இப்போதை மூன்று பேர் இருக்கிறார்கள். பதான், அஷ்வின், மற்றும் ஜடேஜா. ஆனாலும் அணித்தலைமையை பொறுத்தவரையில் இவர்கள் பந்து வீச்சாளர்கள் தாம். ஏனென்றால் நமக்கு அப்படி ஆல்ரவுண்டர்களின் பாரம்பரியம் இருந்ததில்லை. அவர்களின் அணியின் அவசியமான ஒரு பகுதியாக நாம் கருதுவதில்லை. அதனாலேயே கபில் தேவுக்கு பின் நாம் யாரையும் உருவாக்கவில்லை. அகார்க்கரும் ஜோஷியும் ராபின் சிங்கும் அப்படி வந்திருக்க வேண்டியயவர்கள். ஆனால் நாம் அவர்களை உதாசினப்படுத்தினோம்.
முதலில் இந்திய சீதோஷண நிலையில் ஆடுதளங்களில் ஆல்ரவுண்டராக இருப்பது மிக சிரமம். இங்கே பந்து வீசுவது கடின வேலை. மட்டையாடுவது கேளிக்கை. அதனால் கடின உழைப்புக்கு பதிலாக இந்தியர்கள் கேளிக்கையை தேர்கிறார்கள். அதனாலே ஆல்ரவுண்டர் என்ற கருத்தாக்கம் நமக்கு அந்நியமாக உள்ளது.
இவ்விசயத்தில் வரலாறும் முக்கியம்.
இருவகையான ஆல்ரவுண்டர்கள் உண்டு. Batting மற்றும் bowling. இங்கிலாந்து பவுலிங் ஆல்ரவுண்டர்களையும் ஆஸ்திரேலியா மட்டையாட்ட ஆல்ரவுண்டர்களையும் விளையாட வைப்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறார்கள். இயல்ஹம், ஹோலியோக், காலிங்வுட்டில் இருந்து இன்று சமீத் பட்டேல் வரை இத்தகைய வீரர்கள் இங்கிலாந்து அணியில் ஐந்து அல்லது ஆறாவது வரிசையில் ஆடுவார்கள். அவர்களை bits and pieces வீரர்கள் என்பார்கள். அதாவது இரண்டிலும் முழுமையானவர்கள் அல்ல. ஆனால் இத்தகையவர்கள் அணிக்கு ஒரு flexibility அளிப்பதால் அவர்களை அணியில் மதிப்புடன் வைத்திருக்கிறார்கள். நியுசிலாந்து முழுக்க துக்கடா ஆல்ரவுண்டர்களை நம்பின ஒரு காலம் உண்டு. ஆஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அற்புதமான பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு இது ஒரு கொள்கையாக இல்லை. ஹூப்பர், பிராவோ, ரஸல் போன்ற பலர் இருந்தாலும் மேற்கிந்திய தீவுகளும் ஆல்ரவுண்டர் விசயத்தில் ரொம்ப சீரியஸாக இருந்ததில்லை. தொண்ணூறுகளில் பொலாக், மெக்மில்லன், பொலாக், சிம்காக்ஸ், இப்போது ஏ.பி டிவில்லியர்ஸ் என முழுமையான ஆல்ரவுண்டர்களை கொண்டிருந்த ஒரே அணி தென்னாப்பிரிக்கா.
இந்திய சூழலில் ஆல்ரவுண்டர்களுக்கான இடம் உருவாக்கப்பட்டது கங்குலியின் காலத்தில். அப்போது ஸ்பின் ஆல்ரவுண்டர்களுக்கு மவுசு ஏற்பட்டது. பல மட்டையாளர்கள் பந்து வீச துவங்கினார்கள். சேப்பலின் பயிற்சியால் பதான் ஒரு நல்ல வேகவீச்சு ஆல்ரவுண்டராக பரிணமித்தார். ஆனால் அதற்குப் பின் சில வருடங்கள் நாம் வெளிநாடுகளில் ஆடியதாலும் பதான் பார்மில் இல்லாததாலும் ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் ஆடப்படவில்லை; தேவைப்படவில்லை. ஆக நாம் உலகக் கோப்பை இந்தியாவில் நடந்தது என்பதால் மட்டுமே ஜடேஜாவை ஆல்ரவுண்டராக வளர்த்தெடுத்தோம். யுவ்ராஜ் காயத்தில் இருந்து திரும்ப வேண்டும் என்று பிரார்த்தித்தோம். மட்டையாட்டத்துக்காக அல்ல, பந்து வீச்சுக்காக. அதற்குப் பின் மீண்டும் வெளிநாடுகளில் ஆட ஆரம்பித்ததும் ஆல்ரவுண்டரின் பாத்திரம் மீண்டும் தேவையா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது ஏனென்றால் நமக்கு தெளிவான நிரந்தரமான கொள்கை இல்லை என்பதே.
அஷ்வின் டெஸ்டிலும் ஒருநாளிலும் மிக நன்றாக மட்டையாடுகிறார். ஆனாலும் அவர் விலக்கப்பட்டார். பதான் சில வருடங்களுக்கு முன் அணியில் இருந்து விலக்கப்பட்ட போது அவர் மிக நன்றாக மட்டையாடி வந்தார். இங்கிலாந்து அணியில் என்றால் இந்த வீரர்கள் ஐந்து அல்லது ஆறாவது வரிசையில் கட்டாயம் ஆடியிருப்பார்கள். ஆனால் இந்தியாவில் நடக்காது. ஏனென்றால் நமக்கு ஆல்ரவுண்டர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெரிய விசயமில்லை.
இந்த மனநிலை மாற சற்று காலம் பிடிக்கும்.
சேவாக்கை அடுத்த அணித்தலைவர் ஆகலாமா?
சேவாக் இயல்பான ஒரு தலைவர் அல்ல. ஏனென்றால் சச்சினைப் போல் அவர் தனித்துவமானவர். அவருக்கு வெற்றிகரமான வழிமுறை அணியில் உள்ள அவரை விட வேறுபட்ட சற்று தரம் குறைந்த பிற வீரர்களுக்கு உதவாது. தலைவராக ஒரு தனித்தீவாக இருக்கிறார். அதே போல் ஒரு அணித்தலைவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மோசமான களத்தடுப்பாளரும், உடற்தகுதி கொண்டவருமான சேவாக் எப்படி கோலி, ஜடேஜா, ரெய்னாவை தலைமை தாங்க முடியும்? மேலும் அவருக்கு ஆட்டத்தின் போக்கில் மாற்றங்கள் பண்ண தெரியாது. ஒரே திட்டத்துடன் களத்துக்கு வருவார். அது சொதப்பினால் பின்னர் ஊருக்கு திரும்பும் பணத்தை தொலைத்த குழந்தை மாதிரி முழிப்பார். ஐ.பி.எல்லில் மற்றும் மே.இ தீவுகள் தொடரில் அவர் தலைமை கூட இப்படித் தான் இருந்தது. சேவாகின் தலைமை வெள்ளைக்காரர் ஸ்பூனால் தோசை சாப்பிடுவது மாதிரி. சாப்ஸ்டிக்கால் அல்வா சாப்பிடுவது மாதிரி. நியுசிலாந்து ஒருநாள் தொடரின் ஐந்து ஆட்டங்களையும் காம்பிர் மிக சிறப்பாக தலைமை தாங்கி வென்று தந்தார். அதற்கு பின் தேர்வாளர்கள் மே.இ தொடரில் சேவாகை மீண்டும் தலைவராக்கியது மிக பிற்போக்கான அசட்டுத்தனமான ஒரு முடிவு.
தோனி ஏன் மீண்டும் மீண்டும் தடை செய்யப்படுகிறார்?
தோனி தடை செய்யப்படுகிறாரா தடை வாங்குகிறாரா என்பது சற்று குழப்பமாக உள்ளது. இரண்டு முறையும் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசி தடை வாங்கியுள்ளதால் நமக்கிந்த சந்தேகம் தொடர்ந்து எழுகிறது. ஜடேஜாவுக்கு ரெண்டு ஓவர் கொடுத்திருந்தாலே பிரச்சனை முடிந்திருக்கும். ஆனால் அவர் வேண்டுமென்றே அணி மெத்தனமாக செயல்பட விட்டார். தடை வாங்கினார். ஏனென்றால் தோனிக்கு தலைமையில் முன்னிருந்த விருப்பம் இப்போதில்லை. அவரது செய்கை பரீட்சை பிடிக்காமல் குழந்தைகள் ஜுரம் வயிற்றுவலி என்று மட்டம் போடுவது போல் இது உள்ளது.
பொதுவாக அணித்தலைவர்கள் காயத்துடன் கூட ஓய்வு பெறாமல் ஆடுவார்கள். ஏனென்றால் தலைமை தாங்குவது அவ்வளவு முக்கியமாக அவர்களுக்கு இருக்கும். தேசிய அணி தனது சொந்த குடும்பமாக அவர்களுக்கு இருக்கும். தோனி கூட அப்படித் தான் முன்னர் இருந்தார். கடுமையான ஜுரத்துடன் ஆடியிருக்கிறார். உலகக்கோப்பை இறுதியின் போது அவருக்கு உடல்நலமில்லாமல் தான் இருந்தது. ஒருமுறை ரிக்கி பாண்டிங் ஓவர் ரேட்டை அதிகரிப்பதற்காக பங்களூரில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்டில் தனது அணி வெற்றி பெறும் நிலையில் இருந்த போது அபாயகரமாக வீசிக் கொண்டிருந்த வாட்சனை நீக்கி சுழலர்களை வீச வைத்தார். இந்தியா தோல்வியில் இருந்து தப்பித்தது. கடுமையான கண்டனங்கள் அவருக்கு எதிராக எழுந்தன. ஆனால் பாண்டிங் தடை வாங்குவதை விட அணி ஒரு ஆட்டம் தோற்பது மேல் என்று எண்ணினார். ஆனால் இன்று இந்த அவசிய தேவை தோனிக்கு இல்லை. ஏனென்றால் அணி தன்னில் இருந்து நழுவிப் போவதாய் உணர்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணி போல் உட்பூசல்களுடன் உள்ளது. சேவாக், சச்சின், காம்பிர் ஆகியோர் மெத்தனமானவர்கள் என்று வெளிப்படையாக விமர்சிக்கிறார். இது இந்திய கிரிக்கெட்டில் நடப்பது முதல் முறை. உலகக்கோப்பை வரை அவர் மூத்தவர்களை பொறுத்தார். இப்போது தோனி தனக்கே விசுவாசமான ஒரு அணியை உருவாக்க தெளிவாக விரும்புகிறார். அப்படி செய்வதற்கு அனுமதித்தால் அவர் தலைவராக தொடர்வார். அதுவே இந்திய அணிக்கு நல்லது அல்லாவிட்டால் இது போல் பல தமாஷான குழப்படிகளை அவர் பண்ணிக் கொண்டே இருப்பார். தோனி குழந்தை அல்ல, கிரிக்கெட்டும் வெறும் வேடிக்கை அல்ல.
No comments :
Post a Comment