Friday, 20 April 2012

திருமணநாள் பரிசுகள்




திருமணநாள் பரிசுகள்
குழந்தைத்தனத்தால் புத்தொளிர்கின்றன.
வருடங்கள் முன் பின் சென்று
தூசு படிந்து
நிறம் மங்கி வரும்
ஒரு குழந்தையின் பாதுகாக்கப்பட்ட
விளையாட்டுப் பொருட்களைப் போல்

இன்று மாலை
பழைய பரிசுகளுடன்
அமர்ந்திருக்கிறேன்.

மஞ்சளான மாலை
அழுகும் இலைகளின் சலசலப்புடன்
இரவில் வெடிக்கும் பூக்களின்
வாசனையையும்
கொண்டு வருகிறது.

மாடி ஜன்னலுக்கு வெளியே
நூறு நூறு கட்டிடங்களுக்கு அப்பால்
ஒரு சோர்வுற்ற சூரியன்
இறுதியாய் ஆஸ்பத்திரிக்கு திரும்பும்
தளர்ந்து வீழ்ந்த உடலைப் போல்
எதையாவது பற்றிக் கொள்ள
விழைகிறான்.

எதிர்பாராது
மழை பெய்ய துவங்குகிறது
தயாரற்ற மனிதர்கள்
கூரைகள் தேடி சிதறுகிறார்கள்.

கால் இடறி தடுமாறுகிறேன்
உனது பரிசுப் பொருட்கள்
கலந்து விடுகின்றன
எனதுடன்.

மீண்டும் மீண்டும்
அவற்றை
இரு பகுதியாய் பிரிக்க முயன்று
தோல்வியடைகிறேன்
பின் காலவரிசைப்படி
கலைத்துக் கலைத்து
அடுக்குகிறேன்.

மழை நிற்க வெகுநேரமாகிறது
வெப்பம் கிளம்பி
பின்
பனி பொழியும் போது
திகைத்துப் போய்
பரிசுப் பொருட்கள் மத்தியில்
தற்காலிகமாய் எல்லாரும் மறந்து போன ஒரு குழந்தையைப் போல
அமர்ந்திருக்கிறேன்.

வாசலில்
மெல்ல தும்மியபடி
நுழைகிறாய்.

உன்னிடமிருந்து
பரிசுப் பொருளை வாங்கி
அருகில் வைத்து
உனக்கான புதுப் பரிசை
குவியலில் தேடி
தோற்று
வேறுவழியின்றி
கண்களில் மன்னிப்பை வைத்தபடி
அங்கு
ஆகப் பழசான பரிசு ஒன்றை
பொறுக்கி
நீட்டுகிறேன்
அதில் மிகச்சரியாய்
குறிக்கப்பட்டுள்ளது
இன்றைய தேதி...
Share This

1 comment :

  1. அபிலாஷ்,

    நிறைய கவிதைகளை நீங்கள் மொழிபெயர்த்ததன்(?) விளைவு அல்லது அபாயம் இக்கவிதையில் தெரிவதாய் தோன்றுகிறது எனக்கு. இலக்கணப் பிழைகள் கண்டிப்பாக கவிதையை உருக்குலையவே செய்கிறது. கவனம் தேவை என்றே சொல்ல தோன்றுகிறது. அடிக்கடி எழுத தேவையில்லை; அரிதான ஒன்றென்றாலும் கவிதை அற்புதமான ஒன்றாக‌ நிகழ வேண்டும்.
    எனது பின்னூட்டத்தை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் குறிப்பிட்டு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் வேறு எங்கும் பின்னூட்டங்கள் இட்டதுமில்லை.

    - வேல்முருகன் ரெங்கநாதன்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates