ராகுல் பட்டாச்சாரியாவின் Pundits from Pakistan ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறந்த கிரிக்கெட் புத்தகங்களில் ஒன்று. காரணம்: கிரிக்கெட் தான் ஆதாரம் என்றாலும் நூல் கிரிக்கெட்டை தாண்டி கலாச்சாரம், வரலாறு, மீடியா தந்திரங்கள் எனும் பல்வேறு விஷயங்களை கிரிக்கெட் லென்ஸ் வழி சொல்லுகிறது. என்னவொரு நடை. நடை என்றால் ஒரு மனிதனின் நிலைப்பாடு, மனப்போக்கு மற்றும் ஆளுமையின் வெளிப்பாடு தானே. இதனால் நடை ஒருவித பார்வையும் ஆகிறது. வாழ்க்கையிலும் நம்மை ஸ்டைலான ஆட்கள் எளிதில் கவர்வதற்கு இதுவே காரணம். ஸ்டைல் உள்ளவர்களிடம் வாழ்க்கை பீறிடுகிறது. தற்போது ஆங்கிலத்தில் எழுதி வரும் இந்தியர்களில் ராகுல் பட்டாச்சாரியாவை அருந்ததிராயுடன் ஒப்பிடலாம். “சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த கிரிக்கெட் புத்தகம்” என்று இந்நூலைப் பற்றி பீட்டர் ரீபக் (ஆஸ்திரேலிய கிரிக்கெட் விமர்சகர்) சொல்வது மிகையல்ல. ராகுலின் நகைச்சுவை நுட்பமான சாமர்த்தியமான குறுக்கீடற்ற விவரணைகளால் ஏற்படுவது. நடை மற்றும் நகைச்சுவைக்காகவே இந்நூலை படிக்கலாம். கூடவே இது ஒரு முக்கிய வரலாற்று ஆவணமும்.
2002-04இல் இந்தியா-பாக் நட்பு புதுப்பிக்கப்பட்டு மீடியா துணையுடன் மிகையாக கொண்டாடப்பட்ட தருணத்தில் இந்திய அணி கங்குலி தலைமையில் பாகிஸ்தானில் ஒருநாள் மற்றும் டெஸ்டு ஆட்டங்கள் ஆட செல்கிறது. அப்போது Guardian இதழுக்காக இத்தொடரை பதிவு செய்ய அங்கு பயணித்த ஒரு வங்காளி பத்திரிகையாளர் தான் ராகுல் பட்டாச்சாரியா. இத்தொடரின் போது கிரிக்கெட் பார்ப்பதற்காக பதினோராயிரம் இந்தியர்கள் எல்லை கடந்து பாகிஸ்தான் செல்கிறார்கள். கிரிக்கெட் பார்ப்பது என்பது ஒரு வெறும் சாக்கு. மக்களுக்கு எல்லைக்கு அப்பால் சென்று தம் வரலாற்று சகோதர-எதிரிகளை காண, கவனிக்க, கலாச்சார மாற்று அல்லது ஒருமையில் ஊற ஒரு வாய்ப்பு. பாகிஸ்தான் அரசு முஷாரபின் கீழ் தன்னை ஒரு நவீனப்பட்ட இஸ்லாமிய அரசாக முன்னெடுக்க பிரயத்தனிக்கும் காலம். எதிரி பிம்பத்தை சற்று நேரம் உறையிலிட்டு கைகுலுக்க முனையும் சந்தர்ப்பம். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளூர் தீவிரவாத பொறியில் மாட்டி பெரும் நட்டத்தில் மூழ்குகிறது. தொடர்குண்டு வெடிப்பு பீதியால் சொந்த மண்ணில் கிரிக்கெட் ஆடாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் கண்கள் மங்கி தலை பரட்டையாகி வயிறு ஊதி சவலையான நிலையில் இருக்கிறது. இந்திய பயணம் பாக் கிரிக்கெட்டுக்கு ஒரு புத்தியிர்ப்பு நிகழ்வு மில்லியன் கணக்கில் கிரிக்கெட் விளம்பர மற்றும் டீ.வி நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. ஒளிபரப்பு உரிமையை வாங்கின Ten Sportsஇடம் இருந்து கடன் வாங்கி இந்தியாவில் ஆட்டத்தை காட்டும் தூர்தர்ஷன் விதிமுறைகளை இந்தியத்தனமாய் மீறி உள்ளூர் விளம்பர நிறுவனங்களுக்கு விற்கிறது. பாகிஸ்தானில் ஹோட்டல்கள் இந்த ஒரு மாதத்தில் அறைகளை ஒருநாளைக்கு ரூபாய் இருபதினாயிரத்துக்கு மேல் வாடகைக்கு விட்டு அதுவரையிலான 9/11 பொருளாதார மந்தநிலை நட்டத்தை ஈடுகட்ட முயல்கின்றன. ஒருநாள் ஆட்டங்கள் முடியும் ஒவ்வொரு மாலையும் வாஜ்பாய் கங்குலியை போனில் அழைத்து சௌகரியம் விசாரிக்கிறார். மக்களும் எல்லைதாண்டிய கலாச்சார பங்கிடலும், வணிகமும், மீடியா சித்தரிப்புகளும் வாமன வளர்ச்சி காண்கின்றன. ஒரு போலியான மிகைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பவாத வளர்ச்சியாகவும் இந்த வரலாற்று வீக்கம் உள்ளது. பாகிஸ்தானியர் இந்திய பயணிகளிடம் மிகுந்த வாஞ்சையுடன் நடந்து கொள்கின்றனர். இந்திய வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கி கடைக்காரர்கள் புன்னகையுடன் மறுக்கிறார்கள். இந்தியன் என்ற துருப்புச்சீட்டு இருந்தால் பாகிஸ்தானில் மக்கள், அரசுத்துறை, போலீஸ், கலைஞர்கள் என்ற எந்த மட்டத்திலும் கவனமும் உதவிகளும் தாராளமயமாகின்றன. இந்தியா நம் நண்பன் என்ற அரசின் மிகை பரப்புவாதம் எளிதில் மக்களிடம் தொற்றிக் கொள்கிறது. ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றி பெற பெரும்பான்மையான பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்யும் சர்ரியலான காட்சி ஒன்றை ராகுல் பதிவு செய்கிறார். “நல்லவேளை இந்தியா ஜெயித்தது, அப்பாடா” என்பது பாகிஸ்தானியரின் அடிப்படையான மனநிலையாக அப்போது உள்ளது. டெஸ்டு தொடரை பாகிஸ்தான் இந்தியாவிடம் இழக்கும் போதும் “கோழைத்தனமாக” இழந்தது தான் மக்களையும் மீடியாவையும் கோபமுற செய்கிறது. மக்கள் பொதுவாக இந்த தொடர்களின் முடிவுகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதாய் நம்புகிறார்கள். தெருவிலும் கடைத்திண்ணைகளிலும் எந்த குழுமத்திலும் பரபரப்பாகவும் சரணடைதல் மனநிலையுடனும் இதை பேசிக் கொள்கிறார்கள். பொருளாதார மற்றும் சர்வதேச சூழல் காரணமாய் ஏற்பட்ட அரசின் இந்திய ஆதரவு நிலைப்பாடு பொதுமக்களாலும் எப்படி ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் என்பது தான் இந்த புத்தகம் முன்வைக்கும் முக்கியமான சுவாரஸ்யங்களுள் ஒன்று.
பாகிஸ்தானியர் இந்தியா தங்கள் எதிரி என்பதை உள்ளூர உணர்ந்து தான் இருக்கிறார்கள். ஜின்னா பிரிட்டிஷ் அரசிடம் தனிநாடு கோரிய நாள் மார்ச் 23. இந்நாள் பாகிஸ்தான் தினமாக கொண்டாடப்படுகிறது. அப்போது லாஹூர் தாண்டி ஒரு கால்வாய்க்கு ராகுல் தன் நண்பன் சாதுடன் செல்கிறார். அப்பால் விரிந்து கொழிக்கும் நிலவெளி. “அது என்ன?” என்ற ராகுல் கேட்கிறார். அதற்கு சாத் ஒரு உணர்ச்சிகர மனநிலையில் “அது பாகிஸ்தானின் நிலம்; இந்தியாவுடையது அல்ல” என்கிறார். ராகுல் பின்னர் “நான் அங்கு என்ன விளைகிறது என்று கேட்க விரும்பினேன்” என்று திருத்திக் கொள்கிறார். இருவரும் சங்கடத்தால் நெளிகிறார்கள். அவர்களின் நட்பு பின்னர் பாகப்பிரிவினை முரண்பாடு கொண்ட சகோதரர்களிடையே போல் கொணலாகிறது; மாற்றிக் கொள்ள முடியாதபடி செயற்கையான அன்பு பரிவர்த்தனை கொண்டதாகிறது. இந்த சிறுசம்பவம் இந்திய பாகிஸ்தான் பொதுமக்களின் ஆதார பரிவர்த்தனையின் உருவகம் எனலாம். அவர்கள் அரசியல் வரலாற்று நாயகர்களின் கைப்பாவைகள். விரல் அசைவுக்கு பொம்மை உற்சாகமாய் கைதூக்க வேண்டும் அல்லது தோளை தொங்கப் போட வேண்டும். பின்னணிக் குரலுக்கு இருக்கவே இருக்கிறது மீடியா. ஆனாலும் மக்கள் இந்த அரசியல் வாய்ப்பை பயன்படுத்தி முடிந்த வரை கொண்டாடுகிறார்கள். ஏதோ இந்த அபத்தத்தின் உண்மையை புரிந்து கொண்டவர்கள் போல் அவர்கள் எதிரியான நண்பனையும் நண்பனான விரோதியையும் மீண்டும் விரோதியாகப் போகும் நண்பனையும் தங்கள் அணைக்கும் கைகளுக்குள் சில தருணங்கள் பத்திரப்படுத்தி தங்கள் வெம்மையை காட்ட விரும்புகிறார்கள். மனிதன் எப்படியும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறான். வரலாற்றின் அத்தனை மூர்க்க மடத்தன அழிவுகளுக்கு மத்தியிலும் மனிதனை இந்த விழைவு தான் பைத்தியமாகாமல் இருக்க காப்பாற்றி இருக்கிறது போலும். எப்போதும் இந்த இரண்டு உலகமும் இருக்கிறது. அரசும் பிற நிறுவனங்களும் நம்மை வாழ நிர்பந்திக்கும் உலகம். நாமாக உள்விழைககளின் தூண்டலில் வாழும் உலகம். இந்திய பாக் நட்பு பரிபாலனை போன்ற ஒரு வரலாற்று சந்தர்பத்தில் இந்த உண்மை மேலெழுகிறது. வெவ்வேறு நுண்தகவல்கள் மூலம் ராகுல் பட்டாச்சாரியா இதை பல்வேறு நிலையிலான ஒவ்வொரு இந்திய-பாக் சந்திப்பின் போது சித்தரிக்கிறார். ஒரு எளிய நிலையில் இது நிகழ்வதை இச்சம்பவம் காட்டுகிறது. மூன்றாவது டெஸ்டில் ராகுல் திராவிட் 270 அடிக்கிறார். பாகிஸ்தான் தோற்கிறது. அன்று மாலை தெருவில் சில இளைஞர்கள் இன்சுலேஷன் டேப் சுற்றப்பட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆடுகிறார்கள். ராகுல் பட்டாச்சாரியா அவர்களுடன் சேர்ந்து ஆட விரும்புகிறார். அவ்விளைஞர்களில் ஒருவன் வேடிக்கையாக மறுக்கிறான் “முடியாது உன்னை சேர்த்துக் கொள்ள முடியாது. எங்களுக்கு எதிராக 270 அடித்தது நீ தானே”. ஆனாலும் ராகுல் அவர்களுடன் சேர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் விளையாடுகிறார்.
ஒரு பயண நூலாகவும் Pundits from Pakistan மிக வசீகரமான காட்சிகளை கொண்டது. மிக முக்கியமாக கலாச்சார அரசியல் ஆழங்கள் வெளிப்பட்டாலும் பட்டாச்சாரியா இதை ஒரு கிரிக்கெட் ஆவணமாக முன்னிறுத்தவே பிரயத்தனப்படுகிறார். கிரிக்கெட் வழி அவர் மற்றொரு உலகத்தை காட்டுகிறார். வெளித்தோல். உரிக்க உரிக்க கிரிக்கெட் வந்து கொண்டே இருக்கும்படி அவர் தன் உரைநடையில் பல்வேறு தகவல்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார். இப்புத்தகம் ஒரு பயணி நேரிடும் அதீத அனுபங்களின் களைப்பு மற்றும் வெறுமையுடன் முடிகிறது. ஒரு புது நாடும், அதன் மக்களும், அவர்கள் எதிரிடும் வரலாற்று தருணமும் ஏற்படுத்தும் மனஎழுச்சி அந்த ஒருமாத கிரிக்கெட் பயணத்தின் கொடை இத்தனையும் அடைய, மக்களின் ஆதார அன்பின் மேலிடலை உணர, அவர்களின் பாதுகாப்பின்மையை உள்வாங்க, மனிதர்களின் அசட்டுத்தனங்கள் எல்லைக்கு எப்பக்கமும் ஒன்றே என்பதை உணர, இத்தனைக்கும் மேலாக பாகிஸ்தான் ஆன்மாவின் பரிமாணங்களை புரிய முயல ராகுல் பட்டாச்சாரியாவுக்கு கிரிக்கெட் ஒரு தோரணை மட்டுமே. ஆனால் புத்தகத்தில் அது தோரணையற்ற தோரணை என்பதே முக்கியம். ஒன்றை உணர்த்த மற்றொன்றை செய்வதை உணராமலே நமக்கு வெளிப்படையாக உணர்த்தாமலே செய்வது உச்சபட்ச எழுத்துக்கலை. அப்பட்டமான சில பத்திரிகையாள ஆர்ப்பாட்டங்கள், மேட்ரொபொலிடன் மனநிலை ஆகியவை உதிர்த்தால் ஒரு வறட்டுப்புன்னகையை உதட்டுடன் ஒட்டி விட்டால் ராகுல் பட்டாச்சாரியா நம்மூர் அசோகமித்திரன் தான் இந்நூலுடன் தமிழில் ஒப்பிடக்கூடிய (சற்றே அடங்கின தொனியிலான) புத்தகம் “பதினெட்டாவது அட்சக்கோடு”. ஆக அசோகமித்திரன் வாசகர்களுக்கு “Pundits from Pakistan” கட்டாயம் பிடிக்கும் எனலாம்.
புத்தக பதிப்பு Picador
விலை 200 (flipkart.comஇல் கிடைக்கிறது)
No comments :
Post a Comment