பொதுவாக மோசமான மனநிலை தவிர்க்க இயலாதது. மந்தாரமான வானிலை போல அது நமக்குள் ஒரு இருளை கசப்பை அவநம்பிக்கையை கொண்டு வரும். பருவநிலையை சகிப்பது போலவே மோசமான மனநிலையையும் சகிக்கிறோம். சிலர் பாட்டு கேட்பார்கள், படம் பார்ப்பார்கள், இணையத்தில், போனில் அரட்டை, அல்லது மூர்க்கமாக வேலை செய்வார்கள். கோயிலுக்கு கூட போகலாம். ஏன் தீர்வை நாடாமல் இத்தனையையும் செய்கிறோம்? ஏனென்றால் நமக்கு காரணம் தெரியவில்லை. மனம் தானாக தெளிய காத்திருக்கிறோம். அது எப்போது எனத் தெரியாததனால் வரும் பதற்றமும் ஒரு பக்கம் நம்மை செலுத்துகிறது.
நீரிழிவு போன்ற கோளாறுகள் இந்த இனம்புரியா சோக மனநிலையை தூண்டலாம். பெண்களுக்கு மாதவிடாயும் தூண்டலாம். சிலருக்கு குளிர்காலம் மனநிலையை மோசமாக்கும். நீரிழிவாளர்கள் இம்மனநிலையில் இருந்து மீள சர்க்கரை அதிகமான உணவை உட்கொள்ளவோ மது அருந்தவோ செய்வார்கள். இது இன்னும் ஆபத்தானது. தற்கொலை மனப்பான்மை கொண்டவர்கள், மதுப்பழக்கம் முற்றியவர்களுக்கும் இம்மனநிலை மேலும் ஆபத்தானது. சுய அழிவை நோக்கி எளிதில் தள்ளி விடும். ஒருநாள் காலை நமக்கே தெரியாமல் இந்த துக்கம் நம்மை விட்டு அகன்று விடும். வசந்தம் எப்போது மலர்ந்தது என்றே தெரியாமல் நாம் உற்சாகமாய் இயங்கிக் கொண்டிருப்போம். இந்த புதிர்மை இந்த துக்கமனநிலை என்பது ஒரு தீர்க்க முடியாத சிக்கல், நம் கட்டுப்பாட்டை கடந்த ஒரு காரியம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பாய் மனம் குறித்த நுணுக்கமான எண்ணங்களும் அறிவியல் பிரக்ஞையும் பரவலாக ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் இந்த மனநிலையை நாம் எளிதில் மன அழுத்தம் என பாவித்து இன்னும் அதிகமாய் அஞ்ச துவங்குகிறோம். நீங்கள் மனம் சரியில்லை என்றொரு மனவியல் மருத்துவரிடம் போனால் கணிசமானோர் தாட்சணியமின்றி anti-depressant மாத்திரைகள் தர வாய்ப்பிருக்கிறது. இன்று அப்படியான சூழல் நிலவுகிறது. மனிதன் 365 நாட்கள் × 24 மணிநேரம் மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என அறிவியல் எதிர்பார்க்கிறது. இல்லாவிட்டால் உங்களை மனநோயாளி என எளிதில் முத்திரை குத்துகிறது. மோசமான மனநிலை எளிதில் உங்கள் செயல்பாடுகளை மந்தமாக்கும்; வேலையில் ஆர்வம் குறைக்கும்; நண்பர்களோடு பேசுவது, ஆர்வமாக குடும்ப விசயங்களில் கலந்து கொள்வது மெல்ல மெல்ல இல்லாமல் ஆகும். இது ஓரளவுக்கு இயல்பானது. ஆனால் இன்றைய உளவியலாளர் ஒருவர் இந்த அறிகுறிகளை மிகைப்படுத்தி உங்களை பைத்தியம் என்று எளிதில் முடிவு கட்ட கூடும். இன்றைய சுழலில் பைத்தியமாக இருப்பதை விட மருத்துவர்களிடம் பைத்தியமாக மாட்டிக் கொள்வது இன்னும் ஆபத்தானது.
எனக்கு சில வருடங்களுக்கு முன் கடுமையான மூளை நீர்கோர்ப்பு ஏற்பட்ட போது ஒரு மருத்துவர் எனது ஆவேசமான பேச்சுக்களை வைத்து மன அழுத்தம் என சந்தேகித்தார். அவர் என் மனைவியிடம் விசாரிக்க அவரும் சில மாதங்களாக நான் சுணக்கமாக இருந்தது என் அக்காவிடம் மனஸ்தாபம் கொண்டிருந்ததை கூறினார். இதையெல்லாம் வைத்து எனக்கு மனக்கோளாறு என முடிவு செய்த மருத்துவர் என் சிகிச்சையை தள்ளிப் போட்டார். விளைவாக நான் சாவின் விளிம்புக்கு தள்ளப் பட்டேன். சமீபமாக என் மனைவியை டைபாயிடுக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தேன். அங்கு அவள் மனக்கசப்பால் செவிலிகளிடம் கொஞ்சம் வன்மமாக நடந்து கொண்டாள். ஊசி போடும் போது பயத்தால் கொஞ்சம் சத்தமாக அழுதாள். அதை செவிலிகள் மருத்துவரிடம் தெரிவிக்க மருத்துவர் என்னிடம் வந்து கேட்டார்: “உங்கள் மனைவிக்கு ஏதாவது உளவியல் பிரச்சனை இருந்ததுண்டா?”
“இல்லை டாக்டர் ஏன்?”
“இல்லை அவருக்கு நிஜமாவே வயிற்று வலியா இல்லை உளவியல் பிரச்சனையால் நடிக்கிறாரா என்று ஒரு சந்தேகம். அது தான் கேட்டேன். அவரது குடும்பத்தில் யாருக்காவது பைத்தியம் வந்த வரலாறு உள்ளதா?”
நான் அவளுக்கு எந்த உளப்பிரச்சனையும் இல்லை என அழுத்தி சொன்னதனால் அவர் சிகிச்சையை தொடர்ந்தார். இல்லையென்றால் நிச்சயம் உளவியலாளரை சந்திக்கும்படி பரிந்துரைத்து சிகிச்சைகளை தள்ளிப் போட்டு நிலைமையை இன்னும் சிக்கலாக்கி இருப்பார். என் மனைவி கொஞ்சம் உணர்ச்சி வசப்படக் கூடிய எதையும் வெளிப்படையாய் சொல்லக் கூடிய சட்டென்று மனம் கசந்து போய் கத்தக் கூடிய டைப். அவளது மனப்பாங்கு எனக்கு நன்கு தெரியும். ஆனால் இதையெல்லாம் மனநோயின் அறிகுறி என ஒருவர் தவறாக நினைக்க அதிக சிரமம் இருக்காது. யாராவது கொஞ்சம் முகம் சுளித்து கண் கலங்கினாலே மன அழுத்தம் என நினைக்கிற காலகட்டத்தில் வாழ்கிறோம்.
இன்று மன அழுத்தம் குறித்த பீதி எல்லோரிடமும் வேரூன்றி உள்ளது. சதா நமக்கு பைத்தியம் பிடிக்குமோ என்கிற அச்சம் மனதுக்குள் நிழலாடுகிறது. வாழ்வின் கடுமையான நெருக்கடி, ஊடகங்கள் மூலம் சதா நூற்றுக்கணக்கான மனிதர்களுடன் புழங்கியபடி இருப்பது, உளவியல் குறித்த அரைகுறை தகவல்களின் பரவல் என இதற்கு பல காரணங்கள். ”தனியாவர்த்தனம்” எனும் ஒரு மலையாளப் படத்தில் எப்படி ஒரு ஆரோக்கியமான நபரை ஊர் சேர்ந்து பைத்தியம் என முத்திரை சுமத்தி இறுதியில் அவருக்கே தான் பைத்தியமோ என அச்சத்தை தோற்றுவித்து பைத்தியமாகவே ஆக்கிவிடுவதை காட்டியிருப்பார்கள். இன்றைய சூழலில் நமக்கு நாமே அதை செய்து கொண்டிருக்கிறோம்.
மன அழுத்தம் என்பது இன்று அன்றாட மொழியில் அடிக்கடி புழங்கப்படும் ஒரு வார்த்தையாகி விட்டது. கொஞ்சம் மனம் அமைதியற்று இருந்தால் ஆற்றல் குறைந்து தோன்றினால் கசப்பு ஏற்பட்டால் depressed ஆக இருப்பதாக சாதாரணமாக சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நாம் முதலில் மன அழுத்தம் என்பது ஒரு இயல்பு என ஏற்றுக் கொள்ள வேண்டும். உடம்பு வலி, ஜலதோஷம், இருமல் போல மன அழுத்தமும் ஒரு சின்ன பின்னடைவு அவ்வளவு தான். நாம் இதை சீரியசாக எடுத்து சரி செய்ய முனையும் போது தான் அழுத்தம் இன்னும் சிக்கலாக ஆழமாக ஆகிறது.
அதிகமாக படிப்பவர்களுக்கு சிந்திப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பதிகமா? வீட்டில் நாய் பூனை வளர்ப்பவர்கள் இந்த மிருகங்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுவதை கவனிக்க முடியும். Mood disorder என்பது மிருகங்களுக்கும் வருவது. என் நாய்க்கு மனநிலை மோசமானால் உலகமே வெறுத்தது போல அமர்ந்திருக்கும். என்ன செய்தாலும் அது உற்சாகமடையாது. ஆக அதிகம் சிந்திக்காத மிருகங்களுக்கும் வருகிறதென்பதால் மன அழுத்தம் என்பது மூளை வளர்ச்சி மற்றும் இயக்கத்தோடு சம்மந்தமுள்ள ஒன்றல்ல என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
சொல்லப் போனால் வலுவான தர்க்க அறிவும் அறிவியல் வாசிப்பும் கொண்டவர்களால் இந்த மன அழுத்தத்தை மேலும் சுலபமாக தன்னம்பிக்கையோடு சமாளிக்க முடியும். முதலில் நாம் நம் மனதை ஒரு விடுவிக்க முடியாத புதிர் என எண்ணுவதை நிறுத்த வேண்டும். இலக்கிய ஈடுபாடு கொண்டவர்களுக்கு உள்ள ஒரு பிரச்சனை மனதை குறித்த மிகை பாவனைகளை கொள்ளுவது. நம் மனம் கண்காணாத ஏதோ சக்தியால் இயக்கப்படுவதாக நம்புவது.
முதலில் நாம் நமது மனதை ஒரு எளிய எந்திரமாக கற்பனை செய்ய வேண்டும். ஒரு கணினி தனக்கு உள்ளிடப்படுகிற செயலிக்கு ஏற்றபடி இயங்குவது போலத் தான் மனமும். பல சமயங்களில் தேவையற்ற பொய்யான எண்ணங்கள் தாம் நம் மனக்கலக்கத்துக்கு காரணமாக இருக்கும். ஆனால் ஒன்றன் மேல் ஒன்றாக எண்ணங்கள் விழுந்து குவிந்து ஆதார கவலைக்கான எண்ணம் எதுவென கண்டறிய முடியாமல் குழப்பமாக இருக்கும். நடக்கும் போது கால் தடுக்கி விழுந்து அடிபட்டு வலி ஏற்படுவது போலத் தான் இது. நாம் நம்மை தடுக்கி விட்ட கல்லை மறந்து வலியை குறித்து கவலையால் அச்சத்தால் ஆட்கொள்ளப்படுவோம்.
நாம் எவ்வளவு தான் படித்து, அனுபவம் பெற்று முதிர்ச்சியாக இருந்தாலும் நம் மனம் ஒரு குழந்தையை போல அசட்டுத்தனமாக தான் செயல்படும். இந்த முரண்பாட்டை முதலில் ஏற்க பழக வேண்டும். நாம் வேறு, நம் மனம் வேறு. நாம் என்பது யோசித்து செயல்படும் பிரக்ஞை. மனம் என்பது மூன்று வயது குழந்தையின் அறிவுடன் இயங்கும் ஒரு எந்திரம். ஆக நாம் நமது மனத்தை மகிழ்ச்சியாக இருக்க பழக்க முடியும் என இன்றைய அறிவியல் கூறுகிறது. ஒரு குழந்தைக்கு நடைபழ சாப்பிட சொல்லித் தருவது போல் மனத்தையும் பழக்க முடியும். ஆனால் என்ன தான் கற்றுவித்தாலும் ஒரு மூன்று வயது குழந்தையை எப்போதும் நம் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் அல்லவா; அதைப் போல மனத்தையும் நம் அறிவின் கண்காணிப்பில் வைத்திருப்பது நலம்.
சரி மகிழ்ச்சியாக இருக்கும் படி நம் மனத்தை பழக்குவது முடியக் கூடிய ஒன்றா? ஆம். ஆனால் மிக சிரமமான ஒன்று. ஆனால் அடிக்கடி கவலைகளில் மூழ்காமல் இருக்க நாம் எளிதில் பழக்க முடியும். கவலையும் மகிழ்ச்சியும் பழக்கங்கள் தாம். நமது பண்பாட்டு சூழலில் நாம் கவலைப்படும்படியாய் தான் அதிகம் பழக்கப்படுகிறோம். இந்த கவலை பயத்தில் இருந்து தோன்றுகிறது. மிகச்சின்ன வயதில் இருந்தே குடும்பத்தில் பள்ளிக்கூடத்தில் பிறகு வேலையிடங்களில் ஊடகங்களில் சதா அச்சத்தை நமக்குள் சிறுக சிறுக ஊசி கொண்டு செலுத்தியபடியே இருக்கிறார்கள். அதனால் தான் பயத்தை ஏற்படுத்தும் புரளிகள் நம் கவனத்தை எளிதில் கவர்கின்றன. மிரட்டி ஆதிக்கம் செலுத்துபவர்களிடம் உடனடியாய் பணிகிறோம். கவலையற்று இருக்க நாம் பழக்கப்படுத்தப்படவில்லை.
முதல் படியாய் கவலையை வேரோடு பிடுங்கி எறியும் நுட்பத்தை கற்க வேண்டும். இது நீங்கள் தர்க்க ரீதியாய் சிந்திக்கிறவர் என்றால் இன்னும் எளிது. மன அழுத்தம் அல்லது கசப்பு ஏற்படுகிறதென்றால் அது எப்படி துவங்கியது என பின்னுக்கு போய் தேடி கண்டுபிடியுங்கள். ஏதாவது ஒரு சம்பவம் அல்லது வாக்கியம் நம் மனதின் ஸ்விட்சை அணைத்திருக்கும். அது எது என அறிந்த பின்னால் அது ஏன் நம்மை அச்சமூட்டுகிறது என சிந்தியுங்கள். உதாரணமாய் ஒரு நண்பன், காதலி, கணவன், மனைவி, அல்லது மேலாளர் சொன்னது உங்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கும். ஒரு அணுக்கமான உறவை நீங்கள் இழக்க நேரிடும் என்கிற அச்சமாக இருக்கலாம். அல்லது வேலையை இழக்கும் அச்சமாக இருக்கலாம். அல்லது நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என்கிற பயமாகவோ நாம் ஒரு குற்றம் பண்ணி விட்டோம் என்கிற மனக்கிலசமாகவோ இருக்கலாம்.
இந்த பயத்தை வகைப்படுத்துங்கள். நம் வாழ்வின் அடிப்படை ஊக்கியாக இருப்பது விழுமியங்கள். வேலை, உறவு, சமூக மரியாதை இவை அனைத்தின் பின்னுள்ளது வெவ்வேறு விழுமியங்கள் தாம். இந்த விழுமியங்கள் மனிதன் உருவாக்கியவை. இவற்றை நாம் கட்டுப்படுத்தவும் தீர்மானிக்கவும் முடியும். வேலையை இழப்பதோ உறவு முறிவதோ நாம் அது சார்ந்த விழுமியத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பொறுத்தது. நீங்கள் இழக்கப் போவதாய் அஞ்சுகிற ஒன்று இல்லாமல் எத்தனையோ பேர் நிம்மதியாக சாதாரணமாக வாழ்ந்து வருவதை கவனியுங்கள். எல்லாம் இழந்த பின்னும் நாம் ஒன்றையும் இழந்து விடுவது இல்லை என அறியுங்கள்.
மனதை கட்டுப்படுத்துவது என்பது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது அல்ல விழுமியங்களுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தை கட்டுப்படுத்துவது தான். அதற்கு உங்களுக்கு தர்க்க அறிவும் ஆதாரங்களும் வேண்டும். உதாரணமாக பத்தாம் வகுப்பில் குறைவாக மதிப்பெண் வாங்கிய ஒருவர் நம் போதுமான ஆதாரங்களுடன் தர்க்கத்துடன் நம் கல்வி அமைப்பு அபத்தமான ஒன்று, பயன்பாட்டில் அதிக மதிப்பெண் வாங்கியவர்கள் ஒன்று வெற்றிபெற உத்திரவாதம் இல்லை என தனக்குத் தானே நிரூபிக்க முடியும். அல்லது வேலையில் முன்னேற்றம் பெற முடியாத ஒருவர் தர்க்க ரீதியாக தன் முன்னுள்ள வேறு வாய்ப்புகளை குறித்து யோசித்து திட்டமிடுவதன் வழி தற்போதைய வேலைக்கு தரும் மிகுதியான முக்கியத்துவத்தை குறைக்க முடியும். எவ்வெவற்றுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை எந்தளவுக்கு நம்மால் தீர்மானிக்க முடியுமோ அந்தளவுக்கு நாம் மகிழ்ச்சியாக இருப்போம்.
துக்கம் ஒரு உணர்ச்சிகரமான நிலையில் ஏற்படுகிறது. அப்படி இருக்க ஒரு உணர்ச்சிகரமான மார்க்கத்தால் தானே அது சரியாக முடியும் என நீங்கள் கேட்கலாம். இந்த நம்பிக்கை தான் நம்மை மன அழுத்தத்தின் போது யாருடைய ஆதரவையோ ஒரு அதிர்ஷ்டத்தை அற்புதத்தை எதிர்பார்த்து ஏமாற்றமடைய வைக்கிறது. எந்த ஒரு பிரச்சனையும் அதன் எதிர்நிலை கொண்டு தான் சரி செய்யப்படுகிறது. உணர்ச்சிகரமான பிரச்சனையை சரி செய்ய முதலில் மனதை காலி செய்ய வேண்டும். அதற்கு பிரச்சனையின் வேரைத் தேடும் தர்க்க அலசல் உதவும்.
இன்னொரு விசயம் உணர்ச்சிகரமான ஆதரவு அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றத்தால் நமது மனநிலை சரியாகிறது என கொள்வோம். நாளை மீண்டும் இதே அழுத்தம் வரும் போது நம்மால் கையாள முடியாது. ஒவ்வொரு முறையும் தலைசாய்க்க தோள் இராது; ஆதரவுக்கரங்கள் நீளாது; அற்புதங்கள் நிகழாது.
அதனால் தான் மோசமான மனநிலை வருவது போகப் போக அடிக்கடி நிகழ்வதாக மாறும். இதன் காரணம் நாம் இதனை ஒரு பிரச்சனையாக மிகையான முக்கியத்துவம் அளித்து அனுமதிப்பதும் ஒரு கையாலாகாத நிலையில் நம்மை வைப்பதும் தான்.
பொதுவான மன அழுத்தம் பலவீனமான மனதைத் தான் அதிகம் தாக்கும் என்கிறது உளவியல். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்றால் நீங்கள் உங்களை கவனமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என பொருள்.
எப்படி முதுதுவலி பிரச்சனை உள்ளவர்கள் முதுகுக்கு வலி ஏற்படுத்தும் சூழல்களை தவிர்ப்பது முக்கியமோ அது போலத் தான் மன அழுத்தத்துக்கும். எனக்குத் தெரிந்து சிலர் மன அழுத்தச்சூழலை தேடிப் போவார்கள் அல்லது அது தம்மைச் சுற்றி உருவாக அனுமதிப்பார்கள். நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் என்றால் முடிந்தவரையில் கண்ணீரைத் தூண்டும் இடங்களில் இருந்து அகல்வது நல்லது. உங்களிடம் சதா வாதம் புரிந்து மனதை காயப்படுத்த முயல்பவர்களிடம் இருந்து அகன்றிருப்பதும் நல்லது. நம்மைக் காயப்படுத்தும் எத்தனையோ உரையாடல்கள் தினமும் மலர்ந்து கொண்டிருக்கின்றன. யாராவது நம் பக்கத்திலோ பின்னாலோ கத்தியை உருவிக் கொண்டு நிற்கிறார்கள். நம்மைச் சுற்றி உள்ளோருக்கு நம்மைப் பற்றி ஆயிரம் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அவற்றை எதிர்கொள்ள வேண்டுமா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
நீங்கள் மிக மிக முக்கியமாய் நினைக்கும் நபர்கள் அல்லாமல் வேறு யாரையும் உங்களை குற்றம் கூற விமர்சிக்க அனுமதிக்காதீர்கள். உங்களைப் பற்றி யார் கருத்து சொன்னாலும் உதாசீனியுங்கள். யாருக்கும் உங்களைப் புரியாது, அதனால் தெரியாது, தெரியாதவருக்கு உங்களைப் பற்றி கருத்துக் கூற உரிமையில்லை என நம்புங்கள். அந்த மிக மிக முக்கியமான நபர்களை எண்ணிக்கையில் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள். அது ஒருவராக இருந்தால் நல்லது; அந்த ஒருவரும் நீங்களாகவே இருந்தாலும் மிக மிக நல்லது.
முடிந்தவரை வெளிப்பிரச்சனைகளில் கலந்து கொள்ளுங்கள், கருத்து கூறுங்கள், விமர்சியுங்கள். ஆனால் உங்கள் உள்பிரச்சனைகளில் எந்தளவுக்கு குறைவாக அடுத்தவர்களை அனுமதிக்கிறீர்களோ அந்தளவுக்கு அரோக்கியமாக இருப்பீர்கள். அதாவது நீங்கள் உங்கள் உள்பிரச்சனையை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆனால் அதில் கருத்து கூற அவரை அனுமதிக்காதீர்கள். பல சமயங்களில் நாம் நம் உடலை பாதுகாப்பது போல் மனதை காப்பதில்லை. நம் மனதை ஒரு குப்பைக்கிடங்கு போல் பயன்படுத்த பிறரை அனுமதிக்கிறோம்.
உடல் சார்ந்த தன்னம்பிக்கையும் மனத்தை வலுப்படுத்த அவசியமானது. மனிதன் தன்னைச் சுற்றி அந்நியர்கள் அதிகம் இருக்கும் போது இயல்பாகவே பதற்றம் மிக்கவனாகிறான். ஒரு திரையரங்கில் உங்கள் அருகில் முழங்கையை உராசியபடி அமர்ந்திருக்கும் நபர் கூட உங்களை எரிச்சல்படுத்தக் கூடும். தற்காப்புக்கலை பயில்வது உங்கள் மனதை வலுப்படுத்தவும் பயன்படும். உங்களால் எந்த சூழலிலும் தற்பாதுகாக்க முடியும் என்கிற நம்பிக்கை அபாரமான அமைதியை தன்னிறைவை அளிக்கும்.
சில மாதங்களுக்கு முன் நான் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்தேன். எவ்வளவு யோசித்தும் காரணம் புலப்படவில்லை. நிறைய தூங்கினேன், படித்தேன், எழுதினேன், இடைவிடாது வேலை செய்தேன், பயணம் செய்தேன். ஆனால் மன அழுத்தம் எல்லா அனுபவங்களுக்கும் பின்னால் ஒரு நிழல் போல் வந்து கொண்டிருந்தது. பிறகு ஒருநாள் எரிக் புரோம் எனும் உளவிய்லாளரின் Fear of Freedom எனும் புத்தகம் படித்தேன். அந்த புத்தகத்துக்கும் மன அழுத்தத்துக்கும் சம்மந்தமில்லை. ஆனால் புத்தகத்தின் ஒரு கட்டத்தில் எனக்கு சட்டென்று ஒரு திறப்பு ஏற்பட்டது. என அழுத்தத்தின் காரணம் பிடிபட்டது.
எரிக் புரோம் நவீன மனிதனின் அடிப்படை நெருக்கடிகளில் ஒன்று இருப்பு குறித்த அச்சம் என்கிறார். அது வேலை, உறவு என பல மட்டங்களில் வெளிப்படுகிறது. எதையோ இழக்கப் போகிறோம் அல்லது எதோ ஒன்று இல்லாமல் இருக்கிறோம் என்கிற நீங்காத உணர்வு நம்மை செலுத்துகிறது. இந்த பயம் தான் நாம் பேய் போல் வேலை பார்ப்பதற்கான தூண்டுதல் என்கிறார். நவீன மனிதனுக்கு தன்னிறைவு இல்லாமல் போனதற்கு காரணம் அவன் பணத்துக்காக பணம் சம்பாதிக்கிறான், குடும்பம் என்ற ஒன்றுக்காக குடும்பம் அமைக்கிறான், உறவு என்கிற ஒன்றுக்காக உறவுகளை உருவாக்குகிறான் என்பது. இதன் பின் உள்ள அச்சத்தை தான் அவர் விளக்குகிறார். இதைப் படித்த போது தான் எனக்குள் அந்த கட்டத்தில் வேலை, சமூக நிலைப்பு மற்றும் அந்தஸ்து குறித்த ஒரு ஆழமான அச்சம் இருப்பதை உணர்ந்தேன். அந்த பதற்றம் தான் என் பிரச்சனைகளுக்கு ஆதாரம்.
நான் என்னிடமே பேசிக் கொண்டேன். நான் எதையும் இழந்து விடப் போவதில்லை என்று உறுதி கூறிக் கொண்டேன். அடுத்த நிமிடம் என்னுடைய ஒரு மாத மன அழுத்தம் பனித்திரை போல விலகியது. எனக்குள் அழுத குழந்தையிடம் பட்டுக்கோட்டையாரின் இந்த வரிகளைக் கூறினேன்:
“வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுண்ணு
விளையாடப் போகும் போது சொல்லி வச்சாங்க
உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வச்சாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே”
(அமிர்தாவில் நான் எழுதும் “தெரிந்ததும் தெரியாததும்” பத்தியில் மூன்றாவது கட்டுரை)
(அமிர்தாவில் நான் எழுதும் “தெரிந்ததும் தெரியாததும்” பத்தியில் மூன்றாவது கட்டுரை)
//நீங்கள் மிக மிக முக்கியமாய் நினைக்கும் நபர்கள் அல்லாமல் வேறு யாரையும் உங்களை குற்றம் கூற விமர்சிக்க அனுமதிக்காதீர்கள். உங்களைப் பற்றி யார் கருத்து சொன்னாலும் உதாசீனியுங்கள். யாருக்கும் உங்களைப் புரியாது, அதனால் தெரியாது, தெரியாதவருக்கு உங்களைப் பற்றி கருத்துக் கூற உரிமையில்லை என நம்புங்கள். ..//....unmai.
ReplyDeleteHey...very informative article...tks..
ReplyDeleteVery good article...
ReplyDelete