Tuesday, 5 July 2011

பீனிக்ஸ் பறவை ஏன் ஒரே நாளில் எழுவதில்லை?

பவுன்சரை தவிர்க்க திணறும் கோலி
நடந்து வரும் மே.இ தீ கிரிக்கெட் தொடரில் மூன்று திறமையான இந்திய மட்டையாளர்கள் தம் கன்னி ஆட்டத்தை ஆடினார்கள். பத்ரிநாத்தும், மனோஜ் திவாரியும் ஒருநாள் போட்டிகளில், விராத் கோலி டெஸ்ட் போட்டிகளில். மூவருமே சர்வதேச கிரிக்கெட் எவ்வளவு சிரமமானது என்று தெரிந்து கொண்டார்கள். பொதுவாக உள்ளூர் போட்டிகளின் தரம் அவை எழுப்பும் சவாலை பொறுத்தது. இந்திய உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பில் திறமையும் பொறுமையும் கொண்டவர்கள் எளிதில் வெற்றி அடைய முடியும். அதற்கு அடுத்த சோதனை நிலையான ஐ.பி.எல்லில் ஒரு இளைய வீரரின் மனதிடம் உரசிப் பார்க்க படுகிறது. ஆனால் சர்வதேச ஆட்டத்தில் வெற்றிக்கான சூத்திரம் இவை மூன்றுமன்றி மற்றொரு கூறினாலும் உருவாகிறது. அது என்னவென்பது இன்றும் புதிர் தான். இந்த தொடர்பயணத்தில் இந்திய இளைஞர்கள் தங்கள் கன்னி முயற்சிகளில் தோற்ற போது மீடியாவில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த ஐயங்கள் வெளியாகின, ஐ.பி.எல் போன்ற துரித வகையறாக்கள் இளைஞர்களை சீரழிப்பதாக புகார்கள் சொல்லப்பட்டன. குறிப்பாய் வாசிம் அக்ரம் இந்திய இளைஞர்கள் மிகவும் ஏமாற்றமளிப்பதாய் ஆதங்கப்பட்டார். ஆனால் அப்போது ஒரு மீடியா விவாதத்தின் போது டோனி கிரெயிக் ஒன்று சொன்னார். அவரது முதல் ஆட்டத்தில் பூஜ்யம் எடுத்த நிலையில் ஒரு தவறு செய்தார். அவுட் தான். ஆனால் நடுவரின் கவனக் குறைவால் அவர் வெளியேற்றப்படவில்லை. அங்கிருந்து நன்றாக ஆடின கிரெயிக் சதம் அடித்து தனது தேசிய அணிக்காக நெடுங்காலம் ஆடினார். எப்போதும் வெற்றி தோல்வி மயிரிழையில் விளக்க முடியாத வேறுபாடுகளால் தான் தீர்மானமாகின்றன. உயரங்களை அடைபவர்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை. கீழே இருப்பவர்கள் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருப்பதும் இல்லை. முதலாமவர் இரண்டுக்கும் இடையே ஒரு சமநிலையை, கயிற்றில் நடக்கும் வித்தையை கற்றுக் கொள்கிறார்கள், அதை தொடர்ந்து செய்யும் தன்னம்பிக்கையை உருவாக்குகிறார்கள். ஆனால் ஒரு இளைஞரின் ஆரம்ப முயற்சிகளை அலசும் மீடியா நிபுணர்கள் அவர்களை துல்லியமாய அளந்து பொட்டலம் கட்ட அவசரம் காட்டுகிறார்கள். இவ்வாறு ஒருவரின் ஆட்டமதிப்பு சில நொடிகளில் அவர் செய்வதை வைத்து தீர்மானமாகிறது. ஒரு மட்டையாளர் தோல்வி அடைகிறார். அவரது தோல்விக்கான காரணம் சில அடிப்படைகளில் எளிதாக முத்திரை குத்தப்படுகிறது. அவர் வேகப்பந்தை அடிக்க முயன்று பந்தை தவற விட்டால் திறமை போதவில்லை. அவரது கால்-ஆட்டம் கம்மியாக இருந்தால் தொழில்நுட்பம் தவறு. அவர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்தால் பொறுமை போதவில்லை. தரையோடு அடித்து அமைதியாக ஆடினால் பந்துகளை வீணடிக்கும் மெத்தனமானவர். ஆனால் இன்று சர்வதேச தளத்தில் நன்கு நிலைபெற்றுள்ள பல வீரர்களும் மேற்சொன்ன குறைகளை முழுக்க களைந்திடாமல் எப்படியோ நன்கு ஆடி வருபவர்கள் தாம். சேவாகுக்கு உயரப்பந்து, பீட்டர்ஸனுக்கு இடதுகை சுழல், கெய்ல் மற்றும் யுவ்ராஜுக்கு ஆப்ஸ்பின், தோனிக்கு கால்சுழல் பலவீனம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த பலவீனத்துக்கு தொடர் இலக்காகாமல் தப்பிப்பது எப்படி என்று இவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதற்கு ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான வழிமுறை உண்டு. மேற்சொன்ன ஆட்டசமநிலைக்கு இதுவும் ஒரு உதாரணம். டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவாரஸ்யமே ஒரு வீரன் தன் பலவீனத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி எப்படி இலக்கை அடைகிறான் என்பதே. மீடியா ஒரு ஆட்டவீரனிடம் எதிர்பார்க்கும் கச்சிதம் வெறும் மிகைகற்பனை தான்.
மே.இ.தீவுகளில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆடுகளம் மிகுந்த பவுன்சும் ஸ்விங்கும் கொண்டதாக இருந்தது. இரண்டு போட்டிகளிலும் சொதப்பின விஜய் மற்றும் விராத் கோலி T20 மற்றும் ஒருநாள் போட்டி வகைகளில் பொறாமை கொள்ள வைக்கும் சாதனை வரலாறு கொண்டவர்கள். இந்த காரணத்தினாலே அவர்கள் மீது எதிர்பார்ப்புகளும் விளைவாக ஏமாற்றங்களும் மிகுதியாக இருந்தன. ஏற்கனவே பிற கிரிக்கெட் வகைகளில் கிடைத்துள்ள வெற்றி அவர்களை டெஸ்டில் ஆடும் போது எளிதில் குழம்பிப் போக வைத்தன. ஒருநாள் ஆட்டங்கள் அநேகமாய் ஒரே போன்ற மட்டையாட்ட சாதக ஆடுகளங்களில் நிகழ்கின்றன. வீச்சாளர்களும் அவர்கள் ஏற்படுத்தும் அழுத்தமும் எதிர்பார்க்கக் கூடிய அளவிலே இருக்கும். உதாரணமாய் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராய் ஆடும் போது பந்துவீச்சாளர்களால் துவக்க ஆட்டக்காரர்கள் அளவுக்கு மத்திய வரிசையினருக்கு சிரமங்கள் ஏற்படாது. முரளிதரன் ஆடிய போது இலங்கைக்கு எதிராய் மட்டையாளர்களின் நிலை இதற்கு நேர்மாறாக இருந்தது. ஆனால் டெஸ்டு ஆட்டங்கள் பலவிதமான மாறுபட்ட ஆடுகளங்களில் நிகழும். ஐந்து நாட்களின் போது ஒரே ஆடுகளத்தில் பந்தின் உயரம், வேகம், நகர்வு ஆகியவை மாறுபட்டுக் கொண்டே இருக்கும். உதாரணமாய் இந்தியாவின் கடந்த இலங்கை தொடரின் போது கடுமையான கடற்காற்று காரணமாய் எல்லா நாட்களிலும் பந்தின் நகர்வு அதிகமாகி மதிய இடைவேளைக்கு பின் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தன. இது ஒரு துர்கனவு போல் இரண்டு அணிகளையும் துரத்தியது. யாருக்கும் மதிய வேளை அபாயத்தில் இருந்து எப்படி தப்பிக்க என்று விளங்கவில்லை. அதைப் போன்றே டெஸ்ட் போட்டிகளில் பந்தின் நிலை மாறுவதும். இங்கிலாந்தில் வானம் மந்தாரமானால் ஸ்விங் திடீரென அதிகமாகும். ஆசியாவில் ஆடுகளம் சொரசொரப்பாக இருந்தால் ரிவர்ஸ் ஸ்விங் எதிர்பாராமல் ஏற்படும். அதைப் போன்றே சிறந்த பந்து வீச்சாளர்கள் எந்த கட்டத்திலும் எவ்வளவு ஓவர்களும் வீசலாம் என்பதால் மட்டையாளருக்கான சவால்கள் எண்ணற்றவை ஆகின்றன. இதைப் போன்றே ஒரு பந்து வீச்சாளரும் ஒரு ஆடுகளத்தில் எந்த வேகத்தில் எந்த நீளத்தில் வீச வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் போது ஆட்டம் முடிந்திருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெறுபவர்கள் தொடர்ந்து இந்த நுட்பமான மாற்றங்களை அவதானித்து தங்களை உடனடியாய் தகவமைத்துக் கொள்பவர்கள் தாம். இந்த கலை மீடியாவின் ஜுர வேகத்துக்கு ஏற்ப உடனடியாய் கற்றுக் கொள்ள முடிவதல்ல. ஒருவர் தனது ஆளுமைக்கு ஏற்றபடி விரைவாகவோ மெல்லவோ இந்த கலையை அறிந்து கொள்கிறார். அந்த கால-அவகாசம் முக்கியமே அல்ல. சச்சின் திராவிட் லக்‌ஷ்மண் மூவரணிக்கு மாற்றாக யார் வரப் போகிறார்கள் என்பது போன்ற அறுவையான ஒரு கற்பனையும் கணிப்பும் வேறு இருக்க முடியாது. ஒரு இளைய வீரர் தன் முதல் அடிகளை எடுத்து வைக்கும் போது நாம் அவரது தடுமாற்றத்தை சின்ன சின்ன தவறுகளை சின்ன சின்ன வெற்றிகளை ரசிக்க கற்க வேண்டும்.
உதாரணமாய் இரண்டாவது டெஸ்டில் விராத் கோலி மற்றும் கார்ல்டன் போவ் ஆடின ஆட்டங்கள். கோலி இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்திற்கு முன்பான மூன்று வாய்ப்புகளில் சொற்ப ஆட்டங்களில் ஆட்டம் இழந்து கடுமையான நெருக்கடியில் ஆடினார். அந்த இன்னிங்சில் அவர் சற்று நிலைத்து ஆடினார். அவர் பொதுவாக ஒருநாள் போட்டிகளில் ஒற்றை இரட்டை இலக்கங்களை பெரிதும் சார்ந்திருப்பார். லாங் ஆன், மிட் ஆப் பகுதிகளில் நளினமாய் பந்தை விரட்டி அமைதியாக ஓட்டங்கள் சேர்த்துக் கொண்டே இருப்பார். இந்த ஆட்டமுறை ஒருநாள் போட்டிகளில் அவருக்கு மிகவும் கைகொடுத்த ஒன்று. ஆனால் மே.இ.தீ டெஸ்ட் நடந்த எகிறும் ஆடுகளங்களில் அவரால் பந்தை விரட்ட முடியவில்லை. நம்பி வெட்டி ஆடவும் முடியவில்லை. அவருக்கு ஒற்றை ஓட்டங்களை எங்கிருந்து பெறுவதென்றே விளங்கவில்லை. குறிப்பாய் கால்சுழலர் பிஷூ குறைநீளத்தில் பந்தை வெளியே சுழற்றும் போது அவர் எங்கே ஆபத்தின்றி அடிப்பது என்று புரியாமல் சிகண்டியை பார்த்த பீஷ்மர் போல் வெறுமனே கட்டை போட்டுக் கொண்டு இருந்தார். இந்த திணறல் ஒரு சுவாரஸ்யமான காட்சி. எதிர்காலத்தில் கோலி பல சூட்சுமங்களை கற்று அபாரமாய் பல டெஸ்ட் சாதனைகளை நிகழ்த்தக் கூடும். ஆனால் அந்த சாதனை பயணத்தில் ஒரு சிட்டிகை உப்பு போல் இந்த காட்சிக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு.
கார்ல்டன் போவ் மே.இ.தீ அணி விக்கெட் கீப்பர். அவர் பொதுவாக ஒரு டம்மி மட்டையாளராக கருதப்படுகிறார். நல்ல கீப்பரான அவர் சுமாரான மட்டையாளராக இருப்பதில் யாருக்கும் அதிக புகார்கள் இல்லை தான். ஆனாலும் அவர் ஹர்பஜனின் பந்து வீச்சுக்கு ரொம்பவே எளிதாக வீழ்ந்து வந்தார். அவர் களத்துக்கு வந்தாலே பந்து ஹர்பஜனிடம் தரப்பட்டது. அவரை வெளியேற்றும் ஸ்விட்ச் தன்னிடம் உள்ளதென்று ஹர்பஜன் நம்பினார். அதனால் அவர் ஆட வந்தவுடன் ஹர்பஜன் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவராகவும் அவர் வெளியேறினவுடன் காற்றிறங்கி போயும் காணப்பட்டார். ஆனால் போவ் ஒன்றும் டம்மி அல்ல. அவருக்கு உள்ளூர் போட்டிகளில் முப்பத்தைந்துக்கு மேற்பட்ட சராசரியும், பத்துக்கு மேற்பட்ட சதங்களும் உண்டு. அவரது பிரச்சனை இது தான். ஹர்பஜன் பந்துவீச்சின் பவுன்ஸ் தன்னை வெளியேற்றுமா என்று பயந்தார். அவுட்டாகி விடுவோமா என்ற அச்சத்தினால் தொடர்ந்து அவுட்டாகி கொண்டிருந்தார். அதே இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸின் போது அவர் ஹர்பஜனின் பந்தில் எட்ஜ் கொடுக்க தோனி பந்தை தவற விட்டார். பின்னரும் அவர் பல முறை ஹர்பஜனிடம் இருந்து மலைவிளிம்பில் நிற்கும் சார்லி சாப்ளின் போல் தப்பித்தார். ஒருகட்டத்தில் போவுக்கு இது மிகவும் சங்கடமாக ஆனது. அல்லது எப்படியும் அவுட்டாகத் தானே போகிறோம், பரவாயில்லை என்று முடிவு செய்தார். பிறகு அவர் ஒரு ஓவரில் ஹர்பஜனை தாக்கி ஆடி துவம்சம் செய்தார். அத்தோடு அவரது ஆட்டம் மொத்தமாக மாறியது. அன்றைய இன்னிங்ஸில் அவர் மிகுந்த தைரியத்தோடு ஆடி ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்கள் எடுத்தார். பல சமயங்களில் தோல்வியின் விளிம்பில் இருந்து ஒருவர் பெறும் தடுமாற்றம் மிகுந்த தன்னம்பிக்கை வேடிக்கையானது. ஆனாலும் விசேசமானது.
Share This

3 comments :

  1. ஒரு அபாரமான டெஸ்ட் போட்டியை பார்ப்பது போலதான் நகர்கிறது உங்கள் அலசலும்... Interesting,

    வேகம், நகர்வு
    துர்கணவு
    இப்படி நிறைய :)

    ReplyDelete
  2. இவ்வளவு கிரிகெட் நூனுக்கங்களை தெளிவாக புரியும்படி எழுதியுள்ளீர் வாழ்த்துக்கள

    ReplyDelete
  3. அருமை...
    என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க...

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates