ஒரு இனிய செய்தியில் ஆரம்பமாகும் நாள்
அப்போதில்
இருந்து தான்
ஒரு இனிய நாள்
கண்டனங்கள் ஏமாற்றங்கள் வருத்தங்களில் இருந்து
மிக பாதுகாப்பாக இருக்கிறது
வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை போல்
அதற்கு மிக ரகசியமாக
உணவு போகிறது
மிக அலட்சியமாக புரண்டு படுக்கிறது
திரும்பிப் பார்க்காதவர்களுக்கு
அமைதியாக சில உதைகளை விடுகிறது
வழமையாக நம்மை
அவமானிக்கும் சங்கடப்படுத்தும் கண்ணீர் விட வைக்கும்
எதிரிகள்
ஒருநொடி குழம்பிப் போய் விடுகிறார்கள்
இனி என்ன செய்வது என.
ஒரு இனிய செய்தியுடன் துவங்கும் நாளை
யாராலும் நிறுத்த முடியாது -
துவங்கி முடியாத
அந்த நாளில்
எதேச்சையாக நீங்கள் விழிக்கிறீர்கள்
மீண்டும் அந்நாள் முடிகையில்
மழைபெய்யும் நாளில் தொப்பலாக வீடு திரும்புவது போல்
ஒவ்வொரு அறிந்த விரலாக தொட்டு
ஆசுவாசம் கொள்கிறீர்கள்
இனிய செய்தியில் ஆரம்பமாகும் நாள்
நம்மை
அவ்வளவு மூச்சு முட்ட வைக்கிறது
ஒரு இனிய செய்தியில் ஆரம்பமாகும் நாளைப் போல்
மிக அமைதியாக மகிழ்ச்சியை
வேறெதுவும்
தக்க வைப்பதில்லை
மகிழ்ச்சியோ நெகிழ்ச்சியோ எக்களிப்போ
ஒரு விரல் தீண்டலில் எதிர்தொடுகைக்கு புரிந்து விடுகிறது
நெரிசலான மக்கள் கூட்டத்தை பார்த்தபடி
அந்நியமாக தனியாக
நடைபாதையில் அமர்ந்து
கேவி கேவி அழுபவனை பார்த்திருக்கிறோம்
கடந்து போகும் நம்மை திடுக்கிட வைக்கும் படியாய்
செல்போனில் சட்டென கூவி அழும்
பெண்ணை கேட்டிருக்கிறோம்
மெல்ல கசக்கும் கண்களைப் பார்த்து
தூசா அழுகையா உண்மையா நடிப்பா என வியந்திருக்கிறோம்
துக்கத்துக்கு அவ்வளவு பிரயத்தனம் தேவையுள்ளது
நீங்கள் துக்கித்திருப்பதை நம்ப
யாருமே தயாராக இல்லை
அது சாத்தியமே இல்லை
அதில் நியாயமே இல்லை
ஒவ்வொரு பக்கமிருந்தும்
ஆறுதல் வருகிறது
களைத்து குற்றவுணர்வு அடைகிறீர்கள்
ஆனால் ஒரு இனிய செய்தியுடன் நாளை ஆரம்பித்தவனை
சட்டென்று நம்பி விடுகிறார்கள்
வறண்ட புன்னகையுடன் கைகுலுக்கிறார்கள்
மேலோட்டமான் குரலில் வாழ்த்துகிறார்கள்
கோபமாய் வெறிக்கிறார்கள்
இதெற்கெல்லாம் மகிழ்ச்சியடைவது மிகை என குறிப்புணர்த்துகிறார்கள்
துயரத்தின் போது அசலான நண்பனை கண்டறியலாம்
என யார் சொன்னது?
எனது வாழ்வின் மிக இனிய நாளின் போது
நான் கண்டேன்
ஒரு மிக இனிய நாளை
மிக கசப்பான நாளில் இருப்பவர்களால் தான்
அறிந்து கொள்ள முடியும் என
No comments :
Post a Comment