Tuesday, 26 June 2012

மனுஷ்யபுத்திரனை எங்கு கொண்டு போய் வைப்பது?


மனுஷ்யபுத்திரன் ஒரு விசயத்தில் விநோதமான கவிஞர். கவிதையின் வடிவம் மற்றும் இயங்குமுறையை பொறுத்த மட்டில் அவரது தலைமுறையிலோ அதற்கு முன்னரோ அவரைப் போன்று மற்றொருவர் இல்லை. அவரது வேர் நவீனத் தமிழ் மண்ணில் இல்லை. அவரை வரையறுப்பதில் நமக்கெல்லாம் சிக்கல் உள்ளது. அவரது மொழி ஒரே சமயம் பாராட்டுக்களையும் கண்டனங்களையும் வரவேற்கும் ஒன்று.

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்து தற்போதாக சுமார் பதினைந்து வருடங்களில் அவரது கவிதை வடிவம் பல இளம் கவிஞர்களால் கையாளப்பட்டிருக்கிறது படித்த மட்டில் மனுஷ்யபுத்திரனை போல் எழுதுகிறார் என்று அடையாளம் காணும் மட்டம் ஒரு தனி கலாச்சார மொழியாக அது மாறியுள்ளது. சுவாரஸ்யமாக இன்று விகடன், குமுதத்தில் வரும் கவிதைகளில் கூட மனுஷ்யபுத்திரனின் சாயல் எளிதில் காண முடிகிறது. உக்கிரமான தனிமனித உரையாடல்கள், அன்பின் பாசாங்கு, தனிமையின் மீட்பின்மை, தீமை குறித்த விவாதங்கள், இருளில் வெளிச்சம் இவையெல்லாம் மனுஷ்யபுத்திரனிசத்தின் கூறுகள்; அவருக்கே உரித்தான சொற்றொடர்கள் மற்றும் தனிவாசனை கொண்ட சொற்கள் உள்ளன. தேவதைக்கதைகளின் பிய்த்துப் போட்ட ரொட்டித் துணுக்குகளின் தடத்தை போல் அவற்றைப் பின்பற்றி நீங்கள் அவருக்கே உரித்தேயான கருக்களை, கருத்துநிலைகளை, விவாதப்புள்ளிகளை தொட முடியும்.

மனுஷ்யபுத்திரனை மறுப்பவர்கள் அவரது வழிவரும் இளங்கவிஞர்களையும் சேர்த்து தான் மறுக்கிறார்கள். அவரது கவிதை முறையை தவறென்று நம்புபவர்கள் அவர் ஒரு வியாதியை போல் பிறரை பாதிப்பதாக கருதுகிறார்கள். மனுஷ்யபுத்திரனை பின்பற்றும் கவிஞர்களின் உத்தேசத்தை மட்டுமல்ல மறுப்பவர்களின் காரணங்களையும் நாம் அலச வேண்டும். அவரை முழுக்க புரிந்து கொள்ள இது அவசியம்.

மனுஷ்யபுத்திரனின் மொழியில் எழுதப்படும் கவிதைகள் பிரதிகள் அல்ல. இளங்கவிஞர்கள் அவரை போல செய்வதும் இல்லை. தனது மொழி மூலம் அவர் கண்டடைந்த வெளிச்சங்களை நாடும் முயற்சிகள் என்றே அவற்றை நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் தமிழ்க் கவிதையை ஒரு இறுக்கமான மனநிலையில் இருந்து, குறுகலான பார்வையில் இருந்து, ஆச்சாரமான விதிகளில் இருந்து அவர் விடுவித்துள்ளார். அது என்ன? நவீன கவிதை இங்கு தோன்றும் முன் ஒரு பாடல் மரபு இங்கு இருந்தது. பாரதியும் பாரதிதாசனும் இம்மரபில் வந்த நம் காலத்து பிரதிநதிகள். பின்னர் வெகுஜன தளத்தில் பிரபலமான இடதுசாரி/மக்கள் கவிஞர்கள் வந்தார்கள். கற்பனாவாத/இடதுசாரி கவிஞர்கள் (வானம்பாடிகள்) எண்பதுகள் வரை ஆதிக்கம் செலுத்துனார்கள். மூன்றாவதாக எதனோடும் உறவுகொள்ளாமல் தனதேயான விழுமியங்களுடன் நவீனத்துவ கவிதை ஐம்பதுகளில் இருந்து தொண்ணூறு வரை இயங்கியது. தமிழ்க்கவிதைகளில் பின்நவீனத்துவ கவிதை இயக்கம் ஒன்று உருவாகி வளரவே இல்லை. பின்நவீனத்துவம் நம் புனைவுகளை பாதித்துள்ளதை ஒப்பிடுகையில் இது மிக ஆச்சரியமானது. நமது கவிதை மரபு எவ்வளவு செறிவானது, ஆழ்ந்த பிடிமானம் கொண்டது என்பதற்கு இந்த பின்நவீனத்துவ சாயலின்மை ஒரு நல்ல உதாரணம். இங்கு இரண்டு விசயங்களை சொல்ல வேண்டும்.
  1. மனுஷ்யபுத்திரன் இந்த மூன்று போக்குகளுடன் எந்த தொடர்பும் அற்றவர்.
  2. அவரது தலைமுறைக் கவிஞர்கள் இன்றும் நவீனத்துவ கவிதை கொள்கைகளை தீவிரமாக கடைபிடிப்பவர்கள்.

நவீன கவிதையின் கொள்கைகள் என்ன?
கவிதை பொதுவான விசயங்களை முழங்கக் கூடாது. தனிப்பட்ட அனுபவங்களை அதன் நுணுக்கங்களுடன் மறைமுகமான மொழியில் எழுத வேண்டும்.

ஒப்பீடுகள், உருவகங்களுக்கு பதில் குறியீடுகளும், படிமங்களும் பிரதானமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

நவீன கவிதை பொதுவாக வாழ்வின் இருண்மையை அவநம்பிக்கையின் குரலில் பேசியது. சமூகத்தின் சீரழிவு அல்ல தனிமனித சஞ்சலங்களும் அவஸ்தைகளும் போதாமைகளும் கருப்பொருளாயின. நவீன கவிதை நுண்பெருக்கிக்குள் உயிரி போல உள்ளொடுங்கிக் கொண்டே போனது. தமிழில் குறிப்பாக கடந்த முப்பது வருடங்களாக எழுதப்படும் கவிதைகளில் நீங்கள் இந்த பண்புகளை பொதுவாக பார்க்கலாம். அவை இறுக்கமான மொழியில் அவநம்பிக்கையான தொனியில் ஒரு மனநிலையை அல்லது மனப்பதிவை சித்தரிக்கும். ஒரு பக்கம் பாவலர்களும் கற்பனாவாதிகளும் இடதுசாரிகளும் விரிவுபடுத்தி நெகிழ்த்தி கவிதையை நீர்த்துப் போக வைத்த போது நவீனத்துவ கவிதை தந்த இறுக்கமும் இருண்மையும் தன்னிலையும் நமக்கு தேவையாக இருந்தது அது நமது தமிழை நவீனப்படுத்தவும் சமனப்படுத்தவும் உதவியது. ஆனால் இந்த நவீனத்துவ மொழி ஒரு கட்டத்துக்கு பின் நமக்கு பெரும் சுமையாக மாறத் துவங்கியது. இறுக்கமான வடிவத்தில் வாழ்வின் கசப்பை, தனித்த இருப்பை பதிவு செய்யும் எண்ணற்ற போலி கவிதைகள் எழுதப்பட்டன. இன்று இத்தகைய மொழி நாம் பொதுவில், தனிப்பட்ட உரையாடல்களில், மீடியாவில் பயன்படுத்தும் மிகவும் நெகிழ்ந்த பலதரப்பட்ட சிக்கலான மொழியில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு போயுள்ளது. தமிழில் கவிதை மொழியை புதுப்பிக்கும் முயற்சிகள் பெண்ணிய தலித்திய தளங்களில் தான் நிகழ்ந்தன. குறிப்பாக அதிகாரம் குறித்த விவாதம் நம் சமகால கவிதை மொழிக்கு ஒரு உக்கிரத்தை அளித்துள்ளது. இன்னொரு புறம் நாட்டார் வழக்கில் அமைந்த கவிதைகளும் முக்கியமானவை. ஆனால் தொண்ணூறுகளில் நவீனத்துவ கவிதை குறித்த பிரச்சாரங்கள், விவாதங்கள், படைப்புகள் வழி பரிச்சயம் கொண்டவர்கள் இன்றும் கவிதை குறித்து ஒரு ஆச்சாரமான மனநிலை கொண்டவர்கள். கவிதை என்றால் இவர்களுக்கு ஒரு குறியீடு, படிமம், தனிமனித அரற்றல் இவ்வளவு தான்.

மேற்சொன்ன மொழி மற்றும் பேசுபொருள் சார்ந்த நவீனத்துவ பண்புகளை நாம் ஆரம்பத்தில் இருந்தே மனுஷ்யபுத்திரனிடம் காண முடியாது. முதலில் அவரது கவிதைகள் இறுக்கமாக அல்லாமல் ஒரு நெகிழ்வான மனநிலையில் பேசுகின்றன. தமிழ்க்கவிதைகள் உணர்ச்சிகரமான சொற்களில் பேசுபவை. இவரது கவிதைகள் உணர்ச்சியற்ற அறிவார்ந்த தர்க்க மொழியில் பேசுகின்றன. ஆனால் அதே வேளை நெகிழ்ச்சியான உருக்கமான விசயங்களை (பிரிவு, இழப்பு, கைவிடப்படல், நிராகரிப்பு ... போல) சித்தரிக்கின்றன. அன்பு, கனிவு, நேசம், பிரியம், அணைப்பு, ஏக்கம், காத்திருப்பு, மனங்கசிதல் போன்ற மிக உணர்சிகரமான மனநிலைகளை “விவாதிக்கிறார். இவரது கவிதையின் மைய ஓட்டமாக ஒரு தர்க்க சிந்தனை இருக்கும். தர்க்க விவாதத்தின் முடிவில் ஒரு கவித்துவமான மன-எழுச்சி. இந்த மன-எழுச்சி ஒரு தர்க்கமற்ற விரிவான சிக்கலான பார்வையை கொண்ட முடிவை தரும்.

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் ஒரு கராறான தர்க்கவாதியும் இதயம் கசிந்து உருகும் ஒரு பலவீனமான தனிமனிதனும் இணைகிறார்கள். வலிமையும் பலவீனமும் இணையும் இந்த புள்ளி, அருவமும் பொருண்மையுமான உலகங்களின் சந்திப்பு அவரது கவிதைகளின் தனித்துவம். சவரக்கத்தி மூளையின் கூர்மையும் மெழுகின் இளகின தன்மையும் கலந்தது அவரது மொழி. முக்கியமாக அவர் தீவிரமான கொந்தளிப்பான விசயங்களை உரையாடும் போது எடுத்துக் கொள்ளும் மொழியை சொல்ல வேண்டும். அப்போது அவரது மொழியில் ஒரு அக்கறையின்மை, விலகல்தன்மை, கொலையாளியின் குரூரம் வந்து விடுகிறது. அவரது கவிதைகள் நம்மை ஆழமாக தொந்தரவு செய்வதற்கு இந்த குரூரமான அன்பின் மொழி, அக்கறையற்ற அக்கறை காரணம். கடுங்குளிரில் மரத்த கைகள் கொண்டு கனல் துண்டுகளை எடுத்துப் போடுவதைப் போன்றது இது. இதை டி.எஸ் எலியட் unification of sensibility என்கிறார். குறிப்பாக இங்கிலாந்தில் பதினேழாம் நூற்றாண்டில் அநாமதேயமாக வாழ்ந்து மறைந்த ஜான் டன், ஹெர்பர்ட், மார்வெல், வான் உள்ளிட்ட மீபொருண்மை கவிஞர்களை (metaphysical poets) விவரிக்கும் போது unification of sensibilityபண்பை சுட்டுகிறார்.
டி.எஸ் எலியட்


மனுஷ்யபுத்திரன் கவிதைகளுக்கான மாதிரிகளை நாம் தேடினால் அவற்றை ஐரோப்பிய நவீன கவிதைகளிலோ சமகால பின்நவீனத்துவ கவிதைகளிலோ காண முடியாது. நவீனத்துவ பின்நவீனத்துவ கவிதைகள் மாறுபட்ட கூறுமுறையும் கொள்கைகளும் கொண்டிருந்தாலும் இரண்டும் வாழ்வின் முழுமையின்மையை அடிப்படையாக கொண்டு பேசுபவை. நவீனத்துவ கவிதையில் நாம் கேட்பது ஒற்றைக் குரல் என்றால் பின்நவீனத்துவக் கவிதையில் அது பல்தரப்பட்ட குரல்கள். நவீனத்துவ கவிதைகள் வாழ்வின் பொருளின்மையை ஆழமான நம்பிக்கையுடன் சீரியசாக பேசும் போது பின்நவீனத்துவ கவிதைகள் அதையே விளையாட்டு பரீட்சார்த்தங்களுடன் அசட்டையான தொனியுடன் பேசுகின்றன. மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் இதற்கு முழுக்க மாறான நிலைப்பாட்டை எடுக்கின்றன அன்றாட வாழ்வு எந்த சிலாகிப்பும் கொள்கைப் பிடிப்பும் இல்லாமலே உவப்பானது என்பது அது. இந்த விதத்தில் தான் அவருடைய கவிதைகளுக்கான அசல் மாதிரிகளை தேடி நாம் பதினேழாம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிதைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக மீபொருண்மைக் கவிதைகளுக்கு. இக்கவிதைகளில் மனுஷ்யபுத்திரனிடம் காணும் அதே கவித்துவமான தர்க்க உரையாடலை நாம் பார்க்க முடியும். ஒரு சிக்கலை துவக்கி மெல்ல மெல்ல விவாதித்து முடிவை நோக்கி கொண்டு செல்லும் பாணியை காணலாம். அதே ஏக்கத்தை, இறைஞ்சலை, கனிவை, அத்தனை கசப்புகள், அச்சங்கள் மத்தியிலும் அன்பு ஒன்றை நம்பி வாழ்வை எதிர்கொள்ளும் பலவீனமான துணிச்சலை பார்க்க முடியும். இறைவனையும் காதலியையும் தொடர்ந்து உரையாடலுக்கு அழைத்து அதன் வழி கவிதைக்குள் பாய்ச்சலை நிகழ்த்துவதும் மீபொருண்மை கவிதைகளின் பாணி தான் மனுஷ்யபுத்திரனிடமும் உள்ளது. எப்படி மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் “நீ என்பது காதலியை, இறைவனை, பிரம்மாண்டமும் சிக்கலுமான வாழ்வை ஒரே சமயம் குறிக்கிறதே அவ்வாறே ஜான் டன் போன்ற மீபொருண்மைக் கவிஞர்களின் படைப்புகளிலும் நாம் காண்கிறோம். விடிகாலையில் ஆடையின்றி படுக்கையில் காதலியுடன் கிடக்கும் ஓருவனின் எளிய உணர்வுகளின் வழியில் தான் அவர் இறைநிலை நோக்கிய உன்னதத்தையும் சட்டென்று சென்றடைகிறார். எப்படி மனுஷ்யபுத்திரனின் பல கவிதைகள் தவறுதலாக காதல் கவிதைகளாக அடையாளம் காணப்படுகின்றனவே அவ்வாறே பல்கலைக்கழகங்களில் கூட ஜான் டன்னும் தவறுதலாக அறியப்பட்டார்.

மீபொருண்மை கவிஞர்கள் பலர் தாம் வாழ்ந்த காலத்தில் எதையும் பிரசுரித்திருக்கவில்லை. அவர்களின் காலம் நாடகத்தின் (ஷேக்ஸ்பியரின்) பொற்காலம். இக்கவிஞர்கள் மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு விமர்சகர்கள் இவர்களை “தத்துவார்த்தமாக பாவனை செய்கிறார்கள் என்று கண்டித்து ஒரு புறம் வைத்தார்கள். பின்னர் வந்த மூன்று கவிதைப்பள்ளிகளிலும் இவர்களின் பாதிப்பை நாம் சற்றும் பார்க்க முடியாது. ஆனால் ஆச்சரியமாக இருபதாம் நூற்றாண்டில் சட்டென்று ஒரு மறுகண்டுபிடிப்புக்கு உள்ளாகி பிரபலமானார்கள். முக்கியமாக டி.எஸ் எலியட் இவர்களைப் பற்றி ஆழமாக விமர்சித்து எழுதி ஒரு தனி கவனத்தை ஏற்படுத்தினார். படிமம், குறியீடுகளுக்கான முக்கியத்துவம், எதையும் கொஞ்சம் புதிராக சொல்லுதல், தனிமனித அனுபவங்களின் அடிப்படையில் எழுதுதல் ஆகிய நவீன கவிதைப் பண்புகள் இந்த பதினேழாம் நூற்றாண்டு கவிஞர்களிடம் இருந்து நவீனத்துவ கவிதை பெற்றவை. இவர்களிடம் உள்ள தனிச்சிறப்பாக எலியட் கண்டது இவர்கள் அறிவார்த்தத்துக்கும் உணர்ச்சிகரத்துக்கும் இடையிலான ஒரு நுண்ணிய மனநிலையில் எழுதுகிறார்கள் என்பது. மீபொருண்மைக் கவிஞர்களிடம் தத்துவத்தின் செறிவும் உள்ளது, உணர்ச்சி வேகம் கொண்ட மொழி தரும் தர்க்கம் கடந்த தரிசனமும் உள்ளது. இதையே அவர் ஒருங்கிணைக்கும் நுண்ணுணர்வு (unification of sensibility) என்றார்.

தன்னிலை × எதிர்நிலை ஆகிய புள்ளிகளுக்கு இடையிலான உரையாடலாக மனுஷ்யபுத்தரனின் அநேகமான கவிதைகள் உள்ளதை அறிவோம். ஆனால் இந்த இருநிலைகளையும் அவர் தனிமனித × சமூக உறவாடலாக நவீனத்துவ முறையில் அமைக்கவில்லை. அவை எப்படி அமைகின்றன என்பது மிக சுவாரஸ்யமானது. நவீன தமிழ்க் கவிஞர்களில் மிக அதிகமாக காதல் கவிதைகள் எழுதியவர் அவராகத் தான் இருப்பார். ஆனால் அவை நிச்சயம் காதல் கவிதைகள் அல்ல. அவரது பிரிவைப் பேசும் ஒவ்வொரு காதல் கவிதையும் தன்னை அழிந்து போகும் ஒரு எளிய பலவீன இருப்பாக அறிகிற தனிமனிதனுக்கும் பிரபஞ்சத்துக்குமான உரையாடல். காதலை கொண்டாடுகிற கவிதைகள் இயற்கை இருப்பின் ஒரு பகுதியாக தன்னை உணர்கிற மனதின் முழுமையை பேசுவன. ஆனால் அவரது காதல் கவிதைகளை “பக்திக் கவிதைகள் என்று ஜெயமோகன் அடையாளம் கண்டது போல் நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் பக்தி என்பது சரணடைதலை உள்ளடக்கியது. அது ஒரு இந்திய ஆன்மீக மார்க்கம். நாம் மனுஷ்யபுத்திரனிடம் காண்பது பிரக்ஞையற்று இருத்தலே மிகப்பெரிய அறிதல் எனும் ஒரு ஜென் மனம். நாடிச் சென்று தரிசனம் அனுபவிப்பது இந்து மத்த்தின் பாதை. இந்த பக்தி மார்க்கத்தின் மனத்திளைப்பை, மாபெரும் ஆற்றலின் முன்பான ஒப்படைப்பை, அல்லேயுயா கண்ணீப் பெருக்கை நாம் மனுஷ்யபுத்திரனின் கவிதைக் கண்ணோட்டத்தில் காண முடியாது. ஜென்னில் மாபெரும் ஆற்றலோ மண்டியிடுதலோ இல்லை. அப்படி செய்வது செயற்கையானது என்கிறது ஜென். கண்ணீரையும் சிரிப்பையும் கடந்தது ஜென். ஒரு ஒழுக்கோடு ஒழுகிச் செல்வதையே அது போதிக்கிறது. அதனால் தான் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளின் அக்கறையைப் பற்றி பேச பக்தி எனும் சொல்லை பயன்படுத்துவது சிக்கலாக உள்ளது. அவர் “கடவுளற்றவனின் பக்திக் கவிஞர் அல்ல; மாறாக மனமற்று போக முடியாமையின் சோகங்களை, பாசாங்குகளை பேசிய, அப்படி உறைதலின் அவசியத்தை வலியுறுத்திய ஆன்மீகக் கவிஞன்.

ஜான் டன்

காதலின் உக்கிர மொழியில் ஆன்மீக விரிவை பேசியதில் மனுஷ்யபுத்திரனுக்கு முன்னோடிகளை தமிழில் அல்ல, பதினேழாவது நூற்றாண்டின் மீபொருண்மை கவிஞர்களில் தான் காண வேண்டும். ஜான் டன்னின் கவிதைகளில் இதே நெகிழ்ச்சியான தர்க்க மொழியை, சாமான்ய உறவுநிலைகளை உன்னதங்களுக்கு உயர்த்தும் பாங்கை நாம் காண முடிகிறது. தொடர்ச்சியான நான்×நீ எனும் இருநிலைகளுக்கு இடையேயான உறவாடல்கள் விசயத்திலும் இவர்கள் தாம் மனுஷ்யபுத்திரனுக்கு முன்னோடிகள். மீபொருண்மை கவிஞர்களுடன் மனுஷ்யபுத்திரனை ஒப்பிட்டு வாசிக்கையில் நமக்கு எத்தனையோ ஆச்சரியங்கள் ஏற்படுகின்றன. தனது உடலை ஒரு வரைபடத்துடன் ஒப்பிடும் ஜான் டன்னின் ஒரு கவிதை (Hymn to my God, my God, my sickness) மனுஷ்யபுத்திரனின் சமீபத்திய பிணியாளனின் குறிப்புகள் கவிதையுடன் மிகவும் ஒத்துப் போகிறது. முக்கியமாக மருத்துவர் நம் உடல்வழி வாழ்வின் புதிரை தேடி கண்டறிவதைப் பற்றிய அவதானிப்புகள். நோயுற்ற மனித உடல் என்பது ஒரு புத்தகம் போல் ஆகிறது. மருத்துவன் அதை ஒரு பிரதியாக்கி தன் வழி வாசிக்க, அர்த்தப்படுத்த முடியும். அவனுடன் நாம் போராடிக் கொண்டே இருக்கிறோம் என்கிறது அக்கவிதை. டன்னின் கவிதை நோய்மை நமது வாழ்வின் திசைகளை கலைக்கிறது என்கிறது. நோயுற்ற தேகம் வரைபடத்தின் திசைகாட்டலை மறுக்கிறது. மருத்துவர் நமது மரணத்தின் திசையை அறிந்து மிரளும் போது நாம் மரணத்துக்கு மட்டுமல்ல வாழ்தலுக்கு கூட திசையே இல்லை என்று உணர்கிறோம். உடலை அர்த்தப்படுத்தும் ஒவ்வொரு முயற்சியும் அதை மேலும் மேலும் புதிர்களால் மூடுகிறது. உடல் கடலில் மரத்துண்டை போல் பயணிக்க வேண்டியது என்கிறார் டன். அப்போது அது சேர வேண்டிய இடத்துக்கு சரியாக போய் சேர்ந்து விடும். மனுஷ்யபுத்திரனின் கவிதையில் போலவே டன்னிடமும் ஒரு மருத்துவ மனதின் பிரக்ஞை மீது கடுமையான பகடி உள்ளது.

இரண்டு விசயங்களை சொல்லி நிறைவு செய்யலாம். நவீனத்துவ கருதுகோள்கள் மீதான மூர்க்கமான பற்றுதல் நமக்கு மனுஷ்யபுத்திரனை அறிவதற்கு தடையாக உள்ளது. அவரது பங்களிப்பு நமது கவிதை மொழியை தளர்த்தியது மட்டுமல்ல ஒரு அறிவார்ந்த ஆன்மீகக் குரலும் கவிதைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நிரூபித்ததும் தான்.

ஞானக்கூத்தனிடமும் சச்சிதானந்தனிடமும் உள்ள அரசியல் பகடியை மேலும் ஆழமான உளவியல் பார்வையுடன் கூர்மையான பண்பாட்டு தத்துவ நோக்கில் முன்னெடுத்தார் மனுஷ்யபுத்திரன். கல்யாண்ஜியின் சாமான்ய தருணங்கள் மற்றும் இயற்கை மீதான சிலாகிப்பை ஆன்மீக உறைதலாக மற்றொரு தளத்துக்கு கொண்டு சென்றார். தமிழ் நேரடிக் கவிதைகளில் முக்கியமானவராக நினைக்கப்படுகிற சுகுமாரனுக்கு மனுஷ்யபுத்திரனுக்குமான படைப்புரீதியான பந்தம் தோற்ற அளவிலானது மட்டுமே. சுகுமாரன் முழுக்க முழுக்க ஒரு நவீனத்துவ கவிஞர். இருத்தலியல் தனிமை, அபத்த நிலைகள் பற்றி எழுதியிருந்தாலும் கடந்த பத்து வருடங்களில் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் நவீனத்துவ இருண்மைகள் மற்றும் அவநம்பிக்கைகளை கடந்து வெகுதூரம் வந்து விட்டுள்ளன. அவற்றின் பயணம் என்பது இருளில் இருந்து கட்டற்ற வெளிச்சம் நோக்கி எனலாம். வாழ்வின் குரூரத்தையும் வலியையும் அன்பைப் போலவே தயக்கமில்லாமல் இருகைகளாலும் எதிர்கொள்ள நம்மிடம் வேண்டும் கவிதைக் குரல் மனுஷ்யபுத்திரனுடையது. இந்த குழந்தைமையான கொண்டாட்ட மனநிலையை நாம் சுகுமாரனிடம் காண முடியாது. சுகுமாரன் போன்ற நவீனத் தமிழ்க் கவிஞர்கள் விடாப்பிடியாக இருண்ட குகைக்குள் சுவர்களில் மூலிகைச் சாறு கொண்டு சித்திரம் தீட்டியவர்கள். மனுஷ்யபுத்திரன் வெளியே வந்து ஒரு பெரும் பாறை மீது வந்து அமைதியாக அமர்ந்திருப்பவர். இதனாலே அவரை தயக்கமின்றி நவீன தமிழ்க் கவிதையின் முதிர்ச்சியான காலகட்டத்தின் முதல்தலைமுறை கவிஞர் எனலாம்.

மனுஷ்யபுத்திரனின் மற்றொரு முன்னோடியாக காண வாய்ப்புள்ளவராக ஆத்மாநாம் இருந்தாலும் ஆத்மாநாமை விட உள்ளொளி மிக்கவராக மனுஷ்யபுத்திரனே தெரிகிறார். தமிழ் நவீன கவிதை வரலாற்றில் மனுஷ்யபுத்திரனின் வரிசையில் வருபவர்கள் தேவதேவனும் தேவதச்சனுமே. இருவரும் வடிவரீதியாக மனுஷ்யபுத்திரனுக்கு அதிகம் நெருக்கமானவர்கள் அல்ல. ஆனால் தத்துவத்துக்கும் ஆன்மீகத்துக்கும் இடையிலான கவித்துவ நிலையை பல கவிதைகளில் கண்டடைந்தவர்கள் இவர்கள். கவிதை என்பது வெறும் மனப்பதிவோ அகத்தூண்டுதலின் நீடிக்காத கணங்களோ அல்ல; வாழ்வை முற்றிலும் புதிய வெளிச்சத்தில் பெரும் விரிவுடன் காட்டுவது என்கிற புரிதலுடன் இயங்கியவர்கள் இவர்கள்.  

நம்மோடு இந்த தலைமுறையில் இருந்திருக்க வேண்டிய ஒரு முக்கிய நபர் நகுலன். அவர் எப்படி எழுபது எண்பதுகளில் இயங்கினார் என்பதே வியப்பானது. தமிழின் முதல் பின்நவீனத்துவ பிளவுண்ட மனம் நகுலனுடையது. மனம் என்பது தன்னில் இருந்து வேறானது என்று கண்டறிந்த முதல் தமிழ்க் கவிஞனும் அவர் தான். மனுஷ்யபுத்திரன் தனது சமீப கவிதைகளில் மனதை மனமற்ற நிலையில் இருந்து பார்க்கும் ஜென் மனநிலையில் நகுலனை பல இடங்களில் தொடுகிறார். ஆனால் நகுலனின் நிணமும் தடுமாற்றமும் பித்தும் கூடிய மனநிலை மனுஷ்யபுத்திரனிடம் இல்லை. மாறாக தெளிவுடன் நிதானத்தத்துடன் தன் பிறழும் மனதை அவர் பின் தொடர்கிறார். எங்கு சென்றாலும் மனுஷ்யபுத்திரனை அவரது கூர்மையான கவனமான மனம் பின் தொடர்கிறது; அது தான் அவரது ஆயுதமாகவும் கவசமாகவும் உள்ளது. அவரது ஆளுமை, மனமுதிர்ச்சி, மொழி எல்லாம் அது தான். அதுவே நகுலனின் கவிதைகளை எதார்த்தமான பித்தாகவும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை ஆன்மீகமான பித்தாகவும் தனித்து காட்டுகிறது.

இவை போக மனுஷ்யபுத்திரனை எந்த ஒரு தீர்க்கமான மரபின் தொடர்ச்சியாகவும் நாம் பார்க்க முடியாது. மீபொருண்மை கவிஞர்களுடனான தொடர்பு ஒன்றை உணர்த்துகிறது..கவிதை மரபு என்பது ஒரு மொழியின் வரம்புக்கு உட்பட்டது அல்ல. அது உலகப் பொதுவானது. மொழியின் வரம்புகளைக் கடந்து உலகக் கவிதைக்கென்றே ஒரு மரபு உள்ளது. இது எப்படி செயல்படுகிறது, தன்னை தக்க வைக்கிறது என்பது புதிரானது. இந்த விசித்திரத்துக்கு ஒரு நல்ல உதாரணம் மனுஷ்யபுத்திரன்.

மனுஷ்யபுத்திரன் சிறுகதை, கட்டுரை வடிவங்களின் உத்திகளை தன் கவிதைகளில் பயன்படுத்தி உள்ளார். சின்ன பெரிய கவிதைகளை எழுதியிருக்கிறார். இருந்தும் ஒரே மாதிரி எழுதுகிறார் என்கிற குற்றச்சாட்டு ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. இதே தன்மையை நாம் டன் உள்ளிட்ட மீபொருண்மைக் கவிஞர்களிடமும் காண முடியும். எமிலி டிக்கென்சனிடம் பார்க்க முடியும். காரணம் இவர்கள் உரையாடல் அல்லது விவாத வடிவில் கவிதையை கண்டவர்கள் என்பது. மேலும் இவர்களின் வலுவான ஆளுமை கவிதையில் வடிகட்டி வருவதால் அதற்கு ஒரு ஆதாரமான நிறம் கிடைத்து விடுகிறது. திரும்பத் திரும்ப பூத்தாலும் ரோஜாவுக்கு அதே நிறம் உள்ளது போல் இவர்களின் சொற்களுக்கு ஒரு நீங்காத அடையாளம் கிடைத்து விடுகிறது. சித்தரிப்பதும் பதிவுசெய்வதுமே இயங்குமுறையாக இருக்கும் போது ஒரு அடையாளமற்ற தன்மை கவிதைக்கு வந்து விடுகிறது. கவிதை தனக்கேற்றபடி தொனி மற்றும் சொல்முறையை மாற்றிக் கொண்டே செல்லலாம். நவீனத்துவ மறைமுக கவிதைகளுக்கான அனுகூலம் இது. ஆனால் இதை நாம் மாறுபட்ட கவிஞர்களிடம் எதிர்பார்க்கலாகாது. ஜான் டன், எமிலி டிக்கின்சன்னில் இருந்து மனுஷ்யபுத்திரன் வரை இந்த வித்தியாசத்தை ஒரு குறையாக அல்ல குணாதசியமாகவே நாம் பார்க்க வேண்டும்.
Read More

Saturday, 23 June 2012

UGC NET தேர்வும் எலியின் நெருக்கடியும்




இன்று தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வேலையிடங்கள் இருந்தும் UGC NET தகுதி இல்லாததால் அந்த இடங்கள் நிரப்பப்படாதது பற்றி அடிக்கடி பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். இன்னொரு பக்கம் பல aided கல்லூரிகளில் யுஜிசி பதவியிடங்களுக்கு ஒப்புதல் ஆணை வழங்காததால் அந்த இடங்களில் கால்வாசி சம்பளத்துக்கு “தகுதியற்ற ஆசிரியர்கள் வேலைபார்க்கிறார்கள். சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் போன்றவர்கள் “தகுதியற்ற ஆசிரியர்கள் நீக்கப்பட வேண்டும் என்று மேலும் நெருக்கடி அளிக்கிறார்கள். பல கல்லூரிகளில் “தற்காலிக ஆசிரியர்களுக்கு தம்மை தகுதிப்படுத்திக் கொள்ள கெடு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சுவாரஸ்யமாக, பல கல்லூரிகளில் “தகுதியற்ற ஆசிரியர்கள் நிரந்தரமானவர்களை விட அதிக மணிநேரங்கள் வகுப்பெடுக்கும் கட்டாயம் உள்ளது. இப்படி “தகுதியற்றவர்களால் கூடுதல் வகுப்புகள் கற்பிக்கப்படும் மாணவர்களின் நிலைமை என்னவாகும் என்று யாருக்கும் கவலை இல்லை.

தமிழும் ஆங்கிலமும்

தமிழைப் பொறுத்தவரையில் அநேகமான பட்டதாரிகள் தகுதித்தேர்வில் வென்றவர்கள். ஏனெனில் தமிழாசிரியர்களுக்கான தேர்வு ஒப்பீட்டளவில் சிக்கலற்றது. 90% மேல் பழந்தமிழ் இலக்கியக் கேள்விகள். தமிழ் இலக்கியம் என்றால் பழைய இலக்கியம் என்கிற பொது அபிப்பிராயம் அனைத்து தமிழாசிரியர்களிடமும் உள்ளதால் தேர்வின் பாடத்திட்டம் அவ்வாறு இருப்பதாக நாம் கணிக்கலாம். நவீன இலக்கியக் கேள்விகள் “சித்திரப்பாவை எழுதியது உ.வே.சாமிநாதய்யரா, நா.பார்த்தசாரதியா, கல்கியா? என்ற அளவிலே இருக்கும். மாறாக ஆங்கில இலக்கியத்தில் மிக சமீபமாக வந்த புத்தகம் பற்றிக் கூட கேள்விகள் இருக்கலாம். ஒரு வருடம் அநேகம் நவீன இலக்கிய கேள்விகள் என்றால் மற்றொரு வருடம் மத்திய காலகட்டம் பற்றி கேட்பார்கள்; அதோடு ஆஸ்திரேலியா, நியுசீலாந்து, ஆப்பிரிக்கா, இந்தியா என ஆங்கிலம் எங்கெங்கு எல்லாம் எழுதப்படுகிறதா அது குறித்தெல்லாம் கேள்விகள் இருக்கும். இதில் சிக்கல் என்னவென்றால் ஆங்கில இலக்கியம் உலகு தழுவியதா, அல்லது பிரித்தானிய இலக்கியம் மட்டும் தானா, நவீன இலக்கியத்துக்கு பிரதான இடமா பழைய இலக்கியத்துக்கா என்கிற விசயங்களில் இந்திய முழுக்க உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் ஒற்றுமை இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பாடத்திட்டத்தை அணுகுவதால் நீங்கள் முதுகலையில் படிப்பதற்கும் தகுதித்தேர்வில் கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் ஒரு பழைய தமிழ் பண்டிதர் கோணங்கியிடம் பேசுகிற அளவில் இருக்கும். இதனால் தான் தகுதித் தேர்வுக்கு தனியாக படிக்க வேண்டியதாகிறது. நீங்கள் முதுகலையில் மிக சுமாரான மாணவராக இருந்தாலும் கூட தகுதித்தேர்வில் ஜொலிக்கலாம். தகுதித்தேர்வில் மொத்தம் மூன்று தாள்கள். முதல் தாள் ஆங்கிலத்தில் இருக்கும் என்பது பல தமிழிலக்கிய மாணவர்களுக்கு தடையாக இருக்கும்; இதைக் கடந்து விட்டால் தேறி விடுவார்கள். பிற பாடங்களில் இருப்பவர்களுக்கு மாறாக முதல் தாளுக்கு தான் இவர்கள் அதிக சிரமமும் நேரமும் எடுத்து தயாரிப்பார்கள். இதனால் தமிழில் NET தகுதி உள்ளவர்கள் அதிகரித்து விட்டார்கள்; அவர்களுக்கு போதுமான வேலை இடங்கள் இல்லை. ஆங்கிலத்தில் நேர்மாறான நிலைமை. (ஆனால் மொழிப்பாடங்களில் தாம் ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகம் பேர் தேர்வாகின்றனர். அறிவியல் உள்ளிட்ட மற்றபாடங்களில் தேர்வாகும் எண்ணிக்கை மிக மிக குறைவு. இதற்கான காரணங்களை அறிவியல் மாணவர்கள் தாம் சொல்ல வேண்டும்.)

ஆக ஒன்று தெரிகிறது: இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி ஆட்களை தேர்வாக்கும் நோக்கம் யுஜிசிக்கு இல்லை. ஏனென்றால் ஆட்கள் தேர்வானால் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு தனியாக அதிக பணம் ஒதுக்க வேண்டும். தற்போதைக்கு யுஜிசி பணம் உள்கட்டமைப்பு, ஆய்வுக்கான உதவித்தொகைகள், மற்றும் மேலதிகாரிகள் விவாதம், ஆய்வு என்கிற பெயரில் ஊர் விட்டு ஊர் பறந்து நட்சத்திர விடுதிகளில் தங்கி செலவு செய்வதற்கு பயன்படுகிறது. பல இடங்களில் யுஜிசி நிதிகள்போலிக் கணக்குகள் காட்டி முழுங்கப்படுகின்றன. அல்லது கல்வி நிர்வாகங்களால் பயன்படுத்தப்படாமல் திரும்ப அனுப்பப்படுகின்றன. சரி அடுத்து நாம் “தகுதி“ எனும் அளவுகோலுக்கு செல்வோம்.

தகுதி எனும் போலிச் சொல்

எண்பதுகளில் பலர் வெறும் முனைவுப் பட்டங்கள் மட்டுமே கொண்டு கல்லூரி ஆசிரியர்கள் ஆனார்கள். இதை வாசிக்கும் உங்களது ஆசிரியர்கள் அப்படித் தான் தேர்வானார்கள். அவர்களில் பலரும் முனைவர் பட்டங்களை இறுதி வரை பெறவில்லை; முதலில் அவர்களின் கற்பிக்கும் தரம் எப்படி இருந்தது? வெறும் அடிப்படைத் தகுதியுடன் அற்புதமாக பாடம் நடத்திய பல ஆசிரியர்களை உங்களுக்கு தெரிந்திருக்கும். இன்றும் அவர்கள் அவ்வாறான “தகுதியுடன் அதே உயர்ந்த தரத்துடன் தான் இருக்கிறார்கள். பாடத்திட்டம் ஒன்றும் கடந்த இருபது வருடங்களில் மாறி விடவில்லை. மொழிகளைப் பொறுத்தவரையில் அதே கம்பனும் சேக்கிழாரும் சாஸரும் ஷேக்ஸ்பியரும் தாம் அநேகமான இடங்களில் கற்பிக்கப்படுகிறார்கள். அரசோ யுஜிசியோ நமது வெறும் முதுகலைப்பட்டத் தகுதி ஆசியர்களை தம்மை மேம்படுத்திக் கொள்ளும் படி வற்புறுத்தவில்லை. மாணவர்களாகிய நாமும் அதற்கான தேவையை உணரவில்லை. இன்றைய தலைமுறை ஆசிரியர்களை வற்புறுத்துகிறார்கள் என்றால் வேலைக்கு விண்ணப்பிப்போருக்கான எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது என்பது தான் முக்கிய காரணம். குறைந்த ஆட்கள் இருந்த போது இருந்த “தகுதிநிறைய ஆட்கள் வரும் போது குறையுமா என்ன? இல்லை. தகுதி என்பது வடிகட்டுவதற்கான ஒரு யுக்தி. வடிகட்டுவது நல்லது தான் என்று நீங்கள் சொல்லுவீர்கள். எதன் அடிப்படையில் வடிகட்டப்படுகிறது என்பது அடுத்த கேள்வி.

தகுதித் தேர்வின் அடிப்படை கோளாறு

கல்லூரி ஆசிரியர் தகுதித் தேர்வு கடினமானது தான், ஆனால் கடுமையாக உழைத்து அதனை வெல்பவர்கள் தாம் சிறந்த ஆசிரியர்களாகவும் இருக்கக் கூடும் என்று பலர் கருதுகிறார்கள். இந்த தர்க்கத்தில் ஒரு அடிப்படையான கோளாறு உள்ளது. ஒரு அரசாங்க குமாஸ்தா தேர்வில் அடிப்படையான புத்திசாலித்தனத்தை அளக்கும்படி நினைவுத்திறன், தர்க்க சிந்தனை ஆகிய அளவுகோல்களை பயன்படுத்தலாம். ஆனால் இதே பாணியை நீங்கள் ஆசிரியர்களுக்கு பயன்படுத்த முடியாது. ஆசிரியருக்கு தேவை காந்தி எந்த தேதியில் எந்த வேளையில் சுடப்பட்டார் என்கிற தகவல் அறிவு மட்டுமல்ல. அதை விட முக்கியமாய் காந்தியின் பின்னுள்ள அரசியல், கலாச்சார, வரலாற்றுக் கோணங்கள்; காந்தியை எப்படி விளக்குவது என்கிற நுண்ணுணர்வு. ஒரு சின்ன தகவலை நினைவில் வைப்பதல்ல, அதை விரிவுபடுத்துவதும் ஒரு சரியான கண்ணோட்டத்தில் முன்வைப்பதுமே முக்கியம். ஏனென்றால் தகவல்கள் அனைத்துமே பாடநூலில் உள்ளன. அதை அப்படியே வாசித்துக் காட்ட ஆசிரியர் தேவை இல்லை. NET தேர்வு ஆசிரியர் தகுதி என்பது நினைவுத்திறன் மட்டுமே, விளக்கும் திறன் (interpretative skill) அல்ல என்கிறது. பிரச்சனை இது தான்: என்னால் துப்பாக்கி பற்றி ஒரு நூல் எழுத முடியும்; ராணுவ திட்டமைப்புகள், வரலாறு பற்றி மணிகணக்காய் பேச முடியும் என்று கொள்வோம். ஆனால் உடல்தகுதி இல்லாமல் என்னை உள்ளே விட மாட்டார்கள். அந்த நடைமுறை வேலைக்கு உடற்தகுதி தான் பிரதானம் என்பதில் தெளிவாக இருக்கிறோம். இந்த ஒரு சின்ன விசயம் யுஜிசிக்கு தெரியாதா என்ன? தெரியும். ஆனால் வேறு ஒரு பிரச்சனை உள்ளது.

லட்சக்கணக்கான பேர் தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள் என்றால் அவர்களின் பேசும் திறம், விளக்கும் திறன், ஆழ்ந்த ஞானம் ஆகியவற்றை அளவிடுவதற்கான கட்டமைப்பு மற்றும் ஆள்பலம் யுஜிசிக்கு இல்லை. ஆக multiple choice கேள்விகளை பிரதானப்படுத்தினார்கள். ஆனால் மேற்சொன்ன கேள்வியை யாராவது கேட்பார்கள் என்று யுஜிசிக்கு முன்னரே தெரியும். அதனால் ஒரு தாள் விரிவான நீண்ட கேள்விகளுக்காக ஒதுக்கினார்கள். ஆனால் முதல் இரு multiple choice தேர்வுகளை வென்றால் மட்டுமே மூன்றாவதை திருத்துவார்கள். இதில் யுஜிசிக்கு உள்ள அனுகூலம் நூற்றில் பத்து பேரின் தாள்களை மட்டும் ஆள் வைத்து குறைந்த செலவு செய்து திருத்தினால் போதும் என்பது. 90% தாள்களையும் கணினி திருத்தும். இதில் இன்னொரு அபத்தம் முதலில் சொன்ன முதல் தாள்.

ஒருவர் இலக்கியத்தில் அனைத்து கேள்விகளையும் தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால் முதல் தாளின் Venn diagram போன்ற விசயங்கள் தெரியாமல் போனால் இலக்கியக் கேள்விகளுக்கான இரண்டாம் தாளின் விடைகளை திருத்த மாட்டார்கள். மூன்று பசு மாடுகள் முப்பத்து மூன்று லிட்டர் பால் கறந்து அதை நான்கு குழந்தைகள், மூன்று அத்தைகள், 28 தாத்தாக்கள் குடித்தால் சராசரி என்ன என்பது போன்ற துறை சாராத கேள்விகளை அறிந்திருந்தால் தான் நீங்கள் வகுப்புக்கு போய் பின்நவீனத்துவமும் பூக்கோவும் கற்பிக்க முடியும்.

மேற்சொன்ன பிரச்சனை 2008 ஜூன் 3 அன்று நடந்த யுஜிசி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முதல் தாளில் ஜெயித்தால் தான் அடுத்த தாளை திருத்துவது என்கிற நடைமுறையை விடுத்து மூன்று தாள்களையும் சேர்த்து திருத்தி அவற்றின் மொத்த மதிப்பெண்களில் 100க்கு 40 வாங்கினால் வெற்றி என்கிற விதிமுறையை அக்குழு பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரை நான்கு வருடங்களாயும் நிலுவைக்கு வரவில்லை.

இப்போது மூன்றாவது தாளையும் multiple choiceஆக மாற்றி விட்டார்கள். இது விண்ணப்பதாரர்கள் எளிதில் தேர்வாக உதவும் என்பதெல்லாம் உதார். Farewell to Arms எனும் நாவலில் எத்தனை பாகங்கள் (நிஜமாகவே கேட்கப்பட்ட கேள்வி) என்பது போன்ற கேள்விகளை அந்த நாவலை ரசித்து வாசித்தவர்களால் கூட எளிதில் பதிலளிக்க முடியாது. புளியமரத்தின் கதை நாவலில் புளியமரம் பற்றின குறித்து முதலில் எந்த பக்கத்தில் குறிப்பாக வருகிறது என்று கேட்டால் சு.ராவின் ஆன்மாவாலே சொல்ல முடியாது

உண்மையில் இந்த புதுமாற்றம் மூன்றாவது தாளை ஆள் வைத்து திருத்தும் செலவையும் இல்லாமல் செய்வதற்கான ஒரு வழி தான். ஆக NET தேர்வு என்பது குறைந்த செலவில் எந்த சிரமமும் இல்லாமல் எந்திரமயமாக ஆசிரியர்களை தேர்வு செய்யும் ஒரு மார்க்கம் தான். “தகுதி என்பது ஒரு நடைமுறை பிரச்சனையை மறைவாக சமாளிப்பதற்கான ஒரு அரசியல் சொல்.
முங்கேக்கர் குழுவின் பரிந்துரைகளும் U-திருப்பமும்

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முங்கேக்கார் தலைமையிலான குழுவை அமைத்து NET தேர்வை மீளாய்வு செய்ய சொன்னது. இந்த குழு NETஐ ரத்து செய்ய பரிந்துரைத்தது. அதற்குப் பதில் இளங்கலை பாடங்களை கற்பிக்க Mphil முடித்தவர்களும் முதுலைக்கு முனைவர் பட்டம் பெற்றவர்களையும் நியமிக்கலாம் என்றது. அமைச்சகம் இந்த பரிந்துரையை யுஜிசிக்கு அனுப்பியது. ஆனால் யுஜிசி தன் வருமானத்தை இழக்க விரும்பவில்லை. பின்னர் முங்கேக்கர் குழு தன் முடிவை மாற்றிக் கொண்டது. நாட்டில் ஏகப்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் குறைந்த தரத்திலான முனைவர் பட்டங்களை வழங்குவதால் தனது முதல் முடிவை செயல்படுத்திய உடன் கல்வித் தரம் சட்டென்று வீழ்ந்து விட்டதாக தெரிவித்தது. அதை எப்படி இந்தியா பூரா உள்ள கல்வித்தர வீழ்ச்சியை அது உடனடியாக கண்டறிந்தது என்று அது விளக்கவில்லை. NETஇன் கோளாறுகளையும் முங்கேக்கர் மறுக்கவில்லை. ஆனால் வேறு வழியில்லை என்பதால் குறைந்தபட்ச தகுதித் தேர்வாக அதுவே இருந்தாக வேண்டும் என்றார். தேர்வை மேம்படுத்துவது பற்றி ஏன் பரீசிலிக்கவில்லை என்பது பற்றியும் முனைவர் பட்டங்களின் தரத்தை உயர்த்துவது பற்றியும் அவர் பேச இல்லை. முங்கேக்கரின் நிலைப்பாட்டின் நியாயம் நாம் வைக்கும் அளவுகோலைப் பொறுத்தது. ஒன்றுமே தெரியாதவர்கள் காசு கொடுத்து முனைவர் பட்டம் வாங்கி வேலையில் நுழைவதற்கு மனப்பாட நிபுணர்கள் ஆசிரியரானால் பரவாயில்லை என்பது அவரது வாதம்.

ஆனால் மற்றொரு வாதம் அமைப்பு ரீதியான பிரச்சனைக்கு நேரடியான தீர்வு தான காண வேண்டும், தற்காலிக தீர்வுகளை அல்ல என்பது. உதாரணமாக TNPSC தேர்வுகளில் கோடிக்கணக்கான ஊழல் நடப்பதாக நமக்கு ரொம்ப காலமாய் தெரிந்திருந்தது. ஒரு எளிய லைன்மேன் பதவிக்கு கூட எவ்வளவு காசு கொடுக்க வேண்டும் என்பது தெருவில் போகிறவர்களுக்கே தெரிந்த பொது அறிவு விடை. இதற்கு தீர்வு ஊழலை நேரடியாக சந்திப்பது தான். ஆக ஆட்சி மாறியதுடன் தேர்வு அமைப்பின் அதிகாரிகள் கைதானார்கள். ஊழல் முழுக்க தடுக்கப்பட இல்லை என்றாலும் பிரச்சனையை நேரடியாக இப்படித் தான் கையாள முடியும். இதற்குப் பதில் தேர்வுக்கு தேர்வுக்கு தேர்வு நடத்தக் கூடாது. இன்று ஊழல் மற்றும் பிற சீரழிவுகள் காரணமாய் பட்டங்களில் மதிப்பு குறைந்து விட்டதால் அதற்கு பட்டங்களுக்கு மேல் தேர்வு நடத்துவது வழமையாகி உள்ளது. இதற்கு முடிவே இல்லை. மலேரியா அதிகமானால் சாக்கடை நீரை அகற்றி சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்த வேண்டும். வெறுமனே கொசுவலைக்குள் வாழ்வது நடைமுறை பயனற்றது.

யுஜிசி எப்படி ஊழலை எதிர்கொண்டது தெரியுமா? எல்லா முனைவர் பட்டங்களுக்கும் பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என்றது. ஆனால் இந்த தேர்வுகள் ஏதோ பெயருக்கு நடக்கின்றன. நேர்முகத்தேர்வுகளும் அவ்வாறே. முனைவர் பட்டங்கள் மட்டும் அல்ல இளங்கலை முதுகலை பட்டங்கள் கூட இன்று வாங்கப்படலாம். ஆக தரத்தை உயர்த்த யுஜிசி நேரடியாக முனைவர் பட்ட ஆய்வுகளை அலசுவது தான் ஒரே வழி. அதற்கான மனிதவளமோ உள்கட்டமைப்போ இல்லை என்றால் வெறுமனே பெயரளவிலான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து கற்பனையாய் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

யுஜிசியோ அரசாங்கமோ என்றும் நேரடியாக களத்தில் வந்து பிரச்சனைகளை தீர்க்க முயல்வதில்லை. பட்டங்களின் தரம் மீது சமூகம் நம்பிக்கை இழந்து விட்டது. அரசு NETஐ கொண்டு தரம் பற்றின ஒரு போலியான பிம்பத்தை மக்களிடையே தக்க வைத்து அடிப்படையான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட பார்க்கிறார்கள்.

NETஐ ஆதரிக்கும் மூன்று பேர்

NET தேர்வுக்கான மிகப்பெரிய ஆதரவு மூன்று தரப்புகளில் இருந்து வருகிறது. இந்த ஆதரவு “தகுதியின் பெயரை பயன்படுத்தினாலும் நோக்கங்கள் வேறு.

முதலில் ஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கும் நிரந்தர கல்லூரி ஆசிரியர்கள். இவர்கள் ஓய்வுக்கு பிறகும் கல்வி நிறுவனத்துடனான உறவைப் பொறுத்து தம் வேலையில் 70 வயது வரை superannuation முறையில் நீடிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் தற்போதைய நிலையில் இவர்களுக்கு நிர்வாகம் தற்காலிக ஆசிரியர்களுக்கு வழங்கும் குறைந்த சம்பளத்தை தான் ஓய்வுக்கு பிறகு வழங்கும். ஆனாலும் பரவாயில்லை என்று சில துறைத்தலைவர்கள் வேலையில் ஓய்வுக்கு பின்னும் குறைந்த சம்பளத்தில் தொடர்வதுண்டு. 90களில் வேலை நிரந்தரமானவர்கள் தமது சேவைக் காலம் குறைவு என்று விசனிக்கிறார்கள்.

ஆக நிரந்தர கல்லூரி ஆசிரியர்களின் தேசிய அமைப்பான AIFCTU மே 23 அன்று NET தேர்வை ரத்து செய்யக் கூடாது என்று ஒரு கோரிக்கை வைத்தது. அவர்களின் நோக்கம் சமூகப் பொறுப்பல்ல என்பது அடுத்த கோரிக்கையில் விளங்கியது. ஓய்வு வயதை 58இல் இருந்து 65க்கு உயர்த்த வேண்டும் என்றது அடுத்த கோரிக்கை. இரண்டுக்கும் ஒரு தொடர்பு உள்ளது.

NET தேர்வில் இந்தியா முழுக்க 5% மேல் யாரும் தேர்வாவதில்லை என்பதால் வேலைக் காலியிடங்கள் அதிகமாக உள்ளன. இந்த சாக்கைக் கொண்டு நிரந்தர ஆசிரியர்கள் தம் ஓய்வு வயதை கூட்ட வேண்டும் என்கிறார்கள். NET தேர்வை ரத்து செய்து Mphil PhD அடிப்படையில் வேலை கொடுத்தால் கல்வித் தரம் குறைந்திடும் என்று AIFCTU காரணம் சொல்கிறது. ஆனால் நகைமுரணாக AIFCTU அமைப்பில் யாருமே NET முடித்தவர்களாக இருக்க மாட்டார்கள். பெரும்பாலானவர்கள் முனைவர் பட்டமே ஓய்வு பெறும் வயதில் தான் தயங்கித் தயங்கி பெறுவார்கள். ஆக இவர்கள் NETஐ ஆதரிப்பது தொடர்ந்து காலியிடங்களை தக்க வைப்பதன் மூலம் அரசையும் கல்வி நிறுவனங்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி தமது ஓய்வை நீட்டித்து மேலும் 7 வருடங்கள் அரசு சம்பளமும் சலுகைகளும் அனுபவிப்பதற்கு தான்.

அடுத்த ஆதரவாளர்கள் NETஇல் தேர்வாகி ஆனால் முனைவர் பட்டம் இன்னும் வாங்காதவர்கள். பொதுவாக நேர்முகத்தேர்வில் முனைவர் பட்டங்கள் பெற்றவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுவதாக இவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். ஆனால் NET vs PhD என்கிற இழுபறி இருக்கிற வரை இந்த பிரிவினர் NETஐ கடுமையாக ஆதரிப்பார்கள். ஆக இதுவும் சுயநலம் தான்.

இன்னொரு பிரிவினர் முப்பத்தைந்தில் இருந்து ஐம்பதுக்குள்ளான வயதை சேர்ந்தவர்கள். இவர்கள் NET தேர்வே எழுதினதில்லை என்றாலும் இதைக் கடுமையாக ஆதரிப்பார்கள். NET தேர்வு காரணமாக வேலையிடங்கள் நிரப்பப்படுவது தாமதமானால் இவர்களுக்கு உடனடி பலன்கள் ஒன்றும் இல்லை என்றாலும் தமது நிறுவனத்துக்குள் தற்காலிக ஆசிரியர்கள் இருப்பது இவர்களுக்கு ஒரு படிநிலை அதிகாரத்தை அளிக்கிறது. “தமக்கு வாய்த்த அடிமைகளைஎளிதில் விட்டுத் தர இவர்கள் தயாரில்லை.

ஆக NETஐ ஆதரிப்பவர்கள் இதன் உள்ளார்ந்த சிக்கலை அறியாத சாமான்ய மக்கள். அல்லது அதன் அனுகூலங்களை அனுபவிக்குள் நிரந்தர ஆசிரியர்கள்.

சிபாரிசும் சூர்யநாராயண சாஸ்திரியும்

மிகுந்த மக்கள் தொகையும் அதனாலான போட்டி நெருக்கடிகளும் மிக்க தேசங்களில் அசலான திறமையாளர்களை அமைப்பு மற்றும் விதிமுறைகள் படி வேலைக்கு தேர்வது சாத்தியமற்றது. கல்லூரி வேலையில் இது மேலும் சிக்கலானது. இன்று நாம் பார்க்கும் பல நல்ல ஆசிரியர்கள் தமது ஆசிரியர்கள் அல்லது பரிச்சயங்களின் சிபாரிசு வழி உள்ளே வந்தவர்கள் தாம். சென்னை கிறித்துவக் கல்லூரியின் ஆங்கிலத் துறையை ஒரு நல்ல உதாரணமாக சொல்ல முடியும். ஒரு காலத்தில் அங்கு ஆசிரியர்கள் தங்களது சிறந்த மாணவர்களை பட்டம் முடித்ததும் ஊக்குவித்து துறைக்கு உள்ளே ஆசிரியராக கொண்டு வந்தனர். அங்கு ஆங்கிலத் துறை வலுவானதாக இருந்ததற்கு இதுவும் காரணம். சிபாரிசு கலாச்சாரம் மிக கீழ்மையானது என்றாலும் இதன் வழி நம்மூரில் சிறந்த அறிவுஜீவுகள் வேலை பெற்றிருக்கிறார்கள்; சேவை செய்திருக்கிறார்கள். இந்துப் பத்திரிகையில் தனது Madras Miscellany எனும்  பத்தியில் எஸ்.முத்தையா சூர்யநாராயண சாஸ்திரி என்பவரைப் பற்றி சமீபமாக குறிப்பிட்டார். இவர் அக்காலத்தில், அதாவது இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஆக்ஸ்போர்டு சென்று படித்தவர். சென்னை பல்கலைக்கழக தத்துவத் துறையின் ஸ்தாபகர் மற்றும் முதல் துறைத்தலைவர். எஸ்.ராதாகிருஷ்ணனின் மாணவர். இந்திய தத்துவத்தில் பெரும் அறிவு கொண்டவர். உலகப் போரின் போது இவர் இந்தியாவுக்கு ஒரு கப்பலில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இவரது கப்பல் ஜெர்மானியர்களால் தாக்கப்பட்டது. ஐரிஷ் புரட்சிப்படையினர் இவரை காப்பாற்றி கொண்டு வந்தனர். இந்தியா திரும்பியதும் இதுவே வினையாகியது. இவர் ஐரிஷ் புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டவர் என்று சந்தேகித்த அரசு வேலை தர மறுத்தது. பின்னர் இவர் ராஜன் என்கிற ஒரு நண்பரின் உதவியுடன் (சிபாரிசு) தான் ஆசிரியர் வேலை பெற்று மேற்சொன்ன நிலைக்கு உயர்ந்தார்.

அமைப்பு எனும் எலிப்பொறி

ஆக யுஜிசிக்கு இப்படி தகுதித்தேர்வை எந்திரமயமாக்குவதற்கு அதற்கான நடைமுறை நோக்கம் உள்ளது. இது நம் நாடு முழுக்க உள்ள அமைப்பு ரீதியான பிரச்சனை. தனியாரில் கூட நம் கல்வியமைப்பில் நம்பிக்கை இன்றி நுழைவுத்தேர்வு வைத்து தான் ஆளெடுக்கிறார்கள். ஆனால் அவசரமாக ஆட்கள் தேவைப்பட்டால் சில நிறுவனங்கள் இந்த campus recruitment தேர்வில் கூட காப்பி அடிக்க அனுமதிக்கிறார்கள். இப்போது இறுதி செமிஸ்டரில் தோற்றவர்கள் கூட வேலைக்கு சேரலாம் என்று விதிமுறை வந்துள்ளது. அசலான ஆழ்ந்த அறிவு கொண்டவர்களை இந்தியாவின் பெரும்பாலான அமைப்பு ரீதியான தேர்வுகள் மூலம் கண்டறிய முடியாது. உண்மையான திறன் கொண்டவர்கள் இந்த அமைப்பை எதிர்த்து வெல்ல முடியாது; ஏனென்றால் அமைப்பை வளைக்க முடியாது; நீங்கள் தான் வளைய வேண்டும்.

அதாவது நீங்கள் ஒரு எலிப்பொறிக்குள் இருக்கிறீர்கள். நான் எலி இல்லை என்று கத்தி பிரயோஜனமில்லை. பட்டினி கிடக்கவும் முடியாது. வடையையும் தின்ன வேண்டும்; ஆனால் கதவும் மூடக் கூடாது இது தான் சவால்.
Read More

Monday, 11 June 2012

கார்டூன் சர்ச்சை: மாறுபட்ட கோணங்களும் தீர்க்கமான பார்வையும்

கார்டூன் சர்ச்சையில் critical pedagogy என்று சொல்லி தப்பிக்க பார்க்கிறார்கள். ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை தந்தாலும் அதை ஒரு மைய பார்வைக்குள் கொண்டு வரவேண்டியது முக்கியம். 



இந்தி எதிர்ப்பு கார்டூனுக்கு கீழ் இப்படியான வாசகம் வருகிறது:
“initially seen as a threat to Indian nationalism, regional politics in Tamil Nadu is a good example of the compatibility of regionalism and nationalism
ஆனால் பிராந்தியவாதம் பிரிவினை அல்ல என்று சொல்வது மட்டும் போதாது. இந்த கார்டூன் எழுப்பும் விமர்சனத்தையும் அலச வேண்டும்..அதை அப்படியே விடுவது பொறுப்பின்மை. அதாவது இந்தி படித்தால் முன்னேறலாம்என்று 60களில் ஒருதரப்பு மக்கள் நம்பினார்கள். ஆர்.கெ லக்‌ஷ்மண் இதை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அவரது தரப்புக்கு இடமளிக்கும் போதே இதன் நடைமுறை உண்மையையும் பேச வேண்டும். இந்தியை விட மக்களின் முன்னேற்றத்துக்கு ஆங்கிலம் தான் தகுதியான மொழி என்று இன்று நிறுவப்பட்டாகி விட்டது. அன்றும் நமக்கு ஐயமிருக்க இல்லை. உண்மையில் இந்தியால் ஆங்கிலம் எனும் உலக மொழி முன் நிற்கவே முடியாது. உண்மையில் சுதந்திரத்துக்குப் பின் தேசியவாதம் ஒரு பெரிய எழுச்சி அலையாக இருந்தது. நூற்றுக்கணக்கான பிராந்தியங்களை இணைத்து இந்தியாவை உருவாக்கியதால் ஒரு ஒருங்கிணைந்த அடையாளம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தி அப்படியான ஒரு ஒருங்கிணைப்பு சக்தியாக கருதப்பட்டது. ஆனால் இந்த கார்டூன் இந்தி கற்காததால் மக்கள் முன்னேறாமல் போய் விடுவார்கள் என்ற சித்திரத்தை வைக்கிறார்கள். “இந்த பையனுக்கு ஆங்கிலம் கூட தெரியாதே என்கிறார் ராஜாஜி. ஆனால் இன்று வட-இந்தியர்களை விட தமிழர்கள் கல்வியில் முன்னேறி இருக்கிறோம். நல்ல ஆங்கிலம் பேசுகிறோம். அன்றும் நாம் ஒன்றும் காட்டுமிராண்டிகளாக இருக்கவில்லை. எப்படியும் இந்த கார்டூன் ஒரு தவறாக சித்திரத்தை தருவதை மாணவர்களுக்கு சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம். ஒரு பாடத்துக்கு சம்மந்தமில்லாத ஒரு அபிப்ராயம் கூட அதில் தனியாக தொங்கிக் கொண்டிருக்கலாம் என்கிறார் NCERT செயர்மேன். இது மாணவர்களை குழப்புமே அல்லாது உதவாது. 

 
மற்றொரு கார்டூன் பாமர மக்களை சுரண்டுவதற்காக ஒரு உத்தியாக இந்த போராட்டத்தை காட்டுகிறது. ஆனால் வரலாற்று உண்மை என்ன? ஒரு காலத்தில் தமிழர்கள் மத்திய அரசு பரீட்சைகளை எழுத முடியாமல் திணறினர். காரணம் அது முழுக்க இந்தியில் இருந்தது. இந்தி மூலம் தேசிய ஒருமைப்பாடு என்கிற காங்கிரஸ் வலதுசாரிகளின் மிகை-ஆர்வம் மற்றும் பதற்றம் காரணமாகவே இப்படியான மொழித் திணிப்புகள் அக்காலத்தில் நடந்தேறின. இதை யாராவது எதிர்த்தால் பிரிவினைவாதம் என்று ஆட்சேபிக்கப்பட்டது. ஒரு காலத்தில் திமுக தடை செய்யப்படவதற்கும் சூழல் ஏற்பட்டது. இந்த பிரச்சனையை அந்த காலகட்ட அரசியல் சூழலை கொண்டு பார்க்க வேண்டும். காங்கிரஸின் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா என்கிற முரட்டு ஒற்றைபட்டை அரசியலாக்கத்தின் பிடியை தளர்த்த அன்றைய பிராந்தியவாத எழுச்சிகள் உதவின. தமிழகம், கர்நாடகா, கேரளாவை இணைத்து ஒரே பிராந்தியமாக்க எல்லாம் முயற்சிகள் மத்தியில் நடந்தன. அவற்றை எல்லாம் முறியடிக்க பிராந்தியவாத போராட்டங்களும் பெரியார் போன்ற தலைவர்களும் தான் உதவினர். இன்று அன்றைய அரசின் நிலைப்பாடுகள் அவசியமற்ற overreactions என்று விளங்குகிறது. இதை எல்லாம் விட்டு விட்டு நாம் இதை வெறும் பாமரர்களின் மொழிப் போராட்டமாக பார்க்கக் கூடாது. துண்டு துண்டு மொழி சமூகங்கள் தங்கள் அடையாளத்தை இழக்காதிருக்க ஒரு மைய அரசுடன் போராடியதன் அடையாளமே இது. அன்றைய மைய அரசுக்கும் அவர்களுக்கான நியாயம் இருந்தது. ஆனால் இந்த முரண்-இயக்கமே இன்றுள்ள வளர்ச்சிக்கு, தமிழ் அடையாளத்துக்கு ஆதாரம். இது இல்லாததால் கேரளிய கலாச்சாரம் ஒரு சமிஸ்கிருத கலாச்சாரமாக, அவர்களின் மொழி ஒரு கலவை மொழியாக மாறியது. நமக்குள்ள தனித்த அடையாளம் அந்தளவு உக்கிரத்துடன் ஆழத்துடன் அவர்களிடம் இல்லை. நமக்கு உள்ளது போல் ஒரு சங்க மரபு அவர்களிடம் இல்லை.

.மேலும் இந்த மாறுபட்ட கண்ணோட்டங்களை அப்படியே தருகிறோம் எனும் கொள்கை ஆபத்தானது. சரி, நாளை காஷ்மீர் தீவிரவாதம் பற்றி பாடம் என்றால் இந்திய அரசுக்கு எதிரான அவர்களின் முஜாஹிதீன் பிரச்சாரத்துக்கு இடம் கொடுப்பார்களா? ஹிட்லரைப் பற்றி பாடம் என்றால் அவரது இனவாத நியாயத்தை தந்து அதற்கு தங்கள் கருத்தை சொல்லாமல் விடுவார்களா? மாட்டார்கள். ஏனென்றால் அது ஆபத்தானது. ஆக எல்லாருக்கான நியாயங்களும் இருக்கத் தான் செய்கின்றன. மனதை விரிவாக்கி அதை புரிந்து கொள்ள முயலலாம். ஆனால் அதே வேளை நமக்கான ஒரு நிலைப்பாட்டை உருவாக்கிக் கொள்ளவும் பாடநூல் உதவ வேண்டும். NCERT பாடபுத்தக கட்டுரைகள் அப்படி இல்லாத தோற்றத்தை தான் ஏற்படுத்துகின்றன.
Read More

Friday, 8 June 2012

அலைச்சல்




BSNL broadband தொடர்பை துண்டிப்பதற்காக விசாரித்தால் தொலைபேசியை எடுத்துச் சென்று BSNL அலுவலகத்தில் கொடுத்து ஒரு closure விண்ணப்பம் கொடுத்தால் போதும் என்றார்கள். ஆக தொலைபேசியை சுமந்து கொண்டு போனேன்.
அங்கு சொன்னார்கள்: “போனை மட்டுமே நாங்க வாங்குவோம். விண்ணப்பம் நீங்க தரமணி BSNLக்கு போய்த் தான் கொடுக்கணும். சரி தான் என்று கிண்டியில் இருந்து தரமணிக்கு போனேன். அங்கு சொன்னார்கள் முதலில் பில் தொகையை கட்டி விடுங்கள் என்று. சரி கட்டுகிறேன் என்றால் பில் இன்னும் வரவில்லை. இரண்டு நாள் கழித்து பில் வந்ததும் வந்து கட்டி விட்டு போனை கிண்டி கிளைக்கு கொண்டு கொடுங்க என்று. இது கூட பரவாயில்லை, அங்கு கவுண்டரில் இருக்கும் மாமி “இப்பிடி போனை தூக்கீட்டு எல்லாம் அலையாதீங்க“ என்று நக்கல் வேறு பண்ணுகிறார்.

இப்பிடித் தான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் PhDவிண்ணப்பிப்பது சம்மந்தமாய் விசாரித்தால் கீழ்த்தளத்தில் ஒரு இடத்துக்கு அனுப்பினார்கள். அங்கு சென்றால் இங்கில்லை மேலே D32 என்று ஏதோ ஒரு அறைக்கு போக சொன்னார்கள். அதை விசாரித்து நெருங்கும் முன் ஒரு பரோபகாரி வந்து PhD தானே இப்பிடியே திரும்பி கீழே ஸ்டெப்ஸ் தெரியும் இறங்கிப் போங்க என்று நன்றாக தன்னம்பிக்கை தெரிய சொன்னார். சரி என்று ஒரு தூசு மண்டிய அவ்வழியே ஏதோ கல்கி நாவல் ஒற்றன் போல் இறங்கி சென்றால் இதோ முதலில் நான் போன அதே இடம் வருகிறது. “உள்ளே போய் என்ன சார் யார்கிட்ட கேட்டாலும் உங்க கிட்டயே அனுப்பிறாங்க. ஆனால் நீங்க PhD இங்க இல்லேண்ணு அடம் பிடிக்கிறீங்க“ என்று அழாத குறையாக கேட்டேன். அவர் “இங்க நாங்க அட்மிஷனுக்கு பிறகான விசயங்களை தான் பார்ப்போம். ரெஜிஸ்டிரேஷன் வரை முதல் மாடிக்கு தான் போகணும். உங்களை மாதிரி நிறைய பேரை இப்படி தப்பா வழி சொல்லி இங்கே அனுப்பீடறானுங்க. என்ன செய்ய?. பிறகு மீண்டும் மலையேறி சரியான அலுவலகத்தை தேடிக் கண்டுபிடித்தால் அதன் வாயிலில் PhD சம்மந்தப்பட்ட எந்த அறிவிப்போ சிறு குறிப்போ கூட இல்லை. பல்கலைக்கழக உள்வட்டங்களில் மட்டும் தான் இந்த அலுவலக மார்க்கம் ரகசிய தகவலாக உலவுகிறது போலும். வெளியே யாரிடம் கேட்டாலும் கீழ்த்தளத்துக்கு அனுப்பி விடுகிறார்கள்.
இப்பிடி அரசாங்க விசயங்கள் எதுவென்றாலும் வால் ஓரிடத்திலும் தலை ஓரிடத்திலும் இருக்கிறது. அறிவிப்புப் பலகைகள் வால் இடத்தில் இருப்பது தான் விவகாரமே!
Read More

Wednesday, 6 June 2012

புரூஸ் லீ – சண்டையிடாத சண்டை வீரன்

குங் பூ பிற சண்டை முறைகளில் இருந்து மிக நுட்பமாக பலவிதங்களில் வேறுபடுகிறது. புரூஸ் லீயின் சண்டை காட்சி அமைப்பு சினிமாவில் வன்முறையின் தத்துவத்தையே மாற்றி அமைத்தது. அவர் தனது சினிமா வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் தனது சண்டை முறையின் பின்னுள்ள தாவோயிச தத்துவத்தை விளக்க முயன்றார். உதாரணமாக “Enter the Dragon” இல் ஷாவலின் கோயிலின் தலைமை குருவுக்கு அங்குள்ள மாணவனான புரூஸ் லீக்கும் ஒரு உரையாடல் வரும். குரு கேட்பார்: “சண்டையின் போது உன் எதிரி யார்?
“எனக்கு எதிரியே இல்லை. ஏனென்றால் மோதலின் போது “நான் என்கிற பிரக்ஞையே இருப்பதில்லை என்பார் லீ.
எதிரி என்பவன் நமது மனதின் பிரதிபலிப்பு மட்டுமே என்கிற புரிதல் இந்த பதிலின் பின் உள்ளது. மேலும் சொல்வார் லீ: “என் சண்டை சண்டையே அல்ல, அது ஒரு விளையாட்டு. தீவிரமான விளையாட்டு. ஒரு நல்ல தற்காப்புக் கலைஞன் பதறுவதில்லை, ஆனால் தயாராகிறான். அவன் சிந்திப்பதில்லை, ஆனால் கனவு காண்பதுமில்லை. எதற்கும் தயாராக இருக்கிறான். எதிரி விரியும் போது நான் சுருங்குவேன். அவன் சுருங்கும் போது நான் விரிவேன். ஒரு வாய்ப்பு நேரும் போது நான் அடிக்க மாட்டேன். அது தானாகவே அடிக்கும்.. இந்த சின்ன விளக்கத்துக்குள் புரூஸ் லீ பயின்ற குங் பூவின் அத்தனை பரிமாணங்களும் வந்து விடுகின்றன.

“எதிரி விரியும் போது அவன் தாவோயிச தத்துவத்தின் யின் யாங் ஆகிறான். யாங் என்றால் சக்தியின் வெளிச்சமான ஆண்மையான வன்மையான செயல்பாட்டு ரீதியான பக்கம். “நான் (லீ) சுருங்கும் போது அவர் யின் எனப்படும் சக்தியின் இருட்டான பெண்மையான அனைத்தையும் அமைதியாக உள்வாங்கும் பகுதி ஆகிறான். சக்தியின் இந்த இருவேறு பட்ட பகுதிகளின் முரணியக்கம் தான் பிரபஞ்ச இயக்கத்தின் ஆதாரம் என தாவோயிஸ்டுகள் நம்புகிறார்கள். யின் யாங் தத்துவப்படி இருட்டும் வெளிச்சமும், நன்மையும் தீமையும், நேர்மறையும் எதிர்மறையும், வன்மையும் மென்மையும் சேரும் போது தான் உச்சபட்ச உன்னத ஆற்றல் பிறக்கிறது. அதை சீனர்கள் “ச்சி என்கிறார்கள். இந்த உச்சபட்ச ஆற்றலை ஒருவன் ஒரு சண்டையின் போது வெளிப்படுத்தினால் அவன் வெல்ல முடியாதவனாகிறான். அதை வெளிப்படுத்த எதிரி தாக்கும் போது அவனை அதே வித எதிர்தாக்குதல் கொண்டு நேரிடாமல் “விரிந்து அவன் ஆற்றலை உள்வாங்கி அதையே திரும்ப அவன் பலவீனமாகும் போது பயன்படுத்த வேண்டும் என்பதே லீ சொல்வது. 


லீ இளமையில் ஒருநாள் ஒரு நீர்நிலை அருகே அமர்ந்து இருந்தார். திடீரென்று நீரைக் குத்தினார். அது உள்வாங்கி குவிந்து மீண்டும் நிரம்பிக் கொண்டது. அவர் தொடர்ந்து குத்திக் கொண்டே இருந்தார். சட்டென்று அவருக்கு புரிந்தது நீரை ஒருநாளும் காயப்படுத்த முடியாது என்று. ஏனென்றால் அது திரும்ப தாக்குவதில்லை, விரிந்து வாங்கிக் கொள்கிறது. மீண்டும் பழையபடி ஆகிறது. அவர் புன்னகைத்து இனிமேல் அந்த நீரைப் போல் இருக்க வேண்டும் என தீர்மானித்தார். அது அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனை. கோப்பையில் ஊற்றினால் கோப்பையை போல் ஆகும், குடுவையில் ஊற்றினால் குடுவையைப் போலாகும் நீரைப் போன்று ஒரு நல்ல சண்டை வீரன் இருக்க வேண்டும் என்று பின்னர் அவர் ஒரு டி.வி பேட்டியில் அழகாக இந்த தத்துவத்தை விளக்கினார்.

விரிந்து சுருங்கி சுருங்கி விரியும் இந்த விளையாட்டின் போது ஆற்றல் மாறி மாறி பயணிக்கிறது. ஆற்றல் தான் சண்டையை நிகழ்த்துகிறது. தீமையையும் நன்மையும் இணையும் இந்த முழுமையான ஆற்றல் சண்டையிடும் இருவரில் யார் தன்னை முழுமையாக உள்வாங்குகிறார்களோ அவரை வெற்றி பெற வைக்கிறது. ஆக புரூஸ் லீ சொல்கிறார் “நான் அடிக்கவில்லை. அதுவாக அடிக்கிறது என. அதே காரணத்தாலும் தான் புரூஸ் லீயைப் பற்றி பேசும் குரு “அவனுடைய சண்டைத் திறன்கள் மட்டுமல்ல முக்கியமாக ஆன்மீக ஆற்றலும் முதிர்ச்சி அடைந்து விட்டது என்கிறார். இதன் பொருள் குங் பூ வீரன் ஒரு வழமையான ஞானி அல்லது சாமியார் என்றல்ல. மாறாக அவன் சண்டைக் கலை வழி தன்னை அறிந்தவன் என்பது. அவன் தன்னை இயக்கும் உள்-ஆற்றலை உணர்ந்தவன். ஒரு கவிஞனைப் போல் அவன் சண்டையிடும் போது வேறொருவன் ஆகிறான். தன்னைக் கடந்த ஒரு உன்னத ஆற்றலின் பகுதியாகிறான். மற்றபடி அவன் சாதாரண மனிதன் தான். “Enter the Dragon” படத்தில் மற்றோர் இடத்தில் அவர் சொல்வார்: “நான் சண்டை இடாத சண்டை வீரன்.


உரையாடலின் இறுதியில் குரு ஒன்று சொல்வார். படத்தின் ஆகச் சிறந்த ஆழமான வசனம் அது. “எதிரி என்பவன் பிரதிபிம்பங்களால் ஆனவன். பிரதிபிம்பங்களை நொறுக்கினால் அவனை அழித்து விடலாம். யோசிக்க யோசிக்க எத்தனையோ விசயங்களை இந்த வாக்கியம் நமக்கு விளக்குகிறது. எதிரி என்பவன் நமது பிரதிபலிப்பு மட்டும் அல்ல. அவன் தன்னை ஏராளமான வகையில் பிரதிபலித்து அந்த விதவித பிம்பங்களால் மூடிக் கொள்கிறான். வாழ்நாளெல்லாம் நாம் மோதுவதும் போட்டியிடுவதும் இந்த பிம்பங்களுடன் தான். பிம்பங்களை அறிந்து கடந்தால் எதிரி என்பவன் ஒரு பலவீனமானவன் தான். இந்த தத்துவத்தை காட்சிப்படுத்தும் விதமாய் லீ இப்படத்தின் மிகப் பிரபலமான இறுதிக் காட்சியான லீக்கும் வில்லன் ஹேனுக்குமான கண்ணாடி அறை மோதலை அமைத்திருப்பார். லீ ஒரு சிறந்த தற்காப்புக் கலை வீரனுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட ஸ்டைலும் இருக்கக் கூடாது என்பார். அவன் அனைத்து சண்டை ஸ்டைல்களையும் அறிந்து அவற்றை மறந்து விட வேண்டும். அப்போது தான் அவன் ஒரு சண்டையின் போது இயற்கையாக தனக்குள்ள உள்ளுணர்வு சார்ந்து சரளமாக எண்ணமற்று இயங்க முடியும். லீயின் அபார வேகத்தின் ரகசியம் அது தான். கற்று மறத்தல் என்பது ஒரு ஆன்மீக மார்க்கமும் தான் என்பதை விளக்க வேண்டியதில்லை.

லீ தத்துவத்தை ஆன்மீகமாகவும் நடைமுறையாகவும் கண்டவர். இந்த சிந்தனை மேற்சொன்ன இறுதிச் சண்டைக் காட்சியில் உருவகமாக வெளிப்படும். வில்லன் ஹேனுக்கு ஒரு கையில் முழங்கைக்கு கீழே இல்லை. அங்கே அவன் இரும்பு முஷ்டி பொருத்தியிருப்பான். சண்டையின் போது தேவைக்கேற்றாற் போல் கத்திக் கரம், முள்கரம் எல்லாம் பொருத்துவான். அவன் இரு கைகளிலும் தோல் உறைந்த அணிந்துள்ளதால் இந்த விபரம் எளிதாக வெளியே தெரிய வராது. அவனிடம் மோதும் பலரும் வீழ்வதற்கு அவனுக்கு ஒரு கையல்ல, “பல கைகள் என்பது காரணம். நெஞ்சில் கம்பி நகக் கீறல் தடத்துடன் லீ நிற்கும் அந்த பிரபலமான புகைப்படத்தை பார்த்திருப்பீர்கள். அது இம்மோதலின் போது அவருக்கு கிடைக்கும் காயம் தான். கண்ணாடி அறைக்குள் நின்று சண்டையிடும் தனது எதிரிக்கு எண்ணற்ற பிரதிபிம்பங்கள் மட்டுமல்ல பல செயற்கை கரங்களும் உண்டு என லீ அறியும் இடம் சண்டையில் மிக கவித்துவமான ஒன்று. இந்த மாறும் இரும்புக் கரம் என்பது ஸ்டைலின் உருவகம் தான். நிலைத்த கரம் இல்லாதவன் நிலைத்த ஸ்டைல் இல்லாதவன். அவன் நீரைப் போல் கட்டற்று ஒழுகி செல்பவன். அவனை தோற்கடிப்பது சிரமம்.

சினிமாவில் எத்தனையோ சண்டைக் காட்சிகள் பார்த்திருக்கிறோம். நாயகன் முதலில் அடிக்க வில்லன் திரும்பத் தாக்க அதன் பாட்டுக்கு சண்டை தொடரும். இல்லாவிட்டால் வில்லன் அடிக்க அடிக்க நாயகன் துவண்டு பின் திடீர் உத்வேகம் பெற்று திரும்ப அடிப்பான். (90கள் வரை தமிழில் நாயகன் வாயில் குத்து வாங்கி உதட்டில் அரும்பும் தன் சொந்த ரத்தத்தை தொட்டுப் பார்த்து வெறியேறி பாய்ந்து தாக்குவது ஒரு பிரபல பாணியாக இருந்தது. ரஜினி அடிக்கடி பயன்படுத்திய இந்த முறை புரூஸ் லீயின் The Big Boss படத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான். வில்லன் கத்தியால் கிழிக்க தன் ரத்தத்தையே அவர் ஒரு பூனை போல் நக்கி சுவைக்கும் ஒரு உக்கிரமான காட்சி அப்படத்தில் வரும்.). புரூஸ் லீயின் சண்டைக் காட்சிகளில் அவர் ஒரு நிலையமைதி (stance) எடுத்துக் கொள்வார். எதிரி முன்வந்து தாக்க இவர் முன்னேற மாட்டார். நின்ற இடத்திலேயே சட்டென்று அடியை தடுத்து கண்ணிமைக்கும் முன் அடுத்த அடி கொடுப்பார். அதே வேளை அவர் எதிரியை சுற்றி சுற்றி நகர்ந்து கொண்டும் இருப்பார். இந்த நகர்வு என்பது ஓட்டம் அல்ல. அது எந்த நிலையிலும் தன்னை உறுதியாக நிறுத்திக் கொள்ளத்தக்க வகையிலான சமநிலை கொண்ட ஒரு நகர்வு. ஒரு பூனை எலியை வைத்து விளையாடுவது போன்ற நகர்வு இது. எப்படி தட்டி தட்டி விளையாடினாலும் எங்கு சென்றாலும் எலி பூனையின் பிடிக்குள் தான் இருக்கும். நகர்வின் போது லீ எதிரிக்கு மிக சரியான தொலைவில் தன்னை வைத்துக் கொண்டே இருப்பார். புரூஸ் லீக்கும் விஜய காந்துக்கும் அது தான் வித்தியாசம். லீயின் வன்மத்தின் ஒரு கலைசார்ந்த அழகியல் இருக்கும். சில சமயம் மயில்களின் நடனம் போல தோன்றும். விஜயகாந்த போன்றவர்கள் சண்டைக்காட்சிகளில் பண்ணுவது உலக்கை இடி. புரூஸ் லீயிடம் நம்மை முதலில் கவர்வது அவரது பிரமிப்பூட்டு வேகம், குறைவான அளவான அசைவுகள், மற்றும் சமநிலை. இவை மூன்றும் குங் பூவின் அடிப்படைகள். குங் பூவுக்கு வலிமையும் வேண்டும். ஆனால் மேற்சொன்ன மூன்றுக்கும் பிறகு தான்.


லீ டேய் என்று கத்துவதோ கண்களை சிவக்க வைப்பதோ இல்லை. அமைதியாக கவனிக்கிறார். கண்கள் தான் இருக்கும் சூழலை மற்றும் எதிரியை கூர்ந்து கவனிக்கின்றன. அவர் கண்களால் பார்க்கவில்லை. அவரது ஆழ்மனதால் பார்க்கிறார். எதிரியின் தாக்குதலை பார்க்க அல்ல உணர வேண்டும் என்கிறது குங் பூ. ஏனென்றால் பார்த்து அத்தகவல் மூளையில் பரீசீலிக்கப்பட்டு கைக்கு வருவதற்கு சில நொடிகள் தாமதமாகி விடும். அதனால் புரூஸ் லீ ஒரு வீரன் காலியான கோப்பை போல இருக்க வேண்டும் என்கிறார். அவன் தான் இருக்கும் சூழலின் ஒரு பகுதியாகி விட வேண்டும். எதிரியின் மனதின் ஒரு பகுதியாக அவன் மனமும் ஆகிட வேண்டும். எதிரி தாக்கு என எண்ணும் போது இவனும் அதற்கு தயாராகிறான். ஒரு சண்டையில் எதிரி என்பவன் வேறொருவன் அல்ல, நமது உடலின் இன்னொரு பாதி தான். அதனால் தான் ஒரு சண்டையின் போது மனதை காலியாக, எந்த எண்ணமுமற்று ஒரு தியான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் லீ.

மாடியில் நின்று சற்று தொலைவில் ஒரு மரக்கிளையில் இருக்கும் குருவியை பார்க்கிறீர்கள். குருவி உங்களுக்கு திரும்பி இருக்கிறது. அது உங்களை கவனிப்பதாகவே தெரியவில்லை; ஆனால் உங்கள் விரலை உயர்த்தி அசைத்துப் பாருங்கள், உங்கள் விரல் கீழே வரும் முன் குருவி பறந்து விடும். கல்லை விட்டு எறியுங்கள், கல் பாதி தொலைவு இருக்கும் போது பறவை வானில் எம்பி பறந்து கொண்டிருக்கும். ஒரு லட்சிய குங் பூ வீரன் இந்த பறவையின் தயார் மனநிலையில் சதா இருக்கிறான். ஒருமுறை அமெரிக்காவில் ஒரு தற்காப்புக் கலை செயல்விளக்க நிகழ்ச்சியின் போது ஒரு ஆசான் அப்போது நன்கு பிரபலமாகி வந்த லீயிடம் தன் முறுக்கேறி வலுவான வயிற்றைக் காட்டி இங்கு குத்து என்றார். புரூஸ் லீயால் தன் வயிற்றில் குத்தி நிலைகுலைய வைக்க முடியாது என்று சவால் விட்டார். லீ அருகே சென்றார். முகத்தில் நிச்சலனம். சட்டென்று ஆசானின் மூக்கில் குத்து விட்டார். நிலைகுலைந்து கீழே விழுந்த ஆசான் “ஏன் மூக்கில் குத்தினாய்? என கோபமாய் கேட்டார். அதற்கு லீ “ஒரு தற்காப்புக்கலை வீரன் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். உடம்பில் ஏதாவது ஒரு பகுதியை வலுவாக்கி விட்டு அங்கே குத்து என சவால் விட யாராலும் முடியும். ஆனால் நிஜ சண்டையில் இது எந்த பயனுமற்றது என்றார்.

மனதை காலியாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காக லீ தன் மாணவர்களுக்கு அடிக்கடி ஒரு கதை சொல்லுவார். நன்கு பிரபலமான கதை தான். ஒரு பேராசிரியர் ஒரு ஜென் துறவியிடம் சென்று ஜென்னை விளக்குமாறு கேட்கிறார். துறவி எதைச் சொன்னாலும் “அதான் எனக்குத் தெரியுமே... என பேராசிரியர் தன் பாட்டுக்கு ஒரு குட்டி உரை நிகழ்த்தி விடுவார். அவருக்கு ஒன்றையுமே சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று அறிந்து கொண்ட துறவி அவரை தேநீர் அருந்த அழைத்தார். பேராசிரியரின் கோப்பையில் தேநீரை அது நிரம்பி வழிந்த பின்னரும் ஊற்றிக் கொண்டே இருந்தார். பேராசிரியர் “நிறுத்துங்கள் நிறுத்துங்கள் வழிகிறது என்று கத்தினார். துறவி அமைதியாக “உங்கள் மனமும் இப்படித் தான் இருக்கிறது. மனத்தில் இடமில்லாமல் இருக்க நான் எப்படி புதிதாக ஒன்றை உங்களுக்கு சொல்லித் தர முடியும்? என்று கேட்டார். இந்த அழகான கதை ஜென்னின் அடிப்படையை விளக்குகிறது. ஜென் என்பது ஒரு கோட்பாடோ தத்துவமோ அறிதல் முறையோ அல்ல. அது ஒரு அனுபவம் அல்லது வாழ்தல் முறை. மனிதன் அறிவை துறக்கும் போதே உலகை அறிகிறான் என்கிறது ஜென். சொல்லப் போனால் அறிதல் என்பதே ஜென்னுக்கு விரோதமானது. உணர வேண்டும். உணர்தல் தான் ஜென்னின் மையம்.


நாம் தேடும் உண்மை என்பது நம்மையும் சேர்த்த ஒரு மாபெரும் இருப்பு என்கிறது ஜென். ஒரு சிறு உப்புக்கல் கடலில் கரைந்து போய் தன்னை அறியும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் கதையை அறிந்திருப்பீர்கள். இயற்கையை ஜென் தனியாக பார்ப்பதில்லை. மேற்கத்திய கல்வியில் வளர்ந்த நமக்கு இது மிக அந்நியமான ஒரு புரிதல். இயற்கை என்பது மரம், கடல், வானம் அல்ல. இயற்கை என்பது ஒரு முடிவற்ற இருப்பு. நாம் அதில் ஒரு பகுதி. வாழ்க்கையை நன்றாக வாழ சிந்தனை பாரமின்றி வாழ்வோடு ஒன்றிப் போக தெரிய வேண்டும். ஒரு வேலையில் தன்னை மறந்து ஈடுபட்டிருப்பது, ஒரு கவிதையை ஆழ்ந்து படிப்பது, தன்னை மறந்து உதட்டோடு உதடு பொருத்தி மற்றொரு உடலோடு ஒன்று கலப்பது, எதற்கென்றே புரியாமல் சில நொடிகள் சிரிப்பது இவை எல்லாம் ஜென் தான். ஆனால் நம் வாழ்வில் மிகச் சில நிமிடங்களே இது சாத்தியமாகிறது. ஜென் தினசரி வாழ்வின் அத்தனை கவனச் சிதறல்கள், பதற்றங்கள், நெருக்கடிகள், அதிரடி நிகழ்வுகளுக்கு மத்தியிலும் எப்படி மனதை காலியாக வைத்து நதியில் ஒழுகும் இலை போல இருப்பது என்று சொல்லித் தருகிறது.

புரூஸ் லீ குங் பூவை ஒரு ஜென் கலையாகப் பார்த்தார். குங் பூ அதன் ஆதி அர்த்தத்தில் சண்டைக் கலை அல்ல. சீனாவில் எந்தவொரு துறையிலும் முழுமையான அறிவு பெற்றவர்களை குங் பூ ஆசான் என்று அழைத்தார்கள். புரூஸ் லீயின் வன்முறையின் மற்றொரு பக்கம் அவரது சலனமுறாத அமைதி. அவரை படத்தில் பார்க்கும் போது நம்மை மிகவும் ஈர்ப்பது இந்த முரணமைவு தான். இது தன்னிறைவினால் வருகிறது என்கிறார் புரூஸ் லீ. அவரிடம் அடிக்கடி பேட்டிகளில் கேட்கப்பட்ட கேள்வி தெருவில் நிஜமாக அவரை யாராவது தாக்க வந்தால் அவரால் சமாளிக்க முடியுமா, வெற்றி கொள்ள இயலுமா என்பது. ஒரு முறை இதற்கு பதிலளித்த லீ நடைமுறையில் தன்னை ஒருவன் சண்டைக்குத் தூண்டினால் அவனை உதாசீனித்து விடுவேன் என்றார். ஏன்? எதிரியை பார்த்ததும் தன்னால் அவனை ஜெயிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை தோன்றினால் பிறகு அவருக்கு அவனுடன் சண்டையிட மனம் வராது. அது தான் ஏற்கனவே ஜெயித்தாகி விட்டதே. தனது தன்னிறைவை அறிந்த லீக்கு ஒரு எதிரியிடம் அதை நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை. ஆக சண்டை என்பது மனதளவில் நடக்கும் ஒன்று தான் என லீ புரிந்து வைத்திருந்தார்.  அவர் சிறுவயதில் லீ மோசமான சண்டையாளராக இருந்ததற்கு இந்த செயலமைதி இல்லாதது தான் காரணம். சின்னதாய் தூண்டப்பட்டாலே வெகுவாக ஆத்திரம் கொண்டு உடனடியாக சண்டைக்கு செல்பவராக லீ அப்போது இருந்தார். அவரது விங் சுன் குருவான யிப் மேன் அவரிடம் இதைச் சுட்டிக் காட்டி மெல்ல மெல்ல முதிர்ச்சிக்கு இட்டுச் சென்றார்.

முதிர்ச்சியடைந்த லீ எப்படியானவராக இருந்தார் என்பதற்கு ஒரு உதாரணம். Fist of Fury உடன் அவர் சீனாவில் பிரபல நடிகராகி விட்ட பின் ஒருமுறை நண்பர் ஒருவருடன் ஒரு உணவகத்துக்கு சென்றார். அப்போது சீனாவில் பல இளைஞர்கள் லீயுடன் மோதி எளிதில் புகழடைய வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தனர். அப்படி ஒருவன் தான் அன்று லீக்கு உணவு பரிமாறிய வெயிட்டர். அவன் அவரை சீண்டிக் கொண்டே இருந்தான். புண்படும் படி பேசினான். லீ ஒன்றுமே நடக்காதது போல் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். நண்பர் “எப்படி உங்களுக்கு கோபம் வராமல் இருக்கிறது? என்று வினவ அதற்கு லீ “நான் இன்று மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்று நாள் முழுக்க என் மகிழ்ச்சியை கெடுக்க யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்றார். ஒரு ஆழமான குளத்தில் கல் வீசினால் அலைகள் எழும். ஆனால் அவை பரப்பில் தான் எழும். குளம் அதன் ஆழத்தில் எதனாலும் தூண்டப்படாமல் அமைதியாக இருக்கும். மனித மனம் அப்படியானது என லீ அறிந்து வைத்திருந்தார். பரப்பில் உள்ள சிற்றலைகளை பொருட்படுத்தாமல் இருப்பது ஒரு கலை.

ஒரு சிறந்த குங் பூ ஞானி எளிதில் சீண்டப்படாமல் இருப்பான் என்பதை விளக்க லீ அடிக்கடி தன் மாணவர்களுக்கு சொல்லும் ஒரு கதை நான்கு தற்காப்புக் கலை ஆசான்களின் கதை. ஒரு ஊரில் மிகச் சிறந்த ஒரு குங் பூ ஆசான் இருந்தார். அவர் ஒரு ஞானி. தற்காப்புக் கலை வழி தன்னை அறிந்தவர். மேற்சொன்ன நான்கு ஆசான்களும் தற்காப்புக் கலையை ஒரு சண்டைக்கலையாக மட்டுமே அறிந்தவர்கள். அவர்கள் குங் பூ ஞானியை தேடி ஒரு உணவகத்துக்கு வந்தனர். அவரை எப்படியாவது சண்டைக்கு இழுத்து தோற்கடித்து அதனால் தாம் புகழடைய வேண்டும் என்பது அவர்களின் உத்தேசம். அவரது பக்கத்து மேஜையில் அமர்ந்து சீண்டிக் கொண்டே இருந்தனர். ஞானி புறக்கணித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் நால்வரும் மிகுந்த காழ்ப்புணர்வுடன் தனிப்பட்ட முறையில் அவரை ஏச ஞானி ஒன்று செய்தார். சுற்றிப் பறக்கும் நான்கு ஈக்களை அவற்றின் இறகுகளைப் தன் கையில் உள்ள சாப் ஸ்டிக்குகளால் பற்றிப் பிடித்து எறிந்தார். அதைப் பார்த்த நால்வரும் சட்டென்று அமைதியாகி எழுந்து வெளியேறினர். ஒரு உன்னத குங் பூ வீரன் தன்னை நிரூபிக்க சண்டை போட வேண்டிய தேவையில்லை. அவனது உன்னதம் அவன் செய்யும் ஒவ்வொரு சிறு செயலிலும் வெளிப்படும். ஈயை சாப் ஸ்டிக்கால் பிடிக்க முடிந்தவருக்கு நான்கு பேரை சமாளிப்பது எம்மாத்திரம் என்பதே ஞானி குறிப்புணர்த்திய செய்தி. இக்கதையை “The Karate Kidபடத்தில் ஜாக்கி சான் ஒரு காட்சியில் ஞாபகப்படுத்துவார்.

புரூஸ் லீ பயின்ற விங் சுன் குங் பூவில் மைய அச்சுக் கோடு என்று ஒரு கற்பனையான கோடு உண்டு. ஒரு வீரன் தனது மைய அச்சுக் கோட்டை அறிந்திருப்பது கிரிக்கெட்டில் மட்டையாளன் லெக் அல்லது மிடுல் குச்சி கார்டு எடுப்பதை போன்றது. இது தனது வீச்சு எல்லை எதுவரை என்கிற புரிதலையும் சமநிலையையும் அவனுக்கு அளிக்கிறது. அவனது அடி இலக்கை நோக்கி சரியாக சென்றடைய உதவுகிறது. புரூஸ் லீ எந்த ஒரு குறிப்பிட்ட மரபான விதிகளையும் கராராக பின்பற்றுபவர் அல்ல என்றாலும் அவரது அநேகமான சண்டைகளில் இந்த மைய அச்சை அவர் தக்க வைப்பதை அவர் நின்று தாக்கும் முறையில் இருந்து நாம் கவனிக்க முடியும். தனது எல்லையை வகுத்து அதற்குள் நின்ற படி கிரிக்கெட்டில் மட்டையாளன் பந்தை தன்னை நோக்கி வர அனுமதிப்பது போல புரூஸ் லீயும் எதிரியை தாக்க அனுமதிக்கிறார். இதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு.

எதிரி நம்மைத் தாக்கும் போது அவனது ஆற்றல் நம்மை நோக்கி வருகிறது. மேலும் அவனது சமநிலை குலைகிறது. இது மிக விரைவில் நடக்கிறது. நம்மை அடித்த உடன் எதிரி சமாளித்து தன் சமநிலையை மீட்டுக் கொள்வான். விங் சுன் குங் பூ எதிரி நம்மை தாக்கும் போது கண்ணிமைக்கும் வேகத்தில் செயல்பட்டு அவனது அடியைத் தடுத்து அவனது ஆற்றலை திரும்பி அவனை நோக்கியே செலுத்தி அடிக்க சொல்லுகிறது. அந்நேரத்தில் அவனது சமநிலைக் குலைவை நாம் பயன்படுத்த வேண்டும். குங் பூவில் வேகம் மிக முக்கியம். (வேகமாக தாக்கும் பொருட்டே லீ தன்னை ஒல்லியாக ஆனால் திடமாக வைத்துக் கொண்டார். எடைகள் கொண்டு கடுமையாக உடற்பயிற்சி செய்யும் போதும் அவர் உயர்ந்த எடையில் இருந்து குறைந்த எடைகளுக்கு செல்லும் உடற்பயிற்சி பாணியை பயன்படுத்தினார். இது அவரை எடை குறைந்தவராக வைக்க உதவியது.).

ஆற்றலை திரும்ப எதிரியை நோக்கியே வழிமாற்றி விடும் உத்தியை கவனியுங்கள். புரூஸ் லீயின் சண்டையில் இது அடிப்படையான உத்தி. விங் சுன்னில் இத்திறமையை வளர்க்க sticking hands என்னும் ஒட்டும் கரங்கள் பயிற்சி அளிக்கிறார்கள். அதாவது எதிரியுடன் பொருதும் போது நமக்கு நான்கு கைகள். எதிரியின் அசைவுகளை முன் கூட்டி உணர்ந்து நாம் தடுத்து தாக்கும் போது ஒரு கட்டத்தில் எதிரியின் உடலையும் மனதையும் கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறோம். எதிரியின் கைகால்கள் நமதாகின்றன. அவனது உடல் கொண்டு அவனையே அடித்து வீழ்த்துகிறோம். புரூஸ் லீ மிக வலிமையானவர் என்றாலும் அவரது குச்சிக் கைகளுக்கு தன்னை விட இரட்டிப்பு எடை கொண்ட எதிரியை அடித்து வீழ்த்தும் ஆற்றல் இப்படித் தான் கிடைக்கிறது.

இவ்விசயத்தில் கிரிக்கெட் குங் பூவோடு ஒத்துப் போகிறது. சொங்கி போல் தெரிபவர்கள் பிரம்மாண்ட சிக்ஸர் அடிப்பதை பார்த்து வியந்திருக்கிறோம். டைமிங் தான் இதன் ரகசியம். டைமிங் என்றால் பந்தின் வேகத்திற்கு ஏற்ப மட்டை செயல்பட்டு இரண்டும் ஒரே புள்ளியில் சந்திப்பது. 2004இல் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்டு ஆட்டத்தில் சேவாக 309 அடித்தது நினைவிருக்கலாம். அப்போது ஷோயப் அக்தர் கடும் வேகத்தில் உயரப்பந்துகளாக வீசிக் கொண்டிருந்தார். சேவாக் அவற்றை நான்கு ஓட்டங்களுக்கு சுலபமாக அப்பர் கட் செய்தார். ஒவ்வொரு முறையும் ஷோயப் சேவாகிடம் வந்து “முடிந்தால் புல் ஷாட் அடி பார்ப்போம் என்று சவால் விடுப்பார். ஒரு கட்டத்தில் சேவாக் அவரிடம் “தயவு செய்து பிச்சையெடுப்பதை நிறுத்தி பந்து வீசு என்றார். ஷோயப் அதோடு சவால் விடுப்பதை நிறுத்தினார். புல் ஷாட்டை விட அப்பர் கட்டில் ஒரு மட்டையாளன் குறைந்த வலுவை தான் பயன்படுத்துகிறான். பந்து வீச்சாளனின் பாதி மைதானம் ஓடி வந்து தனது தோளை வருத்தி உற்பத்தி செய்யும் வேகத்தை நுணுக்கமாக திசை திருப்பி விடுகிறான். அவ்வளவே. இது ஷோயப்பின் கையைக் கொண்டு அவரையே அடிப்பது போல். அதனால் தான் ஷோயப் அவ்வளவு எரிச்சலானார். கிரிக்கெட்டில் தோள்வலுவை கொண்டு பந்தை மைதானத்துக்கு வெளியே துரத்துவது போல், குறைந்த ஆற்றல் பயன்படுத்தி, டைமிங் கொண்டும் செய்யலாம். குங் பூ இந்த உத்தியையே மேம்படுத்தி பல மடங்கு வேகம் மற்றும் கூர்மையுடன் செய்யக் கற்றுத் தருகிறது.

இறுதியாய் விங் சுன் குங் பூவில் சிக்கனம் ரொம்ப முக்கியம். எதிரியை நோக்கிய வெகு அருகிலான குத்து என்பது நேர்கோட்டில் பயணிப்பது என்கிறது விங் சுன் குங் பூ. ஒரு கையை தடுக்கும் நோக்கமாக நேராக நெஞ்சுக்கு சற்று சாய்வாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றைய கரம் அடிப்பதற்கும் தடுப்பதற்கும் தோதாக சற்று மேலெழும்பி இருக்கும். கையை வளைத்து சுற்றி அடிப்பதெல்லாம் குங் பூவில் கிடையாது. தனது Chinese Gung Fu எனும் நூலில் புரூஸ் லீ பக்கத்தில் இருப்பவர்களை மட்டுமே முழங்கை கொண்டு தாக்க வேண்டும். சற்று தள்ளி இருப்பவர்களைக் கூட முழங்கை கொண்டு தாக்குவது ஆபத்தானது என்கிறார். அடி தப்பும் அல்லது அதற்கு முன் எதிரி சுதாரித்து நம்மை தாக்கக் கூடும். அவர்களை கால் கொண்டு தாக்க வேண்டும். குங் பூவில் கை கால்கள் நான்குமே ஒரே வேளை தடுக்கவும் தாக்கவும் தயாராக இருக்க வேண்டும். தள்ளி இருக்கும் எதிரியை காலால் எதிர் கொண்டு அவன் அருகே வர மட்டுமே கையை வேகமாக சிக்கனமாக இயக்கி தாக்க வேண்டும் என்கிறார் அவர். குங் பூவில் குத்துவது கிரிக்கெட்டில் குறைந்த back lift கொண்டு தோனி மிகுந்த ஆற்றலுடன் அடிப்பதைப் போன்றது.

Read More

Saturday, 2 June 2012

ஐபிஎல் – ரசனையின் வீழ்ச்சி, மோசமான அரங்க நிர்வாகம் மற்றும் கார்ப்பரேட் சுரண்டல்



ஐபிஎல் 5க்கு கிடைத்துள்ள அமோக ஆதரவை மறுப்பதற்கில்லை. முக்கியமாக ஐபிஎல் புதிதாக கணிசமான பார்வையாளர்களை கிரிக்கெட்டுக்கு ஈர்த்துள்ளது. கிரிக்கெட் ஒரு டி.வி விளையாட்டு மட்டுமே என்பதில் இருந்து மாறுபட்டு அரங்குக்கு சென்று பார்ப்பதை ஒரு கொண்டாட்டமாக மாற்ற முயல்கிறது. பெண்களையும் குழந்தைகளையும் குடும்பங்களயும் அரங்குக்கு வரவழைத்துள்ளது. ஆனால் இந்த புது பார்வையாளர்கள் கிரிக்கெட் ஆர்வலர்களா?
டெஸ்ட் ஆட்டங்களை அரங்குக்கு சென்று பார்த்துள்ளவர்களால் இப்போது கொடிகளை அசைத்தபடி துள்ளி ஆடும் நெரிசலான T20 கூட்டம் கிரிக்கெட் ஆர்வலர்கள் அல்ல என்பதை எளிதில் உணர முடியும்.

கூட்டத்தில் வந்தமரும் கணிசமானோருக்கு கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது.

ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு வீரர்கள் பயிற்சி செய்வார்கள். ஆர்வலர்கள் இதை ஊன்றி கவனிக்க தவறுவதில்லை. பயிற்சியின் போது புது விசயங்கள் எத்தனையோ தென்படுகின்றன. மேற்கத்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்துக்கு தம் தோள்வலுவை நம்பியிருக்க இந்திய வீச்சாளர்கள் முழுக்க தயார் ஓட்டம் (run up) கொண்டு தான் அதே வேகத்தை அடைகிறார்கள். மோர்னெ மோர்க்கலும் யாதவும் வீசும் போது மட்டுமல்ல தோனியும் ஸ்காட் ஸ்டைரிசும் சேர்ந்து வீசும் போது கூட இது புலப்பட்டது. ஸ்டைரிஸ் ஒரு சுழலரை போல் சில அடிகள் ஓடி வந்து தோள் வலு மூலம் மூச்சு வாங்க ஓடி வந்து வீசும் தோனியின் வேகத்தை எளிதில் எட்டுகிறார். சூரஜ் ரன்திவ் side onஆக திரும்ப தூஸ்ரா வீசுவது மற்றொரு அழகான காட்சி. அவருக்கு முரளிதரனை போல் மணிக்கட்டை பயன்படுத்த முடியாது. அதே போல்.பந்து கையில் இருந்து வெளிவரும் போது மோனெ மோர்க்கலின் மணிக்கட்டு எவ்வளவு நேராக இருக்கிறது மற்றும் உடல் எவ்வளவு சமநிலையோடு இருக்கிறது என்பதும் கவனிக்கக் கூடியதாக இருந்தது. மாறாக வாரன் ஆரொன் ஓடி வரும் போதே அவர் பந்து லெக் பக்கம் போகப் போகிறது எனத் தெரிகிறது. பந்தின் வேகத்துக்காக முனைப்பு அவரது சமநிலையை குலைக்கிறது. மார்க்கல் வேகத்துக்காக முனையும் கட்டத்தை கடந்து விட்டார். அவர் பந்தின் நீளம் மற்றும் திசைக்கான பயிற்சியை மட்டும் செய்து கொண்டிருந்தார். ஒரு வீரர் நீண்ட நேரம் பயிற்சி செய்தால் பொதுவாக அவர் அன்றைய தினம் ஆட மாட்டார் என்று அர்த்தம். அதனால் ஒரு மணிநேரத்துக்குப் பிறகு சேவாக் மார்க்கலை நீக்கிய செய்தி வந்த போது ஆச்சரியமளிக்க இல்லை. இத்தனை முக்கியமான விசயங்கள் நடந்து கொண்டிருக்க பார்வையாளர்கள் தம் கொண்டாட்டம் எப்போது ஆரம்பமாகப் போகிற என்கிற பதற்றத்தில் இருந்தார்கள். அவர்கள் கண்ணில் கிரிக்கெட் படவே இல்லை. இறுக்கமாய் ஆடையணிந்த இளம்பெண்களை நோக்கி வெறுமனே குரங்கு போல் கிறீச்சிட்டு, தங்களது முகமூடி, பலவர்ண மேக் அப், தொப்பி, விக் ஆகியவற்றை சரி செய்து கொண்டு, இருக்கையில் எரிச்சலில் நெளிந்தபடி, எழுந்து அங்கிங்கு ஓடியபடி, கத்துவது, ஆர்வாரிப்பதை ஒத்திகை பார்த்தபடி இருந்தனர். விஜிபி, கிஷ்கிந்தாவுக்கு வந்து மதுவருந்தி குத்தாட்டம் போடுகிறவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை. அரங்கில் நிகழும் ஐபிஎல்லை கிரிக்கெட் மைனஸ் கேளிக்கை என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

சிக்கல் என்னவென்றால் அர்த்தமில்லாத கேளிக்கை நம்மை களைப்படைய வைக்கும்; கவனத்தை சிதறடிக்கும் அடிப்படையில் அது அபத்தமானது. பசிக்காமலே சாப்பிடுவது, இச்சை இல்லாமல் புணர்வது, போரடிக்கிறது என்று இன்னும் போரடிக்கும் டி.வி நிகழ்ச்சி பார்ப்பது...இவை எல்லாம் ஒருவித நோய்க் கூறுகள். ஐ.பி.எல் நடக்கும் அரங்கு பல சமயம் ஒரு மனநல விடுதிக்குள் மாட்டிக் கொண்ட உணர்வை அளிக்கக் கூடியது. ஐபிஎல்லில் கிரிக்கெட் ரசிகர்கள் இல்லாமலும் இல்லை; என்ன அவர்களின் நிலைமை தான் பரிதாபகரமானது. எனக்குப் பின்னால் ஒருவர் அமர்ந்து இப்படி சிலாகிக்கிறார் “தோனி எப்படி சதா கள அமைப்பை மாற்றிக் கொண்டே இருக்கிறார் பாருங்க. ஒரு கேப்டன் எல்லாத்தையும் கவனிச்சிக்கிட்டே இருக்கணுமில்ல. ச்சே எவ்வளவு கஷ்டமில்ல?. கள அமைப்பை மாற்றுவது, அணித்தலைவர் தொடர்ந்து ஆட்டத்தை கவனிப்பது என்பது ஒரு மாமூல் விசயம். இது கூட தெரியாதவர்கள் தான் அங்குள்ள உச்சபட்ச பார்வையாளர்கள். மிச்ச பேர் விளிம்பில் பட்டும், அரைகுறையாய் அடிக்கப்பட்டும் எல்லைக்கோட்டுக்கு செல்லும் பந்துகளுக்கு ஏதோ பஞ்ச காலத்தில் ரொட்டிக்காக தாவுவது போல் குதித்துக் கொண்டிருந்தனர். நல்ல பந்துகளை பாராட்டவில்லை. ஏனென்றால் அவர்கள் பந்தை கவனிப்பதில்லை, பந்து தம் பக்கம் வருமா, தம் மூஞ்சி டி.வியில் தெரியுமா? இதுதான் அவர்களை ஆட்கொள்ளும் ஒரே அக்கறை. ஹஸ்ஸி அழகாக கவர் டிரைவ் செய்கிறார். பந்து மட்டையில் பட்டவுடனே எனக்குத் தெரிந்து கைதட்ட துவங்கினேன். சுற்றிப் பார்த்தால் மிச்ச பேர் ஒன்றுமே நடக்காதது போல் அமர்ந்திருக்கிறார்கள். சில நொடிகளில் பந்து களத்தடுப்பாளரை கடந்து எல்லைக் கோட்டை நெருங்கும் போது தான் தாமதமாக அதை கவனித்து கூச்சலிட துவங்கினர். கிரிக்கெட்டுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு கூட்டம் மத்தியில் அமர்ந்திருக்கிறோம் என்பது எனக்கு அக்கணமே புரிந்து விட்டது.

சொந்த அணி ஆடும் போது மட்டும் கொண்டாடுவது, எதிரணி ஆடும் போது மௌனிப்பது என்பது ஒரு சென்னை பார்வையாளன் பண்ணுவது அல்ல. சயித் அன்வர் 194 அடித்த போது எழுந்து நின்று அர்ப்பரித்த கூட்டம் சென்னையின் மரபான பார்வையாளக் கூட்டம். இந்தியாவிலேயே கிரிக்கெட் புரிதல் மிக்க பார்வையாளர்கள் சென்னைக்காரர்கள் என்று வாசிம் அக்ரம் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்களும் நிபுணர்களும் பாராட்டி உள்ளார்கள். முன்னர் பலமுறை நமது மரபான பார்வையாளர்கள் நுட்பமாக ஆட்டத்தை கவனித்து பாரபட்சமின்றி பாராட்டுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு ஐபிஎல்லில் நாம் காண்பது முற்றிலும் வேறுவகையான கூட்டம். இவர்கள் ஆட்டம் துவங்குவதற்கு முன் ஒரு மஞ்சள் ஜெர்சியை பார்த்தார்கள். அது பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் என்று கூட தெரியாமல் ஓவென்று கத்தத் துவங்கினார்கள். பின்னர் அடங்கி விட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் எதிரணியினர் சில நல்ல ஷாட்கள் அடித்தார்கள் ஆனால் மொத்த பார்வையாளர்களும் ஓடிப்போன பெண்ணின் அப்பா மாதிரி அமர்ந்திருந்தார்கள். இவர்களை அப்படியே தூக்கி ஐஸ் ஸ்கேட்டிங் அரங்கில் அமர வைத்தாலும் இதே போல் ஆர்ப்பரித்து கொண்டாடுவார்கள். ஒரு பழைய மலையாளப் படத்தில் ஸ்ரீநிவாசனுக்கு குருவாயூரில் வரிசையாக பல் ஜோடிகள் மத்தியில் கல்யாணம் நடக்கும். நெரிசலில் தவறான பெண்ணுக்கு தாலி கட்டி விடுவார். ஐபிஎல் என்பது இப்படியான ஒரு ஆள்மாறாட்ட கல்யாணம்.

அரங்குக்கு வெளியே ஒரு ஆட்டோக்காரர் என்னிடம் திரும்பத் திரும்ப சில கேள்விகள் கேட்டார்:
“அரங்குக்குள் பொண்ணுங்க கத்துறாங்களா?
டிரம்ஸ் அடிக்கிறாங்களா?
டிக்கெட் எவ்வளவு ஆகிறது?
இது தான் பொதுமக்களிடத்து உள்ள மனப்பதிவு. தினசரி வாழ்வில் கிடைக்காது கிளர்ச்சிகளும் கிளுகிளுப்புகளும் அரங்கின் உள்ளே கிடைக்கிறது என்று நம்புகிறார்கள். உண்மை நிலவரம் அவர்களுக்கு தெரியாது.

டிவியில் பார்க்கும் போது நிறைய பெண்கள் இருப்பதாக தோன்றினாலும் உண்மையில் பெண்கள் ஒரு சின்ன சதவிதம் தான். அந்த பெண்களும் வந்து விட்டோம் பார் என்கிற பாவனையில் அடுத்த என்ன பண்ணுவது என்று புரியாமல் அமர்ந்திருக்கிறார்கள். ஆண்களை விட பெண்கள் மிக ஆர்வமாக எதையாவது கொறிப்பதிலும் குடிப்பதும் ஆர்வமாக இருந்தார்கள்.

பெண்களை விட குழந்தைகள் இன்னும் அதிகமாக ரசித்து ஆட்டம் போடுகிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு கிரிக்கெட்டை இப்படியா அறிமுகப்படுத்துவது என்று வருத்தமாக இருக்கிறது. கிரிக்கெட் அடிப்படையில் நீண்ட நேரம் ஓய்வாக பார்க்க வேண்டிய ஆட்டம். ஒருவருக்கு ஆரம்பத்தில் இந்த ஆட்டம் ஒன்றுமே புரியாது. மெல்ல மெல்ல புரியத் துவங்க மாதங்கள் ஆகும். அதன் நுணுக்கங்கள் புரிய வருடங்கள் ஆகும். இன்றுள்ள பல முதிர்ச்சியான பார்வையாளர்கள் ஆரம்பகால சலிப்பை கடந்து மெல்ல மெல்ல கிரிக்கெட்டை ஆழமாக அறிந்தவர்கள் தான். சுருக்கமாக கிரிக்கெட் என்பது ஒரு தீவிர இலக்கிய பத்திரிகை மாதிரி. முதலில் படிக்க இவர்கள் என்னமோ வேற்றுமொழியில் எழுதுகிறார்களே என்ற ஐயமும் கோபமும் ஏற்படும். ஆனால் இந்த அறிமுகக் கட்டம் முக்கியம். எந்த கலையின் அறிதலும் இப்படித்தான் இருக்க முடியும். ஐபிஎல் முதலில் குழந்தைகளிடம் கிரிக்கெட்டை கவனிக்க வேண்டாம் என்கிறது. பந்துகள் பறப்பதையும் பெண்கள் ஆடைபறக்க துள்ளுவதையும் மட்டும் பார்க்க தூண்டுகிற்து. அவர்கள் இந்த T20 பரிச்சயத்துடன் வளரும் போது அசல் கிரிக்கெட்டை பார்க்கும் பொறுமையும், நுணுக்கங்களை கவனிக்கும் மனநிலையும் கற்பனையும் அற்றவர்கள் ஆவார்கள். இருக்கையில் இருந்து எழுந்து துள்ளிக் கொண்டே இருந்தால் ஒரு அழகான பெண்ணைக் கூட சைட் அடிக்க முடியாது. இப்படி துள்ளிக் கொண்டே இருக்கும் தலைமுறைக்கு எல்லாவற்றையும் முகத்தில் அறையும் படி சொல்ல வேண்டியதாகிறது. அப்படியான கவனச்சிதறலுக்கு இது போன்ற அசட்டு கேளிக்கைகள் தாம் காரணம்.

22 பேரின் தொடர் கவனம், உச்சபட்ச திறன் வெளிப்பாடு, பரஸ்பர மோதல்கள், உள்போராட்டங்கள், வெற்றி-தோல்விகளின் சுழற்சி என கிரிக்கெட் வாழ்க்கையை நாடகியமாக படம் பிடிக்கும் ஒரு கலை. இந்த ஐபிஎல் நடக்கிற வேளையில் இங்கிலாந்து மே.இ தீவுகளின் டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருந்தது. மே.இ தீவுகள் ஒரு மட்டமான அணி தான். அதில் உள்ளதை விட பல சிறந்த நட்சத்திர விரர்கள் ஐபிஎல்லில் ஆடுகிறார்கள். ஆனால் மேற்சொன்ன டெஸ்ட் போட்டியில் நாம் காணக்கூடிய அற்புதமான திறன் வெளிப்பாடுகளில் சிறு சதவிதம் கூட ஐபிஎல்லில் இல்லை. உதாரணமாக, சந்தர்போல் தனது நண்டு காலாட்டம் மூலம் நான்காவது ஸ்டம்பில் நிற்கிறார். அதனால் பந்து வீச்சாளர்கள் தமது கற்பனையில் ஐந்தாவது ஸ்டம்பு ஒன்றை உருவாக்கி அதில் வீசுகிறார்கள். அவரை முறியடிக்க அவர்கள் ஐந்தாவது ஸ்டம்பில் இருந்து நான்காவது ஸ்டம்புக்கு இடைப்பட்ட வெளியில் பந்தை ஸ்விங் செய்ய வைத்தது மிக வியப்பளிக்கக் கூடியும். அதை விட நம்மைக் கவர்வது சந்தர்போல் சில மில்லிமீட்டர் வித்தியாசத்தில் எப்படி மட்டை விளிம்பில் பந்து படாமல் அதை பாதுகாத்து தப்பிக்கிறார் என்பது. சந்தர்போலை பார்ப்பது குறைந்த திறமை கொண்டு பிறந்த ஒருவர் தனது விடாப்பிடித்தனம் மற்றும் கவனம் கொண்டு எப்படி போராடி வெல்கிறார் என்பதற்கான தன்னம்பிக்கை ஊட்டும் படிப்பினை. ஐபிஎல்லின் குறை வீரர்களின் பிரச்சனை அல்ல. T20யின் வடிவமே அப்படியானது. அது வீரர்களின் திறமைகளை வெள்ளிப்பாத்திரம் துலக்கும் போது பிரகாசிக்கும் அளவுக்கே அனுமதிக்கிறது. கால்பந்தாட்டம் போன்று குறுகிற காலகட்டத்தில் உக்கிரமாக ஆடக் கூடிய ஆட்டம் அல்ல கிரிக்கெட். அது அமெரிக்கர்களிடையே பிரபலமாகாததற்கும் இதுவே காரணம். கிரிக்கெட்டை கால்பந்தாட்டமாக மாற்ற முடியாது. அப்படி செய்யும் போது நமக்கு அந்த ஆட்டத்தின் முழு அனுபவமும் கிடைக்காது. T20 ஆட்டத்தின் முக்கிய நோக்கம் மக்களை ஓரிடத்தில் கூட்டி கேளிக்கைகள் வழங்குவது. கிரிக்கெட் என்பது இதற்கான பாவனை மட்டுமே.

மேலும் பார்வையாளர்களுக்கு ஐபிஎல் சூதாட்ட செய்திகள் ஒருவித அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதை நேரடியாகவே பார்க்க முடிந்தது. தமது சொந்த அணி நன்றாக ஆடினால் கூட ஒருபக்கம் மக்கள் சூதாட்ட ஏற்பாடோ என சந்தேகங்களை வெளிப்படையாகவே தெரிவிக்க துவங்கினார்கள்.

சரி ஐபிஎல் கேளிக்கை அனுபவம் எப்படி இருக்கிறது?

ஐபிஎல்லில் பார்வையாளர்களுக்காக உச்சபட்ச வசதிகள் பண்ணிக் கொடுக்கப்படுவதாக, அது ஒரு குடும்ப பொழுது போக்காக உள்ளதாக சொல்லப்படுவதெல்லாம் பொய். நமது அரங்குகளின் கட்டமைப்பும் செயல்பாடும் ஐபிஎல்லுக்கு முன்பிருந்த நிலையிலே இப்போதும் இருக்கின்றன. சொல்லப் போனால் இன்னும் மோசம். இந்த கடும் கோடையில் ஒரு கோப்பை தண்ணீரை பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள். ஒரு கோப்பை பெப்சி நாற்பது ரூபார். அந்த பெப்சி போன்ற குளிர்பானங்களும் தண்ணீரில் சர்க்கரை கலந்தது போல் சுவையற்று இருப்பதாய் பலரும் அபிப்ராயப்பட்டார்கள். சிலர் வெந்நீர் போல் சூடாக இருப்பதாக வருத்தப்பட்டார்கள். சென்னையில் பாட்டில் நீரைத் தவிர குழாய் நீரைக் குடிப்பது ஆபத்தானது என்ற நிலைமை உள்ளது. பாட்டிலை உள்ளே அனுமதிக்கூடாது என்ற சாக்கில் கோப்பையில் விற்கிறார்கள். அப்படி என்றால் 15 ரூபாய் பாட்டில் நீரை கோப்பை கோப்பையாக நாற்பது ரூபாய்க்கா விற்பது? சத்யம் போன்ற உயர்தர திரையரங்குகளில் கூட இப்படி நான்கு மடங்கு விலைக்கு விற்பதில்லை. மேலும் இப்படி கோப்பை கோப்பையாய் விநியோகிப்பதால் தண்ணீர் குடிப்பதற்கு அப்படி ஒரு அடிதடி. ஒரு கோப்பை தண்ணீருக்காக மக்கள் ஏங்குவது பார்க்க பரிதாபமாக இருந்தது. உணவும் கூட அரங்கில் ஐபிஎல்லுக்கு முன்னிருந்த தரத்தில் தான் இருக்கிறது. சத்யம் போன்ற இடங்களில் ஐம்பது ரூபாய்க்கு தின்பண்டம் வாங்கினால் அளவும் தரமும் அதிகமாக இருக்கும். ஆனால் இங்கே நான்கு மடங்கு பணத்துக்கு படுகேவலமான தரத்தில் இருக்கிறது. இங்கு தான் ஒரு கேள்வி வருகிறது. 150 ரூபாய்க்கு ஒரு திரையரங்கில் கிடைக்கும் தரம், வசதி, விருந்தோம்பலில் கால்வாசி கூட ஒரு கிரிக்கெட் அரங்கில் ஏன் இவர்களால் தர முடியவில்லை? டி.வியில் தத்தமது அணியின் ஜெர்சிகளுடன் மக்கள் கொடியேந்தி ஆட்டம் போடுவது பார்க்கும் போது நமக்கு இவர்கள் நிஜமாகவே கொண்டாடுவதாக தோற்றம் ஏற்படுகிறது. உண்மையில் நுழைவுச்சீட்டுக்காக காலை நான்கு மணிக்கே வந்து வரிசையில் நின்று நெரிசல், அடிதடி, ஏச்சுபேச்சுகள், ஏகப்பட்ட காவலர்களின் சந்தேகப் பார்வைகளுக்கு நடுவே மோசமான உணவு, விருந்தோம்பல், வசதிகள் ஆகியவற்றுக்கு இடையே ஐபிஎல் கொண்டாட்டம் என்பது கலாச்சார கேளிக்கைகள் ஏதுமே இல்லாத ஒரு மக்கள் கூட்டத்தின் கொண்டாட்ட வறுமையை சுரண்டுவது அல்லாமல் வேறில்லை. ஐநூறு ரூபாய் அடிப்படை கட்டணம் செலுத்தி உள்ளே வருவதற்கு ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலுக்கு சென்றால் உங்களை பலமடங்கு மேலாக பராமரிப்பார்கள். 5000க்கு மேல் செலுத்தி குளிர்பதன வசதி மட்டும் இலவச உணவுடன் ஒரு கண்ணாடி அறைக்குள் அடைக்கப்பட்டு கிரிக்கெட் பார்க்க நேர்ந்த அவலத்தை இந்து பத்திரிகையில் ஒரு ஜெர்மானியப் பெண் எழுதி இருந்தார். நல்ல வசதி என்பது ஏ.சி வைத்த ஆய்வகக் கூண்டு அல்ல. அதன் பொருள் நியாயமான விலையில் நல்ல உணவு, தண்ணீர், வசதியாக இருக்கை, காற்றோட்டமான சூழல் (உணவு வழங்கும் இடத்தில் காற்றாடி கூட இல்லை), பார்க்கிங் வசதி ஆகியவை தான். சேப்பாக் அரங்குக்கு தனதான பார்க்கிங் வசதி இல்லை. ஐபிஎல்லில் திரளும் ஐம்பதாயிரம் மக்களுக்கு தேவையான உணவு கழிப்பறை வசதிகளும் இல்லை. உண்மையில் வசதிகளை பொறுத்த மட்டில் ஒரு ஸ்டாண்டில் ஐம்பதில் இருந்து நூறு பேருக்கு மேல் தாங்காது. இடைவெளியின் போது மக்கள் படுகிற அவஸ்தைகளைப் பார்த்தால் ஆதம்பாக்கம் வேலன் போன்ற அட்டு திரையரங்குகள் பல மடங்கு பரவாயில்லை என்று பட்டது. வரிசையில் ஐந்து நிமிடம் காத்திருந்து நீங்கள் மூத்திரம் போய் விடலாம். ஆனால் இங்கே அரைமணிநேரம் காத்திருந்து விட்டு இதுவாவது கிடைத்ததே என்று ஆசுவாசமாக ஜிப்பை திறக்க வேண்டும்.

நியாயப்படி அரங்குக்குள் நுழைவதற்கான வெவ்வேறு கேட்டுகளுக்கு செல்வதற்கு திசைகாட்டி தட்டிகள் வைக்க வேண்டும். குறைந்தது அமைப்பாளர்களாவது உதவ வேண்டும். பரிச்சயமற்றவர்கள் மைதானத்துக்கு வந்து விட்டு உள்ளே நுழைய அரைமணிக்கு மேலாகிறது. ஏனென்றால் லத்தி சுழற்றி நின்று கூட்டத்தை கவனிக்கும் காவலர்களுக்கு எந்த கேட் எங்கே என்று தெரியவில்லை. புதிதாக வரும் ஒருவர் திக்கித் திணறி இடம் கண்டுபிடித்து வந்தால் வாகனத்தை பார்க் பண்ணுவதற்கான அவஸ்தைகள் வேறு தனி. அங்கே இரவானால் விளக்குகள் கிடையாது, நிறைய பாம்புகள் வரும் என்று பார்க்கிங் நிர்வாகிகளே சொல்லுகிறார்கள். கட்டணம் செலுத்தி விட்டு வெளியே விடுவது தான் பாதுகாப்பாம். வெளியே விடும் வண்டியின் மேல் ஆயிரம் வண்டிகள் பின்னர் சேர்ந்து விடும். ஆட்டம் முடிந்து கிளம்பும் போது இருட்டில் யானையை குருடன் தடவின கணக்காக நீங்கள் தேட வேண்டும். மேலும் பார்க்கிங் இடத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் நடந்து உரித்த கேட்டை அடைய வேண்டும். வயதானவர்கள், ஊனமுற்றவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் ஐம்பது ரூபாய் ஆட்டோவுக்கு செலவழித்து ஒன்வேயில் சுற்றி வர வேண்டும். உள்ளே கூட சக்கர நாற்காலி உள்ளிட்ட பிற வசதிகள் இல்லை. இவ்வளவு பேர் கூடுகிற இடத்தில் திடீரென்று யாருக்காவது காயம் பட்டால், மாரடைப்பது வந்தால் மருத்துவ வசதி இருக்கிறதா? அதைப் பற்றின எந்த தகவலும் அரங்குக்குள் இல்லை. அரங்கை விட்டு வெளியேறக் கூடிய அளவுக்கு ஏதாவது ஆபத்தென்றால் மைக்கில் அறிவிப்போம் என்று மட்டும் சொல்கிறார்கள். ஏன் மக்கள் அலறி ஓட்டி கூட்ட நெரிசலில் சாவதற்கா? உள்ளே புகைக்காதீர்கள் என்று மைக்கில் அறிவுறுத்துகிறார்கள். குடிக்க நல்ல நீர் தராமல், நூறு பேருக்கான வசதிகளை ஆயிரம் பேருக்கு தந்து விட்டு நம் உடல்நலம் மீது அக்கறையாம். உண்மையான வசதியை நாம் தென்னாப்பிரிக்க அரங்குகளை பார்க்கலாம். வசதியாக புல்தரையில் படுத்துக் கொண்டு நல்ல உணவு உண்டு நீச்சல் குளத்தில் கிடந்தபடி கிரிக்கெட்டையும் ரசிக்கிறார்கள். மிகக் குறைவான கூட்டம் வரும் மே.இ தீவுகளின் அரங்குகளில் கூட உடனடியாக நல்ல உணவு (கம்பியில் மாட்டி வாட்டின கறி உள்ளிட்ட மரபான உணவுகள்) தயாரித்து தருகிறார்கள். இங்கே காலையிலே பண்ணி வெளிறிய பிரேதம் போல் தெரியும் சப்பாத்தி, கேவலமான வெஜிடபிள் பிரியாணி போன்ற செத்துப் போன சைவ உணவுகளை மக்கள் மீது திணிக்கிறர்கள்.

கிரிக்கெட்டும் இல்லாமல் விருந்தோம்பலும் இல்லாமல் ஐபிஎல் இன்று மோசமான நிர்வாகம் மற்றும் காமத்தையும் வெற்றுக் கிளர்ச்சிகளையும் பிரதானமாக்கி மக்களை ஏமாற்றி பணம் பிடுங்குவதற்கான உதாரணமாக உள்ளது. இதற்கு எதிராக பேசுபவர்களுக்கு இந்திய கிரிக்கெட் ஆணையம் தடை விதிக்கும் (கீர்த்தி ஆசாத்), அல்லது விமர்சிப்பவர்களை தமது வர்ணனையாளராக்கி கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் (ஹர்ஷா போக்ளெ, மஞ்சிரேக்கர்) அல்லது ஐபிஎல் லாபத்தில் இருந்து லட்சங்களில் இருந்து கோடிகள் வரை சன்மானம் வழங்கி வாயை அடைக்கும் (முன்னாள் வீரர்களுக்கு). பார்வையாளர்கள் அதிருப்தி அடையாமல் இருப்பதற்காக குத்துப்பாட்டு, சீர் கேர்ள்ஸ், ஆடம்பர அலங்காரங்கள், வாண வேடிக்கை. இதெற்கெல்லாம் செலவழிக்கும் பணத்தில் சிறுபங்கை பார்வையாளர் வசதிகளுக்காக செய்யலாமே? எப்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தனது பொருளின் விளம்பரத்துக்காக ஒரு சினிமா, கிரிக்கெட் நட்சத்திரத்துக்கு அளிக்கும் கோடிக்கணக்கான பணத்தின் சுமை வாடிக்கையாளனுக்கு போய் சேர்கிறதோ அதைப் போன்று தான் இதுவும். நல்ல பொருளை அளிப்பதல்ல, நல்ல பொருள் என்ற தோற்றத்தை உருவாக்குவதும், ஒரு பிம்பத்தை பயன்படுத்தி அதை விற்பதிலும் தான் ஆர்வம் காட்டுவார்கள், பணம் செலவழிப்பார்கள். இந்த மாறா கார்ப்பரேட் விதிதான் ஐபிஎல் நிர்வாகம் மற்றும் அமைப்பிலும் செயல்படுகிறது. ஆக மற்றொரு தளத்தில் ஐபிஎல்லின் பிரச்சனை நிர்வாகத் திறன் இன்மை மட்டும் அல்ல. கார்ப்பரேட் முதலாளிகள் கிரிக்கெட் வாரியத்தில் இருந்து விலக்கப்பட வேண்டும் என கீர்த்தி ஆசாத் கோரியது வெறும் அரசியல் ஆதாயத்துக்கான கூச்சலும் அல்ல. இந்திய அரசியல், ஆன்மீகம், கிரிக்கெட் என அவர்கள் கையிலெடுக்கும் ஒவ்வொரு அமைப்பும் மீள் முடியாத பாதாளத்துக்கு சென்று வீழ்ந்திருக்கிறது. ஐபிஎல் ஒரு ஜனரஞ்சக உதாரணம் மட்டுமே.

Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates