Wednesday, 19 January 2011

“முள்”: துயரம் ஒரு பரிசு




முத்துமீனாளின் முள் எளிய சுருக்கமான வாழ்க்கைக் கதை. சற்றே தீவிரத் தன்மை குறைந்த, எழுத்துத் தமிழில் எழுதப்பட்ட மற்றொரு கருக்கு. ஒரு நாவலுக்கான முன்வரைவு போலவும் உள்ளது. மிகையும் சித்தாந்த உரிமை கோரலும் இல்லாததால் தடையன்றி அணுகக் கூடியதாக உள்ளன இந்நூலின் அசல் அனுபவங்கள். சரி, இந்த புத்தகத்தை நாம் ஏன் படிக்க வேண்டும்?

ஒரு வாழ்க்கைக் கதையை முக்கியமாக ஆக்குவது எழுத்தாளரின் ஆளுமையும் அவர் அடையும் அவதானிப்புகளும் தரிசனங்களும். வாழ்க்கை பொதுவாக ஒரே மாதிரி நம்மை சுற்றி சுழித்து ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு பெரும் சமூக மாற்றம், பிரச்சனை அல்லது பேராபத்து மற்றும் நெருக்கடிகள் நம்மை நின்று நிதானித்து வாழ்வை திரும்பி பார்க்க, தர்மாவேசத்துடன் எதிர்வினை செய்ய, நுண்பெருக்கியின் கீழ் வாழ்வின் அணுவை வைத்து சோதிக்கவோ தூண்டலாம். ஒரு வாழ்க்கை கதை எழுத சிறப்பு அனுபவங்கள் அல்ல தகுதி. எழுத்தின் கண் திறந்திருந்தால் போதும்; யாரும் வாழ்வனுபவத்தை எழுதலாம், ரவுடியோ, திருடியோ, விபச்சாரியோ, மந்திரி மகளோ, போலீஸ் அதிகாரியோ அல்லாத முத்துமீனாள் கூட. முத்துமீனாள் சொல்லும் வாழ்க்கை அதனளவில் புதிது என்றாலும் தினமணி நாளிதழ் விமர்சனம் சொல்வது போல் “யாரும் அறியாத ஒரு உலகம் அல்ல. முத்துமீனாளுக்கு சிறுமியாக இருக்கும் போது தொழுநோய் வருகிறது. ஆனாலும் இந்நூலை அவர் தொழுநோயுடனான போராட்டத்தை சித்தரிக்கும் ஒரு தன்னம்பிக்கையூட்டும் போலியான சுயகதையாக அவர் எழுதவில்லை; அதிர்ச்சித் தகவல்களை சவுக்கு போல் சொடுக்கி விடவும் அவர் முயலவில்லை. இந்நூல் அதன் பொதுவாக உரையாடல் அமைதிக்காகவும் அடங்கின தன்மைக்காகவும் ஒரு சின்ன ஆச்சரியத்தை அளிக்கிறது. நாடகீயமாக்கக் கூடிய, விரித்து தகவல்களால் பின்னியிருக்கக் கூடிய சில பழமான இடங்களை அவர் வெறுமனே சுட்ட மட்டுமே செய்கிறார். கர்த்தரின் முன் மௌனமாக மண்டியிடும் ஒரு பாதிரியாரைப் போன்று அவ்வனுவங்கள் முன் நிற்கிறார்..சுகுமாரன் பின்னுரையில் குறிப்பிடுவது போல் அவர் தன் தோழிகளுக்கு நேரும் அவலங்களின் போது மட்டுமே சற்றே உணர்ச்சி வசப்படுகிறார். இது அவரது ஆளுமையின் பண்பாக இருக்கலாம். முதலிரவின் போது கூட பதற்றமின்றி அமைதியாகவே இருக்கிறார். இந்த பண்பு எப்படி அவருக்குள் உருவானது என்பதற்கான விடை கூட இந்நூலை நுட்பமாக வாசிக்கும் வாசகனுக்கு நிச்சயம் கிடைக்கும். கூறல் அமைதியுடன் முத்துமீனாளின் பொதுவான வெளிப்படைத் தன்மையும் சேர்ந்து கொள்ள ஒரு கபடமின்மை உருவாகிறது. இந்த கபடமின்மை கதைகூறும், சிறுமியாயிருந்து பூப்படைந்து மனைவியாகும், அந்த பெண்ணின் மீது நமக்கு ஒரு பிரியத்தையும் அணுக்கத்தையும் ஏற்படுத்துக்கிறது. இந்நூலின் பெரும் வசீகரம் அதுதான். வொர்ட்ஸ்வொர்த் முத்துமீனாளை சந்தித்தால் நிச்சயம் ஒரு சிறப்பு கவிதை எழுதுவார் என்று ஊகிக்கலாம்.

இந்த புத்தகத்தின் ஒரு நோக்கம் வாழ்வின் படிப்பினைகளை பதிவாக்குவது எனலாம். படிப்பினைகள் அனுபவத்தில் இருந்து நேரடியாக அனைவருக்கும் தேவை இருப்பதில்லை. மந்தை மனப்பான்மை இதற்கு காரணம். கீழ்த்தட்டு வகுப்பை சேர்ந்த குடும்பத்தில் தோன்றினாலும் அச்சிறுமி உறவுகளின் பாதுகாப்பில் தான் வளர்க்கப்படுகிறாள். அவள் வழமையான ஒரு நெருஞ்சிப் பூ பெண்ணாக வளர்ந்திருப்பார். ஆனால் தொழுநோய் அக்குழந்தையை 5 வருடங்கள் குடும்பமற்று தனியானவளாக ஆக்குகிறது. தொழுநோய் மருத்துவ இல்லத்திலும் தூய இருதய ஆண்டவர் மருத்துவமனை விடுதியிலும் முற்றிலும் அந்நிய மனிதர்கள் இடையே கடுமையான விதிமுறைகளுக்கு மத்தியில், புழு நெளியில் களி சாப்பிட்டு 5 வருடங்கள் வாழ்ந்து வெளிவரும் முத்துமீனாள் ஒரு சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்றது போல் இருந்தது என்கிறார். தன் குழந்தைப் பருவத்தில் ஒரு பாதி முழுக்க விளையாட்டையும், நண்பர்களையும், உறவுகளையும் தொலைத்தாலும் மருத்துவமனை விடுதியில் அவர் வலியையும், நோய்மையையும், அவலத்தையையும் மட்டுமே கண்டு வளர இல்லை. அன்பும் கருணையும் அக்கறையும் அங்கு அவருக்கு கிடைக்கிறது. வளர்-இளம் பருவத்தில் வெளி உலகுக்கு திரும்பும் மீனாள் தனிமை, அச்சம், நெருக்கடி, வலி, துயரம் போன்ற வாழ்வின் பெரும் தண்டனைகளையும், கருணையின் உதட்டு முத்தத்தையும் ஒருசேர பெற்று பதப்பட்டுள்ளார். வாழ்வு இந்த இரு எதிர் துருவங்களிலும் இல்லை, இரண்டையும் தொட்டு மத்தியில் எங்கோ உள்ளது என்பதை புரிந்து கொள்கிறார். தனிமனிதர்கள் மீது வெறுப்போ, சரணாகதி விருப்பமோ அவரிடம் துளியும் இல்லாமல் போவது இதனாலே. மிகச் சின்ன வயதில் இருந்தே தன் உடல் மற்றும் சுயமரியாதையை யாரும் சிதைக்க விடாத ஒரு கவனம் அல்லது உஷார் மனநிலையை அவர் உருவாக்கி கொள்கிறார். இதை மேலும் புரிய வைக்கவே முத்துமீனாள் தொழுநோய் படலத்தை சீக்கிரம் முடித்து தன் வளர்ந்த தோழிகளின் பிரச்சனைகள், வதைகள், மரணங்களை ஒரு முரண் கதையாடலாக முன்வைக்கிறார். முத்துமீனாள் தன்னளவுக்கு தன் தோழிகளின் வாழ்க்கை கதைகளின் ஆர்வம் காட்டுவது தன்னிச்சையான ஒன்றோ, வம்பளக்கும் மனப்பாங்கோ அல்ல. முத்துமீனாளின் தோழிகள் மேற்சொன்ன சுயபிரக்ஞை அற்றவர்கள். அவர்களின் துன்பம் தங்கள் சுயம் மற்றும் உடலை பிறர் இடத்து ஒப்படைத்து மெத்தனமாய், அபலையாய் இருக்க சம்மதிப்பதானேயே நேர்கிறது. தோழிகளின் பிரச்சனைகளும் அதன் காரணமான வதை மற்றும் மரணங்களும் பொதுவாய் ஒரு பாலியல் சரடை கொண்டிருந்தாலும் இப்புத்தகத்தின் லட்சியம் மோகமுள்ளின் வலியை, சமூகத்துக்கு புறம்பான உறவின் சிடுக்குகளை ஆய்வதல்ல. மனிதர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பிற மனிதர்களை வதைப்பதை இந்நூல் புரிய முயல்கிறது. தன் பொறுப்பை தானே எடுத்துக் கொண்டு வாழ்வின் மதிப்பை உணர்வது நம்மை பாதுகாக்க எவ்வளவு முக்கியம் என்பதை பேசுகிறது. இதனாலே இது முத்துமீனாள் தொழுநோயில் இருந்து தன்னம்பிக்கையுடன் மீண்டும் வருவதை சொல்லி வாசகனின் முதுகில் தட்டிக் கொடுக்கும் நம்பிக்கை ஊக்கி நூல் அல்ல. முள் சமமான ஒரு தளத்தில் வெவ்வேறு பெண்களின் சறுக்கல்களையும் கடும் வீழ்ச்சியையும் விவாதிக்க இடம் தருகிறது. இப்பெண்கள் செய்யும் ஒரு பொதுத் தவறு தம்மை கண்மூடித்தனமாய் ஆணிடம் ஒப்படைப்பது; அல்லது மற்றொருவருக்காக தம் உடலை அழித்துக் கொள்வது. சுயமரியாதையை இழப்பது. முத்துமீனாளின் எந்த தோழியும் தாமாகவே நெருக்கடியை எதிர்கொண்டு வெளிவரும் திராணியற்றவர்கள். மிக சின்ன வயதிலேயே இதை சாதித்து விடும் மீனாளுடன் இப்பெண்களை ஒப்பிட்டு பார்க்கும் இப்புத்தகம் தொழுநோய் கடவுள் அவருக்கு வழங்கிய ஒரு பரிசு தானோ என்று யோசிக்க வைக்கிறது. நம் வாழ்வை சிதைக்கும் ஒவ்வொரு அடியும் நமக்கு மீண்டு பெரும் வலுவுடன் வரும் ஒரு வாய்ப்பையுடன் சேர்த்தே தருகிறது. வலி நம்மை வலியற்றவனாக்குகிறது. துக்கம் நம்மை அதனை கடந்து போக வைக்கிறது. பெரும் வலிகளை நேரிடாமல் பாதுகாப்பாய் வாழ்பவர்கள், அதன் படிப்பினைகளை கற்காதவர்கள் எளிய ஒரு உலுக்கலில் சாய்ந்து விடக் கூடும். மீனாளின் தோழிகளுக்கு இதுவே நேர்கிறது.

அன்றாட வாழ்வுக்கு காதல் நெருக்கடி ஏற்படுத்துமானால் அந்த காதல் கூட உதாசீனிக்கப்பட வேண்டியது என்ற நிலைப்பாடு மீனாளிடம் உள்ளது. காரணம் ஒழுக்கவாதம் அல்ல. பேருந்து நிலையத்தில் உடைகள் கலைந்த நிலையில் அரைமயக்கத்தில் கிடக்கும் பாலியல் தொழிலாளிகளைக் கண்டு அவருக்கு கோபம் அல்ல இரக்கம் தான் ஏற்படுகிறது. மீனாளிடம் உள்ளது ஒரு எதிர்-கற்பனாவாத மனநிலை. சங்கரி என்ற பெண் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்ள். மீனாளுடன் அதே மருத்துவமனை விடுதியில் தங்கி படிக்கிறாள். அவள் ஒரு இளைஞனுடன் உறவு கொண்டிருந்ததால் விடுதியில் இருந்து வெளியேற்றப் படுகிறாள். பின்னர் அவ்விளைஞனால் கைவிடப்பட்டு அவள் விடுதிக்கு திரும்பி வந்து படிக்க விரும்பும் போது மதர் அவளை மன்னித்து வாய்ப்பளிக்க மறுக்கிறார். இதன் நியாய-அநியாயம் பற்றி மீனாள் சிந்திப்பதே இல்லை. அவள் அருமையன் என்ற வகுப்புத் தோழனை காதலித்து வந்தாள். தன் விடுதி வாழ்க்கைக்கு இடையூறு வரும் என்று அக்காதலை மறைத்துக் கொள்கிறாள். காதலை சுயதணிக்கை செய்து கொள்கிறாள். அதற்கு பிறகு அருமையனுடன் பாட சம்மந்தமாக மட்டுமே பேசுகிறாள். ஆனால் அவளது தோழி மல்லிகை என்பவள் தன் அம்மா காதலை மறுப்பதால் தற்கொலை செய்து கொள்கிறாள். செல்வி எனும் தோழிக்கும் காதல் எதிர்ப்பு தான் பிரச்சனை. அவள் தன் அம்மாவை மிரட்டி நகை ஒன்றை பெற எலி மருந்தை கரைத்து குடித்து அசட்டுத்தனமாக இறந்து போகிறாள். அந்த நகையுடன் தன் காதலனுடன் ஓடிப் போக திட்டமிட்டிருக்கிறாள். அவள் காதலனும் தொடர்ந்து தற்கொலை செய்கிறான். மீனா என்கிற பெண்ணை வற்புறுத்தி வசியம் வைத்து அவளது மாமனுடன் மணமுடித்து வைக்கிறார்கள். தன் தோற்றம் குறித்த தாழ்வுணர்வு கொண்ட அவன் மணமுடித்த சில வருடங்களில் அவளை கடுமையாக தாக்கி வதைக்கிறான். அவளை இறுதியில் பெற்றோர்கள் வந்து காப்பாற்றி போகிறார்கள். ஓரினச் சேர்க்கை உறவு பற்றி இரு சித்தரிப்புகள் உள்ளன. ஒரு ஜோடி கவனமாக இல்லாததால் உறவு கொள்ளும் போது விடுதி வார்டனிடம் பிடிபட்டு அவமானப்படுகிறது. சுமதி மற்றும் கீதா மற்றொரு ஜோடி. ஒருநாள் கீதா உறவு கொள்ள விழையும் போது சுமதி மறுக்கிறாள். காரணம் அவள் மாதவிலக்காக இருக்கிறாள். வேட்கை வன்மமாக மாறி கீதா அவளை கழுத்தை நெறித்து கொல்லப் பார்க்கிறாள். காதலின் போதான நிதானமின்மையும், காமத்தின் போதான பாதுகாப்பின்மையும் மீனாளை பொறுத்தமட்டில் விவேகமின்மை. இந்நூல் பூரா மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள் அல்லது அதற்கு பிறரை அனுமதிக்கிறார்கள். இது ஏன் என்ற கேள்வி இந்நூலுக்கு ஆதாரமானது.
மிக மோசமான வதைக்குள்ளாகும் பாத்திரம் ராதா எனும் பெண் தான். அவளை மீனாளுக்கு நிகராக ஆற்றல் மிக்க பாத்திரம் எனலாம். குழந்தையாக தொழுநோயால் கிட்டத்தட்ட காலை இழக்கப் போகும் நிலையில் மீனாள் போராடி மீண்டு வருகிறாள். ஆனால் கிட்டத்தட்ட உயிர் போகும் வரையிலும் ராதா பலவிதமான வதைகளை தாங்கி இறுதியில் தான் மீண்டு வருகிறாள். ராதா கள்ளக் காதலனுக்காக கணவனை துறக்கிறாள். காதலன் அவளை வேறொரு ஊருக்கு அழைத்து போய் குடி வைக்கிறான். சொந்த கணவனை விட்டு வந்தவள் தன்னையும் ஏமாற்றக் கூடும் என்று அவன் நாளடைவில் அவளை கற்பனையாய் சந்தேகிக்கிறான். தொடர்ந்து கடுமையாய் துன்புறுத்துகிறான். அவளை பார்க்க வரும் போதெல்லாம் அடிக்கவென்று ஒரு கம்பெடுத்து வருகிறான். சிகரெட்டால் அவள் உடம்பெல்லாம் சூடு வைக்கிறான். கிட்டத்தட்ட வீட்டுக்குள்ளேயே அவளை சிறை வைக்கிறான். ஓரிரவில் அடித்து மண்டையை பிளக்கிறான். மறுநாள் வஞ்சகமாய் மலங்காட்டுக்கு அழைத்து போய் அவளது உடமெங்கும் அரிவாளால் கொத்துகிறான். இறுதியில் தான் தாம் ஏன் இதுவரை பொறுத்திருந்தோம் என்ற விழிப்பு ராதாவுக்கு ஏற்படுகிறது. ராதாவுக்கு உதவ வரும் அண்டை வீட்டு பெண்களுள் ஒருத்தி கேட்கிறாள் “உனக்கு என்ன தொழிலா இல்ல; பூ கட்டி வித்து தனியா பிழைக்க முடியாது உனக்கு? தினந்தினம் இப்பிடி அசிங்கமும் அவமானமும் பட்டு செத்து செத்து பிழைக்கணுமா? இதற்கு பின் அவள் தன் கள்ளக்காதலனை விட்டு அகல்கிறாள். அம்மாவுடன் நிம்மதியாக வாழ்கிறாள்.
முள்ளில் ஒரு பெரும் எழுத்தாளனின் மொழி லாவகமோ, தொழில்நுட்பமோ, தெறிக்கும் அவதானிப்புகளோ இல்லை. இந்நூல் அதற்கான தனி இடத்தை அடைவது முத்துமீனாளின் விவேகமும் முதிர்ச்சியும் கூடிய ஆளுமையால் தான். நன்மையையும் தீமையையும் கசப்பற்ற புன்னகையால் எதிர்கொள்ள செய்கிற மன சமநிலையால்!
Share This

3 comments :

  1. ஒரு வேண்டுகோள்: பதிவை, இன்னும் பத்தி பத்தியாக பிரித்து - space விட்டு வெளியிட்டால், வாசிக்க இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

    ReplyDelete
  2. நல்ல அவதானிப்பு... "முள்" எனது கொடுமையான விடுதி நாட்களை ஞாபகப்படுத்தியது.

    //.”முள்ளில்” ஒரு பெரும் எழுத்தாளனின் மொழி லாவகமோ, தொழில்நுட்பமோ, தெறிக்கும் அவதானிப்புகளோ இல்லை. இந்நூல் அதற்கான தனி இடத்தை அடைவது முத்துமீனாளின் விவேகமும் முதிர்ச்சியும் கூடிய ஆளுமையால் தான். நன்மையையும் தீமையையும் கசப்பற்ற புன்னகையால் எதிர்கொள்ள செய்கிற மன சமநிலையால்!//
    படிக்கும்பொழுது எனக்கும் இதே தான் தோன்றியது.

    ReplyDelete
  3. சகோதரி சித்ரா சொல்வதை சொல்லத்தான் நானும் ரீடரிலிருந்து ப்ளாகருக்கு வந்தேன். சிறிய பத்திகளாக எழுதுங்களேன் அபிலாஷ். ஒரு பக்கம் முழுமைக்கும் வரிகள் நீள்கையில் வாசிப்பு சிரமமாகிறது. நன்றி.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates