Tuesday, 25 June 2013

கனிமொழியை ஆதரிப்பதன் அறிவீனம்


நம் காலத்தின் மிகப்பெரிய துயரம் குற்றவாளிகளை எளிதில் பூஜை செய்து தீபாராதனை காட்டி புனிதர்களாக்குவது. அவர்களை மிக எளிதில் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டி விட்டு பத்து வருடங்களுக்கு மேல் நீடிக்கும் வழக்குகளின் புதிர்பாதைகளில் மறைந்து போவார்கள். அப்படி மறைந்து போனால் கூட பரவாயில்லை. வழக்கின் சூடு தணியும் சட்டென்று ஒரு பெரும் அரசியல் பதவியையும் அடைந்து விடுவார்கள்.

அவரை ஆதரிக்கும் சிலர் “யார் தான் ஊழல் பண்ணவில்லை. அவங்க பதவியில் இருக்காங்கன்னா இவரும் பதவி அடையலாமே?” என அற்பமாக நியாயப்படுத்துகிறார்கள். கனிமொழியின் ராஜ்யசபா தேர்வும் அதை நம் மீடியாவும் விமர்சகர்களும் கையாளும் விதம் நமக்குள் புரையோடியுள்ள ஒரு பெரும் சீர்கேட்டைத் தான் காட்டுகிறது.


யார் தான் குற்றம் பண்ணவில்லை என்பது எப்படி ஒரு குற்றவாளி தப்பிப்பதற்கான நியாயம் ஆக முடியும்? உலகம் தோன்றிய நாள் முதலே கொலை, கொள்ளை, ஏமாற்றுகள் நடந்து கொண்டு உள்ளன. அவர்கள் தண்டிக்கப்பட்டு சமூகத்தின் முன் கூசி நின்றார்கள். ஆனால் இன்று அதே குற்றவாளிகளை கடவுளாக கொண்டாடும் காலகட்டத்தில் வாழ்கிறோம். கனிமொழி ஜெயிலில் இருந்து வெளிவந்த பின் அவரை தியாகியாக்கி திமுகவினர் வழிபட்டதை பார்த்தோம். ஆனால் அவர் தன் மேல் உள்ள கறையை நீக்காமல் மீண்டும் பொதுவாழ்வுக்கு வரமாட்டார் என எதிர்பார்த்தோம். ஆனால் இப்போது கூச்சமில்லாமல் மீண்டும் அவர் ராஜ்யசபாவுக்கு போகிறார். இது ஒருவிதத்தில் நமது நீதி அமைப்பு மற்றும் ஜனநாயகத்துக்கு நேரும் ஒரு அவமானம்.
கனிமொழியை நாம் விதிவிலக்காக எண்ண வேண்டியதில்லை. குற்றம் சாட்டப்பட்ட யார் பதவியில் இருப்பதும் தவறு தான். இதை எதிர்த்து ஒரு சமூக இயக்கம் உருவாக்கப்பட்டு போராட வேண்டிய காலத்தில் இருக்கிறோம். நம்முடைய முக்கிய பிரச்சனை ஊழலை தடுப்பதை விட ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் உரித்தான தண்டனை அனுபவிப்பதை உறுதி செய்வதே. அவர்கள் அதிகார ஸ்தானத்தில் இருக்கையில் அது நடக்காது. BCCI தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்ததும் இதை முன்னிட்டே.
சொல்லப் போனால் கனிமொழி விசயத்தில் நமக்கு இன்னும் கவலை கூடுதலாகிறது, ஏமாற்றம் மிகுகிறது. அவர் தேர்ந்த சிந்தனையும் தெளிவான ஆரசியல் பார்வையும் கொண்டவர். ஒரு எதிர்பார்க்கத்தக்க எழுத்தாளராக தோன்றியவர். ஆனால் தன் கண்ணியத்தை முழுக்க இழந்து அவர் ஊழலுக்கு கீழ்ப்படிவார் என நாம் எதிர்பார்க்கவில்லை. ஒருவிதத்தில் அது தமிழ் அறிவுலகத்துக்கு, சமூக சிந்தனையாளர்களுக்கு, அவர் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு துரோகம் பண்ணி விட்டார். அதனால் தான் அவரைப் போன்ற ஒருவர் தான் செய்த குற்றத்துக்காக தண்டனையை விட வெகுமதிகளை பெறுவது பார்க்கையில் நமக்கு கொதிப்பும் வருத்தமும் இன்னும் அதிகமாகிறது.
2G ஊழலில் கனிமொழி நேரடியாக சம்மந்தப்படவில்லை என்றொரு தரப்பு உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அவரது சம்பாத்தியம், சொத்துக்கள் பன்படங்கு பெருகி உள்ளன. சரி அவர் வழி சென்ற பணம் எங்கு போயிற்று? அவர் உண்மையை வெளிக்கொணர்ந்து தன்னை நியாயப்படுத்தப்பட்டுமே? அதுவரை அவர் தியாகி என்பதும், ஒரு வருடம் ஜெயிலில் இருந்த பரிகாரத்துக்காக அவரது அம்மாவை சமாதானப்படுத்த திமுக அவரை மீண்டும் காங்கிரசிடம் சமரசம் பேசி ராஜ்யசபா அனுப்புகிறதையும் வெட்கங்கெட்ட அரசியல் என்று மட்டுமே நாம் கூற முடியும்.
”அவனை முதலில் நிறுத்த சொல்லுங்க, நான் நிறுத்துறேன்” என்று மணிரத்னம் வசனத்தை சிலர் கனிமொழிக்கு ஆதரவாக சொல்லுகிறார்கள். ஜெயலலிதா முதல்வராக இருக்கையில் ஏன் கனிமொழி கூடாது என்று கேட்கிறார்கள். இதற்கான ஒரே பதில் கனிமொழியை எதிர்ப்பவர்களை ஜெயா ஆதரவாளர்களாக பார்ப்பது ஒரு அபத்தம் என்பதே. திமுக அதிமுக என்கிற எதிரிடை கடந்து அரசியலை பார்ப்பவர்களும், இருதரப்பின் சீர்கேட்டை எதிர்ப்பவர்களும் தான் இங்கு இங்கிருக்கிறோம்.
மேலும் இதே தர்க்கத்தை நீங்கள் பயன்படுத்துவதானால் நீங்கள் ராஜபக்‌ஷேவுக்கு சர்வதேச நீதிமன்றம் தண்டனை வழங்க வேண்டும் எனவும் கேட்கக் கூடாது. அவர் ருவாண்டாவில், துருக்கியில், வங்கதேசத்தில், கம்போடியாவில் இனப்படுகொலை நடக்கவில்லையா எனக் கேட்பார். ஏன் இந்தியாவில் கூடத் தான் இஸ்லாமியரை பலகட்டங்களாய் படுகொலை செய்தார்கள். அதற்கு நீங்கள் நீதி வழங்கி விட்டீர்களா? இல்லையே? அப்புறம் எப்படி என்னை கேள்வி கேட்கலாம் என ராஜபக்‌ஷே கேட்கலாம். கனிமொழியை ஆதரிக்கும் ஈழ ஆதரவாளர்கள் என்ன பதில் சொல்லுவீர்கள். அவர் மோடியை உள்ளே தள்ளி விட்டு என்னிடம் வாங்க எனலாம். நீங்கள் முழி பிதுங்கி நிற்பீர்களா?
என்றுமே நாம் ஒரு அநீதியை இன்னொரு அநீதியின் பெயரில் நியாயப்படுத்தல் ஆகாது. நாளை உங்கள் மகளை ஒருவன் பலாத்காரம் பண்ணி விட்டு அல்லது உங்கள் மகனை ஒருவன் கொன்று விட்டு ஊரில் நடக்காததையா பண்ணி விட்டேன் எனக் கேட்பான். அவனையும் ஆதரிப்பீர்களா?

Share This

2 comments :

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates