தமிழ் ஸ்டுடியோ இணைய இதழில் தமிழ் குறும்படங்கள் பற்றி ஒரு அறிமுகத் தொடர் எழுதி வருகிறேன். இம்முறை சங்கர் நாராயணனின் படைப்பை விமர்சிக்கிறேன்.
சங்கர் நாராயணனின் Accident ஒரு தமிழ்ப்படம் தான். இப்படம் பட்டாசுக்கு திரி கொளுத்துவதை போன்று விரையும் திரைக்கதையை கொண்டது. அதாவது திரி எரிவதே இறுதியில் வெடிமருந்தை சென்றடையத்தான். சங்கர் நாராயணன் கடைசி காட்சி நோக்கி படத்தை மிக திறமையாக பார்வையாளனை கண்ணைக்கட்டி அழைத்துச் செல்கிறார். என்ன இரண்டே விதிகளை பின்பற்ற வேண்டும்.
(1) கதையை முன்கூட்டியே கேட்டிருக்க கூடாது
(2) சுஜாதாவின் ஒரு சிறுகதையில் இருந்து இப்படத்தின் கதை சுடப்பட்டுள்ளது. அதை பார்வையாளன் படித்திருக்கக் கூடாது.
படத்தின் முதல் காட்சியில் ஒரு திரையரங்கின் பகல் காட்சி டிக்கெட் கவுண்டர் வரிசை நகர்கிறது. அவ்வரிசையில் பளிச்சென்று சட்டையுடன் துலக்கமாக தெரியும் அந்த நபர் தான் கதாநாயகன் என்று கணிக்க முடிகிறது. தன் மனைவியுடன் பார்க்க ஓர இருக்கைகள் கேட்டு வாங்குகிறார். திரும்பும் வழியில் அவருக்கு விபத்தாகிட ஒரு போன நூற்றாண்டு நல்லவர் வந்து தன் சட்டையில் பெரிய வட்டமாக ரத்தக் கறை வாங்கிக் கொண்டு இவரைத் தூக்கி எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்து விடுகிறார். இங்கே ஒரு சின்ன குழப்பம் தோன்றுகிறது. ஓர இருக்கை கேட்டு வாங்கிய உற்சாகத்தில் அடி வாங்கியவரா அல்லது போன நூற்றாண்டு நல்லவரா நாயகன் என்று. அடுத்து கணவனுக்காக கட்டிலில் புரண்டு சிணுங்கி ஏங்கி மீதி நேரத்தில் அவன் நினைவாகவே ஆடை கலையாமல் சமைத்து காத்திருக்கும் வெள்ளித்திரை மனைவி. கணவன் வர தாமதமாக அவள் பதற்றமாகிறாள். திரைக்கதை தன் முதல் கேள்வியை எழுப்புகிறது. ஓர இருக்கை கேட்டவரா அல்லது நல்லவரா கணவன்? விபத்து நடந்த இடத்தில் ஒரு நுண்பேசி விழுந்து கிடக்கிறது. மனைவி கணவனின் நுண்பேசிக்கு அழைக்கிறாள். சாலை முழுக்க நல்லவர்கள் என்பதால் அந்த நுண்பேசி யாராலும் கவரப்படாமல் மல்லாந்து படுத்து சிணுங்குகிறது. யாருடைய நுண்பேசி அது? படத்தின் முக்கியமான இடம் சம்பிரதாய டாக்டர் கண்ணாடியை கழற்றியபடி தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றி இலவசப் பாடம் எடுத்து, காப்பாற்றிய நல்லவரையும் பாராட்டி சொல்ல வந்ததையும் ஒருவழியாய் சொல்கிறார்: “அவரது எண்ணை போலிசுக்கு கொடுத்து கண்டு பிடித்து தகவல் சொல்ல சொல்லி இருக்கிறேன்”. அடுத்த காட்சியில் வாசல் மணி அடிக்கிறது. மனைவி கதவை திறக்க செல்கிறாள். கதவைத் திறந்தால் என்ன சேதி கிடைக்கப் போகிறது. கணவன் விபத்தில் சிதைந்து கிடக்கிறான் என்றா? இல்லை. சட்டையில் ஓரிடத்தில் மட்டும் வட்டமாக ரத்தக்கறையை சமர்த்தாக வாங்கியபடி அவள் கணவன் எனும் நல்லவன் வருகிறான். இப்படி கடைசி காட்சியில் இருந்து பின்னோக்கி உருவாக்கப்பட்ட படம் இது.
சுடாத பழம் என்றாலும் ஊதிக் கொடுத்து ஒப்பேற்ற தெரிகிறது சங்கர் நாராயணனுக்கு. இந்த திறமை மற்றும் தன்னம்பிக்கை பாராட்டத்தக்கது. அடுத்து, சராசரியாக இருந்தாலும் பாத்திரங்களின் நடிப்பு தமாஷாக இல்லை என்பது மற்றொரு ஆறுதல் புள்ளி. விரிகோணத்தில் திரையரங்கு கேட்டை காட்டும் அந்த அவசியமற்ற முதல் காட்சி சாகசத்தை தவிர செந்திலின் ஒளிப்பதிவு நேர்த்தியாகவே உள்ளது. ”என்றென்றும் புன்னகை” பாடலை ஓரிடத்தில் அப்பட்டமாக பின்பற்றி உள்ளது தவிர இசையமைப்பாளர் ஜி.பிரின்ஸ் அதிகம் கலவரப்படுத்தவில்லை.
சுருக்கமாக, Accident அதிக விபத்துகளில் இல்லாத படம்.
கதை, திரைக்கதை மற்றும் இயக்கம்: பி.சங்கர் நாராயணன்
தயாரிப்பு: டி.சதீஷ் மற்றும் டி.கிருபாகரன்
படத்தொகுப்பு: ஜி.அஷ்வின்
ஒளிப்பதிவு: செந்தில்
இசை: ஜி.பிரின்ஸ்
யாருண்ணே இந்த சங்கரநாராயணன்?? நல்லாத்தான் பண்ணியிருக்கார்...
ReplyDeleteநான் அந்தப் படத்தை பார்த்திருக்கிறேன்.. சங்கர் நிச்சயம் திறமைசாலிதான்..
ReplyDeleteஇன்னும் ஒரு ஐந்து நிமிடம் குறைக்க வேண்டும் என சொல்லிக் கொண்டு இருக்கிறார்..
நன்றி ரோஸ்விக் மற்றும் கே.ஆர்.பி செந்தில்
ReplyDelete