Wednesday, 6 June 2012

புரூஸ் லீ – சண்டையிடாத சண்டை வீரன்

குங் பூ பிற சண்டை முறைகளில் இருந்து மிக நுட்பமாக பலவிதங்களில் வேறுபடுகிறது. புரூஸ் லீயின் சண்டை காட்சி அமைப்பு சினிமாவில் வன்முறையின் தத்துவத்தையே மாற்றி அமைத்தது. அவர் தனது சினிமா வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் தனது சண்டை முறையின் பின்னுள்ள தாவோயிச தத்துவத்தை விளக்க முயன்றார். உதாரணமாக “Enter the Dragon” இல் ஷாவலின் கோயிலின் தலைமை குருவுக்கு அங்குள்ள மாணவனான புரூஸ் லீக்கும் ஒரு உரையாடல் வரும். குரு கேட்பார்: “சண்டையின் போது உன் எதிரி யார்?
“எனக்கு எதிரியே இல்லை. ஏனென்றால் மோதலின் போது “நான் என்கிற பிரக்ஞையே இருப்பதில்லை என்பார் லீ.
எதிரி என்பவன் நமது மனதின் பிரதிபலிப்பு மட்டுமே என்கிற புரிதல் இந்த பதிலின் பின் உள்ளது. மேலும் சொல்வார் லீ: “என் சண்டை சண்டையே அல்ல, அது ஒரு விளையாட்டு. தீவிரமான விளையாட்டு. ஒரு நல்ல தற்காப்புக் கலைஞன் பதறுவதில்லை, ஆனால் தயாராகிறான். அவன் சிந்திப்பதில்லை, ஆனால் கனவு காண்பதுமில்லை. எதற்கும் தயாராக இருக்கிறான். எதிரி விரியும் போது நான் சுருங்குவேன். அவன் சுருங்கும் போது நான் விரிவேன். ஒரு வாய்ப்பு நேரும் போது நான் அடிக்க மாட்டேன். அது தானாகவே அடிக்கும்.. இந்த சின்ன விளக்கத்துக்குள் புரூஸ் லீ பயின்ற குங் பூவின் அத்தனை பரிமாணங்களும் வந்து விடுகின்றன.

“எதிரி விரியும் போது அவன் தாவோயிச தத்துவத்தின் யின் யாங் ஆகிறான். யாங் என்றால் சக்தியின் வெளிச்சமான ஆண்மையான வன்மையான செயல்பாட்டு ரீதியான பக்கம். “நான் (லீ) சுருங்கும் போது அவர் யின் எனப்படும் சக்தியின் இருட்டான பெண்மையான அனைத்தையும் அமைதியாக உள்வாங்கும் பகுதி ஆகிறான். சக்தியின் இந்த இருவேறு பட்ட பகுதிகளின் முரணியக்கம் தான் பிரபஞ்ச இயக்கத்தின் ஆதாரம் என தாவோயிஸ்டுகள் நம்புகிறார்கள். யின் யாங் தத்துவப்படி இருட்டும் வெளிச்சமும், நன்மையும் தீமையும், நேர்மறையும் எதிர்மறையும், வன்மையும் மென்மையும் சேரும் போது தான் உச்சபட்ச உன்னத ஆற்றல் பிறக்கிறது. அதை சீனர்கள் “ச்சி என்கிறார்கள். இந்த உச்சபட்ச ஆற்றலை ஒருவன் ஒரு சண்டையின் போது வெளிப்படுத்தினால் அவன் வெல்ல முடியாதவனாகிறான். அதை வெளிப்படுத்த எதிரி தாக்கும் போது அவனை அதே வித எதிர்தாக்குதல் கொண்டு நேரிடாமல் “விரிந்து அவன் ஆற்றலை உள்வாங்கி அதையே திரும்ப அவன் பலவீனமாகும் போது பயன்படுத்த வேண்டும் என்பதே லீ சொல்வது. 


லீ இளமையில் ஒருநாள் ஒரு நீர்நிலை அருகே அமர்ந்து இருந்தார். திடீரென்று நீரைக் குத்தினார். அது உள்வாங்கி குவிந்து மீண்டும் நிரம்பிக் கொண்டது. அவர் தொடர்ந்து குத்திக் கொண்டே இருந்தார். சட்டென்று அவருக்கு புரிந்தது நீரை ஒருநாளும் காயப்படுத்த முடியாது என்று. ஏனென்றால் அது திரும்ப தாக்குவதில்லை, விரிந்து வாங்கிக் கொள்கிறது. மீண்டும் பழையபடி ஆகிறது. அவர் புன்னகைத்து இனிமேல் அந்த நீரைப் போல் இருக்க வேண்டும் என தீர்மானித்தார். அது அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனை. கோப்பையில் ஊற்றினால் கோப்பையை போல் ஆகும், குடுவையில் ஊற்றினால் குடுவையைப் போலாகும் நீரைப் போன்று ஒரு நல்ல சண்டை வீரன் இருக்க வேண்டும் என்று பின்னர் அவர் ஒரு டி.வி பேட்டியில் அழகாக இந்த தத்துவத்தை விளக்கினார்.

விரிந்து சுருங்கி சுருங்கி விரியும் இந்த விளையாட்டின் போது ஆற்றல் மாறி மாறி பயணிக்கிறது. ஆற்றல் தான் சண்டையை நிகழ்த்துகிறது. தீமையையும் நன்மையும் இணையும் இந்த முழுமையான ஆற்றல் சண்டையிடும் இருவரில் யார் தன்னை முழுமையாக உள்வாங்குகிறார்களோ அவரை வெற்றி பெற வைக்கிறது. ஆக புரூஸ் லீ சொல்கிறார் “நான் அடிக்கவில்லை. அதுவாக அடிக்கிறது என. அதே காரணத்தாலும் தான் புரூஸ் லீயைப் பற்றி பேசும் குரு “அவனுடைய சண்டைத் திறன்கள் மட்டுமல்ல முக்கியமாக ஆன்மீக ஆற்றலும் முதிர்ச்சி அடைந்து விட்டது என்கிறார். இதன் பொருள் குங் பூ வீரன் ஒரு வழமையான ஞானி அல்லது சாமியார் என்றல்ல. மாறாக அவன் சண்டைக் கலை வழி தன்னை அறிந்தவன் என்பது. அவன் தன்னை இயக்கும் உள்-ஆற்றலை உணர்ந்தவன். ஒரு கவிஞனைப் போல் அவன் சண்டையிடும் போது வேறொருவன் ஆகிறான். தன்னைக் கடந்த ஒரு உன்னத ஆற்றலின் பகுதியாகிறான். மற்றபடி அவன் சாதாரண மனிதன் தான். “Enter the Dragon” படத்தில் மற்றோர் இடத்தில் அவர் சொல்வார்: “நான் சண்டை இடாத சண்டை வீரன்.


உரையாடலின் இறுதியில் குரு ஒன்று சொல்வார். படத்தின் ஆகச் சிறந்த ஆழமான வசனம் அது. “எதிரி என்பவன் பிரதிபிம்பங்களால் ஆனவன். பிரதிபிம்பங்களை நொறுக்கினால் அவனை அழித்து விடலாம். யோசிக்க யோசிக்க எத்தனையோ விசயங்களை இந்த வாக்கியம் நமக்கு விளக்குகிறது. எதிரி என்பவன் நமது பிரதிபலிப்பு மட்டும் அல்ல. அவன் தன்னை ஏராளமான வகையில் பிரதிபலித்து அந்த விதவித பிம்பங்களால் மூடிக் கொள்கிறான். வாழ்நாளெல்லாம் நாம் மோதுவதும் போட்டியிடுவதும் இந்த பிம்பங்களுடன் தான். பிம்பங்களை அறிந்து கடந்தால் எதிரி என்பவன் ஒரு பலவீனமானவன் தான். இந்த தத்துவத்தை காட்சிப்படுத்தும் விதமாய் லீ இப்படத்தின் மிகப் பிரபலமான இறுதிக் காட்சியான லீக்கும் வில்லன் ஹேனுக்குமான கண்ணாடி அறை மோதலை அமைத்திருப்பார். லீ ஒரு சிறந்த தற்காப்புக் கலை வீரனுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட ஸ்டைலும் இருக்கக் கூடாது என்பார். அவன் அனைத்து சண்டை ஸ்டைல்களையும் அறிந்து அவற்றை மறந்து விட வேண்டும். அப்போது தான் அவன் ஒரு சண்டையின் போது இயற்கையாக தனக்குள்ள உள்ளுணர்வு சார்ந்து சரளமாக எண்ணமற்று இயங்க முடியும். லீயின் அபார வேகத்தின் ரகசியம் அது தான். கற்று மறத்தல் என்பது ஒரு ஆன்மீக மார்க்கமும் தான் என்பதை விளக்க வேண்டியதில்லை.

லீ தத்துவத்தை ஆன்மீகமாகவும் நடைமுறையாகவும் கண்டவர். இந்த சிந்தனை மேற்சொன்ன இறுதிச் சண்டைக் காட்சியில் உருவகமாக வெளிப்படும். வில்லன் ஹேனுக்கு ஒரு கையில் முழங்கைக்கு கீழே இல்லை. அங்கே அவன் இரும்பு முஷ்டி பொருத்தியிருப்பான். சண்டையின் போது தேவைக்கேற்றாற் போல் கத்திக் கரம், முள்கரம் எல்லாம் பொருத்துவான். அவன் இரு கைகளிலும் தோல் உறைந்த அணிந்துள்ளதால் இந்த விபரம் எளிதாக வெளியே தெரிய வராது. அவனிடம் மோதும் பலரும் வீழ்வதற்கு அவனுக்கு ஒரு கையல்ல, “பல கைகள் என்பது காரணம். நெஞ்சில் கம்பி நகக் கீறல் தடத்துடன் லீ நிற்கும் அந்த பிரபலமான புகைப்படத்தை பார்த்திருப்பீர்கள். அது இம்மோதலின் போது அவருக்கு கிடைக்கும் காயம் தான். கண்ணாடி அறைக்குள் நின்று சண்டையிடும் தனது எதிரிக்கு எண்ணற்ற பிரதிபிம்பங்கள் மட்டுமல்ல பல செயற்கை கரங்களும் உண்டு என லீ அறியும் இடம் சண்டையில் மிக கவித்துவமான ஒன்று. இந்த மாறும் இரும்புக் கரம் என்பது ஸ்டைலின் உருவகம் தான். நிலைத்த கரம் இல்லாதவன் நிலைத்த ஸ்டைல் இல்லாதவன். அவன் நீரைப் போல் கட்டற்று ஒழுகி செல்பவன். அவனை தோற்கடிப்பது சிரமம்.

சினிமாவில் எத்தனையோ சண்டைக் காட்சிகள் பார்த்திருக்கிறோம். நாயகன் முதலில் அடிக்க வில்லன் திரும்பத் தாக்க அதன் பாட்டுக்கு சண்டை தொடரும். இல்லாவிட்டால் வில்லன் அடிக்க அடிக்க நாயகன் துவண்டு பின் திடீர் உத்வேகம் பெற்று திரும்ப அடிப்பான். (90கள் வரை தமிழில் நாயகன் வாயில் குத்து வாங்கி உதட்டில் அரும்பும் தன் சொந்த ரத்தத்தை தொட்டுப் பார்த்து வெறியேறி பாய்ந்து தாக்குவது ஒரு பிரபல பாணியாக இருந்தது. ரஜினி அடிக்கடி பயன்படுத்திய இந்த முறை புரூஸ் லீயின் The Big Boss படத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான். வில்லன் கத்தியால் கிழிக்க தன் ரத்தத்தையே அவர் ஒரு பூனை போல் நக்கி சுவைக்கும் ஒரு உக்கிரமான காட்சி அப்படத்தில் வரும்.). புரூஸ் லீயின் சண்டைக் காட்சிகளில் அவர் ஒரு நிலையமைதி (stance) எடுத்துக் கொள்வார். எதிரி முன்வந்து தாக்க இவர் முன்னேற மாட்டார். நின்ற இடத்திலேயே சட்டென்று அடியை தடுத்து கண்ணிமைக்கும் முன் அடுத்த அடி கொடுப்பார். அதே வேளை அவர் எதிரியை சுற்றி சுற்றி நகர்ந்து கொண்டும் இருப்பார். இந்த நகர்வு என்பது ஓட்டம் அல்ல. அது எந்த நிலையிலும் தன்னை உறுதியாக நிறுத்திக் கொள்ளத்தக்க வகையிலான சமநிலை கொண்ட ஒரு நகர்வு. ஒரு பூனை எலியை வைத்து விளையாடுவது போன்ற நகர்வு இது. எப்படி தட்டி தட்டி விளையாடினாலும் எங்கு சென்றாலும் எலி பூனையின் பிடிக்குள் தான் இருக்கும். நகர்வின் போது லீ எதிரிக்கு மிக சரியான தொலைவில் தன்னை வைத்துக் கொண்டே இருப்பார். புரூஸ் லீக்கும் விஜய காந்துக்கும் அது தான் வித்தியாசம். லீயின் வன்மத்தின் ஒரு கலைசார்ந்த அழகியல் இருக்கும். சில சமயம் மயில்களின் நடனம் போல தோன்றும். விஜயகாந்த போன்றவர்கள் சண்டைக்காட்சிகளில் பண்ணுவது உலக்கை இடி. புரூஸ் லீயிடம் நம்மை முதலில் கவர்வது அவரது பிரமிப்பூட்டு வேகம், குறைவான அளவான அசைவுகள், மற்றும் சமநிலை. இவை மூன்றும் குங் பூவின் அடிப்படைகள். குங் பூவுக்கு வலிமையும் வேண்டும். ஆனால் மேற்சொன்ன மூன்றுக்கும் பிறகு தான்.


லீ டேய் என்று கத்துவதோ கண்களை சிவக்க வைப்பதோ இல்லை. அமைதியாக கவனிக்கிறார். கண்கள் தான் இருக்கும் சூழலை மற்றும் எதிரியை கூர்ந்து கவனிக்கின்றன. அவர் கண்களால் பார்க்கவில்லை. அவரது ஆழ்மனதால் பார்க்கிறார். எதிரியின் தாக்குதலை பார்க்க அல்ல உணர வேண்டும் என்கிறது குங் பூ. ஏனென்றால் பார்த்து அத்தகவல் மூளையில் பரீசீலிக்கப்பட்டு கைக்கு வருவதற்கு சில நொடிகள் தாமதமாகி விடும். அதனால் புரூஸ் லீ ஒரு வீரன் காலியான கோப்பை போல இருக்க வேண்டும் என்கிறார். அவன் தான் இருக்கும் சூழலின் ஒரு பகுதியாகி விட வேண்டும். எதிரியின் மனதின் ஒரு பகுதியாக அவன் மனமும் ஆகிட வேண்டும். எதிரி தாக்கு என எண்ணும் போது இவனும் அதற்கு தயாராகிறான். ஒரு சண்டையில் எதிரி என்பவன் வேறொருவன் அல்ல, நமது உடலின் இன்னொரு பாதி தான். அதனால் தான் ஒரு சண்டையின் போது மனதை காலியாக, எந்த எண்ணமுமற்று ஒரு தியான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் லீ.

மாடியில் நின்று சற்று தொலைவில் ஒரு மரக்கிளையில் இருக்கும் குருவியை பார்க்கிறீர்கள். குருவி உங்களுக்கு திரும்பி இருக்கிறது. அது உங்களை கவனிப்பதாகவே தெரியவில்லை; ஆனால் உங்கள் விரலை உயர்த்தி அசைத்துப் பாருங்கள், உங்கள் விரல் கீழே வரும் முன் குருவி பறந்து விடும். கல்லை விட்டு எறியுங்கள், கல் பாதி தொலைவு இருக்கும் போது பறவை வானில் எம்பி பறந்து கொண்டிருக்கும். ஒரு லட்சிய குங் பூ வீரன் இந்த பறவையின் தயார் மனநிலையில் சதா இருக்கிறான். ஒருமுறை அமெரிக்காவில் ஒரு தற்காப்புக் கலை செயல்விளக்க நிகழ்ச்சியின் போது ஒரு ஆசான் அப்போது நன்கு பிரபலமாகி வந்த லீயிடம் தன் முறுக்கேறி வலுவான வயிற்றைக் காட்டி இங்கு குத்து என்றார். புரூஸ் லீயால் தன் வயிற்றில் குத்தி நிலைகுலைய வைக்க முடியாது என்று சவால் விட்டார். லீ அருகே சென்றார். முகத்தில் நிச்சலனம். சட்டென்று ஆசானின் மூக்கில் குத்து விட்டார். நிலைகுலைந்து கீழே விழுந்த ஆசான் “ஏன் மூக்கில் குத்தினாய்? என கோபமாய் கேட்டார். அதற்கு லீ “ஒரு தற்காப்புக்கலை வீரன் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். உடம்பில் ஏதாவது ஒரு பகுதியை வலுவாக்கி விட்டு அங்கே குத்து என சவால் விட யாராலும் முடியும். ஆனால் நிஜ சண்டையில் இது எந்த பயனுமற்றது என்றார்.

மனதை காலியாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காக லீ தன் மாணவர்களுக்கு அடிக்கடி ஒரு கதை சொல்லுவார். நன்கு பிரபலமான கதை தான். ஒரு பேராசிரியர் ஒரு ஜென் துறவியிடம் சென்று ஜென்னை விளக்குமாறு கேட்கிறார். துறவி எதைச் சொன்னாலும் “அதான் எனக்குத் தெரியுமே... என பேராசிரியர் தன் பாட்டுக்கு ஒரு குட்டி உரை நிகழ்த்தி விடுவார். அவருக்கு ஒன்றையுமே சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று அறிந்து கொண்ட துறவி அவரை தேநீர் அருந்த அழைத்தார். பேராசிரியரின் கோப்பையில் தேநீரை அது நிரம்பி வழிந்த பின்னரும் ஊற்றிக் கொண்டே இருந்தார். பேராசிரியர் “நிறுத்துங்கள் நிறுத்துங்கள் வழிகிறது என்று கத்தினார். துறவி அமைதியாக “உங்கள் மனமும் இப்படித் தான் இருக்கிறது. மனத்தில் இடமில்லாமல் இருக்க நான் எப்படி புதிதாக ஒன்றை உங்களுக்கு சொல்லித் தர முடியும்? என்று கேட்டார். இந்த அழகான கதை ஜென்னின் அடிப்படையை விளக்குகிறது. ஜென் என்பது ஒரு கோட்பாடோ தத்துவமோ அறிதல் முறையோ அல்ல. அது ஒரு அனுபவம் அல்லது வாழ்தல் முறை. மனிதன் அறிவை துறக்கும் போதே உலகை அறிகிறான் என்கிறது ஜென். சொல்லப் போனால் அறிதல் என்பதே ஜென்னுக்கு விரோதமானது. உணர வேண்டும். உணர்தல் தான் ஜென்னின் மையம்.


நாம் தேடும் உண்மை என்பது நம்மையும் சேர்த்த ஒரு மாபெரும் இருப்பு என்கிறது ஜென். ஒரு சிறு உப்புக்கல் கடலில் கரைந்து போய் தன்னை அறியும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் கதையை அறிந்திருப்பீர்கள். இயற்கையை ஜென் தனியாக பார்ப்பதில்லை. மேற்கத்திய கல்வியில் வளர்ந்த நமக்கு இது மிக அந்நியமான ஒரு புரிதல். இயற்கை என்பது மரம், கடல், வானம் அல்ல. இயற்கை என்பது ஒரு முடிவற்ற இருப்பு. நாம் அதில் ஒரு பகுதி. வாழ்க்கையை நன்றாக வாழ சிந்தனை பாரமின்றி வாழ்வோடு ஒன்றிப் போக தெரிய வேண்டும். ஒரு வேலையில் தன்னை மறந்து ஈடுபட்டிருப்பது, ஒரு கவிதையை ஆழ்ந்து படிப்பது, தன்னை மறந்து உதட்டோடு உதடு பொருத்தி மற்றொரு உடலோடு ஒன்று கலப்பது, எதற்கென்றே புரியாமல் சில நொடிகள் சிரிப்பது இவை எல்லாம் ஜென் தான். ஆனால் நம் வாழ்வில் மிகச் சில நிமிடங்களே இது சாத்தியமாகிறது. ஜென் தினசரி வாழ்வின் அத்தனை கவனச் சிதறல்கள், பதற்றங்கள், நெருக்கடிகள், அதிரடி நிகழ்வுகளுக்கு மத்தியிலும் எப்படி மனதை காலியாக வைத்து நதியில் ஒழுகும் இலை போல இருப்பது என்று சொல்லித் தருகிறது.

புரூஸ் லீ குங் பூவை ஒரு ஜென் கலையாகப் பார்த்தார். குங் பூ அதன் ஆதி அர்த்தத்தில் சண்டைக் கலை அல்ல. சீனாவில் எந்தவொரு துறையிலும் முழுமையான அறிவு பெற்றவர்களை குங் பூ ஆசான் என்று அழைத்தார்கள். புரூஸ் லீயின் வன்முறையின் மற்றொரு பக்கம் அவரது சலனமுறாத அமைதி. அவரை படத்தில் பார்க்கும் போது நம்மை மிகவும் ஈர்ப்பது இந்த முரணமைவு தான். இது தன்னிறைவினால் வருகிறது என்கிறார் புரூஸ் லீ. அவரிடம் அடிக்கடி பேட்டிகளில் கேட்கப்பட்ட கேள்வி தெருவில் நிஜமாக அவரை யாராவது தாக்க வந்தால் அவரால் சமாளிக்க முடியுமா, வெற்றி கொள்ள இயலுமா என்பது. ஒரு முறை இதற்கு பதிலளித்த லீ நடைமுறையில் தன்னை ஒருவன் சண்டைக்குத் தூண்டினால் அவனை உதாசீனித்து விடுவேன் என்றார். ஏன்? எதிரியை பார்த்ததும் தன்னால் அவனை ஜெயிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை தோன்றினால் பிறகு அவருக்கு அவனுடன் சண்டையிட மனம் வராது. அது தான் ஏற்கனவே ஜெயித்தாகி விட்டதே. தனது தன்னிறைவை அறிந்த லீக்கு ஒரு எதிரியிடம் அதை நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை. ஆக சண்டை என்பது மனதளவில் நடக்கும் ஒன்று தான் என லீ புரிந்து வைத்திருந்தார்.  அவர் சிறுவயதில் லீ மோசமான சண்டையாளராக இருந்ததற்கு இந்த செயலமைதி இல்லாதது தான் காரணம். சின்னதாய் தூண்டப்பட்டாலே வெகுவாக ஆத்திரம் கொண்டு உடனடியாக சண்டைக்கு செல்பவராக லீ அப்போது இருந்தார். அவரது விங் சுன் குருவான யிப் மேன் அவரிடம் இதைச் சுட்டிக் காட்டி மெல்ல மெல்ல முதிர்ச்சிக்கு இட்டுச் சென்றார்.

முதிர்ச்சியடைந்த லீ எப்படியானவராக இருந்தார் என்பதற்கு ஒரு உதாரணம். Fist of Fury உடன் அவர் சீனாவில் பிரபல நடிகராகி விட்ட பின் ஒருமுறை நண்பர் ஒருவருடன் ஒரு உணவகத்துக்கு சென்றார். அப்போது சீனாவில் பல இளைஞர்கள் லீயுடன் மோதி எளிதில் புகழடைய வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தனர். அப்படி ஒருவன் தான் அன்று லீக்கு உணவு பரிமாறிய வெயிட்டர். அவன் அவரை சீண்டிக் கொண்டே இருந்தான். புண்படும் படி பேசினான். லீ ஒன்றுமே நடக்காதது போல் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். நண்பர் “எப்படி உங்களுக்கு கோபம் வராமல் இருக்கிறது? என்று வினவ அதற்கு லீ “நான் இன்று மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்று நாள் முழுக்க என் மகிழ்ச்சியை கெடுக்க யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்றார். ஒரு ஆழமான குளத்தில் கல் வீசினால் அலைகள் எழும். ஆனால் அவை பரப்பில் தான் எழும். குளம் அதன் ஆழத்தில் எதனாலும் தூண்டப்படாமல் அமைதியாக இருக்கும். மனித மனம் அப்படியானது என லீ அறிந்து வைத்திருந்தார். பரப்பில் உள்ள சிற்றலைகளை பொருட்படுத்தாமல் இருப்பது ஒரு கலை.

ஒரு சிறந்த குங் பூ ஞானி எளிதில் சீண்டப்படாமல் இருப்பான் என்பதை விளக்க லீ அடிக்கடி தன் மாணவர்களுக்கு சொல்லும் ஒரு கதை நான்கு தற்காப்புக் கலை ஆசான்களின் கதை. ஒரு ஊரில் மிகச் சிறந்த ஒரு குங் பூ ஆசான் இருந்தார். அவர் ஒரு ஞானி. தற்காப்புக் கலை வழி தன்னை அறிந்தவர். மேற்சொன்ன நான்கு ஆசான்களும் தற்காப்புக் கலையை ஒரு சண்டைக்கலையாக மட்டுமே அறிந்தவர்கள். அவர்கள் குங் பூ ஞானியை தேடி ஒரு உணவகத்துக்கு வந்தனர். அவரை எப்படியாவது சண்டைக்கு இழுத்து தோற்கடித்து அதனால் தாம் புகழடைய வேண்டும் என்பது அவர்களின் உத்தேசம். அவரது பக்கத்து மேஜையில் அமர்ந்து சீண்டிக் கொண்டே இருந்தனர். ஞானி புறக்கணித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் நால்வரும் மிகுந்த காழ்ப்புணர்வுடன் தனிப்பட்ட முறையில் அவரை ஏச ஞானி ஒன்று செய்தார். சுற்றிப் பறக்கும் நான்கு ஈக்களை அவற்றின் இறகுகளைப் தன் கையில் உள்ள சாப் ஸ்டிக்குகளால் பற்றிப் பிடித்து எறிந்தார். அதைப் பார்த்த நால்வரும் சட்டென்று அமைதியாகி எழுந்து வெளியேறினர். ஒரு உன்னத குங் பூ வீரன் தன்னை நிரூபிக்க சண்டை போட வேண்டிய தேவையில்லை. அவனது உன்னதம் அவன் செய்யும் ஒவ்வொரு சிறு செயலிலும் வெளிப்படும். ஈயை சாப் ஸ்டிக்கால் பிடிக்க முடிந்தவருக்கு நான்கு பேரை சமாளிப்பது எம்மாத்திரம் என்பதே ஞானி குறிப்புணர்த்திய செய்தி. இக்கதையை “The Karate Kidபடத்தில் ஜாக்கி சான் ஒரு காட்சியில் ஞாபகப்படுத்துவார்.

புரூஸ் லீ பயின்ற விங் சுன் குங் பூவில் மைய அச்சுக் கோடு என்று ஒரு கற்பனையான கோடு உண்டு. ஒரு வீரன் தனது மைய அச்சுக் கோட்டை அறிந்திருப்பது கிரிக்கெட்டில் மட்டையாளன் லெக் அல்லது மிடுல் குச்சி கார்டு எடுப்பதை போன்றது. இது தனது வீச்சு எல்லை எதுவரை என்கிற புரிதலையும் சமநிலையையும் அவனுக்கு அளிக்கிறது. அவனது அடி இலக்கை நோக்கி சரியாக சென்றடைய உதவுகிறது. புரூஸ் லீ எந்த ஒரு குறிப்பிட்ட மரபான விதிகளையும் கராராக பின்பற்றுபவர் அல்ல என்றாலும் அவரது அநேகமான சண்டைகளில் இந்த மைய அச்சை அவர் தக்க வைப்பதை அவர் நின்று தாக்கும் முறையில் இருந்து நாம் கவனிக்க முடியும். தனது எல்லையை வகுத்து அதற்குள் நின்ற படி கிரிக்கெட்டில் மட்டையாளன் பந்தை தன்னை நோக்கி வர அனுமதிப்பது போல புரூஸ் லீயும் எதிரியை தாக்க அனுமதிக்கிறார். இதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு.

எதிரி நம்மைத் தாக்கும் போது அவனது ஆற்றல் நம்மை நோக்கி வருகிறது. மேலும் அவனது சமநிலை குலைகிறது. இது மிக விரைவில் நடக்கிறது. நம்மை அடித்த உடன் எதிரி சமாளித்து தன் சமநிலையை மீட்டுக் கொள்வான். விங் சுன் குங் பூ எதிரி நம்மை தாக்கும் போது கண்ணிமைக்கும் வேகத்தில் செயல்பட்டு அவனது அடியைத் தடுத்து அவனது ஆற்றலை திரும்பி அவனை நோக்கியே செலுத்தி அடிக்க சொல்லுகிறது. அந்நேரத்தில் அவனது சமநிலைக் குலைவை நாம் பயன்படுத்த வேண்டும். குங் பூவில் வேகம் மிக முக்கியம். (வேகமாக தாக்கும் பொருட்டே லீ தன்னை ஒல்லியாக ஆனால் திடமாக வைத்துக் கொண்டார். எடைகள் கொண்டு கடுமையாக உடற்பயிற்சி செய்யும் போதும் அவர் உயர்ந்த எடையில் இருந்து குறைந்த எடைகளுக்கு செல்லும் உடற்பயிற்சி பாணியை பயன்படுத்தினார். இது அவரை எடை குறைந்தவராக வைக்க உதவியது.).

ஆற்றலை திரும்ப எதிரியை நோக்கியே வழிமாற்றி விடும் உத்தியை கவனியுங்கள். புரூஸ் லீயின் சண்டையில் இது அடிப்படையான உத்தி. விங் சுன்னில் இத்திறமையை வளர்க்க sticking hands என்னும் ஒட்டும் கரங்கள் பயிற்சி அளிக்கிறார்கள். அதாவது எதிரியுடன் பொருதும் போது நமக்கு நான்கு கைகள். எதிரியின் அசைவுகளை முன் கூட்டி உணர்ந்து நாம் தடுத்து தாக்கும் போது ஒரு கட்டத்தில் எதிரியின் உடலையும் மனதையும் கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறோம். எதிரியின் கைகால்கள் நமதாகின்றன. அவனது உடல் கொண்டு அவனையே அடித்து வீழ்த்துகிறோம். புரூஸ் லீ மிக வலிமையானவர் என்றாலும் அவரது குச்சிக் கைகளுக்கு தன்னை விட இரட்டிப்பு எடை கொண்ட எதிரியை அடித்து வீழ்த்தும் ஆற்றல் இப்படித் தான் கிடைக்கிறது.

இவ்விசயத்தில் கிரிக்கெட் குங் பூவோடு ஒத்துப் போகிறது. சொங்கி போல் தெரிபவர்கள் பிரம்மாண்ட சிக்ஸர் அடிப்பதை பார்த்து வியந்திருக்கிறோம். டைமிங் தான் இதன் ரகசியம். டைமிங் என்றால் பந்தின் வேகத்திற்கு ஏற்ப மட்டை செயல்பட்டு இரண்டும் ஒரே புள்ளியில் சந்திப்பது. 2004இல் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்டு ஆட்டத்தில் சேவாக 309 அடித்தது நினைவிருக்கலாம். அப்போது ஷோயப் அக்தர் கடும் வேகத்தில் உயரப்பந்துகளாக வீசிக் கொண்டிருந்தார். சேவாக் அவற்றை நான்கு ஓட்டங்களுக்கு சுலபமாக அப்பர் கட் செய்தார். ஒவ்வொரு முறையும் ஷோயப் சேவாகிடம் வந்து “முடிந்தால் புல் ஷாட் அடி பார்ப்போம் என்று சவால் விடுப்பார். ஒரு கட்டத்தில் சேவாக் அவரிடம் “தயவு செய்து பிச்சையெடுப்பதை நிறுத்தி பந்து வீசு என்றார். ஷோயப் அதோடு சவால் விடுப்பதை நிறுத்தினார். புல் ஷாட்டை விட அப்பர் கட்டில் ஒரு மட்டையாளன் குறைந்த வலுவை தான் பயன்படுத்துகிறான். பந்து வீச்சாளனின் பாதி மைதானம் ஓடி வந்து தனது தோளை வருத்தி உற்பத்தி செய்யும் வேகத்தை நுணுக்கமாக திசை திருப்பி விடுகிறான். அவ்வளவே. இது ஷோயப்பின் கையைக் கொண்டு அவரையே அடிப்பது போல். அதனால் தான் ஷோயப் அவ்வளவு எரிச்சலானார். கிரிக்கெட்டில் தோள்வலுவை கொண்டு பந்தை மைதானத்துக்கு வெளியே துரத்துவது போல், குறைந்த ஆற்றல் பயன்படுத்தி, டைமிங் கொண்டும் செய்யலாம். குங் பூ இந்த உத்தியையே மேம்படுத்தி பல மடங்கு வேகம் மற்றும் கூர்மையுடன் செய்யக் கற்றுத் தருகிறது.

இறுதியாய் விங் சுன் குங் பூவில் சிக்கனம் ரொம்ப முக்கியம். எதிரியை நோக்கிய வெகு அருகிலான குத்து என்பது நேர்கோட்டில் பயணிப்பது என்கிறது விங் சுன் குங் பூ. ஒரு கையை தடுக்கும் நோக்கமாக நேராக நெஞ்சுக்கு சற்று சாய்வாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றைய கரம் அடிப்பதற்கும் தடுப்பதற்கும் தோதாக சற்று மேலெழும்பி இருக்கும். கையை வளைத்து சுற்றி அடிப்பதெல்லாம் குங் பூவில் கிடையாது. தனது Chinese Gung Fu எனும் நூலில் புரூஸ் லீ பக்கத்தில் இருப்பவர்களை மட்டுமே முழங்கை கொண்டு தாக்க வேண்டும். சற்று தள்ளி இருப்பவர்களைக் கூட முழங்கை கொண்டு தாக்குவது ஆபத்தானது என்கிறார். அடி தப்பும் அல்லது அதற்கு முன் எதிரி சுதாரித்து நம்மை தாக்கக் கூடும். அவர்களை கால் கொண்டு தாக்க வேண்டும். குங் பூவில் கை கால்கள் நான்குமே ஒரே வேளை தடுக்கவும் தாக்கவும் தயாராக இருக்க வேண்டும். தள்ளி இருக்கும் எதிரியை காலால் எதிர் கொண்டு அவன் அருகே வர மட்டுமே கையை வேகமாக சிக்கனமாக இயக்கி தாக்க வேண்டும் என்கிறார் அவர். குங் பூவில் குத்துவது கிரிக்கெட்டில் குறைந்த back lift கொண்டு தோனி மிகுந்த ஆற்றலுடன் அடிப்பதைப் போன்றது.

Share This

4 comments :

  1. நல்ல, நுட்பமான தகவல்களை கொண்ட பதிவு.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  2. அழகு..கடந்த வாரம் யூடியூபில் பார்க்க தொடங்கி புரூஸ் லீ குறித்து வாசித்து கொண்டிருந்தேன்.காமத்தையும் கருவியாக கருதும் தந்ராவை போல்,ஸென் குருக்கள் எல்லா தற்காப்பு கலைகளையும் விழிப்புணர்வுக்கு பயன்படுத்தியிருக்கின்றனர்.

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  3. கு்ங்புவுடன் கிரிக்கெ்ட்டை தொடர்புபடுத்தி விலக்கியது புதுமையாக இருந்தது’
    நன்றி.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates