காலையில் ஒரு பஞ்சாயத்து. எங்க குடியிருப்பில் ஒரு நாய். தெரு நாய் தான். உள்ளேயே படுத்திருக்கும். கொரியர் பையன், கேஸ் சிலிண்டர் சப்ளையர், வேலைக்காரர்கள் என யாரைப் பார்த்தாலும் சமீபமாய் துரத்த ஆரம்பித்துள்ளது. அந்த நாய்க்கு என் மனைவி சாப்பாடு போடுவதால் காலையிலேயே என்னிடம் தகராறுக்கு மொத்த குடியிருப்பு ஆட்களும் வந்து விட்டார்கள். எனக்கு அப்போது பேஸ்புக்கில் விவாதித்த (சண்டை போட்ட) அனுபவம் வெகுவாக கை கொடுத்தது.
அவர்கள் பக்கம் நியாயம் என்பதால் அமைதி காத்தேன். ஏறிக் கொண்டே போனார் ஒருவர். கோபத்தில் என் வீட்டுக் கதவை போகும் போது அவர் வேகமாக சாத்திக் கொண்டு போனார். உடனே பிடித்துக் கொண்டேன். ”எப்பிடி நீங்க அப்பிடி கதவை உடைக்கிற மாதிரி சாத்தலாம்?” எனக் கேட்டேன். “நான் என்ன உடைத்தா விட்டேன்” என்றார். ”நீங்கள் உடைக்க வேண்டியதில்லை, அப்படி சாத்துவதன் மூலமாக என்னை அவமானப்படுத்த முயல்கிறீர்கள்” என்றேன். அவருக்கு இன்னும் டென்ஷனாகி விட்டது. பேச்சுவாக்கில் என்னை ஒருமையில் அழைத்தார். உடனே அதையும் பிடித்துக் கொண்டு ஏறினேன். அடுத்து அவர் மனைவி வந்து “அவரு கோபத்துல தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுக்குங்க தம்பி” என்றார். உடனே நான் “பரவாயில்ல வயசில மூத்தவர் தானே. ஆனா சார் உங்க வைப் எவ்வளவு டீசெண்டா பேசறாங்க பாருங்க. பாத்து கத்துக்கிங்க” என்றேன். அவர் முகம் செத்து விட்டது.
அடுத்து பிரச்சனையை நானே இப்பவே சரி பண்ணுகிறேன் என்று உறுதியளித்து விட்டு தண்ணீர் பற்றாக்குறை போன்ற பொதுப்பிரச்சனையை நோக்கி சர்ச்சையை திருப்பினேன். மெயிண்டெனன்ஸ் தொகை நிறைய பாக்கி வைத்திருக்கும் குடியிருப்பின் பொது எதிரி ஒருவர் இருக்கிறார். அவரால் தான் தண்ணீர் பிரச்சனை என்றார்கள். அவரை ஆளாளுக்கு திட்டி விட்டு நாயை மறந்து விட்டு கலைந்து போனார்கள்.
இப்பிடித் தானே பேஸ்புக்கிலயும் எல்லா சண்டையும் நடக்குது. எதையோ யாரோ ஆரம்பிச்சு விடுவாங்க. அப்புறம் மையத்துக்கு சம்மந்தமில்லாத ஒரு விசயத்தை நோக்கி அது போகும். யாராவது வாய் விட அதற்காக அவரை பிடித்து சாத்துவோம். கடைசியில் ஒரு புது பொது எதிரியை உருவாக்கி விட்டு கலைந்து போவோம்.
பேஸ்புக் சண்டையின் முக்கிய பாடம். எந்த பிரச்சனை எழுந்தாலும் அதுக்கு நேரடியா பதில் சொல்லக் கூடாது. அதை ஒட்டி எதிரி பேசும் போது ஒரு வார்த்தையை தப்பாய் விடுவார். அல்லது ஒரு அபத்தமான கருத்து சொல்லுவார். அதை வைத்து சாத்து சாத்தென்று சாத்த வேண்டும். கடைசி வரை நம்மள எதுக்கு திட்ட வந்தான்னு அவனுக்கே நினைவு வரக் கூடாது.
can i share this in my blog and face book?
ReplyDelete:))) very practical.
ReplyDeleteநன்றி கோவம் நல்லது ஷேர் பண்ணுங்க
ReplyDeleteபேஸ்புக் சண்டையின் முக்கிய பாடம். எந்த பிரச்சனை எழுந்தாலும் அதுக்கு நேரடியா பதில் சொல்லக் கூடாது.
ReplyDeleteவாழும் கலை பாடம் அருமை..!