ஒரே முகபாவம் கொண்ட பூனையின்
முகம்
வெளிப்படையாய் காட்டுவது
உண்மை அல்ல
ஏனெனில்
அம்முகம் ஒருபோதும் மாறாமல்
யாருக்கோ காத்திருப்பது போல்
மறந்த எத்தனையோ முகங்களைப் போல்
அது மாறினாலும் மாறாமலே இருக்கிறது
அது முகமோ
அம்முகத்தின் ஜாடை ஒரு சேதியோ
அல்ல
என்று உறுதியாக தெரிகிறது
நிலைத்த முகமென்பதால்
அது சிந்தனை வயப்பட்டும் இல்லை
என்று
நம்பத் தலைப்படுகிறோம்
மணிக்கணக்காய் ஒரே இடத்தில்
நகராமல் கிடந்தாலும்
அது
எதற்கும் காத்திருக்கவில்லை
காத்திருப்பவர்கள்
எதை நோக்கியோ நகர்ந்து கொண்டிருப்பவர்கள்
ஒரு கனத்த இறுக்கமான
கருங்கல் குன்று
எதற்காகவும் காத்திருக்கவில்லை
அதைப் போன்றே
பூனையும்
பூனை
புது இடத்திற்கு நகர்வது
ஒரு பூகோள வரைபடத்தை
இடம் மாற்றி வைப்பது போல
விநோத ஓசைகளுக்கு
தன் செவிகளை திருப்பி
திசைகளை சோதிக்கும் பூனை
நகர்வுகளை நம்புவதில்லை
காற்று அடிப்பதும்
சூரியன் உதிப்பதும்
பேராறுகள் புதுத் தடங்களை தேர்வதும்
ஒரு பூ உதிர்வதும்
ஒரு சொல் மற்றொரு சொல்லை நோக்கி செல்வதும்
பிரயாணம் அல்ல
எந்த இடத்துக்கும் சொந்த மில்லாத ஒன்று
எந்த இடத்துக்கு செல்ல முடியும்
என பூனை கேட்கிறது
வீடெங்கும் தன் மயிர்களை
உதிர்க்கும்
பூனை
தான் அவ்விடங்களில் எல்லாம்
இருக்கவில்லை
என்று வாதிக்கிறது
அடிக்கடி வழமையான இடங்களில்
இருந்து மறையும் பூனை
இருட்டிலோ வெளிச்சத்திலோ
மறைவிலோ வெட்டவெளியிலோ
எங்கும் இருக்கலாம் என்பதாலே
அதை தேடுவதும்
மிக சிரமமாகிறது
டீவி பார்க்கும் பூனை
பாட்டு கேட்கும் பூனை
எலி பிடிக்கும் பூனை
மடியில் மட்டும் தூங்கும் பூனை
ரகசியமாய் குட்டிகளிட்டு வெளிப்படும் பூனை
குழந்தைகளால் துன்புறுத்தப்படும் பூனைகள்
ஒரு ஓய்வுப் பொழுதில் நம்மை தேடி வரும் அனாமநேய பூனை
ஏதோ ஒரு பொறுப்புடன் திரியும் பூனைகள்
யாவும் பூனைகள் அல்ல
அவை
பல்வேறுபட்ட வேடங்கள்
அசலான பூனை
தன் வேடத்தை ஒரு போதும் களையாது
தன் முகத்தை
ஒரு போதும் மறக்க முடியாததால்
அது
எந்த முகத்துடன் பேசினாலும்
ஒரே முகத்துடன் கவனிக்கும்
பூனையுடன் பேசும் போது
எந்த முகத்தையும் அணியலாம்
அதன் முகத்தை அணிந்தால் மட்டும்
நம்மை பொருட்படுத்தாது
முந்தின நாள் இருந்த இடத்தில்
அதற்கு முந்தின நாளும்
நாளைய இடத்தில்
இன்றும்
இருக்க முடிவதால்
தொடர்ச்சியான எதையும்
விட்டுவிட்டு செய்வதே சாத்தியம் என்பதால்
அது
தனக்கு நெருக்கமாய் அசைவது
காலம் மட்டுமே என்றபடி
வைக்கப்பட்ட இடத்திலே வைக்கப்பட்டு விட்ட
ஒரு பிளாஸ்டி புட்டியை
கைகளால் நகர்த்தப் பார்த்து
ஆர்வம் இழக்கிறது
மனித மனதின் விசித்திரங்களையும் இயல்பையும் கூர்மையாய் சொல்லும் கவிதை.
ReplyDeleteநன்றி
ReplyDelete