Monday, 11 June 2012

கார்டூன் சர்ச்சை: மாறுபட்ட கோணங்களும் தீர்க்கமான பார்வையும்

கார்டூன் சர்ச்சையில் critical pedagogy என்று சொல்லி தப்பிக்க பார்க்கிறார்கள். ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை தந்தாலும் அதை ஒரு மைய பார்வைக்குள் கொண்டு வரவேண்டியது முக்கியம். 



இந்தி எதிர்ப்பு கார்டூனுக்கு கீழ் இப்படியான வாசகம் வருகிறது:
“initially seen as a threat to Indian nationalism, regional politics in Tamil Nadu is a good example of the compatibility of regionalism and nationalism
ஆனால் பிராந்தியவாதம் பிரிவினை அல்ல என்று சொல்வது மட்டும் போதாது. இந்த கார்டூன் எழுப்பும் விமர்சனத்தையும் அலச வேண்டும்..அதை அப்படியே விடுவது பொறுப்பின்மை. அதாவது இந்தி படித்தால் முன்னேறலாம்என்று 60களில் ஒருதரப்பு மக்கள் நம்பினார்கள். ஆர்.கெ லக்‌ஷ்மண் இதை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அவரது தரப்புக்கு இடமளிக்கும் போதே இதன் நடைமுறை உண்மையையும் பேச வேண்டும். இந்தியை விட மக்களின் முன்னேற்றத்துக்கு ஆங்கிலம் தான் தகுதியான மொழி என்று இன்று நிறுவப்பட்டாகி விட்டது. அன்றும் நமக்கு ஐயமிருக்க இல்லை. உண்மையில் இந்தியால் ஆங்கிலம் எனும் உலக மொழி முன் நிற்கவே முடியாது. உண்மையில் சுதந்திரத்துக்குப் பின் தேசியவாதம் ஒரு பெரிய எழுச்சி அலையாக இருந்தது. நூற்றுக்கணக்கான பிராந்தியங்களை இணைத்து இந்தியாவை உருவாக்கியதால் ஒரு ஒருங்கிணைந்த அடையாளம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தி அப்படியான ஒரு ஒருங்கிணைப்பு சக்தியாக கருதப்பட்டது. ஆனால் இந்த கார்டூன் இந்தி கற்காததால் மக்கள் முன்னேறாமல் போய் விடுவார்கள் என்ற சித்திரத்தை வைக்கிறார்கள். “இந்த பையனுக்கு ஆங்கிலம் கூட தெரியாதே என்கிறார் ராஜாஜி. ஆனால் இன்று வட-இந்தியர்களை விட தமிழர்கள் கல்வியில் முன்னேறி இருக்கிறோம். நல்ல ஆங்கிலம் பேசுகிறோம். அன்றும் நாம் ஒன்றும் காட்டுமிராண்டிகளாக இருக்கவில்லை. எப்படியும் இந்த கார்டூன் ஒரு தவறாக சித்திரத்தை தருவதை மாணவர்களுக்கு சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம். ஒரு பாடத்துக்கு சம்மந்தமில்லாத ஒரு அபிப்ராயம் கூட அதில் தனியாக தொங்கிக் கொண்டிருக்கலாம் என்கிறார் NCERT செயர்மேன். இது மாணவர்களை குழப்புமே அல்லாது உதவாது. 

 
மற்றொரு கார்டூன் பாமர மக்களை சுரண்டுவதற்காக ஒரு உத்தியாக இந்த போராட்டத்தை காட்டுகிறது. ஆனால் வரலாற்று உண்மை என்ன? ஒரு காலத்தில் தமிழர்கள் மத்திய அரசு பரீட்சைகளை எழுத முடியாமல் திணறினர். காரணம் அது முழுக்க இந்தியில் இருந்தது. இந்தி மூலம் தேசிய ஒருமைப்பாடு என்கிற காங்கிரஸ் வலதுசாரிகளின் மிகை-ஆர்வம் மற்றும் பதற்றம் காரணமாகவே இப்படியான மொழித் திணிப்புகள் அக்காலத்தில் நடந்தேறின. இதை யாராவது எதிர்த்தால் பிரிவினைவாதம் என்று ஆட்சேபிக்கப்பட்டது. ஒரு காலத்தில் திமுக தடை செய்யப்படவதற்கும் சூழல் ஏற்பட்டது. இந்த பிரச்சனையை அந்த காலகட்ட அரசியல் சூழலை கொண்டு பார்க்க வேண்டும். காங்கிரஸின் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா என்கிற முரட்டு ஒற்றைபட்டை அரசியலாக்கத்தின் பிடியை தளர்த்த அன்றைய பிராந்தியவாத எழுச்சிகள் உதவின. தமிழகம், கர்நாடகா, கேரளாவை இணைத்து ஒரே பிராந்தியமாக்க எல்லாம் முயற்சிகள் மத்தியில் நடந்தன. அவற்றை எல்லாம் முறியடிக்க பிராந்தியவாத போராட்டங்களும் பெரியார் போன்ற தலைவர்களும் தான் உதவினர். இன்று அன்றைய அரசின் நிலைப்பாடுகள் அவசியமற்ற overreactions என்று விளங்குகிறது. இதை எல்லாம் விட்டு விட்டு நாம் இதை வெறும் பாமரர்களின் மொழிப் போராட்டமாக பார்க்கக் கூடாது. துண்டு துண்டு மொழி சமூகங்கள் தங்கள் அடையாளத்தை இழக்காதிருக்க ஒரு மைய அரசுடன் போராடியதன் அடையாளமே இது. அன்றைய மைய அரசுக்கும் அவர்களுக்கான நியாயம் இருந்தது. ஆனால் இந்த முரண்-இயக்கமே இன்றுள்ள வளர்ச்சிக்கு, தமிழ் அடையாளத்துக்கு ஆதாரம். இது இல்லாததால் கேரளிய கலாச்சாரம் ஒரு சமிஸ்கிருத கலாச்சாரமாக, அவர்களின் மொழி ஒரு கலவை மொழியாக மாறியது. நமக்குள்ள தனித்த அடையாளம் அந்தளவு உக்கிரத்துடன் ஆழத்துடன் அவர்களிடம் இல்லை. நமக்கு உள்ளது போல் ஒரு சங்க மரபு அவர்களிடம் இல்லை.

.மேலும் இந்த மாறுபட்ட கண்ணோட்டங்களை அப்படியே தருகிறோம் எனும் கொள்கை ஆபத்தானது. சரி, நாளை காஷ்மீர் தீவிரவாதம் பற்றி பாடம் என்றால் இந்திய அரசுக்கு எதிரான அவர்களின் முஜாஹிதீன் பிரச்சாரத்துக்கு இடம் கொடுப்பார்களா? ஹிட்லரைப் பற்றி பாடம் என்றால் அவரது இனவாத நியாயத்தை தந்து அதற்கு தங்கள் கருத்தை சொல்லாமல் விடுவார்களா? மாட்டார்கள். ஏனென்றால் அது ஆபத்தானது. ஆக எல்லாருக்கான நியாயங்களும் இருக்கத் தான் செய்கின்றன. மனதை விரிவாக்கி அதை புரிந்து கொள்ள முயலலாம். ஆனால் அதே வேளை நமக்கான ஒரு நிலைப்பாட்டை உருவாக்கிக் கொள்ளவும் பாடநூல் உதவ வேண்டும். NCERT பாடபுத்தக கட்டுரைகள் அப்படி இல்லாத தோற்றத்தை தான் ஏற்படுத்துகின்றன.
Share This

3 comments :

  1. எனக்கு தற்பொழுது 29 வயதாகிறது .இந்தி எதிர்ப்பு போராட்ட காலங்களில் என்னுடைய பெற்றோருக்கு திருமணம் கூட ஆகவில்லை . இருப்பினும் இப்போராத்தைப் பற்றிய என்னுடைய கருத்துக்கள் :
    நான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ,1965 இல் , தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய தி .மு .க. வையும் ,அந்த போராட்டத்தில் பலியான நபர்களைப் பற்றியும் தவறாகவே கருதி வந்திருந்தேன் .இன்னும் சொல்லப்போனால் இந்தி மொழி தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் ,மொழிப் பாடமாக கற்பிக்கப்படாமல் ,நானும் ,என்னை போன்ற லட்சக்கணக்கான இன்றைய தலைமுறை தமிழ் இளைனர்களும் வடஇந்திய நகருக்கு செல்லும்போது சில சங்கடங்களை அனுபவிப்பதற்கு காரணம், அன்றைய திமுக வின் இந்தி எதிர்ப்பு போராட்டமே .

    மேற்கூறிய இந்த கூற்றுக்கு,இன்னொரு முக்கிய காரணம் எனக்குப் பிடித்த எழுத்தாளரான ஜெயகாந்தன் அவர்களே . அவர் எப்பொழுதுமே பிராந்தியவாத அரசியலை எதிர்த்தும், தேசியவாதம் ,இந்தி ,சமஸ்கிருதம் போன்ற மொழிகளை ஆதரித்துமே எழுதி வந்திருக்கிறார் .

    ஆனால் சமீப காலத்தில்தான் , இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும், இந்தி மொழிப் போர் தியாகிகளின் மீதும் ,அன்றைய திமுக மீதும்,ஆட்சி அதிகார அடக்கு முறைக்கு எதிராக வெகுண்டெழுந்த அன்றைய கல்லுரி மாணவர்களின் உணர்ச்சி மிகுந்த வீரத்தையும் தெரிந்துகொண்டேன் . வரலாற்றுமிக்க ,இந்த போராட்டத்துக்கு பிறகு ,இன்று வரை தமிழக மண்ணில் ஒரு எழுச்சிமிக்க போராட்டம் உருவாக எத்தனையோ சமூக பிரச்சினைகள் / காரணங்கள் கடந்த காலங்களில் வந்த போதும் ,தமிழ் இளைனர்களாகிய நானும் என்னை போன்ற லட்சகணக்கான இளைனர்களும் ,சமூக அக்கறை இல்லாதவர்களாக ,உணர்ச்சி செத்துப் போனவர்களாக,இன்றய தமிழக இளைய சமூகம் உருவானதில் திராவிட முன்னேற்ற கட்சிகள் பெரும் பங்காற்றியுள்ளன என்பதை மறுக்கவியலாது .

    நாட்டில் அரசியல் மாற்றத்தையே ஏற்படுத்திய ஒரு எழுச்சிமிக்க போராட்டத்தை ,கேலி செய்து சித்திரம் வரைந்து ,அதனை அடுத்த தலைமுறைக்கு கற்ப்பிப்பது மத்திய அரசின் கீழ்த்தரமான செயலையே காட்டுகிறது .

    ReplyDelete
  2. நன்றி முருகேசன் பொன்னுசாமி. திமுகவின் மீது எனக்கும் பல விமர்சனங்கள் உள்ளன. ஆனால் அவர்களின் போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates