Thursday, 6 June 2013

இளவரசன் திவ்யா பிரிவும் சில பரிந்துரைகளும்






இளவரசன் திவ்யா திருமண முறிவில் காதல் தம்பதிகளுக்கு/ ஜோடிகளுக்கு ஒரு பாடம் உள்ளது.
1.   காதலில் வெற்றி பெற காதல் மட்டுமே போதாது. நிறைய தந்திரங்களும் அரசியல் பண்ணவும் தெரிந்திருக்க வேண்டும்.
2.   காதல் ஜோடிகள் தமது காதலரின் பெற்றோரை எப்போதும் ஒரு போட்டியாளராக அல்லது எதிரியாகத் தான் நினைக்க வேண்டும். இனிமையாக அவர்களிடம் பேசலாம் பழகலாம். ஆனால் எப்போதும் முதுகுக்குப் பின் ஒரு கத்திக் குத்துக்கு தயாராக இருக்க வேண்டும்
3.   இது தான் மிக முக்கியமானது. காதலி அல்லது காதல் மனைவியை தக்க வைக்க (ஆம் தக்க வைப்பது தான் ஆகப்பெரும் சாதனை) நிறைய பேசி அப்பெண்ணை உங்களது அலைவரிசையில் வைத்திருக்க தெரிய வேண்டும். நிறைய நாடகங்கள் போட வேண்டும்.

4.   மேல் சாதிப் பெண் என்றால் குறைந்தது அப்பெண்ணுக்கு 45 அல்லது 50 வயதாகும் வரை அவளது பெற்றோர்கள் அவளை உங்களிடம் இருந்து பிரித்து மற்றொருவருக்கு மணம் செய்து வைக்க முயலக் கூடும் என உணர வேண்டும். ஆக நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேல் உங்கள் மாமனார் அல்லது மாமியாருக்கும் ரொம்ப வயதாகி தளர்ந்து விடுவார்கள், மென்பாஸுக்கு பிறகு உங்கள் மனைவியும் இன்னொரு துணையிடம் போக முடியாது மற்றும் ஐம்பது வயதுக்கு மேல் தான் பெண்களுக்கு கணவனின் துணை மிகவும் அதிகம் தேவைப்படும் என்பன அந்த வயதை தேர்ந்ததன் காரணங்கள்.
5.   பெரும்பாலும் பெண்ணின் அம்மா தான் தன் பெண்ணை கணவனிடம் இருந்து பிரித்து வைப்பதில் மிக முனைப்பாக இருக்கிறார். இதை என் நண்பர்களின் வாழ்வில் பலமுறை பார்த்து விட்டேன். அதனால் மாமியாரிடம் அதிக ஜாக்கிரதையாக இருங்கள்.

முதலில் பெண்ணிடம் தொடர்ந்து பேசி மனதை பதம் செய்வதை எடுப்போம். இதன் தேவை என்ன?
உளவியலில் infantilization என்றொரு பதம் உண்டு. நீடித்த குழந்தைமை. அதாவது ஒருவர் வளர்ந்த பிறகும் தம் பெற்றோரின் குழந்தையாகவே தன்னை நினைத்துக் கொள்வது. அரோக்கியமானவர்கள் சுமார் 12 வயதில் தம்மை தனிமனிதராக நினைத்துக் கொள்ள ஆரம்பித்து 18 வயதுக்குள் தன் குடும்பத்தில் இருந்து தனித்து சிந்திக்கும் செயல்படும் ஒரு நபராக மாறுவார்கள். அதற்குப் பின் தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். ஆனால் சிலர் வளர்ந்த பிறகும் முடிவுகளை எடுப்பதிலும் உணர்வு ரீதியாகவும் பெற்றோரை அண்டி இருப்பார்கள். இதைத் தான் நீட்டித்த குழந்தைமை என்கிறோம். நீடித்த குழந்தைமை கோளாறு உள்ளவர்கள் வளர்ந்து மீசை முளைத்து அத்தனை தகாத காரியங்களையும் வாழ்வில் பண்ணின பிறகும் சதா அம்மாவின் இடுப்பிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இது ஒரு பலகீனம். இவர்கள் எளிதில் குழம்பி விடுவார்கள். தனித்து முடிவெடுக்க தடுமாறுவார்கள்.
உங்கள் உயர்சாதி காதல் மனைவி அல்லது காதலி இப்படியான கோளாறு கொண்டவர் என்றால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பத்து வருடம் காதலித்த பிறகும் கூட என் அம்மா ஒத்துக் கொள்ளவில்லை என காதலை முறித்துக் கொள்வார்கள். அல்லது திருமணத்துக்கு பிறகும் கூட அம்மா பேச்சை கேட்டு மெல்ல மெல்ல உங்களை வெறுக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் பிரிந்து விடுவார்கள்.
உதாரணமாக உங்கள் மாமியாருக்கு உங்களைப் பற்றி சில குறைகள் இருக்கும். ஆரம்பத்தில் உங்கள் காதலி/மனைவி உங்கள் மீது விருப்பமாக இருப்பார். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் அதிருப்தி உற்று அவர் உங்கள் மாமியார் மீது மனரீதியாக சாய ஆரம்பிப்பார். அப்போது பேசி பேசி மாமியார் தன் பெண்ணை தன்னை போல் சிந்திக்க வைத்து விடுவார். இது வாதை உடலில் இறங்குவதை போல. பெண் தன் அம்மாவின் குரலில் வாதை வந்தது போல பேச ஆரம்பிப்பார். இது ஒரு ஆளுமைக் கோளாறு. என் நண்பனின் மனைவி இப்படியே தான் அவரிடம் இருந்து பிரிந்து சென்றார். காரணம் கேட்டால் தன் அம்மாவின் குரலில் பேசுகிறார்.

ஏன் மாமியார்கள் மருமகன்கள் மீது இவ்வளவு வெறுப்பு பாராட்டுகிறார்கள். இதற்கு விடை காண நாம் சில மாமியார்கள் மருமகன்களை மிகுந்த அன்போடு நடத்துவதையும் கவனிக்க வேண்டும். பொதுவாக மாமியார் தன் மருமகனை தன் மகளின் கணவனாக நினைப்பதில்லை. ஒரு அம்மாவுக்கு தன் மகள் தனது உடல் மற்றும் மன ரீதியான நீட்டிப்பு. குறிப்பாக பாலியல் ரீதியாய். ஒரு அர்த்தத்தில் மருகன் என்பவன் ஒரு மாமியாருக்கு கணவனைப் போலத் தான். மறைமுகமாக மாமியார் அப்படித் தான் இப்பிரச்சனையை அணுகுகிறார். ஆக தன் பெண்ணுக்கு வரும் கணவன் தன்னுடைய பொருளியல் பாலியல் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். சாதி இதற்கு மற்றொரு பரிமாணத்தை அளிக்கிறது. பெண்ணுக்கு கணவனை பிடித்திருந்து மாமியாருக்கு பிடிக்காமல் போகும் பட்சத்தில் மாமியார் தொடர்ந்து இந்த முரண்பாட்டுடன் மோதிக் கொண்டே இருப்பார். தன் வெறுப்பை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தி தன் பெண்ணின் மனதை மாற்ற முயற்சித்துக் கொண்டிருப்பார். மாமியாருக்கு தன் பெண் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை நம்பத் தோன்றாது. அவருக்கு ஒரு அதிருப்தி இருந்து கொண்டிருக்கும். தன் பெண் வழியாக மாமியார் இன்னொரு தாம்பத்திய வாழ்க்கை வாழ முயற்சிப்பார். தன் வாழ்வில் செய்த தவறுகளை தன் பெண்ணின் தாம்பத்திய வாழ்வில் நடக்கக் கூடாது என நினைப்பார். தன் நடந்து முடிந்த வாழ்வின் பிரச்சனைகளை தன் பெண் வழி திருத்த முயல்வார். இதனால் அவர் தன் பெண்ணின் குடும்ப வாழ்வில் தலையிடுவார். தயவு தாட்சணியமின்றி பிரச்சனைகளை உருவாக்குவார். அப்போதெல்லாம் அவர் தனக்காகத் தான் தன் பெண்ணின் வாழ்க்கை முடிவுகளை எடுக்கிறார் என புரிந்து கொள்ள மாட்டார். இது ஒரு சிக்கலான பிரச்சனை. அதனால் தான் இப்படியான ஒரு குழந்தைமை மிக்க மனைவி/காதலி + பாலியல் சிக்கல் கொண்ட மாமியார் எனும் ஜோடி சேரும் போது அது படு ஆபத்தானதாக மாறும். அதனால் தான் மருமகன்கள்/காதலன்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றேன்.
நான் கலப்புத் திருமணம் செய்து கொண்டேன். என் மனைவி உயர்சாதி. ஏழு வருடங்களாகின்றன். சுமூகமான மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கை. இருந்தும் சமீபமாக ஒரு சந்தர்ப்பம் வாய்த்த போது என் மாமியார் என் மனைவியை என்னிடம் இருந்து பிரிக்க பார்த்தார். இரண்டு முறைகள் முயன்றார்.
ஆனால் சாமர்த்தியமாக என் மனைவியிடம் பேசி நான் இம்முயற்சிகளை முறியடித்தேன். அதனால் தான் என் மாமியாரால் ஜெயிக்க முடியவில்லை.

எனக்கு சில அனுகூலங்கள் இருந்தன.
1. என் மனைவி இலக்கிய வாசிப்பு உள்ளவர். தர்க்க ரீதியாக பேசினால் அவருக்கு புரியும். என் விழுமியங்கள் அவரோடு பொருந்திப் போகும்.
2. திருமணத்துக்குப் பிறகு இன்றும் அவளுக்கு என் மீது மாறாக் காதலும் ஈர்ப்பும் மரியாதையும் உள்ளது.
3. என் மாமியாரும் என் மனைவியும் வேறு வகை மன அமைப்பு கொண்டவர்கள். என் மாமியாரின் மொழியை விட எனது மொழி என் மனைவிக்கு இன்னும் நெருக்கமாக உள்ளது. அவரை விட என்னால் நெருங்கிப் போய் அவளிடம் பேசி புரிய வைக்க முடியும்.
4. என் மாமியாருக்கு என்னளவுக்கு பேச்சாற்றலோ தர்க்க அறிவோ கிடையாது. முக்கியமாய் ஆற்றல். அவர் ரெண்டு மணிநேரம் பேசினால் நான் பதினாறு மணிநேரம் பேசுவேன். ஓயாமல் போராடிக் கொண்டிருப்பேன். அவர் சீக்கிரம் களைத்து விடுவார். அவர் ஒரு திட்டம் போட்டால் நான் நூறு திட்டம் போடுவேன்.
5. மிக முக்கியமாக என் மனைவிக்கு infantilization கோளாறு இல்லை. அவர் ஆரோக்கியமான ஆளுமை கொண்டவர்.
இந்த அனுகூலங்கள் இல்லாதவர்கள் இன்னும் அதிகமாக போராடவும் அரசியல் ஆடவும் வேண்டும். இல்லையென்றால் தனிமையில் வாட நேரிடும்.
பெண் மனம் தரையில் கொட்டின பாதரசம் போல. பெண்கள் மிக உணர்ச்சிகரமானவர்கள். தம்மால் குடும்பத்துக்கு பாதகம் வரக் கூடாது என நினைப்பார்கள். பத்து பேர் சேர்ந்து பேசினால் குழம்பி விடுவார்கள். திவ்யா விசயத்தில் அவரது அப்பாவின் மரணம், அம்மாவின் உடல்நலமின்மை, ஜாதி அரசியல்வாதிகளின் மிரட்டல், வாதங்கள், நெருக்கடி ஆகியவை அவரை உருக்குலைத்து விட்டன. ஆனால் முக்கியமான பிரச்சனை வேறு.
ஒரு முக்கியமான கட்டத்தில் இளவரசனால் திவ்யாவை பேசி தன் வசப்படுத்த முடியவில்லை. சில பல உளவியல் அணுகுமுறைகள் மூலம் அவரால் திவ்யாவை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்திருக்க முடியும். தன் பிணத்தை கடந்து தான் திவ்யா குடும்பத்தை விட்டு வெளியேற முடியும் எனும் நிலையை அவர் உருவாக்கி இருக்க வேண்டும். ஒரு தோல்பாவையை போல கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் சீக்கிரம் விட்டுக் கொடுத்து விட்டார். அவருக்கு மூர்க்கமும், விழிப்பும், புத்திசாலித்தனமும், போட்டியுணர்வும் போதவில்லை என கூறுவேன். ரொம்ப ”நல்லவர்” போல.

காதலில் வெற்றி பெற வெறும் காதல் மட்டும் போதாது. காதலில் வெற்றி பெற நீங்கள் ரொம்ப நல்லவராகவும் இருக்கக் கூடாது.

Share This

2 comments :

  1. ஆத்தாடி இப்படி எல்லாம் சிந்திக்க வேண்டுமா என்ன ?

    ReplyDelete
  2. முதலில் இருவருக்குள்ளும் இருந்தது காதல்தானா?

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates