என்னை அவமானப்படுத்தியவர்கள்
மிகக் குறைவாகவே
என்னைப் பற்றி அக்கறை கொண்டிருக்கிறார்கள்
கவலைப்பட்டிருக்கிறார்கள்
யோசித்திருக்கிறார்கள்
பல பேர் என் பெயரை கூட
அவர்கள் ஏன் என்னை
அவமானப்படுத்துகிறார்கள்
என்பதை விட
என் மீது
அன்பு கொண்டவர்கள்
வெறுப்பு பாராட்டுபவர்கள்
கவலை கொள்பவர்கள்
ஏதாவதொரு விதத்தில்
சிந்தனையில் பயன்படுத்துபவர்கள்
என்னை ஒத்த பெயர்கள் வரும் போது
ஒரு நொடி
தயங்கி மீள்பவர்கள்
ஏன் என்னை
அவமானப்படுத்துவதில்லை
என்றே வியக்கிறேன்
ஒரு நொடி அவமானப்படுத்தி விட்ட பின்
அவர்கள்
நகர்ந்து விடுகிறார்கள் எளிதில்
அவர்களுக்கு
மீண்டும் மீண்டும்
நினைவுபடுத்துகிறேன்
குற்றவுணர்வை விட
முதலில் ஆத்திரம் கொள்கிறார்கள்
பிறகு ஆச்சரியப்படுகிறார்கள்
பிறகு களைப்பாய்
பின்சாய்ந்து
புருவம் தூக்கி
தோள் தளர்த்துகிறார்கள்
பெருமூச்சு விடுகிறார்கள்
பிறகு
மிகுந்த தன்னம்பிக்கையுடன்
கண்களை நோக்குகிறார்கள்
அப்பார்வை நம்மை கடந்து போகிறது
அவமானத்தை விட
மெலிதான துர்பலமான தற்காலிகமான
வேறொரு உறவு
இருக்க முடியுமா என்று கேட்கிறேன்
ஒரு புண்ணியவானால் போதையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணைப் போல்
அவர்கள் முன் நின்று
அவர்களின் பாத்யதையை
புரிய வைக்க முயல்கிறேன்
அவமானித்தவர்கள்
அது தாம் அல்ல
அப்படியே ஆனாலும்
அந்த துர்பாக்கியத்திற்கு தாம் பொறுப்பல்ல
மேலும்
அவமானிப்பது தம் இயல்பல்ல
என்று வாதிடுகிறார்கள்
நியாயமே
ஆனாலும்
அவ்வளவு அநிச்சையான ஒரு உறவு
எவ்வளவு நிச்சயமான
காரணங்களை
தந்து விடுகிறது
யார் யார் விலகிப் போனாலும்
ஒருமுறை அவமானித்தவர்
நம் கூடவே வருகிறார்கள்
அவமானித்ததை போலவே
திரும்ப அவமானிக்கவும்
மன்னிக்கவும்
நேசிக்கவும்
உதாசினிக்கவும்
வெறுக்கவும்
நாம் உரிமை எடுத்துக் கொள்ளலாம்
அப்போது
அவமானித்தவர்களை போலவே
அவமானிக்கப்பட்டவர்களுக்கும்
இயல்பற்ற ஒன்று
எவ்வளவு எளிதாக வருகிறது
என்று புரிய வரலாம்
No comments :
Post a Comment