ஒரு கசப்பான கனியை
எனக்குத் தருகிறாய்
மனமும்
உடலும்
சின்ன சின்ன
எண்ணங்களும் உணர்வுகளும்
கசப்பாய்
ஊறித் ததும்புகிறேன்
பிறகு
கருணையே இன்றி
ஒரு புது மிட்டாயை அறிந்த
குழந்தையை போல
சுவைக்கிறாய் என்னை
அவ்வளவு இனிப்பாய்
நான் உண்டதற்கும்
நீ உண்டதற்கும்
இடைப்பட்ட காலத்தில்
நிகழ்ந்தது தான்
அன்பு
என்கிறாய்
உமிழ்நீரோ
உடலின் நீர்களோ
குருதியோ
அல்ல
ஆனாலும்
கசிந்து பெருகுகிறேன் நான்
கசப்போ இனிப்போ
அற்ற ஒன்றாக
மாறியிருக்கிறேன்
அது
எப்போதென்றோ
எவ்வளவு காலத்துக்கென்றோ
அறிய மாட்டாய்
ஆனால்
மனித வரலாற்றில் என்றுமே
புசிக்கப்பட்டதன் அவலம்
அது மட்டுமே
என சொல்லிக் கொள்கிறாய்
அதாவது
புசிக்கப்படும் எதுவும்
சுவைப்பதும் இல்லை
அழிவதும் இல்லை
அந்த துர்பாக்கியத்தை கடந்து
மீண்டும்
ஒரு கசப்பான கனியாக
அது
காத்திருக்கிறது
No comments :
Post a Comment