அப்பாவின் கட்டில் வெற்றாய் கிடந்தது. மெத்தை இல்லை, தலையணை இல்லை, அவரது சிவப்பு துண்டை யாரோ விரித்திருந்தார்கள். அப்பா ஓய்வு பெற்ற நாளில் அலுவலக பிரிவுபசார விழாவின் போது வழங்கியது. அப்பா அன்று மிக மகிழ்ச்சியாக இருந்தார்; வழக்கத்துக்கு மிகுதியாக மது அருந்தியிருந்தார். அக்காவின் அறைக் கட்டிலில் அமர்ந்தபடி அவளை அணைத்தபடி பேசிக் கொண்டே இருந்தார். குழறியபடி, நினைவுகளை, மனநிலைகளை குழப்பி அடுக்கியபடி சொப்பு சாமன்களை விளையாடத் தெரியாமல் பரப்பி முழிக்கும் குழந்தையைப் போல். அவர் அவளது இடுப்பை மெல்ல அணைத்தபோது அக்காவுக்கு சிரிப்பாக வந்தது, அம்மாவின் கண்களில் கலவரம் தெரிந்தது. அடிக்கடி அடுக்களை சென்று எட்டிப் பார்த்தவள், அக்காவிடம் எதையாவது குற்றம் சொல்லி வைது கொண்டு வந்தவள், திடீரென்று அப்பாவை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அவரது அறையில் இட்டு கதவை சாத்தினாள்.
அக்காவுக்கு அப்பாவை நன்றாக தெரிந்திருந்தது, அவள் மனதில் அப்பா பற்றி இருந்த தெளிவான சித்திரம் நேர்க்கோட்டில் ஆனது. அவள் மிகச் சின்ன வயதிலிருந்தே அப்பாவுடன் தொடர்ந்து இருந்திருக்கிறாள். அப்பாவின் தோற்றம் அவளுக்கு வாய்த்திருந்தது. நெடுகின கறுத்த உருவம், கூர்மையான நாசி மற்றும் மூக்கு, பளிச்சிடும் கண்கள். மனதளவிலும் அவள் அப்பாவின் மற்றொரு பிரதிபிம்பம் தான். வெளிப்படையான, வாழ்க்கையை கொண்டாட விழையும் போக்கு, தடங்கலற்று வெளிப்படும் ஆற்றல், கூர்மையான அறிவு, சட்டென்று ஒட்டிக் கொள்ளும் நினைவுத்திறன், இத்துடன் நிறைய சோம்பலும். அம்மா இருவரையும் ”பாண்டிகள்” என்பாள். எனக்கு அப்பா பற்றி இருந்த நினைவுகள் ஒரு மொண்டாஜ் போல குழப்பமானது. அப்பாவை பற்றிய முதல் நினைவு சற்று பதற்றமானது. எனக்கு மூன்று வயதிருக்கும். தென்னந்தோப்பில் மடல்களையும் ஓலைகளையும் வெட்டி குவித்திருந்தனர். அப்பா என்னை தூக்கிப் பிடித்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார். இத்துடன் நினைவுச் சரடு அறுபடுகிறது, அடுத்து நான் கீழே ஒலைக் குவியல் மேல் விழுந்து கதறி அழுததாக அம்மா சொன்னாள். எனக்கு அழுத நினைவு இல்லை, ஆனால் அப்போதைய அப்பாவின் சிலநொடிகளுக்கான முகபாவம் சன்னமாய நினைவில் உள்ளது. இல்லை அதுவும் கற்பனையா? எப்படியும் அம்மா குறிப்பிட்ட விபத்து நிகழ்வுதான் நான் இன்னும் அதை நினைத்துக் கொண்டிருக்க அல்லது அப்படி ஒரு கற்பனையை உருவாக்கி இருக்க காரணமாக இருக்கலாம். அப்பா அப்போது இதே போல் ஒடிசலாக ஆனால் மேலும் உற்சாகமாக ஆரோக்கியமாக இருந்ததாக அம்மா குறிப்பிடுவாள். அடுத்த நினைவு நெய்யாற்றங்கரையில் ஒரு வைத்திய சாலையில் நான் எண்ணெய் தேய்த்து பிழியப்பட்டு சிலவேளை பனஞ்சிலாம்புகளால் போலியோ கால்கள் கட்டப்பட்டு வலியில் அல்லது அலுப்பில் (என் கற்பனையை பொறுத்து) விடாது அழுத போது அப்பா தொட்டுள்ள தோப்பில் வாதாம் மரங்களில் ஏறி காய் பறித்து வந்து நொறுக்கி பருப்பு எடுத்து தந்ததை பற்றியது. இதுவும் முதல்பாதி மட்டுமே எனக்குள் பச்சையாக இருப்பது. மிச்சம் பாட்டி சொன்னது. அப்பா மரம் ஏறி என்றுமே பார்த்தது இல்லை. அதனால் வியப்புணர்வு காரணமாக இந்நினைவும் மீளமீள தோன்றுவது.
மூன்றாவது நினைவு காட்சிபூர்வமானது அல்ல. அப்பாவே சொன்ன ஒரு சிறுதகவல். எனக்கு போலியோ காய்ச்சல் முற்றி ஜன்னி வந்து ஆஸ்பத்திரியில் கிடந்த போது ஓரு நள்ளிரவில் சில மருந்துகள் அவசரமாக தேவைப்பட்டன. அப்பா தனது லேம்பி ஸ்கூட்டரில் படுவேகமாக பல கடைகளுக்கு சென்று தேடி கடைசியில் ஒருவழியாக ஷட்டர் இழுத்து மூடப்போகும் நிலையில் ஒரு கடையில் இருந்து அம்மருந்துகளை அதிர்ஷ்டவசமாக பெற்று வந்தார். இதைப் பற்றி அம்மா சொன்ன தகவல் சற்று முரண்பட்டது. அப்பா அன்று வீட்டில் தனிமையில் இருந்தபடி பக்கத்து வீட்டு சௌதாமினியிடம் “கைகால் காண்பித்துக் கொண்டிருந்தார்”. இதை அம்மா ஆஸ்பத்திரியில் இருந்தபடி எப்படி கண்டுபிடித்தாள் என்பது அப்போது புதிராக இருந்தது. அப்பாவின் இத்தகவல் பற்றிய மற்றொரு முரண்பாடும் உண்டு. அப்பாவுக்கு ஸ்கூட்டரை மிகுந்த தயக்கத்துடன் கிட்டத்தட்ட 15-20 கி.மி வேகத்திலேயே செல்வார். அவரோடு செல்லும் போது பலசமயம் வெட்கம் பிடுங்கித் தின்னும், பாதசாரிகள் அவரை தாராளமாய் தாண்டி சென்று சில சமயம் பரிகாசமாய் திரும்பிப் பார்க்க வேறு செய்வார்கள். இப்படி கூடப் படிக்கிற மாணவர்களை பின்சீட்டில் இருந்தபடி எதிரிட நேரும் போது இறங்கி நடந்து போய் விடுவேன். “என்னால் ஜெட் வேகத்திலே எல்லாம் போக முடியாது, வேணும்னா எறங்கிப் போ” என்று இறங்கிய பின் அப்பா முடிவாய் சொல்வார்.
அந்த நீல-வெள்ளை லாம்பி அப்பாவுக்கு பழகி பழகி கொஞ்சம் அவர் குணம் ஒட்டி விட்டிருந்தது. ஓய்வுக்கு பிறகு அப்பா வெளியில் செல்லும் போது வண்டி எடுப்பதில்லை. கைநடுங்குவதாக, சமன் செய்ய முடிவதில்லை என்று காரணங்கள் சொன்னார். உதைத்து கண்ணை மூடி விட்டால் தானே தன்னை வீடு சேர்த்து விடும் என்று அப்பா பெருமைப்பட்ட ஸ்கூட்டர் மீது அவருக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டிருந்தது. பின்னர் நான் அதில் தான் வண்டி பழகினேன். இருமுறை விழுந்து சியாய்த்து சுளுக்கிய பின் நண்பர்களின் வண்டியில் பழகுவதாக முடிவு செய்தேன். சமீபமாக அவ்வண்டியை சென்னைக்கு கொண்டு வரும் போது நிறைய சிரமங்கள் ஏற்பட்டன. மரண சான்றிதழ் உடனே கிடைக்காததால் அப்பாவின் பேரில் போலிக் கடிதம் ஒன்று எழுதி ரெயில்வே அதிகாரியை திருப்திப் படுத்தி பார்ஸலில் அனுப்பினேன். அப்பா இல்லாத நிலையில் அவர் கையெழுத்தை போலியாக சாய்வாக எழுதிய போது மிக சுலபமாக வந்தது. பத்து வருடங்களுக்குப் பின் அப்பா கையெழுத்தை போல செய்கிறேன், அவ்வளவு சரளமாக வந்தது, யாரிடமும் சொல்லவில்லை என்றாலும் உள்ளுக்குள் நடுக்கம் இருந்தது. சரளமாக எது வந்தாலும் இந்த வயதில் பயமும் பதற்றமும் கலந்து வருவது ஏன்?
லாம்பி ஓடும் நிலையில் இல்லை. அதை துருவேற பாதுக்காக்கவும் வாடகை வீட்டில் இடமில்லை. வீட்டு சொந்தக்காரர் வண்டியை எப்போ எடுக்கப் போறீங்க என்று பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருந்தார். மிக சமீபமாக சொன்ன போது அது கோபத்தில் இருந்து, கேலியில் இருந்து பழக்க விசாரணையின் தொனிக்கு மாறி இருந்தது. லாம்பியை ரிப்பேர் செய்து ஓடும் நிலைக்கு கொண்டு வருவதிலும் தொடர்ச்சியான பிரச்சனைகள்; கிக்கர் உள்சக்கரம் பழுது, கியர் அறுந்தது, இப்படி ஆரம்பித்து விடாமல் பெட்ரோல் ஒழுகுவது வரை எதாவது ஒரு கோளாறு வண்டியில் மிச்சமிருந்து கொண்டே இருந்தது. சென்னையில் அவ்வண்டியை பழுது பார்க்கும் உத்தேசத்துடன் கைவக்காத மெக்கானிக்குளே இல்லை. ஒருவர் மட்டும் வெளிப்படையாக கிடைக்கிற விலைக்கு கொடுத்து விடுங்கள் என்றார். ஆர்.சி புத்தகத்தில் பெயர் மாற்றாமல், கண்டுபிடிக்கப்படாத கோளாறுகளுடன் அதை வாங்க ஒருவர் தயாரானார், ஆனால் பாருங்கள் அப்போது பார்த்து சாவி தொலைந்து விட்டது. பூட்டை உடைத்து மாற்றி அவருக்கு கைமாறும் போது ஒரு பழகின செல்லப்பிராணி போல் தயங்கியபடி நகர்ந்ததாய் தோன்றியது; அல்லது அந்த வண்டி நகரும் பாணியே அப்படியாக இருக்கலாம்.
அப்பாவின் நினைவுகள் காலவரிசைப்படி இல்லை என்று சொன்னேன். அதாவது எனது ஐந்து வயதிற்கு பிறகு அப்பா எப்படி இருந்தார், பேசினார், நடந்தார், சிரித்தார், அழுதார் எதுவுமே மனப்பரப்பில் இல்லை. அப்பா அப்போது கடுமையான் போதையில் அலுவலகத்தில் தகராறு செய்து மொட்டை மாடியில் நின்று குதிப்பதாய் மிரட்டியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். தொழிற்சங்கவாதிகளுடன் முரண்பட்டதால் பணிநீக்கம் நீண்டு கொண்டே சென்றது. அதோடு அப்பாவுக்கு அம்மாவின் பாலியல் ஒழுக்கம் மீது தேவையற்ற சந்தேகங்கள் வலுத்து வந்தது. ஒவ்வொரு நாளும் புதிய ஒரு கள்ளக்காதலனோடு இணைத்து பேசி அவளை அடித்து வதைத்து வந்தார். ஒரு நாள் இப்படி அம்மாவை தாத்தாவுடன் கோர்த்து பேசியதில் அவர் காயப்பட்டு எங்கள் வீட்டுக்கு பின்னர் வரவே இல்லை. அப்பாவின் அடி உதைகளை, வசைகளின் வன்மத்தை விட அவரது அபாரமான கற்பனை எங்களை மிக மோசமாக பயமுறுத்திய காலம் அது. சென்னையில் உள்ள மாமா (அம்மாவின் அண்ணன்) என்னை அழைத்து சென்று விட்டார். அப்பாவை ரெண்டு வருடங்களுக்கு நான் பார்க்கவே இல்லை. மாமா வீட்டுக்கு என்னை தேடி வந்திருந்த போது அவர் மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு வேலைக்கு ஒழுங்காய் செல்வதாக சொன்னார்கள். ஆனால் அன்று அவர் கண்கள் சிவப்பாய் பழுத்திருந்தது. அவருடன் வெளியே சென்று வர மாமா அனுமதிக்க இல்லை. அப்பா அன்று நள்ளிரவே சொல்லாமல் ஊருக்கு கிளம்பி விட்டார். அப்புறம் கொஞ்ச நாட்கள் பள்ளிக்கு செல்லும் போது சாலைகளில் அவரை தேடியிருக்கிறேன். நான் அப்பாவை போலவே கோணலாக சிரிக்க ஆரம்பித்து விட்டதாய் அத்தை சொன்னார்கள். அது பொய். அப்பா சிரிப்பதே இல்லை. கூடிய மட்டும் ஒரு பெரிய புன்னகை. கசப்பையும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்த அதே புன்னகைதான் எப்போதும்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் அப்பா திடீரென காணாமல் போனார். ஊர் சுற்றப் போனதாக, தேசாடனம் என்று ஆரம்பத்தில் இருந்த நம்பிக்கை சிறுக சிறுக அம்மாவுக்கும் உறவினருக்கும் இல்லாமல் போனது. ஒரு கட்டத்தில் அவர் கொல்லப்பட்டதாக, விபத்தில் இறந்ததாக நம்பத் தொடங்கிய போது, அலுவலகத்தில் அவர் காணாமல் போனவராக உறுதி செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் பிரத்யட்சமானார். அவர் நிலைமை மிக மோசமாக இருந்ததாக அம்மா போனில் அழைத்து மாமாவிடம் சொன்னாள். குடிப்பதை முழுக்க நிறுத்தி விட்டிருந்ததாகவும் தெரிவித்தாள். மாமாவுக்கு நம்பிக்கை வரவில்லை. என்னை திரும்ப ஊருக்கு அனுப்ப அவர் மிகவும் தயங்கினார். படிப்பு பாதிக்கப்படும் என்று வலியுறுத்தி சொன்னார். பிறகு ஊருக்கு திரும்ப சென்ற போது இரு விசயங்கள் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன.
அப்பா முன்னை விட அதிகமாய் குடிப்பவராக துன்புறுத்துபவராக மாறி இருந்தார். அலுவலகத்திலும் அவர் ஒரு மிதமான போதையுடன் இயங்குவதை அனுமதித்தார்கள். என்னை ஒரு வளர்ந்த ஆண் போல் அவர் நடத்தினார். கற்பனை செய்திருந்த வாத்சல்யமும் நெருக்கமும் சாத்தியப்படாது என்றும், அப்படி ஒருவேளை எங்கள் உறவு உருக்கமாக அமைந்தால் செயற்கையாக சங்கடமாக இருக்கும் என்று எனக்கு பட்டது, அவரும் அப்படி நினைத்தாரா என்று தெரியவில்லை. நாங்கள் சேர்ந்து குளத்துக்கு ஒரே துவர்த்து சொப்புக் கட்டியுடன் சென்றோம், என்னை லாம்பியில் பள்ளிக்கு கொண்டு விட்டார், இழவு, நிச்சயதார்த்தம், திருமணம் என எல்லா சடங்குகளுக்கும் கூடவே அழைத்து சென்றார், அல்லது பதிலாக அனுப்பினார். பன்னிரெண்டு வயதுக்கு மேல் நான் தெருப்பெண்களை நோட்டம் விடுவதை அவர் பொருட்படுத்தவே இல்லை. மழை பெய்து தணிந்த ஒரு மௌனமான மாலையில் நான் கட்டிலில் மல்லாந்து கிடந்தேன். வெறுமனே யோசித்தபடி, தூங்க முயன்றபடி. அப்போது அப்பா வந்து “இப்போது ஒரு பெண்ணை கட்டிப் பிடித்து கிடந்தால் கதகதப்பாக இதமாக இருக்கும் இல்லையாடே?” என்றார். எத்தனை யோசித்தும் அவர் அக்கறையாகவா கேலி தொனியிலா கேட்டார் என்பது நினைவு வரவில்லை. இரண்டும் சாத்தியம் தான்.
பிறகு அப்பாவிடம் இருந்த கொஞ்ச நஞ்ச அணுக்கமும் விலகி வெறுக்கத் தொடங்கினேன். தொடர்ந்து மோதினோம். ஒருமுறை என் முகத்தில் கொதிக்கிற டீயை ஊற்றினார். அண்டை வீட்டாரும் தெருவும் பார்த்திருக்க வாசலில் இருந்து என்னை பிடித்து வெளித்தள்ளி கதவை சாத்தினார். பல மாதங்கள் நாங்கள் பேசிக் கொள்ளாமல் இருந்தது உண்டு. ஆனால் திடீரென்று எல்லாம் மறந்து என்னிடம் சாதாரணமாக பேச ஆரம்பிப்பார். எங்கள் உறவு மேலும் மேலும் முரடு தட்டிப் போனதற்கு இந்த மன்னிப்புகளோ, அரவணைப்புகளோ அற்ற இணைதல்கள் காரணம் என்று நினைத்தேன். பின்னர் சிதைக்கு தீ வைத்த போது அப்படி வெறுத்து மறுப்பதிலும் அலாதியான உரிமை கொண்டாடலும், பிரீதியும் இருந்ததாய் தோன்றியது. யாரும் இல்லாத பகல் வேளைகளில் சுடுகாட்டு சாம்பல் குவியல் பக்கமாய் குத்திட்டிருந்து சிந்திக்கையில் டீ மூஞ்சியில் பட்டு எரிந்த நினைவு புல்லரிக்க வைத்தது. அவர் என்னை அறைந்ததை, நிராகரித்ததை, திட்டியதை, மிகச்சிக்கனமாய் அன்பு காட்டிய காட்சிகளை நினைத்து நினைத்து சேகரித்துக் கொண்டேன்.
அக்காவுக்கு அப்பாவுடன் முரண்பாடுகள், தகராறுகள் வருவதுண்டு, ஆனால் அவள் அப்பாவை உள்ளார ஆதர்சித்தாள், அது அவருக்கும் தெரிந்திருந்தது. அவளுடைய அப்பா முழுமையானவராக இருந்தார். தொட்டிலில் தூங்க வைத்தவராக, சினிமாவுக்கு, ஹோட்டலுக்கு அழைத்துப் போனவராக, கொஞ்சி சீராட்டியவராக, பாடம் சொல்லித் தந்தவராக, பாதுகாத்தவராக இருந்தார். ஒவ்வொரு பள்ளி வகுப்பிலும் அப்பா வாங்கித் தந்த புத்தாடைகளை, விளையாட்டுப் பொருட்களை இப்போதும் சேமித்து வைத்திருக்கிறாள். வீட்டில் என் நினைவாக மிகச் சில பொருட்களே இருந்தன. ஆல்பங்களில் அப்பாவும் அக்காவும் அவளது தோழிகளுமே மீண்டும் மீண்டும் வந்தார்கள். அப்பாவை நியாயப்படுத்த வசதியாக அவள் நினைவுகள் இருந்தன. அப்பாவின் குடியை, ஒழுங்கீனங்கள் மற்றும் வன்முறையை நோக்கி எப்படி நகர்ந்தார் என்பதை தர்க்கபூர்வமாய் காலஒழுங்குபடி அவளால் விளக்க முடிந்தது; சில சந்தர்பங்கள் மாறி இருந்திருந்தால் அவர் வாழ்க்கை எப்படி எல்லாம் இருந்திருக்கும் என்பது பற்றிய கூட்டல் கழித்தல்களை படிப்படியாக வரைந்து காட்டினாள். அப்பா யார் என்பது பற்றி அவள் தெளிவாக தீர்மானமாக இருந்தாள், விளைவாக பிணத்தை எடுக்கும் வரை ஆர்ப்பரித்து அழுது புலம்பவும் ரெண்டே நாளில் இயல்பு நிலைக்கு திரும்புவது மட்டுமல்ல சிரித்து அரட்டை அடிக்கவும் அவளால் முடிந்தது. அவளுடைய அப்பா அத்தனை நேரடியாகவும் சிக்கலில்ல்லாமலும் இருந்தது தான் இதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும். அம்மா அக்காவின் இந்த ”பலவட்டறை” நடவடிக்கையை கண்டித்தாள்; அவள் தனக்கு அம்மாவை போல நடிக்கவோ என்னைப் போல குழப்பிக்கவோ தெரியாது என்றாள். என் வரையில் இது உண்மை தான். பிணத்தருகே இரவெல்லாம் உலர்ந்த கண்களுடன் இருந்த எனக்கு ஒரு வார்த்தை கூட வெளிவர இல்லை. வெறித்தபடியே மறுநாள் மதியம் வரை இருந்தேன் – இயல்பாக என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை.
அன்றிரவு போல் வேறெப்போதும் இருள் அத்தனை அடர்த்தியாய் கிட்டத்தட்ட பாசித்தாவரம் போன்ற உயிர்ப்புடன் இருந்ததில்லை. வீடெல்லாம் உறவினர்கள் நிறைந்திருந்தார்கள், தரைகளில், கிடைத்த கட்டில்களில் நெருக்கியபடி, வராந்தா மற்றும் அடுக்களை, சேமிப்பு அறைகளில் புழுக்கம் மறந்து அசந்து தூங்கிக் கிடந்தார்கள். குழந்தைகள் தூங்க மறுத்து சிணுங்கினர், சிலர் சத்தமில்லாமல் டீ.வி பார்த்தனர், அம்மாக்களிடம் அடி வாங்கி ஓலமிட்டனர், கட்டுப்படாமல் உடம்புகள் இடையே அரைகுறை ஆடைகளில் ஓடி தடுக்கியும் களைத்தும் விழுந்தனர். முன்பந்தல் நாற்காலியில் சில கிழவர்கள் நட்சத்திரங்களை பார்த்து ஒரே விசயங்களை அதிக சுவாரஸ்யமில்லாமல் திரும்ப திரும்ப பேசிக் கொண்டனர். மத்திய வயதினர் சிலர் தொப்பையை டீ பாயில் சாய்த்துக் கொண்டு சீட்டாடிக் கொண்டிருந்தனர். அவ்வப்போது நிறுத்தி விட்டு முட்டி அல்லது முழங்கால் சொறியும் வாக்கில் இறந்தவரை அல்லது பொதுவாக இறந்த காலத்தை பற்றி தீவிர பாவத்துடன் அவதானித்துக் கொண்டனர். சொந்தக்கார இளைஞர்கள் தண்ணியடிக்கவும், புகைக்கவும் தோப்பு, குளம் பக்கமாய் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். இத்தனை நடவடிக்கைகளுக்கு பிறகும் வீட்டுக்குள் ஒரு அசாத்திய அமைதி இருந்தது. குறிப்பாக கண்ணாடி பெட்டிக்குள் இருந்து அப்பா எழுந்திருக்க எத்தனிப்பதாக, புரள்வதாக, கை கால்களை உதறுவதாக தோன்றும் போது வீட்டில் வேறு எந்த உயிர்ப்பும் இருப்பதில்லை. இந்த அசைவுகளை நிறுத்தத்தான் பிணத்தை எரிக்கிறார்களோ என்று எனக்கு சில கணங்கள் தோன்றியது. எரிசிதையை கற்பித்தபோது ஒரு குரூரமான திருப்தியை ஏற்பட்டது. பெட்டியை நான் இருமுறை நெருங்கி எட்டிப் பார்த்த போதும் மாமா என்ன வேண்டும் என்றார். குளிர்மை அளவு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதாக சொன்னேன். தலையசைத்து திரும்பிக் கொண்டார்.
எங்கள் வீடு ஒரு பழைய பிராமணர் வீட்டை புனரமைத்து உருவாக்கியது. மரபான நவீன கட்டிடக் கலையின் அழகியலற்ற கலவை. மொஸைக் தரை இருக்கும், ஆனால் தேக்கு உத்தரம் மற்றும் யானைக் கால் தூண்களுடன் பழைய மோஸ்தரும் தெரியும், உள்ளே மழை பெய்தால் மடை வழி தண்ணீர் ஒழுகி செல்லக் கூடிய அங்கணம் எனப்படும் ஒரு நடுவீட்டு தொட்டி இருந்தது. மாடியில் மூன்று அறைகள். அதற்கு மேல் மச்சு இருந்தது. ரெண்டு மாதங்களுக்கு முன்னால் அப்பா ஒருநாள் மச்சில் போய் ஒளிந்திருந்தார். அவர் மீண்டும் எங்கோ ஓடிப் போய் விட்டார் என்று ஊர் முழுக்க பரபரப்பாக கவலையுடன் தேடினோம். பிறகு மறுநாள் அவராக இறங்கி வந்து ஒன்றுமே நடக்காதது போல் டீ வாங்கி குடித்தார்.
வீட்டுக்குள் வெளிச்சம் அணைந்தும் அணையாமலும் கலவையாக தெரிந்தது; தூங்காதவர்களும், முனைபவர்களும், தவிப்பவர்களும், விழிப்பு நிலையில் இயங்குபவர்களும் சிலசமயம ஒருசேரவும், சிலபோது தனித்தனியாகவும் மூச்சு விட்டனர், இதெல்லாம் கேட்கும்படியாக நிலவியது அமைதி. அப்பாவின் ஐஸ்பெட்டி இருந்த முன்னறையில் நானும், மாமாவும், ஐயப்பன் சித்தப்பாவும் மட்டும் இருந்தோம். குழந்தைகள் கீச்சிட்டு கத்துவது கண்ணாடி டம்ளர் விழுந்து உடைவது போல் துல்லியமாக அவ்வப்போது கேட்டது. தாய்மார்கள் அவர்களை மெல்ல அதட்டி மெல்ல அறைந்து தூங்க வைக்க முயல்வதும் விசித்திரமாகவே பட்டது. நேர்த்தியான இடைவேளைகள் விட்டு அப்பாவின் ஒடுங்கின நெஞ்சுக் கூடு ஏறி இறங்கியது. காற்று இருக்கும் போது மூச்சு விடலாம் தானே என்று எனக்கு வினோதமாக தோன்றியது. அவரது உயிர்ப்பை பரிசோதிப்பதோ அல்லது பீதி கொள்வதோ அதை விட பொருத்தமற்றதாக இருந்திருக்கும். அவரை கழுத்து வரை வெள்ளைத் துணியால் கட்டியிருந்த விதம் என்னை சற்று துன்புறுத்தியது. “சேமிப்பறையில் வாழைக் குலையை உறை போட இப்படித்தான் சுற்றி சாக்கால் கட்டி வைப்போம்”. மாமா சட்டென்று திடுக்கிட்டார். என்னைப் சற்று நேரம் பார்த்து விட்டு “உள்ளே போய் படு என்றார்”. நான் அவரை இப்போதெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. பிணத்தை போல் மனிதனும் அனைத்தையும் புறக்கணிக்கும் நிலைக்கு சிலவேளை வந்து விடுகிறான்; பிறகு அதிலிருந்து நகர்ந்தும் விடுகிறான்.
மாமா பல்வேறு தொலைவு நிலைகளில் எரியும், பூச்சிகள் வட்டமிட்ட, விளக்குகளை கோபமாக பார்த்தார். ஒவ்வொரு விளக்கும் அதன் கீழ் சயனிக்கும் ஆளின் மனம் என்று நினைத்தேன். ஒரு அறையில் விளக்கை யாரோ அணைத்து அணைத்து இயக்குவதன் பிரதிபலிப்பு எதிர்சுவரில் கீழே உறங்குபவரின் உடல்களில் நடனமாடியது. இதைப் பார்த்த போதுதான் எனக்கு அப்பிடி தோன்றியது. மாமா திரும்பவும் கண்களை சுருக்கியபடி “எழுந்து தூங்கப் போ” என்றார். என் பக்கமிருந்து வரும் வெளிச்சம் அவர் கண்களை கூச வைத்திருக்க வேண்டும். அவர் கண்கள் ஐஸ் பெட்டியை நோக்கி திரும்பி இருந்தன. எனக்கு அது வேடிக்கையாக தோன்றியது. தாடியை சொறிந்த படி அரைத் தூக்கத்தில் இருந்த சித்தப்பா சட்டென்று எழுந்து சித்தி தூங்கும் அறைக்கு சென்றார். மாமா அவரை விசித்திரமாக பார்த்தார். அப்பாவின் வாயமைப்பு மாறியபடி வந்தது. சாயந்தரம் பாதியில் நின்ற கேள்வியை கடித்தது போல் தெரிந்த உதடுகள் இப்போது சிறு புன்ன்கையை பெற்றிருந்தன. நானும் கவனமாய் புன்னகைத்தேன். அப்பாவின் முகம் மெல்ல மெல்ல விகசித்து வந்ததில் அவர் இளமையை திரும்பப் பெறுவதாய் பட்டது.
கூனன் தாத்தா ஓலை வேய்ந்த கழிப்பறையில் இருந்து கட்டை ஊன்றியபடி வெளிப்பட்டார். அவரது பழுத்த வேட்டி நிலவில் மெழுகுப் பளபளப்பு பெற்றிருந்தது. அவர் சுற்றுப் பாதையில் நடந்து வரும் போது வீட்டு சுவர் மீது யாரோ முட்டி அழைப்பதான ஓசை தொடர்ச்சியான அதிர்ந்தபடி கேட்டது. தாத்தா முன்வாசலை அடைந்து படிக்கட்டில் ஏறி அமர்ந்து கொண்டு அப்பாவின் ஐஸ்பெட்டியை ஒருமுறை பார்த்தார். கலங்கலான பார்வை. தாத்தாவின் முகத்தில் உள்ள கோடுகளில் அசைவில்லை. யானைச் செவிகள் கூர்மையாக விடைத்து நின்றன. நிலவொளி மரக்கிளைகள் வழி சல்லடையாகி முற்றத்தில் விழுந்து கொண்டிருந்தது; அந்த சன்னமான பின்னொளியில் அவரது யானைச் செவிகள் ஊடுருவப்பட்டது போன்று சிவப்பை பெற்றன. தலையின் முன்மயிர்களின் நுனிகள் மட்டும் ஒளிர்ந்தன. தாத்தாவின் உடல் எங்கும் உள்ள தடிமனான சுருக்கங்கள் அவரது அசைவுகளுக்கு ஒரு தனி உயிர்ப்பை அளித்தன. சுருங்கி சுருங்கி விரியும் ஒரு தாவரத்தை போல் அந்த வேளையில் தோன்றினார். வாசலை நோக்கி திரும்பின தாத்தா தலைகுனிந்த சூரியகாந்தி செடியைப் போல் சாலையை அல்லது நெடுகி நின்ற மரங்களை அல்லது அவற்றை கடந்து தோன்றின கட்டற்ற வானப் பரப்பை பார்த்தபடி இருந்தார். அவருக்கு அசைவதில் அதிகம் நம்பிக்கையோ விருப்பமோ இருப்பதாக தெரியவில்லை. எழுந்து சென்று நின்றேன். ஐஸ்பெட்டியின் சன்னமான உறுமல் அப்பாவின் இதய ஒலி என்றூ நினைத்துக் கொண்டேன். அல்லது ரத்த ஓட்டமாகவும் இருக்கலாம். அந்த பெரிய வீட்டின் கூறு கட்டப்பட்ட வெளிகளில் அப்பெட்டியின் அருகாமையில் உள்ள காலடி இடம் மட்டுமே எனக்கு உரிமையானது என்று அர்த்தமில்லாமல் தோன்றியது. அந்த இரவின் சூழலுக்கு, பிரத்தியேக வெளிச்சத்துக்கு, ஓசைகளுக்கு இப்படி புரியாமல் யோசிப்பது தான் உகந்ததாக இருந்தது. என் காலடிகள் கூனன் தாத்தாவுக்கு கேட்கவில்லை. நிலவு கடந்து விட அங்கு இருள் மீண்டும் அடர்ந்திருந்தது. தாத்தாவின் பளிச்சென்ற கண்கள் முன்னால் வெறித்தபடியே தலைக்கு மீதாக என்னையும் பார்ப்பதான பிரமை. அவை படிகத்தாலான வெளிச்சத்தில் அலைவுறும் இரு கோலி குண்டுகள். கூனன் தாத்தா எனது குழந்தைப் பருவத்திலும் இதே வயதில் தான் இருந்தார். அல்லது இப்போதும் அதே வயதில் தான் தங்கி இருக்கிறார். அக்காலத்தில் குழந்தைகளிடத்தில் தாத்தாவை பற்றிய ஒரு காத்திரமான நம்பிக்கை, பழங்கதை அல்லது ஜோக் ஒன்று இருந்தது. அவர் கூனி வளைந்து வளைந்து பூமிக்குள் புகுந்து பாதாள லோகம் போய் விடுவார் என்பதே அது. தாத்தாவை சபிக்கும் போது விசாலாட்சி பாட்டி இதை வலியுறுத்துவார். பாட்டியின் சிதைக்கு தீ மூட்டிய போது தாத்தா தரையை பார்த்தபடி இருந்தது நினைவில் வந்தது. இதற்கு பின் தாத்தா மேலும் ஒரு சுற்று கூனி தொலைவில் பார்த்தால் சற்றே தள்ளாட்டத்துடன் உருண்டு செல்லும் பந்தின் தோற்றம் தந்தார்.
சித்தியும் சித்தப்பாவும் இருந்த அறையின் கட்டில் ஒரு கொசுவடி-தும்மலுக்கே பூங்கா ஊஞ்சலைப் போல் உலோக ஒலி எழுப்பக் கூடியது. மாமா இருந்த இடத்தில் நிரங்கிக் கொண்டே இருந்தார். பிறகு சட்டென்று எழுந்து அறைக் கதவை தட்டி “ஐயப்பா” என்றார் சத்தமாக. கட்டில் மௌனமானது. கட்டிலை கட்டுப்படுத்தியவாறு தூங்குவது அவர்களுக்கு சாத்தியம் என்று படவில்லை. ஒரு குழந்தை போல் அதட்டி வைக்கப்பட்ட கட்டில் மேல் எனக்கு பரிதாபம் வந்தது. கூனன் தாத்தாவும் மாமாவும் எதிரெதிர் திசைகளில் அமர்ந்து வீட்டை ஆகர்சித்து வலுவாக இழுத்தார்கள். அழுத்தத்தில் வீடு மேலும் மௌனமானது. ஐஸ்பெட்டியும், மின்விசிறியும், தூங்கும் தேகங்களின் நெஞ்சடிப்புகளும், தெருப்புழுதியை இழுத்துச் செல்லும் காற்றும், நிலவொளியை துரத்தியபடி நெடுநேரமாய் குலைக்கும் நாயும், போட்டியிட்டு அடிக்கடி ஊளையிடும் மற்றொரு இருப்பும் அந்த அழுத்தத்தில் தட்டையாகின. அடித்தள விரிசலின் ரேகைகள் உள்ளங்கால்கள் வழி ஓடின. கால் மாற்றி கால் மாற்றி வைத்து நான் மாடிப்படியை நெருங்கினேன்.
சிறுவயதில் எனக்கு குடல் பிடித்தமான உறுப்பாக இருந்தது. அதன் சிடுக்குகள், வளைவு நெளிவான பாதைகள் மற்றும் உள்பயணத்தின் புதிரும் தந்த கற்பனைக் கிளர்ச்சி என் ஆர்வத்தை தூண்டியபடியே இருக்கும். பிறந்த குழந்தைகளின் துருத்தின தொப்புள் பகுதியை தொட்டுப் பார்த்துக் கொள்வேன். அப்போது அக்குழந்தை என் விரல் வழி பயணிப்பதாக நினைப்பேன். ஒருமுறை மாமாவுக்கு ஹிரண்யா அறுவை சிகிச்சை நடந்தது; அவர் கட்டுடன் ஆஸ்பத்திரியின் வெள்ளை இரும்புக் கட்டிலில் கிடக்கையில் பக்கத்தில் இருந்து அவர் வயிற்றையே பார்த்துக் கொண்டிருந்தேன். மயக்கம் தெளிந்த போதெல்லாம் மாமா என்னை விரட்டினார். நான் காயமுற்ற குடலை உற்றுக் கேட்க முயல்வேன். எங்கள் வீட்டின் மிக உயிர்ப்பான பகுதியாக மாடிப் படியை நினைத்துக் கொள்வேன். மாடிப்படிதான் வீட்டின் குடல். அதன்படி அதற்கு இளம்ரோஜா பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. வீட்டின் மாடியும் அதற்கு மேலான மச்சு அறையும் எனக்கு அந்தரங்கமான கிளச்சியை அளிக்கக் கூடிய அறைகள். மச்சு அறையில் பெருச்சாளிகளும் வவ்வால்களும், என் பிறப்புக்கு முன்னரே பிறவிப்பயனை இழந்த சாயமும் தோற்றமும் தொலைத்து பரிணமித்த பொருட்கள் பலவும் சேர்ந்து வாழ்ந்தன. சிறுவனாக அங்கு சென்று பொழுது போக்குவேன். கோடை விடுமுறையில் சுத்தம் செய்து என் புத்தகங்களை அங்கு அடுக்கி பகல் வேளைகளில் வாசிப்பேன். அங்கு நேராக அமர முடியாது; அமர்ந்தால் சட்டென்று திரும்ப முடியாது; முதுகு வளைத்து முட்டியிட்டு தொழுகை செய்வது போல் இருக்க வேண்டும். காற்று வர கதவைத் திறந்தால் மட்டும் போதாது என்று சில ஓடுகளை கழற்றி வைத்திருந்தேன். அங்கிருந்து கைநீட்டி வானத்தில் துழாவுவேன்; ஒவ்வொரு பருவமும் வீட்டிலிருந்து மேலாக சில இஞ்சுகள் வளர்ந்திருப்பேன். கூரை அறையில் இருந்து தடபுடல் சத்தம் கேட்டால் அம்மா என்னையும் பெருச்சாளியையும் குழப்பிக் கொள்வாள். நான் எதிரில் எங்காவது இருப்பதை கவனிக்காமல் “சவம் இந்த பயல் கிடந்து என்ன பண்ணுறானோ” என்று எரிச்சலுடன் சலித்துக் கொள்வாள். இப்படி பெருச்சாளிகளுக்கும் சிலவேளை அர்ச்சனை கிடைக்கும். இரவில் புழுக்கையிட்டு பழவாசனை கிளப்பும் ஒற்றை வவ்வால் ஒன்று பகலில் ஒருமுறை மச்சு அறையின் திறந்து ஓட்டு துவாரம் வழி இறங்கி தடதடத்தது; நான் வாசித்துக் கொண்டிருந்தேன்; முதலில் பதறி பின்னர் அது நிதானமானது. சிலசமயம் பெருச்சாளிகள் இருட்டு வாலை மூலைக்கு மூலை இழுத்தபடி ஓடும். பின்னர் பல வருடங்கள் கழித்து அப்பா அங்கு சாரத்தை விரித்துக் கொண்டு ஒருநாள் முழுக்க ரகசியமாக பதுங்கி தூங்கினார்; அல்லது ஏற்கனவே சொன்னது போல் காணாமல் போனார். அவர் படுத்த தடம் இன்னும் தூசுப் படிவத்தில் பதிந்துள்ளது; மச்சு அறைகளுக்கே உள்ள வினோத தன்மை இது.
அன்றைய இரவில் எனக்கு மச்சு அறைக்கு செல்லும் விருப்பமும், ஆழ்மன கட்டாயமும் ஏற்பட்டது. நினைவுகளால் உந்தப்பட்டு கூட அங்கு செல்ல தலைப்பட்டிருக்கலாம். இருளில் மாடிப்படி பக்க கிரில்லின் இளஞ்சிவப்பு இன்னும் தனித்து தெரிந்தது. மாடிக்கு போகும் படிகள் ஈரமாக இருந்தன. தண்ணீர் நுரையிட்டு ஓடும் சத்தம் மேலே செல்ல செல்ல அதிக ஓசையுடன் துல்லியமாக கேட்டது.. கால் வைத்ததும் படிகள் என்னை சுவீகரித்துக் கொண்டன. மேலே ஏற ஏற வீடு சில சத்தங்களை தணிக்கை செய்து விடுகிறது. உறங்குபவர்கள் தமக்குள் பேசிக் கொள்வது, முனகுவது, வார்த்தைகளை குமிழிகளாக மூக்கு வழி விடுவது தனித்து ஆழ்ந்து கேட்டது. கூனன் தாத்தா ஊன்று கட்டையால் தரையை தட்டுவது மேலேறி வந்தது. கீழே முன்னறையில் தூங்கிக் கொண்டிருந்தன கால்கள். கசிந்து வந்த வெளிச்சம் அவற்றை தவிர்த்தும் மீதாக ஊர்ந்தேறியும் விளையாடியது. அக்கால்கள் அசைவது அரவணைப்பில் தூங்கும் குழந்தையின் மொட்டைத் தலையை நினைவுபடுத்தியது. ஓய்வு கொள்ளும் அக்கால்கள் எந்நேரமும் வீரிட்டழலாம் என்று ஒரு சங்கடத்துடன் எனக்கு தோன்றியது. மெல்ல மெல்ல நடந்தேன். ரெட்டைத் தடிமனுள்ள மாடி வெளிக்கதவு. அதன் கொண்டியை தளர்த்தி கதவை இழுத்துத் திறந்தேன். காத்திருப்பு வரிசை போல் தயக்கமாக மெல்ல அது திறந்தது.
கதவைத் திறந்ததும் நிலவு பளிச்சென்று அறைந்தது; அல்லது நிலவு மொட்டைமாடியில் பட்டு சிதறி பல நூறு கிரணங்களாக திரும்பி என் மீது பாய்ந்ததாக இருக்கலாம். இப்படி ஒரு ஒளி வெள்ளத்தை பார்த்ததில்லை என்பதால் தரையில் கால் வைக்காமலே கிட்டத்தட்ட நிலைப்படியில் எம்பி நின்றேன். நான் அப்போது பூமியில் விளிம்பில் நின்று வானில் இறங்கி தயங்கி நிற்கும் மனிதன் என்று எண்ணிய போது தமாஷாக இருந்தது. உதட்டின் கீழ் பால்யத்தின் மென்மயிர்களுடன் மனம் ஒரு புறம் சிரித்தும் வேடிக்கை பார்த்தபடியும் தான் உள்ளது. அது விழித்துக் கொள்ளும் போது எல்லாமே வேடிக்கையாகி விடுகிறது. நான் அப்போது மாடியின் பரப்பை கவனிக்கவில்லை, அபரித ஒளிப் பாய்ச்சலின் ஆட்கொள்ளலில் மனம் வானிலே நிலைத்து உலவியது. போகப் போக கண்களால் வாங்கி தணிக்கை செய்ய முடியாத படி தகித்தது அதன் ஜுவலிப்பு. மனிதனின் கண்கள் பழகி மட்டுப்படும் முன் ஆதியில் ஒளி இப்படித்தான் அதன் முழுமையில், எண்ணற்ற சிதறிய அலகுகளில் இருந்திருக்க வேண்டும். ஒளி காற்றைப் போல வீசியது, சுற்றிலும் நடுங்கும் மரங்களை, கட்டிடங்களை குறுக்குவெட்டாய் அரிந்து தள்ளியது, புயலாய் ஓலமிட்டது, நுண் துணுக்குகளாய் என் மீது கொட்டியது. மெல்ல மெல்ல ஒளி பகல் சூரியனைப் போல் சாய்ந்தது, மங்கி பூமி மேல் கவிந்தது. நான் ஒளியை உள்வாங்கியிருக்க வேண்டும் என்று அசட்டுத்தனமாய் எண்ணினேன். ஒளிக்கு அஸ்தமனம் உண்டு என்று நம்ப நிச்சயமாய் தோன்றவில்லை. அதனால் வேறெப்படி என்னால் இதை நியாயமாக விளக்க முடியும்.
அப்போது நான் மொட்டை மாடியில் அலைபரப்பி தொடர்ந்து சிலிர்த்த நீர்ப்பரப்பை கவனித்தேன். இறங்கி நடந்தேன். இது சாத்தியமே இல்லை. இத்தனை நீர் இங்கு வந்திருக்க, தேங்கி அலையடிக்க, ஒரு ஏரியைப் போல் ஆழத் தோற்றம் அளிக்க எப்படி முடியும்? நடக்க நடக்க தரை சிலசமயம் தட்டுப்படுவதும் பின் மறைவதுமாக இருந்தது. முழங்காலில் இருந்து முட்டி வரை மாறி மாறி மூழ்கி வந்தேன். நான் மையம் நோக்கி நடந்தேன். இவ்வளவு வெள்ளத்தின் தோற்றுவாயை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே நோக்கம். மையம் நெருங்கியதும் நீர்ப்பரப்பு தெளிவாக அலையற்று ஆழம் குறைந்து தெரிந்தது. பெரிய தொட்டியின் பின்னால் மறைந்து கொண்டேன். அங்கிருந்து பார்க்க பெரிய பெரிய அலைகள் வட்டமடித்து புதிய சிற்றலைகளை இணைத்துக் கொண்டு தொட்டி நோக்கி உள்-அணைவது தெரிந்தது. அவை விரியும் சுருள் வாட்களாய் கண்களை தாக்கின. கண்களை தொடர்ந்து மூடி சுதாரித்து பார்க்க வேண்டி இருந்தது. தொலைவில் தோற்றங்கள் மயங்கி வேறாய் அல்லது விரூபமாய் தெரிந்தன. சுவர்கள் வெளியே மடிந்து மடிந்து நீருக்கு பின்வாங்கின, குறுகி நீண்டன. சுவர்களுக்கு வெகுஅருகாமையில் கோடுகளால் ஆன அவ்வுருவம் மேல்ல அசைந்தது, வாலால் துழாவியபடி மேல் எழும்பியது.புலி மூடுபனியில் என் மூச்சு கோடிழுத்தது. புலியைப் பார்த்ததும் அச்சத்தை விட அதன் மாபெரும் பௌதிக இருப்பும், கற்பனைக்கெட்டாத வலிமையும் பெரும் வியப்பையே தந்தன. புலியின் நிதானமும், காலத்தை இறுக்கமாய் கைப்பற்றி வைத்திருப்பதான அதன் நம்பிக்கையும் எண்ணங்களை ஆக்கிரமித்தன. அதன் எதிரே ஒரு பிரதிபிம்பம் போல் மற்றொன்று. அந்த ஜோடிப் புலிகள் தங்கள் அசைவுகளில் ஒன்றையொன்று போலச் செய்கின்றன. அவற்றுக்கு வேறெந்த நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. முன்னும் பின்னும் வெவ்வேறு திசைகளிலுமாய் அவை திரும்பியும் காலடிகள் வைத்தும் எதையோ உறுதி செய்கின்றன. அந்த மொட்டை மாடிக்குள் அவை ஏன் வந்தன, எப்படி நுழைந்தன மற்றும் வெளியேறப் போகின்றன போன்ற கேள்விகளுக்கு பொருளில்லை. வெகுநேரம் ஒன்றை ஒன்று பார்த்தபடி நின்றன. வால்கள் மட்டும் விடுபட்டு நிழல்கள் போல் தனி மொழி ஒன்றில் உரையாடின. அவை பக்கம் பக்கமாய் நின்ற போது எனக்கு தொண்டைக்குள் எதுவோ வழுவியது, நீருக்குள் வேர்த்து உடல் உதறியது.
என்னை முழுதும் மறைக்க தொடர்ந்து முயன்றேன், என் தேகம் தொட்டியின் பின் அடங்காமல் ஒவ்வொரு அங்கமாய் வெளிநீட்டியது. கைகளை மறைத்தால் கால்கள் வெளியே அளைந்தன. முக்குளித்தால் கைகள் தொட்டிக்கு மேலே தாறுமாறாய் துடித்தன. ஒளிய முயன்ற அக்கணம் முதல் புலிகள் என்னை விடாமல் பார்வையால் தொடர்ந்தன. என் உடல் வழி ஓராயிரம் விரல்கள் நீண்டு புலிகளின் கோடுகளை குறுகுறுப்பாய் தீண்டின. புலிகள் தங்கள் உடலால் என்னை விடாமல் பார்த்தன. ஒரு வேட்டையாடியின் பிரம்மாண்ட தேகம் கொல்வதற்கு மட்டும் அல்ல என்று நினைத்துக் கொண்டேன். பிறகு சிறுக சிறுக மாடிப் பரப்பு சிறுகியது, நீர் பொங்கி சீறி அடித்தது, நீந்தி வாசல் நோக்கி பாய்ந்த என்னை வளைத்து வளைத்து அறைந்தது. புலிகள் அனாயசமாக நகர்ந்து இரு திசைகளிலாய் என்னை வளைத்துக் கொண்டன. “அப்பா கீழே தூங்கிக் கொண்டிருக்கிறார், அவரை எப்படி எழுப்புவது, கூவலாமா அல்லது கதறி அழலாமா, கேட்குமா, கேட்டால் வருவார்களா?” அப்பாவால் அப்போது என்னை காப்பாற்ற முடியும் என்று உறுதியாக பட்டது, அப்பா பயந்து போய் என்னிடம் அங்கு வராமல் கூட இருக்கலாம், ஆனால் ஒரே நம்பிக்கையாக அவர் இருந்தார். மாடிச் சுவர்களில் அலைகள் அறைந்ததில் அவை பனிப் பாளங்களாய் ஊடுருவி மினுங்கின. தடித்த கருங்கோடுகளில் சுவர்களில் நுழைந்து நெளிந்து கரைந்தன. மாடி வீட்டுக்கு மேலாக ஓட்டுக் கூரையில் புலி அமர்ந்திருப்பதாக தெரிய நான் அப்பாவை அழைத்து கதறினேன். தண்ணீரில் நீந்துவதை விட ஓடுவது எளிதாக இருந்தது, நீர்ப்பரப்பு விலகி வழி விட்டது. பின்னால் தண்ணீரை அடித்து துழாவியவாறு கை அறைதல்களின் அதிர்வும், அச்சமூட்டும் உறுமலும் தொடர்ந்து என்னை தாண்டி எங்கும் நிறைந்தன. ஒரு கணம் தண்ணீர்ப் பரப்பு முழுவதும் ஒரு சயனித்த புலியின் நெளியும் உடலாக தெரிந்தது. அப்பாவும் கூட அம்மாவும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். யாரும் என் விளிகளை, வயிற்றில் இருந்து கிளம்பிய பெருங்குரலை கேட்டிருக்க வாய்ப்பில்லை. நான் சுவர்களில் பற்றி ஏறி திறந்த ஓடுகள் வழி மச்சு அறைக்குள் நுழைய முயன்றேன். ஒரு கை தூக்கி உள்ளே இழுத்து விட்டது அல்லது நானாகவே ஏறிக் கொண்டேன்.
நான் நிமிர்ந்து உட்கார்ந்த போது அன்று மிகச் சீக்கிரமாகவே காலை வெயில் வெறித்திருந்தது தெரிந்தது. கூனன் தாத்தா குளித்த வெள்ளை வேட்டி துண்டுடன் இடம் மாறாமல் அமர்ந்து மூக்குப் பொடி போட்டு துடைத்து துண்டை மேலும் பல இடங்களில் கறையாக்கிக் கொண்டிருந்தார்; அவர் வெயிலில் சுடப்பட்டு அதையே பிரதிபலித்துக் கொண்டிருந்தார். உலோகம் கூட ஆவியாகி விடும் வெப்பம் அந்த விடிகாலை வெயிலில் வெளியேறியது. தாத்தா மேல் நோக்கி ஆனால் லாவகமாக வெற்றிலை சாறை புளிச்சென்று துப்பினார், வெயிலின் குருதி போல் அது மடிந்து விழுந்தது. நான் உட்கார்ந்து களைப்பில் தள்ளாடிக் கொண்டிருந்தேன். ”அப்பாவிடம் என்ன ஒரு தேஜஸ்”. அத்தை என் அருகில் வந்தாள். தன் வாதக் காலை பாதியும் மற்றக் காலை முழுக்கவும் மடித்து சப்பணம் கோட்டி அமர்ந்தாள். என்னிடம் எதிர்பாராமல் சொன்னாள், “அப்பாவை போலவே சிரிக்க வருகிறது உனக்கு”. தாமரையில் வெளிவந்த சிறுகதை