Thursday 28 February 2013

“கலங்கிய நதி” – லட்சியவாத மூட்டம்




பி.ஏ.கிருஷ்ணனின் “கலங்கிய நதி” ஒரு சரளமான சுவாரஸ்யமான நாவல். அவ்வளவு தான், அதற்கு மேல் இல்லை என்பது தான் ஏமாற்றமானது. பி.ஏ. கிருஷ்ணனின் “புலிநகக் கொன்றையில்” ஒரு வம்சாவளியில் வரும் சில தலைமுறை மனிதர்கள் தொடர்ந்து ஒரு காலச்சுழலில் மாட்டிக் கொள்கிற தத்துவார்த்தமான சித்திரம் உள்ளது. லட்சியவாதமும், மரணம் நோக்கிய உன்மத்த ஈர்ப்பும், அன்பும், காதலும் மனிதர்களை எப்படி ஒரு தூண்டிலுக்குள் கோர்த்து இழுக்கிறது, காலத்தின் விளிம்பில் மனிதன் எவ்வாறு திக்கற்று நிற்கிறான் என்பதைப் பற்றி செறிவாக பேசுகிறது.


“கலங்கிய நதியிலும்” இத்தகைய மனிதர்கள் வருகிறார்கள். ஆனால் சுருங்கிய ஒரு சமூக சிந்தனைத் தளத்துக்குள் இயங்குகிறார்கள். தொடர்ந்து தமது லட்சியவாதம் சரிதானா என கூர் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். நிறைய பேசி பேசி தாம் உத்தமமானவர்கள் என மார் தட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் போன தலைமுறை மனிதர்கள். சீரழிவை, தீமையை முழுமனதாக ஏற்றுக் கொண்ட இந்த தலைமுறையினரும் வருகிறார்கள். ஆனால் மிக மங்கலாக, குவிமையத்தின் விளிம்பில், முக்கியமற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த நாவல் ஊழலுக்கு எதிரான ஒரு சத்தியவானின் போராட்டம் பற்றியது. அவன் பெயர் ரமேஷ் சந்திரன். ரமேஷ் முடிவில் வீழ்ந்து விடுகிறான். ஆனால் தார்மீகரீதியாக தான் வென்று விட்டதை உணர்கிறான். அவனது மனைவி, சகாக்களும் அதை உறுதி செய்கிறார்கள். ரமேஷைப் போன்ற ஒரு சிலர் இன்றும் நம் அரசு எந்திரத்தின் ஒரு பல்லைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு போராடிக் கொண்டு வருகிறார்கள் தாம். மறுப்பில்லை. ஆனால் இந்த ரமேஷ் நமது சமகாலத்தின் பிரதிநிதி இல்லை. நாவலின் முடிவில் வரும் லட்சியவாத உறுதியும் எதிர்பார்ப்பும் நம்மில் ஒருவருக்கும் இல்லை. நாம் எனும் போது நான் வாசகர்களையும், சிந்தனையாளர்களையும் மட்டும் குறிப்பிடவில்லை. பொதுமக்களையும் தான்.
சமூகத்தின் அத்தனை நோய்மைகளையும் கொண்டாடுகிற இடத்துக்கு வந்திருக்கிறோம். கோணலான, அசட்டுத்தனமானவர்கள் தாம் நமது இன்றைய நாயகர்கள். ஊழல், கொலை போன்ற பலவும் இன்று குற்றங்கள், ஆனால் தீமைகள் அல்ல. இதை செய்கிறவர்கள் பணமும் அந்தஸ்தும் அடைந்து விட்டால் கண்ணியமாக நம்முன் உலா வருகிறார்கள். எதையும் செய்து சம்பாதியுங்கள், மக்களை ரொம்ப வஞ்சிக்காதவரை, மக்களுக்கும் கொஞ்சம் பங்கு தரும் வரை எதுவும் நியாயமே என்று சௌகரியமாக கோருகிற மனநிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். நம்முடைய இந்த அறவியல், சமூக மனநிலையை ஆராய்கிற நாவல்கள் தாம் இன்று தேவை.
பி.ஏ.கிருஷ்ணன் அமிதாவ் கோஷை போன்றவர். கோஷின் நாவல்களிலும் ஒரு லட்சியவாதியும் எதார்த்தவாதியும் வருவார். மோசமானவர்கள், சீரழிந்தவர்கள் வருவார்கள். ஆனால் பாதி நாவல் கடந்ததும் அனைவரும் லட்சியவாதியை போல பேச ஆரம்பித்து விடுவார்கள். அல்லது லட்சியவாதம் வெற்றி பெற தம் பங்குக்கு எதையாவது பேச, செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள் செய்வது நாம் இன்று ஒரு பெரும் பண்பாட்டு சிக்கலை எதிர்கொள்ளும் போது கொஞ்சம் கண்மூடி பின்னே சாய்ந்து நினைவேக்க கனவு காண்பது. இந்த நாவலிலும் அங்கங்கே ரமேஷின் லட்சியவாதத்திற்கு இடையூறு வரும் போது ராஜவன்ஷி எனும் முன்னாள் அஸ்ஸாம் முதல்வர், தற்போதைய அஸ்ஸாம் முதல்வர், ரமேஷின் துறைத்தலைவர் என ஒவ்வொருவராக வந்து “ரமேஷ் ஒரு அற்புதமான மனிதர்” என பாராட்டு பத்திரம் வாசித்து முட்டுக் கொடுக்கிறார்கள். வணிகப் படத்தில் வருவது போல பின்னணி இசை மட்டும் தான் குறை.
ரமேஷ் கோஷ் எனும் கடத்தப்பட்ட ஒரு அரசு அதிகாரியை மீட்பதற்கான அசகாய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு தன் உயிரும் இந்த முயற்சியில் போய் விடுமோ என பயம் இருக்கிறது. அதிகார மட்டத்தில் அலட்சியமும் சந்தர்ப்பவாதமும் தன் முயற்சிக்கு முட்டுக்கட்டையாகுமோ என அவநம்பிக்கை தோன்றுகிறது. அந்நேரம் பார்த்து கஷ்னபீஸ் எனும் பிரபல செய்தி டி.வி நிகழ்ச்சியாளனை விமானப்பயணம் ஒன்றில் சந்திக்கிறார். இந்த கஷ்னபீஸ் தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து ப்ராட்ஸ்கி எழுதிய ஒரு புத்தகம் வழுக்கி விழுகிறது. இதை ரமேஷ் எடுத்து வாசிக்கையில் அவர் விழித்துக் கொண்டு உடனே என்ன ஏது என்று விசாரிக்காமல் உபன்யாசம் செய்கிறார்: “நம்பிக்கை தான் நமக்குள் இருக்கிற வாழ்வூற்றை சுரக்க செய்கிறது. வாழ்வதற்கு வலுவான காரணத்தைக் கொடுக்கிறது”. ரமேஷ் சஞ்சலத்தில் இருக்கிறார். ஆனால் கஷ்னபீஸ் மெல்ல மெல்ல ஆறுதல்படுத்தி உறுதிப்படுத்த ரமேஷ் உற்சாகமாகி இறுதியில் “ஆமாம், எனக்கும் நம்பிக்கை தகர்ந்து விடவில்லை. எனக்கு பிரார்த்தனையில் நம்பிக்கை இருக்கிறது. அவ்வளவு அழிவுகளுக்கு மத்தியிலும் மகாத்மா காந்தி பிரார்த்தனையை கைவிடவில்லை என்பதை நாம் மறக்கக் கூடாது” என்று சொல்லி மீண்டும் பழைய ரமேஷ் ஆகிறார். இப்படி நாவலில் பல இடங்களில் சஞ்சலமும் உறுதிப்பாடும் வருகிறது. இது இன்றைய காலகட்டத்தில் வாழ நேர்கிற போன தலைமுறை லட்சியவாதம் கொண்ட நாவலாசிரியருக்கே அடிக்கடி வரும் சஞ்சலம் எனலாம். அவர் தொடர்ந்து காந்தியை மேற்கோள் காட்டி தன்னை தைரியப்படுத்திக் கொள்கிறார்.
பி.ஏ கிருஷ்ணன் முழுக்க அகிலனைப் போலவும் எழுதவில்லை தான். அவர் முடிந்தளவுக்கு லட்சியவாதத்தை சமனப்படுத்த பார்க்கிறார். ரமேஷ் பாத்திரத்தை பழைய மார்க்ஸியவாதியாகவும், மதம், சடங்குகள் போன்ற பழமைவாதத்தில் ஈடுபாடுள்ள மனைவி சுகன்யாவை கேலி பண்ணுகிறவராகவும், இந்துத்துவா பிடிக்காதவராகவும் காட்டுகிறார். ஆனால் இதையும் மீறி ரமேஷின் லட்சியவாத மிகை தான் மேலோங்குகிறது. உலகின் சிறந்த நாவல்கள் எல்லாம் லட்சியவாதம் பேசுகின்றன தான். ஆனால் அவை இன்னொன்றையும் செய்கின்றன. லட்சியவாதத்துக்கு நிகரான எதார்த்தவாதத்தையும், மறுப்புவாதத்தையும் பிற பாத்திரங்கள் மூலம் ஸ்தாபித்து இத்தரப்புகளை வலுவாக மோத விடுகின்றன. “கலங்கிய நதியின்” பிரச்சனை ஊழல் பண்ணுவதால் தவறில்லை, மாவோயிஸ வன்முறை தான் சரியான மார்க்கம் என்று திடமாக நிறுவுகிற ஒரு பாத்திரம் கூட இல்லை என்பது. அது முன்வைக்கும் கருத்துடன் மோதும் ஒரு வலுவான எதிர்த்தரப்பு இல்லை என்பது.
ஊழலுக்கு துணை போகிறவர்கள் கூட ரமேஷுக்கு ஆதரவளிக்க முன் வருகிறார்கள். ரமேஷுக்கு எதிராக பொய்ப்புகார் வரும் போது மொத்த அலுவலகமும் அவருக்கு ஆதரவாக செயல்படத் துணிகிறது. அதுவரை ரமேஷின் லட்சியவாதத்தில் மிகவும் எரிச்சலுற்ற சந்தர்ப்பவாதிகள் அவர்கள். திடீரென்று ஒரேகாட்சியில் ஹிரோவுக்கு உதவ களத்தில் குதிக்க துணிகிறார்கள். உண்மையில், இப்படி நடந்தால் பத்தில் ஒரு அலுவலகத்தில் கூட நாணயமான அதிகாரிக்கு மிச்ச பேர் ஆதரவளிப்பார்களா என்பது சந்தேகமே.
நாம் இப்படி எல்லாம் கேள்வி கேட்போம் என்று தான் பி.ஏ கிருஷ்ணன் வேறு இரண்டு தடுப்பரண்கள் வைத்திருக்கிறார். நாவலின் முடிவில் ரமேஷின் விடாமுயற்சியின் விளைவாக கோஷ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்படுகிறார். பின்னர் அவரது ரமேஷின் மனைவி சுகன்யாவும் நிர்மல் பூயான் என்பவரும் உரையாடும் போது கோஷின் விடுதலையில் ரமேஷின் பங்கு உண்மையில் சிறியது தான் என்று பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அதற்கு அவர்கள் சொல்லும் காரணமும் அவ்வளவு பலவீனமானது. எப்படியும் ரமேஷின் ஆத்மபலம் தான் விடுதலைக்கு மூல காரணம் என்கிற சித்திரமே நமக்கு ஏற்படுகிறது. மீண்டும் அகிலன் தான் ஜெயிக்கிறார்.
இன்னொரு தடுப்பரண் கதைக்குள் கதை என்கிற உத்தி. அதாவது மொத்த நாவலுமே ரமேஷ் எழுதுகிற ஒரு நாவல் தான். அதைப் படித்து அவரது மனைவி, நண்பர்கள் அவ்வப்போது கடிதபரிவர்த்தனை பண்ணுகிறார்கள். அதில் ரமேஷ் எந்தளவுக்கு உண்மையில் பொய் கலக்கிறார் என்பது தெரிய வருகிறது. ஆனால் பி.ஏ கிருஷ்ணன் எதிர்பார்ப்பது போல நாவலின் உண்மை பல அடுக்குகளை கொண்டது என்கிற சித்திரத்தை இந்த உத்தி அளிக்கவில்லை. அப்படியான பலகுரல்தன்மை கொண்ட நாவல் அல்ல இது. மாறாக இந்த உத்தி வாசகனை எரிச்சல்படுத்தத் தான் செய்கிறது. தமிழில் தொண்ணூறுகளில் இருந்தே புழங்கிப் புழங்கி உருமாறி விட்ட உத்தி இது. இவ்வளவு இற்றுப்போன உத்தியை பி.ஏ கிருஷ்ணன் மீண்டும் பிரயோகிக்கும் போது எந்த புதுமையும் ஏற்படுவதில்லை. ரமேஷைப் பற்றி நாம் அறியாத புது சித்திரமோ வாழ்வு என்பது ஒரு பிரம்மாண்ட கதையாடலின் சிறு பகுதி என்கிற வியப்போ நமக்கு ஏற்படுவதில்லை. ரமேஷின் தளும்பி வழியும் லட்சியவாதம் மற்றும் ஹீரோயிசத்தை மட்டுப்படுத்தவும் உதவவில்லை.
இந்நாவலில் அரசு எந்திரம் எவ்வாறு சமூகப்பிரஞை அற்று எண்ணற்ற விதிகளை, ஊழல்வாதிகளை துணை கொண்டு மக்களை வஞ்சிக்கிறது, அதனுடனான போராட்டம் தனிநபருக்கு எவ்வளவு ஆயாசம் தருவதாக உள்ளது என்னும் சித்திரம் உள்ளது தான். ஆனால் இதுவும் நாவலின் ஆரம்பம் முதற்கொண்டே நமக்கு வியப்பேற்படுவதாய் இல்லை. ரமேஷின் போராட்டம் தோல்வியடையும் என்று தான் வாசகனும் ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்க்கிறான். அவனை முறியடிக்கும் அரசு எந்திரத்தின் முறைகளும் ஏற்கனவே நாம் அறிந்ததாகத் தான் இருக்கிறது.
“கலங்கிய நதி” ஏன் பிடிக்கவில்லை எனக் கூற இவ்வளவும் எழுதவில்லை. உண்மையில் நாம் மிகவும் ரசித்துப் படித்தேன். இது ரசனைக்காரர்களுக்கான நாவல். ஆனால் அதற்கு மேல் தேடினால் ஏமாற்றம் ஏற்படும். இந்நாவலுக்கு ஏன் ஆழம் கூடவில்லை என்கிற கேள்வி எனக்கு ஏற்பட்டது. அதற்கு எனக்குத் தோன்றிய விடைகள் தாம் மேலே கூறி இருப்பவை. இன்னும் சுருக்கமாக சொல்கிறேன்.
ஒரு நாவலின் நோக்கம் மனிதனின் அகச்சிக்கல்களை பேசுவது அல்லது சமூகச் சிக்கல்களை, பண்பாட்டுப் பிரச்சனைகளை சித்தரிப்பது. அதனால் தான் சிறந்த நாவல்கள் என்றுமே மனிதனின் சீரழிவை, கீழ்மையை, இயலாமையை அலச முற்படுகின்றன. பி.ஏ கிருஷ்ணன் நேர்மாறாக திசையில் போய் ஒரு நல்லவன் இந்த யுகத்தில் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என பிடிவாதமாய் நியாயப்படுத்துகிறார். வாசகனுக்கு அதில் ஆர்வம் இல்லை. நமக்கு கெட்டவர்களாய் வாழ ஏன் இவ்வளவு பிடித்திருக்கிறது என்ற கேள்வியை அவர் கேட்கவில்லை.
ஆந்தனி பர்கஸ் என்னும் எழுத்தாளரின் மனைவியை சில சமூக விரோதிகள் அவர் முன்னிலையிலே கற்பழித்தார்கள். பர்கஸ் இதை வைத்து ஒரு நாவல் எழுதினார். Clockwork Orange. கற்பழுத்தவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து கதையை சொன்னார். அவர்கள் ஏன் இவ்வாறு இருக்கிறார்கள் என வினவினார். அவர்களை தண்டித்து திருத்தப்பார்க்கும் நியாயவான்கள் எப்படி அவர்களை விட ஒடுக்குமுறையாளர்களாக இருக்கிறார்கள் என சித்தரித்தார். குற்றமும் தண்டனையும் தீமை பற்றின ஒழுக்கவாத கண்டனமும் எப்படி அரசாலும் சமூகத்தாலும் அதிகாரத்தை அடைய பயன்படுகிறது என விவரித்தார். அகிலன், அமிதாவ் கோஷ், பி.ஏ கிருஷ்ணன் போன்றவர்கள் கற்பழிக்கப்பட்ட அந்த பெண் மற்றும் எழுத்தாளரின் கண்ணோட்டத்தில் நாவலை இருந்து எழுதுவார்கள். அவர்களின் துயரத்தை, போராட்டத்தை பேசி, குற்றவாளிகளை மன்னிக்கலாமா, எப்படி குற்றத்தை போராட்டம் மூலம் தடுக்கலாம் என லட்சியவாதம் பேசுவார்கள். மேற்சொன்னது இலக்கியம். பின்னால் சொன்னது கதாகாலட்சேபம்.
பி.ஏ கிருஷ்ணனிடம் பெரிய ஆகர்சம் அவரது நடை தான். தெளிவும், கூர்மையும், அங்கதமும், நக்கலும், புத்திசாலித்தனமும் பொருந்திய மொழி. சலிப்பே ஏற்படுத்தாத கதையோட்டம். சிறு பாத்திரங்களையும் நேர்த்தியாக வடிக்கும் பாங்கு. உற்சாகமான உரையாடல். சமகால தமிழில் இப்படி எழுதுகிறவர்கள் மிக மிக குறைவு. அந்த சொற்சிக்கனமும், புத்திசாலி அங்கதமும், சாமர்த்தியமும், மெல்லிய காமக்கிளர்சியும், ஆங்கிலத்தில் இருந்து உருவிக் கோர்த்தாற் போன்ற வாக்கிய அமைப்பும் நிச்சயம் சுஜாதாவை பல இடங்களில் நினைவுறுத்துகின்றன.
இவரைப் போன்று எழுதுகிறவர்கள் தமிழில் அவ்வளவாய் கிடையாது என சொன்னதற்கு இன்னொரு காரணம் சமகால நவீன தமிழ் புனைவின் சாயல் அதிகம் பி.ஏ கிருஷ்ணனிடம் இல்லை என்பது. தமிழில் வணிக எழுத்தும், ஆங்கிலத்தில் தீவிர எழுத்தும் படிக்கிறவரின் உரைநடையை போன்றுள்ளது இது. பி.ஏ கிருஷ்ணனுக்கு சமகால தமிழ் இலக்கிய பரிச்சயம் இல்லை என நான் கூறவரவில்லை. ஆனால் மொழி மற்றும் பிரக்ஞையை பொறுத்த மட்டில் தீவிர தமிழ் நாவல்களின் தடத்தில் வருவன அல்ல அவரது புனைவுகள். இது ஒரு அனுகூலம் தான் என்றும் சொல்ல வேண்டும்.
தீவிர இலக்கிய எழுத்து தமிழில் புல்லும் புதரும் மண்டிப் போய் விட்டது. எதையும் இழுத்து இழுத்து அநாவசிய தகவல்கள், மற்றும் உத்தி பிரயோகத்துடன் எழுதுகிற பாணி தமிழில் சலிப்பூட்டுவதாக உள்ளது. குறிப்பாக தொண்ணூறுகளில் எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி போன்றவர்கள் தோன்றி தமிழ் நடையை கலைத்துப் போட்டதில் இருந்து எல்லாம் இன்றும் போட்டது போட்டபடியே கிடக்கிறது. அடுத்த தலைமுறையினருக்கு ஒரு கதையை கூறுவதில் தயக்கம் உள்ளதை, சரளமாக எழுதுவதில் தடுமாற்றமும் ஒருவித குற்றவுணர்வும் இருப்பதையுமே நாம் பார்க்க முடியும். இரண்டாம் உலகக் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளில் இளைஞர்கள் எங்கு பார்த்தாலும் ஊனமுற்று நோக்கற்று வெறித்த பார்வையுடன் திரிந்தார்கள் என்பார்கள். தமிழில் பின் – கோணங்கி காலகட்டம் அப்படித் தான் இருந்தது, இன்னும் நீடிக்கிறது. சாருவைப் போன்று இந்த யுத்த கால பாதிப்பு ஏதும் இன்று வெளிச்சம் மிக்க சுதந்திர எழுத்தை இங்கு கொண்டு வந்தவர் பி.ஏ கிருஷ்ணன். இந்த நாவலையும் அதுதான் ஜோர்படுத்துகிறது.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates