Thursday, 30 May 2013

அரசியல்வாதிகளை, காவலர்களை கொல்லுவது





சட்டீஸ்கர் முதல்வர் “மாவோயிஸ்டுகள் போலீஸ்கார்களை கொன்றால் அது மனித உரிமை மீறல் இல்லையா?” என கேட்டுள்ளார். முக்கியமான கேள்வி. சமீப மாவோயிஸ்டு தாக்குதலை ஒட்டி அறிவுஜீவிகளின் மாவோயிஸ ஆதரவை கண்டித்தும் இத்தாக்குதலை தீவிரவாத நடவடிக்கையாக பாவித்தும் டி.வி விவாதங்கள் நடந்தன. அதில் காங்கிரஸ்காரர்களும் அரசு அதிகாரிகளும் மட்டும் தான் இந்நிலைப்பாட்டை எடுத்தனர்.


வேறு புலங்களை சேர்ந்தவர்கள் இறந்தவர்கள் மீது எந்த ஒரு இரக்கமோ கண்ணீரோ காட்டாமல் பழங்குடிகளின் நிலையை எப்படி முன்னேற்றுவது என பேசினர். சமூக வலை தளங்களிலும் இது சம்மந்தமாக துக்க அலை அடிக்கவில்லை. யாரும் அழுது புலம்ப பதறவில்லை. எனக்கும் போலீஸ், காங்கிரசார் கொலைகள் வருத்தத்தை ஏற்படுத்தவில்லை. சமீபமாக இங்கிலாந்தில் இரு ராணுவ வீரர்கள் தலைவெட்டி கொல்லப்பட்ட போதும் எனக்கு அது ஒரு குற்றமாக படவில்லை. அந்தளவுக்கு ராணுவத்தினர், போலீசார், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது வெறுப்பும் கோபமும் வளர்ந்துள்ளது.

ஆனால் அதே வேளை தீவிரவாதிகள் பொதுமக்களை கொல்லும் போது கடுமையான கோபமும் வருத்தமும் ஏற்படுகிறது. இஸ்லாமியர் இந்துக்கோயில்களை அல்லது இந்துத்துவ அரசியல்வாதிகளை தாக்காமல் சிறுபான்மையினரும் உள்ளிட்ட பொதுமக்களை சந்தைகளிலும் பொதுவிடங்களிலும் கொல்லுவது ஒரு அபத்தமாகவே நினைத்திருக்கிறேன். அது வசதியானது என்பதைத் தவிர எளிய மக்களை கொல்லுவதில் எந்த நியாயமும் இல்லை. ஆகவே ஒரு தீவிரவாத எதிர்ப்பு என்கிற நிலையில் மேற்சொன்ன சம்பவங்களில் தாக்குதலின் இலக்கு சரி தான் என்கிற உணர்வு எனக்கு இருந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அரசியல்வாதியோ காவலரோ யாரைக் கொல்வதும் பிரச்சனைக்கும் தீர்வை கொண்டு வராது என புரிகிறது.
நஷ்டமும் இல்லை லாபமும் இல்லை. தற்போதைய மாவோயிஸ நிலைப்புக்கு அது பயன்படலாம். தம் தரப்பை வலுப்படுத்தத் தான் ஆயுதப்போராளிகள் தாக்குகிறார்கள். யாரும் யாரையும் முழுக்க அழித்து விடப் போவதில்லை என இரு தரப்புக்கும் புரியாமல் இல்லை. இடையில் அப்பாவி மக்கள் பலியாவது தான் கொடுமை.

இதெல்லாம் மாவோயிசத்தை ஆதரிக்கும் அருந்ததி ராய் போன்றோருக்கு தெரியும். அரசியல் அமைப்பு, நீதி, காவல்துறை இவற்றின் மீதெல்லாம் முழுக்க நம்பிக்கை இழந்து விட்டதனால் நாம் இன்று நம் எதிரியின் அதே ஆயுதத்தை ஏந்திய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். மக்கள் அறவாதிகளாக இருக்கும் பட்சம் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இதே ஆயுதங்கள் கொண்டு காவலரும் ராணுவமும் பழங்குடி மக்களை அழித்திருக்கும். வலுக்கட்டாயமாக அவர்களின் நிலத்தை பறித்திருக்கும். சரி, அவர்கள் நியாயமான முறையில் ஜனநாயக வழியில் போராடி இருக்க முடியுமா?

சமீபத்தில் நாம் நிறைய மக்கள் போராட்டங்களை பார்த்தோம். அவை அத்தனையும் ஒடுக்கப்பட்டன அல்லது சுரத்து இழந்து ஓய்ந்து போயின. ஆனாலும் தொடர்ந்து போராடுவதே தற்போதைய இருப்பை தக்க வைக்க அவசியம் என நாம் நம்மையே நம்ப வைக்க முயல்கிறோம். ஆனால் அறவழி போராட்டங்கள் மீது இன்றைய சமூகத்துக்கு நிஜமாகவே நம்பிக்கை உள்ளதா என்ன?
அரசு ஊழியர்கள் போன்று அமைப்பு ரீதியான ஆதரவு உள்ளவர்கள் தாம் இனி கொடி பிடித்து கோஷமிட்டு பேரம் பேச முடியும். அரசும் அவர்களை மயில்தோகை கொண்டு அடித்து கொஞ்சி மிரட்டும். மற்றபடி இந்த சமூகம் முழுக்க முழுக்க அநீதி முன் அடிபணிந்து விட்ட ஒன்று. அநீதிக்கு எதிராக போராடுகையில் நீங்க அநீதியாகவே மாற வேண்டியது தான். 

அநியாயமாக உங்கள் மக்கள் கொல்லப்படும் போது நீங்கள் உண்ணாவிரதம் இருக்க முடியாது. அந்த லட்சியவாதம் செத்து அரைநூற்றாண்டு கடந்து விட்டது. கூடிய பட்சம் குழாயில் தண்ணீர் வரவில்லை என சாலை மறியல் பண்ணலாம். ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக அறவழி போராட்டங்கள் சாத்தியம் இல்லை. ஏனென்றால் அதற்கு நிறைய செலவாகும். செலவுக்கு நாம் ஹசாரே போல் கார்ப்பரேட்டுகளிடம் கையேந்த நேரிடும். மக்களும் சுயநலம் மிக்கவராகி தீமையில் கலந்து போய்க் கொண்டிருக்கிற காலத்தில் ஒரு பொது நீதியின் கீழ் ஒன்று திரளும் நம்பிக்கையும் அனைவருக்கும் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது.

இதனால் தான் சமூக ஆர்வலர்களும் அறிவுஜீவிகளும் மௌனமாக மாவோயிஸ்டுகளை ஆதரிக்க வேண்டி உள்ளது.

உயர்தட்டினர், உயர்ஜாதியினர், வலதுசாரிகள் போலீஸ், ராணுவத்தின் மீதுள்ள தாக்குதலை ஏற்க மாட்டார்கள். அவர்களுக்கு ஆதரவான சமூக படிநிலையை தக்க வைக்க காவலர்களும் ராணுவமும் தானே கைத்தடி. அவர்கள் எப்போது ஒழுக்கம் கட்டுப்பாட்டுக்கு அதிக அழுத்தம் கொடுப்பார்கள். அந்த பதற்றம் எங்கே தம் சமூக அந்தஸ்து மற்றும் இடம் காலியாகி விடுமோ என்கிற அச்சத்தில் இருந்து வருவது. அந்த அச்சம் பல நூற்றாண்டுகளாய் தாம் அநியாயமாய் அடுத்தவரின் உரிமைகளை பறித்து அனுபவித்து வருகிறோம் என்கிற குற்றவுணர்வில் இருந்து தோன்றுவது.

நாம் ஏதாவது ஒரு பக்கம் நிற்க வேண்டியதாகிறது. அது ஒரு வரலாற்று நிர்பந்தம். நாம் நம் பக்கம் தானே நிற்க முடியும்!
Read More

Wednesday, 29 May 2013

இலக்கிய உலகில் பிராமணன் ஆவது எப்படி?





மனுஷ்யபுத்திரனை யாராவது தன்னை பாராட்டினால் “நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்” என பதில் தருவார். இது என்ன திமிரான பதில் என தோன்றும். ஆனால் இதற்கு பின் ஒரு உண்மை உள்ளது.
பொதுவாக நம்மூரில் எழுத்தாளன் உயிரோடு இருக்கும் போது எளிதில் புகழ்ந்து விட மாட்டார்கள். ஆனால் அரசியல் பண்ணி பிம்பம் அமைத்து அல்லது மீடியா அருளாசியால் ஒருவன் புகழைக் கூட அடைந்து விடலாம். ஆனால் இயல்பான புகழ் என்று ஒன்று இருக்கிறது. அதாவது நீங்கள் ஒன்றுமே செய்யாமல் இருந்தால் மக்களாகவே வந்து உங்களை வாழ்த்தி மாலை அணிவிப்பார்கள். அந்த புகழை அடைய முதல் தகுதி நீங்கள் ஒன்றுமே செய்யாமல் முப்பது நாற்பது வருடம் எழுத்தாளனாக இருந்து விட வேண்டும் என்பது.

நாற்பது வருடம் முன் ஒருவர் ஒரு கவிதைத் தொகுப்பு போட வேண்டும். பிறகு தொடர்ந்து இலக்கிய நட்புகளை பராமரிப்பது, கூட்டங்களுக்கு போய் அமர்ந்து வெற்று பார்வை பார்ப்பது, இலக்கிய பத்திரிகைகளை மேய்வது ஆகிய காரியங்களை செய்து விட்டு அவ்வப்போது தனக்கு வேண்டியவர்களுக்கு கிராமத்து பாட்டிக்கு கடிதம் எழுதுவது போல விமர்சன குறிப்புகள் எழுத வேண்டும். வேண்டுமென்றால் நாலைந்து கதைகளும் எழுதலாம். இதனிடையே குழந்தை பெற்று வளர்த்து பஸ் பிடித்து அலுவலகம் போகிற சலிப்பில் நாற்பது வருடம் ஆகி விடும். ஓய்வூதியம் வாங்க ஆரம்பித்த கையுடன் நீங்கள் தயாராக வேண்டும். சடார் சடாரென்று பூட்டப்பட்டிருந்த பல கதவுகள் திறக்கும். அதுவரை உங்களை பொருட்படுத்தாத பலர் மனம் திறந்து பாராட்டுவார்கள். விழாக்களில் நாயகனாக்குவார்க்ள். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விருதுகளை உங்களுக்கு அளித்து பரிசோதிக்கவும் செய்வார்கள். பிறகு நீங்களாக சிரமம் பார்க்காமல் பத்திரிகை அலுவலகங்களில் பழி கிடந்தால் சில ஜனரஞ்சக பத்திரிகைகளில் பத்தி எழுதலாம். “யாரப்பா இவர்?” என்று ஒரு புது வாசகன் கேட்பான். காரணம் கடந்த பத்து வருடங்களில் அந்த ஆள் எதுவுமே எழுதியிருக்க மாட்டார். அவனுக்கு இப்படி பதில் வரும் “அவரைத் தெரியாதா அவர் கடந்த நாற்பது வருடங்களாய் எழுதிக் கொண்டிருக்கிறார்!”.

சரி ஒருவர் வருடத்திற்கு ஆயிரம் பக்கங்கள் எழுதினாலே நாற்பது வருடத்தில் 40,000 பக்கங்கள் எழுதியிருக்க வேண்டும். ஆனால் மேற்சொன்ன எழுத்தாளர் 2000 பக்கம் கூட எழுதி இருக்க மாட்டார். எண்ணிக்கை கூட முக்கியமல்ல. அவர் 80களுக்கு பிறகு சுத்தமாக பேனாவுக்கு ஓய்வு கொடுத்தவராக இருப்பார். ஆனால் தமிழ் உலகம் அவர் நாற்பது வருடம் எழுத்தாளராக இருந்தார் என பாராட்டும். அதைத் தான் முதல் தகுதியாக முன்னால் சொன்னேன். சும்மா இருப்பது!
இதற்கு ஒரு நல்ல உதாரணம் மா.அரங்கநாதன். அவர் இருபது வருடங்களுக்கு பிறகு சமீபமாக ஒருநாள் துயிலெழுந்து வந்தார். அவரது நீண்ட பேட்டிகள், அவருக்கான ஆவணப்படம், அவரைப் பற்றி ஒரு தனி புத்தகம் என எங்கு பார்த்தாலும் அவரது பேனர்கள் தாம். இதன் அரசியல் பற்றி ஒரு நண்பர் என்னிடம் சொன்ன கதை வெகு தமாஷானது. அது இங்கு தேவையில்லை. அரங்கநாதனின் பேட்டிக்கு வருவோம். அதில் இருந்து அவர் கடந்த இருபது வருடங்களில் இலக்கியத்தில் நடக்கிற ஒன்றையுமே கவனிக்க வில்லை என தெரிகிறது. எழுதவும் இல்லை. மொத்தத்தில் இயங்கவே செய்யாத ஒருவரை ஏன் கட்டிலோடு தூக்கிக் கொண்டு ஊர்வலம் வர வேண்டும். இது இந்தியர்களுக்கு வெகுவாக பிடித்த காரியம். குறிப்பாக நிலப்பிரபுத்துவ மனப்பான்மை ஊறிய மக்களுக்கு.

தமிழ் எழுத்துலகில் ஒரு இளைஞன் பாராட்டப்படுவது நடக்காத காரியம். எவ்வளவு தான் சிறப்பாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தாலும் பொடிப்பயல் என்று உதாசீனித்து விடுவார்கள். ஆனால் அதே ஆள் முடி நரைத்து எழுதுவதை நிறுத்தினதும் அவருக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் விருதுகள் குவியும். அதைத் தான் எழுத்தாளனின் சாவு என ஆரம்பத்தில் கூறினேன். இங்கு எழுத்தாளனின் சாவை வெகுவாக ரசிக்கிறார்கள்.
எழுத்தாளனை பிடிக்காமல் இருப்பதால் அல்ல. நமக்குள் இளைஞர்கள் உதவாக்கரைகள் என்கிற எண்ணம் ஆழமாக ஊன்றி உள்ளது. 


ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஒரு பேட்டியில் ஒரு சுவாரஸ்யமான தகவலை சொல்லுகிறார். அவர் ஆரம்பத்தில் 17 வயதிருக்கும் போது நன்றாக உபன்யாசங்கள் செய்வாராம். ஆனால் கூட்டம் வராதாம். அங்கீகாராமும் இல்லை. அவர் மனம் வருந்திய போது அவரது குருநாதர் ஒரு வழி சொன்னார். அவர் கூறினார் “உன்னிடம் ஒரு முக்கிய குறை உள்ளது”
“என்ன குருவே?”
“உன் முகம் மிக இளமையாக உள்ளது. அதனால் தாடி வளர்த்துக் கொள். அப்போது தான் மக்கள் உன்னை நம்புவார்கள்”. ரவிசங்கர் தாடி வளர்த்ததும் அவருக்கு சுக்கிரதிசை ஆரம்பமாகியது. நம்ம ஊரில் தாடி வைத்தால் தாகூர் தான். ஏனென்றெல்லாம் கேட்க மாட்டார்கள். முதியவர்கள் ஞானிகள் என்றொரு அபத்த நம்பிக்கை நம்மவரிடையே உள்ளது.

அலுவலகங்களில், வீட்டில், ஊர் சபைகளில், அரசியலில், மீடியா விவாதங்களில் எங்கும் பாருங்கள். ஒரு இளைஞனை எளிதில் பொருட்படுத்த மாட்டார்கள். அவன் ஒரு சின்ன கவனிப்பை பெற போராட வேண்டும். ஆனால் வயதானவர் என்றார் பெரியவர் சொன்னால் அதில் விஷயஞானம் இருக்கும் என கவனிப்பார்கள். அவர் சொல்லுவது பேத்தலாக இருந்தாலும் தலையாட்டுவார்கள். நம் அரசியலை பாருங்கள். கணிசமாக நம் வாக்காளர்கள் இளைஞர்களாக மாறி வரும் சூழலிலும் ஆட்சி அதிகாரத்தில் எங்கும் தொண்டு கிழங்கள் தாம்.
தமிழ் நவீன இலக்கியத்தில் மூத்தவர்கள் எல்லோருக்கும் மரியாதை உள்ளதா? அசோகமித்திரன்? இல்லை. ஒன்றை கவனிக்க வேண்டும். முடி நரைத்தால் மட்டும் போதாது. நீங்கள் இனிக்க இனிக்க பேசுபவராக, கொஞ்சம் வெள்ளாந்தியாக தோன்றுபவராக, நட்புகளை முயற்சியெடுத்து தக்க வைப்பராக இருக்க வேண்டும். அசோகமித்திரன் அப்படி எல்லாம் இல்லை. அதனால் தான் தமிழின் ஆஸ்தான எழுத்தாளரான ஒருவர் கடந்த பத்து வருடங்களில் இவ்வளவு கடுமையாக புறக்கணிப்பை சந்தித்து வருகிறார்.

இன்னொரு விசயம் அசோகமித்திரன் இன்னும் எழுத்தை நிறுத்தவில்லை என்பது. இந்த கைநடுங்கும் வயதிலும் எழுதுகிறார். விட்டால் இருநூறு பக்கத்துக்கு இன்னும் ஒரு நாவல் கூட எழுதுவார். அதற்கு பதில் அவர் பாலசந்தர் போல் அவர் வேலை செய்வதை நிறுத்தி எல்லோருக்கும் பாராட்டு பத்திரம் எழுதி வாழ்த்திக் கொண்டிருந்தால் அவருக்கும் சிலை வைத்து மாலை போடுவார்கள். தமிழில் எழுத்தாளன் முழுமையாக அனைத்து தரப்பாலும் அங்கீகரிக்கப்பட அவன் முதலில் எழுத்தை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவன் ஒரு அச்சுறுத்தலாக மற்ற எழுத்தாளர்களுக்கு தோன்றிக் கொண்டிருப்பான்.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு பட்டியல் எடுத்து பாருங்கள். இன்று தமிழின் முக்கிய எழுத்தாளர்களாக கருதப்படுபவர்களில் கணிசமானோர் தொண்ணூறுகளுக்கு பிறகு குறிப்பிடும்படியாய் ஒன்றும் எழுதி இருக்க மாட்டார்கள். எழுபது எண்பதுகளில் எழுதப்பட்டவையை தான் நாம் மீண்டும் மீண்டும் ஏதோ பள்ளிக்கூட சிலபஸ் போல படித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த பத்து வருடங்களில் சில நல்ல படைப்புகள் வந்துள்ளன. ஆனால் அவற்றை நாம் திரும்பிப் பார்க்க இன்னும் முப்பது வருடமாகும். அப்போது இந்த இளைய எழுத்தாளர்கள் காளான் பூத்து தம் அந்திம காலத்தில் காலனை எதிர்பார்த்து இருப்பார்கள். கடற்கரை தான் பூமணியை சமீபமாக போனில் அழைத்து அவரது நாவலை பாராட்டியதாகவும் அதற்கு பூமணியால் எந்தவிதத்தில் எதிர்வினை ஆற்றமுடியாதபடி நினைவு மறதி கொண்டிருந்ததாகவும் தனி உரையாடலில் கூறினார். இதே கடற்கரையை இதே போல் யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள். அதற்கு அவரும் பூமணியின் அந்திம கால நிலைக்கு போக வேண்டும். இது ஒரு சுழல்.

இந்த அவலத்துக்கு ஒரு காரணம் மூத்த எழுத்தாளர்கள் பதிப்பு பரப்பை ஆக்கிமித்துக் கொண்டிருப்பது என ஒரு எழுத்தாளர் என்னிடம் கூறினார். ஆனால் இன்று மீடியா வாய்ப்புகள் பெருகியுள்ள நிலையில் அது மட்டுமே காரணமாக தோன்றவில்லை. இதற்கு பின் ஒரு கோணல் மனப்பான்மை உள்ளது. அது நம் சாதியத்தில் இருந்தும் நிலப்பிரபுத்துவ விழுமியங்களில் இருந்தும் வருகிறது. அதற்கு முன் வேறு சில சூழல்களை ஒப்பிட்டு பார்ப்போம்.

உண்ணி. ஆர் என்றொரு இளம் மலையாள எழுத்தாளர் இருக்கிறார். அவரது காளி நடனம் எனும் சிறுகதைத் தொகுப்பு தமிழில் உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது. அதில் ஒவ்வொரு கதைக்கும் அவர் தனித்தனியாக பல விருதுகள் வாங்கி இருக்கிறார். இத்தனைக்கும் உண்ணி. ஆர் ஒன்றும் உம்பர்த்தோ ஈக்கோவோ மிலன் குந்திரேவோ இல்லை. அவர் எழுதியுள்ள கதைகளை விட மேலான கதைகளை நம் கதையாசிரியர்கள் எழுதி இருக்கிறார்கள். ஏன் கேரளாவில் அவரைப் போன்ற ஒரு இளம் ஆசிரியனை இப்படி கொண்டாடுகிறார்கள்? நம்மை போல் சாதியமும் மதவாதமும் இருந்தாலும் கேரளா பண்பாட்டு அளவில் இன்னும் கொஞ்சம் நவீனப்பட்ட சமூகம்.

இதே நிலையை நீங்கள் இந்திய ஆங்கில எழுத்துலகிலும் பார்க்க முடியும். இந்துப்பத்திரிகையில் வாராவாரம் பதினெட்டு வயது இளைஞர்களின் முதல் நாவல் பற்றி பேட்டிகள் விமர்சனங்கள் விரிவாக வருகின்றன. ஒடிஸி, லேண்ட்மார்க் போன்ற புத்தகக்கடைகள் போய் பார்த்தால் நான்கு ரேக்குகளாவது இளைஞர்களின் முதல் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்திய ஆங்கில புத்தக சந்தையில் ரஷ்டி, சேத்துகளை விட இளைஞர்களுக்கு தான் மதிப்பு அதிகம்.
அடுத்து மேற்கை பார்ப்போம். பாப்லோ நெருடா பதினான்கு வயதிலே சிலி முழுக்க அறியப்பட்ட கவிஞராக இருந்தார். ஹெமிங்வே, தால்ஸ்தாய் போன்றவர்கள் தம் இருபதுகளிலேயே அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்களாக இருந்தார்கள். பொதுவாக நவீன சமூகங்களில் இளைஞர்களுக்கு கிடைக்கிற வரவேற்பு மிக அதிகம். அவர்கள் ஒரு புதுமையான போக்கை கொண்டு வருகிறார்கள் என்பது முக்கிய காரணம். ஆனால் தமிழகம் போன்ற நிலப்பிரபுத்துவ சூழலில் இது நேர்மாறாக இருக்கும்.

தமிழில் இளைஞர்கள் கொண்டாடப்படும் சூழல் சினிமாவில் மட்டும் தான் உள்ளது. காரணம் சினிமா ஒரு நவீன ஊடகம்.
பொதுவாக ஒரு நிலப்புரபுத்துவ குடும்பத்தில் ஒருவர் அங்கீகாரிக்கப்பட திறமையும் உழைப்பும் அல்ல சொத்துரிமை தான் முக்கியம். ஆக திறமையை அறிவை ஆளுமையை கடந்து ஒருவரை வெறுமனே அவரது பணத்துக்காக மதிப்பது நமது மரபில் உள்ள ஒன்று. அப்பா வயதாகி சாவது வரை மகன் இந்த அந்தஸ்தை பெறுவதற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். இன்று கலைஞருக்காக ஸ்டாலின் காத்திருப்பது போல. ஆனால் நவீன சமூகம் இளமையையும் உழைப்பையும் தான் முதலீடாக பார்க்கும் என்பதால் இளைஞர்களுக்கு தான் மதிப்பு அதிகம். உதாரணமாக நீங்கள் நாற்பது வயதுக்கு மேலானவர் என்றால் உங்களுக்கு ஒரு பி.பி.ஓவில் பணி கிடைப்பது மிக சிரமமாக இருக்கும்.
அடுத்து சாதியம். நம் சாதிய அடுக்கில் ஒரு விநோதம் உண்டு. கடுமையான வேலை செய்கிற சூத்திரன் கீழே. நாசூக்காக வணிகம் செய்கிற வைசியன் அவனுக்கு மேலே. சண்டை போடுகிற சத்திரியன் அவனுக்கு மேலே. இவர்களுக்கு எல்லாம் மேலே பொருளாதார ரீதியாகவோ நடைமுறை சார்ந்தோ எந்த சமூக பங்களிப்பும் செய்யாத பிராமணன் இருப்பான். பிராமணர்களுக்கான அங்கீகாரம் சடங்குரீதியானது. அவர்கள் சும்மா இருக்கிறார்கள். அதற்கு தான் இந்த அங்கீகாரம். 

இதை சமூகவியலாளர் லூயி டுமண்ட் a case of the status subordinating power என்று விளக்குகிறார். அதாவது அதிகாரத்தை அந்தஸ்து கீழ் அடக்குகிறது என்கிறார். இங்கு அதிகாரத்தை நாம் பூக்கோவின் அதிகார நுண் அரசியலாக பார்க்க கூடாது. இந்த அதிகாரம் என்பது பணியில் இருந்து அடையும் ஆற்றல் அல்லது பயன்பாடு என்கிற பொருளில் வரும் அதிகாரம். இந்திய சமூகத்தில் உயர் சாதி அந்தஸ்தை பிராமணர்களுக்கு நாம் அவர்களுக்கு பொருளாதார வலுவோ உடல்சார்ந்த ஆற்றலோ இல்லாத போதும் அளித்திருக்கிறோம் (அதாவது பழங்காலத்தில்). இந்த முரண்பாட்டை தான் டூமண்ட் விரிவாக தன் ஆய்வுகளில் விளக்கி இருக்கிறார்.

ஆக வெறும் சடங்குபூர்வமாக ஒருவருக்கு மதிப்பளிப்பது, வேலை செய்வோரை உதாசீனிப்பது என்பது நம் மரபில் நம் ரத்தத்திலே இருக்கிறது. இங்கு அர்த்தாவை (வேலை பயன்பாடு) விட தர்மம் (சும்மா இருப்பது) தான் அதிக மதிப்புள்ளதாக இருக்கிறது. இந்த சாதிய மனநிலை தான் நம் இலக்கிய மதிப்பீடுகளிலும் செயல்படுகிறது.
நீங்கள் தமிழ் இலக்கியத்தில் பிராமணன் ஆக வேண்டும் என்றால் முதுமையின் செயலின்மை காரணமாய் எழுதுவதை நிறுத்தி சில சடங்குகளை மட்டும் தொடர்ந்து செய்து வர வேண்டும். குறிப்பாய் மலம் அள்ளவே கூடாது!

 பின்குறிப்புகள்: 1. மூத்த எழுத்தாளர்கள் நாற்பது வருடமாய் கடுமையாய் உழைத்ததன் விளைவாகத் தான் இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள் என்று யாரும் வாதிக்க வேண்டாம். அந்த நகைமுரணை விளக்கத் தான் இந்த கட்டுரையே!
2. மூத்த எழுத்தாளர்களில் சிலர் மீது எனக்கு பெரும் மதிப்பு உள்ளது. மூத்தோரை வேண்டுமென்றே அவமானப்படுத்துவது என நோக்கம் அல்ல. பொதுவாக இங்குள்ள சாதிய சூழலை சமூகவியல்ரீதியாக விளக்க முயற்சிக்கிறேன். அவ்வளவே.
 

Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates