கோலி: “போட்றா அவனுக்கு ஒரு பீமர்” |
ஒரு இந்திய பந்து வீச்சாளர் 149 கி.மீ வேகத்தில் வீசுவதை நேற்று தான் முதன் முறை பார்த்தேன். வாருன் ஆரொன் முன்னர் 140ஐ தாண்ட மாட்டார். இப்போது தோனி தலைமையில் இல்லை என்றதும்
அவர்
மிக சுதந்திரமாக உணர்ந்து வீசினார். தோனியின் சிறப்பு ஷோயப் அக்தரே என்றாலும் 130 கி.மீ
வேகத்தில் குழந்தை மாதிரி வீச வைப்பார். அந்தளவுக்கு கட்டுப்பாட்டு பைத்தியம் அவர்.
என்ன வேகம் இருந்தென்ன ஆரொனை மட்டையாளர்கள்
கில்லிதண்டா மாதிரி அடித்தார்களே என நீங்கள் கேட்கலாம். அந்த வேகம் தாக்கம் ஏற்படுத்துவதற்கான
சரியான நீளமும் லைனும் அவரிடம் இல்லாமல் இருந்தது என்பது உண்மை தான். ஆனால் மிச்சல்
ஜான்சனும் ஒரு காலத்தில் அப்படித் தான் இருந்தார். ஆனால் இன்று தன்னந்தனியாக அவர் தொடர்களை
தன் அணிக்கு வென்றளிக்கிறார். எங்கு சென்றாலும் மட்டையாளர்கள் அவரை அஞ்சுகிறார்கள்.
தென்னாப்பிரிக்காவில் அவர் முதல் டெஸ்டில் வீசுவது பார்த்து அரண்டு விட்டேன். பந்துகள்
துள்ளி வேகமாய் எகிறும் ஆடுதளங்களில் பழகிய தென்னாப்பிரிக்க வீரர்களே அவரைக் கண்டு
நடுங்கினர். வேகத்தோடு ஜான்சனிடம் ஒரு கூர்மை முக்கியமாய் இருந்தது. லைன் மீது ஒரு
அபார கட்டுப்பாடு அவருக்கு வந்து விட்டது. நீளம் என்றுமே அவரது வலிமை அல்ல. குறைநீளத்தில்
சரியான லைனில் மிக வேகமாய் பந்து வரும் போது அவரை சமாளிப்பது மிக மிக சிரமம் ஆகிறது.
எனக்கு அவர் பிரட் லீயை விட மேல் என படுகிறது. லீ கூட சரியான லைன் மற்றும் நீளத்தில்
வீசத்தான் முயன்றார். இந்தளவுக்கு மட்டையாளர்களை கழுத்தை லட்சியமாக்கி பந்தை வீசி அச்சுறுத்தவில்லை.
பீட்டர்ஸனுக்கு ஜான்சன் |
இங்கு ரெண்டு விசயங்கள் ஆரொனுக்கு
கற்றுக் கொள்ள உள்ளது. ஒன்று வேக வீச்சாளர்கள் ஜான்சனைப் போல் ஒரு எளிய திட்டம் மட்டுமே
வைத்துக் கொள்ள வேண்டும். 150 கி.மீ வேகத்தில் பந்து எப்படியும் ஸ்விங் ஆகாது. அதனால்
கிளாசிக்கலான குட் லெங்தில் வீசிவது வீண். குட் லெங்துக்கு சில அங்குலங்கள் தள்ளி தொடர்ந்து
வீச வேண்டும். பந்தை விரட்டவோ பின்னே சென்று வெட்டவோ முடியாத நீளம் இது. சில பந்துகளை
மிக மிக முழுமையான கிட்டத்தட்ட யார்க்கர் நீளத்தில் வீசலாம். ஜான்சன் இதைத் தான் செய்கிறார்.
அவர் மட்டையாளரை விரட்ட வைத்து ஏமாற்றி விக்கெட் எடுப்பதில்லை. அச்சுறுத்தி பின்காலுக்கு
போக வைத்து துள்ளி எழும் பந்தை எம்பி தடுக்க செய்து ஸ்லிப்புக்கு எட்ஜ் கொடுக்க செய்கிறார்.
அவரது வேகத்தை சமாளிக்க முடியாமல் எ.பி. டிவில்லியர்ஸ் போன்ற அபாரமான மட்டையாளர்களே
மோசமான ஷாட் அடித்து வெளியேறுகிறார்கள். ஆக, ஒரு வேக வீச்சாளர் மிதவேக ஸ்விங் பந்து
வீச்சாளரை போல் விக்கெட் எடுக்க நினைக்கக் கூடாது. சிங்கமும் பாம்பும் வேட்டையாடுவதில்
வித்தியாசம் உண்டல்லவா! ஆரொன் தனக்கு வழிகாட்டியாக ஷோயப் அல்லது ஜான்சன் போன்ற ஆட்களை
வைத்துக் கொள்ள வேண்டும். சஹீரை அல்ல. ஆரொனுக்கு ஒரு சரியான பயிற்சியாளர் தேவைப்படுகிறார்.
நியூசிலாந்தின் ஷேன் பாண்டைப் போல் வேகவீச்சை ஆக்ரோஷத்தை ஊக்குவிக்கும் ஒருவர். இப்போது
ஆரொன் சற்று குழம்பி தெரிகிறார். அவர் தான் யார் என்பதை முதலில் அறிய வேண்டும்.
இரண்டாவதாக வேகவீச்சாளர்களுக்கு
பந்தின் உயரம் (பவுன்ஸ்) ரொம்ப முக்கியம். குள்ளமான நம்மூர் வீச்சாளர்கள் இவ்விசயத்தில்
திணறுகிறார்கள். மேலும் நம்மூர் ஆடுதளங்களில் அவர்கள் உயரப்பந்துகள் வீசியும் பழகினதில்லை.
அதனால் இயல்பாக வருவதில்லை. ஷாமி ஒரு நல்ல உதாரணம். அவர் வேகமானவர் தான். ஆனால் அவரை
விட வேகம் குறைவான நியுசிலாந்து அல்லது தென்னாப்பிரிக்க வீச்சாளர்களை பந்தை இன்னும்
நன்றாக எகிற வைக்கிறார்கள். ஆனால் ஷாமி உயரப்பந்து வீசும் போது அது போதுமான அளவு துள்ளுவதில்லை.
ஆரொன் அவருக்கு மேல் என்றாலும் தொடர்ந்து பந்தை நெஞ்சளவுக்கு எப்படி எகிற வைப்பது என
அவர் கற்க வேண்டும். அவரது வேகம் தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்றால் பந்தின் உயரமும்
தேவை. இதை அவர் கற்க வேண்டும். முக்கியமாக அவர் தன் ஆட்டத்தை எளிமையாக வைத்திருக்க
வேண்டும். விக்கெட் எடுப்பதை விட அச்சுறுத்துவது தன் பிரதான வேலை என நினைக்க வேண்டும்.
அப்போது விக்கெட் தானே விழும்.
பந்து வீச வீச ஆரொனுக்கு ஒரு கட்டுப்பாடு
தானே வரும். மேலும் நேற்றைய ஆசியக் கோப்பை ஆட்டத்தின் ஆடுதளத்தையும் கணக்கில் கொள்ள
வேண்டும். அந்த படு மெத்தன ஆடுதளத்தில் மிச்சல் ஜான்சனே திணறி இருப்பார். ஆனால் ஆரொன்
ஒருநாளும் தன் வேகத்தை கட்டுப்படுத்த நினைக்கக் கூடாது. அது ஒரு கையை வெட்டுவது போல்
ஆகும். எனக்கு தோனி தலைவராக திரும்பியதும் ஆரொனின் கதி என்னாகும் என்று தான் கவலையாக
இருக்கிறது.
நேற்றைய ஆட்டத்தில் இன்னொரு விசயமும்
நடந்தது. பவர் பிளேவின் போது வங்கதேச அணித்தலைவர் ரஹீம் ஆரொனின் ஒரு ஓவரில் தொடர்ந்து
4, 4, 6 என அடித்தார். அப்போது கோலி வந்து ஆரொனிடம் ஏதோ சொன்னார். ஆரொன் உடனே ஒரு விலா
உயர பீமர் (உயர புல் டாஸ்) போட்டார். பீமர் என்றால் கை வழுவி தெறிக்கிற பந்து. இரண்டு
முறை பீமர் போட்டால் அதற்கு மேல் அந்த ஆட்டத்தில் பந்து வீட அனுமதிக்க மாட்டார்கள்.
இந்தளவுக்கு உயரமாய் பீமர் விழாது. இது திட்டமிட்டு வீசப்பட்டது, ஆரொனை தடை செய்ய வேண்டும்
என கவாஸ்கர் வர்ணனையில் கொந்தளித்தார். இதற்கு மேல் எப்படியும் ஆரொன் பந்து வீச வேண்டியதில்லை
என முடிவு செய்து கோலியே திட்டமிட்டு அப்படி வீசச் செய்தாரா? இருக்கலாம். ஏனென்றால்
ரஹீம் விலாவில் காயம் பட்டு ரொம்ப நேரம் துடித்தார். பின் அவர் எழுந்து ஆட வந்த பின்
பழைய ஆக்ரோஷம் அவரிடம் இல்லை. அவரது ரிதம் உடைந்தது. வெறுமனே ஒற்றை ரெட்டை ஓட்டங்கள்
தான் அதிகம் எடுத்தார். ஆக இந்த பீமரின் நோக்கம் நிறைவேறி விட்டது. மாறாக ரஹீம் அதே
வேகத்தில் தொடர்ந்து அடித்திருந்தால் வங்க தேசம் 320 ஸ்கோர் பெற்றிருக்கும். மாறாக
கடைசி ஓவரில் வெறும் எண்பது ஓட்டங்கள் தான் எடுத்தது.
இந்த பீமர் வங்கதேச மட்டையாட்டத்துக்கு
ஒரு தடங்கலாக அமைந்தது. கோலி வேண்டுமென்றே அப்படி செய்ய சொல்லி இருந்தால் அது சட்டரீதியாக
குற்றம் தான். ஆனால் ஒரு நல்ல திட்டமாகவும் இதைப் பார்க்கலாம். தோனியைப் போன்று ஒரு
அம்மாஞ்சி அணித்தலைவர் ஒரு போதும் இதை செய்ய சொல்ல மாட்டார். கோலி நம் தலைமுறையின்
சரியான பிரதிநிதி. வழிமுறை அல்ல, லட்சியம் தான் முக்கியம் என உணர்ந்தவர். தோனி முன்னர்
இங்கிலாந்து பயணத்தில் சச்சின் கூறியதால் ரன் அவுட் ஆன பெல்லை திரும்ப ஆட அழைத்தார்.
அவர் தன் கை பிரம்பை எதிரிக்கு கொடுத்து அடி என கேட்பார். அவர் மாதிரி காந்தியவாதிகளின்
காலகட்டம் முடிந்து விட்டது.
நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவிடம்
நிறைய வழக்கமான பிரச்சனைகள் இருந்தாலும் அணித்தலைமையில் உள்ள உக்கிரம், கரார்தன்மை
எனக்கு பிடித்திருந்தது. தோனிக்கு ஒரு மூன்று மாதங்கள் காயம் ஏற்பட்டால் நன்றாக இருக்கும்
என யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.
This post correctly reflects your mindset.
ReplyDeleteHaha I guess Dhoni is for sure in his way out. At least as a captain, he still is the nest finisher and probably the coolest head in the game. But time is definitely up for his style of reactionary captainship. We need an aggressive and proactive leader (I guess this statement is true of our country as well, no?) ☺
ReplyDeleteஇலங்கையை சொல்லுகிறீர்கள் என்றால் உண்மை தான். மகேளா எனக்கு மிக மிக பிடித்த கேப்டன். அவர் கங்குலி, தோனிக்கும் மேல். போன உலகக் கோப்பையை அவர் வழிநடத்தி இருந்தால் இலங்கை வென்றிருக்கும்
Delete