2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன். 28 ஆம் தேதி விழித்த போது என் வாழ்நாட்களில் நான்கை சுத்தமாய் இழந்திருந்தேன். 24ஆம் தேதி மூச்சு விட சிரமப்பட்டு நினைவிழந்து நான் 28ஆம் தேதி விழித்த போது “சாவில் இருந்து திரும்பி இருக்கிறாய்” என்று நண்பர்கள் வந்து வியந்து சொன்னார்கள். நான் ஆச்சரியமாக கேட்டேன். “நன்றாகத் தானே இருந்தேன், மூச்சுத் திணறலில் இருந்து எப்படி கோமாவுக்கு நான் சென்றிருக்க முடியும்? நான் எப்படி மரணத்தை முத்தமிட்டு திரும்பினேன்.?”. இந்த கேள்வி பெங்களூரில் இருந்து வந்திருந்த என் அக்காவுக்கும், அம்மாவுக்கும் இருந்தாலும் அவர்கள் மௌனித்தனர். நான் மூச்சுத் திணறல் வந்து 24ஆம் தேதி இரவு ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் படி என் மாமியாரிடம் கேட்டது, பொன்மல்லிகை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்ட நினைவுகள் இருந்தன. அந்த ஓரிரவில் கோமாவுக்கு சென்றேன் என்று நினைத்துக் கொண்டேன். அங்கிருந்து மேடவாக்கத்தில் உள்ள Global
என்ற பெரிய தனியார் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறேன். ஆனால் தேதிகள் பற்றின குழப்பம் வேறு என்னை மேற்கொண்டு வினவ தடுத்தன. நான் உயிர் பிழைத்த மகிழ்ச்சியுடன் ஐ.சி.யுவில் உடல் நலத்தை மெல்ல மெல்ல மீட்டுக் கொண்டு வந்தேன். ஐ.சி.யுவில் இருந்து வெளிவந்த பிறகு தான் நான் இழந்த நாட்களின் வரலாற்றை மீட்டுருவாக்கினேன். இந்த கண்டுபிடிப்புகள் ஒரு சின்ன அதிர்ச்சியில் இருந்து மிக எதேச்சையாக ஆரம்பித்தது. என் முதல் சந்தேகம் என் மாமியார் ஏன் மிகுந்த குற்றவுணர்வுடன் என்னிடம் நடந்து கொண்டார் என்பது. அவர் என் கண்களை சந்திக்கவே தயங்கினார். அடுத்து என் மனைவி என்னிடன் தன்னிச்சையாக ”நீ இரண்டு நாட்கள் (அதாவது 24-26வரை) பொன்மல்லிகை என்ற ஆஸ்பத்திரியில் இருந்தாய்” என்ற போது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அந்த ஆஸ்பத்திரியில் எனக்கு சிகிச்சை தராமல் தாமதித்தார்கள் என்பது நினைவில் இருந்தது. நான் மேலும் துருவினேன். மனைவி மேலும் சொன்னாள். எனக்கு பெரும் கிலி ஏற்பட்டது. அதாவது நானாக கோமா நிலைக்கு செல்ல வில்லை, அப்படி செல்லும் வரை சிகிச்சை தராமல் விடப்பட்டிருக்கிறேன். என் நுரையீரலும், சிறுநீரகங்களும் அவையாக பழுதாக இல்லை. இரண்டு நாட்கள் பழுதாகும் வரை அவை சிகிச்சை இன்றி இயங்க விடப்பட்டிருக்கின்றன. மூளைக்குள் அமிலம் புகுந்து சேர்ந்து எடிமா எனப்படும் நோய் உள்ளிட்ட பத்து கோளாறுகள் உருவாகும் வரை நான் இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறேன். ஏன்? தவறான நோய் அறிதல் மற்றும் அசட்டை காரணமாக. எப்படி இரண்டு நாட்கள்? இக்கேள்வி என்னை தொடர்ந்து வருத்தியது. 24ஆம் நாள் இரவு நடந்ததை என் மனைவி மெல்ல மெல்ல விவரித்தாள்.
22ஆம் நாளில் இருந்து எனக்கு வைரல் ஜுரம் இருந்து வந்தது. டாக்டர் ஹஸன் என்பவர் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளித்து வந்தார். ஒரு வருகைக்கு ரூ300 விதம் இரண்டு நாளில் ஆயிரத்து இருநூறு மேல் கட்டணம் பெற்றிருந்தார். 24ஆம் நாள் ஜுரம் விட்டாலும் கடுமையான வயிற்று வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரி கொண்டு செல்லுமாறு என் மாமியாரை வேண்டியபோது அவர் தயங்கினாள். எனக்கு இது மிகவும் வியப்பளித்தது. இதை மனைவி பிற்பாடு விளக்கினாள். டாக்டர் ஹசன் அவளிடன் நுண்பேசியில் எனக்கு உடல்நலம் மிக நன்றாக உள்ளது என்றும் மூச்சுத் திணறல், வயிற்றுவலி என்று நான் வெறுமனே நாடகம் போடுவதாக சொல்லி இருக்கிறார். நான் வெறுமனே வெளியே செல்வதற்க்காக நடிக்கிறேனாம். இதனால் நான் சுமார் இரண்டு மணிநேரம் துடித்தேன். எனக்கு ஏன் வயிற்று வலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டன? நாலு வருடங்களாக எனக்கு நீரிழிவு கோளாறு உண்டு. ஜுரத்தின் போது ரத்த சக்கரை எகிறி நுரையீரலையும் பாதித்தது. அதனால் வலி. டாக்டர் ஹசன் ஏன் அவ்வாறு பொய் சொன்னார்? அவருக்கு நான் வெளியே சென்று ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி விடக் கூடாது. பின்னர் என் துன்பமும் அலறலும் பொறுக்காமல் மாமியாரும் மனைவியுமாக பொன்மல்லிகை ஆஸ்பத்திரியில் சேர்த்த போது டாக்டர் ஹஸன் வந்து கடிந்து கொண்டார். “நான் வீட்டுக்கு வந்து பார்க்க மாட்டேனா?”. எனது அபாய நிலை அவருக்கு பொருட்டல்ல. ரூபாய் முன்னூறு அவர் கண்ணுக்கு அறத்தை மறைத்தது.
என் ஊனம் என் மாமியாருக்கு ஒரு மனத்தொந்திரவாக இருந்து வருகிறது. கூட நான் அவரை விட கீழ்சாதி என்பதும். இது காரணமாக என்னை மறைமுகமாக அவமானப்படுத்தி வந்துள்ளதால் நான் என் நீரிழிவை அவரிடம் இருந்து மறைத்தேன். சொன்னால் என்னை மேலும் ஒடுக்குவார் என்பது காரணம். என் ஊகம் போலவே அன்றிரவு நடந்தது. பொன்மல்லிகை ஆஸ்பத்திரியில் அன்றிரவு என் மாமியார் என் நீரிழிவு பற்றி தெரிந்து கொண்டு கடுங்கோபம் கொண்டார். “என் பெண்ணை ஏமாற்றி விட்டான் fraud” என்று தொடர்ந்து என்னை என் மனைவியிடம் வைது கொண்டு இருந்திருக்கிறார். அவ்வேளையில் என் நிலை? ஆஸ்பத்திரியில் டாக்டர் மருதுபாண்டியன் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற நம்பிக்கையில் இருந்தார். ரத்த சக்கரை எகிறி மூளை நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை தாக்குவதை அவர் கவனிக்க இல்லை. அதனால் எத்தனை வற்புறுத்தியும் அவர் என்னை வெறுமனே படுக்கையில் வைத்திருந்த வாந்தி மாத்திரைகள் தந்து கொண்டிருந்தார். அவர் எனக்கு பைத்தியம் என்ற முடிவுக்கு வந்து நான் வெறுமனே மூச்சுத்திணறல் என்று நடிப்பதாய் என் மாமியாரிடம் சொன்னார். ஏற்கனவே கோபமுற்றிருந்த அவர் இந்த நடிப்பு கதையை உடனடி நம்பினார். இதை கூட இருந்த கவனித்த மனைவி என்னிடம் சொன்னது. உயர் ரத்த சக்கரை மூளையை தாக்கி மனக்குழப்பம் எனும் டெலிரியம் எனக்கு ஏற்பட்டது. அதாவது மூளைக்கு செல்லும் ரத்தத்தில் சக்கரை அறுநூறு எழுநூறுக்கு மேல் சென்று மது அருந்தியது போன்ற நிலை ஏற்படும். டாக்டர் இதை பைத்தியம் என்று நினைத்துக் கொண்டு நேரெதிர் பாதையில் என்னை வைத்தியம் பார்த்தார். ஒரு அறையில் நான் சோர்ந்து கிடந்து டிரிலிரியம் காரணமாக உளற ஆரம்பித்தேன். மூச்சு விட முடியாமல் அலறிக் கொண்டிருந்தேன். அவரும் பிறரும் என்னை எழுப்பி வைத்து கன்னத்தில் மாறி மாறி அறைந்தார்கள். “வேசம் போடாதே ஒழுங்காய் மூச்சு விடு” என்று திட்டி என்னை தொடர்ந்து உலுக்கினார்கள்.
என் மனைவிக்கு இச்சூழலை சமாளிக்கும் பக்குவமும், திறனும் போதவில்லை; அவள் இளையவள், களங்கமற்றவள். ஆனால் என் மாமியார் அப்படி அல்ல. ஐம்பத்து இரண்டு வருடங்கள் இந்த மாநகரத்தில் வாழ்ந்து, ஆசிரியையாக பணி செய்த அனுபவமும், ஏராளமான நண்பர்களும், சக்தி வாய்ந்த உறவினர்களும் கொண்டவர். ஆனால் அவ்வேளையில் அவர் மருத்துவமனைக்கு தன் உறவினர்களையோ நண்பர்களையோ அழைக்கவில்லை. மற்றொரு மருத்துவரின் கருத்து கேட்கவில்லை. அவர் உள்ளார்ந்த கோபத்துடனும் விலகலுடனும் நடந்து கொண்டார். ஒரு மூன்றாவது நபர் செய்யக் கூடிய உதவிகளை மட்டுமே செய்தார். அந்தளவு மட்டுமே ஈடுபாடு காட்டினார். பதற்றப்படவே இல்லை. இத்தனை மாற்றங்களும் அவரிடம் எனக்கு நீரிழிவு உள்ளதாய் மருத்துவர் சொன்னதும் 24 அன்று இரவு நிகழ்ந்ததாய் என் மனைவி சொன்னார்.
பிறகு நான் மயக்கமுற்று விழுந்தேன். மெல்ல கோமாவுக்குள் செல்ல ஆரம்பித்தேன். இதுவும் வெறும் நடிப்பு என்று சொல்லப்பட்டது. எனக்கு டிரிப்ஸ் ஏற்றப்பட்டு வெறுமனே விடப்படுகிறேன். தானே சரியாகி விடும் என்று டாக்டர் சொல்கிறார். நான் நினைவு தவறி கிடப்பதை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. குளத்து தேரை போல் வேடிக்கை பார்த்தார்கள். அடுத்து மாமியார் டாக்டருடன் சேர்ந்து எனக்கு மனநோய்க்கு வைத்தியம் பார்க்க ஆள் விசாரித்துக் கொண்டிருந்தார். 25ஆம் நாள் இரவு முழுக்க நான் முதல் நிலை கோமாவுக்குள் இருக்கிறேன். என் நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் மூளை செயல்பாட்டை மெல்ல நிறுத்தி வருகின்றன. மூளையில் கட்டிகள் உருவாகின்றன. வழக்கம் போல் நான் மனச்சோர்வு கொண்டு நடித்துக் கிடப்பதாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் என் வாழ்வில் இதுவரை மனநோய்க்கு எந்த வரலாறும் இல்லை. என் குடும்பத்தில் மரபார்ந்த ரீதியாய் மனநோய் இல்லை. ஆனாலும் டாக்டர் ஹசன் எனக்கு மனச்சோர்வு ஏற்பட்டுள்ளதாய் ஒரு அறிக்கை தயாரிக்கிறார். சென்னையில் எனக்கு மனுஷ்ய்பபுத்திரன், சாரு உள்ளிட்ட பெரும் ஆளுமை நண்பர்களும், விஜய், ஸ்ரீநிவாஸ், பிரகதீஷ், மாமல்லன் கார்த்தி உள்ளிட்ட நெருக்கமான படைப்பாளி நண்பர்கள் ஏராளமானோர் உள்ளனர். பெங்களூரில் என் அம்மாவும், அக்காவும் இருக்கிறாள். ஆனால் 25ஆம் தேதி முழுக்க நான் இருளில் கோமாவுக்குள் நழுவிக் கொண்டிருக்க அம்மா, அக்கா மற்றும் இந்த நண்பர்கள் யாருக்கும் சொல்லப்ப்பட இல்லை. என் நோய் ஒரு ரகசியமாக ஒன்றரை நாட்கள் காக்கப்பட்டது. இது ஏன் என்பது எனக்கு பெரும் புதிராகவே உள்ளது. என் அம்மாவும் அக்காவும் மனுஷ்புத்திரனும் சாருவும் நண்பர்களும் ஓடோடி வந்திருப்பார்கள். 28ஆம் நாள் அதுவரை நேரில் பார்த்திராத என் தோழி சம்பங்கி திருப்பத்தூரில் இருந்து சென்னை வந்து என்னை பார்த்து போனார். ஹமீம் முஸ்தபா அண்ணன் மதுரையில் இருந்து வந்து பார்த்தார். போனில் மட்டுமே பழக்கமான தமிழ்நதி அன்று வந்தார். சரியான நேரத்தில் தகவல் போயிருந்தால் இவர்கள் என்னை காப்பாற்றி இருப்பார்கள்; கண்டிப்பாக கோமாவுக்கு சென்றிருக்க மாட்டேன். ஆனால் என்னுடல் இருட்டில் திரைக்கு பின்னால் வைக்கப்பட்டது. அது சலனமற்று மூச்சு விட திணறியபடி மூளை பிரக்ஞையின்றி கிடந்தது. கிட்டத்தட்ட அரைப்பிணம்.
அது வரை நான் மிக நல்ல உடல்நிலையில் மனப்பிராந்தி காரணமாய் நோய் நடித்துக் கொண்டிருப்பதாய் சொல்லிக் கொண்டிருந்த டாக்டர்களும், மாமியாரும் 26ஆம் நாள் காலையில் என் சிறுநீரகம், நுரையீரல், மூளை உள்ளிட்ட உறுப்புகள் முழுக்க பழுதாகி போய் விட்டதை கண்டு பிடித்தார்கள். சும்மா நடித்துக் கொண்டிருந்த ஒருவன் திடீரென்று அனைத்து உறுப்புகளும் பழுதாகி இரண்டாம் கோமா நிலையில் இருக்கிறான். அட என்ன மாயம்? இரண்டு நாள் அறிக்கைகள் 26ஆம் தேதி ஒரே நாளில் மாறின. எனக்கு பத்து பெரும் அபாயங்கள் இருப்பதை பட்டியலிட்டு டாக்டர் என் மனைவியிடம் சொன்னார். “உயிர் பிழைக்க வாய்ப்பு மிகக் குறைவு” என்று அவர் பதற்றத்துடன் தெரிவித்தார். ஆக பாதி செத்து விட்ட என்னைப் பற்றி தகவல் வெளியே விடப்பட்டது. நண்பர்கள் அழைக்கப்பட்டார்கள். என் அக்காவுக்கும் அம்மாவுக்கும் நான் சாகக் கிடப்பதாய் தொலைபேசியில் சொல்லப்பட்டது.
என் அக்கா மாமியாரிடம் என்னை உடனடி குளோபல் ஆஸ்பத்திரிக்கு மாற்றும்படி சொன்னார். அப்போது தான் என் மாமியார் உள்ளதிலேயே ஆக விநோதமாய் நடந்திருக்கிறார். உள்ளுறுப்புகள் நின்று போய் கோமாவில் இருந்த நிலையில் எனக்கு கழிந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும் மதிப்பற்றவை. போகப் போக என் உடல் சீரழிந்து கொண்டிருந்தக் கூடும். இதனால் என் மனைவி தான் ஆஸ்பத்திரியில் இருந்து கட்டணத்தை செலுத்தி, டிஸ்சார்ஜ் அறிக்கை வாங்கி வருவதாகவும், தன் அம்மாவிடம் என்னை உடனடி குளோபல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறும் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் மாமியார் மறுக்கிறார். பொறுமையாக அங்கே நின்று அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து விட்ட பின்னரே என் அரைப் பிணத்துடன் நகர்ந்திருக்கிறார். என் அக்காவிடம் என் அபாய நிலை பற்றி தெரிவிக்கும் போது 26ஆம் நாள் மதியம் 12 என்னை புது ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்த போது மணி 4. கடந்திருக்கிறது. குறைந்தது மூன்று மணி நேரம் தாமதித்திருக்கிறார். ஒரு பொறுப்பான நிலையில் இருந்து அவர் இன்னும் துரிதமாக விவேகமாக இயங்கி இருக்க வேண்டும். என்ன காரணத்துக்காக தாமதித்தாராம்? தன் மகளை தனியாக விட மாட்டாராம். ஆனால் மகளோ அதே பகுதியில் தனியாக எத்தனையோ வருடங்கள் இருந்திருக்கிறாள். குறைந்தது அவர் ஒரு நண்பரை அழைத்து என் கோமா உடலை புது ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஒப்படைத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
என் நண்பர்கள் வர என் மாமியார் என் அரைபிணத்தை பார்த்து “என் மருமகன் ஒரு ஏமாற்றுக்காரன்” என்று சொல்லி சிரிக்கிறார். பிறகு அவர் தொடர்ந்து என்னை பழி சொல்லிக் கொண்டே இருக்கிறார். என் மனைவியை அவளது நெருங்கிய தோழியான மனிஷா அழைத்து “என்ன இருந்தாலும் உன் அம்மா அவரது மருமகனைப் பற்றி இப்படி பிறர் முன்னிலையில் கேவலப்படுத்துவது தப்பு. நீ உன் அம்மாவை இப்படி தொடர அனுமதிக்காதே” என்று கண்டிக்கிறாள். என் மனைவி சென்று அவள் அம்மாவை திட்டி வெளியே போக சொல்கிறாள். என் மாமியாரின் மகன் வந்து தன் அம்மாவின் வாயை மூட சொல்கிறான். மாமியார் ரகளையை விடுவதாய் இல்லை தற்காலிகமாய் மூளை செத்துக் கிடக்கும் என்னைப் பார்த்து சொல்கிறார் “ஏமாற்றுக்காரன் என் பெண் வாழ்க்கையை கெடுத்து விட்டான்”. உண்மையில் என் திருமணத்துக்கு முன்னரே என் நீரிழிவு கோளாறு என் மனைவிக்கு தெரியும். அதை தெரிந்தே என்னை காதலித்தாள். அவள் அதை என்றுமே புகார் ஆக்கினது இல்லை.
என் அக்கா பெங்களூரில் இருந்து சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையை சேர்ந்த நண்பரான டாக்டர் ஜான் தனபாலை அழைத்து நிலைமையை சொல்கிறார். அவரது பரிந்துரையின் பேரில் நான் 26ஆம் நாள் மதியம் குளோபல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறேன். சென்ற உடனே எனக்கு மூச்சுக்கு வெண்டிலேட்டர் வழங்கப்படுகிறது. இரண்டு மணி நேரத்தில் என் சரியான பிரச்சனை கண்டறியப்படுகிறது. ”இரண்டு நாள் கழித்தே உயிருக்கு உத்தரவாதம் தர முடியும்” என்கிறார்கள் குளோபல் மருத்துவர்கள். ரத்த சக்கரை கட்டுக்கு கொண்டு வருகிறார்கள். கோமாவில் இருந்து நான் மெல்ல வெளிவருகிறேன். என் மாமியார் என் மனைவியிடம் சொல்கிறார் “அவன் 24ஆம் தேதி உடல் நிலை சரியில்லை என்று சொன்னது உண்மைதான். அவன் நடிக்கவில்லை. நாம் ரெண்டு நாள் தாமதமாய் வந்து விட்டோம்”. ஆம் நான் செத்துக் கொண்டு இருந்தேன் என்பதை அவர் ரெண்டு நாட்கள் தாமதமாய் ஏற்றுக் கொண்டார். நான் முழுக்க ஏமாற்றுக் காரன் இல்லை. பைத்தியம் இல்லை. மூச்சுத் திணறல் என்று நடிக்கவில்லை. ஒரு பௌதீக உண்மையை கற்பனையால் மூடி மறைத்து சாகடிக்க பார்த்திருக்கிறார்கள்.
பிறகு இரண்டு விசயங்கள் என்னை மிகவும் தொந்தரவு செய்கின்றன. ஒன்று என் மனைவி கூறியது. நான் ஒன்றரை நாட்கள் “எனக்கு மூச்சு திணறுகிறது காப்பாற்றுங்கள்” என்று அங்கு பொன்மல்லிகை மருத்துவமனையில் ஒவ்வொருவரிடமும் கையெடுத்து கெஞ்சியிருக்கிறேன். பிறகு யாரும் உதவாமல் விட “அம்மா காப்பாற்று” என்று ஆயிரம் முறையாவது கத்தியிருக்கிறேன். பிறகு இந்த “அம்மா காப்பாற்று” கெஞ்சல் வாயில் உறைய நான் கோமா நிலைக்கு சென்றிருக்கிறேன். குளோபல் ஆஸ்பத்திரியில் நான் விழித்ததும் யார் முன்னே வந்தாலும் “அம்மா” என்று கைப் பற்றி இருக்கிறேன். யார் முன்னே கொண்டு வரப்பட்டாலும் எனக்கு அம்மா உருவம் தான். கடைசியில் என் அம்மா வரும் போது நான் முக்கால் செத்துப் போய் இருக்கிறேன். இந்த சென்னை மாநகரில் பெரும் நண்பர்கள் இருந்தும் என் உடல் மூச்சுக்காக இரண்டு நாட்கள் கெஞ்சித் துடித்திருக்கிறது. ஒரு வலிமையும் கூர்மையான இளைஞனை ஒரு மிருகம் போல் நடத்தியிருக்கிறார்கள். மயக்க நிலையில் அறைந்திருக்கிறார்கள். சில மணிநேரங்களில் என் உடல் அன்னியர் வசம் ஆனதும் அது கடுமையான வதைக்கு உள்ளாக்கப்பட்டு மரணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒரு படித்த இளைஞனுக்கு மாநகரில் நண்பர்கள் மத்தியில் இப்படி நடக்கக் கூடும் என்பது மிகவும் அதிர்ச்சியாக நம்பமுடியாததாக உள்ளது. ஒரு குடும்பத்துக்குள் கூட இது நிகழலாம். நாம் நம் வசம் இல்லை என்பது உண்மை.
அடுத்து, இரண்டு நாள் ஒரு மனிதனை எப்படி மயக்கநிலையில் விட்டு வைத்தார்கள் என்ற கேள்வி. யாராயினும் என்ன மருத்துவ அறிக்கை இருந்தாலும் ஒரு நாளுக்கு மேல் மூச்சு பேச்சில்லாமல் கிடந்தால் அப்படியே விட்டு வைக்க மாட்டார்கள். புதிய மருத்துவமனைக்கு தூக்கிச் செல்வார்கள். எனக்கு ஏன் இரண்டு நாள் மாற்று சிகிச்சை மறுக்கப்பட்டது? நான் ஏன் இரண்டாம் கோமா நிலைக்கு சென்று சிறுநீரகம் நுரையீரல் மூளை பழுதாகும் வரை காக்க வைக்கப்பட்டேன்? இந்த 24-26 நாட்களில் நிஜமாக நடந்தது என்ன? என் மாமியார் சுட்டியாக சொல்கிறார் “பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்ல உன் மனைவி தான் என்னை தூண்ட வேண்டும்.”. எதிர்பாராத சிரமமான வேளைகளில் ஒரு சிறு பெண் அல்ல முடிவெடுக்க வேண்டியது. அவள் குழப்பத்தில் எளிதில் உறைந்து போவாள். அவளுக்கு அனுபவம் போதாது. அப்போது ஒரு மூத்தவரே முடிவெடுத்து செயல்பட வேண்டியவர்.
என்னை ஏன் பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லவில்லை?. என் இழந்த நாட்களை நான் யாரிடம் கேட்க ? இழந்த கௌரவத்தை யாரிடம் கேட்க? நேர்ந்த வதைக்கு யாரிடம் நியாயம் கேட்க? என் காலத்தை களவாண்டது யார்?
இறுதியாக 24ஆம் நாளே என் அம்மா மற்றும் அக்காவிடம் அவர் அறிவிக்காதது ஏன்? இதை செய்ய 26ஆம் நாள் நாம் இரண்டாம் நிலை கோமாவுக்கு சென்று நான் முக்கால் செத்த வரை காத்திருந்தது ஏன்? என் நோயும் சிகிச்சையும் மயக்க நிலையும் ஏன் இருட்டில் ரகசியமாய் வைக்கப்பட்டது?
ஆனால் கோமாவில் இருந்து விழித்த நாள் நான் அடைந்தது ஒரு தெளிவான மகிழ்வான மனநிலை. அதுவரை வாழ்க்கையை ஒரு நோக்கமற்ற அர்த்தமற்ற ஓட்டம் என்றே நம்பி வந்திருந்தேன். பிறகு யோசித்தேன். எத்தனையோ தாமதங்கள், தவறான நோய் அறுதியீடுகள், நோயாளி மீதான அவநம்பிக்கை, தவறான சிகிச்சை, தவறான முடிவுகளுக்கு பிறகும், கோமாவில் சென்ற பின்னரும் வாழ்வின் அகக்கண் என்னை உயிருடன் மீட்டு வைத்துள்ளது. என் உயிர்ச்சுடரை காலம் உள்ளங்கைகளுக்குள் காத்து கொண்டு வந்து தந்துள்ளது. எழுத்துக்காகத் தான் இந்த மறுபிறப்பை கடவுள் எனக்கு தந்துள்ளார் என்று நம்புகிறேன். நான் இப்பிறப்பில் செய்துள்ள ஒரே நல்வினை அது மட்டுமே. கோமாவில் இருந்து மீண்ட இரண்டாம் நாள் என் உடல் பலவீனமாக இருந்தது. தலை விண்ணென்று வலித்தபடி இருந்தது. ஆனால் இரண்டு நாட்கள் உயிர்ப்பற்று கிடந்த கரம் கொண்டு என்னால் மிக சரளமாக உடனடி எழுத முடிந்தது. இரண்டு கவிதைகளும், இரண்டு கட்டுரைகளும் எழுதினேன். என் எழுத்து வேலை தற்காலிகமாய் அமைந்ததல்ல என்று ஆழமாக தோன்றுகிறது. எழுத்தின் முன் மண்டியிடுகிறேன்.
(ஆஸ்பத்திரியில் நடந்த அனைத்துக்கும் என்னிடம் தகுந்த ஆதார ஆவணங்கள் உள்ளன.)
Read More