிக்கெட் காணும் போது உருவாகும் திகிலும் அதை வைத்து சூதாடும் போது ஏற்படும் கிளர்ச்சியும் கிட்டத்தட்ட ஒரே மனநிலையில் இருந்து உருவாவது. உதாரணமாக, ஒரு அணி நாற்பதாவது ஓவரில் இவ்வளவு ஓட்டங்கள் எடுக்கும், யார் சதம் அடிப்பார்கள், யார் அதிக விக்கெட் எடுப்பார்கள் போன்றவற்றை மாறும் ஆட்ட சூழலை பொறுத்து ஊகிப்பது, அந்த ஊகத்தின் அடிப்படையில் பணத்தை முதலீடு செய்வது கிரிக்கெட்டின் எதிர்பாராமைகளை தள்ளி நின்று வியப்பதன் நீட்சியாக நாமே அந்த புதிர்பாதைக்குள் நுழைந்து தேடிப் பார்ப்பதை போன்றது. கிரிக்கெட் ரசனையின் அடுத்த கட்டம் தான் கிரிக்கெட் சூதாட்டம். இந்த சூதாட்டம் என்பது ஊழல் அல்ல. நேர்மையான சட்டபூர்வமான சூதாட்டம் பற்றி பேசுகிறேன் (இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டம் சட்டத்துக்கு புறம்பானது என்றாலும்). சூதாட்டத்தின் இந்த ரசனை மனநிலையை கருணதிலகே தனது “சைனாமேன்” நாவலில் அழகாக சித்தரித்திருப்பார். சரி, கிரிக்கெட் சூதாட்டம் எப்போது ஊழலாகிறது?
ஒரு சின்ன வட்டத்துக்குள் இருக்கிறவரை சூதாட்டம் மற்றொரு விளையாட்டை போன்றதே. ஆனால் இந்தியா போன்ற கிரிக்கெட் பித்து உச்சத்தில் இருக்கும் பெரும் நாட்டில் கோடானுகோடி பேர் சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள். தற்சமயம் இங்கு கிரிக்கெட் சூதாட்டத்தின் மதிப்பு நாலாயிரம் கோடிக்கு மேல் என்கிறார்கள். இவ்வளவு பணத்தை ஒரு குறிப்பிட்ட ஆட்டவிளைவு மீது பந்தயம் வைக்கும் போது சூதாட்டத்தை நிர்வகிப்பவருக்கு சிலவேளை பணத்தை திருப்பி செலுத்துவது சாத்தியமில்லாமல் ஆகிறது. உதாரணமாக இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் ஆட்டம். விராத் கோலி 80 ஓட்டங்களுக்கு மேல் எடுப்பார் என பெரும்பான்மையானோர் ஆயிரம் கோடிக்கு பந்தயம் கட்டுகிறார்கள். கோலி அது போல எடுத்து விடுகிறார். ஆனால் பந்தயக்காரருக்கு சரியாக ஊகித்த தன் வாடிக்கையாளர்களுக்கு தருவதற்கு பணம் இருக்காது. ஏனென்றால் பணம் கட்டியவர்களின் எண்ணிக்கை அவர் எதிர்பார்த்ததற்கு மேல் பெரும் எண்ணிக்கையாக மாறி இருக்கும். இதை தவிர்க்க அவர் பெரும்பான்மையினரின் சரியாக ஊகத்தை முறியடிக்கும் விதம் கோலிக்கு ஒரு பத்து கோடி தருவதாய் கூறி எண்பதுக்கு கீழ் வெளியேறும்படி பணிப்பார். அதன் மூலம் அவருக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும். உண்மையில் இந்த சூதாட்டம் மூலம் நஷ்டம் பார்வையாளனை விட அதில் ஈடுபடும் வாடிக்கையாளனுக்கே அதிகம். இந்த தில்லுமுல்லு இருக்கும் பட்சத்திலும் இங்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு மக்களிடம் ஆவேசம் அதிகமாகிறதே அன்றி குறைவதில்லை. பத்து லட்சம் முதலீடு செய்து அதை எப்படியாவது ஒரே நாளில் இருபது லட்சமாக்கி விடலாம் என்கிற குருட்டு நம்பிக்கையே இந்த வெறியை தக்க வைக்கிறது.
கிரிக்கெட் சூதாட்டத்தின் பிரச்சனை அந்த விளையாட்டின் ஒழுக்கம், நேர்மை சம்மந்தப்பட்டது அல்ல. அது எந்த சூதாட்டத்தையும் போல ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை. ஆனால் அதேவேளை சூதாட்டத்தை முற்றிலுமாக அழிப்பதும் சாத்தியம் அல்ல. அது ஏதோ ஒரு வடிவத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும். கராறான சட்டங்கள் மூலம் அதை ஓரளவு ஒழுங்குபடுத்தி கட்டுக்குள் வைக்க முடியும்.
இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டம் கறுப்பு சந்தையை போல தன் புலப்படாத வேர்களை எங்கும் ஆழமாக பரப்பி உள்ளது. சூதாட்ட தரகர்கள் குறும்பேசி மூலம் தான் தொழில் நடத்துகிறார்கள். போலீஸ் தங்களை பிடித்து விடாதிருக்க நகரச் சாலைகளில் SUV வாகனங்களில் உலவியபடி பணப்பரிவர்த்தனை, பந்தயம் நிர்ணயிப்பதை நிர்வகித்துக் கொண்டு இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கும் இந்த தரகர்களுக்கும் உள்ள உறவு ரகசியமான, அந்தரங்கமான, பரஸ்பர நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட ஒன்று. தரகர்களை கண்டுபிடிப்பது மிக சிரமமான காரியம். மேலும் இந்தியாவில் விளையாட்டு சூதாட்டத்திற்கு தண்டனை அளிப்பதற்கான வலுவான சட்டங்களும் இல்லை.
ஐ.பி.எல் இங்கு அறிமுகமாகி பிரபலமான பின் சூதாட்டம் இன்னும் பிரம்மாண்டமானதாகி ஆயிரம் கோடி வியாபாரமாகி உள்ளது. ஐ.பி.எல் அணிகள் நிழலுலக தாவூதுகளால் வாங்கப்படுகின்றன. அவர்கள் வெறுமனே கிரிக்கெட்டை வளர்த்தெடுப்பதற்காக அதை பயன்படுத்த போவதில்லை. கிரிக்கெட் நிர்வாகிகளில் கணிசமானோர் அரசியல்வாதிகள் என்பதால் கிரிக்கெட்டில் ஊழலை வளர்ப்பதில் அவர்களுக்கும் வலுவான பங்குண்டு. ஐ.பி.எல் வந்ததுடன் பாலிவுட்டுக்கு நிகழ்ந்தது போல் கிரிக்கெட்டும் நிழலுலகம் மற்றும் அரசியல்வாதிகளின் கைக்குள் வந்து சீரழிய துவங்கியது.
இந்த ஊழல் வெளிவரக் காரணமே தாவூதுடன் அவரது முன்னாள் பங்காளி ஒருவருக்கு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ரியல் எஸ்டேட் தகாறு தான். இப்போது இந்த சூதாட்ட சேதி கிடைத்தவுடன் அவர் தாவூதை பழிதீர்க்க பயன்படுத்திக் கொள்ள நினைத்தார். முதலில் மும்பை போலீசை தொடர்பு கொண்டு தகவல் சொன்னார். ஆனால் இந்த சூதாட்டத்துடன் மும்பையை சேர்ந்த ஒரு முக்கிய அரசியல் புள்ளி சம்மந்தப்பட்டிருப்பதால் அவர்கள் தயங்கினார்கள். அடுத்து இவர் தில்லி போலீசை தொடர்பு கொண்டு சூதாட்ட விபரங்களை அளித்தார். அவர்கள் தீவிரமாக இயங்கி விசாரித்ததில் உள்ளூர் தரகர்கள், நிழலுலகத்தில் இருந்து ஸ்ரீசாந்த் வரை மாட்டினர்.
சரி இந்த சூதாட்ட வலையில் ஸ்ரீசாந்த் ஏன் மாட்டினார். அவர் இதுவரை எத்தனையோ சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறார். அவர் கவன ஈர்ப்பாளர், முதிர்ச்சி இல்லாதவர் என நமக்கு தெரியும். ஆனால் இவ்வளவு திறமையானவர் எப்படி மீடியா விதூஷகன் ஆனார்? பல காரணங்கள் இருக்கலாம். எதுவுமே நியாயப்படுத்தல்கள் அல்ல. அவருடைய ஆளுமையை அலசிப் பார்த்து சில ஊகங்கள் செய்வோம்.
ஒன்று ஸ்ரீசாந்த் கேரளா எனும் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் இல்லாத ஒரு மாநிலத்தில் இருந்து பந்து வீச்சாளராக முன்னேற பிரயத்தனம் செய்கிறார். அது அத்தனை எளிதல்ல. இந்தியாவில் தமிழகம், கேரளா போன்ற தென்பகுதி மாநிலங்களில் கிரிக்கெட் ஆடி முன்னேறுவதற்கு அரசியல் பின்புலமும், பணபலமும், தேர்வாளர்களின் ஆதரவும் அவசியம். ஸ்ரீசாந்த் மத்திய வகுப்பில் இருந்து அரசியல் பின்புலம் இன்றி தன் திறமையை மட்டும் முதலீடாக கொண்டு இந்திய அணிக்குள் நுழைகிறார். ஆனால் இந்திய அணிக்குள் மட்டுமல்ல மீடியாவிலும் கூட தென்னிந்தியர்கள் மீது கடுமையான காழ்ப்புணர்வும் வெறுப்பும் உண்டு. திராவிட், லஷ்மண் போல அமைதியும், தன்னடக்கமும் மிக்க தென்னிந்தியர்கள் தாம் வடமாநில ஆதிக்கம் மிக்க தேசிய கிரிக்கெட்டில் தாக்குப்பிடிக்க முடியும். கொந்தளிப்பான மனநிலை, ஒழுக்கமின்மையை பொறுத்தவரை ஸ்ரீசாந்துக்கு இணையாக ஹர்பஜனும் சிக்கலானவர் தான். ஆனால் ஆஸ்திரேலியாவில் சைமண்ட்ஸை இனவாத வசை பேசிய போதும் சரி, பலர் முன்னிலையில் ஸ்ரீசாந்தை அறைந்த போதும் சரி ஹர்பஜனுக்கு மீடியாவிலும் அணிக்குள்ளும் (சச்சின் போன்றவர்கள் இடத்து) கணிசமான ஆதரவு இருந்தது. தற்போது சர்ச்சைகளை ஈர்க்கும் விராத் கோலியும் காட்பாதர்களால் பாதுகாக்கப்படுகிறார். ஆனால் இதே ஆதரவு வாய்த்துடுக்கு மிக்க சதகோபன் ரமேஷ், பதானி, முரளி கார்த்திக் ஆகிய தென்னிந்திய வீரர்களுக்கு என்றும் இருந்தது இல்லை. ஸ்ரீசாந்த் அணிக்குள் நுழைந்த புதிதில் இருந்தே மிக தனிமையாய் உணர்ந்திருக்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் அஜய் ஷங்கர் ஒரு பத்தியில் தான் 2006இல் ஸ்ரீசாந்தை சந்தித்த போது நடந்த சம்பவத்தை கூறுகிறார். தன்னிடம் அணிவீரர்கள் யாரும் பேசுவதில்லை என ஸ்ரீசாந்த் அவரிடம் வருத்தப்படுகிறார். அதோடு அஜய்யிடம் தொடர்ந்து மனதில் இருப்பதை கொட்டிக் கொண்டே போகிறார். அப்போது தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணிக்கு ஒரு டெஸ்டு ஆட்டத்தை ஸ்ரீசாந்த் தன்னந்தனியாக வென்றார். ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஆனால் அணித்தலைவர் திராவிட் பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்ரீசாந்திடம் ஒழுக்கமில்லை என்று கடுமையாக சாடினார். வெற்றியை கொண்டாட வேண்டிய தருணத்தில் ஒரு அணித்தலைவர் பள்ளி வாத்தியார் போல் சின்ன குற்றங்களுக்கு பிரம்படியா கொடுப்பது? ஆஸி வீரர் ஒருவர் கொஞ்சம் ஆர்ப்பட்டம் பண்ணியபடி அணிக்கு ஆட்டத்தை வென்று தந்தால் ரிக்கி பாண்டிங் இது போல் விமர்சித்திருக்க மாட்டார். மாறாக அவர் ஊக்குவித்திருப்பார். ஸ்ரீசாந்த் தன்னைப் பற்றின புரளிகளை பிற அணிவீரர்கள் கிளப்புவதாக கவலை தெரிவித்திருக்கிறார்.
ஸ்ரீசாந்த் அப்போது அணியில் ஒரே மலையாளி. அவருக்கு வாய்த்துடுக்கும் ஜாஸ்தி. இவை இரண்டும் சேர்ந்து அவரை அணியில் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். பொதுவாக இந்த சூழலை இருவிதமாக கையாளலாம். பொறுமை காக்கலாம். பழகுவதில் பிறருக்கு ஏற்றபடி நம்மை மாற்றிக் கொள்ளலாம். அல்லது முற்றிலும் புறக்கணிக்கலாம். ஸ்ரீசாந்தோ பதற்றமாகும் போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி தன்னை அடுத்தவரை கவனிக்க வைக்க நினைப்பவர். அவருடைய முக்கிய ஆளுமை கோளாறு தன்னிறைவு இன்மை.
பொதுவாக இந்தியா போன்ற படிநிலை உணர்வு மிக்க சமூகத்தில் இளைஞர்களை மேலே இருப்பவர்கள் எளிதில் அங்கீகரிக்க மாட்டார்கள். இங்கு அதிகாரத்தில் உயர்நிலையை அடைபவர் மட்டுமே அங்கீகாரத்தையும் நாடவும் வெளிப்படையாக தன் சாதனைகள் குறித்து பெருமை கொள்ளவும் முடியும். தன்னுடைய Inscrutable Americans என்ற நூலில் அனுராக் மாத்தூர் இவ்விசயத்தை நக்கலாக எடுத்து கூறி இருப்பார். அமெரிக்காவில் சின்ன விசயத்துக்கு கூட உங்களை மனந்திறந்து பாராட்ட தயங்க மாட்டார்கள். ஆனால் இந்தியாவில் நீங்கள் பெரும் சாதனைகள் புரிந்தாலும் கூட இருப்பவர்கள் வயிற்றெரிச்சலில் உங்களை அவதூறு பண்ணி எப்படி அழிக்கலாம் என திரிவார்கள். இங்கு பாராட்டு கிடைக்காமல் தான் மனிதர்கள் தமக்குத் தாமே பாராட்டி விளம்பரத்தட்டி வைக்கிறார்கள்; சிலை திறக்கிறார்கள்; கலைஞரைப் போன்று தம் பெயரில் விருது ஸ்தாபித்து தாமே வாங்கிக் கொள்கிறார்கள்; சிறுபத்திரிகையாளர்கள் போல நாற்பது பேரை அழைத்து கூட்டம் நடத்தி பாராட்டு கிடைக்கும் என எதிர்பார்த்து திட்டு வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். இப்படியான சூழலில் இஷாந்த் ஷர்மா போன்றவர்கள் தாம் பிழைக்க முடியும். இஷாந்த் இன்றளவும் கூட ஸ்ரீசாந்தை போன்று நேரான மணிக்கட்டுடன் பந்தை துள்ள வைக்கவோ ஸ்விங் செய்யவோ முடியாதவர். ஆனால் அவர் பவ்யமானவர். கடுமையாக அமைதியாக உழைக்கக் கூடியவர். ஒரு திறமையான “அடிமை”. அதனால் தான் ஐந்து வருடங்களாக மட்டமாக வீசியும் அவருக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் எப்போதாவது விக்கெட் வீழ்த்தினாலும் கூட அணியில் தாக்குப் பிடிக்கிறார்.
ஒரு பத்தியில் ஸ்ரீசாந்தை பற்றி குறிப்பிடும் போது கிரெக் சாப்பல் கொந்தளிப்பான மனநிலை கொண்ட அவரை போன்றோரை கையாளுவது மிக சிரமம் எனவும், ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது அதை தான் மிகவும் ரசித்ததாகவும் சொல்கிறார். அஜய் ஷங்கரிடம் அதிகார மட்டத்தில் தன்னை ஆதரித்த ஒரே நபர் கிரெக் சாப்பல் மட்டும் தான் என சொல்லி இருக்கிறார் ஸ்ரீசாந்த்.
ஸ்ரீசாந்த் மிக இளகிய மனம் கொண்டவர். நண்பர்களை எளிதில் நம்பி விடுவார் என்கிறார் அஜய். ஒருமுறை ஒரு நண்பர் கண்ணீர் விட்டு அழுது ஒரு கதை சொன்னதும் கையில் இருந்த பணத்தை மொத்தமாக ஸ்ரீசாந்த் அவருக்கு அளித்த சம்பவத்தை அவர் குறிப்பிடுகிறார். ஆட்டவாழ்வில் வெற்றி பெற ஆரம்பித்ததும் ஸ்ரீசாந்தை நிறைய பாசாங்கான நபர்கள் சூழ்ந்து கொண்டு சீரழிவை நோக்கி வழிநடத்தினர். அதற்கு காரணம் ஸ்ரீசாந்த் எல்லோரையும் எளிதில் நம்பி ஏற்பது தான் என்கிறார்.
ஆனால் காயம் மற்றும் ஆட்டத்திறன் இழப்பு காரணமாக அவர் அணியில் இருந்து விலகின போதெல்லாம் ஸ்ரீசாந்த் மேலும் அதிகம் பதற்றமானார்; தனிமைப்பட்டார். அப்போது இந்த பாசாங்கான நண்பர்களின் துணையை இன்னும் அதிகமாக நாடினார். மீடியாவில் தன்னைப் பற்றி சதா ஒரு பேச்சிருக்க முயற்சி எடுத்தார். கொண்டாட்டங்கள், பார்ட்டிகள், இன்னபிற கேளிக்கைகள் என ஈடுபட்டு தன் ஆட்டவாழ்வின் சீரழிவை மறைக்க முயன்றார்.
ஸ்ரீசாந்துக்கு மிகுதியான சுய அனுமானம் உண்டு. அணியில் பல சீனியர்களையும் வெளியே கிரிக்கெட் நிர்வாகிகளையும் எரிச்சலடைய வைத்தது இது. பொதுவாக மிக அமைதியானவரான சச்சின் கூட ஒரு ஆட்டத்தின் போது ஸ்ரீசாந்தால் எரிச்சலுற்று கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இரண்டாவது ஐ.பி.எல்லின் போது ஒரு ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் தோனியை முதல் பந்தில் யார்க்கர் மூலம் போல்டு ஆக்கி வெளியேற்றினார். போதாதென்று தோனியை சுற்றி ஊளையிட்ட படி ஓடி கொண்டாடினார். ஒரு தேசிய அணித்தலைவரை எந்த வீச்சாளரும் இது போல் கேலி செய்ய மாட்டார்கள். ஸ்ரீசாந்தின் மனநிலை எந்தளவுக்கு நிலையற்று இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணம். அந்த ஆட்டத்தின் போது தேசிய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஸ்ரீசாந்த் இல்லை. தனக்கு எதிராக உலகமே இயங்குவதாக அவர் மனம் கலங்கி எதிர்மறையாக யோசிக்க துவங்கினார். அது தான் அணித்தலைவரை பரிகசிக்கும்படி அவரை தூண்டியது. ஒரு சர்வதேச ஆட்டத்தின் போது தோனியுடன் ஸ்ரீசாந்த் மட்டையாடிக் கொண்டிருந்தார். அப்போது தோனி அடித்த ஒரு நேர் ஷாட் ஸ்ரீசாந்தின் மண்டையை பதம் பார்த்தது. பிறகு பத்திரிகையாளரிடம் பேசிய தோனி நக்கலாக ஸ்ரீசாந்துக்கு இது போல் பட்டால் தான் புத்தி வரும் என்றார். ஏதோ ஒரு கட்டத்தில் தோனிக்கும் அவருக்குமான உறவு கசந்திருக்கிறது. ஆனாலும் தோனி அவரை வேண்டுமென்றே அணியில் இருந்து முழுக்க விலக்கி வைத்ததாக கூற முடியாது. உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒரு அதிர்ச்சி ஆயுதமாக அவர் ஸ்ரீசாந்தை பயன்படுத்தினார். ஸ்ரீசாந்த் பெரும்பாலும் காயம் காரணமாகவே அணியில் இடம் பெறாமல் இருந்திருக்கிறார். ஆனால் அவர் ஒரு மனப்பிராந்தியில் இதை முழுக்க வேறுவிதமாக கண்டார். தனக்கு பல விரோதிகள் இருப்பதாகவும் அவர்களால் தான் அணியில் இடம் பெற முடியாததாகவும் நம்பினார். சமீபமாக நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரிலும் அடுத்த நடக்கப் போகிற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தான் இடம் பெறாதது ஸ்ரீசாந்துக்கு தன்னுடைய எதிர்காலம் இத்தோடு முடிந்தது என்கிற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ”இனிமேல் நீ இந்திய அணியில் இடம்பிடிப்பதை அனுமதிக்க மாட்டேன்” என தோனி ஸ்ரீசாந்தை மிரட்டியதாக அவரது குடும்பத்தினர் பேட்டி அளித்துள்ளர்.
ஸ்ரீசாந்தின் கேரள பயிற்சியாளர் நடக்கப் போகிற தென்னாப்பிரிக்க தொடரில் அணியில் இடம் கிடைக்காவிட்டால் தன் எதிர்காலம் இருட்டாகி விடும் என அவர் கவலை தெரிவித்ததாக கூறுகிறார். ஸ்ரீசாந்த் சமீபமாக தான் தன் கால் பெருவிரல்களில் அறுவை சிகிச்சை செய்து அங்கு உலோகம் பொருத்தி இருக்கிறார். பொதுவாக வேகவீச்சாளர்களுக்கு காயம் என்பது அச்சமூட்டுகிற தன்னம்பிக்கையை மிகவும் பாதிக்கிற விசயம். இவை எல்லாம் சேர்ந்து கடுமையான பீதியை ஏற்படுத்தி இருக்கலாம். ஊழல் செய்து சம்பாதிப்பது ஒன்றும் குற்றமல்ல என நினைக்க வைத்திருக்கலாம். முழுக்க முழுக்க எதிர்மறையாக யோசிக்கிற மனதுக்கு குற்றங்கள் சிலநேரம் அடைக்கலமாக மாறக் கூடும்.
கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிற வீரர்கள் ஊழலில் ஈடுபடுவது அதிர்ச்சி அளிக்கிறது என்கிறார் கவாஸ்கர். ஸ்ரீசாந்தின் ஐ.பி.எல் ஒப்பந்த மதிப்பு ரெண்டு கோடி. அதற்கு அவர் பத்து, இருபது ஆட்டங்களில் வீச வேண்டும். ஆனால் ஒரு ஓவரில் நோபால் போட்டால் அல்லது 14 ஓட்டங்கள் கொடுத்தால் அவருக்கு கிடைப்பது நாற்பது லட்சம். பத்து ஆட்டங்களில் ஊழல் பண்ணினால் அவர் எவ்வளவு சம்பாதிக்கலாம் யோசியுங்கள். வேலை, உண்மை போன்ற விழுமியங்களை விட பணம் மட்டுமே ஒரே விழுமியம் என ஆகிவிட்ட காலத்தில் வாழ்கிறோம். லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறவர்களே ஏழைகளாய் உணர்கிறார்கள். எவ்வளவு சம்பாதித்தும் யாருக்கும் போதவில்லை. ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், சீரியல் கொலைகாரர்கள், பாலியல் குற்றவாளிகளைப் போல ஸ்ரீசாந்தும் தன்னால் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டே பிடிபடாமல் தொடர்ந்து இயங்க முடியும் என நம்பி இருக்கலாம். குற்றவாளிகளுக்கு உள்ள அடிப்படை தூண்டுகோலே தம்மை யாரும் கண்டுபிடிக்க போவதில்லை எனும் நம்பிக்கை தான். வசதியாக இருப்பதால் ஒருவர் நல்லவாராக ஒழுக்கசீலராக இருப்பார் என அர்த்தமில்லை. சொல்லப்போனால் கடந்த பத்து வருடத்தில் மாபெரும் ஊழலில் ஈடுபட்டவர்கள் அனைவருமே மாபெரும் பணக்காரர்கள் தாம்.
கிரிக்கெட் சூதாட்டம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்திருந்த, அதை வைத்து பணம் பண்ணுவதும் குற்றமல்ல என நம்பிய லலித் மோடி முதல் ஐ.பி.எல்லுடன் சூதாட்டத்தை சட்டபூர்வமாக இந்திய வாரியத்தின் கீழ் இயங்க அனுமதிப்பதை பரிசீலித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்திய நிர்வாக மட்டத்தில் உள்ள ஒழுக்கவாதிகள் அதை அனுமதிக்கவில்லை. பல வருடங்களாக இங்கு சூதாட்டம் நம் வாரியத்துக்கு தெரிந்தே நடந்து வருகிறது. அவ்வப்போது போலீஸ் தலையீட்டாலோ வேறேதாவது அரசியல் காரணத்தாலோ சில குற்றங்கள் வெளிவரும் போது நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்ததாக பாவனை பண்ணி மேம்போக்காய் வீரர்களை தண்டிப்பார்கள். இன்றும் அசருதீன், ஜடேஜாவுக்கு எதிரான சூதாட்ட குற்றங்கள் நிரூபிக்க படவில்லை. ஏனெனில் அவர்களை கைது செய்வதானால் பல பெரிய தலைகளும் கூட சேர்ந்து உருவ வேண்டி இருக்கும். இந்திய கிரிக்கெட் வாரியம் சூதாட்டத்தை கோடிக்கணக்கில் பணம் புழங்கும் ஒரு வியாபாரமாகத் தான் பார்க்கிறது. முழுமையாக ஊழலை அழிக்க அது முயலாததற்கு அதுவே காரணம். தாம் பயனடைகிற வரை வாரிய நிர்வாகிகள் மௌனமாக வேடிக்கை பார்த்தபடி இருப்பார்கள். குற்றவாளிகளுக்கும் போலீசுக்கும் நடைமுறையில் உள்ள தொடர்பு தான் இந்திய வாரியத்துக்கும் சூதாட்டக்காரர்களுக்கும் உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க T20 ஆட்டங்கள் சூதாட்டத்தை எளிதாக்கின. ஒரு 50 ஓவர் ஆட்டத்தை பணம் மூலம் கட்டுப்படுத்த தரகர்கள் நான்கு ஐந்து வீரர்களையாவது ஊழலுக்கு இரையாக்க வேண்டும். அது அத்தனை எளிதல்ல. ஆனால் T20யில் நீங்கள் ஒவ்வொரு பந்தையும் ஓவரையும் வைத்து பந்தயம் கட்டலாம். இந்த ஐ.பி.எல்லில் ஸ்ரீசாந்த் பணம் வாங்கிக் கொண்டு ஒரு நோபால் போட்டது இப்படியான பந்தயத்துக்காகத் தான். இதைத் தான் ஸ்பாட் பிக்ஸிங் என்கிறார்கள். நோபால் போட்டு விட்டு அதை சமிக்ஞை மூலம் தரகர்களுக்கு உணர்த்த ஸ்ரீசாந்த் தன்னை டக் செய்த சட்டையை வெளியே தூக்கி விட்டார். அவர் எதேச்சையாக போடுகிற நோபாலுக்கு பணம் கொடுக்க கூடாது அல்லவா? அதற்குத் தான் சமிக்ஞை. ஸ்பாட் பிக்ஸிங்கும் கிட்டத்தட்ட வழமையான சூதாட்டம் போலத் தான் இயங்குகிறது. நன்றாக பந்து வீசும் ஒரு வீச்சாளர் ஒரு ஓவரில் பதினாலு ஓட்டங்கள் கொடுக்க மாட்டார் எனத் தான் பெரும்பான்மையானோர் ஊகிப்பார்கள். ஆட்டமும் அவரது அணிக்கு சாதகமாக போகும் பட்சத்தில் மேற்சொன்ன ஓட்டங்கள் எடுக்கப்பட மாட்டாது எனத் தான் அதிகமான பணம் பந்தயம் கட்டப்படும். அப்போது ஒரே ஓவரில் நேர்மாறாக நடக்க செய்து தரகர் கோடிக்கணக்கான பணம் ஈட்ட முடியும். ஆனால் உன்னிப்பாக பார்த்தால் ஒரு நோபாலோ அல்லது 14 ஓட்டங்கள் வரும் ஓவரோ ஒரு T20 ஆட்டத்தை தீர்மானிப்பதில்லை என்பது புரியும்.
ஸ்பாட் பிக்ஸிங் செய்பவர்களுக்கு ஆட்டத்தின் விளைவுகளில் ஈடுபாடு இல்லை. அவர்கள் தனித்தனியாக பந்து, ஓவர் என தான் பந்தயம் கட்டுகிறார்கள். ஸ்பாட் பிக்ஸிங் வழமையான சூதாட்டம் போல ஒரு ஆட்டத்தின் போக்கை முழுக்க தீர்மானிப்பது இல்லை. அதனால் தான் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்ட அமீர், ஆஸிப், ஸ்ரீசாந்த் போன்றோர் செய்தது எளிதில் மன்னிக்கக் கூடிய சாதாரண குற்றம் தான். தேர்தலில் ஆயிரம் ரூபாய் வாங்கி விட்டு ஓட்டுப் போட்டவரை கைது செய்து ஆயுள் தண்டனை கொடுத்தால் அது எந்தளவு வேடிக்கையானதோ அந்தளவுக்கு அற்பமானது இது போன்ற குற்றத்துக்காக ஒரு வீரரை ஆயுளுக்கும் தடை செய்வது. நம்மிடம் உள்ள ஒழுக்க பாஸிஸத்தின் ஒரு நோய்க்கூறு தான் இப்படி அதிகபட்சமாக தண்டிக்க வேண்டும் ஆவேசம்.
கராறாக சட்டப்படி பார்த்தால் கூட சூதாட்டத்தில் ஒரு வீரர் ஈடுபடுவது குற்றம் அல்ல. ஒரு வீரர் தான் சிறப்பாக முழு அர்ப்பணிப்புடன் நேர்மையாகத் தான் ஆடுவேன் என எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவது இல்லை. நீங்கள் வேலை பார்க்கிற இடத்தில் வேண்டுமென்றே ஒ.பி அடித்தால் உங்களை கைது செய்ய முடியுமா? முடியாது. அது போலத் தான் ஒரு வீரர் வேண்டுமென்றே மோசமாக அடுவதை சட்டப்படி குற்றம் என கூற முடியாது. இங்கிலாந்தில் நடந்த வழக்கில் நீதிபதி அமீர் மற்றும் ஆசிப்புக்கு ஒரு ஒழுக்க மீறல் என்கிற அளவிலேயே ஆறு மாதங்கள் தண்டனை வழங்கினார். சூதாட்ட ஊழலையும் நாம் ஒரு ஒழுக்க குற்றமாக மட்டுமே பார்க்க முடியும்.
இறுதியாக கிரிக்கெட் ரசிகர்கள் வீரர்களின் இந்த நம்பிக்கை துரோகத்திற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என பார்ப்போம். ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் அசருதீன், ஜடேஜா, மோங்கியா மீதுள்ள குற்றங்கள் வெளிவந்த போதே இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு உள்ள மவுசு குறைந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக ரெண்டாயிரத்திற்கு பிறகு கிரிக்கெட்டின் புகழ் இன்றும் பல மடங்காக பெருகி இருக்கிறது. போன ஐ.பி.எல்லிலும் சூதாட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளதாக கூறிய சில வீரர்கள் தடை செய்யப்பட்டனர். அதனால் ஐ.பி.எல் புகழ் முழுக்க மங்கி அந்த ஆட்டம் ஹாக்கி போல் ஈ மொய்க்கிற நிலைக்கு வந்து விட்டதா? இல்லை. இது ஒன்றை காட்டுகிறது. மீடியாவும், கிரிக்கெட் வெறுப்பாளர்களும் சித்தரிப்பது போல் பொதுமக்கள் கிரிக்கெட் சூதாட்டத்தினால் அந்த விளையாட்டில் உள்ள ஆர்வத்தை இழப்பதோ அவநம்பிக்கை கொள்வதோ இல்லை. அசலான கிரிக்கெட் ரசிகனுக்கு வெற்றி தோல்வி, விசுவாசம், நம்பிக்கை, கடப்பாடு ஆகியன முக்கியம் அல்ல. அவன் பொழுதுபோக்குக்காக வருகிறான். ஒரு வீரன் தன்னை மீறிச்சென்று அபோத மனநிலையில் ஆடி அற்புதங்களை நிகழ்த்துவது காணவே அவன் கிரிக்கெட் மைதானத்துக்கு ஆசையாக செல்கிறான்.
11 வீரர்களும் கராறாக முழு அர்ப்பணிப்புடன் ஆனால் சராசரியான திறமையுடன் ஆடுவதை காண ஆயிரக்கணக்கில் மக்கள் மைதானங்களில் குவிவதில்லை. கிரிக்கெட்டின் ஆதார வசீகரம் தனிமனித மேதைமை. நட்சத்திரங்களின் சாதனைகளை வழிபடும் நம் சமூகத்திற்கு 11 பேரில் ரெண்டு பேர் வேண்டுமென்றே அங்கிங்கே சொதப்பினால் அது பொருட்டில்லை. இவ்வளவு சூதாட்ட குற்றச்சாட்டுகளுக்கு பின்னும் இந்தியாவில் கிரிக்கெட் அசுர புகழுடன் இருப்பதற்கு இது முக்கிய காரணம்.
மேலும் மனித இயல்புப்படியே நாம் நமக்கு பிடித்தமானவர் மீது லாஜிக் இல்லாமலே நம்பிக்கையும் அன்பும் காட்டுவோம். தினமும் பத்திரிகையில் இவ்வளவு கள்ளக்காதல் சேதிகள், மகன் தந்தையை, தாயை கொல்லும் சம்பவங்களை படிக்கிறோம். அதற்காக நாம் காதலித்து மணந்து குழந்தைகளை வளர்க்காமலா இருக்கிறோம்? சொல்லப்போனால் நமக்கு மிக அதிகமாக துரோகம் பண்ணுகிறவர்கள் மீது தான் பலசமயங்களில் நாம் மிகுந்த பிரியத்துடன் இருக்கிறோம். கிரிக்கெட்டை மட்டும் எப்படி நாம் வெறுக்க முடியும்? நம் வாழ்வில் வேறு எங்கும் இடமளிக்காத தர்க்கம், உண்மை, ஒழுங்கு ஆகியவற்றுக்கு கிரிக்கெட்டில் மட்டும் என்ன முக்கியத்துவம் இருந்து விட முடியும்? இந்த உலகில் சிறந்தவை அனைத்தும் கண்மூடித்தனமானவை தான்.
(ஜூன் மாத உயிர்மையில் வெளியான கட்டுரை)
No comments :
Post a Comment