1966இல் சத்யஜித் ரேயின் சுயமான கதையில் உருவான ரெண்டாவது படமான நாயக் அவரது ஒரே ரயில்பயணப் படைப்பும் கூட. படம் ஒரு ரயில் பயணத்தில் நடக்கிறது. அரிந்தம் எனும் ஒரு பிரபல சினிமா நாயகன் தில்லிக்கு விருது வாங்க விமான பயணச் சீட்டு கிடைக்காமல் ரயிலில் போகிறான். அவனது வெளியாகப் போகும் படம் தோல்வியடையப் போவது கிட்டத்தட்ட உறுதி. கடும் மன நெருக்கடியில் இருக்கும் அரிந்தம் அதிதி எனும் பத்திரிகையாளப் பெண் ஒருவளை ரயிலில் சந்தித்து உரையாடி தன்னை சிறுக சிறுக அறிந்து தெளிவடைவதே கதையின் மைய ஓட்டம். ரேவின் நாயகன் அக்காலத்திய வங்காளத்தின் ஒரு நிஜமான சினிமா நாயகன் உத்தம் குமார். அதிதியாக ஷர்மிளா டாகூர்.
சுஜாதாவின் “கனவுத்தொழிற்சாலை” ஒரு நடிகனின் நட்சத்திர வாழ்வின் அபத்தங்கள் மற்றும் மதிப்பீடுகள் சார்ந்த குழப்பங்களை பேசும் நாவல். சத்யஜித்ரே “நாயக்கில்” இதே தளத்தில் மேலும் சில கேள்விகளை எழுப்புகிறார். அரிந்தம் சுஜாதாவின் நாயகனை விட தீவிரமான கேள்விகளை தனக்குத் தானே எழுப்புகிறான். அல்லது அப்படி ஒரு சுயபரிசீலனையை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிதியுடனான உரையாடலின் போது அவனுக்கு அமைகிறது. அக்கேள்விகள் ஒரு நட்சத்திரமாக இருப்பதன் பிரச்சனைகள் என்ன என்று கேட்பவை. இருமார்க்கங்களில். ஒன்று தனிப்பட்ட நட்சத்திரத்தின் பிரச்சனைகள். அடுத்து மக்களுக்கானவை. அதாவது சமூக பொறுப்பு சார்ந்த அறக் கேள்விகள். நட்சத்திரத்தின் ஆதாரப் பிரச்சனை இரண்டும் ஊடுபாவி கலக்கின்றன.என்பதே. மிக மெல்லிய ஜவ்வு ஒன்று அவனை இரண்டில் இருந்தும் பிரிக்கிறது. சுஜாதா மற்றும் ரே பேசிய காலகட்டத்தில் இருந்து இன்று நட்சத்திரம் பலவாறு உருமாறி விட்டான். இன்று நட்சத்திரம் தொழில்ரீதியாய் தீர்மானிக்கப்படுவதில்லை. இன்று அனைவரும் தம்மை நடச்த்திரம் என்று அறிவிக்க தவிக்கின்றனர். கிட்டத்தட்ட அதை நம்புகின்றனர். அதே நேரம் ரசிகனாய் இருப்பதிலும் அந்தஸ்தை உருவாக்குகின்றனர். இந்த ’அனைவரும்-நட்சத்திரம்-நிலையை’ உருவாக்கியது மீடியா என்று நமக்குத் தெரியும். மீடியாவின் புனைவுகளுக்கு தோதான பாத்திரங்கள் நட்சத்திரம் ஆக வேண்டியதாகிறது. இது கொலைகாரர்கள், தற்கொலையாளர்கள், T20யில் ஒரே ஒரு சிக்ஸர் அடித்தவர்கள், நாவலின் முதல் அத்தியாயம் எழுதிக் கொண்டிருப்பவர்களில் இருந்து அக்டொபஸ் வரை எல்லாரும் தான். நமது இன்றைய உள்ளார்ந்த நெருக்கடியே எந்த நட்சத்திரத்தை எங்கு எப்போது சந்திக்க போகிறோம், அப்போது அவர்களிடம் என்ன முதலில் பேசுவது என்பதில் இருந்து நட்சத்திரங்களே இல்லாத ஒரு பரப்பில் மாட்டிக் கொண்டால் நேர்கிற அதிர்ச்சி கலந்த வெறுமைக்கு எப்படி பழகிக் கொள்வது என்பது வரையிலுமே. இந்த சூழலில் தனிநபர் × சமூக நட்சத்திர பிரச்சனைகள் என்ற இருமை அர்த்தம் இழந்து வருவதால், நட்சத்திர பள்ளத்தில் நாமனைவருக்கும்ம் ஏதாவது ஒரு கால் மாட்டி விட்டிருப்பதால் மேற்சொன்ன மற்றும் மேலும் பல நட்சத்திர அலசல் படங்களுக்கு ஒரு சாஸ்வதம் கிடைத்திருக்கிறது.
ரேயின் அவதானிப்புகளை சுருக்கமாக பார்த்து விடலாம். அரிந்தமிடம் அதிதி கேட்கிறாள். “உங்கள் பிரபலம் ஒரு பிரச்சனை என்று நினைக்கவில்லையா? திடீரென்று உருவான இந்த எழுச்சிக்கு பின்னால் ஒரு பெரும் வெறுமை இருப்பதை நீங்கள் உணரவில்லையா”. படத்தின் வளர்ச்சியின் ஊடாக அரிந்தம் இக்கேள்வியை சந்திக்கும் மனத்திராணியை மெல்ல மெல்ல பெறுகிறான். பாதி படத்துக்கு மேல் நட்சத்திர புகழ் மற்றும் செல்வத்தை பற்றி பலவாறாக யோசிக்கிறான். முதலில் இவ்வாழ்க்கை அவனது தனிவாழ்க்கையில் ஏற்படுத்தும் இடையூறுகள்.
அவன் செய்யும் ஒவ்வொன்றுக்கும் ஜனங்களுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. தன் பெண் துணையை அவமதித்தவனை ஒரு குத்து விட்டால் அது பத்திரிகை பரபரப்புக்கு தீனி ஆகிறது. சமூகம் மொத்தத்துக்குமான அற ஒழுக்க நெறிகளுக்கு அவன் பொறுப்பாக வேண்டியுள்ளது. இதனால் அவன் குற்றவுணர்வு கொள்கிறான். அவனாகவே யாரிடமாவது சமாதானம் சொல்ல தவிக்கிறான்.
அடுத்து, எழுச்சியைப் போன்றே அவனது வீழ்ச்சியும் திடீரென்று நேரும் என்று அஞ்சுகிறான். மன்னன் தெருவுக்கு வந்ததும் படையும் பரிவாரங்களும் மாயமாகி விடுவார்கள். வேறு வழியில்லை. அவனது தனிமையும், பாதுகாப்பின்மையும் வயிறுமுட்ட உண்டபின் வரும் அவஸ்தை போல் சில நேரம் பொறுத்துக் கொள்ள வேண்டியவை. மனம் தீவிரமாகும் போது அவன் தூக்கமும் நிம்மதியும் இன்றி தவிக்கிறான்.
மூன்றாவதாக ஒரு நட்த்திரத்தின் சமூகப் பங்களிப்பு அவனது பணியைப் போன்றே ஒரு மூட்டமாக உள்ளது. அவனால் சமூகத்துக்கு பிரயோஜனம் என்ன? அதாவது மனித மேம்பாட்டுக்கு அவனது பங்களிப்பு என்ன? இது பற்றி பேசும் போது அதிதி சொல்கிறாள்: “நீங்கள் மக்களை மகிழ்விக்கிறீர்கள். அதுவே ஒரு சேவை தானே”. ”அதுவும் நல்லது தான்” என்று பெருமூச்சு விடுகிறான். ஆனால் அவனுக்கு இந்த பதில் நிறைவாக இல்லை. தனது சேவை உள்ளீடற்றது என்று அவனுக்கு வலுவாக தோன்றுகிறது. இந்த பரிமாணத்தை ரே சற்று விரிவாகவே பேசுகிறார்.
நாயகன் அரிந்தமின் நண்பனான பிரேஷ் எனும் ஒரு தொழிற்சங்கவாதி அறிமுகமாகிறான். அவன் கலைஞன் ஒரு பச்சைமிளகாய் நறுக்கவாவது பயன்பட வேண்டும் என்று நம்புகிற மரபான கம்யூனிஸ்ட். நாயகனின் ஆளுமைக் கவர்ச்சியை தனது தொழிலாளர் கூட்டத்தை ஒன்று திரட்ட மற்றும் தக்க வைக்க பயன்படுத்த தொடர்ந்து முயல்கிறான். அரிந்தம் தன் நண்பனின் இப்படியான வேண்டுகோள்களை ஆரம்பத்தில் கலை கலைக்காகவே சித்தாந்த அடிப்படையிலும் பின்னர் நட்சத்திரமாகி விட்ட பின் தனது இருப்பு மற்றும் பிம்பத்தை காப்பாற்றிக் கொள்ளும் பதற்றத்திலும் மறுக்கிறான். இரண்டாவது முறை தனது மறுப்பு எந்த உயர் அடிப்படையும் சாராத பச்சை சுயநலம் என்று உணர்ந்து கொள்ளும் அவன் லஜ்ஜை அடைகிறான். இது படத்தில் முக்கியமான இடம். அதாவது சமூகத்துக்காக நன்கு அலங்கரிக்கப்பட்ட குப்பைப் பொருளாக மினுங்க வேண்டிய துர்பாக்கியம் ஒரு நட்சத்திரத்துக்கு உள்ளது. என்னதான் உயரத்தில் வைக்கப்பட்டாலும் குப்பைக்கு குப்பை தொட்டி பற்றி பிரக்ஞை உறுத்திக் கொண்டே இருக்கிறது.
நான்காவதாக அவன் ஒரு கடைப் பொருள் போன்று சுற்றி இருப்பவர்களால் பார்க்கப்பட்டது நடத்தப்படுகிறான். ஒரு அம்மாவும் அவளது புல்புல் எனும் பன்னிரெண்டு வயது பெண்குழந்தையும் அவனை காமம் புகைய கண்கொட்டாமல் பயணமெங்கும் பார்த்து வரும் காட்சிகள் படத்தில் முக்கியமானவை. அரிந்தம் தான் சமூகத்தின் ஒரு பொது டில்டோவாக இருக்க நேரும் அவலம் எண்ணி அருவருப்பு அடைகிறான். அவனது அசலான உருவத்தை காணும் கூர்மை கொண்டவர்கள் யாருமே இல்லை. மஞ்சளித்த கண்களால் அனைவரும் அவனை மஞ்சளாகவே பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் மஞ்சளை தனது வண்ணமாக மாற்றிக் கொள்கிறான். இப்படி உள்ளார்ந்து முழுக்க அழிக்கப்பட்ட வெறும் நத்தைக் கூடாக வாழ்வதே அவனது தனிப்பட்ட பிரச்சனையின் சுருக்கம்.
அடுத்து சமூகம் ஒரு நட்சத்திரத்தை என்ன பண்ணுகிறது என்பதை ரே (சுஜாதாவும்) பேசுகிறார். நாயகன் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவன். சினிமா ஆசை துளிர்க்கும் போது அவனை அவனது நாடக ஆசான் கண்டிக்கிறார். ”சினிமாவில் நீ கலைஞனாக இருக்க முடியாது. அங்குள்ள புகழும் பணமும் உன்னை எந்நேரமும் கவிழ்த்து விடும். நீ வெறும் ஒரு பொம்மலாட்டப் பாவையாக மட்டுமே மிஞ்சுவாய்” என்று எச்சரிக்கிறார். இந்த வசனம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் ரே எப்படி ஒரு சினிமா நட்சத்திரம் திரைவணிகர் மற்றும் ஒரு சமூகத்தால் எப்படி கைப்பாவையாக இயக்கப்படுகிறான் என்பதை மட்டுமல்ல சமூகத்துள் பல்வேறு நிலைகளில் தனிமனிதர்கள் ஒருவரை ஒருவரை எவ்வாறு ஒரு பொம்மை போல் இயக்கவும் கட்டுப்படுத்தவும் முயல்கிறார்கள் என்றும் கூட விளக்குகிறார். அரிந்தமுடன் ரயிலில் பயணிக்கும் பிரிதிஷ் சர்க்கார் எனும் ஒரு விளம்பர நிறுவனக்காரர் தனக்கு காண்டிராக்ட் கிடைப்பதற்காக ஹெரன் போஸ் எனும் ஒரு சபலக்கார தொழிலதிபருடன் படுக்குமாறு தன் மனைவி மோலியை வற்புறுத்துகிறார். மனைவி சினிமாவில் நடிக்க விரும்புகிறாள். அதற்கு கணவன் சம்மதிக்கும் பட்சத்தில் தான் மேற்சொன்னதற்கு உட்படுவதாக பேரம் பேசுகிறாள். சினிமாவில் நடிப்பது ஒழுக்கக் கேடென்று நம்பும் பிரிதிஷ் இதற்கு கடுமையாய் மறுக்கிறார். இந்த பாசாங்கு சுவாரஸ்யமானது. விளம்பரக்காரரின் மனைவியை மோகித்து அவளுடன் விரசமாக பேசும் போஸ் தன் குடும்பத்தின் முன்னிலையில் கடுமையான ஒழுக்கவாதியாக, சினிமாக்காரர்களை அருவருப்புடன் பார்ப்பவராக தோன்றுகிறார். சதா எதையாவது உண்டு கொண்டிருக்கும் ஒரு பருத்த மனிதர் படத்தில் நிறைவுப் பகுதியில் தன்னை ஒரு மத நிறுவன ஊழியர் என்று பிரித்திஷிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவரது நிறுவனத்தின் பெயர் WWWW. அதாவது World Wide Will Water. அதன் நோக்கம் மக்களை ஒன்று திரட்டி தங்கள் நோக்கத்துக்காக பயன்படுத்துவது. அதற்கு விளம்பரக்காரரின் சேவை தங்களுக்கு தேவை என்று முகவரி வாங்கிக் கொள்கிறார். படத்தின் நுண்நகைச்சுவை மிக்க காட்சிகளில் இது ஒன்று. குடும்பக்காரர்கள், கலைஞர்கள், வணிகர்கள் என்ற அடுக்குகளின் மையத்தில் மாபெரும் நிறுவனமாக இயங்கும் மதம் ஒரே வாயில் அத்தனை பேரையும் அள்ளி விழுங்கிக் கொள்கிறது. அத்தனை சக்தி படைத்தது மத இயக்கம். இதைக் காட்டத் தான் சதா எதையாவது மென்று கொண்டே இருப்பவராக மத நிறுவனவாதியை ரே காட்டுகிறார். (அவர் பிரித்திஷிடம் விளம்பர உடன்பாடு பேசுமும் வாய்க்குள் வாசனைத் தெளிப்பான் அடித்துக் கொள்கிறார். பிறகு தொடர்ந்து ஒரு ஆப்பிளை மென்று துப்புகிறார்.)
அடுத்து அதிதியுடன் பயணிக்கும் ஒரு குடும்பப் பெண் அரிந்தமைப் பேட்டி எடுத்து பத்திரிகையில் பிரசுரிக்குமாறு அவளை தூண்டுகிறாள். உள்ளுக்குள் அவளுக்கு நாயகனைப் பற்றிய சுவையான புது சேதிகளை அறிய ஆசை. கிட்டத்தட்ட இதே நோக்குடன் தான் அரிந்தமிடம் அதிதி ஆரம்பத்தில் செல்கிறாள். ஒரு நட்பின் அடிப்படையில் அவன் தெரிவிக்கும் பல தனிப்பட்ட செய்திகளை அவள் ரகசியமாக குறிப்பெடுத்துக் கொள்கிறாள். பின்னர் குடி போதையில் அவன் அவளிடம் தன்னைப் பற்றி அவள் எப்படி திரித்து எழுதினாலும் தனக்கு கவலை இல்லை என்று தெரிவிக்கிறான். அவன் புறசமூகம் மீது அத்துணை அவநம்பிக்கை உற்றிருக்கிறான். அவள் அப்பேட்டியை தொகுத்து எழுதிய பின் அவனை சந்திக்கும் கடைசிக் காட்சியில் அதை கிழித்து எறிந்து விடுகிறாள். இது மற்றொரு முக்கியமான இடம். படத்தில் முதன் முதலாக ஒரு மனிதன் மற்றொரு மனிதனை கட்டுப்படுத்தி ஆட்டுவிக்கும் விளையாட்டை நிறுத்துகிறான். சக உயிர் மீதான் அன்பின் அடிப்படையில் அவள் செய்யும் இச்செயல் ஒரு விழுமியத்தை போதிக்கிறது. முதன்முறையாக அரிந்தம் ஒரு கைப்பாவை அல்லாமல் ஆகிறான். இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நிகழ முடியும். ஏனெனில் பாசாங்கும், அதிகார பூசலுமாக வாழ்க்கை தொடர்ந்து தான் ஆக வேண்டும். அவளால் அவனது நட்சத்திர வாழ்க்கைக்குள் நுழைய முடியாது. ரயில் பயணம் முடிய, விழுமியங்களின் அடிப்படையிலான உறுதியான வாழ்வை தொடர்ந்து தனதான பாதையில் அவள் பிரிந்து செல்கிறாள். ரசிகர்களும், மீடியாக்காரகளும் சூழ, அவன் நகர்ந்து விலகும் அவளை ஏக்கத்துடன் தொடர்ந்து பார்ப்பதாக படம் முடிகிறது.
நட்சத்திரமற்ற வானத்தை போல் மிக அபூர்வமான இத்தருணம் தான் அதிகார-நெருக்கடி வாழ்வின் போதான ஒரே இளைப்பாறல்; அல்லது இவ்வாழ்வை வாழ்வதற்கான ஒரே நியாயம் மற்றும் நோக்கம். அப்போதுதான் நடசத்திரங்கள் ஒருமுறை கண்சிமிட்டுகின்றன. தம்மைச் சுற்றி இருட்டு என்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றன.
இவ்வித அற்புதமான படங்களை
ReplyDeleteஎங்கே கண்டுபிடிப்பது?
டிவிடி எங்கே கிடைக்கும்?
ரேயின் டிவிடிகள் வாங்கக் கிடைக்கின்றன. லேண்ட் மார்க்கில் ஒருமுறை பார்த்த நினைவு. இணையத்தில் கூட வாங்க கிடைக்கிறது. எளிதாக torrentsஇல் தரவிறக்கியும் பார்க்கலாம். பல வழிகள் :)
ReplyDelete