Friday, 8 February 2013

“ஒரு வெயில் நேரம்”: ஒரு வாசிக்கத்தக்க தொகுப்பு





கதைகள் படுவேகமாய் சரளமாய் போகின்றன. இதை கொஞ்சம் அழுத்தியே சொல்ல வேண்டும். தற்போது தமிழில் தீவிர கதை எழுதுபவர்களுக்கு, அதிலும் வெகுவாய் கவனிக்கப்படுபவர்களில் பலருக்கும், ஒரு கதையை பிசிறின்றி சொல்லத் தெரியவில்லை. வாக்கியங்களை பிதுக்கி ஜெலேபி போல போட்டால் கவித்துவமாகி விடும் என நினைக்கிறார்கள்.
”வெயில் அடிக்கிறது” என எழுதமாட்டார்கள். ”வெயில் வானில் இருந்து விழுந்து கொண்டே இருக்கிறது” என்பார்கள்.
நர்சிம்மின் “ஒரு வெயில் நேரம்” சிறுகதைத் தொகுப்பு சுவாரஸ்யமான சின்ன சின்ன கதைகள் கொண்டது. கிராமத்து பாத்திரங்கள், குறிப்பாய் உருப்படியான சோலி ஏதும் இல்லாமல் சதா ஊர்வம்பு, ஊர் மக்களின் பிரச்சனை என அலைபவர்கள், வருகிறார்கள். இப்படியான வேலையில்லாத வேலையை கொண்டுள்ள மனிதர்களை கிராமத்தில் சாதாரணமாய் பார்க்க முடியும்.
இன்னொரு புறம் மக்கள் வாழ்க்கையை பதிவு செய்கிறோம் என்ற பெயரில் வறட்டுத்தனமாய் அரசாங்க கோப்புகளில் எழுதுவது போல் கதைசொல்லுபவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் சிக்கி நமக்கெல்லாம் மூச்சு முட்டும் போது ஒருவர் படிக்கும்படியாக எழுதுவதை குறிப்பிட்டு பாராட்ட வேண்டியாகிறது.
தொகுப்பின் முன்னுரையில் அமிர்தம் சூர்யா நர்சிம்மை வெகுஜனமா தீவிரமா என வகைப்படுத்த பிரயத்தனித்திருக்கிறார். நர்சிம்மை போன்றவர்களை பொறுத்தமட்டில் இது அநாவசியம் என நினைக்கிறேன். அவருடைய நோக்கம் சின்ன சின்ன வாழ்க்கைச் சித்திரங்கள் தீட்டுவது, ஒரு சின்ன மன சஞ்சலத்தை சித்தரிப்பது தான். இந்த வேலையை அநாயசமாக செய்கிறார் என்பது தான் பாராட்டத்தக்கது. குறிப்பாய் வசனம் எழுதும் சாமர்த்தியம் நிறைய இருக்கிறது. வசனங்கள் கொண்டு கதாபாத்திர இயல்புகளை, மனப்போக்கை சட்டென்று உணர்த்தி விடுகிறார். ஒரு கதையில் மாரியின் மனைவிக்கும் ஐம்பத்தெட்டு எனும் பெரிசுக்குமான சீண்டல் கலந்த உரையாடலை உதாரணம் சொல்லலாம். அதே போன்று இன்னொரு கதையில் ஊராருக்கு கடைக்கு போய் சாமான்கள் வாங்குவதை தொழிலாக கொண்ட ஒரு பிரம்மச்சாரி வருவார். ஊர்ப்பயைன்களுடனான அரட்டையில் அவரை இழுத்து ஒருவர் கேட்பான் “என் பஸ்ஸுல பொண்ணுங்கள் உரசுறியாமே”. அதற்கு அவர் “முட்டாள்தனமாய் பேசாதப்பா” என்று விட்டு ஒதுங்கி விடுவார். அவ்வளவு தான் நர்சிம் அதற்கு மேல் அவ்விசயத்தை விவரிப்பதில்லை. நமக்கு அவரது ஆளுமையின் இன்னொரு தனிமையான கோணலான பக்கம் கிடைத்து விடுகிறது.
குழந்தை பிறக்காததால் எந்த நிகழ்ச்சியிலும் சங்கடமின்றி கலந்து கொள்ள முடியாத ஒரு நண்பனின் கதை வருகிறது. குழந்தையில்லாதவர்கள் எப்படி சமூகத்துக்கு வெளியே அவ்வளவு சுலபத்தில் போய் விடுகிறார்கள் என்பதை தொட்டுணர்த்துகிறது. ஒரு மனம் பிறழ்ந்த பெண்ணை இரவில் பத்திரமான இடத்தில் சேர்ப்பிக்க இரு இளைஞர்கள் அலையும் கதை கூட நன்றாக வந்திருக்கிறது. பாசாங்கு கொண்டவர்களின் அவஸ்தையை அழகாக சித்தரிக்கிறார். அந்த இளைஞர்கள் சுஜாதாவின் ஸ்ரீரங்க திண்ணையில் இருந்து வேட்டியை உதறி மடித்து வெள்ளைச் சிரிப்புடன் எழுந்து வந்தவர்கள் போல் இருக்கிறார்கள்.
இந்த பாத்திர அமைப்புக்கு மேல் இக்கதைகளில் வேறொன்றும் இல்லை. நர்சிம் இவற்றுக்கு வலுவான முடிவு அளிக்க முயலும்போது வெகு செயற்கையாக இருக்கிறது. அநேகமாக இக்கதைகள் துவங்கி பாதி வந்ததும் முடிந்து போகின்றன. அதையும் ஒரு குற்றமாக பார்க்க முடியாது தான். ஏனெனில் அவருக்கு சிறுகதை எழுதுகிறேன் எனும் பாவனை சற்றும் இல்லை. அவரிடம் ஒருவித நேர்மை இருக்கிறது. மனிதர்களிடம் தான் அவதானிப்பதை தெளிவாக நகைச்சுவையாக எழுதுகிறார். நிச்சயமாய் இத்தொகுப்பில் உள்ள பல பாத்திரங்கள் உயிரோட்டமாய் இருக்கின்றன.
நர்சிம்மின் “அய்யனார் கம்மா” படித்திருக்கிறேன். மிக ஏமாற்றமளித்த தொகுப்பு. ஆனால் இந்நூலில் அபாரமான முன்னேற்றம் இருக்கிறது. சரளத்தில், கூர்மையில், கதாபாத்திர அமைப்பில், வசனத்தில். இது மேலும் பாராட்டுக்குரியது.
Share This

1 comment :

  1. தொகுப்பு நன்றாக இருக்கிறது....தங்களின் பார்வையில்...

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates