கிருஷ்ண பிரபு புத்தக்க் கண்காட்சி பற்றி ஒரு முக்கிமான ஆய்வைசெய்திருக்கிறார். அவர் எடுத்துக் கொண்டுள்ள சாம்பிள் சிறியது என்றால் முடிவு உண்மை. கல்லூரி மாணவர்களிடையே புத்தகக் கண்காட்சி பற்றி போதுமான விளம்பரங்கள் செய்யப்படவில்லை என்கிறார். அடுத்தமுறை பப்பாசி இதை கணக்கில் எடுக்கும் என நம்புவோம்.
எனக்கு இன்னொரு விசயமும் கவனிக்க வேண்டிதாய் படுகிறது. மாணவர்களின் அன்றாட நாள் எப்படி கழிகிறது என்பதையும் கூறுகிறார் கிருஷ்ண பிரபு. படிப்பு, கல்லூரி வகுப்புகள், அரட்டை, இசை, வீடு, சாப்பாடு, டி.வி, தூக்கம். இதுவும் உண்மை. ஆனால் இது இன்றோ நேற்றோ அல்ல பள்ளிப் பருவத்தில் இருந்தே இப்படித் தான் பழக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் அவர்கள் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்போம்.
நாங்க எதுக்கு புத்தக கண்காட்சி வரணும்?
புத்தகம் ஏன் வாங்கணும்?
இது மாணவர்கள் கேள்விகள். நியாயமான கேள்விகள். சிறுவயதில் இருந்தே மத்திய வர்க்க பெற்றோர்கள் தம் பிள்ளைகள் படிப்புக்கும் வேலைக்கும் உதவும் புத்தகங்கள் தவிர பிறவற்றை படிக்க்க் கூடாது என்பதை கூறி வளர்க்கிறார்கள். இந்த கண்காட்சியின் போது உலக வரைபடம், ஆங்கில இலக்கணம் போன்றவை தவிர கதைப் புத்தகங்களை குழந்தைகளுக்கு வாங்கித் தர மறுக்கிற பெற்றோர்களைக் கண்டேன். இந்த பெற்றோர்களும் இப்படி வளர்ந்தவர்கள் தாம். வேலை குறித்த, எதிர்கால ஸ்திரத்தன்மை குறித்த அச்சம் இவர்களுக்கு சிறுவயதில் இருந்தே இருந்திருக்கும். தம் குழந்தைகளுக்கும் அந்த அச்சத்தை தான் ஊட்டுகிறார்கள்.
குழந்தைகளையும் பணம், வீடு, டி.வி என மட்டும் யோசித்து வாழ தூண்டுகிறார்கள். பொதுவாக பணம் குறித்த பதற்றம் அகன்றால் தான் இலக்கியம், தத்துவம், பண்பாட்டு நூல்கள் படிக்க தோன்றும். பொருளாதாரம் வாசிப்பு பழக்கத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணி.
வாழ அடிப்படையாக பணம் தேவை. அந்த பணம் இருந்தால் அடுத்து எப்படி வாழ என சொல்லித் தர புத்தகங்கள் தேவை. வாசிக்காதவர்களுக்கு வாழத் தெரியாதா? தெரியும், ஆழமாக வாழ்க்கையை புரியவும், அலசி ஆராயவும் தெரியாது. ஒரு விசயத்தை தர்க்கரீதியாய் விளக்கமாய் சொல்ல மொழி இருக்காது. இன்று டி,வி விவாதங்களில் பலரிடமும் இந்த மொழி ஊனத்தை பார்க்கிறோம். பேசுவது நம் பண்பாட்டின் பகுதி. பண்பாடு என்பது வெறுமனே பட்டிமன்றம் பார்ப்பது, சடங்குகள் செய்வது என நினைப்ப்பர்களுக்கு விவாதிக்கவும் பேசி தம்மை நிறுவவும் தெரியாமல் போகிறது – வரலாறும் தர்க்கமும் தான் வாதம் எனும் துப்பாக்கியின் தோட்டாக்கள். இவை இரண்டும் நம் மாணவர்களுக்கு பரிச்சயம் இல்லை. வெற்றுத்துப்பாக்கியை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.
இவர்கள் ஒரு அர்த்த்த்தில் ஊமைகள் தாம் – “அது வந்து இது இருக்கில்ல, அது அதோட அது அத்த் தான் சொல்றேன்” என்று திக்கிக் கொண்டே இருப்பார்கள். தாம் சொல்லி வருகிற விசயத்தை கூற ஏதாவது ஒரு சினிமா பாட்டை மேற்கோள் காட்டுபவர்களும் இந்த மொழி ஊனம் கொண்டவர்கள் தாம்.
ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை நிம்மதியான கவலையற்ற வாழ்க்கை தான். அது உள்ள இடங்களில் வாசிப்பு பழக்கம் செழிக்கும். இது ஒரு வர்க்கரீதியான பிரச்சனை. மேல்மத்திய, பணக்கர வர்க்க குழந்தைகளிடம் இன்னும் பரவலான வாசிப்பு உள்ளது. குறைந்த்து சேத்தன் பகத், பவுலொ கொயில்ஹொவையாவது படிக்கிறார்கள். எழுத்தாளர்களின் பெயர்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு வாசிப்பது நல்லது தான் என சொல்லப் படுகிறது. கதை வாசித்தால் வேலை கிடைக்காமல் சிரமப்படுவோம் என அவர்கள் நினைப்பதில்லை. இதனால் அவர்கள் மேலான வாசகர்கள் என நான் கூறவில்லை. ஒரு தோதான சூழல் அவர்களுக்கு இருக்கிறது.
நம் மாணவர்கள் கூட்டங்கூட்டமாக கண்காட்சிக்கு வருகிறார்கள் எனக் கொள்வோம். அவர்களில் மிகச்சில பேருக்கு தான் வாசிப்பு பழக்கம் இருக்கும். மிச்சபேர் வேடிக்கை பார்த்தபடி ஸ்வீட்கார்ன் வாங்கி சாப்பிட்டபடி கடந்து விடுவார்கள். பல பதிப்பாளர்களின் கவலையே ஏன் கடைக்குள் கூட எட்டிப் பார்க்காமல் கடந்து போகிறார்கள் என்பது. நான் இந்த இளைஞர்களை குற்றம் சொல்ல மாட்டேன். புத்தகத்தை வாசிப்பதை விடுங்கள், அதை அணுகி கண்டடைய அடிப்படையில் ஒரு பரிச்சயம் வேண்டும். நமக்குத் தேவையான பிடித்தமான நூல்களை அறிய ஒரு பழக்கம் வேண்டும்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சுற்றுலா வருகிற குடும்பங்களை கண்டிருக்கிறேன். அவர்கள் ஒவ்வொரு மாடியாக நுழைந்து அலமாரிகளை எட்டிப் பார்த்து ஒரு ஒவ்வாமைப் பார்வையுடன் குழப்பத்துடன் கடந்து போவார்கள். ஐந்தாவது மாடியில் இருந்து கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்து வியப்பார்கள். அவ்வளவு தான். ஒரு நூலகத்தில் புதிதாக நுழைவது அறியாதவரின் வீட்டுக்குள் புகுந்து வரவேற்பறையில் உட்காருவது போல் அந்நியமாகத் தான் இருக்கும். சிறுவயதில் இருந்தே நூலகமும், புத்தகங்களும், வாசிப்பதும் அவர்களின் அன்றாட வாழ்வின் பகுதியாக இருந்ததில்லை. இது யார் தவறு?
நம் அரசாங்கம், கல்வித்துறை, ஊடகங்கள் எல்லோரும் பொறுப்பெடுக்க வேண்டும். எனக்குத் தெரிந்து கல்வித்துறையில் ஒரு சிறுமாற்றத்தை பரிந்துரைக்கிறேன். பள்ளியில் வாரம் ஒருமுறை உள்ள நூலக வகுப்பை தின வகுப்பாக மாற்றலாம். நூலகத்தை ஒட்டி கதை சொல்லுதல், நடித்துக் காட்டுவதல் ஆகிய பண்பாட்டு நிகழ்ச்சிகளை வாரம் ஒருமுறை நடத்தும்படி ஒரு விதிமுறை கொண்டு வந்து, ஒரு வாசிப்பு நெறியாளரை அமர்த்தலாம். அவர் வேலை வாசிக்க தோதான சூழலை உருவாக்குவது, வாசித்த கதைகளை மாணவர்களை சொல்ல உதவுவது, கதையை நாடகமாக, பாடலாக மாற்றி நிகழ்த்த வழிகாட்டுவது ஆகியன. மெல்ல மெல்ல இது போன்ற கதை நிகழ்த்தலுக்கு மதிப்பெண்கள் வழங்க ஆரம்பிக்கலாம். கல்லூரியில் உள்ளது போல் 50% எழுத்து தேர்வு, 50% நடைமுறைத் தேர்வு என மாற்றலாம். நடைமுறைத் தேர்வில் மதிப்பெண் பெற பேசவும், நடிக்கவும், பாடவும் செய்ய வேண்டும் எனலாம். இந்த மாற்றங்களை சிறுக சிறுக கொண்டு வரலாம். ஏன் என்றால் இதை எல்லாம் முதலில் பெற்றோர்கள் தாம் கடுமையாக எதிர்ப்பார்கள்.
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது ஒரு அழகான ஆசிரியை இருந்தார். அவர் எங்கள் வகுப்புக்கு என்று ஒரு நூலகம் துவங்கினார். எங்களிடம் உள்ள காமிக்ஸ் நூல்களை கொண்டு வரச் சொல்லி அங்கே பரணில் வைக்க செய்தார். அவற்றை மாணவர்கள் எடுத்து வாசித்து விட்டு திரும்ப வைக்க வேண்டும். பல அழகான காமிக்ஸ் நூல்களை அங்கு படித்திருக்கிறேன். என் பள்ளி வாழ்க்கையை நினைத்தாலே எனக்கு தோன்றும் உள்ள மிக இனிமையான அனுபவம் அது ஒன்று தான். பின்னர் நான் ஒரு அரசுப் பள்ளியில் சேர்ந்தேன். அங்கு உள்ள முக்கிய குற்றம் என்ன தெரியுமா? கதை புத்தகம் வகுப்புக்கு எடுத்து செல்வது. மாணவர்கள் ஆர்வத்தில் ஜட்டிக்குள் எல்லாம் மறைத்து காமிக்ஸ் கொண்டு வந்து பிறருக்கு கொடுப்பார்கள். கண்டுபிடிக்க்ப்பட்டால் பிரம்படி தான். கதை வாசித்தால் பிரம்படி கொடுக்கிற பள்ளிச் சூழலில் வளர்கிற குழந்தைகள் வளர்ந்ததும் புத்தக்க் கண்காட்சி வந்து புத்தகங்களை அள்ளிப் போய் வீட்டில் வைத்து வாசிக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?
கட்டுரை அருமை, உண்மை.
ReplyDelete