விநாயக முருகனின் ராஜீவ் காந்தி சாலைக்கு மலைச்சொல் விருது
வழங்கும் நிகழ்ச்சியை ஊட்டியில் நட்த்தினார்கள். பேச என்னையும் அழைத்தார்கள்.
பெண்கள் கல்லூரியில் பேச அழைத்தால் எப்படி கண்ணை மூடி ஒப்புக் கொள்வோமோ அது போன்றே
உடனடியாய் சரி என்றேன்.
வி.முவும் கூட வருவதாக சொன்னது மற்றொரு காரணம். வி.முவின்
குடும்பத்துடன் கோயம்பத்தூர் வரை ரயிலில் போய் அங்கிருந்து ஊட்டி போனோம். வி.மு
மிக மிக மென்மையான மனிதராக இருக்கிறார். அவரிடம் ஒரு ஜெண்டில்மேன்தனம் (நல்லவிதமாகத்தான்)
உள்ளது. வயதாகி வெண்தாடி நீண்ட்தும் சுந்தர ராமசாமி போல் ஆகி விடுவார் என
நினைக்கிறேன். அப்படி ஒரு கண்ணியம். எழுத்தில் உள்ள பகடி, அடாவடித்தனம் எல்லாம்
நேரில் இல்லை. ஏதோ ரெட்டைப்பிறவியோ என்று கூட நினைத்தேன்.
வி.முவின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் பயங்கர சுட்டி. சினிமாவில்
வருவது போன்று ஒரு perfect
குழந்தை. அப்பா அம்மாவை கூட வாங்க போங்க போட்டு பேசும் குழந்தைகளை மிக
மிக அரிதாகத் தான் பார்க்க முடிகிறது. இக்குழந்தை அவ்வளவு மரியாதையாக பேசுகிறாள்.
ஒரு நொடி கூட அவள் சுணங்கி அழுத்தை நான் பார்க்கவில்லை. எப்போதும் சிரிப்பு
மகிழ்ச்சி மத்தாப்பு வாணவேடிக்கைதான். அம்மா சொன்னால் உடனடியாய் கேட்கிறாள்.
அப்பாவை மட்டும் லேசாய் கலாய்க்கிறாள். இன்னும் கூட ஏதோ சினிமா திரையில் இருந்து இறங்கி
வந்த கேரக்டரோ என்று சந்தேகம் இருந்து கொண்டிருக்கிறது. அநியாயத்துக்கு கியூட்.
ஊட்டியில் முதல் நாள் எழுத்தாளர்
சுமதி ஸ்ரீயும் தன் குடும்பத்துடன் சுற்றுலாவுக்காக வந்திருந்தார். நாங்கள் சேர்ந்து
மதிய உணவருந்தினோம். அவரது கணவர் பென்னியை அதற்கு முன் எங்கோ
சந்தித்து பேசியது போல் ஒரு அழுத்தமான நினைவு. ஆனால் எங்கே எனத் தெரியவில்லை. பென்னியும்
இதே தான் என்னிடமும் சொன்னார். ஆனால் அவர் இலக்கிய கூட்டங்களுக்கு வருபவர் அல்ல. நான்
வேலை பார்த்த கல்லூரிகளில் எங்காவது வந்துள்ளாரா எனக் கேட்டேன். இல்லை. ஒருவேளை எனக்கு
தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டோ என சந்தேகம் தோன்றியது.