பொதுவான கணக்கு வாத்தியார்கள் மாணவர்கள் கணக்கு படித்தால் மட்டுமே உருப்பட முடியும் என திடமாக நம்புவார்கள். “உலகமே கணிதத்தின் அச்சின் தான் சுழல்கிறது” என்று ஸ்படிகம் எனும் படத்தில் கணக்கு வாத்தியாராக வரும் திலகன் சொல்லுவார். அப்படி எனக்கும் ஒரு ஆசிரியர் இருந்தார். சர்மா. ஊரில் அவருக்கு மிக நல்ல பெயர். எவ்வளவு சிரமமான கணக்கையும் மிக எளிதாக தீர்க்கும் சூத்திரங்களை சொல்லித் தருவார் என கூறுவார்கள். அவரது மாணவர்கள் தாம் பொதுவாக கணக்குப் பாடத்தில் முதலில் வருவார்கள்.
பதினோராம் வகுப்பில் இருக்கையில் அவர் வந்தார். வந்தார் என்பது மட்டுமே எனக்கு நினைவு. நான் பொதுவாக கடைசி பெஞ்சில் அமர்ந்து பல்வேறு உலக விசயங்களை சிந்தித்துக் கொண்டிருப்பேன். அதனால் என்னை அவரது டியூசன் வகுப்புக்கும் அனுப்பினார்கள். அங்கு போனதும் ஒரு கணக்கை மிக எளிதாக வேகமாக போட்டுக் காட்டினார். ஆனால் எனக்கு அது உபயோகப்படவில்லை. ரொம்ப எளிதான காரியங்களை புரிந்து கொள்ளவும் ரொம்ப அறிவு வேணும் என அறிந்து கொண்டேன். அவ்வளவு தான்.
ஒருநாள் சர்மாவின் வகுப்பை கட் அடித்தேன். அவர் மிகவும் வருந்தினதாக என் நண்பர்கள் சொன்னார்கள். அதாவது பொதுவாக நல்ல மாணவர்களை தான் ஆசிரியர்கள் மிஸ் பண்ணுவார்கள் ஆனால் இவர் வேறு மாதிரி ஆசியர் போல என நினைத்தேன். சரி அவருக்காகவே அடுத்த நாள் போனேன். என்னைப் பார்த்ததும் “டேய் நீ உருப்பட மாட்டே. பிச்சையெடுக்கத் தான் போறே” என்று சாபம் விட்டார். இதென்ன வம்பா போச்சு என நினைத்தேன்.
எனக்கு படித்து பெரிய ஆள் ஆகும் கனவு என்றுமே இருந்ததில்லை. அதனால் படிப்பு சம்மந்தப்பட்ட எந்த கட்டாயங்களும் அழுத்தங்களும் என்னை தீவிரமாய் பாதித்ததில்லை. அதாவது பரீட்சையில் தோல்வி அடைந்தால் தற்கொலை பண்ணும் வகையான மாணவன் அல்ல. உங்கள் பலரையும் போல் பள்ளிக்கூடத்தை கடுமையாக வெறுத்தேன். ஏன் படிக்க வேண்டும் எனும் குழப்பமும் பள்ளி முடிக்கும் வரை நீங்கவில்லை. இப்போது ஆசிரியர் ஆன பிறகு நான் எந்த மாணவரிடமும் சாபம் விடுவதில்லை; உருப்படும் முறை பற்றி உபதேசமும் செய்வதில்லை. அவர்களின் படிப்பு சார்ந்த எரிச்சலும் குழப்பமும் எனக்கு வெகு பரிச்சயமானது.
எனக்கு சர்மா சார் மீது கோபமோ வருத்தமோ வரவில்லை. வேடிக்கையாக மட்டுமே இருந்தது. எத்தனையோ பேர் உழல்கிற இந்த புவியில் நானும் பிழைப்பேன் எனத் தெரியும். மேலும் எனக்கு ஒரு சின்ன அளவில் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி வாழ்ந்தால் போதும் எனும் எண்ணம் இருந்தது. யாருக்கும் எதையும் நிரூபிக்க தேவையில்லை என்பதால் யார் திட்டினாலும் உறைக்காது. இன்று மாணவர்களை திட்டுகிற வழிப்படுத்த முயல்கிற ஆசிரியர்களை பார்க்கையில் அவர்கள் உண்மையில் தம்மைத் தாமே கோமாளி ஆக்குகிறார்கள் என தோன்றும். நான் சர்மா மாதிரியான ஆசிரியன் அல்ல.
பொதுவாக ஒரு வகுப்புக்கு போகும் போது அவர்களுக்கு அறிவு புகட்ட வேண்டும் எனவோ என்னைப் போல் அறிவாளிகளாக அவர்களை மாற்ற வேண்டும் எனவோ நான் நினைப்பதில்லை. படித்தாலும் படிக்காவிட்டாலும் ஒன்று தான் என்பதே என் நிலைப்பாடு. நல்ல வேலை கிடைப்பது பணம், செல்வாக்கு, சாதி மற்றும் கொஞ்சம் உழைப்பு மற்றும் அதிர்ஷ்டம் சம்மந்தப்பட்டது. மதிப்பெண்களால் எந்த பயனும் இல்லை. என்னிடம் யார் வந்தாலும் இதைத் தான் சொல்வேன். ஒரு பாடத்தை எடுத்தால் முடிந்தளவுக்கு எளிதாக விளக்குவேன். நிறைய விசயங்களை சொல்வதை விட தேவையில்லாதவற்றை தவிர்ப்பது தான் நல்ல வகுப்பு. என்னுடைய அபிப்ராயங்களையும் முன்வைப்பேன். எனக்கு உடன்பாடில்லாதவை பாடத்தில் இருந்தால் விமர்சிப்பேன். அது போல் நான் சொல்வதன் மாற்றுத்தரப்புகளை பேச மாணவர்களை தூண்டுவேன். என்னுடைய வகுப்புகள் ஒரு பகிர்தல் அவ்வளவு தான்.
நேற்று ஒரு ஆங்கில இலக்கண வகுப்பு. போனதும் சொன்னேன்: “நான் சொல்லப் போகிற விசயங்களை முடிந்தவரை கவனித்து கேளுங்கள். போரடித்தால் கேட்க வேண்டியதில்லை. முழுக்க புரியாமல் இருந்தாலோ குழப்பமாக இருந்தாலோ விட்டு விடுங்கள். கொஞ்சம் புரியாமல் இருந்தாலோ கொஞ்சம் குழப்பமாக இருந்தாலோ கேள்வி கேளுங்கள். நான் சொல்வது அத்தனையும் நீங்கள் புரிய வேண்டிய அவசியம் இல்லை. போதுமான அளவு உங்களுக்கு தேவை என படுகிற அளவுக்கு உள்வாங்கினால் போதும்”. உடனே பையன்கள் சின்னதாய் ஒரு புன்னகை செய்தார்கள். ஓய்வாக அமர்ந்து என்னதான் சொல்கிறான் பார்ப்போன் என கேட்டார்கள்.
சிலர் கவனிப்பதில்லை என கண்ணைப் பார்த்தே தெரியும். அதற்காக அவர்களை கேள்வி கேட்டு சித்திரவதை செய்ய மாட்டேன். எனக்குத் தெரிந்தது அத்தனையும் அவர்களுக்கும் தெரிந்து விட்டால் அவர்கள் ஒன்றும் உலகமகா ஞானியாகவோ மாபெரும் பணக்காரனாகவோ ஆகப் போவதில்லை. இருந்தால் நான் ஏன் அவர்கள் முன் நிற்கப் போகிறேன்?
சர்மா சாரை போன்றவர்களும் மிக நல்ல ஆசிரியர்கள் என்பதையும் சொல்லத் தான் வேண்டும். ஆனால் அவர்கள் வேறு வகை. மாணவர்களை ஒரு எந்திரம் போல் முடுக்கி விட நினைப்பவர்கள். அவர்களால் பயன்பற்றவர்களும் இருக்கக் கூடும். நல்ல வேலையில் உயர்ந்த ஸ்தானங்களில். ஆனால் என்னிடம் நெருக்கமாகிறவர்கள் பொதுவாக சாதாரண மாணவர்களே. எங்கு போனாலும் ஏதாவது ஒரு மாணவன் ஓடி வந்து அன்பாக கைபற்றி விசாரிப்பான். நான் கற்றுக் கொடுத்ததனால் அவன் ஒன்றும் மேம்படவும் இல்லை கெட்டு குட்டிச்சுவரும் ஆகவில்லை என சமாதானப்படுவேன். என் வகுப்பில் வந்து சேர்கிறவர்கள் எந்த குறையும் இன்றி ஒழுங்காகத் தான் இருக்கிறார்கள். அவர்கள் அப்படியே திரும்ப போக அனுமதித்தால் போதும் என நினைப்பேன்.
கொஞ்சம் படிப்புசார்ந்த ஒழுக்கத்தையும் உழைப்பையும் மாணவர்களிடம் எதிர்பார்ப்பேன். வகுப்பில் ஏதாவது வேலை கொடுத்தால் அவர்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பேன். அப்படி செய்யாத மாணவர்களை முன் பெஞ்சில் அமர்த்தி பண்ண சொல்லுவேன். பெரும்பாலான பசங்கள் முரண்டு பிடிக்க மாட்டார்கள். அப்படியும் எதிர்க்கிறவர்களை தனியாக அமர்த்தி ஜாலியாக பேசிக் கொண்டிருப்பேன். அவர்கள் எனக்கு நல்ல நண்பர்களாகி விடுவார்கள். சிலவேளை முறைத்துக் கொண்டாலும் பிறகு எப்போதாவது நண்பர்களாகி விடுவார்கள்.
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு முறை நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். ஒரு ஆசிரியருடன் ஏதோ தகராறு என்பதால் அவரை அடிப்பதற்கு வெளியில் இருந்து ரௌடிகளை அழைத்து வந்திருந்தார்கள். ஒரே களேபரம். நான் அந்த துறையின் தலைவரிடம் சென்று என்ன செய்ய எனக் கேட்டேன். அவர் மழுப்பினார். சரி என்று பாடத்தை நடத்தினேன். வெளியில் இருந்து ஒரு மாணவன் வந்து “பசங்களை வெளியே அனுப்புங்க ஸ்டிரைக்” என்றான். நான் போடா என்று அவனை துரத்தி விட்டேன். இன்னும் சில பேருடன் வந்தான். அப்போதும் துரத்தினேன். வகுப்பு ஒரு புறம் நடந்து கொண்டிருக்க வெளியே மாணவர்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு கல் வந்து என் வகுப்பு ஜன்னலை நொறுக்கியது. தொடர்ந்து பல கற்கள். நான் வெளியே போய் பார்த்ததும் கல்வீசின மாணவர்கள் ஓடி விட்டார்கள். ஆனாலும் வகுப்பு மாணவர்கள் காயம்படக் கூடாது என அவர்களை அனுப்பினேன்.
கடந்த சில மாதங்களாக கடுமையான தோள் வலியில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன். பல இடங்களில் சிகிச்சை பலிக்காமல் ஒரு இடத்தில் பிஸியோதெரபி செய்து நல்ல பலன் இருந்தது. தொடர்ந்து உடற்பயிற்சிக்கு அனுப்பினார்கள். அங்கு அந்த மையத்தில் ஒரு இளைஞன் பார்க்க ரொம்ப பரிச்சயமாக இருந்தான். அவனும் என்னை திருதிருவென விழித்து பார்த்தான். அவன் தான் எனக்கு உடற்பயிற்சி சொல்லித் தந்தான். ரொம்ப நன்றாக பயிற்சி தந்தான். எனக்கு ரொம்ப பிடித்து அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். “உங்களை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே?” எனக் கேட்டான். நானும் அவன் முகம் ரொம்ப பரிச்சயமாய் இருக்கிறது என்றேன். நான் வசிக்கும் பகுதிகளில் அவன் இருந்ததில்லை. நான் முன்பு சென்றிருந்த ஜிம்களில் வந்திருக்கிறானா? இல்லை. இப்படி யோசித்து களைத்து வேறெதையோ பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எதேச்சையாக நான் வேலை பார்த்த கல்லூரியின் பெயர் அடிபட “சார் நான் உங்க மாணவன்” என்றான் உற்சாகமாக. ஆனால் எனக்கு அவனை வகுப்பில் பார்த்ததாக நினைவில்லையே! அவன் எனக்கு நினைவுபடுத்த ஒரு சம்பவம் சொன்னான்: “சார் ஸ்டிரைக் நடந்தப்போ நான் தான் உங்க வகுப்புக்கு வந்து பசங்களை விட சொன்னேன். நீங்க அப்போ ரொம்ப ஸ்டிரிக்ட். முடியாதுன்னு அனுப்பிச்சிட்டீங்க”
“ஓ அது நீதானா? ஞாபகம் வருது”
“நான் தான் சார் அது. நீங்க விட மாட்டேன்னுட்டதும் கடுப்பாகி கல்லை வேறு விட்டு அடிச்சாங்களே நினைவில்லே”
“ஆமா அந்த கல்லு ஜஸ்டு மிஸ்ஸு என் தலையை உடைச்சிருக்கும்”
“சார் அந்த கல்லை விட்டு அடிச்சது நான் தான்”
இப்படியான மாணவர்கள் தாம் எப்போதும் என்னோடு இருக்கிறார்கள்.
இன்றைய ஆசிரியர்கள் ஆசிரியர்களாகத் தான் உள்ளார்கள்... குருவாக சில பேர்... வாழ்க்கைக் கணக்கை சொல்லித்தருபவர்களும் குறைவு...
ReplyDeleteஆசிரியர் சர்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
தெளிவான கருத்துகள்.முற்றிலும் உண்மை
ReplyDelete//ஜஸ்டு மிஸ்ஸு//
ReplyDeleteதப்பிச்சுட்டீங்களா?
Cool person u are....keep it up
ReplyDelete