வாக்னர்: குரு எனும் பாலம்
நீட்சேவை பாதித்த ஆளுமைகளாக ஷோப்பன்ஹெர், வாக்னர், புக்ஹார்ட், எப்.ஏ லேங், டார்வின் ஆகியோர் கருதப்படுகின்றனர். இந்த பாதிப்பாளர்கள் பற்றின பரிச்சயம் நீட்சேவை நெருங்க எந்தளவு முக்கியம்? மேற்சொன்னவர்களின் பரிச்சயம் நீட்சேவின் கருத்துக்களும் நம்பிக்கைகளும் உருவாகும் விதத்தை பின் தொடர்ந்து கவனிக்க பயன்படும். அவரை புரிவது என்பதை விட அவரது எண்ணங்கள் எப்படி உருக்கொண்டிருக்கும் என்று ஊகிக்கக் கூடிய சுவாரஸ்யம் ஒரு முக்கிய நோக்கம். மேற்சொன்னவர்களில் நீட்சேவின் தத்துவப் பார்வையின் மீது தீவிர பாதிப்பு செலுத்தியவர் ஷோப்பன்ஹெர். ஆனால் நீட்சேவை நேரடியாக பாதித்தவர் வாக்னர். வாக்னரிடம் நீட்சேவுக்கு தீவிர பற்றுதல் இருந்தது. நீட்சே வாக்னரை ஒரு தேவதூதனாக வழிபட்டார். அவரது கருத்தியலை உள்வாங்கி வளர்த்தெடுத்தார்.
நீட்சேவின் முதல் நூலான “துயரநாடகத்தின் பிறப்பு” (The Birth of Tragedy) என்ற நூல் வாக்னரிடம் இருந்து அவர் பெற்ற ஒளிக்கீற்றால் உருவானதது தான். இந்நூலின் ஒரு பாதி வாக்னரை கொண்டாடி அவரை தம் காலத்தின் கலாச்சார மீட்பராக மிகையாக புகழ பயன்படுத்தும் அளவுக்கு நீட்சேவுக்கு வாக்னர் போதை தலைக்கேறிய ஒரு காலகட்டம் இருந்தது. இவ்வளவு வலுவான நிர்தாட்சண்ணிய குரலாக நாம் புத்தகங்களில் எதிர்கொள்ளும் நீட்சே வாக்னரிடம் சேவை செய்வதற்கு தன் படைப்பு மற்றும் தத்துவ வாழ்வை தியாகம் செய்ய தயாராக இருந்தார் என்பது நமக்கு வியப்பான சேதி. வாக்னரும் நீட்சேவின் எழுத்துக்கு தோதான களத்தை, பதிப்பு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். பின்னர் அர்ப்பணிப்பு மற்றும் ஆசீர்வாதத்தின் விளிம்பில் வளர்ந்து கொண்டிருந்த இந்த உறவு மெல்ல மெல்ல பள்ளத்தாக்குக்கு வந்தது. நீட்சேவுக்கு வாக்னர் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது. உறவு கசந்தது. வாக்னர் மீதான் இந்த ஏமாற்றத்தை நீட்சே பதிவு செய்தார். வாக்னரும் கூட நீட்சேவின் “Human all Too Human” நூலை “நான் படிக்காததற்கு நீட்சே நன்றி சொல்ல வேண்டும்” என்று கேலி செய்தார். (சற்று அநியாயமாக பட்டாலும்) வாக்னர் தமிழ் நவீனத்துவத்தின் சு.ரா. நீட்சேக்கள் யாரென்று சொல்லத் தேவையில்லையே.
நீட்சேயின் கருத்தியல் பரிணாமத்தை அறிவது மட்டுமல்ல, இந்த உறவின் கதை நமக்கு நீட்சேயின் உளவியலை பார்வையிடவும் பயன்படும். அடுத்து வரும் சுமார் பத்தாண்டுகளில் சக்கரங்கள் ஒவ்வொன்றாய் கழன்று போகும் அதிவேக வாகனம் போல் நீட்சேவின் வாழ்வில் இருந்து நெருக்கமான உறவுகள் ஒவ்வொன்றாய் நிரந்தரமாக விலகுகின்றன. எழுத்தும் சிந்தனையும் தேவதையின் இருகரங்களாக அவரை இந்த தனிமைக் காலத்தின் போது பத்திரமாய் சுமந்து செல்கின்றன. இதை மேலும் விரிவாக நாம் அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்க்கவிருக்கிறோம். முதலில் வாகனரைப் பற்றி பேசலாம்.
வாக்னர் ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டு இசை அமைப்பாளர், இசைநடத்துநர், கட்டுரையாளர் மற்றும் நாடக இயக்குநர். வாக்னர் அவரது ஓபரா அல்லது இசைநாடகங்களுக்காக அதிகம் அறியப்படுபவர். யூதவெறுப்பாளராக அவரது மற்றொரு பக்கம் சர்ச்சைக்குரியது. வாக்னரின் தீவிர விசிறியாக ஹிட்லர் இருந்ததால் அவரது இசை யூதவதை முகாம்களில் ஒலிபரப்பட்டது. அவரது இசைநாடகங்களில் பாத்திரங்கள், களம், கருத்துக்கள், இடங்கள் என ஒவ்வொன்றுக்கும் இசைத் துணுக்கு ஒன்றை உருவகமாக பயன்படுத்தி வாக்னர் உலக இசைநாடகத்துக்கு ஒரு மிக முக்கியமான பங்களிப்பு செய்தார். இசையை Leitmotif எனும் மையக்கருத்தை நினைவூட்டும் மீள் உருவகமாக பயன்படுத்தியும் புரட்சி செய்தார். ”தளபதியில்” ரயிலின் விசில் சத்தத்தை இளையராஜா ஒரு நினைவூட்டலாக பயன்படுத்தியிருப்பது உங்களுக்கு நினைவிருக்கும். இதை எல்லாம் ஆரம்பித்து வைத்தது வாக்னர் தான். ஒரு இசைக் கோட்பாட்டாளராக, சமூக, அரசியல் சிந்தனையாளராகவும் வாக்னரின் பாதிப்பு குறிப்பிடத்தக்கது. இப்படி வாக்னர் பலபரிமாணங்கள் கொண்ட மாபெரும் ஆளுமையாக தன் காலகட்டத்தில் திகழ்ந்தார். ஒரு ராட்சத காந்தமாக உதிரி கலாச்சார மற்றும் அறிவுலக ஆளுமைகளை வாக்னர் தன் பக்கம் மிக இயல்பாக ஈர்த்துக் கொண்டிருந்தார். காந்தி தன் பால் கவரப்பட்ட வந்த ஒரு நபரிடம் காபி குடிக்கும் பழக்கத்தை கைவிடக் கேட்டாராம். வாக்னரும் காந்தியைப் போன்று வீங்கின ஈகோ கொண்டவர். எப்படி காந்தியின் அருகாமையில் ஒருவர் காந்தியவாதியாக மட்டுமே இருக்க முடியுமோ அது போல் அக்கால ஜெர்மனியில் வாக்னரின் ஆதரவாளர்கள் வாக்னரியவாதிகளாக இருந்தார்கள். எதிர்தரப்பில் வாக்னர் வெறுத்த ஜொஹன்னெஸ் பிராம்ஸின் ஆதரவாளர்கள் இருந்தனர். இவ்விரு கோஷ்டிகளாக அக்கால ஜெர்மானிய இசையுலகம் பிளவுண்டிருந்தது. நீட்சே வாக்னரின் Tristan and Meistersinger ஓபராவை கேட்டதினால் தான் முதலில் கவரப்பட்டார். இளமையில் இருந்தே நீட்சே இசையின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார் என்பதையும் அவருக்கு பியோனா பயிற்சி இருந்தது என்பதையும் நாம் இங்கு நினைவுகூரலாம். இவ்விசையைக் கேட்டு பதினொராவது நாளில் நீட்சே வாக்னரை நாடிச் சென்றார். ஷோப்பன்ஹெர் |
அங்கு இரு விஷயங்கள் அவரை வாக்னரின் பால் அதிக ஈர்ப்பையும் ஆன்னியோன்யத்தையும் ஏற்படுத்தின. முதலில் வாக்னர் நீட்சேவைப் போன்று தத்துவவாதி ஷோப்பன்ஹெரால் தீவிர பாதிக்குள்ளாகி இருந்தார். இருவழிபாட்டாளர்களும் தமக்கு ஒரே தெய்வம் என்றறிந்து அகமகிழ்ந்தனர். அடுத்து, வாக்னருக்கு நீட்சே தான் இளமையிலேயே இழந்த தனது அப்பாவின் தோற்றச் சாயல் இருந்தது. இப்படி வாக்னர் அவருக்கு இசை தேவதூதனாக, அறிவுத்தந்தையாக, நிஜத்தந்தையின் தொடர் நினைவூட்டலாக திகழ ஆரம்பித்தார்.
No comments :
Post a Comment