Saturday 16 February 2013

சச்சின், பிளட்சர் மற்றும் ஒரு பெண் மட்டையாளர் -





சச்சினின் சலனமற்ற ஓய்வு
சச்சினின் ஒருநாள் ஆட்ட வாழ்வு அதிகார பூர்வமாய் ஒரு முடிவுக்கு வருகிறது. அவர் கடந்த சில வருடங்களாய் ஒருநாள் வடிவை பொதுவாக தவிர்த்து வந்தார். அதனால் தற்போதைய ஓய்வு அறிவிப்பு ஒரு சடங்கு மட்டும் தான். அதன் ஒரே முக்கியத்துவம் அவர் தனது நூறாவது சதத்தை அடைவதற்காக செய்தது போல் தற்போது தன் ஆட்டநிலையை மேம்படுத்த ஒருநாள் வடிவை தற்காலிகமாய் பயன்படுத்தப் போவதில்லை என்பது. இந்திய அணியின் எதிர்காலத்துக்கு அது நல்லதல்ல என அவர் அறிவார். ஆக இது ஒரு நல்ல முடிவு.

சச்சின் டெஸ்டில் இருந்து விரைவில் ஓய்வுபெறக் கூடும் என்கிற ஊகத்தை இது வலுப்படுத்துகிறது. தற்போது நடந்து வரும் ரஞ்சி தொடரில் அரையிறுதியில் தவிர பிற ஆட்டங்களில் அவர் கலந்து கொள்ளவில்லை. சமீப கால டெஸ்டுகளில் சச்சினின் எதிர்மறை அணுகுமுறையும் அவரது எதிர்காலத்தை குறித்து நம்பிக்கை ஏற்படுத்தவில்லை. ஒரு எளிய பந்துக்குக் கூட பின்னங்காலுக்கு சென்று தடுத்தாடி தாக்குப்பிடிக்க முயலும் சச்சின் அல்ல நாம் அறிந்த சச்சின். உண்மையில் சச்சினின் குறைவான ஓட்டங்கள் அல்ல அவர் வெளியேறும் விதங்கள் தாம் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் மற்றும் நிபுணர்களை அவரது ஓய்வை எதிர்நோக்க வைக்கிறது. முன்பும் சச்சின் மோசமான ஆட்டநிலையில் பலதடவை வெளியேறி இருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் அவர் கிரீஸில் இருக்கும் சொற்ப காலம் பந்தை கச்சிதமாக தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வார். பிறகு ஒரு சிறுபிழை செய்து வெளியேறுவார். ஆனால் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் சதம் அடிப்பார் என்று ஒவ்வொருவரையும் நம்ப செய்தார். இப்போது நாம் பார்க்கும் சச்சின் நேர் எதிராக இருக்கிறார்.
சச்சின் இதுவரை ஏற்படுத்திய உன்னத பிம்பம் தான் இன்று அவருக்கு ஊறாக இருக்கிறது எனலாம். ஒரு ரெய்னாவோ யுவ்ராஜோ இப்படி ஆடி வெளியேறினால் நம்மால் வேடிக்கையாக அதை உதாசீனிக்க முடியும். ஆனால் சச்சினின் குழப்பம், அச்சம், நடுக்கம் ஆகியவை இந்திய ரசிகனை ஆழமாக காயப்படுத்துகிறது. அவன் தன் நினைவுகளோடு மோதுகிறான். சச்சின் இவரல்ல என தனக்குத் தானே நியாயப்படுத்துகிறான். சச்சினிடம் ஓய்வு பெறுமாறு கண்ணீரோடு மன்றாடுகிறான். சிலவேளை அது கோபமாக வெளிப்படுகிறது. சச்சினை அணியில் இருந்து நீக்க ஆவேசமாக கோருகிறான். ஆனால் சச்சின் அவ்வாறு நீக்கப்பட்டால் முதலில் மூர்க்கமாக எதிர்க்கப் போவதும் அவனாகத் தான் இருக்கும்.
சச்சினின் ஒருநாள் ஆட்டம் வேறொரு வரலாற்று காலத்துக்கானது எனலாம். தொண்ணூகளில் இருந்து ரெண்டாயிரத்தின் ஆரம்பம் வரை அவர் ஆதிக்கம் செலுத்திய கட்டத்தில் உலகம் முழுக்க துவக்க ஆட்டக்காரர்களின் பாத்திரம் அதிமுக்கியமாக இருந்தது. அவர்கள் ஆதிரடியாக துவக்கம் ஏற்படுத்தித் தர வேண்டும். அப்போது மட்டும் தான் முன்னூறு ஓட்டங்களை அணி தொட முடியும். 15 ஓவர்களின் 90 ஓட்டங்கள் எடுத்தால் அட்டகாசமான துவக்கம் என்று அறியப்பட்ட காலம் அது. அப்போது பெரும்பாலான அணிகளுக்கு வலுவான மத்திய ஆட்டவரிசை இருந்தது. மத்திய் வரிசை வீரர்கள் அந்த நல்ல துவக்கத்தை தக்க வைத்து நாற்பது ஓவர் வரை அணியை எடுத்துச் செல்ல அதற்கு மேல் வரும் அதிரடியாளர்கள் சுமார் எண்பதில் இருந்து நூறு ஓட்டங்கள் வரை எடுத்தால் மட்டுமே ஒரு அணி நல்ல ஸ்கோரை அடைய முடியும். இது எப்போதாவது தான் நிகழும். இதனால் தான் அன்று ஒருநாள் ஆட்ட மட்டையாட்டம் எதிர்பாராத தன்மை கொண்டிருந்தது. ஒரு அணி நல்ல துவக்கம் பெற்றிருந்தும் வேகமாய் விக்கெட்டுகள் விழுந்தால் 200 சொச்சத்தை தாண்ட முடியாது. மத்திய வரிசை வீரர்கள் மெத்தனமாய் நூறு பந்துகளுக்கு 60 அல்லது 70 ஓட்டங்கள் அடிக்கும் திராணி மட்டும் படைத்தவர்களாக இருந்தது இதற்கு ஒரு முக்கிய காரணம். இன்னொன்று ஒரே ஒரு பவர் பிளே இருந்தது.
இந்த சூழலில் தான் பவர்பிளேயின் போது அடித்தாடவும் பின்னர் மத்திய ஓவர்களில் நிலைத்தாடி நீண்ட ஸ்கோர் அடிக்கக் கூடிய துவக்க மட்டையாளர்கள் மிக முக்கியமானவர்களாக அணிக்கு இருந்தார்கள். மார்க் வாஹ், சயித் அன்வர் போன்று. இந்தியாவுக்கு சச்சின். இவர்களால் ஒரு ஆட்டத்தின் எந்த நிலையிலும் அடித்தாடவும் தம் விக்கெட்டை தக்க வைக்கவும் முடியும். இன்னொரு புறம் ஸ்திரமாக மட்டுமே ஆடக் கூடிய துவக்க வீரர்களை இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் கொண்டிருந்தன. ஜெயசூரியா போன்று பதினைந்து ஓவர்களுக்குள் ஆட்டத்தின் நிலையை தீர்மானித்து விட்டு விடைபெறும் மட்டையாளர்களும் இருந்தார்கள். ஆனால் இப்படியான வீரர்களை கொண்டிருந்த அணிகளுக்கு வலுவான மத்திய வரிசை இருந்தது. அவர்கள் ஒற்றை இரட்டை ஓட்டங்களை பிரதானப்படுத்தினர். நல்ல உடற்தகுதி கொண்டிருந்தனர். ஆனால் இந்திய அணிக்கு அப்போது சச்சின் மட்டுமே இருந்தார். அவரே அதிரடியான துவக்கத்தை அமைத்துக் கொடுத்து முடிந்தால் ஐம்பது ஓவர்களும் ஆடியாக வேண்டும். சுமார் நாலைந்து ஆண்டுகளாவது சச்சின் இவ்வாறு தனியாக அணியின் பாரத்தை சுமந்திருப்பார். பின்னர் கங்குலி, திராவிட் வந்த பிறகும் கூட சச்சின் சதம் அடிக்காவிட்டால் இந்திய அணி வெல்லாது என்கிற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது.
ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் மூன்று பவர் பிளேக்கள் அறிமுகமானதும், 20-20 ஆட்டத்தின் வருகையாலும் துவக்க ஆட்டக்காரர்களின் மீதான அழுத்தம் வெகுவாக குறைந்தது. இக்காலகட்டத்தின் உலகம் பூரா ஆடுதளங்கள் மட்டையாட்டத்துக்கு சாதகமாயின. மட்டைகள் தடிமனாக மாறின. மைதான எல்லைகள் சுருக்கப்பட்டன. ஒரு ஒருநாள் ஆட்டத்தின் மூன்று கட்டங்களில் எப்போது வேண்டுமென்றாலும் அதன் விதி தீர்மானிக்கப்படலாம் என்றாகியது. 1-20, 20-35, 35-45, 45-50 என பல்வேறு கட்டங்களாக ஆட்டம் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் சில மட்டையாளர்கள் பொறுப்பாக்கப்பட்டார்கள். தத்தமது பாத்திரத்தை மட்டையாளர்கள் நிறைவு செய்தால் ஒரு அணி சுலபமாக முன்னூற்று முப்பதை எட்டலாம். ஒருவர் அவர் எந்த துவக்க வீரரோ மத்திய வீரரோ தொடர்ந்து ஆடி சதமடித்து பிறரது ஆட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
இப்படி ஒருநாள் வடிவத்துக்குள் ஒருவித “ஜனநாயக” முறை வந்து விட்ட பின் துவக்க வரிசையை விட கீழ்மத்திய வரிசை மிக முக்கியமாக ஆனது. குறிப்பாக இரண்டு பந்துகள் பயன்படுத்தும் சட்டம் வந்த பின் கடைசி பதினைந்து ஓவர்களில் ஒரு அணி 150-100 ஓட்டங்கள் வரை சுலபத்தில் எடுக்க முடிந்தது. அதுவும் அதிக அபாயம் இல்லாமல். அதாவது ஒரு அணி 180 ஓட்டங்களை 35 ஓவரில் அதிக விக்கெட் இழப்பின்றி அடைந்து விட்டால் 300 இலக்கை எட்டுவது சர்வசாதாரணமாகி விட்டது. ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் கீழ்மத்திய வரிசை தான் அணிகளின் வெற்றியை தீர்மானிக்கிறது. வலுவான முதல் நான்கு மட்டையாளர்கள் இருந்தும் இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற அணிகளால் 2012 உலகக் கோப்பையை வெல்ல முடியாததற்கு அதுவே காரணம். இது தோனி, ரெய்னா, மார்க்கல், பொல்லார்டுகளின் காலம். பந்து வீச்சிலும் அதே போன்று இறுதி 15 ஓவர்கள் தாம் பிரதானமாகி விட்டன. (இன்று மூன்று பவர்பிளேக்கள் இரண்டாக சுருக்கப்பட்டாலும் மிச்ச முப்பது ஓவர்களிலும் வெளிவட்டத்தில் ஐந்து களத்தடுப்பாளர்களுக்கு மேல் கிடையாது. தற்போது ஒரு ஆட்டம் என்பது முழுக்க நீட்டிக்கப்பட்ட பவர்பிளே தான் என்றாகி விட்டது.)
இந்த சூழலில் தான் 50 ஓவர்கள் நிலைத்தாடி சதம் அடிக்கும் சச்சின்களின் பாத்திரம் ஓரளவு காலாவதியாகி விட்டது எனலாம். சச்சின் இன்று ஆடினாலும் நல்ல ஸ்திரமான துவக்கம் அளித்துத் தருவதும் 40 ஓவர்கள் வரை தொடர்ந்தாடுவது தான் அவரது பொறுப்பாக இருக்கும். அதாவது நிலைத்தாடும் பொறுமையோ தொழில்நுட்பமோ இல்லாத இளைய தலைமுறையை பாதுகாப்பதும் ஒருங்கிணைப்பதும். கிட்டத்தட்ட ஒரு மத்திய வரிசை மட்டையாளனின் இரண்டாம் நிலை வேலை இது. சச்சின் சதம் அடிக்கும் பட்சத்திலும் இன்று நட்சத்திரங்களாக கோலியும், தோனியும், ரெய்னாவுமே இருப்பர். அவர்களின் சுதந்திரமான அபாயகரமான ஆட்டங்களே வெற்றியை தீர்மானிப்பதாக இருக்கும். சமீபமாக சச்சின் ஒருநாள் ஆட்டவடிவில் ஆர்வம் இழந்து விட்டதற்கு வயதுடன் தன்னால் தகவமைய முடியாத படி ஒருநாள் ஆட்டத்தின் செயல்வடிவம் மாறி விட்டதும் அவரது இடம் சுருங்கி விட்டதும் காரணமாக இருக்கும்.
சச்சின் ஓய்வு பெறவில்லை, காலத்துடன் அவரும் பின்னகர்ந்து விட்டார்.

டங்கன் பிளட்சர்: இலையுதிர் கால தோட்டக்காரன்


டங்கன் பிளட்சரின் ஒப்பந்தம் இந்த மார்ச்சோடு முடிகிறது. அது நீட்டிக்கப்படாது என தெரிகிறது. அவரது பணிக் காலம் ஒரு முழுத் தோல்வியாக சித்தரிக்கப்படுகிறது. அவரது காலத்தில் தான் இந்தியா டெஸ்ட், ஒருநாள் வடிவிலும் கடும் தோல்விகளை சீரழிவுகளை சந்தித்தது. அவரை வீட்டுக்கு அனுப்ப இதுவே போதுமான காரணம் என சொல்லப்படுகிறது. இன்னொரு காரணம் அவர் திட்டம் மற்றும் பயிற்சியை பொறுத்தமட்டில் குறிப்பிடும்படியான பங்களிப்பை செய்யவில்லை என்பது. இளைய வீரர்களிடத்தும் அவர் சுமூகமாய் பழகுவதில்லை என இன்னொரு குற்றச்சாட்டும் உள்ளது.
இன்னொரு பக்கம் பிளட்சருக்கு ஆதரவாக சில வாதங்களும் உள்ளன. ஒன்று அவரது பணிக்காலம் இந்தியாவின் சரிவோடு எதேச்சையாக பொருந்திப் போனது என்பது. இந்திய அணியின் மூத்த வீரரகள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டநிலையை இழந்து பின் ஓய்வுற்றதும் பந்து வீச்சாளர்கள் இன்னொரு புறம் தொடர்ந்து காயமுற்றதும் ஆட்டநிலையை இழந்ததும் அணியை முழுக்க பலவீனமாக்கியது. பிளட்சரின் காலத்தில் இந்தியா தொடர்ந்து மே.இ தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என சிரமான வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டது. அணியை இப்பயணங்களின் பொருட்டு எவ்விதத்திலும் தயார்ப்படுத்த அதுவரையிலும் தேர்வுக்குழுவினரும் வாரியமும் முற்பட்டிருக்கவில்லை. மலைமுகட்டின் விளிம்பில் தடுமாறியபடி நின்ற அணியை சுண்டுவிரலால் எதுவோ உந்தி விட்டது. அதற்குப் பின் அதன் அவசர வீழ்ச்சியை, சிதறலை, மெதுவான வேதனையான மரணத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
பிளட்சருக்கு போதுமான அதிகாரம் வழங்கப்படவில்லை என பத்தியாளர் ஷத்ரா உக்ரவும் முன்னாள் வீரர் திராவிடும் கூறியுள்ளார்கள். பிளட்சர் இங்கிலாந்தின் பயிற்சியாளராக 8 ஆண்டுகாலம் இருந்த போது அங்குள்ள வாரியத்தின் கொள்கை முடிவுகளை தீர்மானிக்குமளவு அவருக்கு செல்வாக்கு இருந்தது. தற்போது இங்கு தத்தமது ஐ.பி.எல் அணி மீது இந்திய அணி வீரர்களுக்கு அதிக விசுவாசம் இருப்பது போல் அப்போது அங்கு இங்கிலாந்து வீரர்களுக்கு கவுண்டி அணிகள் தேசிய அணியை விட முக்கியமாக இருந்தது. இங்கிலாந்து டெஸ்டு ஆடுவதற்கு முந்தின நாள் குறிப்பிட்ட வீரர் தனது கவுண்டி அணிக்காக ஆடப் போவார். டெஸ்டு நடந்து கொண்டிருக்கும் போது அவர்களின் கவனம் தத்தமது கவுண்டி அணிகளின் ஆட்டநிலை மீது தான் அதிகம் இருக்கும். இதைத் தடுக்க பிளட்சர் இங்கிலாந்து அணிக்கு ஒப்பந்தமான வீரர்கள் கவுண்டியே ஆடக் கூடாது எனும் கராறான விதியை கொண்டு வந்தார். அதற்கு கடுமையான எதிர்ப்பு கவுண்டி அணிகளிடம் இருந்தும் பாரம்பரியமான சிந்தனையாளர்களிடத்து இருந்தும் வந்தது. ஆனால் அவர்களை எல்லாம் மீறி விதியை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஒரு பயிற்சியாளராக பிளட்சருக்கு இருந்தது. இந்தியாவில் காம்பிர் ஒருமுறை தனது காயத்தை பொருட்படுத்தாமல் ஐ.பி.எல்லில் ஆடி அதனால் சில காலம் தேசிய அணியில் ஆடமுடியாதபடி காயத்தை அதிகப்படுத்தினார். யாரும் அவரை கண்டிக்கவில்லை. அது போன்று உலகக் கோப்பை முடிந்ததும் நமது வீரர்கள் ஓய்வெடுக்காமல் ஐ.பி.எல்லில் கலந்து கொண்டு மேலும் களைத்துப் போயினர். ஐ.பி.எல்லிலே அங்கீகாரம், பணம் அனைத்தும் தேவைக்கு மேல் கிடைத்த பின் சர்வதேச ஆட்டங்களில் மேலும் சாதிக்கும் அக்கறையை இழந்தனர். விளைவாக தொடர்ந்து வந்த இங்கிலாந்து தொடரில் அனைத்து ஆட்டங்களையும் இழந்தனர். பிளட்சருக்கு அன்று இங்கிலாந்தில் இருந்த அதிகாரத்தை இங்கு இந்தியாவில் ஒரு பயிற்சியாளருக்கு கற்பனை செய்யவே முடியாது.
இங்கிலாந்தில் தேர்வு விசயத்திலும் பிளட்சர் இம்ரான்கான் போல் செயல்பட்டார். ஒரு கவுண்டி ஆட்டத்தை பார்வையிட்ட போது அவர் ஒரு உயரமான இடதுகை மட்டையாளர் ஒரு வேகமான உயரப்பந்தை அசட்டையாக ஹூக் செய்து சிக்ஸ் அடிப்பதைப் பார்த்தார். அடுத்த நொடி இவர் இங்கிலாந்தின் அடுத்த துவக்க வீரர் என முடிவு செய்து தேர்வாளர்களுக்கு பரிந்துரை செய்தார். அப்படித் தான் டிரஸ்கோதிக் எனும் அபாயகரமான துவக்க மட்டையாளர் இங்கிலாந்து அணியில் நுழைந்தார். இளைய வீரர்களின் திறமையை கணிக்கும் பிளட்சரின் இத்திறமையை அக்காலத்தில் அவருடன் வெற்றிகரமான அணித்தலைவராக இயங்கிய நாசிர் ஹுசேன் தனது Playing with Fire நூலில் வியக்கிறார். ஆனால் அவரது இத்திறனை நாம் முழுக்க கடந்த இரு வருடங்களில் வீணடித்து விட்டோம் என்பதே உண்மை.
தற்போது இங்கிலாந்து, நியுசிலாந்து போன்ற அணிகளில் பயிற்சியாளரை விட அணி இயக்குநர் என்ற பதவி அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு பயிற்சியாளர் கிடையாது. இயக்குநர் தான். ஆண்டி பிளவர். நட்சத்திர வீரரான பீட்டர்ஸனை தற்காலிகமாக அணியில் இருந்து தள்ளி வைக்கும் அளவுக்கு பிளவருக்கு அங்கு அதிகாரம் இருக்கிறது. நியுசிலாந்தில் ஆஸி புக்கன்னன் தான் இயக்குநர். ஆனால் அவர்கள் பயிற்சியாளர் என தனியாக ஜான் ரைட்டை வைத்திருந்ததால் இருவருக்கும் சச்சரவு மூண்டது. ஆஸ்திரேலியாவில் தேர்வாளராக அணித்தலைவரே உள்ளார். உலகம் இப்படி ஒரு திசையில் போய்க் கொண்டிருக்க இந்தியா பிளட்சரின் இரு கைகளையும் விலங்கிட்டு வாயில் பூட்டிட்டு பொம்மை பயிற்சியாளராக கொண்டு வந்தது.
பிளட்சர் பத்திரிகையாளர்களை, டிவிக்காரர்களை சந்திக்க தேவையில்லை என வாரியம் முடிவெடுத்தது. பிளட்சரும் ஊடகங்களில் பிரஸ்தாபிப்பதை விரும்புபவர் அல்ல. அதோடு பிளட்சர் தேர்வுக்குழு கூட்டத்திலும் கலந்து கொள்ள மாட்டார். அவர் இங்கு நடக்கும் ரஞ்சி ஆட்டங்களை பார்க்க மாட்டார். ஐ.பி.எல் நடக்கும் போதும் அவர் இங்கு இல்லை. அவருக்கு இங்குள்ள இளைய வீரர்களின் நிலைமை பற்றின நேரடியான அறிவோ அபிப்ராயமோ இல்லை. அவரால் டிரஸ்கோதிக் போன்று ஒருவரை கண்டறிந்து இந்திய அணிக்குள் கொண்டு வர முடியாது. இது அவரது தவறல்ல. நமது வாரியமோ தேர்வாளர்களோ அப்படியான அதிகாரத்தை பயிற்சியாளருக்கு தர விரும்ப மாட்டார்கள். சொல்லப் போனால் இங்கு தேர்வாளர்களே அத்தனை ரஞ்சி ஆட்டங்களையும் பார்ப்பதோ அல்லது அவற்றை பார்த்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அவர்களுக்கு உதவிக் குழுக்களோ இல்லை. கிட்டத்தட்ட அனைத்துமே இந்தியாவில் அரை இருட்டில் தான் இருக்கிறது. அப்படி இருக்க வேண்டும் எனத்தான் அதிகார மட்டம் பிரியப்படுகிறது.
பிளட்சரின் பொறுப்பு வீரர்களின் பயிற்சியை கண்காணிப்பதுடன் நின்று கொள்கிறது. முன்னர் கேரி கிர்ஸ்டன் வயதில் இளையவர் என்பதால் அணி வீரர்களுடன் எளிதில் நட்பாக முடிந்தது. அவர் அணியுடன் அணுக்கமாக செயல்பட்டார். அதை நாம் உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் வீரர்கள் அவரை தோளில் தூக்கி சென்ற போது புரிந்து கொண்டோம். மேலும் கிர்ஸ்டன் சச்சின், திராவிட், லக்‌ஷ்மண் ஆகியோரின் காலத்தில் சர்வதேச கிரிக்கெட் ஆடியவர், அதுவும் வெற்றிகரமான மட்டையாளர் என்பதால் வீரர்களுக்கு அவர் மீது இயல்பான மரியாதையும் நம்பிக்கையும் இருந்தது. ஆனால் பிளட்சர் ஒரு மூத்த பள்ளி தலைமை ஆசிரியர் போன்று அணிக்கு தோன்றுகிறவர். அவரது தோளில் கையிட்டு பழக நிச்சயம் வீரர்கள் தயங்குவர். இன்னொன்று கிர்ஸ்டன் பயிற்சியின் போது தானே மணிக்கணக்காய் பந்து வீசி அணியுடன் ஒத்துழைப்பவர். அவ்வாறு தான் அணியில் ஒருவராக அவர் மாறினார். ஆனால் பிளட்சரிடன் சென்று உரையாடுவது சுலபமல்ல என்று சில எளிய வீரர்கள் வாரியத்திடம் புகார் சொல்லி இருக்கிறார்கள். அவர் இங்கிலாந்து இங்கு பயணித்த போது தனக்கு நன்கு பரிச்சயமுள்ள இங்கிலாந்து வீரர்களின் பலவீனங்கள் குறித்து பாடமெடுக்கவில்லை என்று கூட சில மூத்த வீரர்கள் புகார் சொல்லி இருக்கிறார்கள்.
அத்தோடு பிளட்சரின் திட்டமிடும் திறனும் கேள்விக்குள்ளாகி உள்ளது. தோனி பொதுவாக இந்த விசயத்தில் பலவீனமானவர். கிர்ஸ்டனின் ஆலோசனைகள் தான் ஒருகாலத்தில் தோனியை காப்பாற்றியது, ஆனால் தற்போது பிளட்சரின் இயலாமை இந்திய அணியை பல அபத்தங்களை திட்டமிடல் விசயத்தில் செய்ய வைத்திருக்கிறது என்று சில நிபுணர்கள் அவதானிக்கிறார்கள். ஆஸ்திரேலிய பயணத்தின் போது முதல் டெஸ்டின் முதல் நாளில் உமேஷ் யாதவ் காற்றுக்கு எதிராக ஓடி பந்து வீச திணறியதும், இஷாந்த் குறைநீளத்தில் தொடர்ந்து வீசியதும் முக்கிய குறைகள். அதே போன்று ஸ்லிப்பில் நிபுணர்கள் நிற்காமல் மாறி மாறி புதியவர்கள் நிற்கும் பழக்க ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய இரு தொடர்களிலும் பின்பற்றப்பட்டு அதனாலே பல கேட்சுகளை அணி தவறவிட்டது. அதே போன்று தான் ஆஸி தொடரில் தொடர்ந்து நான்கு டெஸ்டுகளிலும் ஓட்டமெடுக்க தவறிய மூத்த மட்டையாளர்களுக்கு பதில் ரோஹித், ரஹானே போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்காததும் மோசமான திட்டமிடலாக கருதப்படுகிறது. இந்த விசயங்களில் எல்லாம் பயிற்சியாளர் எந்த ஒரு நடவடிக்கையும் உடனடியாக மட்டுமல்ல தாமதமாக கூட எடுக்கவில்லை என்பது தான் பிரச்சனை.
சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்டு தொடரில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து தோற்றதும் அதன் பயிற்சியாளர் பிளவர் பனேசரை ஆட வைக்காதது முக்கியமான தவறு என வெளிப்படையாக ஏற்றுக் கொண்டார். அடுத்த டெஸ்டு மும்பையில் நடந்த போது பனேசர் ஆடியது மட்டுமல்ல இங்கிலாந்து அணியின் அணுகுமுறை மற்றும் திட்டமிடலில் முக்கியமான மாறுதல் தெரிந்தது. இதுவே இந்திய அணி என்றால் தவறை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல அதையே தொடர்ந்து தொடர் முழுவதும் செய்து கொண்டிருப்பார்கள். பயிற்சியாளர் கறுப்புக் கண்ணாடிக்குப் பின்னே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்.
இந்த செயலின்மைக்கு எல்லாம் காரணம் பிளட்சரின் இயலாமையா அல்லது அவரைச் சுற்றி உள்ள அரசியல் சூழலா? ஒரு விசயம் மிகத் தெளிவு. இங்கிலாந்தை பல வருடங்களுக்குப் பின் ஆஷஸ் தொடரை வெற்றி பெற வைத்த பிளட்சர் அல்ல இவர். இவர் அவரது வாலி இரட்டைப் பிறவி. இவர் வேண்டுமென்றே செயலற்று சொல்லற்று இருக்கிறார். அதுவே தன்னால் முடியும் என அவர் முன் தீர்மானித்திருக்கலாம்.
கேரி கிர்ஸ்டனும் இதே அளவு அதிகாரத்துடன் தான் இங்கு பயிற்சியாளராக வெற்றி பெற்றார். ஆனால் அப்போது அவர் கீழ் வெற்றி தாகமும் புதிய சிந்தனையும் கொண்ட ஒரு இளம் அணித்தலைவரும் தமது ஆட்டநிலையின் உச்சத்தில் இருந்த மூத்த வீரர்களும் இருந்தனர். கூட வேறு பல பிரச்சனைகளும் இருந்தன. டெஸ்டு தொடரில் முதல் இடத்தை அடைந்த, உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி எவ்விதத்திலும் முழுமையானதாக பழுதற்றதாக இருக்கவில்லை. ஆனால் கிர்ஸ்டன் எப்படியோ சாமர்த்தியமாக பலவீனங்களை மறைத்து அணியை மேலெடுத்தார். காலமும் அவருக்கு உதவியது. பிளட்சர் இவ்விசயத்தில் தான் தோல்வியுற்றார். காலம் அவரை முழுமையாய் கவிழ்த்தது. முக்கியமாக அவர் இப்பிரச்சனைகளுக்கு தயாராக இருக்கவில்லை.
அடுத்த பயிற்சியாளர் யாரென்ற புது குழப்பம் எழுந்துள்ளது. சவுரவ் கங்குலி இரண்டு மாதங்களுக்கு முன்பே ஊடகங்கள் வழி மறைமுகமாக விண்ணப்பம் போட்டிருந்தார். சும்மாவல்ல இந்திய பயிற்சியாளருக்கன வருடாந்தர சம்பளம் ஒரு கோடி முப்பது லட்சத்து சொச்சம் (பிளட்சர் வாங்குவது). தற்போது அவர் இந்திய அணிக்கு இந்திய பயிற்சியாளரைத் தான் நியமிக்க வேண்டும் என கோரியுள்ளார். இதே கருத்தை கவாஸ்கர் வழிமொழிந்துள்ளார். இந்திய மனப்பான்மையை புரிந்து கொள்ளவும் இந்திய வீரர்களின் மதிப்பை வெல்லவும் ஒரு வெற்றிகரமான முன்னாள் இந்திய வீரரால் தான் முடியும் என அவர் கூற தன்னைத் தான் வழிமொழிகிறாரோ என ஊகங்கள் கிளம்பி உள்ளன. நமது முதல் வெள்ளைக்கார பயிற்சியாளர் ஜான் ரைட். பின்னர் சேப்பல், கிர்ஸ்டன் என நாம் வெள்ளையர்களைத் தான் விரும்பி அமர்த்துகிறோம். இந்திய மொழி, பண்பாடு, கிரிக்கெட் வரலாற்றில் பரிச்சயம் இல்லாத ஒரு அயலரை நம்பி ஏன் ஒரு அணியை ஒப்படைக்கிறோம்? அவர்கள் இங்கு வந்து சூழலுக்கு பழகவே அபார பொறுமையும் திறந்த மனமும் தேவை. சிலர் தான் முதல் படியில் வெல்லுகிறார்கள். இருந்தும் உள்ளூர் ஆட்களை தவிர்ப்பதற்கு பயிற்சி திறன், கிரிக்கெட் ஞானம் தவிர்த்து மற்றொரு காரணம் உள்ளது. அது ஈகோ அரசியல்.
இந்திய தேர்வாளர்களுக்கு வீரர்கள் அல்லது தலைவருடன் உரசல் ஏற்பட்டால் ஊடகங்கள் அல்லது வாரிய தொடர்புகளைக் கொண்டு திரும்ப சேற்றை வாரியடிக்கும் வாய்ப்பு அதிகம். அணியின் உள்விபரங்கள் வெளியில் கசியவும் நேரும். இந்திய அணித் தலைவர்கள் குகைக்குள் வேறு யாரும் கர்ஜிக்கக் கூடாது என விரும்புகிறார்கள். அதனால் தான் இன்று இந்திய பயிற்சியாளர்கள் வேண்டும் எனக் கோரும் கங்குலியே முதன்முதலாக வெள்ளைகாரர் ஒருவரை பயிற்சியாளராக நியமிக்கும் மரபை துவக்கி வைத்தார். மேலும் இந்திய தேர்வாளர்கள் முன்முடிவுகள், ஈகோ பிரச்சனைகளின் அடிப்படையில் எதிர்மறையாக நடந்து கொள்ளும் சந்தர்பங்களும் எழலாம். இந்தியர்களின் பொதுவான சமூக அமைப்பும் சாதிய மனநிலையும் நம்மைத் துண்டுத் துண்டாகவே வைத்திருக்கிறது. இங்கு கங்குலியோ கவாஸ்கரோ யார் பயிற்சியாளராக வந்தாலும் எளிதில் திறந்த மனதுடன் செயல்பட மாட்டார்கள். முதலில் அப்பத்தை பங்கு போடும் சச்சரவு நடக்கும். அப்பம் தீர்ந்ததும் அமைதியாக தத்தமது வேலையை பார்க்க போவார்கள்.
இப்படி சிக்கலான ஒரு காரணம் இருப்பதால் தான் அடுத்தும் ஒரு இந்தியர் பயிற்சியாளராக ஆவதற்கு சாத்தியம் மிக மிக குறைவு.
பிளட்சர் போய் இன்னொரு பிளட்சர் வந்தால் இந்திய அணியின் நிலைமை மேம்படுமா? மேம்படலாம். அதற்கு, பிளட்சரைப் போன்று அல்லாமல் இந்தியாவை மாற்ற முடியும் என்கிற நம்பிக்கையுடன் அவர் செயல்பட வேண்டும். செயலின்மை அவநம்பிக்கையில் இருந்து தான் தோன்றுகிறது. “எப்படியும் பேஷண்ட் பிழைக்க மாட்டார். எதுக்கும் பார்க்கலாம்” என்று பெயருக்கு மருந்து எழுதி கடந்து போகும் மருத்துவராக அவர் இருக்கக் கூடாது. முக்கியமாக தோனியின் குறைகளை நிவர்த்தி செய்கிற ஒருவராக அவர் இருக்க வேண்டும்.

கலப்புக் கிரிக்கெட்டின் துவக்கம்?


டென்னிஸில் மிக்சட் டபுள்ஸ் பார்த்திருக்கிறோம். போனமுறை லண்டன் ஒலிம்பிக்ஸில் சானியா மிர்சாவும் பயஸும் சேர்ந்து ஆடுவதைப் பார்த்தோம். இந்த மாதிரி ஆட்டங்களுக்கென ஒரு நாடகியத் தன்மையும் துடிப்பும் தனியாக உண்டு. மிக்ஸட் டபுள்ஸ் டென்னிஸ்ஸில் அதிக மதிப்பளிக்கப்படும் ஒன்றல்ல, வெகுமதியும் குறைவே. தரத்தை குறித்த கவலையும் உண்டு. ஆனாலும் ஒரு ஆட்டம் என்பது வெறுமனே திறன்களின் மோதல் மட்டும் அல்லவே. கிரிக்கெட்டில் ஆண்-பெண் கலப்பு ஆட்டத்திற்கான துவக்கம் இங்கிலாந்தில் ஏற்படப் போகிறது. உள்ளூர் அளவில் தான். ஆண்களுக்கான எஸக்ஸ் அணியில் இங்கிலாந்து பெண்களின் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார். நிர்வாக அளவிலான கடும் எதிர்ப்பின் மத்தியில் தான். ஊடகங்களிலும் பல அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். இதனை வரலாற்றுபூர்வமான் தருணம் என வரவேற்பவர்களும் இருக்கிறார்கள். முதலில் மறுப்பு வாதங்களைப் பார்ப்போம்.
ஒன்று, கிரிக்கெட்டின் தூய்மையை கெடுக்கும் என்பது. தரத்தை பொறுத்த மட்டிலும் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் பெண் கிரிக்கெட்டுக்கும் ஆண் கிரிக்கெட்டுக்கும் பெரிய இடைவெளி உண்டு. அது நியாயமும் தான். ஒரு அணியில் திறமையான வீராங்கனைகள் மிகச்சிலர் தான் இருப்பார்கள். மிச்சமெல்லாம் வெறும் இடத்தை நிரப்புபவர்கள் தாம். உதாரணமாக இங்கிலாந்துக்கு சாரா டெஸ்லர் என்றால் இந்தியாவுக்கு மித்தாலி ராஜ். ஆண்களின் ஆட்டத்தில் உள்ள வேகமும் ஆக்ரோஷமும் இவர்களின் மென்கிரிக்கெட்டில் இல்லை தான். அதற்காக இது பூப்பந்தட்டமும் இல்லை. திறமையான ஸ்டுரோக்குகள், ஸ்விங் உள்ளிட்ட நுணுக்கங்களை காண முடியும். ஒப்பிடுவதென்றால் மிக இளம் வயதில் ஆயிரம் ஓட்டங்களை எடுத்துள்ள சாரா டெய்லர் சுமார் நானூறு ஓட்டங்களை இதுவரை முப்பது வயது கடந்தும் எடுத்துள்ள இங்கிலாந்து ஆண்கள் அணியின் சமீத் பட்டேலை விட திறமையான மட்டையாளர் தான். இந்தியாவின் மித்தாலி ராஜ் இதே போல் ரவீந்திர ஜடேஜாவை விட அதிக திறமையானவர். பெண்கள் கிரிக்கெட்டில் நாம் மிக சாகசமான களத்தடுப்பு, காற்றில் பறந்து பிடிக்கும் கேட்சுகள், சில நொடிகளில் தோனி போன்றவர்களின் வேகத்தோடு ஓடிப் பெறக்கூடிய இரட்டை ஓட்டங்களை பார்க்க முடியாது தான். மேலும் அது ஒப்பீட்டளவில் ஒரு சின்ன பந்தைக் கொண்டு தான் ஆடப் படுகிறது. இருந்தும் பெண்கள் கிரிக்கெட்டை கவனிப்பவர்களும் அது தனித்துவமான நளினத்தையும் நுட்பத்தையும் கொண்டது என்பதை அறிவார்கள். அதில் உள்ள சுட்டித் தனம் ஆண்களின் கிரிக்கெட்டில் கிடையாது.
நான் இறுதியாய் சொன்ன காரணத்துக்காகத் தான் பெண்கள் ஆண்களுடன் ஆட வேண்டாம் என சிலர் வாதிக்கிறார்கள். பெண்களை இரக்கத்துடன் உயர்வுமனப்பான்மையுடன் ஊடகங்கள் பாராட்டி கொண்டாடுவது நடக்கும், அது பெண்கள் கிரிக்கெட்டை மேலும் ஆணாதிக்கவாதத்துக்குள் தள்ளும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இதே தொனியில் விவாதித்தால் இன்று பெண்கள் தாம் வேலைபார்க்கும் இடங்களிலும் பாதுகாப்பின்மையை, ஒடுக்குமுறையை அனுபவிக்கிறார்கள், அதற்காக அவர்கள் பின்வாங்கி தனி அலுவலகங்கள் அமைத்து வேலை செய்கிறார்களா என்ன? எப்படி வேலையிடங்களில் பெண்களின் முக்கியத்துவத்தை, பங்களிப்பை இன்று மெல்ல மெல்ல சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளதோ அதே போன்று ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டிலும் நிகழலாம். பெண்களுக்குத் தனி ஆண்களுக்குத் தனி என்பது கழிப்பறை விசயத்தில் மட்டும் தான் இறுதி வரை தேவைப்படும். பிளேட்டோ தனது ரிப்பப்ளிக் நூலில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஜிம்மில் பயிற்சி செய்ய வேண்டும் என கோரினார். அவரது எதிர்பார்ப்புப்படி அது அப்போது நடக்க சாத்தியப்படவில்லை (இப்போதும் தான்). ஏனெனில் உடற்பயிற்சிகள் அப்போது நிர்வாணமாய் செய்யப்பட்டன.
உண்மையில் இன்னொரு விசயத்தை சொல்லத் தான் இவ்வளவையும் எழுதினேன். கடந்த பத்தாண்டுகளில் கிரிக்கெட் சோபை இழந்து விட்டது. ஒரு திட்டவட்டமான ஒழுங்குநிலையை அனைத்து முக்கிய அணிகளும் அடைந்து விட்ட நிலையில் முன்பிருந்த எதிர்பாரா தன்மையை அது இழந்து விட்டது. அளவுக்கு அதிகமாய் ஆட்டங்கள் பின்னணி முக்கியத்துவமில்லாமல் ஆடப்படுகின்றன. ஒரு தொடரை இழப்பதோ ஜெயிப்பதோ இன்று ஒரு பொருட்டில்லை. மிக அற்புதமான வெற்றிகள் எனப்படுபவை கூட நினைவில் நிற்பதில்லை. திறன்களின் உச்சபச்ச மோதல் மட்டுமே கிரிக்கெட் என்றால் அது விரையில் ஒரு கணினி ஆட்டத்தை போல் நிறமற்றதாகி விடும். எப்படி கடந்த ஐந்தாண்டுகளில் T20யின் வருகை கிரிக்கெட்டுக்கு புத்துயிர் அளித்ததோ அதே போன்று ஆண்-பெண் கலப்பு வடிவம் ஒன்று ஏற்பட்டால் அது இந்த ஆட்டத்திற்கு மேலும் நலம் பயக்கும்.
T20 போல் கலப்புக் கிரிக்கெட்டும் ஒரு தனி வடிவமாக இயங்கலாம். கிரிக்கெட்டுக்கு மனித உணர்ச்சிகளை அளிக்க இது உதவலாம். மட்டையாட்டத்தை எடுத்துக் கொண்டால் மிகப்பிரபலமான ஜோடிகள் முரண்பாடான இரு ஆளுமைகள் சேர்ந்ததாகவே இருக்கும். லாரா-ஜிம்மி ஆடம்ஸ், திராவிட்-கங்குலி, பீட்டர்ஸன் – பெல் போல யின் – யாங் சேர்க்கைகளே என்றும் அதிக வெற்றிகரமாக சுவாரஸ்யமாக ஆண்கள் கிரிக்கெட்டிலே இருந்து வந்துள்ளன. இதே பாணியிலான ஜோடி சேர்க்கைகள் ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடும் போது உருவாக வாய்ப்புள்ளன. அது மட்டுமல்ல தொடர்ந்து ஆண்கள் மட்டுமே ஆடுவதைப் பார்ப்பது வெகுசலிப்பானது. சாரா டெய்லர் ஆடுவதைப் ரசிப்பதற்காக மட்டுமே நான் பெண்களின் உலகக் கோப்பை ஆட்டங்களை பார்த்திருக்கிறேன். பெண்கள் இந்த ஆட்டத்துக்கு யின் நெகிழ்வை மட்டுமல்ல அழகையும் நளினத்தையும் கொண்டு வருவார்கள். சினிமா ஜோடிகளைப் போல கிரிக்கெட்டிலும் பிரபல ஜோடிகளை ஊடகங்களை தோற்றுவிக்கக் கூடும். அவர்களைப் பற்றின புரளிகளையும் தான். இந்த நாடகீயம் காரணமாக கலப்புக் கிரிக்கெட் ஒரு நல்ல ரியாலிட்டி நிகழ்ச்சியாக மாறக் கூடும். கிரிக்கெட் கத்தோலிக்க அங்கிக்குள் இருந்து வெளிவருமாக. ஆமென்!

Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates