ரத்தக்கொழுப்பு பணக்காரர்களின், சோம்பேறிகளின், பருத்தவர்களின் உபாதையாக கருதப்படுவது. பரிணாமவியல் உணவு ஓய்வினோடு சம்பாதிக்கிற ஒன்றல்ல, அது உழைக்கும் இனத்தும் நிறமாக கருதப்படுகிற கறுப்பினோடு மிகுந்த தொடர்புடையது என சுட்டுகிறது. ரத்தத்தில் கொழுப்பின் அளவு கூடுவது நமது உடலின் பராமரிப்புக்கு மிகவும் அவசியமான விட்டமின் டியை சூரிய ஒளியில் இருந்து உற்பத்தி செய்வதற்காக இயற்கை ஏற்படுத்தின ஒரு வசதி மட்டுமே. இதற்கு சூரிய ஒளியில் உள்ள புற-ஊதா கதிர்களை கிரகிப்பது முக்கியம். புற-ஊதா கதிர்களை உடல் ரத்தத்தில் உள்ள கொழுப்பு மூலம் விட்டமின் டியாக மாற்றுகிறது. ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. அது தான் மேற்சொன்ன கறுப்பு நிற விவாதத்துக்கே ஆதாரம்.
மிகுதியான வெயில் தோலுக்கு தீங்கானது என நமக்குத் தெரியும். வெப்பமிகுந்த இந்தியா போன்ற நாடுகளில் விட குளிர்பிரதேசங்களில், குறிப்பாக ஐரோப்பாவில், வாழ்பவர்களுக்கு குறைந்தபட்ச சூரிய ஒளி தோலில் படுவது கூட மெலனோமா எனும் தோல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு 60,000 பேர் மெலனோமாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் ஐரோப்பிய வெள்ளையர்களை விட அமெரிக்க கறுப்பர்களுக்கு மெலனோமா வரும் வாய்ப்பு 10இல் இருந்து 40 மடங்கு குறைவு. இது ஏன்?
இதற்கு காரணம் நமக்கு நன்கு பரிச்சயமுள்ள, நம்மை பழுப்புநிறத்தவர்களாக வைத்து குற்றவுணர்ச்சி ஏற்படுத்தும், யூமெலனின் எனும் ஒரு நிறமி. மனிதத் தோலில் உள்ள மற்றொரு நிறமி போமெலனின். இது சிவப்புநிறத் தோலுக்கு காரணமானது. ஆப்பிரிக்கர்கள் மற்றும் ஆசியர்களுக்கு யூமெலனின் அதிகம், வெள்ளையர்களுக்கு போமெலனின். யூமெலனின் முக்கிய பணி அபரிதமான புற-ஊதாக் கதிர்களை உள்ளே நுழையாமல் தடுப்பது. தோல் புற்றுநோய்க்கு யூமெலனின் குறைபாடு தான் காரணம். வெண்குஷ்டம் எனப்படும் தோல்வியாதி உள்ளவர்கள் வெள்ளை மயிர், சிவப்பு தோலுடன் மற்றபடி நம் தோற்றத்துடன் தெரிவார்கள். அவர்களின் தோலில் யூமெலனின் முற்றிலும் குறைந்து விட்டதே வெண்குஷ்டத்தை ஏற்படுத்துகிறது. கண்கள் சிவப்பாக தெரியும். அந்த சிவப்பு கண்ணின் பின்னுள்ள ரத்தக்குழாய்கள் தாம். யூமெலனின் இல்லாமல் அவர்களின் கண்கள் தோலுரிக்கப்பட்ட கோழி போல் ஆகின்றன. இயற்கை வெயில் மிகுந்த பிரதேசத்தவர்களுக்கு தாராளமாக யூமெலனினை வழங்கியது. இது நம்மை வெறுமனே தோல்வியாதியிலிருந்து காப்பாற்ற அல்ல. மற்றொரு முக்கிய நோக்கம் இருக்கிறது. அது மிகுதியான புற-ஊதாக் கதிர்கள் உடலில் உள்ள போலேட் அமிலத்தை அழிக்காமல் தடுக்க. ஆக இயல்பாகவே கறுத்ததோலுடையவர்கள் பின்காலனிய கீழ்த்தட்டினர் ஆவது மட்டுமின்றி உடலுக்குள் குறைவான புற-ஊதாக் கதிர்கள் கிரகிக்க முடிபவர்கள் ஆவார்கள். நமக்கு புற-ஊதாக் கதிர்கள் வேண்டும். ரொம்பவும் வேண்டாம், குறைவாகவும் வேண்டாம். அளவாக வேண்டும். அதைக் கொண்டு தான் விட்டமின் டியை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் ஒளியை கிரகித்து வெளியேற்ற நமக்கு ஓர் உபாயம் இல்லை. வெயில் கொளுத்தும் நாட்டினருக்கு யூமெலனின் அரண் காரணமாக குறைவாக கிடைக்கும் புற-ஊதாக் கதிர்களை கொண்டு முடிந்த அளவு விட்டமின் டியை சமைக்க வேண்டும். விட்டமின் டி அல்லது போலேட் அமிலம் என ஒரு விருப்பத்தேர்வும் நமக்கு இல்லை. இரண்டும் மிக அத்தியாவசியாமனவை.
போலேட் அமிலம் ரத்தத்தில் சிவப்பணுக்களை சிருஷ்டிக்க தேவையானது. அணுக்கள் பிரியும் போது டி.என்.ஏவை காப்பி எடுக்கவும் இது வேண்டும். கருத்தரிப்பின் போது போலேட் அமிலம் குறைந்தால் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கும். விட்டமின் டி இல்லாவிட்டால் எலும்புருக்கி நோய் ஏற்படும். வலுவான எலும்புகளுக்கு, இதயம், நரம்புகள், நோயெதிர்ப்பு சக்தி, ரத்த உறைதல் திறன் ஆகியவற்றுக்கு விட்டமின் டி அவசியம். ஆக இரண்டுக்குமான ஒரு சமநிலை உபாயமாக இயற்கை நமது ரத்தத்தில் கொழுப்பின் அளவை உயர்த்தியது. வெயிலடிக்கிறது என்று சமிக்ஞை கிடைத்தால் கொழுப்பு உயரும். (இது கண் வழி போகிறது. ஆக வெயில் கண்ணாடி போட்டால் உடலுக்கு இச்சமிக்ஞை எளிதில் செல்லாது). ரத்தக் கொழுப்பு கறுப்பு மற்றும் பழுப்பு தோலர்கள் உள்வாங்கின கொஞ்ச நஞ்ச புற-ஊதா கதிர்களை விட்டமின் டீயாக மாற்ற உதவும்.
நவீன வாழ்வில் வெயிலில் அலைய வேண்டிய வாய்ப்புகள் அநேகமாக அற்றுப் போய் விட மனிதனுக்கு கொழுப்பு மட்டும் ஏகத்துக்கு தேங்குகிறது. அதை பயன்படுத்த புற-ஊதா கதிர்கள் இல்லை. விளைவாக ரத்தக்கொழுப்பு மட்டுமல்ல தீவிரமான விட்டமின் டி குறைபாடுகளும் ஏற்படுகின்றன. சுவாரஸ்யமாக, 1980களில் ஆஸ்திரேலியாவில் புற்றுநோய் பாதுகாப்புக்காக ஒரு அரசாங்க பிரச்சாரம் விரிவாக நிகழ்த்தப்பட்டது. ஸ்லிப்-ஸ்லோப்-ஸ்லாப் என்று பெயர். அதன் லட்சியம் மக்களை சன்ஸ்கீன் களிம்பு பூசி, உடலை சூரியனில் இருந்து பாதுகாக்கும்படியான ஆடைகளும், தொப்பிகளும் அணிய வலியுறுத்துவது. இந்த பிரச்சாரம் தோல் புற்றுநோய் பாதிப்பை வெகுவாக குறைக்க உதவினாலும் எதிர்விளைவு ஒன்றும் இருந்தது. பிரச்சார முடிவில் ஆஸ்திரேலியர்களில் அநேகம் பேருக்கு விட்டமின் டி குறைபாடு ஏற்பட்டது.
துணை-ஆர்ட்டிக் பகுதியிலுள்ள இனியுட் பழங்குடியினர் நல்ல கறுப்பர்கள். ஆனால் அங்கு சூரிய ஒளிய சோம்பலாய் மட்டுமே எட்டிப்பார்க்கும். குளிர்பகுதி மனிதனுக்கு ஏன் கருந்தோல்? இங்கு ஒரு மனத்திறப்பு நமக்கு கிடைக்கிறது. அது இனியுட் பழங்குடிகளின் உணவு பற்றியது. அவர்கள் மூன்று வேளையும் தாம் பிடிக்கும் மீன் உணவை மட்டும் உண்பவர்கள். அதனால் அபரிதமாகவே விட்டமின் டி கிடைப்பதால் சூரிய ஒளியில் புற-ஊதா கதிர்களை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு நாம் குறிப்பாக நினைவில் இருத்த வேண்டியது சீதோஷண நிலை ஒருவரின் நிறத்தை முழுதும் தீர்மானிப்பதில்லை என்பது. சற்று அதிகமாக வெயிலில் சுற்றி நம் சற்று நிறம் மங்கினால் அதற்கு ரொம்ப சுணங்க வேண்டியதில்லை.
சரி இப்போது ஒரு கேள்வி. கறுப்பானவர்களுக்கு மட்டும் தான் உயர் ரத்தக்கொழுப்பு வாய்ப்பு அதிகமா? இல்லை. ஏனென்பதற்குள் இங்கு ApoE4 என்கிற மரபணுவை குறிப்பிட வேண்டும். இது தான் வெயில் வருகிறதா என்று பார்த்து கொழுப்பின் அளவை எகிற வைக்கிறது. கறுப்பானவர்களுக்கு மட்டுமல்ல குறைவாக புற-ஊதாக்கதிர்கள் கிடைப்பது. வெயில் குறைந்த வட-ஐரோப்பியாவின் வெள்ளையர்களுக்கும் புற-ஊதா பற்றாக்குறை உண்டு. அவர்களுக்கும் ApoE4இன் சேவை தேவைப்படுகிறது. இந்த மரபணு ஐரோப்பாவில் வடக்குப்பகுதியில் அதிகம் மக்களிடையே காணப்படுவது சீதோஷண நிலை காரணமாகத் தான்.
இயற்கை தரும் எந்த நல்லதுக்கு ஒரு கெட்ட பக்கம் உண்டு. இரு சுவாரஸ்யமான உதாரணங்கள் பார்க்கலாம்.
ACCHOO நோய்க்குறி தொகுப்பு. சற்று நேரம் கும்மிருட்டில் வந்து விட்டு சட்டென்று வெளிச்சத்துக்கு திரும்பினால் சிலபேருக்கு விடாத தும்மல் ஏற்படும். இதுதான் ACCHOO. இந்த ACCHOO குகைகளில் வசித்த நம் முன்னோரிடம் இருந்து நம் மரபணுவில் வந்து தொற்றிக் கொண்டுள்ள ஒரு குணநலன். ஒரு எச்சம். அப்போது குகைகளில் உள்ள நுண்ணியிர்கள் ஆதிமனிதனின் சுவாசக்குழாயில் ஒட்டியிருந்து நோய் ஏற்படுத்தும் வாய்ப்பிருந்தது. அதனால் வெளியே வந்ததும் ஏற்படும் கடும் தும்மல் அவனுக்கு அவற்றை வெளியேற்ற உதவியது. இன்று அதன் தீவிர வடிவில் ACCHOO ஒரு நோய்.
குடிகாரர்களில் ஒரு சாராருக்கு ஒன்றிரண்டு பெக்குகளிலே தடுமாற்றம் வந்து விடும். சிலருக்கு எளிதில் வாந்தி வரும். வேர்த்து கொண்டு முகம் சிவந்து போகும். சிலர் மொந்தை மொந்தையாக குடித்தாலும் ஒன்றுமே நடக்காதது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டு கம்மென்று இருப்பார்கள். இந்த “கெப்பாசிட்டிக்கு” ஒரு காரணம் மரபியல். இந்த கெப்பாசிட்டி குறைவானவர்களிடம் இருப்பது ALDH2*2 எனும் மரபணு. இந்த மரபணு செய்யும் விஷமம் காரணமாக ஒரு பெக் அடித்தவுடன் ஏகப்பட்ட ரத்தம் உங்கள் வயிறு, மார்பு, தலையை நோக்கி பாய்கிறது. முகம் சிவக்கிறது. வாந்தி மயக்கம் ஏற்படுகிறது. சுருக்கமாக குடிப்பது ஒரு சங்கடமான சிரமமான அனுபவமாக மாறுகிறது. இதை ஆசிய முகம்சிவத்தல் (Asian Flush) என்கிறார்கள் ALDH2*2 குடிகாரர்கள் நிச்சயம் மதுபானத்தின் அந்த அடிப்படை கிளர்ச்சிக்காக, சமூமமாக்கத்துக்காக, மற்றும் வேறுபல தேவைக்காக குடிப்பார்கள். ஆனால் இவர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக மாட்டார்கள். இந்த மரபணு செய்யும் வேலையை தான் குடி-அடிமைகளை சீர்திருத்துவதற்காக மருத்துவர்கள் தரும் disulfiram போன்ற மருந்துகளும் செய்கின்றன. அது என்ன?
மதுவை நீர், கரியமில வாயு மற்றும் கொழுப்பாக மாற்றும் முன் நமது கல்லீரல் அதிலுள்ள விஷத்தை அகற்ற முயலும். அதற்கான வேதியல் செயல்பாட்டுக்கு முக்கியமாக அசிட்டால்டிஹைட் டீஹைட்ரோஜெனேஸ் எனும் ஒரு நீண்ட பெயருள்ள நொதியூக்கி (enzyme) தேவைப்படுகிறது. முதலில் உடல் மதுவை அசிட்டால்டீஹைட் எனும் ஒரு வேதியல் பொருளாக்குகிறது. பின்னர் இதனை அசிட்டேட்டாக்க வேண்டும். அப்புறம் தான் மது உணவாகும். பீர் கொழுப்பாகி தொப்பையாக உடலில் சேரும். பொதுவாக பல வெள்ளையர்களுக்கு இந்த மாற்றம் லகுவாக நிகழ்கிறது. ஆனால் ஆசியர்களில் ALDH2*2 மரபணு கொண்டவர்களின் உடலில் இந்த வேதியல் மாற்றம் முதல் கட்டத்திலே நின்று போகிறது. போதுமான மேற்சொன்ன நொதியூக்கி இல்லாமல் மது அசிட்டால்டிஹைட்டாக அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் உடலில் தேங்குகிறது. இந்த அசிட்டால்டிஹைட் சாராயத்தை விட முப்பது மடங்கு வீரியமான விஷம். இந்த வேதியல் சொதப்பலினால் தான் ஒருவகை குடிகாரர்களுக்கு சீக்கிரம் மப்பு ஏறி உளறவும் தடுமாறவும் துவங்குகிறார்கள். ஏன் இயற்கை இவ்வாறு பாரபட்சமாக உள்ளது? சிலரை முழுமையாக குடிபோதையின் உன்மத்தத்தை உணர விடாமல் துரிதஸ்கலிதம் பண்ண வைக்கிறது? இதற்கொரு சின்ன விளக்கம் உள்ளது. கொஞ்சம் நம்ப சிரமமாக இருந்தாலும் அதுவும் ஒரு விளக்கம் தான்.
சீனர்கள் தேநீரை பயன்படுத்தத் துவங்கியதற்கு ஒரு காரணம் சொல்வார்கள். அவர்களின் நீர் குடித்த தோதானது அல்லவென்பதால் வெந்நீர் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது உருவாகும் பழுப்பு வண்ணத்தை போக்கவே தேயிலைகளை தூவி டியாக்கினார்கள் என்பது அக்கதை. ஐரோப்பியர்கள் நொதிப்பித்தலை இதற்கு பதில் கண்டுபிடித்தார்கள். சாராயம் பிறந்தது. மதுவில் நுண்ணியிர்கள் இல்லை என்பது மட்டுமல்ல அதைக் கலந்த நீரும் சுத்தமானதே. அதனால் குடிப்பழக்கம் அவர்களின் பண்பாட்டில் ஒரு இன்றியமையாத பகுதியாகியது. ஒரு கட்டத்தில் அவர்களின் மரபணு குடிப்பழக்கத்துக்கு ஏற்றபடி மாறியது; மதுவிலுள்ள விஷத்தை சமர்த்தாக சுத்திரிகரிக்க ஐரோப்பிய உடல் கற்றுக் கொண்டது. தேநீர் போதுமென்று விட்டதால் ஆசியர்களுக்கு இயற்கை பொறுமையாக நிரம்ப குடித்து மெல்ல மெல்ல போதையேறி நிலைத்து சுகிப்பதற்கான மரபணுவை நல்கவில்லை. இயற்கையின் தவறல்ல, நிச்சயமாக.
அருமையான அறிவியல், மருத்துவ மற்றும் அரசியல் கட்டுரை .நிறத்தினால் உருவான அரசியலை அறிவியல் பூர்வமாக தாங்கள் சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குரியது .
ReplyDeleteமேலும்,நான் இங்கு வசிக்கும் பகுதியில் தற்பொழுது வெயில் காலம் தொடங்கியிருப்பதால் ,வெயில் தடுப்பு கண்ணாடி ஒன்று வாங்கி அணியும் எண்ணமிருந்தது .இந்த கட்டுரை வாசித்த பிறகு ,அந்த எண்ணமும் சமாதி ஆகிவிட்டது .இன்னொரு விஷயம் மது குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை, வேதியல் பூர்வமாக அணுகியிருந்தது பிடித்தது.
நலல கட்டுரை. ஆனால் படிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது; தங்களின் எழுத்து நடை தான் காரணம்.
ReplyDeleteநன்றி முருகேசன் பொன்னுசாமி
ReplyDeleteநன்றி வேல்முருகன் ரெங்கநாதன்
ReplyDelete