Wednesday, 31 July 2013

இளவரசனும் திவ்யாவும்: சில கேள்விகளும் விடைகளும்




கொல்லப்பட்ட அல்லது மரணத்தை நோக்கி துரத்தப்பட்ட இளவரன் மற்றும் திவ்யாவின் மன அமைப்புகளை நுணுகி அறிவதன் வழி காதல் / கலப்பு மணம் புரியப் போகும் ஆண்கள் சில முக்கிய பாடங்களை கற்க முடியும். 


இளவரசன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் அவர் திவ்யாவின் மீது எந்த குற்றசாட்டையும் வைக்க மறுக்கிறார். தனக்கு எதிராக ஆட்கொணர்வு மனு தொடுத்த மாமியார் தேன்மொழியை மிக நல்லவர் என வர்ணிக்கிறார். முழுக்க பா.ம.கவின் சதி என ஒரு பக்கமாய் மட்டும் பிரச்சனையை பார்க்கிறார். இது தன்னுடைய மணவாழ்க்கை பிரச்சனையை தனித்து அவர் பார்ப்பதன், உலக இயல்பை அறியாததன் கோளாறு தான்.
இந்தியாவில் எத்தனையோ இளம் ஜோடிகளை அவர்களின் பெற்றோர் பிரித்து வைக்கிறார்கள். குறிப்பாக மாமியார்கள் தாம் மாமனார்களை விட தம்பதிகளை பிரிப்பதில் ஆவேசம் காட்டுகிறார்கள். இதன் பாலியல் பரிமாணங்களை வேறொரு சமயம் விவாதிப்போம். திவ்யாவுக்கு சேர வேண்டிய வேலையை அவரது அம்மா பெறுவதற்காக கையெழுத்து பெறுவதற்காக இளவரசன் தான் தன் பைக்கில் மாமியாரை அழைத்து வந்து கொண்டு விடுகிறார். இதில் இருந்தே இளவரசன் ஒரு பத்தாம்பசலி என அறியலாம். சாமர்த்தியசாலிகள் அந்த வேலையை மாமியாருக்கு விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்கள். அவர் இதற்காக திவ்யாவை எந்த அளவிலும் வற்புறுத்தியதாக தெரியவில்லை. பொதுவாக இளவரசன் மிகையான நேர்மறை எண்ணம் கொண்டவராக இருந்திருக்கிறார். இதனால் தான் பல தம்பதிகளுக்கும் நடந்தது போல் தன் வாழ்விலும் மாமியார் தான் பிரதான எதிரி என உணராமல் விட்டு விட்டார். பொதுவாக கலப்பு மணங்களில் மருமகன் பவ்யமாக இனிமையாக நடந்து கொண்டால் அவர் பலவீனமானவர் என கருதி மட்டம் தட்டி பிரச்சனைகளை உருவாக்கி குடும்பத்தை பிரிக்க மாமனார் மாமியார் முயற்சி செய்வார்கள். இளவரசன் இந்த வலையில் எளிதில் விழுந்து விட்டார். அவரது இந்தியா டுடே பேட்டியின் படி மாமியாரை வேலைக்கான கையெழுத்து வாங்க அவர் அழைத்து வந்ததை அடுத்து தான் அவர் தனக்கு உடல்நலமில்லை என பொய் கூறி தன் மகளை அருகே அழைத்து வைத்துக் கொண்டார். இளவரசன் உடனே போக வேண்டாம் என கூறியதையும் மறுத்து திவ்யா போயுள்ளதும் கவனிக்கத்தக்கது. கையெழுத்து படலத்தின் போது அவர் கராறாக எதிர்த்திருந்தால் தேன்மொழிக்கும் திவ்யாவுக்கும் அவர் மீது கொஞ்சம் பயம் வந்திருக்கும். இத்தனை எளிதில் கணவனை மறுத்து விட்டு போகவும் அவர் துணிந்திருக்க மாட்டார்.
இங்கு நாம் இந்தியப் பெண்களின் உளவியல் பற்றி தெளிவாக ஒரு விசயத்தை உணர்ந்திட வேண்டும். இந்தியாவில் பெண்கள் சிறு வயதில் இருந்தே கடும் கட்டுப்பாடுகளுடன் ஆதிக்கவாதத்துக்கு பணியும் படி வளர்க்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் ஒன்று தகப்பன், தாய், ஆசிரியர், கணவன், முதலாளி போன்று அதிகாரத்துக்கு எளிதில் அடிபணிவார்கள். அல்லது இவர்களில் யாராவது அதிகாரத்தை பிரயோகிக்காமல் இருந்தால் அவர்களை தம்முடைய அதிகாரத்துக்கு கீழ் கொண்டு வர முயல்வார்கள். அதிகாரத்துக்கு பழகுபவர்களுக்கு வளர்ப்பு நாயின் மனோபாவம் வந்து விடும். ஒன்று நாய்க்கு நீங்கள் எஜமான் அல்லது நாய் உங்களுக்கு எஜமான். காதல் மணம் புரிகிறவர்கள் பொதுவாக ஜனநாயக மனோபாவம் கொண்டவர்கள் என்பதால் தம் மனைவியருக்கு சம உரிமை கொடுக்க விரும்புவார்கள். ஆனால் சிறுவயதில் இருந்தே அடிமையாக வளர்க்கப்படும் பெண்களோ திடீரென்று இந்த சுதந்திரத்துக்கு, படிநிலையற்ற ஜனநாயக உறவுக்கு தயாராக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு யாராவது “எஜமானாக” இருக்க வேண்டும். கணவன் அந்த பாத்திரத்தை நவீன சிந்தனை காரணமாக எடுக்க மறுக்கையில் அவர்கள் அதிகார சமநிலை குழப்பத்துக்கு உள்ளாகிறார்கள். அப்போது அவர்கள் கணவனை கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்த துவங்குகிறார்கள். இது உறவில் பிரச்சனைகளை ஏற்படுத்தி கணவன் மீதான ஒரு மரியாதைக்குறைவான எண்ணத்தையும் வளர்க்கிறது. ஆனாலும் இந்த வகை பெண்களுக்கு வெறுமனே அதிகாரத்தை பிரயோகிப்பதுடன் திருப்தியடைய முடியாது; யாராவது “எஜமான்” இடத்தை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். விளைவாக அவர்கள் தம் தாயின் பக்கம் சாய்வார்கள். தாய் அல்லது தந்தை சொல்வதை கேட்டு கணவனை வெறுக்க அல்லது துச்சமாய் மதிக்க துவங்குவார்கள். மீண்டும் பெற்றோரின் கைப்பாவையாக மாறுவார்கள். இதனிடையே இளவரசனைப் போன்ற ஜனநாயகபூர்வாக இயங்க நினைக்கும் அப்பாவிக் கணவன்கள் மாட்டி அவஸ்தைப்படுவார்கள். சிலவேளை உயிர் விடுவார்கள்.
நான் கூறுவது திவ்யா விசயத்தில் முழுக்க உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சின்ன சதவீதம் உண்மையாக இருந்தாலும் அதிகாரத்தை உறவுநிலையில் கையாளத் தெரியாதது தான் இளவரசனின் குடும்பம் சிதைந்து உயிர் பறிபோனதற்கு ஒரு முக்கிய காரணம். இவ்விசயத்தில் திவ்யா இளவரசனை விட இரண்டு வயது மூத்தவர் என்பதையும் கவனிக்க வேண்டும். மூத்த பெண் என்கிற நிலையில் அவர் இளவரசனுக்கு குறைவான மதிப்பளித்திருக்கவும் சாத்தியம் உண்டு. வயதில் மூத்த பெண்களை காதலிக்கையில் ஒரு பக்கம் தம்மை ஆணின் விருப்பத்துக்கு உட்படுத்தியபடியே இன்னொரு பக்கம் அவர்கள் காதலனை ஆதிக்கம் செலுத்தவும் முயல்வதை தனிப்பட்ட முறையில் கவனித்திருக்கிறேன். அவர்களுக்குள் எப்போதுமே இவன் சின்னப் பையன் தானே என்கிற ஒரு துச்ச பாவம் இருந்து கொண்டிருக்கும்.
தன் தாயின் உயிரா கணவனின் உயிரா என வரும் போது திவ்யா தன் தாயை தேர்ந்ததன் உளவியலை கவனிக்க வேண்டும். இப்படியான சிக்கலான தேர்வு வரும் போது நாம் பொதுவாக நல்லவர்களை அல்ல வலிமையானவர்களை தான் தேர்ந்தெடுப்போம். இது ஒரு ஆதிமனித மனோபாவம். திவ்யா தன் அம்மாவை அல்லது சொந்த சாதி சார்ந்த ஆதரவாளர்களை தான் வலிமையான தரப்பாக கருதி இருக்கிறார். இப்படியான நெருக்கடி மிக்க கட்டங்களில் மனிதர்கள் அன்பு, கருணை எனவெல்லாம் யோசிக்க மாட்டார்கள்.
இளவரசனின் காதல் தோல்வி மற்றும் மரணத்தில் பிறருக்கு உள்ள முக்கிய பாடம் காதலில் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது என்பது. காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் அமிலம் ஊற்றுவது வாடிக்கையாக நாட்டில் இளவரசன் தன் மனைவி தன்னை விட்டு சென்று தனக்கு எதிராக வழக்கு தொடுப்பதை அனுமதித்து தனக்கு எதிராக மீடியாவில் பேசுவதையும் பார்த்த பிறகும் அவளைப் பற்றி சின்ன பழி கூறவும் தயங்கி உள்ளான். இதுவே இளவரசனின் இடத்தில் வேறு ஆண்கள் இருந்திருந்தால் ஒன்று திவ்யாவின் நிலை சின்னாபின்னமாகி இருக்கும். அடுத்து அவர் அத்தனை எளிதாக பா.ம.கவின் வசம் அகப்பட்டிருக்க மாட்டார். எந்த அளவுக்கும் சென்று திவ்யாவை பதுக்கியோ அடைத்தோ வைத்திருப்பார்கள். இப்போதும் இளவரசனின் மரணத்துக்கு பிறகு அவரது அப்பா திவ்யாவுக்கு தான் பொறுப்பேற்று மறுமணம் பண்ணி வைக்கப் போவதாக சொல்லி இருக்கிறார். தன் மகனின் மரணத்தில் இருந்தும் அவர் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. இந்த அப்பாவித்தனம் தான் அவரிடம் இருந்து இளவரசனுக்கு சென்று அவன் உயிரை காவு வாங்கியிருக்கிறது.
ஒரு திருமண உறவில் அதிகாரத்தின் சாட்டை மிக நுட்பமாக மறைமுகமாக சொடுக்கிக் கொண்டே இருக்கும். அதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அது நம் கையை விட்டு போகாமல் ஆண்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். சாட்டை கைதவறினால் தோல்வி அல்லது மரணம் நிச்சயம். மற்ற மனைவிகளை விட காதல் மனைவிகள் இன்னும் ஆபத்தானவர்கள். அன்பும் ஆசையும் ஒரு புறம் மனதுக்கு ஒரு கடுமையான வெறுப்பையும் உண்டு பண்ணுகிறது. இது அவர்களுக்கே தெரியாமல் ஆழ்மனதில் இருந்து அவர்களை இயக்குகிறது. மிக அதிகமாக நேசிக்கிறவர்கள் தான் இன்னொரு புறம் தம்மையே அறியாமல் நம்மை மிக அதிகமாக வெறுக்கவும் செய்கிறார்கள். அந்த வெறுப்பு ஒரு குண்டாந்தடியாக மாறி உங்கள் மண்டையை பிளக்கவும் கூடும். அதில் இருந்து காப்பாற்றிக் கொள்ள நாம் அதிகாரத்தை சாமர்த்தியமாக பயன்படுத்துவது அவசியம்.

Read More

Saturday, 27 July 2013

பேஸ்புக் சண்டையும் வாழும் கலையும்




காலையில் ஒரு பஞ்சாயத்து. எங்க குடியிருப்பில் ஒரு நாய். தெரு நாய் தான். உள்ளேயே படுத்திருக்கும். கொரியர் பையன், கேஸ் சிலிண்டர் சப்ளையர், வேலைக்காரர்கள் என யாரைப் பார்த்தாலும் சமீபமாய் துரத்த ஆரம்பித்துள்ளது. அந்த நாய்க்கு என் மனைவி சாப்பாடு போடுவதால் காலையிலேயே என்னிடம் தகராறுக்கு மொத்த குடியிருப்பு ஆட்களும் வந்து விட்டார்கள். எனக்கு அப்போது பேஸ்புக்கில் விவாதித்த (சண்டை போட்ட) அனுபவம் வெகுவாக கை கொடுத்தது.


அவர்கள் பக்கம் நியாயம் என்பதால் அமைதி காத்தேன். ஏறிக் கொண்டே போனார் ஒருவர். கோபத்தில் என் வீட்டுக் கதவை போகும் போது அவர் வேகமாக சாத்திக் கொண்டு போனார். உடனே பிடித்துக் கொண்டேன். ”எப்பிடி நீங்க அப்பிடி கதவை உடைக்கிற மாதிரி சாத்தலாம்?” எனக் கேட்டேன். “நான் என்ன உடைத்தா விட்டேன்” என்றார். ”நீங்கள் உடைக்க வேண்டியதில்லை, அப்படி சாத்துவதன் மூலமாக என்னை அவமானப்படுத்த முயல்கிறீர்கள்” என்றேன். அவருக்கு இன்னும் டென்ஷனாகி விட்டது. பேச்சுவாக்கில் என்னை ஒருமையில் அழைத்தார். உடனே அதையும் பிடித்துக் கொண்டு ஏறினேன். அடுத்து அவர் மனைவி வந்துஅவரு கோபத்துல தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுக்குங்க தம்பிஎன்றார். உடனே நான்பரவாயில்ல வயசில மூத்தவர் தானே. ஆனா சார் உங்க வைப் எவ்வளவு டீசெண்டா பேசறாங்க பாருங்க. பாத்து கத்துக்கிங்கஎன்றேன். அவர் முகம் செத்து விட்டது.
அடுத்து பிரச்சனையை நானே இப்பவே சரி பண்ணுகிறேன் என்று உறுதியளித்து விட்டு தண்ணீர் பற்றாக்குறை போன்ற பொதுப்பிரச்சனையை நோக்கி சர்ச்சையை திருப்பினேன். மெயிண்டெனன்ஸ் தொகை நிறைய பாக்கி வைத்திருக்கும் குடியிருப்பின் பொது எதிரி ஒருவர் இருக்கிறார். அவரால் தான் தண்ணீர் பிரச்சனை என்றார்கள். அவரை ஆளாளுக்கு திட்டி விட்டு நாயை மறந்து விட்டு கலைந்து போனார்கள்.

இப்பிடித் தானே பேஸ்புக்கிலயும் எல்லா சண்டையும் நடக்குது. எதையோ யாரோ ஆரம்பிச்சு விடுவாங்க. அப்புறம் மையத்துக்கு சம்மந்தமில்லாத ஒரு விசயத்தை நோக்கி அது போகும். யாராவது வாய் விட அதற்காக அவரை பிடித்து சாத்துவோம். கடைசியில் ஒரு புது பொது எதிரியை உருவாக்கி விட்டு கலைந்து போவோம்.

பேஸ்புக் சண்டையின் முக்கிய பாடம். எந்த பிரச்சனை எழுந்தாலும் அதுக்கு நேரடியா பதில் சொல்லக் கூடாது. அதை ஒட்டி எதிரி பேசும் போது ஒரு வார்த்தையை தப்பாய் விடுவார். அல்லது ஒரு அபத்தமான கருத்து சொல்லுவார். அதை வைத்து சாத்து சாத்தென்று சாத்த வேண்டும். கடைசி வரை நம்மள எதுக்கு திட்ட வந்தான்னு அவனுக்கே நினைவு வரக் கூடாது.
Read More

Monday, 22 July 2013

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?




கல்லூரியில் என் அலுவல் நிமித்தமாக ஒரு மேலதிகாரியை பார்க்க போயிருந்தேன். ஒரு பெண் அம்மாவுடன் வந்து முதல் வருட கட்டணம் செலுத்த வசதி இல்லை என்று காலநீட்டிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். வேறு எந்த கல்லூரியிலும் சீட் கிடைக்கவில்லை என்று வேறு வருந்தினார். மேலதிகாரி காலநீட்டிப்பு செய்ய முடியாதென்றும் ஒரு வருடம் ஏதாவது சான்றிதழ் படிப்பு படித்து விட்டு அடுத்த வருடம் அரசு கட்டணத்தில் படிக்கலாம் என்றும் பரிந்துரைத்தார். அடுத்து அவருக்கே மனம் தாங்காமல் இன்னொரு கல்லூரியில் தனக்கு பரிச்சயமுள்ள ஒரு பேராசிரியரை அழைத்து அங்கு ஆங்கில இலக்கியத்துறையில் ஒரு இடத்தை அப்பெண்ணுக்கு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்பெண்ணுக்கு மருத்துவம் படிக்க ஆசை என்று கொஞ்சம் ஏமாற்றமாக போனார். அவர் போய் கொஞ்ச நேரமானதும் இவர் பின்னாலே ஓடிப் போய் இத்துறையில் படித்து பின்னால் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் கூட செய்யலாம் என்றெல்லாம் விளக்க ஆரம்பித்து விட்டார்


இந்த உயரதிகாரி பொதுவாகவே யாரிடமும் கடிந்து பேசி பார்த்ததில்லை. தானே கேட்டு போய் உதவிகள் பண்ணுவார். இப்படியான பிறவி நல்லவர்கள் எங்காவது ஒன்றிரண்டு பேர் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.
அன்பும் பண்புமாக பேசுகிறவர்கள் அரிதாகி விட்டதால் எல்லோரிடமும் அடாவடியாக பேசுவது ஒரு பண்பாடாகவே மாறி விட்டது. முரண்படுவது, முட்டுக்கட்டை போடுவது, காயப்படுத்துவது இயல்பாகி விட்டது. அப்போது இது போல் மாய்ந்து மாய்ந்து நல்லது பண்ணுகிறவர்களை பார்க்கும் போது நமக்கு ஒரு சின்ன வெளிச்சம், வாழ்க்கையின் நம்மை மீது நம்பிக்கை கிடைக்கிறது.
இவர் ஏன் இப்படி ஆகிப் போனார் என யோசித்துக் கொண்டிருந்தேன். கெட்டவர்களை, கொடூரமானவர்களை பார்த்தால் எனக்கு ஒன்றும் கேள்விகள் தோன்றுவதில்லை. இயல்பாக இருக்கலாம். அல்லது வெறுப்பு, குரோதம் ஆகியவற்றில் இருந்து அவரை பாதுகாக்கிற ஒரு சூழல் இருக்கலாம் என நினைப்பேன்.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். ஹாமீம் முஸ்தபா. பதினைந்து வயதில் இருந்து இருபத்திரண்டு வயது வரை ஊரில் அவரது புத்தகக் கடை தான் என் சரணாலயமாக இருந்தது. அங்கு தான் அத்தனை இலக்கிய நட்புகளும் பரிச்சயங்களும் முதன்முறை வாய்த்தன. ஆனால் அங்கு நான் முதலில் ஒரு டியூசன் வகுப்புக்கு தான் போனேன். டியூசன் தனியாக பின்னால் ஒரு பகுதியில் நடந்து கொண்டிருந்தது. அவரது மனைவி கணிதம் எடுத்தார். எனக்கு ஒரு கெட்ட பழக்கம். ஓரிடத்தில் போனால் சொன்னதை விட்டு இன்னொன்றை படிப்பேன். முன்பும் ஒரு வாத்தியாரிடம் கணக்கு கற்றுக் கொள்ள போனேன். ஆனால் அவரது மனைவி அருமையாக எனக்கு சில நாட்கள் சங்கீதம் கற்றுத் தந்தார். அதனால் கணக்கு வகுப்புகளை புறக்கணித்து சங்கீத வகுப்புகளை மட்டும் போக ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் குடும்பத்தில் சண்டையாகி ரெண்டுமே படிக்க முடியாமல் ஆனது. இங்கும் அப்படித் தான். கணக்கு வகுப்பை புறக்கணித்து புத்தகக் கடையின் இன்னொரு பகுதியில் நடக்கும் இலக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ள துவங்கினேன். இது கணித ஆசிரியைக்கு அவமானமாக பட்டது. அவர் தன் கணவன் முஸ்தபாவிடம் புகார் செய்தார். அவர் என்னிடம் வந்து “நீ வகுப்புக்கு போகாமல் இருக்கலாம். உன் சுதந்திரம். ஆனால் முறையாக அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்” என்றார் மென்மையாக. அவ்வளவு தான். நான் அவர் மனைவியிடம் அனுமதி கேட்கவோ மன்னிப்பு கோரவோ எல்லாம் இல்லை. ஆனால் முஸ்தபா எனக்கு இனிய நண்பராகி விட்டார். அவர் புத்தகக்கடையை ஒரு நூலகமாகத் தான் பயன்படுத்துவோம். காலையில் அங்கு போனால் மாலை வரை உட்கார்ந்து படிப்போம். மாலையானால் சந்திப்புகள் கூட்டங்கள். முஸ்தபாவுக்கும் அதை ஒரு வணிகமாக நடத்தும் நோக்கமில்லை. விளைவாக கடை லாபமின்றி நலிவுற்றது. அதற்காக அவர் வருந்தவோ கசப்பாகவோ எல்லாம் இல்லை. இன்னும் பல வியாபாரங்கள் வேலைகள் செய்தார். அவர் நன்றாக பேசுவார். ஆனால் அதை பயன்படுத்தி சம்பாதிக்க மாட்டார். ஒரு கல்லூரியில் விரிவுரையாளர் வேலை இருந்தது. வேலை நிறுத்தம் செய்து அதை இழந்தார். அவருக்கு இருந்த திறமைகள் எதனையும் அவர் சம்பாதிக்கவோ வாழ்வில் நிலைப்படவோ பயன்படுத்தவில்லை. இப்போது ஒரு தனியார் கல்லூரியில் வேலை செய்கிறார். இன்னும் கொஞ்சம் சுயமுனைப்பு சாமர்த்தியம் காட்டி இருந்தால் அரசுவேலை கிடைத்து ரொம்ப வருடங்கள் முன்பு செட்டிலாகி இருப்பார். அவர் நிறைய ஆய்வுக்க்கட்டுரைகளை கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்களில் முன்வைத்திருக்கிறார். அவற்றை ஒரு கல்லூரி ஆய்வுக் கூட்டத்தில் வைத்திருந்தால் அவருக்கு இன்னும் அதிக புகழும் பணமும் ஊர்சுற்றும் வாய்ப்புகளும் கிடைத்திருக்கும். அது போல் ஒரு பிரபல இடதுசாரி இதழில் ஆசிரியராக பணி செய்தார். ஆனால் பத்திரிகையில் அவர் பெயருக்கு பதில் ஒரு அரசியல் தலைவரின் பெயர் தான் இருக்கும். முஸ்தபாவுக்கு எந்த புகாரும் இல்லை. நான் இதையெல்லாம் சமீபமாக அவரிடம் சொன்ன போது “பணம் புகழ் சம்பாதிச்சு என்ன பண்ணப் போறோம்” என்றார் நிதானமாக.
இப்படியான மனிதர்களைப் பார்த்தால் கொஞ்சம் கோபமாகவும் கொஞ்சம் வியப்பாகவும் இருக்கிறது. குறிப்பாக சென்னை வந்த பிறகு. ஊரில் இது போல் எனக்கு நிறைய சாமியார் நண்பர்கள் இருக்கிறார்கள். திறமை என்பது சுயமுன்னேற்றத்துக்கு அல்ல; வேலை செய்வது சம்பாதிக்க அல்ல, விருப்பத்துக்கு என நம்புகிற சாமியார்கள். உதாரணமாக, என்.டி ராஜ்குமார். “மதுபானக்கடையில்” முக்கிய பாத்திரமேற்று நடித்து பாட்டெழுதி பாடி நிறைய கவனம் கிடைத்தது. அதையொட்டி நடிக்க வாய்ப்புகளும் வந்தன. மறுத்து விட்டார். பாட்டெழுத விருப்பம். ஆனால் அதற்காக சென்னைக்கு வர மாட்டார். ஊரை விட்டு குடும்பத்தை விட்டு வந்து அப்படி சம்பாதித்து என்ன ஆகப் போகிறது என்று ஒரு எண்ணம். நட.சிவகுமார் கொஞ்ச நாட்களுக்கு முன் சில கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்பி, அவற்றில் தோதானவற்றை நானே தேர்ந்தெடுத்து பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்க சொன்னார். சொன்னவர் தான். அதோடு பிறகு என்னை நினைவுபடுத்த கூட முனையவில்லை. இதுவே என் தலைமுறை நகர்வாழ் கவிஞர்கள் என்றால் பத்து கவிதைகளை இருபது பத்திரிகைகளுக்கு அனுப்பி தினமும் அந்த பத்திரிகை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு நச்சரித்து பிரசுரத்தை ஒரு புராஜக்ட் போல செய்வார்கள். என் ஊர் நண்பர்களுக்கு கவிதை எழுதுவது, ஆய்வு செய்வது எல்லாம் செய்கிற அளவில் முடிந்து போகிற விசயங்கள். சென்னையில் ஒரு சின்ன நூல் வெளியீட்டு கூட்டம் என்றால் எவ்வளவு சுய தம்பட்டம் இருக்கும் என உங்களுக்கு தெரியும். முகாமில் யானைகள் பிளிறுவது போலத் தான். ஒரு சின்ன மொட்டூசி இடம் கிடைத்தால் கூட அங்கொரு அறை போட்டு தங்க திட்டம் போடுகிறோம். ஆனால் இன்றும் ஊரில் நடக்கிற இலக்கிய கூட்டங்களில் அந்த ”தூய்மை”, தீவிரத்தன்மை, வியாபாரமின்மை எல்லாம் உயிரோடு இருக்கின்றன.
ஊரில் இருக்கும் போது இதெல்லாம் வித்தியாசமாக தெரியவில்லை. இப்போது இதெல்லாம் சாமர்த்தியமின்மை மற்றும் திறமை வீணடிப்போ என படுகிறது.
முஸ்தபா ”புதிய காற்று” என ஒரு பத்திரிகை நடத்தினார். என் கல்லூரிக் காலம். ஒரு நாள் வீட்டுக்கு என்னை பார்க்க வந்தார். நான் அவரை கூப்பிடவில்லை. அவராகவே வந்தார். அவர் பத்திரிகைக்கு படைப்புகள் கொடுக்க கேட்டார். எனக்கு வியப்பு. நான் வாழ்க்கையில் அப்படி ஒரு படைப்பும் எழுதி பிரசுரித்ததில்லை. ஆனாலும் ஒரு நம்பிக்கையில் கேட்டார். அதன் பிறகு ஒரு எட்டு வருடங்களேனும் அவர் வேலை பார்த்த பல்வேறு பத்திரிகைகளில் எழுதி இருக்கிறேன்.
முதன்முறை ஒரு இடதுசாரி அரசியல் கருத்தரங்குக்காக சென்னை வந்திருந்தேன். ஒரு பாடாவதி லாட்ஜில் தங்கி இருந்தோம். கூட்டமோ படுமொக்கை. முஸ்தபா என்னை வெளியே அழைத்துக் கொண்டு போனார். முதன்முறை மின்சார ரெயிலில் தொங்கி பயணித்து தண்டவாளங்கள் ஏறிக் குதித்து ஒரு வீட்டுக்கு போனேன். அது முஸ்தபாவின் தோழியின் வீடு. அவருக்கு கல்யாணமாகி கணவன் குழந்தையோடு இருந்தார். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரது கண்ணைச் சுற்றித் தெரிந்த கருவளையங்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. வழக்கமான ஞாயிற்றுக் கிழமை களைப்புடன் எங்களுக்கு உபசாரம் செய்தார். ரொம்பவொன்றும் பேசிக் கொள்ளவில்லை. பத்து நிமிடம் இருந்து விட்டு வந்து விட்டோம். முக்கியமாக திட்டமிட்டு ஒன்றையும் பேச பெற அவர் அங்கே போகவில்லை. எந்த ஊருக்கு போனாலும் அங்கு சின்ன பரிச்சமுள்ள ஆட்களைக் கூட தேடிப் பார்த்து பேசி விட்டு தான் வருவார். என்னை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள் எனக் கேட்டேன். “தனியே அமர்ந்து உனக்கு போரடிக்கும் என நினைத்தேன்” என்றார். எனக்கு போரடிக்கும் என வாழ்க்கையில் ஒருவர் அக்கறைப்பட்டு முதன்முறை பார்த்தேன். அதுவரை நான் மணிக்கணக்காய் தினமும் போரடித்து முகம் பார்க்க ஆளில்லாமல் தனிமையில் பல ஆண்டுகள் கழித்திருக்கிறேன். யாரும், என் பெற்றோர், உறவினர் என யாரும், அதை ஒரு பிரச்சனையாய் கருதியதில்லை. ஆனால் முஸ்தபா நினைப்பார். எளிய வெறும் பரிச்சயம் மட்டுமே உள்ள ஒருவரை கூட அப்படி முக்கியமாக நினைப்பார். எனக்கு மிகச்சின்ன வயதில் இருந்தே அவரைப் போன்ற ஆட்களின் அருகாமை கிடைத்திருந்தால் நான் இன்னும் கொஞ்சம் நேர்மறையாய் யோசிக்கக் கூடிய ஆளாக இருந்திருப்பேனோ எனத் தோன்றும்.
பின்னர் சென்னை வந்து மேன்ஷனில் தங்கி இருந்த போதும் தேடிப் பிடித்து வந்து பார்த்து விட்டு போனார். ஒன்றையும் எதிர்பார்க்க மாட்டார். அது உறவுகளுக்கு அவர் அளிக்கும் மரியாதையின் வெளிப்பாடு என்பதைத் தவிர. ஒருநாள் அவர் சிங்கப்பூர் போன ஒரு கதையை சொன்னார். அங்கு முன்னர் அவரது அப்பா வசித்திருக்கிறார். அப்பாவை முஸ்தபா சின்ன குழந்தையாய் இருக்கையில் பார்த்த நினைவு. அவரோடு அதிகம் பழகினது இல்லை. சதா பயணங்களில் இருக்கும் ஊர்சுற்றி அப்பா. சிங்கப்பூரில் அப்பா இருந்த இடங்களைத் தேடிப் போயிருக்கிறார். அங்கு அப்பாவின் நண்பர்களிடம் பேசியிருக்கிறார். அதில் இருந்து தன் அப்பா இயல்பில் மிக நட்பானவர் என்றும், தேடி தேடி புது உறவுகளை அமைக்கும் பண்பு கொண்டவர் என்றும் அறிந்து கொண்டார். பிறகு என்னிடம் சொன்னார் “நான் ஏன் இவ்வளவு நட்புக்கு முக்கியத்துவம் அளிப்பவனாக, ஆட்களோடு பழக விருப்பம் கொண்டவனாக இருக்கிறேன் என அந்த பயணம் புரிய வைத்தது. நான் என் அப்பாவைப் போலவே இருக்கிறேன். இத்தனைக்கும் நான் என் அப்பாவோடு அதிகம் பழகவில்லை. அவரைக் குறிந்த எந்த நினைவும் இல்லை. ஆனாலும் என் குணம் அப்பாவினுடையது போலவே இருக்கிறது”
சில மனிதர்கள் இயல்பில் நல்லவர்களாக இருப்பதற்கு காரணம் சூழலா மரபியலா தெரியவில்லை. ஒருவர் கெட்டவராக இருப்பதற்கான காரணங்கள் சொல்வதைப் போல இது அத்தனை எளிதல்ல.
“கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?”
நல்லவராக இருந்து விட எல்லாருக்கும் ஒரு பக்கம் ஆசையாக இருந்தாலும் சூழலோ வேறு எதுவோ ஒன்றோ அனுமதிப்பதில்லை. அதனால் தான் தீமையை ஒரு எதார்த்தமாக ஏற்றுக் கொண்டு விட்ட என்னைப் போன்றோருக்கு ஏதோ ஒரு நல்லவனை அண்மையில் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு வெற்றுகிரக ஆளை தரிசிக்கும் சுவாரஸ்யத்தை அளிக்கிறது.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates