Saturday, 2 June 2012

ஐபிஎல் – ரசனையின் வீழ்ச்சி, மோசமான அரங்க நிர்வாகம் மற்றும் கார்ப்பரேட் சுரண்டல்



ஐபிஎல் 5க்கு கிடைத்துள்ள அமோக ஆதரவை மறுப்பதற்கில்லை. முக்கியமாக ஐபிஎல் புதிதாக கணிசமான பார்வையாளர்களை கிரிக்கெட்டுக்கு ஈர்த்துள்ளது. கிரிக்கெட் ஒரு டி.வி விளையாட்டு மட்டுமே என்பதில் இருந்து மாறுபட்டு அரங்குக்கு சென்று பார்ப்பதை ஒரு கொண்டாட்டமாக மாற்ற முயல்கிறது. பெண்களையும் குழந்தைகளையும் குடும்பங்களயும் அரங்குக்கு வரவழைத்துள்ளது. ஆனால் இந்த புது பார்வையாளர்கள் கிரிக்கெட் ஆர்வலர்களா?
டெஸ்ட் ஆட்டங்களை அரங்குக்கு சென்று பார்த்துள்ளவர்களால் இப்போது கொடிகளை அசைத்தபடி துள்ளி ஆடும் நெரிசலான T20 கூட்டம் கிரிக்கெட் ஆர்வலர்கள் அல்ல என்பதை எளிதில் உணர முடியும்.

கூட்டத்தில் வந்தமரும் கணிசமானோருக்கு கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது.

ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு வீரர்கள் பயிற்சி செய்வார்கள். ஆர்வலர்கள் இதை ஊன்றி கவனிக்க தவறுவதில்லை. பயிற்சியின் போது புது விசயங்கள் எத்தனையோ தென்படுகின்றன. மேற்கத்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்துக்கு தம் தோள்வலுவை நம்பியிருக்க இந்திய வீச்சாளர்கள் முழுக்க தயார் ஓட்டம் (run up) கொண்டு தான் அதே வேகத்தை அடைகிறார்கள். மோர்னெ மோர்க்கலும் யாதவும் வீசும் போது மட்டுமல்ல தோனியும் ஸ்காட் ஸ்டைரிசும் சேர்ந்து வீசும் போது கூட இது புலப்பட்டது. ஸ்டைரிஸ் ஒரு சுழலரை போல் சில அடிகள் ஓடி வந்து தோள் வலு மூலம் மூச்சு வாங்க ஓடி வந்து வீசும் தோனியின் வேகத்தை எளிதில் எட்டுகிறார். சூரஜ் ரன்திவ் side onஆக திரும்ப தூஸ்ரா வீசுவது மற்றொரு அழகான காட்சி. அவருக்கு முரளிதரனை போல் மணிக்கட்டை பயன்படுத்த முடியாது. அதே போல்.பந்து கையில் இருந்து வெளிவரும் போது மோனெ மோர்க்கலின் மணிக்கட்டு எவ்வளவு நேராக இருக்கிறது மற்றும் உடல் எவ்வளவு சமநிலையோடு இருக்கிறது என்பதும் கவனிக்கக் கூடியதாக இருந்தது. மாறாக வாரன் ஆரொன் ஓடி வரும் போதே அவர் பந்து லெக் பக்கம் போகப் போகிறது எனத் தெரிகிறது. பந்தின் வேகத்துக்காக முனைப்பு அவரது சமநிலையை குலைக்கிறது. மார்க்கல் வேகத்துக்காக முனையும் கட்டத்தை கடந்து விட்டார். அவர் பந்தின் நீளம் மற்றும் திசைக்கான பயிற்சியை மட்டும் செய்து கொண்டிருந்தார். ஒரு வீரர் நீண்ட நேரம் பயிற்சி செய்தால் பொதுவாக அவர் அன்றைய தினம் ஆட மாட்டார் என்று அர்த்தம். அதனால் ஒரு மணிநேரத்துக்குப் பிறகு சேவாக் மார்க்கலை நீக்கிய செய்தி வந்த போது ஆச்சரியமளிக்க இல்லை. இத்தனை முக்கியமான விசயங்கள் நடந்து கொண்டிருக்க பார்வையாளர்கள் தம் கொண்டாட்டம் எப்போது ஆரம்பமாகப் போகிற என்கிற பதற்றத்தில் இருந்தார்கள். அவர்கள் கண்ணில் கிரிக்கெட் படவே இல்லை. இறுக்கமாய் ஆடையணிந்த இளம்பெண்களை நோக்கி வெறுமனே குரங்கு போல் கிறீச்சிட்டு, தங்களது முகமூடி, பலவர்ண மேக் அப், தொப்பி, விக் ஆகியவற்றை சரி செய்து கொண்டு, இருக்கையில் எரிச்சலில் நெளிந்தபடி, எழுந்து அங்கிங்கு ஓடியபடி, கத்துவது, ஆர்வாரிப்பதை ஒத்திகை பார்த்தபடி இருந்தனர். விஜிபி, கிஷ்கிந்தாவுக்கு வந்து மதுவருந்தி குத்தாட்டம் போடுகிறவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை. அரங்கில் நிகழும் ஐபிஎல்லை கிரிக்கெட் மைனஸ் கேளிக்கை என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

சிக்கல் என்னவென்றால் அர்த்தமில்லாத கேளிக்கை நம்மை களைப்படைய வைக்கும்; கவனத்தை சிதறடிக்கும் அடிப்படையில் அது அபத்தமானது. பசிக்காமலே சாப்பிடுவது, இச்சை இல்லாமல் புணர்வது, போரடிக்கிறது என்று இன்னும் போரடிக்கும் டி.வி நிகழ்ச்சி பார்ப்பது...இவை எல்லாம் ஒருவித நோய்க் கூறுகள். ஐ.பி.எல் நடக்கும் அரங்கு பல சமயம் ஒரு மனநல விடுதிக்குள் மாட்டிக் கொண்ட உணர்வை அளிக்கக் கூடியது. ஐபிஎல்லில் கிரிக்கெட் ரசிகர்கள் இல்லாமலும் இல்லை; என்ன அவர்களின் நிலைமை தான் பரிதாபகரமானது. எனக்குப் பின்னால் ஒருவர் அமர்ந்து இப்படி சிலாகிக்கிறார் “தோனி எப்படி சதா கள அமைப்பை மாற்றிக் கொண்டே இருக்கிறார் பாருங்க. ஒரு கேப்டன் எல்லாத்தையும் கவனிச்சிக்கிட்டே இருக்கணுமில்ல. ச்சே எவ்வளவு கஷ்டமில்ல?. கள அமைப்பை மாற்றுவது, அணித்தலைவர் தொடர்ந்து ஆட்டத்தை கவனிப்பது என்பது ஒரு மாமூல் விசயம். இது கூட தெரியாதவர்கள் தான் அங்குள்ள உச்சபட்ச பார்வையாளர்கள். மிச்ச பேர் விளிம்பில் பட்டும், அரைகுறையாய் அடிக்கப்பட்டும் எல்லைக்கோட்டுக்கு செல்லும் பந்துகளுக்கு ஏதோ பஞ்ச காலத்தில் ரொட்டிக்காக தாவுவது போல் குதித்துக் கொண்டிருந்தனர். நல்ல பந்துகளை பாராட்டவில்லை. ஏனென்றால் அவர்கள் பந்தை கவனிப்பதில்லை, பந்து தம் பக்கம் வருமா, தம் மூஞ்சி டி.வியில் தெரியுமா? இதுதான் அவர்களை ஆட்கொள்ளும் ஒரே அக்கறை. ஹஸ்ஸி அழகாக கவர் டிரைவ் செய்கிறார். பந்து மட்டையில் பட்டவுடனே எனக்குத் தெரிந்து கைதட்ட துவங்கினேன். சுற்றிப் பார்த்தால் மிச்ச பேர் ஒன்றுமே நடக்காதது போல் அமர்ந்திருக்கிறார்கள். சில நொடிகளில் பந்து களத்தடுப்பாளரை கடந்து எல்லைக் கோட்டை நெருங்கும் போது தான் தாமதமாக அதை கவனித்து கூச்சலிட துவங்கினர். கிரிக்கெட்டுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு கூட்டம் மத்தியில் அமர்ந்திருக்கிறோம் என்பது எனக்கு அக்கணமே புரிந்து விட்டது.

சொந்த அணி ஆடும் போது மட்டும் கொண்டாடுவது, எதிரணி ஆடும் போது மௌனிப்பது என்பது ஒரு சென்னை பார்வையாளன் பண்ணுவது அல்ல. சயித் அன்வர் 194 அடித்த போது எழுந்து நின்று அர்ப்பரித்த கூட்டம் சென்னையின் மரபான பார்வையாளக் கூட்டம். இந்தியாவிலேயே கிரிக்கெட் புரிதல் மிக்க பார்வையாளர்கள் சென்னைக்காரர்கள் என்று வாசிம் அக்ரம் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்களும் நிபுணர்களும் பாராட்டி உள்ளார்கள். முன்னர் பலமுறை நமது மரபான பார்வையாளர்கள் நுட்பமாக ஆட்டத்தை கவனித்து பாரபட்சமின்றி பாராட்டுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு ஐபிஎல்லில் நாம் காண்பது முற்றிலும் வேறுவகையான கூட்டம். இவர்கள் ஆட்டம் துவங்குவதற்கு முன் ஒரு மஞ்சள் ஜெர்சியை பார்த்தார்கள். அது பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் என்று கூட தெரியாமல் ஓவென்று கத்தத் துவங்கினார்கள். பின்னர் அடங்கி விட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் எதிரணியினர் சில நல்ல ஷாட்கள் அடித்தார்கள் ஆனால் மொத்த பார்வையாளர்களும் ஓடிப்போன பெண்ணின் அப்பா மாதிரி அமர்ந்திருந்தார்கள். இவர்களை அப்படியே தூக்கி ஐஸ் ஸ்கேட்டிங் அரங்கில் அமர வைத்தாலும் இதே போல் ஆர்ப்பரித்து கொண்டாடுவார்கள். ஒரு பழைய மலையாளப் படத்தில் ஸ்ரீநிவாசனுக்கு குருவாயூரில் வரிசையாக பல் ஜோடிகள் மத்தியில் கல்யாணம் நடக்கும். நெரிசலில் தவறான பெண்ணுக்கு தாலி கட்டி விடுவார். ஐபிஎல் என்பது இப்படியான ஒரு ஆள்மாறாட்ட கல்யாணம்.

அரங்குக்கு வெளியே ஒரு ஆட்டோக்காரர் என்னிடம் திரும்பத் திரும்ப சில கேள்விகள் கேட்டார்:
“அரங்குக்குள் பொண்ணுங்க கத்துறாங்களா?
டிரம்ஸ் அடிக்கிறாங்களா?
டிக்கெட் எவ்வளவு ஆகிறது?
இது தான் பொதுமக்களிடத்து உள்ள மனப்பதிவு. தினசரி வாழ்வில் கிடைக்காது கிளர்ச்சிகளும் கிளுகிளுப்புகளும் அரங்கின் உள்ளே கிடைக்கிறது என்று நம்புகிறார்கள். உண்மை நிலவரம் அவர்களுக்கு தெரியாது.

டிவியில் பார்க்கும் போது நிறைய பெண்கள் இருப்பதாக தோன்றினாலும் உண்மையில் பெண்கள் ஒரு சின்ன சதவிதம் தான். அந்த பெண்களும் வந்து விட்டோம் பார் என்கிற பாவனையில் அடுத்த என்ன பண்ணுவது என்று புரியாமல் அமர்ந்திருக்கிறார்கள். ஆண்களை விட பெண்கள் மிக ஆர்வமாக எதையாவது கொறிப்பதிலும் குடிப்பதும் ஆர்வமாக இருந்தார்கள்.

பெண்களை விட குழந்தைகள் இன்னும் அதிகமாக ரசித்து ஆட்டம் போடுகிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு கிரிக்கெட்டை இப்படியா அறிமுகப்படுத்துவது என்று வருத்தமாக இருக்கிறது. கிரிக்கெட் அடிப்படையில் நீண்ட நேரம் ஓய்வாக பார்க்க வேண்டிய ஆட்டம். ஒருவருக்கு ஆரம்பத்தில் இந்த ஆட்டம் ஒன்றுமே புரியாது. மெல்ல மெல்ல புரியத் துவங்க மாதங்கள் ஆகும். அதன் நுணுக்கங்கள் புரிய வருடங்கள் ஆகும். இன்றுள்ள பல முதிர்ச்சியான பார்வையாளர்கள் ஆரம்பகால சலிப்பை கடந்து மெல்ல மெல்ல கிரிக்கெட்டை ஆழமாக அறிந்தவர்கள் தான். சுருக்கமாக கிரிக்கெட் என்பது ஒரு தீவிர இலக்கிய பத்திரிகை மாதிரி. முதலில் படிக்க இவர்கள் என்னமோ வேற்றுமொழியில் எழுதுகிறார்களே என்ற ஐயமும் கோபமும் ஏற்படும். ஆனால் இந்த அறிமுகக் கட்டம் முக்கியம். எந்த கலையின் அறிதலும் இப்படித்தான் இருக்க முடியும். ஐபிஎல் முதலில் குழந்தைகளிடம் கிரிக்கெட்டை கவனிக்க வேண்டாம் என்கிறது. பந்துகள் பறப்பதையும் பெண்கள் ஆடைபறக்க துள்ளுவதையும் மட்டும் பார்க்க தூண்டுகிற்து. அவர்கள் இந்த T20 பரிச்சயத்துடன் வளரும் போது அசல் கிரிக்கெட்டை பார்க்கும் பொறுமையும், நுணுக்கங்களை கவனிக்கும் மனநிலையும் கற்பனையும் அற்றவர்கள் ஆவார்கள். இருக்கையில் இருந்து எழுந்து துள்ளிக் கொண்டே இருந்தால் ஒரு அழகான பெண்ணைக் கூட சைட் அடிக்க முடியாது. இப்படி துள்ளிக் கொண்டே இருக்கும் தலைமுறைக்கு எல்லாவற்றையும் முகத்தில் அறையும் படி சொல்ல வேண்டியதாகிறது. அப்படியான கவனச்சிதறலுக்கு இது போன்ற அசட்டு கேளிக்கைகள் தாம் காரணம்.

22 பேரின் தொடர் கவனம், உச்சபட்ச திறன் வெளிப்பாடு, பரஸ்பர மோதல்கள், உள்போராட்டங்கள், வெற்றி-தோல்விகளின் சுழற்சி என கிரிக்கெட் வாழ்க்கையை நாடகியமாக படம் பிடிக்கும் ஒரு கலை. இந்த ஐபிஎல் நடக்கிற வேளையில் இங்கிலாந்து மே.இ தீவுகளின் டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருந்தது. மே.இ தீவுகள் ஒரு மட்டமான அணி தான். அதில் உள்ளதை விட பல சிறந்த நட்சத்திர விரர்கள் ஐபிஎல்லில் ஆடுகிறார்கள். ஆனால் மேற்சொன்ன டெஸ்ட் போட்டியில் நாம் காணக்கூடிய அற்புதமான திறன் வெளிப்பாடுகளில் சிறு சதவிதம் கூட ஐபிஎல்லில் இல்லை. உதாரணமாக, சந்தர்போல் தனது நண்டு காலாட்டம் மூலம் நான்காவது ஸ்டம்பில் நிற்கிறார். அதனால் பந்து வீச்சாளர்கள் தமது கற்பனையில் ஐந்தாவது ஸ்டம்பு ஒன்றை உருவாக்கி அதில் வீசுகிறார்கள். அவரை முறியடிக்க அவர்கள் ஐந்தாவது ஸ்டம்பில் இருந்து நான்காவது ஸ்டம்புக்கு இடைப்பட்ட வெளியில் பந்தை ஸ்விங் செய்ய வைத்தது மிக வியப்பளிக்கக் கூடியும். அதை விட நம்மைக் கவர்வது சந்தர்போல் சில மில்லிமீட்டர் வித்தியாசத்தில் எப்படி மட்டை விளிம்பில் பந்து படாமல் அதை பாதுகாத்து தப்பிக்கிறார் என்பது. சந்தர்போலை பார்ப்பது குறைந்த திறமை கொண்டு பிறந்த ஒருவர் தனது விடாப்பிடித்தனம் மற்றும் கவனம் கொண்டு எப்படி போராடி வெல்கிறார் என்பதற்கான தன்னம்பிக்கை ஊட்டும் படிப்பினை. ஐபிஎல்லின் குறை வீரர்களின் பிரச்சனை அல்ல. T20யின் வடிவமே அப்படியானது. அது வீரர்களின் திறமைகளை வெள்ளிப்பாத்திரம் துலக்கும் போது பிரகாசிக்கும் அளவுக்கே அனுமதிக்கிறது. கால்பந்தாட்டம் போன்று குறுகிற காலகட்டத்தில் உக்கிரமாக ஆடக் கூடிய ஆட்டம் அல்ல கிரிக்கெட். அது அமெரிக்கர்களிடையே பிரபலமாகாததற்கும் இதுவே காரணம். கிரிக்கெட்டை கால்பந்தாட்டமாக மாற்ற முடியாது. அப்படி செய்யும் போது நமக்கு அந்த ஆட்டத்தின் முழு அனுபவமும் கிடைக்காது. T20 ஆட்டத்தின் முக்கிய நோக்கம் மக்களை ஓரிடத்தில் கூட்டி கேளிக்கைகள் வழங்குவது. கிரிக்கெட் என்பது இதற்கான பாவனை மட்டுமே.

மேலும் பார்வையாளர்களுக்கு ஐபிஎல் சூதாட்ட செய்திகள் ஒருவித அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதை நேரடியாகவே பார்க்க முடிந்தது. தமது சொந்த அணி நன்றாக ஆடினால் கூட ஒருபக்கம் மக்கள் சூதாட்ட ஏற்பாடோ என சந்தேகங்களை வெளிப்படையாகவே தெரிவிக்க துவங்கினார்கள்.

சரி ஐபிஎல் கேளிக்கை அனுபவம் எப்படி இருக்கிறது?

ஐபிஎல்லில் பார்வையாளர்களுக்காக உச்சபட்ச வசதிகள் பண்ணிக் கொடுக்கப்படுவதாக, அது ஒரு குடும்ப பொழுது போக்காக உள்ளதாக சொல்லப்படுவதெல்லாம் பொய். நமது அரங்குகளின் கட்டமைப்பும் செயல்பாடும் ஐபிஎல்லுக்கு முன்பிருந்த நிலையிலே இப்போதும் இருக்கின்றன. சொல்லப் போனால் இன்னும் மோசம். இந்த கடும் கோடையில் ஒரு கோப்பை தண்ணீரை பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள். ஒரு கோப்பை பெப்சி நாற்பது ரூபார். அந்த பெப்சி போன்ற குளிர்பானங்களும் தண்ணீரில் சர்க்கரை கலந்தது போல் சுவையற்று இருப்பதாய் பலரும் அபிப்ராயப்பட்டார்கள். சிலர் வெந்நீர் போல் சூடாக இருப்பதாக வருத்தப்பட்டார்கள். சென்னையில் பாட்டில் நீரைத் தவிர குழாய் நீரைக் குடிப்பது ஆபத்தானது என்ற நிலைமை உள்ளது. பாட்டிலை உள்ளே அனுமதிக்கூடாது என்ற சாக்கில் கோப்பையில் விற்கிறார்கள். அப்படி என்றால் 15 ரூபாய் பாட்டில் நீரை கோப்பை கோப்பையாக நாற்பது ரூபாய்க்கா விற்பது? சத்யம் போன்ற உயர்தர திரையரங்குகளில் கூட இப்படி நான்கு மடங்கு விலைக்கு விற்பதில்லை. மேலும் இப்படி கோப்பை கோப்பையாய் விநியோகிப்பதால் தண்ணீர் குடிப்பதற்கு அப்படி ஒரு அடிதடி. ஒரு கோப்பை தண்ணீருக்காக மக்கள் ஏங்குவது பார்க்க பரிதாபமாக இருந்தது. உணவும் கூட அரங்கில் ஐபிஎல்லுக்கு முன்னிருந்த தரத்தில் தான் இருக்கிறது. சத்யம் போன்ற இடங்களில் ஐம்பது ரூபாய்க்கு தின்பண்டம் வாங்கினால் அளவும் தரமும் அதிகமாக இருக்கும். ஆனால் இங்கே நான்கு மடங்கு பணத்துக்கு படுகேவலமான தரத்தில் இருக்கிறது. இங்கு தான் ஒரு கேள்வி வருகிறது. 150 ரூபாய்க்கு ஒரு திரையரங்கில் கிடைக்கும் தரம், வசதி, விருந்தோம்பலில் கால்வாசி கூட ஒரு கிரிக்கெட் அரங்கில் ஏன் இவர்களால் தர முடியவில்லை? டி.வியில் தத்தமது அணியின் ஜெர்சிகளுடன் மக்கள் கொடியேந்தி ஆட்டம் போடுவது பார்க்கும் போது நமக்கு இவர்கள் நிஜமாகவே கொண்டாடுவதாக தோற்றம் ஏற்படுகிறது. உண்மையில் நுழைவுச்சீட்டுக்காக காலை நான்கு மணிக்கே வந்து வரிசையில் நின்று நெரிசல், அடிதடி, ஏச்சுபேச்சுகள், ஏகப்பட்ட காவலர்களின் சந்தேகப் பார்வைகளுக்கு நடுவே மோசமான உணவு, விருந்தோம்பல், வசதிகள் ஆகியவற்றுக்கு இடையே ஐபிஎல் கொண்டாட்டம் என்பது கலாச்சார கேளிக்கைகள் ஏதுமே இல்லாத ஒரு மக்கள் கூட்டத்தின் கொண்டாட்ட வறுமையை சுரண்டுவது அல்லாமல் வேறில்லை. ஐநூறு ரூபாய் அடிப்படை கட்டணம் செலுத்தி உள்ளே வருவதற்கு ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலுக்கு சென்றால் உங்களை பலமடங்கு மேலாக பராமரிப்பார்கள். 5000க்கு மேல் செலுத்தி குளிர்பதன வசதி மட்டும் இலவச உணவுடன் ஒரு கண்ணாடி அறைக்குள் அடைக்கப்பட்டு கிரிக்கெட் பார்க்க நேர்ந்த அவலத்தை இந்து பத்திரிகையில் ஒரு ஜெர்மானியப் பெண் எழுதி இருந்தார். நல்ல வசதி என்பது ஏ.சி வைத்த ஆய்வகக் கூண்டு அல்ல. அதன் பொருள் நியாயமான விலையில் நல்ல உணவு, தண்ணீர், வசதியாக இருக்கை, காற்றோட்டமான சூழல் (உணவு வழங்கும் இடத்தில் காற்றாடி கூட இல்லை), பார்க்கிங் வசதி ஆகியவை தான். சேப்பாக் அரங்குக்கு தனதான பார்க்கிங் வசதி இல்லை. ஐபிஎல்லில் திரளும் ஐம்பதாயிரம் மக்களுக்கு தேவையான உணவு கழிப்பறை வசதிகளும் இல்லை. உண்மையில் வசதிகளை பொறுத்த மட்டில் ஒரு ஸ்டாண்டில் ஐம்பதில் இருந்து நூறு பேருக்கு மேல் தாங்காது. இடைவெளியின் போது மக்கள் படுகிற அவஸ்தைகளைப் பார்த்தால் ஆதம்பாக்கம் வேலன் போன்ற அட்டு திரையரங்குகள் பல மடங்கு பரவாயில்லை என்று பட்டது. வரிசையில் ஐந்து நிமிடம் காத்திருந்து நீங்கள் மூத்திரம் போய் விடலாம். ஆனால் இங்கே அரைமணிநேரம் காத்திருந்து விட்டு இதுவாவது கிடைத்ததே என்று ஆசுவாசமாக ஜிப்பை திறக்க வேண்டும்.

நியாயப்படி அரங்குக்குள் நுழைவதற்கான வெவ்வேறு கேட்டுகளுக்கு செல்வதற்கு திசைகாட்டி தட்டிகள் வைக்க வேண்டும். குறைந்தது அமைப்பாளர்களாவது உதவ வேண்டும். பரிச்சயமற்றவர்கள் மைதானத்துக்கு வந்து விட்டு உள்ளே நுழைய அரைமணிக்கு மேலாகிறது. ஏனென்றால் லத்தி சுழற்றி நின்று கூட்டத்தை கவனிக்கும் காவலர்களுக்கு எந்த கேட் எங்கே என்று தெரியவில்லை. புதிதாக வரும் ஒருவர் திக்கித் திணறி இடம் கண்டுபிடித்து வந்தால் வாகனத்தை பார்க் பண்ணுவதற்கான அவஸ்தைகள் வேறு தனி. அங்கே இரவானால் விளக்குகள் கிடையாது, நிறைய பாம்புகள் வரும் என்று பார்க்கிங் நிர்வாகிகளே சொல்லுகிறார்கள். கட்டணம் செலுத்தி விட்டு வெளியே விடுவது தான் பாதுகாப்பாம். வெளியே விடும் வண்டியின் மேல் ஆயிரம் வண்டிகள் பின்னர் சேர்ந்து விடும். ஆட்டம் முடிந்து கிளம்பும் போது இருட்டில் யானையை குருடன் தடவின கணக்காக நீங்கள் தேட வேண்டும். மேலும் பார்க்கிங் இடத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் நடந்து உரித்த கேட்டை அடைய வேண்டும். வயதானவர்கள், ஊனமுற்றவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் ஐம்பது ரூபாய் ஆட்டோவுக்கு செலவழித்து ஒன்வேயில் சுற்றி வர வேண்டும். உள்ளே கூட சக்கர நாற்காலி உள்ளிட்ட பிற வசதிகள் இல்லை. இவ்வளவு பேர் கூடுகிற இடத்தில் திடீரென்று யாருக்காவது காயம் பட்டால், மாரடைப்பது வந்தால் மருத்துவ வசதி இருக்கிறதா? அதைப் பற்றின எந்த தகவலும் அரங்குக்குள் இல்லை. அரங்கை விட்டு வெளியேறக் கூடிய அளவுக்கு ஏதாவது ஆபத்தென்றால் மைக்கில் அறிவிப்போம் என்று மட்டும் சொல்கிறார்கள். ஏன் மக்கள் அலறி ஓட்டி கூட்ட நெரிசலில் சாவதற்கா? உள்ளே புகைக்காதீர்கள் என்று மைக்கில் அறிவுறுத்துகிறார்கள். குடிக்க நல்ல நீர் தராமல், நூறு பேருக்கான வசதிகளை ஆயிரம் பேருக்கு தந்து விட்டு நம் உடல்நலம் மீது அக்கறையாம். உண்மையான வசதியை நாம் தென்னாப்பிரிக்க அரங்குகளை பார்க்கலாம். வசதியாக புல்தரையில் படுத்துக் கொண்டு நல்ல உணவு உண்டு நீச்சல் குளத்தில் கிடந்தபடி கிரிக்கெட்டையும் ரசிக்கிறார்கள். மிகக் குறைவான கூட்டம் வரும் மே.இ தீவுகளின் அரங்குகளில் கூட உடனடியாக நல்ல உணவு (கம்பியில் மாட்டி வாட்டின கறி உள்ளிட்ட மரபான உணவுகள்) தயாரித்து தருகிறார்கள். இங்கே காலையிலே பண்ணி வெளிறிய பிரேதம் போல் தெரியும் சப்பாத்தி, கேவலமான வெஜிடபிள் பிரியாணி போன்ற செத்துப் போன சைவ உணவுகளை மக்கள் மீது திணிக்கிறர்கள்.

கிரிக்கெட்டும் இல்லாமல் விருந்தோம்பலும் இல்லாமல் ஐபிஎல் இன்று மோசமான நிர்வாகம் மற்றும் காமத்தையும் வெற்றுக் கிளர்ச்சிகளையும் பிரதானமாக்கி மக்களை ஏமாற்றி பணம் பிடுங்குவதற்கான உதாரணமாக உள்ளது. இதற்கு எதிராக பேசுபவர்களுக்கு இந்திய கிரிக்கெட் ஆணையம் தடை விதிக்கும் (கீர்த்தி ஆசாத்), அல்லது விமர்சிப்பவர்களை தமது வர்ணனையாளராக்கி கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் (ஹர்ஷா போக்ளெ, மஞ்சிரேக்கர்) அல்லது ஐபிஎல் லாபத்தில் இருந்து லட்சங்களில் இருந்து கோடிகள் வரை சன்மானம் வழங்கி வாயை அடைக்கும் (முன்னாள் வீரர்களுக்கு). பார்வையாளர்கள் அதிருப்தி அடையாமல் இருப்பதற்காக குத்துப்பாட்டு, சீர் கேர்ள்ஸ், ஆடம்பர அலங்காரங்கள், வாண வேடிக்கை. இதெற்கெல்லாம் செலவழிக்கும் பணத்தில் சிறுபங்கை பார்வையாளர் வசதிகளுக்காக செய்யலாமே? எப்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தனது பொருளின் விளம்பரத்துக்காக ஒரு சினிமா, கிரிக்கெட் நட்சத்திரத்துக்கு அளிக்கும் கோடிக்கணக்கான பணத்தின் சுமை வாடிக்கையாளனுக்கு போய் சேர்கிறதோ அதைப் போன்று தான் இதுவும். நல்ல பொருளை அளிப்பதல்ல, நல்ல பொருள் என்ற தோற்றத்தை உருவாக்குவதும், ஒரு பிம்பத்தை பயன்படுத்தி அதை விற்பதிலும் தான் ஆர்வம் காட்டுவார்கள், பணம் செலவழிப்பார்கள். இந்த மாறா கார்ப்பரேட் விதிதான் ஐபிஎல் நிர்வாகம் மற்றும் அமைப்பிலும் செயல்படுகிறது. ஆக மற்றொரு தளத்தில் ஐபிஎல்லின் பிரச்சனை நிர்வாகத் திறன் இன்மை மட்டும் அல்ல. கார்ப்பரேட் முதலாளிகள் கிரிக்கெட் வாரியத்தில் இருந்து விலக்கப்பட வேண்டும் என கீர்த்தி ஆசாத் கோரியது வெறும் அரசியல் ஆதாயத்துக்கான கூச்சலும் அல்ல. இந்திய அரசியல், ஆன்மீகம், கிரிக்கெட் என அவர்கள் கையிலெடுக்கும் ஒவ்வொரு அமைப்பும் மீள் முடியாத பாதாளத்துக்கு சென்று வீழ்ந்திருக்கிறது. ஐபிஎல் ஒரு ஜனரஞ்சக உதாரணம் மட்டுமே.

Share This

2 comments :

  1. ஏனுங்க...பெரும் பண முதலைகள் சம்பாதிக்க தானே இந்த IPL போட்டியே ஆரம்பிச்சாங்க.அப்புறம் இதுல ரசிகர் நலனாவது..மண்ணாவது...

    ReplyDelete
  2. எல்லாமே கார்ட்டூனாக விட்டது என்பது குறியீட்டு வடிவம் ஐ.பி.எல் என்று கொள்ளலாம்.நான் புரிந்து கொண்ட வரை தமிழ் எழுத்தாளர்களில் கார்டூனாகாத ஒரே எழுத்தாளர் அசோகமித்தரன் தான்!

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates