இலங்கை அணி ஆதரவாளர்கள் தம்மை சிங்கம் என்று சுயபெருமை கொள்ளும் போது நமக்கு வேடிக்கையாக இருந்ததுண்டு. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் சென்றுள்ள இலங்கையினர் ஆடிய ஆட்டம் அசோகமித்திரனின் “புலிக்கலைஞன்” வாசகர்களுக்கு ஒரு புன்னகையை வரவழைத்திருக்கும். யார் கிள்ளினாலும் அழுதுவிடக் கூடிய ஒரு மிருதுத்தன்மை ஆஸ்திரேலியாவுக்கு வந்து விட்டது. வலுவான உடல்மொழி, பராக்கிரமம், சுயபெருமை என கங்காருக்களின் மரபான முத்திரைகளை சிங்களச் சிங்கங்கள் கவர்ந்து விட்டன. கடந்த சுமார் ரெண்டு வாரங்களில் மட்டும் ஏகப்பட்ட கிரிக்கெட் ஆடப்பட்டு வருகிறது. உள்ளூரில் ரஞ்சி கோப்பை மற்றும் நியூசிலாந்த் பயணம், துபாயில் தென்னாப்பிரிக்கா-பாக்கிஸ்தான் T20 மற்றும் ஒருநாள் ஆட்டத்தொடர். கூடவே கொசுறாக ஆஷஸ் தொடருக்கான தயாரிப்பாக ஆஸி உள்ளூர் அணி ஒன்றுடனான இங்கிலாந்து அணியின் பயிற்சி ஆட்டமும் (உலகின் சரிபாதி ஆர்வலர்கள் இந்த ஆட்டத்தை கவனமாக பின் தொடர்கிறார்கள்) வழக்கமான ஹாங்காங் சிக்ஸஸ் தொடரும். (ஒரு அணியில் ஆறு பேர் மட்டும் ஆடும் இந்த ஆட்டவகை ஐபிஎல்லுடன் கருணைக் கொலை செய்யப்பட்டு தற்போது ஓய்வூதிய மற்றும் வாய்ப்பற்ற வீரர்களுக்காக தட்டி எழுப்பப்பட்டு மறுஅரங்கேற்றம் செய்யப்படுகிறது. கிரிக்கெட்டின் ஆவி அமுதா இது.) ஒரே நேரத்தில் இப்படி அனைத்து முக்கிய அணிகளும் ஆடும் போது எதை கவனிக்க என்ற கேள்வி எழுகிறது. அடிப்படையான அளவுகோல்கள் தரம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம். சுருக்கமாக முதலில் உள்ளூரை பார்ப்போம்.
ரஞ்சி கோப்பை. ஜெய்பூரில் நடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 21 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சாதனை படைத்து கவனத்தையும் ஈர்த்தது. ஹைதராபாத் ஒரு காலத்தில் மட்டையாட்டம் மற்றும் சுழல்பந்துக்காக வலுவாக இருந்தது. அசருதீன், லக்ஷ்மண் போன்ற ஸ்டைலிஸ்டுகளை தேசிய அணிக்கு தந்தது. ஹைதராபாத் மட்டையாட்டத்துக்கு என்றொரு தனித்துவமான பாணியும் உள்ளதாக பேசப்பட்டது. ரெண்டாயிரத்தில் இவ்வணிக்காகத் தான் லக்ஷ்மண் தொடர்ச்சியாக டிரிபிள் சதங்கள் அடித்து வலுக்கட்டாயமாக தேசிய அணிக்கு திரும்பி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரபலமான 281 அடித்தார். அந்த பருவத்தில் ஹைதராபாதுக்காக லக்ஷ்மண் அடித்த 1415 ஓட்டங்கள் இன்றுவரை ஒரு சாதனையாக நிலைக்கிறது. உள்ளூர் அணிகளில் மும்பைக்கு சச்சின் என்றால் ஹைதரபாதுக்கு லக்ஷ்மண் அதிவீரராக இருந்தார். அவரது உள்ளூர் சராசரி 80.61. தேசிய சேவைக்காக லக்ஷ்மண் விலகத் தொடங்கியதும் ஹைதராபாதின் சறுக்கல் ஆரம்பித்தது என்று சொல்லலாம். பின்னர் தோன்றிய மட்டையாட்ட நட்சத்திரமான அம்பத்தி ராயுடு அவ்வளவாக சோபிக்கவில்லை. அடுத்து 2007 ஆகஸ்டில் ஐ.சி.ல் எனும் முக்கியமான வரலாற்று திருப்பம் நிகழ ஹைதராபாத் அணியில் இருந்து ஏழு வீரர்கள் மொத்தமாக கழன்று கலக லீகுக்காக ஆடச் சென்றனர். இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களை தடைசெய்து மிக சமீபமாகத் தான் திரும்ப கதவை திறந்து விட்டது. இந்த ஒட்டுமொத்த வெளிநடப்பின் வெற்றிடத்தில் இருந்து ஹைதராபாத் இன்னும் மீண்டு விடவில்லை. இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக பட்ச அணி ஸ்கோருக்கான சாதனை இன்னமும் ஹைதராபாதிடம் தான் உள்ளது. 944/6. இங்கிருந்து 21 ஓட்டங்களுக்கு சுருண்ட நாள் வரை ஹைதராபாத் கிரிக்கெட்டின் வீழ்ச்சியின் ஒரு சுருக்கமான வரைபடம். ஹைதராபாதின் மரபான சுழல்பந்து வீழ்ச்சு வலுவைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். ராஜூ இந்தியாவுக்காக ஆடினாலும் அவரை விட திறமையாளராக கன்வல்ஜித் சிங் என்பவர் இருந்தார். 1981இல் இருந்தே ஆட ஆரம்பித்தாலும் சீனியர்கள் இடமளிக்காததால் தொண்ணூறுகள் வரை ஹைதராபாதுக்காக ஆடவே சிங் காத்திருக்க வேண்டியதாயிற்று. தேசிய அணி வாய்ப்பு கிட்டத்தட்ட ரெண்டாயிரத்தில் வந்தது. ஆஸி தொடரின் போது கும்பிளே காயமுற்றார். காலி இடத்துக்காக நரேந்திர ஹிர்வானி, தமிழ்நாட்டின் பாலாஜி ஆகிய இரு வயதான கால்சுழல்பந்தாளர்களுடன் கன்வல்ஜித்தும் அப்போது பந்தயத்தில் இருந்தார். (கங்குலி ஹர்பஜனை தேர்ந்தார்). இளமையில் வாய்ப்பு கிடைக்காமல் முப்பது வயதுக்கு மேல் தான் உள்ளூர் அணிக்கு தொடர்ந்து ஆடவே ஆரம்பித்த கன்வல்ஜித் நமது தேசம் உருவாக்கின மிகச் சிறந்த சுழலர்களில் ஒருவர். நாற்பத்தோரு வயதுவரை ஆடி 369 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவருக்கு போதுமன கவனம் கிடைக்கவில்லை. காரணம் இவரை போன்றொரு ரத்தினத்தை காத்திருக்க வைக்கும்படி ஹைதராபாதின் சுழல் வலிமை அப்படி இருந்தது. மேற்சொன்ன ஹைதராபாத்-ராஜஸ்தான் ஆட்டத்தில் மேலும் இரு விசயங்களை கவனிக்க வேண்டும். மற்ற ரஞ்சி ஆட்டங்கள் மெதுவாக ஆடுகளங்கள் ஊர்ந்து கொண்டிருக்க இந்த ஆட்டத்துக்கான ஜெய்பூர் ஆடுகளம் வேகவீச்சுக்கு சாதகமாக இருந்தது. முதல் இன்னிங்சில் ராஜஸ்தானுக்காக சஹார் என்றொரு இளைஞர் தனது கன்னி ஆட்டத்திலே 8 விக்கெட்டுகள் வீழ்த்தி மீடியா கவனத்தையும் கிட்டத்தட்ட ஐ.பி.எல் காண்டிராக்டும் பெற்றுவிட்டார். பிரஸ் கான்பிரன்ஸ் கூட்டப்பட்டு சஹார் தான் வகார் யூனிஸ் மற்றும் மனோஜ் பிரபாகரை போன்று ஆக விரும்புவதாக சொல்ல கூடவே அவரது பயிற்சியாளரும் ஒளிவட்டம் சுழல் புன்னகைத்து சாஹரை தான் எட்டு வயதில் இருந்தே கண்டடைந்து பராமரித்து உருவாக்கிய கதையை சொன்னார். கொஞ்சம் கண்னசந்திருந்தால் நாம் தவற விட்டிருப்போம். இன்றைய சாதனைகள் “அட, என்ன, அப்படியா?” வகைதாம். தீயை பற்ற வைப்பதற்குள் எரிந்து முடிந்து விடுகிறது. இந்திய ஆடுகளங்கள் இப்படி அதிக இரைச்சலை உண்டு பண்ணுகின்றன; அல்லது ஒரேயடியாய் தூங்குகின்றன. பருவமும், மண்ணும், இங்கு தொழில்முறை கியூரேட்டர்களும் இல்லாதது காரணம். தமிழில் வெளியாகும் நாவல்களைப் போன்று உள்ளூர் ஆடுகளங்களின் சுபாவ விசேசத்தை கணிப்பது எளிதல்ல. ஒரு பாந்தமான ஆடுகளத்தில் வருகை தரும் ஏதாவது ஒரு சர்வதேச அணியுடன் ஆட விட்டு தான் சஹார் போன்ற வகார் யூனிஸ்களை நாம் உரசிப் பார்க்க முடியும். கடந்த ரஞ்சி கோப்பை மின்னல் ஆடுகளங்களில் தான் ஆடப்பட்டன. விளைவாக பாதி வெந்த வேகவீச்சாளர்கள் முன்னிறுத்தப்பட்டு ஏமாற்றம் தந்தார்கள். குறிப்பாக மிதுன். மேலும் குறிப்பிட வேண்டியது ஊழல் சந்தேகம். முதல் சுற்றில் தில்லியுடன் மோதிய வங்காள அணியில் மூன்றாவது வரிசையில் அபிஷேக் சவுதிரி என்பவர் 27 வயதில் டெபியு செய்தார். அவரது மட்டையாட்டம் பிழையானது மட்டுமல்ல பந்தை நேர்கொள்ளும் திறமையும் கீழ்மட்டம் தான். அதைப் போன்றே ஐரிஷ் சக்சீனா என்ற இடதுகை சுழலாளர். இவரைப் போன்று எதற்கும் லாயக்கற்றவர்களைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறதென்றால் செல்வாக்கும் பணமும் இருந்தால் மட்டை தூக்காமலே கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கலாம் (தமிழ் இலக்கியத்தில் பேனா தூக்காமலே...). ரஞ்சி ஆரம்ப சுற்றில் வேறொன்றும் குறிப்பிடும்படியாய் நடக்காததால் அடுத்து பாக்-தெ.ஆ ஆட்டங்கள்.
உலகக் கோப்பைக்கு தயாராக இங்கிலாந்தைத் தவிர பெரும்பாலான வெள்ளை அணிகள் ஆசியாவுக்கு (அல்லது ஆசியாவை ஒத்த வளைகுடா ஆடுகளத்தில்) வந்து ஆடி வருகின்றன. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு ஏமாற்றமாகவே இந்த பயணங்கள் முடிந்ததாலும் சிறந்த ஆட்டநிலையில் உள்ள இலங்கை அணி இந்திய மண்ணில் நிறைய விழுப்புண்கள் பெற்றுள்ளதாலும், இந்திய, பாக் அணிகளின் விகாசம் பலூனை ஒத்தது என்பதாலும் யாருக்கு உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு என்பது ஊகிக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாகி விட்டது. தொடர்ந்து சேதங்கள் ஏற்பட்டும் பாகிஸ்தான் அணி மீண்டு அதிரடியாகவும் சிறப்பாகவும் ஆடி வருவது நமக்கு பரிச்சயம் தான். ஊழல் குற்றசாட்டுகளையும் தடைகளையும் அதிரடி நீக்கங்களையும் பாகிஸ்தான் சந்திக்காத தொடரே கடந்த பத்தாண்டுகளில் இல்லை எனலாம். சமீப ஸ்பாட் பிக்சிங் சர்ச்சையில் மாட்டி வெளியேற்றப்பட்டவர்களான ஆசிப், அமீர் மற்றும் சல்மான் பட் உலகின் மிகச் சிறந்த வீரர்கள். இங்கு ஸ்பாட் பிக்சிங் பற்றி சின்ன விளக்கம். நமக்கு பரிச்சயமுள்ள பந்தைய ஊழலைப் போல் இது ஆட்டப் போக்கை பெருமளவில் பாதிப்பது அல்ல. ஒரு சில பந்துகளே பந்தயம் வைக்கப்படுகின்றன. பந்தயக்காரர்கள் இதற்கு கோடிக்கணக்கில் தருகிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட டெஸ்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அமிரும், ஆஸிப்புக்கு தொடர்ச்சியாய் விக்கெட்கள் வீழ்த்தின தரத்தை பார்த்து உலகமே வியந்தது; அவர்கள் தாம் ஆட்டத்தையும் வென்று தந்தது. இதற்கு நடுவில் சில பந்துகளை பந்தயம் வைப்பது நாம் அலுவலகத்தில் ஓப்பி அடிப்பது, இணையம் மேய்வது, தூங்குவது போலத்தான். கிரிக்கெட்டுக்கு பெரும் சேதம் ஒன்றுமில்லை. தொடர்ந்து வந்த சர்ச்சை, விசாரணை மற்றும் வீரர்கள் மீதான (மரபான) தடைக்கு காரணம் விசுவாசம் என்ற விழுமியம் தகர்க்கப்பட்டது தான். நாம் வேலை செய்வதும் கிரிக்கெட்டர்கள் ஆடுவதும் பணத்துக்காக (கொஞ்சம் பெருமைக்காக). முதலாளிக்கு குறிப்பிடும்படியான இழப்பு இல்லாதபோது, பார்வையாளர்களுக்கு தரமான பொழுதுபோக்கு கிடைக்கும் போது விசுவாசத்தின் பயன் என்ன? விசுவாசம் என்பது நடுத்தர மனிதர்கள் தம்மை முன்னிறுவதற்கான ஒரு துருப்புச்சீட்டு, அவ்வளவு தான். ஸ்பாட் பிக்ஸிங் பரபரப்பு இத்தனை தீவிரமாக இரு காரணங்கள். மீடியா பசி. பிறகு, உண்மை மீதான மனிதனின் ஆதார பதற்றம். இந்த பின்னணியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டங்களில் பாக் அடைந்த இரு வெற்றிகள் (கடைசி விக்கெட்டுக்கு) முக்கியமானவை. பாக் வீழ்ந்து வீழ்ந்து எழுவதைப் பார்ப்பது மிகுந்த அகவெழுச்சி தருவதும் பிரமிப்பூட்டுவதும். பாக் இல்லாத கிரிக்கெட் சாரு நிவேதிதா இல்லாத தமிழிலக்கியம் போல. வாலில் இருந்து தலையைத் தொட ஆஸ்திரேலியா போவோம்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் தான் மிகுந்த குழப்பம் தருவது. மெக்ராத், வார்ன், கில்கிறிஸ்டு போன்ற அதிதிறமையாளர்கள் விலகின பின்னரும் கூட ஆஸி ஒரு நல்ல அணிதான். இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரை இழந்த பிற்பாடு ரிக்கி பாண்டிங்கின் அணி சில மாதங்களில் மீண்டு வந்து தொடுவானைத் தொட்டது. நாம் மீண்டும் நிமிர்ந்து பார்த்தோம். தென்னாப்பிரிக்கா பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு வந்து டெஸ்டு தொடரை வென்றதும் ஆஸ்திரேலியா திசை மாறி திரும்ப ஓட ஆரம்பித்தது. அதற்கு பின் இந்தியாவுக்கு வந்து ஓட்டத்தை துவங்கின இடத்திலே நின்ற போது ஆஸியினர் ஏன் இப்படி ஆடுகிறார்கள் என்ற விடையின்மை தான் விமர்சகர்களுக்கு சிரமமாக இருக்கிறது. பாண்டிங் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் துவங்கி, அடுத்த தலைவரான துணை தலைவர் கிளார்க் பலவீனமானவர் என்ற சந்தேகம் வலுத்து இதுவரை அணியில் இடம் பிடிக்காத நார்த் என்பவரையும் பெர்குசன் மற்றும் வைட் போன்றோரையும் அணித்தலைவர் ஆக்கினால் என்ன என்று மீடியாக்காரர்கள் கிரிக்கெட் பிரபலங்களிடம் பேட்டி கண்டு யூகித்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரை பகிஷ்கரித்து பாண்டிங், வாட்சன், ஜான்சன், ஹஸ்ஸி போன்ற சீனியர்கள் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் ஆட்டமான ஷெபீல்டு ஆடச் சென்றது வரலாற்றில் முதன்முறையானது மட்டுமல்ல மேற்சொன்ன விசுவாச விழுமியத்தையும் கேள்விக்குள்ளாக்கியது. சர்வதேச ஆட்டத்தை விட உள்ளூர் ஆட்டம் முக்கியமா என்று கேட்கப்பட்டது. ஆஷஸ் தொடருக்கு தயாராக வேண்டும் என்று பதிலளித்தனர் ஆஸியினர். அடுத்து ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தோற்ற பின்னரும் ரிக்கி பாண்டிங் இது ஆஷஸுக்கு தோதான தயாரிப்பு அல்ல என்ற தவறான அக்கறையுடன் தான் பதிலளித்தார். இலங்கையினருக்கு ஆஸியினர் ஈடு கொடுத்து ஆடவில்லை என்பது இலங்கையினரின் வெற்றிக்கு சற்று சுணக்கம் என்றாலும் அவர்களால் எகிறும் ஆடுகளத்தில் ஆட முடியாது என்ற மித்தை பொய்ப்பித்துள்ளது என்ற பொருளில் இவ்வெற்றிகள் முக்கியமே. முரளிதரனும் தன் கடைசி ஆஸி பயணத்தில் கைகளை சுத்தமாய் கழுவிக் கொண்டார். இறுதியாக தொடரின் கடைசி ஆட்டத்தில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகி மீண்டும் ஷெபீல்டு ஆடப் போவதாக முன்னாள் இந்திய பயிற்சியாளர் கிரெக் சாப்பல் தெரிவித்துள்ளார். இதற்கான காரணமும் ஆஷஸுக்கு தயாராவது தான். நிஜமான காரணம் இன்னமும் மூட்டமாகத் தான் உள்ளது என்றாலும் இரு விளக்கங்கள் உள்ளன. முதலில் ஆஸ்திரேலிய உள்ளூர் ஆட்டத்தின் உயர்தரம். இந்தியாவில் என்றுமே ஒரு முக்கிய தொடருக்கு தயாராக தெண்டுல்கர்களும் திராவிட்களும் உள்ளூர் ஆட்டங்கள் ஆடியதாக வரலாறு இல்லை. சச்சின் விரும்பியபோதெல்லாம் ஓய்வெடுத்து டிவிட்டுகிறார் அல்லது உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி பேட்டி அளிக்கிறார். அடுத்த கட்ட இந்திய வீரர்கள் ஐ.பி.எல்லுக்கான ஒரு பயிற்சியாக மட்டுமே உள்ளூர் ஆட்டங்களில் ஆடுகிறார்கள். ஏனென்றால் நமது உள்ளூர் ஆட்டத்தரம் ஒரு போலியான தன்னம்பிக்கையை மட்டுமே அளிக்கக் கூடியது. யுவ்ராஜின் இரானி கோப்பை இரட்டை சதம் ஒரு சமீபத்திய உதாரணம். ஆஸியினரின் உள்ளூர் ஆட்டத்தரத்தை மெச்சும் பட்சத்திலும் சர்வதேச ஆட்டத்தின் தரம் மற்றும் நெருக்கடிக்கு அது இணையாகாது. ரிக்கி பாண்டிங் உள்ளூர் ஆட்டத்துக்கு திரும்ப அனுப்பப்பட்டதற்கு கிளார்க்கின் தலைமைப் பண்புகளை சோதிப்பது ஒரு காரணமா என்றும் ஊகிக்கலாம். ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா இழந்தால் பாண்டிங் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று சொல்லப்படுகிறது. இத்தனை முக்கியத்துவம் பெறுமளவுக்கு இங்கிலாந்துடனான டெஸ்டு ஆட்டங்கள் சிரமமானதாக இருக்குமா என்றும் நாம் யோசிக்கலாம். இந்தியாவுக்கு பயணம் செய்யும் முன் அத்தொடரை ஆஸி இழக்கும் என்று ஊகித்த சில ஆஸி விமர்சகர்கள் ஆஷஸை கங்காருக்களால் நிச்சயம் வெல்ல முடியும் என்றனர். அதாவது எத்தனை பலவீனமாய் இருந்தாலும் இங்கிலாந்திடம் தோற்கும் அளவுக்கு பலவீனமாக முடியாது என்பது பொருள். ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்தை காலையில் வேப்பங்குச்சி போல் ஒடித்து விட முடியும் என்று பாண்டிஙின் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். பலதரப்பில் இருந்து எழும் கேள்விகளை சமாளிக்க ஆஸ்திரேலியாவுக்கு சில எளிய வெற்றிகள் தேவைப்படுகின்றன. அதுவும் கார்கில் போரில் போல் மரபான எதிரியிடம் மோதிக் கிடைத்தால் அதிசிறப்பு தானே!
No comments :
Post a Comment